Thursday, November 23, 2006

பொன்னும் சோதனையும்.

முன்பு ஒருமுறை நண்பர் நாக. இளங்கோவனுக்கும் எனக்கும் 3 ஆண்டுகளுக்கு முன் (2003) நடந்த உரையாடல் இது. அவர் testing பற்றிக் கேட்டிருந்தார். பேசாமல் சோதனை/சோதித்தல் என்றுநான் சொல்லி விட்டுப் போயிருக்கலாம் தான். இருந்தாலும் தொடர்புடைய சொற்களான examine, exact, essay, போன்றவற்றையும், பொன், மாற்று, சரி, எடுத்தல், நிறுத்தல், சுமத்தல், தூக்குதல், வீக்குதல் போன்றவை பற்றியும் சொல்ல, ஓரிடத்தில் வாய்ப்புக் கிடைத்ததால் இதை எழுதினேன். இங்கு மீண்டும் பலருக்கும் பயன்படும் என்று கருதிப் பதிகிறேன்.

ஒரு பொருளைத் தரம் பார்க்கவேண்டிய தேவை முதலில் எழுந்ததே பொன் என்னும் மாழையால் (metal) தான். இயற்கையில் எளிம (element) நிலையில் கிடைக்கும் அரிய பொருள்களில் ஒன்றானது பொன்.

சிலபோது பொன்னெனும் இம்மாழை, அஃகுதையாகக் கிடந்தாலும் (oxide; அஃககம் = oxygen; அஃகு = ஊறுநீர்; ஊறப்போடுகிற காய் ஊறுகாய்; ஊறுகின்ற நீர் அமிலமாகக் காடித்துப்போய்க் கிடக்கும். அமிலத்திற்குக் காரணியாக ஒரு காலத்தில் oxygen என்ற எளிமம் கருதப்பட்டது. எனவே பொருள்நீட்சியில் அஃககம் என்பது oxygen ஆயிற்று. இதுபோல நீரின் காரணியான hydrogen-யை நீரகம் என்றுநாம் தமிழில் சொல்கிறோம்.), பெரும்பாலும் எளிம நிலையிலேயே ஆற்றுப் படுகைகளில் பொன் கிடைத்தது. [நம்மூரில் பொன்னியான காவிரிப் படுகை இப்படிப் பொன் கிடைத்த படுகை தான்; ஆற்றிற்குப் பெயர் வந்ததும் பொன் மாழையை ஒட்டித் தான். குவலாள புரத்தை (Kolar) ஒட்டி ஓடும் இந்த ஆற்றுப்படுகையில் பொன்னைக் கண்டது தமிழர் வரலாற்றில் மிகவும் பெருத்த செய்தி.]

பொன்னாகிய இம்மாழை எளிதில் வளையக் கூடிய, அவ்வளவு வன்மை (strength) இல்லாத, மெல்லிய மாழை. தமிழர் பொன்னை முதலில் அறிந்ததால் தான் பொன் என்ற சொல், விதுமையாக முதலிற் தங்கத்தை உணர்த்திப் பின் நாளா வட்டத்தில் பொதுமையாக எல்லா மாழையையும் உணர்த்தியது. செம்பொன் (copper), வெள்பொன் (silver), இரும்பொன் (iron) எனப் பொன்னுக்கு அடுத்துத் தோன்றியவை எல்லாவற்றிற்குமே பொன் என்பது சொல்லீறாக மாறிற்று.

வெறும் பொன்னை அடுத்து, காலத்தால் தமிழ்மாந்தன் அறிந்த மாழை தான் செம்பொன் எனப்படும். இயல்நிலையில் (natural) செம்பொன்  பெரும்பாலும் அஃகுதை (oxide) அல்லது கந்ததையாகவே (sulphide) கிடைக்கிறது. இந்த அஃகுதையைக் கரிமத்தோடு சேர்த்து ஓர் உலையில் போட்டு, உயர் வெம்மையில் (high temperature) வினைக்க (react) வைத்து, செம்பொன் எளிமத்தையும், கரிம-இரு-அஃகுதையையும் (carbon-di-oxide) உருவாக்குகின்ற நுட்பத்தை தன்னேர்ச்சியாக மாந்தன் கண்டு பிடித்தானா என்பது தெரியாது. (செம்புக் கந்ததையைக் காற்றில் எரித்து, கந்தக-இரு-அஃகுதை உண்டாக்கிச் செம்பைத் தனியே பிரிப்பதே இந்தக் காலத்தில் பெரும்பாலும் நடக்கிறது.)

எளிதாகப் பானை சுடும் சூளையில் கிடைக்கும் வெம்மையே, இந்தச் செம்பொன் செய்யும் நுட்பத்திற்குப் போதுமானது ஆகும். இந்த அரிய உண்மையை (The first widely used metal was copper, which can be reduced from its ores by a kiln not more efficient than that needed for pottery) டி.டி.கோசாம்பி தன் The Culture and Civilisation of Ancient India என்ற நூலில் எடுத்துரைத்திருப்பார். (அக்கால சுமேரிய, மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் மட்டுமே இக்கூறுகளைக் கொண்டிருந்தன. எகிப்திய நாகரிகம் செம்பொன் பொருட்களைக் கொண்டிருந்தது; ஆனால் நுட்பம் பயன்படுத்தியதற்கான கூறுகள் அங்கு நமக்குத் தெரியவில்லை. இன்றைக்கும் இந்தியாவில் வடக்கே இருக்கும் இராசத்தான கேத்திரிச் சுரங்கம் பழங்காலத்திலும் பயன்பட்டிருக்க வேண்டுமென்று சிந்து சமவெளி நாகரிகக் கூறுகளால் அறிந்து கொள்கிறோம். அண்மையில் சிங்களத்தைச் சேர்ந்த ஒரு அகழ்வாராய்ச்சி வல்லுநர், ஈழத்தீவில் அக்காலத்தில் செம்பொன் கிடைத்திருக்கக் கூடிய கூறுகளை எடுத்துரைத்திருக்கிறார். தாம்பர பெருநை (தாமிர வருணி) என்பது நம்பக்கத்து ஆற்றிற்கு மட்டும் அல்லாது, அந்தப் பக்க நிலத்திற்கும் கூடப் பெயராக இருந்தது. தாம்பர பெருநைக்கும் தாம்பரத்திற்கும் உள்ள தொடர்பு மேலும் செய்யப் படவேண்டிய ஓர் ஆய்வு. ஆதிச்ச நல்லூர் புதைகுழிகளில் இரும்புப் பொருள்கள் மட்டுமல்லாது செம்புப் பொருள்களும் கூட ஒன்றிரண்டு கிடைத்திருக்கின்றன. செம்புக் காலம் நம் பக்கம் தெற்கே நடைபெறவே இல்லை என்பதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது இருக்கிறது.)

செம்பை பொன்னோடு கலந்து அதன் வன்மை(strength)யைக் கூட்டி மாழைக் கலவையை உருவாக்கி நகைசெய்யத் தொடங்கிய பின்தான், கலவையின் தரம் அறியவேண்டிய தேவை ஏற்பட்டது. (இக்காலத்தில் வெள்ளி, நாகம், நிக்கல், உரோடியம், பல்லேடியம் போன்றவற்றைப் பொன்னோடு கலக்கிறார்.) பொற்கொல்லர் என்போர் நம்மூரில் தட்டார் என்றும் சொல்லப் பட்டார். கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால், பொற்கொல்லர் என்பது ஓர் இரட்டைக் கிளவிச் சொல் என்பது புலப்படும். கொல்லர் என்றாலே தமிழில் "பொன்னைக் கையாளுபவர்" என்ற பொருள் வந்துவிடும். ஏனென்றால் கொல் என்பதே பொன்னைக் குறிக்கும் சொல் தான். பிற்காலத்தில் கொல்லர் என்ற அச்சொல் இன்னும் விரிவடைந்து விதுமை (specific) நிலையில் இருந்து பொதுமை (generic) நிலை ஆகி, மாழை வேலை செய்பவருக்கெல்லாம் ஒரு பெயராய் ஆனது. எனவே பொற்கொல்லர் என்ற பெயர் "நல்ல எண்ணெய்" போலக் கூட்டுச்சொல்லாய் எழுந்து, தங்க வேலை செய்பவரைக் குறித்தது. தட்டார் என்ற சொல் தட்டு = பொற்கிண்ணம், பொற்குவை பற்றியும், பொன்னைத் தட்டி நகை செய்வதாலும், வந்த பெயர். தட்டாரைப் பத்தர் என்றும் சொல்லுவது உண்டு. பத்தர் என்ற சொல்லும் கூட ஒரு குவை, அல்லது கிண்ணத்தையே, குறிக்கும்.

பொன்னின் தூய்மை அறிய எழுந்த சொல் தான் மாற்று (to metre, to measure) என்பதாகும். இதன் பொருள் அளவை என்பதே. பத்தரை மாற்று என்பது தூய பொன். இன்றைக்கு வெள்ளைக்கார முறையில் தூய பொன்னின் அளவையாக 24 காரட் என்று குறிப்பார். தூய பொன்னில் அரச முத்திரையை பொதித்த காரணத்தால், அது ஆணைப் பொன்னும் ஆயிற்று. (பேச்சு வழக்கில் ஆணைப்பொன் என்ற கூட்டுச்சொல் ஆணிப்பொன்னாயிற்று. இதேபோல ஆணிமுத்து என்பதும் ஓர் உயர்முத்து; அதுவும் அரச முத்திரை பெற்றது போலும்; ஆணத்தி என்பவர் அரச உயரதிகாரி). நம்மூர் நாட்டுப் புறங்களில் நகை செய்வதற்கு இன்றுங்கூட, 18 காரட் தங்கத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கி, 22 காரட் தங்கத்தையே நாடுவார். அதேபொழுது நகரத்தில் உள்ளவர் பெரிதும் 18 காரட்டிற்குப் பழகி விட்டார். குதிரைப் பொன் என்பதும் உயர்பொன்னைக் குறிக்கும் சொல் தான்; அதை முன்பு கொன்றை பற்றிச் சொன்ன கட்டுரையில் சொன்னேன்.

கையில் உள்ள கலப்புத் தங்கத்தில், எவ்வளவு பொன், எவ்வளவு செம்பு இருக்கிறது, என்று தெரியவேண்டும் அல்லவா? இதற்கு இரண்டு முறைகள் உண்டு. ஒன்று திண்ணிமையை (density; திண்ணிமையை அடர்த்தி என்றும் கூறுவது உண்டு.) அளந்து கண்டுபிடிப்பது; இன்னொன்று உருகு வெம்மை (fusion temperature) வைத்துக் கண்டு பிடிப்பது.

முதலில் திண்ணிமை வழிக் கண்டு பிடிப்பதைப் பார்ப்போம். தங்கம் செம்பைப் பார்க்கத் திண்ணியது (19.3 Kg/litre. ) செம்பின் திண்ணிமை, தங்கத்தைப் பார்க்கக் குறைந்தது (8.92 Kg/litre). ஒரே பருமன் கொண்ட இரு பொருட்களின் திண்ணிமை வேறுபாட்டைப் பொறுத்து அவற்றின் எடைகள் மாறுபடும். எடைபார்த்துப் பொன்னின் தரத்தைக் கண்டுபிடிப்பதையே examination என்று மேலை நாட்டில் முதலில் சொன்னார். எடை சரியாக இருந்தால் அதை exact என்று சொல்வார். இப்படி எடையைக் காணும் முறையை assay என்பார். இக்காலத்தில் வேதியல் முறையில், கொடுத்துள்ள பொருளில் உள்ள கூம்புனைகளின் (component - கூடிச் சேர்ந்த புனைகள் கூம்புனைகள்) செறிவைக் (concentration) கண்டுபிடிப்பதைக் கூட assay என்றுதான் சொல்கிறார்.

பார்த்தீர்களா? பொன்னின் தரம் அறிவதிலிருந்து எவ்வளவோ தொலைவு தள்ளி examination என்ற சொல் நடைமுறையில் வந்துவிட்டது? இப்பொழுது எல்லாவிதமான தரம் பார்த்தலையும் examination என்று அழைக்கிறார். ஆளைத் தரம்பார்த்தலும் கூட examination தான். examination க்கு இணையாகத் தேர்வு என்ற தமிழ்ச்சொல் தெரிவு என்பதை உணர்த்துகிறது. examine என்ற சொல்லின் ஆங்கிலச் சொற்பிறப்பை இங்கு கீழே கொடுத்துள்ளேன்.

examine - c.1303, from O.Fr. examiner "to test, to try," from L. examinare "to test or try," from examen "a means of weighing or testing," probably ult. from exigere "weigh accurately" (see exact). First record of examination in the sense of "test of knowledge" is from 1612; shortened form exam first attested 1848.

இனி exact என்பதற்கு நாம் புழங்கும் தமிழ்ச்சொல்லைப் பார்ப்போம். தமிழ்ப் பழக்கத்தில் கூலங்களை அளக்கும் ஒரு படியில், அரிசியோ, பருப்போ, பொடியோ ஏதோ ஒரு குறுணைப் பொருளை அளக்கும்போது, படியில் நிறைந்த கூலம் கூம்பாகிக் காட்சியளிப்பதை கையால் தட்டிப் படி விளிம்பின் அளவுக்கு, அதைச் சரித்து அளப்பதை, சரியான அளவு என்கிறோம். சரிப்பதால் அது சரியானது. நாம் சரி என்று பொதுவாகச் சொல்லும் சொல்லாட்சி கூட இப்படிப் பருமன் அளவையில் தான் வந்தது. exact என்பதற்குச் சரியென்ற சொல்லையே நாம் புழங்குகிறோம். சரியான சில்லறை = exact change. [ஒரு வேறுபாட்டை உணர வேண்டும். நம்மூர் exact = சரி என்பது பருமனளவையில் வந்தது. மேலையருடைய exact என்பது, எடுத்தல் அளவையில் வந்தது.] exact -ன் ஆங்கிலச் சொற்பிறப்பை, இங்கு கொடுத்துள்ளேன்.

exact (adj.) - "precise, rigorous, accurate," 1533, from L. exactus, pp. of exigere, lit. "to drive or force out," also "demand, finish, measure," from ex- "out" + agere "drive, lead, act." The verb (1380, implied in exaction) is older in Eng. and represents the literal sense of the Latin. Exacting "too demanding" is from 1583. Elliptical use of exactly for "quite right" not recorded before 1869. Exacta as a type of horse-racing bet is first attested 1964, said to have originated in N.Y.

எடுத்தல் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையாக இன்னும் நிறுத்தல், சுமத்தல், தூக்குதல், வீக்குதல், தாங்குதல், தரித்தல், பொறுத்தல், பரித்தல் போன்றவை உள்ளன. ஒவ்வொன்றும் தமக்குள்ளே சிறிது வேறுபட்டவை. கீழே இந்த வரிசையில் சில சொற்களுக்கு மட்டும் விளக்கம் கொடுத்திருக்கிறேன்.

எடுத்தல் அளவு மாந்தனால் எடுக்க/தூக்க முடிகிறதா என்று பார்க்கும் அளவை. அந்த அளவைமுறை தொடங்கிய போது அவ்வளவு துல்லியம் இல்லாததாய் இருந்தது. "இக் கல்லை என்னால் தூக்க முடிகிறது; இதை என்னால் தூக்க முடியவில்லை." எனவே இரண்டாம்கல் முதற்கல்லை விடப் பளுவானது என்று முடிவுசெய்துகொள்ளும் முறை. இத்தகைய அளவு முறையில் மாந்தனின் பின்னூட்டு என்பது பெரிதும் ஊடுறுவிக் கிடக்கிறது. இந்த அளவையில் இருந்து, மாந்தனை முற்றிலும் தனித்துப் பிரிக்க எழுந்தது தான், துலை (balance = தராசு) என்ற கருவி. துலை என்பது தூக்கு என்றும் இன்னொரு வகையால் சொல்லப்பெறும். ஒரு பக்கம் எடை போட்டு இன்னொரு பக்கம் கிணற்றில் இருந்து நீரிறைக்கும் ஏற்றம் கூட துலை போன்ற ஒரு கருவி தான்.

ஒரு நெம்பு கோலின் நடுவில் கூர்ந்த ஊசியைப் பொருத்தி நெம்பு கோலின் இரு முனையிலும் இரண்டு தட்டுக்கள் அல்லது பல(ங்)கைகளில், ஒரு பக்கம் தரப்படுத்திய எடைகளையும், இன்னொரு பக்கம் எடையறியாப் பொருளையும் வைத்து, நெம்புகோலின் அசைவு நிற்கும்வரை காத்திருந்து, நின்று நிலைக்கும் போது ஒரு பக்கம் உள்ள தரப் படுத்திய எடைகளில் இருந்து இன்னொன்றின் எடையை அறிகிறோம் அல்லவா? அந்த முறைக்கு நிறுத்தல் அளவை என்றுபெயர். நில்+து> நிற்று>நிறு. இன்னொரு வகையிலும் நிறைதல் / நிறைத்தல் என்ற கருத்து வழங்கும். அது பருமன் அளவையின் வழியாக வருவது. ஒரு படி நிறைகிறது; ஒரு லிட்டர் நிறைகிறது. இத்தகைய சொல்லாட்சி குறைந்த அளவே இருக்கிறது.

பருமனுக்கும், எடைக்கும், நம்மூரில் ஒரு குழப்பம் தொடர்ச்சியாக நிலவி வந்திருக்கிறது. எடுத்துக் காட்டாய் கன அளவு என்ற சொல்லைச் சொல்லலாம். இது எடையைக் குறிக்கிறதா? பருமனைக் குறிக்கிறதா? ஓர்ந்து பாருங்கள்.

இதுவரை நிறுத்தலைப் பார்த்தோம். இனிச் சுமத்தலைப் பார்ப்போமா? சுமை, சும்மாடு போன்றவை சுமத்தலுடன் தொடர்பானவை. சும், சும்மை என்பவை மிகுதியைக் குறித்து, அதன் வழியாகப் பருமனைக் குறித்து, முடிவில் கனத்தையும், எடையையும், குறித்தன.

தூக்குதல் என்பது துலையோடு தொடர்பு கொண்டது. தூக்குதல் என்பதன் வேர் தூல். தூல்ங்குதல் என்பது தொங்குதலே; தொங்கிக் கிடக்கும் எல்லாமே தூக்கு என்று சொல்லப்பட்டன. தொங்கும் காரணத்தால் துலை>துலாம் என்ற சொற்கள் ஏற்பட்டன. தூலி>தூளி = தொங்கும் துணித் தொட்டில்;

வியல வைத்தல் என்பது விரிய வைத்தல்; இதுவும் பருமச் செயலை ஒட்டி வந்தது. வியல்ங்குதல்>வீங்குதல் என்றும், வியல்க்குதல்>வீக்குதல் என்றும் திரியும். இந்தையிரோப்பிய weigh க்கு அருகில் உள்ள தமிழ் வினைச்சொல் இது தான்.

இனித் தரித்தல், தாங்குதல் போன்றவை துல் என்னும் வேரில் இருந்தும், பொறுத்தல், பரித்தல், பாரம் போன்றவை புல் என்னும் வேரில் இருந்தும் பிறந்தவை. அவற்றைப் பற்றி இங்கு சொல்ல முற்படவில்லை.

இப்படி எடையை ஒட்டி வரக்கூடிய பல தமிழ்ச் சொற்களும் பருமன் கருத்தில் எழுந்து, கொஞ்சம் நீட்சி கொண்டு, எடைப் பொருளைக் காட்டுகின்றன. இந்தக் குழப்பம் பிற மொழிகளிலும் இருக்கிறது. மாந்தனால் எடையையும் பருமனையும் பிரித்தறிய, நெடுங்காலம் பிடித்திருக்க வேண்டும் போலும்.

முடிவில், கடைசியாக ஒரு செய்தி.

எடை பார்ப்பதில் மட்டுமல்லாமல், பொன்னை உருக்கி அதன் உருகுநிலை வெம்மையை அறிந்தும் கூடப் பொன்னின் தரஞ் சொல்லலாம். முற்றிலும் பொன்னாக இருந்தால் 1063 பாகை செல்சியசிலும், செம்பாக இருந்தால் 1083 பாகை செல்சியசிலும் மாழைகள் உருகும். அதே பொழுது, பொன் - செம்புக் கலவை அதன் தரத்திற்கு ஏற்ப வெவ்வேறு வெம்மையில் உருகும். பொன்னில் செம்பைக் கலக்கக்கலக்க, கலவையின் உருகு நிலை 1063 deg. க்கும் கீழே குறைந்துகொண்டே வரும். கிட்டத்தட 22% கலக்கும் போது, மிகக் குறைந்த உருகு நிலையை (கிட்டத்தட்ட 905 deg.) அது அடைந்துவிடும். அதன் பின் மேலும் செம்பைச் சேர்க்கும்போது உருகுநிலையானது மீண்டும் கூடத் தொடங்கும். ஆகச் செம்பை 18/19 காரட் வரை சேர்க்கையில், கலப்புத் தங்க உருகுநிலை குறையுமென்று தெரிந்தால், இத் தரக் கண்டுபிடிப்பின் உள்ளுறை(content)யைத் தெரிந்து கொள்ளலாம்.

கொடுத்த தங்கத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து, ஒரு சிறு கிண்ணத்தில் (இக் கிண்ணத்தைக் குவை; தட்டம் என்றும் சொல்வதுண்டு) வைத்து உருக்குவதால், உருகுநிலையைக் கொண்டு, தங்கத்தின் தரத்தைக் கண்டு கொள்ளலாம். (அதாவது 18 காரட் தங்கம், 22 காரட்டை விடக் குறைந்த வெம்மையிலே உருகிப் போகும்.) இப்படித் தட்டை வைத்துத் தரம் கண்டுபிடிப்பதற்கே, தட்டச் சோதனை என்று பெயர். ஆங்கிலத்தில் test என்பது இத்தட்டத்தையே குறிக்கிறது.

test என்பதற்கு இணையாய்த் தமிழில் நாம் சோதனை என்றே சொல்கிறோம். முன்பு கொன்றைக் கட்டுரையில் சொன்னது போல, சோதித்தல் என்பது சோதிநெருப்பில் வாட்டிச் சோதிப்பதையே உணர்த்தும். தமிழில் சோதனை என்ற சொல்லின் புழக்கம் கூட, வெகுவாக நீண்டு, எங்கோ வந்துவிட்டது. ஆன்மச் சோதனை என்பதற்கும், நெருப்பிற்கும் எவ்வளவு தொலைவு இருக்கிறது?

test என்பதின் ஆங்கிலச் சொற்பிறப்பு இப்படி வரும்.

test - c.1395, "small vessel used in assaying precious metals," from O.Fr. test, from L. testum "earthen pot," related to testa "piece of burned clay, earthen pot, shell," and textere "to weave." Sense of "trial or examination to determine the correctness of something" is recorded from 1594. The verb in this sense is from 1748. The connecting notion is "ascertaining the quality of a metal by melting it in a pot." Test-tube is from 1846.

ஆக ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால், ஒவ்வொரு கதையும் பொருளும் இருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

இரா.செந்தில் said...

வேர்களைத் தேடுதல் உண்மையில் சுவையுடையதுதான்
விரிவான பதிவு

ஐயா, சந்திப் பிழைகளை நீக்க உதவியாக சில குறிப்புகள் வழங்குங்கள்

Anonymous said...

//ஒரு பக்கம் எடை போட்டு இன்னொரு பக்கம் கிணற்றில் இருந்து நீரிறைக்கும் ஏற்றம் கூட துலையைப் போன்ற ஒரு கருவி தான்.// இதனை துலா என்று ஈழத்தில் சொல்வோம்.

Anonymous said...

தங்கத்தின் அடர்த்தி தண்ணீரை விட எத்தனை மடங்கு அதிகம்?

இராம.கி said...

அன்புடையீர்,

மேலே சொல்லியிருக்கிறேனே? தங்கத்தின் அடர்த்தி 19.3 Kg/litre. நீரின் அடர்த்தி 1 Kg/litre.

அன்புடன்,
இராம.கி.