Friday, March 02, 2007

அயிரை மேட்டில் ஓரிரவு

சந்த வசந்தம் மடற்குழுவில் அவ்வப்போது நான் எழுதி வந்த பாடல்கள் "காணவொரு காலம் வருமோ" என்ற தலைப்பில் ஒரு பதிகமாய்க் கிளைத்தன. கவிமாமணி இலந்தையார் "இதைத் தொகுத்து ஒரு மின் பொத்தகமாய்ப் போடலாம்" என்று சொன்னார். இங்கு வலைப்பதிவிலும் முன்பு போட்டிருந்தேன். நாளைக்கு மாசி மகம் பூரணை; கண்ணபுரத்தான் திருமலைராயன் பட்டினம் போய்ச் சேரும் நாள். "தீர்த்த வாரி" என்று அங்கு சொல்லுவார்கள். பதிகத்தின் இரண்டாம் பாட்டு, காரழகுத் திருமேனியின் அயிரை மேட்டு நிகழ்வை அப்படியே நினைவு கூர்கிறது. உங்கள் வாசிப்புக்கு.

அன்புடன்,
இராம.கி.

2. அயிரை மேட்டில் ஓரிரவு

வரையாத அழகோடு, வடிவான உருவோடு,
வலையரின் பத்து மினியாள்;
வளையாத வில்லையும், வகிடாத வாளையும்,
பழிக்கின்ற புருவ எழிலாள்;
புரையாத திருமகளின் தோற்றரவில் முன்ஒருநாள்
புலம்காட்டி நின்ற போது,
புல்லியே வதுவையுறப் போனதை இன்றளவும்
புவனத்தில் யாரும் அறிய,
நுரையோடு திரைஓங்கும் திருமலையின் பட்டினத்தில்
நுளையோரின் மருக னாக,
நுண்அயிரை மேட்டிலே இரவெலாம் களிப்பதை,
நோக்குநாள் எந்த நாளோ?
கரையோடு ஊர்உலவும் காரழகுத் திருமேனி
காணஒரு காலம் வருமோ?
காவிரியின் ஓரத்தில் தேவியுடன் மேவிவரும்
கண்ணபுரச் சௌரி ராசா!


இரண்டாவது பாடல் பத்மினி நாச்சியார் என்னும் செம்படவ நாச்சியார் பற்றிப் பேசுகிறது. கண்ணபுரத்திற்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருமலை ராயன் பட்டினத்தில் மீனவத் தலைவன் மகளாக திருமகளே வந்து பிறந்ததாய் ஒரு தொன்மம் உண்டு. இந்தத் தோற்றரவில் (அவதாரத்தில்), தாயாரின் பெயர் பத்மினி. கண்ணபுரம் மாசித் திருவிழாவின் ஒரு நிகழ்வாய், பெருமாள் பத்மினி நாச்சியாரைக் கைப் பிடிக்கும் விழா நடக்கிறது. பெருமாளுக்குச் சரம் (கைலி) கட்டி மீனவனாய் மாற்றி, ஊருலவுத் திருமேனி (உற்சவ மூர்த்தி) திருமலை ராயன் பட்டினம் போய்ச் சேரும். கடற்கரை மேட்டில், திருமாலை இருத்தி, மீனவர்கள் சுற்றி வந்து, கும்மாபம் போட்டு, இரவு முழுக்க தங்கள் மாப்பிள்ளையோடு கூத்தாடிக் கோலாகலமாய் இருப்பது வழக்கம். "எங்கள் மாப்பிள்ளை, எங்கள் மாப்பிள்ளை" என்று ஊரே மெய் சிலிர்த்துப் போவது, சில காலம் முன்பு வரை இருந்திருக்கிறது.

பூதேவி சீதையாகவும் ஆண்டாளாகவும் பிறந்த தோற்றரவுகள் (அவதாரங்கள்) பலரும் அறிந்தது போல், சீதேவியின் தோற்றரவுகள் பலராலும் அறியப்படுவதில்லை. புரைதல் = ஒப்புதல், பொருந்துதல்; புரையாத திருமகள் = ஒப்பு இல்லாத, தனக்கு நேர் இல்லாத திருமகள்; கரையோடு ஊருலவும் திருமேனி = கண்ணபுரத்தில் இருந்து காவிரிக் கரையோரம் போய் பின் கடற்கரை ஓரத்தில் ஊருலாவும் பெருமாள்.

3 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு இராமகி,
தங்களின் அனுமதியுடன் என் மாலியம் வலைப்பூவில் "காண ஒரு காலம் வருமோ?" பொத்தகத்தின் சில பாடல்களை முன்னர் இட்டுள்ளேன்.
அதிலுள்ள அத்தனை பாடல்களும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் பாடல்கள் என்பதைக் குறிப்பிடாது இருக்கவியலவில்லை.

Anonymous said...

Dear Sir,

Can you please give me images of the tamil script as they have evolved from 3BC to the present time.

i saw such a image but i cannot find it now.

thanks.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

anonymous - தமிழ் விக்கிபீடியாவில் உள்ள தமிழ் கட்டுரையை பாருங்கள். அதில் இந்த படங்கள் இருக்கின்றன.