Friday, May 25, 2007

Digital - 1

சில மாதங்களுக்கு முன் திரு. பாஸ்டன் பாலாஜி digital என்பதற்கு இணையாக முன்பு மடற்குழுக்களில் நான் பரிந்துரைத்த தமிழ்ச் சொல்லின் பின்புலம் பற்றித் தனிமடலில் கேட்டிருந்தார். அதோடு, "அந்தச் சொல் பற்றிய விளக்கத்தை வலைப்பதிவில் பலரும் அறியும் வகையில் இட முடியுமா?" என்று கேட்டிருந்தார்.

இப்பொழுது தமிழ் விக்சனரி மடற்குழுவில் digital யை ஒட்டிய ஒரு சிறு சொற்தொகுப்பைக் கொடுத்து (Digit, Number Systems & Bases, Decimal Numbering System, Range of binary numbers, Octal number, Hexadecimal number, Binary to Decimal Conversion, Sum-of-Weight Method, Decimal-to-Binary Conversion), இணையான தமிழ்ச் சொற்களைக் கேட்டிருந்தார்கள். இவற்றில் digital பற்றிச் சொல்வதுதான் சற்று கடினமானது. மற்றவற்றை மிக எளிதாகச் சொல்லிவிடலாம். (தமிழ் விக்சனரி மடற்குழுவில் கேட்டிருந்த தொகுப்பின் தமிழ்ச் சொற்களை digital -2 பகுதியின் முடிவில் கொடுத்திருக்கிறேன்.)

இப்பொழுது, பழைய மடல்களைத் தேடி, முன்னால் கொடுத்த விளக்கத்தைச் செப்பஞ் செய்து மீண்டும் பதிகிறேன். உங்கள் வாசிப்பிற்கு.

அன்புடன்,
இராம.கி.

அன்புள்ள இணையத்தாருக்கு,

digital என்ற சொல்லுக்கு இணையாகப் பலரும் இலக்கம், எண்ணியம் என்ற சொற்களை எழுதி வருகிறார்கள். இவை சரியான இணைச் சொற்கள் தானா என்ற கேள்வி எனக்கு நெடுநாட்களாய் உண்டு; எண் என்ற சொல் number என்பதற்கு இணையாகப் புழங்கும் நிலையில், எண்ணை வேறுவிதமாய் digit என்ற பொருளில் புழங்குவது சரியென்று எனக்குத் தோன்றவில்லை. இதே போல இலக்குதல் என்ற வினைச்சொல்லுக்கும் வரைதல், எழுதுதல் என்றே பொருள் இருப்பதால் digit என்பதற்கான பொருத்தப்பாடு புரியவில்லை; இன்னொரு வகையில் பார்த்தால் இலக்கியது குறியென்று பொருள் கொள்ளும். குறி என்று பொருளில் ஆள்வதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. "ஓர் எண்ணில் இருக்கும் digit - களை எப்படிக் குறி என்று பொருளில் சொல்ல முடியும்?" என்ற கேள்வி சட்டென்று எழுகிறது. தவிர, இதுநாள் வரை இலக்கம், எண்ணியம் என்ற சொற்களைத் தவறான பொருளில் புழங்கியிருக்கிறோம் என்பதாலேயே அவற்றைத் தொடர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

digit என்பதற்கு இணையாக முந்நாளில் (நாங்கள் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்த காலத்தில்) தானம் என்ற சொல்லைப் புழங்குவார்கள். காட்டாக ஒன்றாம் தானம், பத்தாம் தானம், நூறாம் தானம் என்ற சொற்கள் பழகியிருக்கிறேன். தானங்களைப் பெருக்கி வருவதைத் தானப் பெருக்கம் என்றும் சொல்லுவார்கள். இங்கே தானம் என்ற சொல் இடம் என்ற பொருளில் வழங்குகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்தச் சொல் சரியென்றுதான் எனக்குத் தோன்றியது. ஆனால் இன்றுநிலை வேறு என்றே உணர்கிறேன்.

50, 60 ஆண்டுகளுக்கு முன் எண்களில் இருக்கும் digit-களை மட்டும் தான் நாம் அறிந்திருந்தோம்; இன்றைக்கோ இந்தச் சொல் பெருமாண்ட வகையில் (இதைத்தான் பிரம்மாண்டம் என்று வடமொழிப் பலுக்கத்தில் எழுதுகிறோம்), பல்வேறு துறைகளில், பல்வேறு பயனாக்கங்களில் digital என்ற சொல் இப்பொழுது புழங்குகிறது. ஒவ்வொரு அன்னல் (analogue) கருவிக்கும் ஈடாக இன்று digital கருவிகள் வந்துவிட்டன. digital கருவிகளை எல்லாம் குறிக்கச் சொற்பொருள் விரிவாக வேண்டிய வேளையில் தானம் பொருந்திவரும் என்று தோன்றவில்லை.

digital - க்குச் சரியான சொல் தேட வேண்டுமானால் கொஞ்சம் ஆழம் போக வேண்டும். [அன்னல் = analogue; அன்னுதல் என்பது தமிழில் ஒப்பிடுதல்; தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உயிர் மயங்கியலில் இயல்பாக முடியும் அகரச் சுட்டுக்களைப் பற்றிச் சொல்லுகையில் "அன்ன என்னும் உவமக் கிளவியும்" என்பார் தொல்காப்பியர் (நூற்பா 210). அன்னல் = ஒப்பாக இருப்பது]

நிலத்திணைகள், விலங்குகள், மாந்தர்கள் ஆகியோரின் உடம்பின் கீழ் இருக்கும் உறுப்பை நாம் தாள், அடி, கால், பாதம், கழல் போன்ற சொற்களால் அழைக்கிறோம். இவை எல்லாமே கீழ் என்ற பொருளையும், நிலத்தில் பதிவது, பாவுவது என்ற பொருட்பாடுகளையும் தருகின்றன.

காலால் செய்கின்ற வினைகளாகத் தோய்தல், தத்துதல், தவ்வுதல், தாவுதல், தாண்டுதல், குதித்தல் என்ற வினைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

நடத்தல் என்பதும் கூடக் கால் வினைதான். நள்ளுதல் என்றால் காலைப் பதித்தல் என்று பொருள். நள்+து=நட்டு>நடு+ஐ>நடை என்று சொற்கள் மேலும் விரியும். காலைப் பதித்துக் கொண்டே போவது நடை; காலை நிலத்தில் இருந்து எடுத்துவிட்டால் அது நடையாகாது.

அதே போல குத்துதல் என்பதும் நிலத்தில் பதிக்கும் செயலையே காட்டுகிறது. குத்து>குது+இ>குதி என்ற நீட்சியை எண்ணிப் பார்க்கலாம். குதிக்கின்ற செயலை வைத்துத்தான், காலின் அடிப்பாகம் ஒன்றிற்குக் குதி என்றே பழந்தமிழர் பெயரிட்டிருக்கிறார்கள்.

தோய்தல் என்பதும் கூட நிலத்தில் பாதம் படிவதையே காட்டுகிறது. "காலைத் தோய்த்து நட" என்றால் "அழுத்தி நட" என்று பொருள். தோய்த்து தோய்த்து நடப்பதைத் தான் "தத்தி நடப்பது" என்று சொல்லுகிறார்கள்; அதாவது நெடிய எட்டில் (step) செல்லாமல், குறுகிய எட்டாகக் கால் பாதம் முழுதாக நிலத்திற் பாவி நடப்பது தத்தி நடப்பதாகும். இப்படித் தத்தி நடக்கும் போது, குதியும், கால்விரல்களும் நன்றாக நிலத்திற் பதிய வேண்டும். விட்டுவிட்டு நிலத்திற் தோய்வதே, தவ்வுவதும் தாவுவதும் ஆகும். தவ்வுவதின் பெரிய அளவுச் செய்கையே தாவுதல் எனப்படும். தாவுதலின் இன்னொரு பரிமானத்தைத் தாண்டுதல் என்று சொல்லுவார்கள்.

தத்துதல், தவ்வுதல், தாவுதல், தாண்டுதல் ஆகிய நான்கிற்குமே கால்விரல்களை அழுத்தி உயர வேண்டும் என்ற பொருள் உண்டு. அப்படியானால் கால்விரல்களுக்கு என்று ஏதேனும் ஒரு சொல் தமிழில் இருக்க வேண்டுமே, அது நமக்குப் புலப்படாமல் போயிற்றா, என்று வினவ வேண்டியிருக்கிறது. "எந்த இலக்கியத்திலும் கால்விரலைக் குறிக்கும் சொல் இல்லாது போயிற்றே?" என்பது நாம் ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒரு செய்தி.

காலைக் குறித்த தமிழன், தாளைக் குறித்த தமிழன், பாதத்தைக் குறித்த தமிழன், குதியைக் குறித்த தமிழன் கால் விரல் என்று கூட்டுச் சொல்லால் மட்டுமா ஒரு மாந்த உடலுறுப்பைச் சொல்லியிருப்பான்? "இதற்குத் தனிச் சொல் தமிழில் இல்லையா?" என்று கேட்டால், "இன்னும் கொஞ்சம் ஆழத் தோய வேண்டும்" என்று தான் மறுமொழிக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் தோய்தல் என்பதே பதிதல் தானே?

தோய்வு என்ற சொல் தோய்வு>தொய்வு>தொவ்வு>தவ்வு என்று தமிழ் வழக்கில் ஆகமுடியும்; இதே போல, தோய்த்தல்>தோய்த்து>தொய்த்து>தொத்து>தத்து என்றும் ஆகமுடியும்; நிலவு நிலா எனவும், கனவு கனா எனவும் தமிழில் ஆவது போல, தவ்வு என்பது திரிந்து தவ்வு>தவு>தா என்றும் ஆக முடியும்; இனித் தா, தாவு என ஆவதும் கல்லார் வாயில் எளிதுதான். [பா, பாவு ஆகும், பூ, பூவு ஆகும்; அதைப் போல இங்கே தா தாவு ஆகுகிறது.] இது மேலும் அகண்டு, தா+ந்+து>தாண்டு எனவும் விரிய முடியும்.

சொல்லாராய்ச்சி என்பது ஒருவகையில் அகழ்வாராய்ச்சியே ஆகும் என்று பாவாணர் கூறுவார். நமக்குக் கிடைத்தவற்றை வைத்து கிடைக்காதவற்றையும் அடிக் கருத்துகளையும் உய்த்து உணர வேண்டும்.

ஏரண முறைப்படி மேலே கூறியவை சரியானால், தோய்வுக்கு முந்திய வினை தோய்தல் என்பதே என்று புலப்படும்! தோய்தலின் பொருள் பாவுதல், பாதல் என்றே ஆகும். பாதல் என்பதில் இருந்து பாதம் என்ற பெயர்ச்சொல் ஏற்பட்டது போல், குதித்தல் என்பதில் இருந்து குதி என்ற உறுப்பின் பெயர் எழுந்தது போல், தோய்தல் என்ற வினையில் இருந்து *தோய்/தோயை என்ற பெயரை உய்த்து உணர முடியும். *தோய்/தோயை என்ற சொல்லை தொல்முது காலத்தில், சங்க காலத்திற்கும் முன், இருந்திருக்க ஏரண வகையில் வாய்ப்பு உண்டு என்றே சொல்லலாம்.

என்னுடைய கருதுகோளின் படி, மேலை இந்தையிரோப்பிய மொழிகள் தமிழிய மொழிகளோடு வெகுவாகத் தொடர்பு உடையவை. *தோய்க்கு இணையாகவே toe என்ற ஆங்கிலச் சொல்லைப் பார்க்கிறேன். கீழே ஆங்கில சொற்பிறப்பு வலைத்தளத்தில் (http://www.geocities.com/etymonline/) இருந்து கீழே உள்ளதை பார்த்தேன்.

toe - O.E. ta (pl. tan), contraction of *tahe (Mercian tahலூ), from P.Gmc. *taikhwo, probably originally meaning "fingers" as well. Many I.E. languages still use one word to mean both fingers and toes. The verb meaning "touch or reach with the toes" (cf. toe the line) is first recorded 1813. Toenail is from 1841.

பழம் செருமானிய மொழியில் "தாய்க்வோ" என்ற சொல் மூலமாக இங்கு காட்டப் படுகிறது. இந்தையிரோப்பிய மொழிகளில் பொதுவாக, இது போன்ற சொல்லில் வகரம் சேர்ந்திருக்குமானால், அதன் முந்தைய வடிவம் வகரம் இல்லாமல் "தாய்கோ" என்றுதான் இருக்கும். உன்னித்துப் பார்த்தால்,

தோயை>தோய்கை>தாய்கை>தாய்கோ>தாய்க்வோ என்ற வகையில் ஏற்படக் கூடிய திரிவை நாம் மீட்டெடுக்க முடியும். தோயை = தோய்ந்த அய்கள்; அய் என்பதற்கு விரல் என்ற பொருள் தமிழில் உண்டு. இங்கே பதிந்த விரல்களை தோயை குறிக்கிறது.

மேலே கூறிய அதே வலைத்தளத்தில் இருந்து, digit என்ற சொல்லையும் பார்க்கலாம்.

digit - 14c., from L. digitus "finger or toe," related to dicere "tell, say, point out," from I.E. base *deik-. Numerical sense is because numerals under ten were counted on fingers. Digitalis is 1664, Mod.L., from fingerhut, Ger. name of "foxglove," lit. "thimble."

இந்த விளக்கங்களின் காரணமாய்த் தோய் என்பதையே எண்ணில் வரும் digit -ற்கு இணையாய்க் குறிப்பதற்கு தடங்கல் இல்லை என்றே நான் கருதுகிறேன். அதன் விளைவால், 5 digit number = 5 தோய் எண் என்று சொல்லலாம். இதன் தொடர்ச்சியாய்,

digital electronics = தோயல் மின்னியல்
digital clock = தோயல் கடிகை
digital television = தோயல் தொலைக் காட்சி
digital camera = தோயல் ஒளிக்கூடு

என்று பெருக்கிக் கொண்டே போகலாம். அன்னல் மின்னியலுக்கும், தோயல் மின்னியலுக்கும் உள்ள வேறுபாட்டை அந்தத் துறை வல்லுநர்களிடம் இருந்து நாம் அறியலாம்.

நாம் தோய் என்ற சொல்லை ஒரு மீட்டுருவாக்கத்தின் மூலம் செய்துள்ளோம். இப்படித் தமிழில் முலம் காண வேண்டிய சொற்கள் நிறைய உள்ளன.

அன்புடன்,
இராம.கி.


மேலே பரிந்துரைத்த தோயை (digit), தோயல் (digital) போன்ற மீட்டுருவாக்கச் சொற்களை ஏற்காமல் நண்பர் கணேசன் முன்னிகை (comment) ஒன்றை முன்னர் அளித்திருந்தார். அது கீழே.
-----------------------------
அன்பு இராமகி அவர்களுக்கு, வணக்கம். analog என்பதற்கு வேறு சொற்களும் பார்க்கவேண்டும். தனித்தனி எண்களால் ஆன தொழிநுட்பம் எண்ணியம், அனலாக் தொடரியம் போன்றனவும் சிந்திக்கலாம். அனலாக் என்பதற்கு அன்னுதல் என்பது ஒலி ஒப்புமை உள்ளது. software, என்பதை சொவ்வறை என்றும், mouse என்பதை மூசி என்றும் ஒலி ஒப்புமைகளால் மொழிபெயர்க்கிறீர்கள். ஆனால் தமிழருக்கு விளங்குமா என்னும் கேள்வி உள்ளது. digit என்பதற்கு பதிலாக toe என்னும் ஆங்கிலப் பதத்தை எடுத்துக்கொண்டு digital = தோயல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தோய்வது என்பது நிறைய முறை நாம் தினமும் வேறு பொருளில் பயன்படுத்துகிறோம். அதற்கு toe என்பதைத் தமிழில் காணோம். தோய்வது = ஆழ்வது, நொதிப்பது (fermentation) தோய்தயிர் (ஆழ்வார், கம்பன்). தோசை = தோயை. தோயம் என்றால் நீர். எனவே, இப்பொருளில் வழங்கிவரும் தோயல் digital ஆகுமா என்று நீங்கள் சொல்வதுபோல் தமிழர்கள் முடிவெடுக்கவேண்டும். அன்புடன், நா. கணேசன்
-----------------------------

5 comments:

Anonymous said...

ஐயா, "Digital" என்பதை "இருமம்" என்று குறிப்பதில் தவறுன்டா?

Boston Bala said...

நன்றி

Sathia said...

இருமம் என்பது Binary என்ற அளவில் உபயோகிக்கிறோம்.Binary யும் Digitalலும் ஒன்றல்ல.

-/இரமணி. said...

அன்பின் இராமகி
எங்களுக்கும் தானம் என்ற சொல்லையே சிறுவயதிலே என் அம்மம்மா, அப்பாச்சி ஆகியோர் digit என்பதற்கு ஈடாகச் சொல்லித்தந்தார்கள். இங்கே தானம் என்பது ஸ்தானம் என்பதிலிருந்து வந்ததாகவே தோன்றியது. (இலக்கத்திலே எந்தெந்த எண்களுக்கு இடையிலே/இடத்திலே குற்றிடப்படவேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டே digit என்பதற்கு ஸ்தானம் பயன்பட்டது ?) அதனால், தானம் தமிழ்ச்சொல்தானா?

ரவிசங்கர் said...

digitus - தோயை தொடர்பு ஆச்சர்யமளிப்பதே. ஆனால், இதே தோயை எண்ணுதலில் வரும் digitகளுக்கும் அதன் அடிப்படையில் வரும் digital நுட்பங்களுக்கும் பரிந்துரைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. என் பார்வையில் இது ஏற்றுக் கொள்ள இயலாத தமிழாக்க அணுகுமுறை.

மேலைச் சிந்தனையில் இந்த நூற்றாண்டில் உதித்த நுட்பச் சொற்களுக்கு வேண்டுமானால் அவர்களின் வேர்ச் சொல் அடி பார்த்து தமிழாக்குவது பொருந்தலாம். எழுதுவது , எண்ணுவது போன்றவை தொடர்புடைய சொற்கள் அறிவு வளர்ச்சி உடைய எந்த இனத்தின் மொழியிலும் முதலிலேயே உருவாகி விடும் சொற்கள். மேலைக் காரர்கள் விரல் (digit) கொண்டு எண்ணினார்கள் என்பதால் வந்தது digit. ஆங்கிலம் போன நான்கு நூற்றாண்டுகளில் உருப்பெற்ற மொழி. digitன் மூலச் சொல்லான digitus வேறு மொழிகளில் இன்னும் சில நூற்றாண்டுகள் முன்னர் உருவாகி இருக்கலாம். இப்படி அடிப்படைச் சொற்களுக்கும் நம் மொழியில் துழாவாமல் வேறு மொழியில் இருந்து தமிழாக்கிக் கொண்டு இருந்தால் mother, cousin, step-father, uncle எல்லாவற்றுக்கும் கூட அதன் மூலம் துழாவி அதன் அடிப்படையில் தமிழாக்கிக் கொண்டு இருக்கலாம் !!!!

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - என்பதில், வள்ளுவர் எழுத்துக்களால் ஆன சொல்லைக் குறித்தாரா இல்லை தனி எழுத்துக்களைக் குறித்தாரா, எண் - numberஐக் குறித்தாரா இல்லை digitஐக் குறித்தாரா என்ற கேள்வியை எழுப்புவது நலம்.

தமிழில் எழுத்து - சொல் - சொற்றொடர் - வரி என்று வேறுபாடுகள் தெளிவாக இருக்கும்போது அடிப்படை அலகான எழுத்து (letter) என்பதைக் குறிப்பிட்டு விட்டு அதற்கு இணையாக எண் என்ற சொல்லை அடுத்து ஆளும்போது எழுத்து செய்யும் செயலையே எண் செய்கிறது என்பதாக ஏன் கொள்ளக்கூடாது.

number-numeral-digit ஆகிய மூன்றுக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் இன்னும் துல்லியமாக உணரவில்லையோ என்று நினைக்கிறேன்..(கடந்த அரை மணி நேரமாக யோசித்ததில் கோக்கு மாக்காக எனக்கு ஏதோ புரியத் தொடங்கி இருக்கிறது :))

number - எண்ணிக்கை
numeral - எண் முறைமை
digit - எண்

என்று கொண்டால் பல சிக்கல்கள் தீருவதாகத் தான் தோன்றுகிறது.

ஒரு வகுப்பில் ஆண்களின் எண்ணிக்கை (number of men in a class) என்னவென்று தான் கேட்கிறோம். ஆண்களின் எண் என்னவென்று கேட்பதில்லை. ஆக numberக்கு எண் என்று சொல்வது இங்கு பொருந்தாது.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை / மதிப்பைச் சுட்ட, எழுத ஒவ்வொரு எண் முறைமையிலும் வெவ்வேறு (எண்ணிக்கையிலான) எண்கள் நமக்குத் தேவை என்று யோசிக்கும்போதே digit = எண் என்று வந்துவிடுகிறதே?

5 என்பது எண்ணிக்கை. அதை பத்தடிமான முறையில் சுட்டும் எண் 5. அதையே இரண்டடிமான முறையில் சுட்டுவது 101 என்ற எண் வரிசை..

http://en.wikipedia.org/wiki/Numerical_digit கட்டுரையில் உள்ள முதல், இரண்டாவது படங்களில் digit என்று வரும் இடங்களில் எல்லாம் எண் என்றே தமிழாக்க இயலாக்குவதைப் பாருங்கள்.

சொற்களின் அடிப்படை எழுத்து. எண்ணிக்கையின் அடிப்படை எண். இதைத் தான் வள்ளுவர் சொன்னாரா?

ஒரு சொல்லில் எத்தனை எழுத்துக்கள் இருக்கின்றன என்பதைப் போன்ற கேள்வி தான் ஒரு எண்ணிக்கையைக் குறிக்க எத்தனை எண்கள் தேவைப்படுகின்றன என்ற கேள்வி. 5 என்று பத்தடிமானத்தில் குறிக்கப்படும் எண்ணிக்கையை 101 என்று இரண்டடிமானத்தில் குறிப்பிடுகிறோம்.

தனி ஒரு எழுத்துக்கும் ஒரு பொருள் உண்டு. அது கூட்டு சேர்ந்து உருவாக்கும் சொல்லுக்கு வேறு பொருள் உண்டு. அது போல் தனி ஒரு எண்ணுக்கும் (அது பயன்படுத்தப்படும் அடிமானத்தையும் பொறுத்தும்) ஓர் எண்ணிக்கை மதிப்பும் அது கூட்டு சேர்கிற போது வேறு ஓர் எண்ணிக்கை மதிப்பும் கிடைக்கும்.

சொல் - எண்ணிக்கை (number)
எழுத்து - எண் (digit)

என்ற தொடர்பு ஒத்து வருகிறதா?

நாம் தான் இருக்கிற சொல்லின் பொருள் உணராமல் இத்தனை நாள் இருந்தோமா இல்லை நான் ஐரோப்பிய இரவுத் தூக்கக் கலக்கத்தில் பிதற்றிக் கொண்டிருக்கிறேனா..யாராவது தெளிவுபடுத்தினால் நலம் :)

தொடர்புடைய உரையாடல்
http://groups.google.com/group/tamil_wiktionary/browse_thread/thread/a59e10ee82a5d3c6
என்ற முகவரியில் தொடர்கிறது.

எவ்வளவு அருமையான நுணுக்கமான வேறுபாடுள்ள சொற்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியில் digit (in numeral) போன்ற அடிப்படை சொல் இல்லாமலா இருந்திருக்கும்??