தோனி வெளியேற்றப் பட்டவுடனேயே, "மேற்கொண்டு பார்ப்பது வீண், இனி இவர்கள் உருப்பட மாட்டார்கள்" என்றெண்ணி எரிச்சலுடன், தொலைக்காட்சியை அணைத்துப் படுக்கப் போய்விட்டேன். மறுநாள் காலையில் சரியான தூக்கம் இல்லாமல், கொஞ்சம் தலைவலியோடு தான் எழுந்தேன். நேற்று முழுக்க ஒரே சோர்வு. மாலை வர, வரத்தான் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டது. இது போன்ற ஏமாற்றங்கள் ஏற்படுவது இயற்கைதான் என்று அமைந்தேன்.
"சட்டியில் இருந்தால் அல்லவா, அகப்பையில் வருவதற்கு?"
"ஆடத் தெரியாதவள் தெருக் கோணல் என்றால் எப்படி?"
கொஞ்சம் கொஞ்சமாய் நுட்பியல் தாக்கங்களால் (impacts of technology) உலகெங்கும் ஆட்டங்கள் மாறிக் கொண்டிருக்கும் போது, அந்த மாற்றங்களை உணர்ந்து கொள்ளாமல், மாற்றங்களுக்கேற்பத் தங்களை அணியமாக்கிக் கொள்ளாமல், இன்னும் பழைய முறையிலேயே ஆடிக் கொண்டிருந்தால், இது போன்ற ஏமாற்றங்கள் நமக்கு ஏற்படத் தானே செய்யும்?
வளைதடிப் பந்தாட்டத்திலும் (hockey) இப்படித்தான் நடந்தது. செயற்கைப் புல்விரிப்புக்களும் (artificial turf), வலிய அடிப்புக்களுமாய் (shots), ஆடுகின்ற ஆட்டமே மாறியபின், பழைய துணைக்கண்ட அணுகு முறையிலேயே, வளைதடிக்கு அருகில் பந்தை வைத்துக்கொண்டு, எதிராளியின் வளைதடியில் பந்தைச் சிக்க விடாமல், இரண்டு மூன்று பேர் தங்களுக்குள்ளேயே சிறுசிறு கடவுகளில் (passes) பந்தை அங்கும் இங்கும் திருப்பி அலைத்து, நளினமாய் நகர்த்திக் கொண்டு, எதிராளியின் கவளை (goal) வரை போய் சட்டென்று பந்தைத் திணித்து வரும் உத்திகளெல்லாம் மறைந்து போய் எத்தனை மாமாங்கம் ஆயிற்று? இன்னும் அதே பழைய முறையிலேயே இந்தியா ஆடிக் கொண்டிருந்தால் எப்படி? வளைதடிப் பந்தில் இந்தியா தோற்றுக் கொண்டுதான் இருக்கும்; ஒரு நாளும் அது மேலே வராது. இது போக பந்தாட்டக் குழும்பில் (hockey club)இருக்கும் வட்டார அரசியல், பணங்களைச் செலவழிக்கத் தயங்கும் போக்கு; ஊழல் இன்ன பிற.
அதே போன்ற நிலை வேறு உருவத்தில் மட்டைப் பந்திலும் (cricket) ஆகிக் கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
இப்பொழுதெல்லாம், பெரும்பாலான சிறந்த அனைத்து நாட்டு அணியினர் மட்டைப் பந்தைப் போடும் வேகம் கூடிக் கொண்டே போகிறது. மணிக்கு 140-142 கி.மீ.க்கு மேலும், பலர் பந்து வீசுகிறார்கள். அதோடு, அந்தப் பந்துகளின் தொடக்க முடுக்கமும் (initial acceleration) கூடுதலாய் இருக்கிறது. பந்தை விரல்களில் இருந்து வெளியே விடும் இலவகமும் சிறக்கிறது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பந்து பாதித் தொலைவைத் தாண்டிவிடுகிறது; மட்டையால் பந்தைத் தடுத்து திருப்பிவிட வேண்டுமானால், பரவளைவில் (parabola) வரும் ஒவ்வொரு பந்தின் நகர்ச்சியையும், வேகத்தையும், முடுக்கத்தையும் நிதானிக்கத் தெரியும் திறன் மட்டையாளருக்கு (batsman) இருக்கவேண்டும். இந்தத் திறனில் கண், கையோட்டம் ஆகியவற்றை ஒருங்குவிக்கும் (co-ordinating)போக்கும் அமையவேண்டும்.
அதிட்டமில்லா வகையில், நம் மட்டையாளர்கள் இத்திறனில் கொஞ்சம் கூட வளர்ச்சி பெறவில்லை. நம் மட்டையாளர்கள் மட்டுமல்ல, ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, நம் பந்து வீச்சாளர்களும் 135-138 கி.மீ / மணிக்கு மேல் தாண்டி பந்து வீச மாட்டேம் என்கிறார்கள்; ஆகப் பிழை என்பது மட்டையாளர்கள், வீச்சாளர்கள் என இருவரிடமும் தான் இருக்கிறது. ஒருவர் மட்டும் காரணம் இல்லை. நம்மிடம் மொத்தமாய் உள்ள வலுவின்மை இது. வேகப் பந்துத் தடுமாற்றம்.
வலுக்குறைந்த நம் வீச்சாளர்களின் பந்துவீச்சிற்கே பழக்கப்பட்டு அடித்துவரும் மட்டையாளர்களும் 140 கி.மீ./மணிக்கு மேல் பந்தின் வேகம் இருந்தால், அதோடு முடுக்கமும் கூடுதலாய் இருந்தால், அதைத் தடுத்து அடிக்கவே தடுமாறுகிறார்கள். இதில் தெண்டுல்கரில் இருந்து எல்லோரும் அப்படித்தான் ஆகிறார்கள். (அன்றைக்கு தில்லார வெர்னாண்டோ, மலிங்கா போட்ட பந்து வீச்சுகளில் எல்லோருமே தடுமாறினார்கள்.) இதே நிலைமைதான், பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளைக் கண்டு இந்திய அணியினரிடம் அமைகிறது. வெளிநாட்டுப் பந்து வீச்சாளருக்கு மேல், நம் வீச்சாளர் அமைந்தால் அல்லவா, அந்தப் பயிற்சியின் விளைவால், வெளிநாட்டுக் காரரை எதிர்கொள்ளும் திறம் நம் மட்டையாளருக்கு வந்து சேரும்?
இது போலப் பட்டிகைகளும் (pitches) வேகப் பந்திற்கு வாகாக அமையும் வகையில் நம் நாட்டில் மாற்றப் படவேண்டும். அதற்குத் தேவையான மண்எந்திரவியல் (soil mechanics) ஆய்வும் இங்கு நடைபெற வேண்டும். எந்தப் பட்டிகை எவ்வளவு குதிப்புக் (bounce) கொடுக்கும்? எவ்வளவு பரவலாய்க் கொடுக்கும்? எப்படிக் குதிப்பை வேண்டுவது போல் மாற்றலாம்? - இந்தக் கேள்விகளுக்கு விடை நமக்குத் தெரிய வேண்டும். நல்ல பட்டிகைகளை உருவாக்கும் கலைத்திறன் கொண்டவர்களை நம் வாரியம் பாராட்டிப் பேணவேண்டும். கொஞ்சம் கூடக் குதிப்பு இல்லாத வறட்டையான (flat) பட்டிகைகளை உருவாக்கி நம் ஆட்டக்காரர்களை நாமே கெடுக்கிறோம். இந்த வகையில் இந்திய வாரியம் மாநில வாரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். அவரவர் தங்கள் குழுக்கள் வெற்றிபெற வேண்டும் என்று எல்லா இடத்திலும் சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள். நம் ஆட்டக் காரர்களின் எதிர்காலத்தை நம் மாநில வாரியங்களே கெடுக்கின்றன.
உள்ளூர் ஆட்டங்களில் வேகப் பந்தைப் போடுவதற்கும், எதிர்கொள்ளுவதற்குமான திறனை வளர்த்துக் கொள்ள நம் நாட்டில் பயிற்சிக் களங்களை ஏற்படுத்தாது இன்னொரு பெரியகுறை. சென்னையில் இருக்கும் MRF பயிற்சிக் களம் என்பது ஒரு புறனடையாகத் (exception) தான் இருக்கிறது. இது மட்டும் போறாது. இது போல 10, 12 களங்களாவது நாடெங்கிணும் வேண்டும். MRF பயிற்சிக் களத்திலிருந்து வெளிவருகிறவர்களும், தங்கள் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து, நாளாவட்டத்தில் கோட்டையும் (line), நீளத்தையும் (length) சரி செய்யும் போக்கில், தங்களின் வேகத்தில் கோட்டை விடுகிறார்கள். (காட்டாக: முனாவ் பட்டேல், இர்பான் பத்தான்).
இன்னொரு குறை: நம்முடைய மரபு சார்ந்த சுழற்பந்திலும் (spin bowling) திறன் குறைந்து போனது; புதிய உத்திகள் உருவாவதில்லை. முத்தையா முரளிதரன் தூஸ்ரா பந்தைப் போடப் பழகி, தூண்டில் போடுவது போல் சுழித்து எறிகிறார். நம்மாட்களோ அதில் வகையாக மாட்டிக் கொள்ளுகிறார்கள். அது போலப் பந்து போட, நம் பக்கத்தில் ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் (அர்பஜன் இந்தப் பந்தில் அவ்வளவு தெளிவு இல்லை). சுழற்பந்து போடுவதில் புதுப்புது வேற்றங்களை (variations) நாம் உருவாக்க மாட்டேம் என்கிறோம்.
அதே போல, உள்வட்டத்தில் இருக்கும் களத்தர்கள் (fieldsman) பந்தைப் பிடித்து நேரே குத்திகளை (stumps) விழுத்துமாப் போல பந்தைத் தூக்கி எறியாமல், குத்திகளுக்கு அருகில் உள்ள களத்தருக்கு எறிந்தே, பழக்கப் பட்டிருக்கிறார்கள். நேரே பந்தெறிந்து குத்தியைத் தகர்க்கும் கலையில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். அது போக, கள வேலைகளில், ஒரு மேலோட்டத் தனம், ஈடுபாடு இல்லாமை, ஆகியவை தென்படுகின்றன; இவை களையப் படவேண்டும்.
பொதுவாக, இப்பொழுதெல்லாம் ஆட்டம் என்பது பணமயமாய் ஆகிப் போய் விட்டதால், உள்ளூர் ஆட்டங்களில் பலரின் கவனமும் குறைந்து போயிற்று; இவ்வளவு பணம் சம்பாரிக்கும் மட்டைப்பந்து வாரியத்தின் முயற்சியில் உள்ளூர்ப் போட்டிகளின் ஆழம் கூட்டப் படவேண்டும். (ஒருபக்கம் ரஞ்சி, இன்னொரு பக்கம் மற்றைய ஆட்டங்கள் என்று நேரம் வீணாகப் போகாமல், நாடு தழுவிய அளவில் ஒருநாள் ஆட்டத்திற்கு ஒரு போட்டி, ஐந்து நாள் ஆட்டத்திற்கு இன்னொரு போட்டி என்று இரண்டு மட்டும் இருந்தால் போதும். இவை எல்லாம் ஒரு ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் முடிக்கப் படவேண்டும்.)
உள்ளூர் ஆட்டங்களில் நுட்பியல் பெரிதும் கூடிவர ஏற்பாடு செய்ய வேண்டும். நுட்பியல் இல்லாமல் மட்டைப் பந்து இல்லை என்று இப்பொழுது ஆகிவிட்டது. உள்ளூர் ஆட்டங்களில் பந்து வீச்சின் வேகத்தோடு, முடுக்கம் போன்றவையும் கணிக்கப் பட வேண்டும்; பல்வேறு நுட்பியல் கருவிகள் கொண்டு ஒவ்வோர் இயக்கமும் பதிவு செய்யப் படவேண்டும்; உள்ளூர் ஆட்டங்கள் விழியப் படங்களாய்ப் (video movies) பதிவு செய்யப் படவேண்டும். தொலைக்காட்சிகளில் உள்ளூர் ஆட்டங்களைக் காட்ட வழிசெய்ய வேண்டும். வல்லுநர்கள் உள்ளூர் ஆட்டங்களைத் தீவிரமாக அலசி "யார் மேல் நிலையில் உள்ளார்? யாருக்கு என்ன பயிற்சி கொடுத்தால் இன்னும் மேல்நிலைக்குக் கொண்டு வரலாம்?" என்று பார்க்க வேண்டும். சமலேற்ற அலசல்கள் (simulated analyses) நடக்க வேண்டும்.
வெறுமே மேட்டுக் குடியினர் (இதை நான் விவரித்தால் பலருக்கும் பிடிக்காமல் போகலாம்.) ஆடும் குழும்பு (club) ஆட்டங்களில் மட்டுமே கவனம் கொள்ளாமல், நாட்டுப் புறங்களில் நடக்கும் ஆட்டங்களை வாரியம் தூண்டிவிட வேண்டும். வேகப் பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில் இருந்து வரவே வாய்ப்பு உண்டு. உள்ளூர் ஆட்டங்களில் ஓர் அணிக்கு இரண்டு வேகப் பந்து வீச்சளாராவது இருக்க வேண்டும் என்ற கட்டாயம் வேண்டும். அந்தப் பந்து வீச்சாளர்களின் வேகமும், குறைந்த ஓட்டங்களில் மட்டையாளர்களை வெளியேற்றக் கூடிய திறனும், அதிகரிக்கும்படி, போட்டிகள், பரிசுகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும்.
அதே போல சுழற்பந்து வீச்சிலும் நிறுவனப்படுத்தப்பட்ட முயற்சிகளைத் (organized efforts) தொடங்க வேண்டும்.
தவிர இந்தியப் பல்கலைக் கழகங்களில், குறைந்தது ஐந்தாறு இடங்களிலாவது உயிர்எந்திரவியல் (biomechanics) தொடர்பான ஆய்வுகளின் மூலம் இந்திய மட்டைப்பந்து ஆட்டத்தை ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இந்த ஆய்வுகளுக்கு மட்டைப்பந்து வாரியம் பணம் செலவழிக்க வேண்டும். இது போன்ற ஆய்வுகள் ஆத்திரேலியப் பல்கலைக் கழகங்களில் நடக்கின்றன. இப்பொழுது தென்னாப்பிரிக்காவிலும் நடக்கிறது. அதே போல பொருதுகள மருத்துவமும் (sports medicine) ஆத்திரேலியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் பெரிதும் கிடைக்கிறது. நம் ஆட்டக்காரர்களும் கூட ஏதாவது சிக்கல் என்றால் அங்கு தானே ஓடுகிறார்கள்? நம்மூரிலேயே பொருதுகள மருத்துவமும், அதையொட்டிய வளர்ச்சி, ஆய்வுப் பணி போன்றவை நடைபெற்றால், நாமல்லவா வளர்ச்சி பெறுவோம்?
இன்னொன்றும் நடைபெறலாம். இனியும் இந்தியா என்று ஒரே அணியை மட்டும் வைத்துக் கொண்டு இருப்பது சரியில்லை. இன்றைய நிலையில் 100 கோடி மக்களில் 15 பேர் என்பது பல்வேறு வகை அரசியல் நடப்பதற்கே வழி வகுக்கிறது. இந்தியா - வடக்கு, இந்தியா - கிழக்கு, இந்தியா - மேற்கு, இந்தியா - தெற்கு என்று நான்கு அணிகளை உருவாக்கி அவற்றை அனைத்து நாட்டுப் போட்டிகளில் நம் வாரியம் பங்கு பெற வைக்கலாம். இதனால் பல நல்ல விளைவுகள் ஏற்படக் கூடும். குறிப்பாக, இப்பொழுது இருக்கும் வட்டார அரசியல் குறைய வாய்ப்புண்டு. தவிர, மட்டைப் பந்தாட்டத்தில் நடக்கும் அரசியல், சூதாட்டம், பணக்குவிப்பு போன்றவை குறைய, இது போன்ற பரவலாக்கங்களே உதவி புரியும்.
அன்புடன்,
இராம.கி.
7 comments:
அய்யா,
கட்டுரையில் வேறு ஒரு(தேவையான!) கோணத்தில் நாவலத்து மட்டைப் பந்தாட்டம்
அலசப்பட்டிருக்கிறது.
மட்டைப் பந்தில் புழங்கப்படும் சில சொற்களுக்குத் தமிழ்ப் பதம் வேண்டி நானே தங்களை வினவ எண்ணியிருந்தேன்.அதற்குள் தாங்களே பதிவொன்றை
பொதுவளித்திருக்கிறீர்கள்.மகிழ்ச்சி!
அப்படியே innings,wicket(இலக்கு?),over (உம்பர்?) ஆகியவற்றிக்கான தங்கள்
பரிந்துரைகளையும் நேரம் இருக்கையிற் கூறிவிடுங்களேன்.
-பிரதாப்
ஐயா,
அடடா! என்ன ஒரு அழகான விளக்கம், ஆராயப்பட்ட கட்டுரை. மிகத் தெளிவாக ஒவ்வொரு துறையையும் ஆராய்ந்து அதற்கான சில தீர்வுகளையும் கொடுத்துள்ளீர்கள். நிறைய கற்றுக்கொண்டேன் உங்கள் கட்டுரையிலிருந்து. நன்றி ஐயா.
அதுபோல், மட்டைப்பந்தில் புழங்கும் பல ஆங்கில பதங்களுங்கு எனக்கு தமிழ்ச் சொல் கிடைத்ததய்யா. மீண்டும் நன்றி.
leg bye, hit wicket உள்ளிட்ட இன்னும் பல கிரிக்கெட் கலைச்சொற்களுக்கு ஒரு பட்டியலாகவே தமிழ்ச் சொற்களைத் தந்தால் நன்று. முற்றிலும் புதிய சொற்களுக்கு கூடவே விளக்கமும் கொடுக்க இயன்றால் இன்னும் சிறப்பு.
நான்கைந்து இந்திய அணிகள் வர வேண்டும் என்பதை நானும் வழிமொழிகிறேன். கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி என்று ஒரு சிலவற்றை மட்டும் கட்டி அழாமல் தடகளப் போட்டிகளிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இந்த குழு விளையாட்டுக்களை விட அவை முக்கியம்
Exactly what i felt is to have four indian teams india north, india south, india east, india west...
அய்யா,
வேற்றம் = version என்று தானே சொல்லியிருந்தீர்கள்?
கவனக்குறைவால் எழுதப்பட்டிருக்கிறதென நினைக்கிறேன்.
Variation வேறாட்டம் என்றெல்லவா வந்திருக்க வேண்டும்?
(-action, -ation என்ற பின்னொட்டுக்களெல்லாம் தமிழில் ஆற்றம்,ஆட்டமாகும்
என்று தாங்கள் எங்கோ சொல்லி நான் கற்றது!)
-பிரதாப்
«ýÒûÇ «ñ½ý,
Áð¨¼ô Àó¾¡ð¼ì¸¡Ã÷¸û ÌðÊîÍÅâø ÓðÊ즸¡ñÎ ¿¡ºÁ¡öô §À¡¸ðÎõ. ±ÉìÌ «ì¸¨È¢ø¨Ä. ¿¡ý §¸ð¸ Å¢¨Æó¾Ð: §À¡Úõ ±ýÈ ¦º¡ø¨Ä ¬ñÊÕ츢ȣ÷¸û. §À¡Ðõ ±ýÀÐ ºÃ¢Â¡ «øÄÐ §À¡Úõ ±ýÀ¾¡?
«ýÒ¼ý
¬ÚÓ¸ò¾Á¢Æý
அன்பிற்குரிய பிரதாப்,
innings,wicket(இலக்கு?),over ஆகியவற்றிற்கான தமிழ்ச்சொற்களைக் கேட்டிருக்கிறீர்கள். சொற்பிறப்பு அகரமுதலியில், O.E. innung "a taking in, a putting in," ger. of innian "get within, put or bring in," from inn (adv.) "in" (see in). Meaning of "a team's turn in a game" first recorded 1738, usually pl. in cricket, sing. in baseball என்ற விளக்கத்தைப் பார்த்தால், முதல் உள்ளாங்கு (first innning), இரண்டாம் உள்ளாங்கு (second inning) என்றே சொல்லலாம். அதே போல wicket என்பதைக் கிட்டி என்றே சொல்லலாம். கிட்டிப்புள்ளில் வரும் கிட்டியைப் போல் அது சிறிதாகத் தானே இருக்கிறது?
அன்பிற்குரிய fast bowler,
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
அன்பிற்குரிய ரவிசங்கர்,
leg bye, hit wicket ஆகியவற்றிற்குத் தமிழ்ச்சொற்கள் கேட்டிருக்கிறீர்கள். "காலோடு" என்றும், "கிட்டி வீழ்ப்பு" என்றும் இவற்றை எளிதாகச் சொல்லலாமே? உங்களின் மற்ற கருத்துக்களுக்கு நன்றி.
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
அன்பிற்குரிய பிரதாப்,
வேறாட்டம் என்றுதான் நான் சொல்லியிருக்க வேண்டும். வேற்றம் என்றது சுருக்கமாய் இருந்தாலும், மாற்றுப் பொருள் வந்துவிடும் என்பது உண்மை தான்.
அன்பிற்குரிய ஆறுமுகம்,
போறும் என்பது சரியா, போதும் என்பது சரியா என்று கேட்டிருக்கிறாய்? றகரமும் தகரமும் ஒன்றிற்கொன்று போலியாகப் பேச்சுவழக்கில் வருவதால் அப்படி எழுதினேன். போதும் என்பதே இலக்கணப்படி சரியாகும்.
அன்ப்டன்,
இராம.கி.
Post a Comment