Monday, May 07, 2007

கையிற் கிடைத்த கனி

சந்த வசந்தம் மடற்குழுவில் "கையிற் கிடைத்த கனி" என்ற பாட்டரங்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் கொடுத்த என் பங்களிப்பைச் சேமிப்பிற்காக இங்கும் பதிகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

விண்ணவனுக்கு வணக்கம்

"கையிற் கிடைத்த கனி"யென்னும் பாட்டரங்கில்
பைய,நுழை வித்து, "பழநாட்போல் - செய்யு"வென
எண்ணா விதத்தில், இவண்கொண்டு சேர்த்தவனே!
விண்ணவனே! தாள்வணங்கி னேன்.

அவையோருக்கு வணக்கம்

சந்த வசந்தத்தீர்! சான்ற மரபாலே,
இந்தக் குடும்பில், எனையென்றும் சீராட்டி,
எந்தன் கிறுக்கெல்லாம் ஏற்றுப் பொறுத்தவரே!
தந்தேன் வணக்கம் தலை.

தலைவர்க்கு வணக்கம்

வேதத்தார் உள்மனத்தில் வித்தொன்று ஊறியபின்,
"போதில்லை" என்றுசொலிப் போவேனோ? - ஆதத்தீர்!(1)
கையோடு மெய்கூப்பிக் கட்டுரைகள் சொல்லுகிறேன்,
"கையில் கிடைத்த கனி".

கனியென்னும் கருப்பொருள்

"கையிற் கிடைத்த கனியென்றால்?" ஓர்ந்தேன்நான்;
மெய்யூழ் வரலாற்றில், மேலூன்றி நோடியதில்,
"துய்யாய்க் கனியென்று தோய்வதெது?" முன்னுகையில்
அய்யம் உருவாகு மாம்.

கனியாம் பருப்பொருளை மட்டும்நான் காணேன்;
கனியென் கருப்பொருளைக் காட்டும் விதமாய்க்
கனிந்தவற்றை எல்லாம் கனியென்றே சொல்வேன்,
கனியால் விளைந்தகதை காண்.

மாங்கனியால் குன்றாடல்

ஆனைமுகன் கையில் அளித்த கனிமாவால்,
தானைமகன்(2) கோவித்தே, தண்டுகொண்டான்; - ஏனையவர்
குன்றுதொறும் ஆடக் குடிகுடியாய்ப் போகின்றார்,
இன்றுமகம், உத்திரம்,பூ சம்.

அருநெல்லியால் ஆயுள்

அகல்ந்தோங்கும் குன்றில் அருநெல்லி பெற்றான்
தகடூர் அதியன்; தனக்கே - உகந்தானோ?(3)
மூத்தாள்(4) தமிழை முகடோ ங்கச் செய்துவித்தான்;
ஆத்தாள்பெற் றாளாம் யுள்.

அன்னக்கனியால் உயிர்

அல்காக் கலனுள்ளே(5) ஆதிரையாள் முன்னிட்டாள்;
பல்காய்ப் பெருகிப் பலன்பெற்றார் - தொல்குடியாள்(6)
அண்டியவர் பெற்றகனி அன்னம்தான் என்றாலும்,
உண்டி கொடுத்தாள், உயிர்.

மாங்கனியால் அற்றம்

அறிவர்(7) கனிகேட்டார்; ஆயிற்று; இல்லான்
செறிந்த கனிமாசெய் யென்றான்; - இறைஞ்சியவள்
பெற்றகனி பார்த்துப் பிறிதொன்றும் தாவென்றான்;
அற்றாள்(8) புனித வதி.

முலைப்பாலால் தமிழ்

பிள்ளை(9) அழுகின்றான், பெற்றவனைக் காணாது,
வள்ளச்சீர் காழியார்(10) வந்துதித்தார் - அள்ளியபின்
சத்திமுலைப் பாலீந்தாள்; சட்டென்று கொட்டியது
தத்துப்பிள் ளையின்(11) தமிழ்.

அடையமுதால் சுகவி

ஆனைக்கா அன்னை(12) அடையமுது(13) பெற்றதனால்,
மோனைக்கு(14) மோகனமாய்(15) மோகூரான்(16); - தானபடி(17),
சொல்லாட்டப் பாடல்(18) சுவையூறப் பாடுவதில்,
வல்லுற்றோர் யாராமிங் கே?

பார்வைத் திறத்தால் பா

ஓங்காரம்(19) சொல்லி உளமாற எண்ணியவா,
மூங்கைச் சிறுவன்(20) முகம்பார்த்தான் - ஆங்கதன்மேல்
சூர்மேவும் செந்தூரான்(21) சூழ்பார்வைத் திறத்தாலே
"பூமேவு செங்கமலப்" பா(22).

கனியாலே குருவூற்று

மரத்தின் கனி(23)விழுப்பால், மாற்றெழுந்த சிந்தனையில்,
குருவூற்றுக் கொள்கை (24) கொணர்வித்தான்; - உருவலிப்பின்(25)
ஊடே, புதுக்கலனம்(26) உண்டாக்கி, ஆற்றுவித்தான்
ஈடில் பெருங்கணிதன் என்று.

முடிப்பு

கையில் கிடைத்த கனிகள் சிலவற்றைத்
துய்ய மொழியால் தொகுத்தேன் - வையத்தீர்
இன்னும் விரியும்தான்; என்றாலும் போதுமிது,
முன்னாமல்(27) பெற்ற முதல்.

1. ஆதன் = தலைவன்; ஆதத்தார் = தலைமையில் உள்ளவர்.
2. தானைமகன் = தானைக்குத் தலைவன், இங்கு முருகன்; முருகனின் குன்றுதோறாடலுக்கு முதற்படி பொதினி மலை தான். அங்கு சொல்லப் படும் தொன்மமே இங்கு சுட்டப் படுகிறது. பூசம், மகம், உத்திரம் என்று தமிழரில் பலரும் குன்றாடப் போவது, இதில் தானே தொடங்குகிறது?
3. புறநானூறு 91 ம் பாடல், வரிகள் 9-11
"சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
தல் நின் அகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே"
தான் வாழ்வதைக் காட்டிலும் ஒரு பாடினி நீண்ட நாள் வாழவேண்டும் என்று தகடூரான் நினைத்தான் பாருங்கள், இன்றும் எண்ணிப் பார்க்க வியப்பூறுகிறது.
4. இங்கே மூத்தாள் என்பதும் ஆத்தாள் என்பதும் அவ்வையைக் குறிக்கின்றன.
5. அல்காக் கலன் = அள்ளக் குறையாத கலன், அக்ஷய பாத்திரம்
6. தொல்குடியாள் = மணிமேகலை; "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது மணிமேகலைக் காப்பியத்தின் உள்ளார்ந்த வாசகம்.
7. அறிவர் = முனிவராக வந்த இறைவர்
8. அற்றாள் = துறந்தாள். இல்வாழ்வைத் துறந்து பேயாக மாறிய காரைக்கால் அம்மையின் இயற்பெயர் புனிதவதி.
9. பிள்ளை என்பது ஆளுடைப் பிள்ளையாம் சம்பந்தரைக் குறிக்கிறது.
10. வள்ளச் சீர்காழியார் = வளம் நிறைந்த சீர்காழியின் இறைவர் சட்டநாதர்.
11. என்றைக்கு முலைப்பால் ஈந்தாளோ, அன்றையில் இருந்து சம்பந்தர் இறைவிக்கு ஒரு தத்துப் பிள்ளை தான். நாட்டுப்புறங்களில், அந்தக் காலத்தில், பெற்ற தாய்க்குப் பால் சுரக்கா போதில், இன்னொரு தாய்க்கு மடி மிகச் சுரந்தால் மற்ற பிள்ளைக்கும் முலைப்பால் ஈவது உண்டு. அப்படி முலைப்பால் ஈந்தவளுக்கு இவன் தத்துப்பிள்ளை. இந்த வழக்கம் பழைய சோழ நாட்டிலும், தென்பாண்டி நாட்டிலும் உண்டு. இதை என் இளமைக் காலத்திலும் பார்த்திருக்கிறேன். இந்தக் காலத்தில் செய்ய மாட்டார்கள்; புட்டிப் பாலுக்குப் போய்விடுவார்கள்.
12.ஆனைக்கா அன்னை = அகிலாண்ட நாயகி
13. அடையமுது = வெற்றிலை குதப்பிய வாய் அமுது.
14. மோனை என்றது இங்கு வெறும் மோனையல்ல, எல்லாவிதமான தொடைச் சிறப்பையும் குறிக்கிறது. காளமேகத்தின் புலமைச் சிறப்பைப் போற்றாதவர் இன்றும் கிடையாது.
15. மோகனம் என்பது காளமேகத்தின் காதலியான கணிகை மோகனாங்கியையும் குறிப்பிடுகிறது.
16. சோழநாட்டாராய் இருந்தாலும், காளமேகம் வளர்ந்தது மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர்; அவருடைய தந்தை அங்கு மடப்பள்ளியில் வேலை செய்தவர். மோகூர்ப் பெருமாளின் பெயர் காளமேகம். பார்க்க வேண்டிய அழகிய திருமேனி இங்கு உள்ளது. முடிந்தால் பாருங்கள்.
17. தானப்படி என்பது இங்கு தானபடியாய்த் திரிந்து வந்திருக்கிறது. இது சிவகங்கை வழக்கு. தானப்படி என்பது "தான் நினைத்தாற் போல, அதாவது அளவிறந்த" என்ற பொருள் கொள்ளும்.
18. சொல்லாட்டப் பாடல் = சொல்லாடை>சிலேடை என்ற பொருள் கொள்ளும். ஒரே சொல்லில் வெவ்வேறு பொருள் கொள்ள வைத்தல்.
19. ஓம் என்னும் மந்திரம்
20. மூங்கைச் சிறுவன் = ஐந்து அகவை வரை பேச இயலாதிருந்த குமரகுருபரர்
21. சூர்மேவும் செந்தூரான் = சூரனை அழித்து மேலுயர்ந்த செந்தில் முருகன்
22. முருகன் அருளால் பேசத் தொடங்கிய குமரகுருபரர் பாடிய கந்தர் கலிவெண்பாவின் முதலடி "பூமேவு செங்கமல" என்று தொடங்கும். பிற்காலப் புலவர்களின் குமரகுருபரரின் பங்களிப்பு பெரிதும் பாராட்டப் படுவது.
23. இங்கே கனி என்பது ஆப்பிள். நியூட்டனுக்கு நடந்தது இங்கு பேசப்படுகிறது.
24. குருவேற்றக் கொள்கை = gravitation theory. "கல் - உலகளாவிய வேர்" என்ற தொகுதியின் இரண்டாம் பொத்தகத்தில் இந்தப் பொருட்பாடு கூட்டப் பொருளில் இருந்து புலப்படுவதைக் குறித்து, gravity என்பதற்கான இணைச்சொல்லை மிகத்தெளிவாக, முனைவர் கு. அரசேந்திரன் எடுத்துரைப்பார். அவருடைய கல் எனும் தொகுதி வாங்கிப் படித்துப் பயனுற வேண்டிய ஒன்று.
25. உருவலிப்பு = formulation. குருவேற்றக் கொள்கையை விளக்கும் முகமாக, flexions/derivatives என்ற கருத்தைக் கொண்டு வந்து, வகைத்தல் (differentiation), தொகைத்தல்(integration) என்ற கருத்தீடுகளை உள்ளிட்டுக் கணக்குப் பாடத்தில் ஒரு புது உருவலிப்பையே நியூட்டன் கொண்டு வருவார். முகடார்ந்த பூதியலில் (modern physics)" இந்த உருவலிப்பு இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூடச் சொல்லலாம்.
26. புதுக் கலனம் = new calculus. கற்குழைகளை வைத்துக் கணக்குப் போடுவது, அந்தக் கால முறை நாவலந்தீவில் இருந்து அரேபியாவிற்குப் போனது; பின்னால் பிற நாடுகளுக்கும் பரவியது. கல்லுதல் என்ற வினையில் இருந்து தான் கூட்டல், கணத்தல், கணம், கணக்கு, கணிதம் போன்ற சொற்கள் பிறந்தன. இந்தக் காலத்தில் கலனம் என்ற சொல் calculus என்ற உயர்கணிதத்திற்கு உரிய விதப்பான சொல்லாக 30. 40 ஆண்டுகளாகத் தமிழிற் புழங்கி வருகிறது. வகைக் கலனம் = differential calculus, தொகைக் கலனம் = integral calculus என்பவற்றைக் குறிக்கும். கலனம் என்ற சொல் இல்லாமல் உயர்கணிதத்தைத் தமிழில் இன்று விளக்க இயலாது. முழு உயர்கணிதத்தையும் நல்ல தமிழில், நமக்கு மனமிருந்தால், நாம் விளக்கிச் சொல்ல முடியும்.
27. முன்னாமல் = எண்ணிப் பார்க்காமல், எதிர்பாராமல், சட்டென்று அமைகின்ற நல்விளைவையே இந்தப் பாத் தொடர் நெடுகக் கனியென்ற சொல்லால் குறித்தேன். இந்தக் கனிகள் குமுகாயத்திற்கு நல்லதையே தந்திருக்கின்றன. இன்னும் பல கனிகளை இங்கு சொல்லலாம். [என்னுடைய உமரி மானுறுத்தம் (urea manufacture) பற்றிய ஆய்விலும், இப்படி ஓர் "கையிற் கிடைத்த கனி" அகப்பட்டது. அது கிட்டவில்லையானால் என் ஆய்வு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குக் கூட வந்திருக்காது. சுவையான கதை; இருப்பினும் அதைச் சொல்லப் புகுந்தால் பெரிய விளக்கம் கொடுக்க வேண்டும்; தவிர பொது அவையில் விதப்பான வேதிப் பொறியியல் செய்திகளைக் கூறுவது முறையாக இருக்காது என்று தவிர்க்கிறேன். வேறொரு களத்தில் வேறொரு பொழுதில் பார்க்கலாம்.]

No comments: