Saturday, October 21, 2006

தீபாவளி வாழ்த்துக்கள்

கீழே வருவது மூன்றாண்டுகளுக்கு முன் தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதியது. இங்கு இப்பொழுது அதை மீளும் பதிகிறேன்.
-----------------------------------------

திடீரென்று அலுவ வேலையாற் பணிக்கப் பெற்று, மறுபடி சென்னை. இன்று காலை வந்தேன். நாலே நாட்களில் சவுதி செல்ல வேண்டும்.

வான்பறனை கீழிறங்கும் போது, அதன் செலுத்தியார் சென்னை அருகாமை வந்தவுடன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, இருக்கைகளை நேராக்கிக் கொள்ள நம்மைப் பணிக்கிறார். பறனை கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. கண்ணாடிச் சாளரத்திற்கு வெளியே பனி கலந்த மேக மூட்டம். எத்தனை பேர் இதற்குப் பொறுப்பு? நகரம் எங்கிலும்? வழமையான சென்னை. அதன் வேடிக்கைக் கூத்துகள்.

அருகே இருந்த பிரஞ்சுப் பெண்மணி, இந்த மேக மூட்டத்திற்குக் காரணம் கேட்கிறார். நான் "நாலைந்து நாட்களாக நல்ல மழை; சில இடங்களில் நகரத்துள் வெள்ளம்; வடியச் சில நாட்கள் ஆகலாம்; தவிரத் தீபாவளிநாள்; முன்னாளின் இரவிலும், இன்று அதிகாலையிலும் வெடிகள், மத்தாப்புக்கள் என்று பலதும் கொளுத்தப் பட்டிருக்கும்; அதனால் எழுகிற புகை இந்தப் பனியோடு கலந்து கலையாத மேக மூட்டத்தைக் கிளப்பிவிட்டிருக்கும்", என்று விளக்கம் சொன்னேன்.

"என்னது வெடியா? நேற்று வந்திருக்கலாமே? வாண வேடிக்கை அழகைப் பார்த்திருக்கலாமே?" என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு தன் தோழியரோடு பிரஞ்சில் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்.

"தீபாவளி எதற்குக் கொண்டாடுகிறார்கள்?" என்ற அவரது கேள்விக்கு, ஓரளவு சுருக்கமாக கூடவே விரைவாக மறுமொழி சொல்லி முடிக்கிறேன்.

பறனை ஓடுகளத்தைத் தொட்டுவிட்டது. உள்ளே ஈரப்பதம் மாறிக் கொண்டிருப்பதை உணருகிறேன்.

வான்பாலத்தை அணைந்தாயிற்று.

நான், வான்பறனைப் பணிப்பெண்ணுக்கு முகமன் சொல்லி தீபாவளி வாழ்த்தும் சொல்லி வெளியேறுகிறேன். அந்த பகுரைனி அரபுப் பணிப்பெண் வியந்து கொள்ளுகிறாள். முகம் நிறையப் புன்சிரிப்பு.

வெளியே வந்து வண்டியில் ஏறி வீட்டிற்குப் புறப்படும் போதும் மேக மூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே மேகமூட்டம் தான். மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும். நகரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையெங்கும் ஈரம்; அதன் மணம்; மணத்துள் ஒரு பாந்தமான உணர்வு. இதுதான் சென்னை. உள்ளிழுத்துக் கொள்ளுகிறேன். நெஞ்சுகள் நிறையட்டும்.

இந்த மண் தாகத்தால் ஏங்கியதே? தாகம் அடங்கியதோ? வழி நெடுகிலும் அஞ்சடிகளில் நாலைந்து நாட்களில் முளைத்த புல்வெளிப் பச்சை. ஆங்காங்கே சாலைகளில் ஈயென்று வாய் பிளந்த பள்ளங்கள்; மதகு இல்லாச் சிறு சிறு நீநீர்த்தேக்கங்கள். எங்கள் நகரம் மாறவே மாறாதோ?

நான் வாழும் பகுதிக்கு அண்மையில் வந்தாயிற்று. "நிறுத்துக்கள். அங்கு ஏதோ ஒரு சிறுவன் வெடி வைக்கிறான்" என்று உந்து ஓட்டுநருக்குச் சொல்லுகிறேன். ஆயிரம் இழைச் சீனச் சரவெடி (இப்பொழுதெல்லாம் சீனவெடி என்ற சொல்லே இளையருக்குத் தெரிவதில்லை. எல்லாம் தௌசண்ட் வாலா தான். எங்கோ மரபுத் தொடர்புகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. வணிக வேகம் சிந்தனையை மறைக்கிறது.) வெடி காதை அடைக்கிறது. புகை கண்ணை மறைக்கிறது.

நின்று காத்து வண்டி தொடருகிறது.

வீட்டுக்கு வந்தாயிற்று; எண்ணெய்க் குளியல் செய்தே ஆகவேண்டும் என்று துணையாள் அடம் பிடிக்கிறாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ? குளியல் ஆயிற்று. புத்தாடைகள் வீட்டில் குத்து விளக்கிற்கு எதிரே. இதையெல்லாம் சொல்லவேண்டுமோ? மஞ்சள் தடவி, பக்கத்தில் மாதிரிக்குக் கற்கண்டு வடையை ஏனம் நிறைய வைத்துப் படைத்து, பல்லாண்டு சொல்லித் தண்டனிட்டு, வணங்கி, புத்தாடைகளை எடுத்துக் கொள்ளுகிறோம்.

கற்கண்டு வடையை எத்தனை நாளுக்கு அப்புறம் பார்க்கிறேன்? நாக்கில் நீர் ஊறுகிறது. "அதெல்லாம் முடியாது கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான்" என்கிறாள் மனைவி. அவளை ஆற்றுப் படுத்தி என் வழிக்கு மாற்றுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரிலும், தொலைக் காட்சியிலும் நடைபெறுகின்றன.

ஆயிற்று; கோயிலுக்குப் போக வேண்டியதுதான். எங்கள் வீட்டின் முன்னும் ஒரு சீனச் சர வெடி (போன ஆண்டு ஆயிரங் கண்ணிச் சர வெடி வாங்கிய என் மனையாள் இந்த ஆண்டு நூறு கண்ணிச் சரவெடி தான் வாங்கியிருக்கிறாள்.)

இதோ, கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே உறவினர், நண்பர்கள் பார்த்துத் திரும்பவேண்டும்.

எப்படியோ எதிர்பாராமல் சென்னைக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தீபாவளி. எப்பொழுதும் உள்ள சடங்கு அதே கதியில் தொடர்கிறது. நரகாசுரன் எதற்காகத் தீபாவளியைக் கொண்டாடச் சொன்னான்? புரியவில்லை.

"அடச்சே! எதற்காக என்று தெரிந்து என்னாகப் போகிறது? :-) எல்லாமே ஒரு பூடகமான நம்பிக்கை தானே? கலகலப்பு இருந்தால் தானே வாழ்க்கை?" நான் என்னையே ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறேன்.

"இந்தா, வந்துட்டேன். தீப்பெட்டியைக் கொண்டு வரேன்" என்கிறாள் என் மனைவி.

உடைந்த செங்கற் சில்லின் மேல் சீனச் சரவெடி...........

மறுபடியும் சத்தம்...... மறுபடியும் புகை..... மேக மூட்டம் விளைவிப்பதில் எங்களின் பங்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

12 comments:

வானம்பாடி said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் [GK] said...

இராமகி அன்பு ஐயா அவர்களுக்கும்,
அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

Vaa.Manikandan said...

திரும்பவும் முன்னர் நான் இட்ட மாதிரியான பின்னூட்டம்தான். :)

தங்களின் தமிழ் நடை அற்புதமாக இருக்கிறது.

தீபாவளி வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இராம.கி ஐயா!
இனிய வாழ்த்துக்கள்!
யோகன் பரிஸ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இராம.கி ஐயாவுக்கும், குடும்பத்தார், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! கற்கண்டு வடையா?...ஆகா...படம் போட்டிருந்தால் நாங்களும் பார்த்துச் சாப்பிட்டு இருப்போமே? :-))

Anonymous said...

வான்பறன் என்பது விமானம்தானே?

விமானம் என்றே எழுத வேண்டியதுதானே. நான் பள்ளியில் விமானம் என்றுதான் படித்தேன்(படித்தது மலேசியாவில்)விமானம் என்பது சரியான தமிழ் வார்த்தை இல்லையா?

அன்புடன்,
முரளி
மலேசியா.

இராம.கி said...

திரு.வைசா, சுதர்சன், கோவி.கண்ணன், வா.மணிகண்டன், யோகன் - பாரிசு, கண்ணபிரான், கலாநிதி ஆகியோருக்கு மிக்க நன்றி. தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்பிற்குரிய முரளி,

அது வான் பறனை (பறன் அல்ல.) "விமானம் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறேன்?" என்று கேட்டிருக்கிறீர்கள். விமானம் என்ற வடமொழிச் சொல்லிற்கு car or chariot என்ற பொருளே வடமொழிச் சொற்பிறப்பின் படி உண்டு. இந்த car என்பதன் நீட்சியாய் celestial car என்று பொருளும் உருவாகும். (இன்னும் கொஞ்சம் அகண்டு, கோயில் விமானம் போல பலநிலை மாடங்களையும் விமானம் என்ற சொல் குறிக்கும். இந்தப் புழக்கத்தை மாடம், கோபுரம் என்ற தமிழ்ச்சொற்களால் கொண்டுவந்துவிட முடியும்.)

நம்முடைய பூவுலகைப் போல, தேவர்கள் உலவும் வானுலகு (இது நாம் புரிந்து கொள்ளும் sky அல்ல), மற்றோர் உலவும் பாதாள உலகு என்ற இரு கற்பனை உலகுகளைத் தொன்மமாய்க் கொண்டு, அந்த தேவருலகில் நகரும் தேர் ( celestial car) என்ற பொருளில் தான் இந்தச் சொல் உண்டு.

இந்தத் தேவருலகத் தொன்மங்களைத் தவிர்த்து, நாம் அறிந்த வினைச் சொல்லில் இருந்து உருவாகிய சொல் பறனை என்பது. இதை உருவாக்கியவர் அட்லாண்டா பெரியண்ணன் சந்திரசேகரன் என்ற தமிழ் ஆர்வலர் ஆவார். பறத்தல் என்பதை flying என்ற பொருளில் தான் நாம் கையாளுகிறோம். பறக்கின்ற உயிரியைப் பறவை என்று சொல்லுவது போலப் பறக்கின்ற ஊர்தியை பறனை என்று அவர் சொன்னார். னை என்ற ஈறு தமிழ்ச் சொல்லாக்கத்தில் பயனாகிற ஒன்றுதான். இந்தச் சொல்லை ஒரு ஐந்தாறு ஆண்டுகளாய், மடற்குழுக்களில் ஒரு சிலர் கையாண்டு வருகிறோம்.

கீழே வரும் சொற் தொகுதியைக் கவனியுங்கள். அவற்றின் துல்லியமும், சொற்களுக்கிடையே உள்ள உறவு முறைகளும் புலப்படும். விமானம் என்ற தொன்மச் சொல் மூலம் இவ்வளவு தொடர்பு காட்டமுடியாது. தமிழ் மொழியின் மூலம் அறிவியலையும் நுட்பியலையும் கையாளுவதில் சிறக்க வேண்டுமானால், நம் சிந்தனை கூர்மைப் படவேண்டும்.

பறத்தல் = to fly
பறப்பு = flight
பறவை = bird
பறனை = plane
வான்பறனை = aeroplane / air plane
வான்புகல் = airport
வானூர்தி = aircraft
வானூர்த்தியல் = aeronautics

அன்புடன்,
இராம.கி.

துளசி கோபால் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

( கொஞ்சம் தாமதமாகச் சொல்கின்றேனோ? )

Anonymous said...

நண்பர் இராமகி

1985 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் திழ் கொம்பைலர் (கொம்பைலருக்குத ; தமிழ் என்ன? ) ஒன்றைத் தொடங்கியதாம். அதன்மூலம் தமிழில் சிறுசிறு கணக்குகளைச் செய்யும் வகையிலும் அந்தக் 'கொம்பைலர்' அமைக்கப்பட்டதாம். பின்னர் அந்தத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டதாம். இது உண்மையா? இஅந்தக் கைவிடப்பட்ட தமிழ்க் கொம்பைலரை எங்காவது பெறமுடியுமா? சில தமிழ் ஆர்வலர்கள் அதைத் தேடிக்கொண்டுள்ளனர்.

நன்றி

அப்படியே.. உலங்குவானூர்தியை வேறு சொல்லால் அழைக்கமுடியுமா என்று கூறவும். ஏனெனில் தும்பியின் வடிவமான உலங்குவானூர்தியைத் தும்பி சம்பந்தப்பட்ட சொல்லால் அழைத்தால் நன்றாக இருக்கும் அத்தோடு உலங்கு வானூர்தி என்பது நீண்ட வார்த்தையாக உள்ளது.

பல்கலைக்கழகம் என்பதைத் தனியே கழகம் என்று கூறமுடியாது. ஆனால் பல்கலைக்கழகத்தை வேறு சொல்லால் அழைக்கமுடியுமா என்றும் கூறவும்?

உங்கள் பதிவுகளில் நீங்கள் பல வேதியல் சொற்களை சரளமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். தாங்கள் வேதியற் பொறிஞரா? இல்லை வேதியலில் நன்கு தேர்ந்தவரா? அறிய ஆவல். நன்றி இராமகி.

இராம.கி said...

அன்பிற்குரிய கணிக் கோட்டன்,

பொதுளி (compiler), சுரிப்பறனை (helicopter) பற்றிய மறுமொழிகளைத் தனிப்பதிவுகளாகவே போட்டிருக்கிறேன். படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பல்கலைக் கழகத்தைச் சுறுக்கும் போது நான் பல்கலையில் படிக்கிறேன் என்று சொன்னால் பொருள் வந்துவிடும், தமிழ்மொழி போன்ற ஓட்டுநிலை மொழியில் ஆங்கிலம் போலப் பார்க்கக் கூடாது. இங்கே கழகம் என்பதைக் காட்டில்லும் பலகலை என்பதே முதன்மையானது.

நான் வேதிப் பொறிஞனே!

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//பல்கலைக் கழகத்தைச் சுறுக்கும் போது நான் பல்கலையில் படிக்கிறேன் என்று சொன்னால் பொருள் வந்துவிடும்,//
நன்றி இராமகி

தூள் கிளப்பீட்டிங்கள் இராமகி! ...யாழ்ப்பாண வழக்கு... கலக்கிட்டீங்கள்... பின்னிட்டீங்கள் என்று அர்த்தம் :)

பல்கலை விளக்கத்திற்கு நன்றி.

//நான் வேதிப் பொறிஞனே!//

வேதிப் பொறிஞனா? ஆகா நமக்குள் என்ன ஒற்றுமை... நானும் அந்தத் துறையில் சற்றுப் பற்றுள்ளவன். :D

திண்டுக்கல் தனபாலன் said...

இனிக்கும் தமிழ்... சொல்ல வந்த ஏதோ ஒன்றினை... சொல்லவில்லை... ம்... வாழ்த்துகள் ஐயா...