Tuesday, October 10, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 3

கூத்து மேடைங்கள்லெ கூத்தை முன்கொண்டு செல்றது அதில் நடிக்குற ஆடுநர், ஆட்டத்தி மட்டுமில்ல. மேடையின் ஓரத்தில் இருக்குற இசை வல்லுநரும், கதைசொல்லியும் கூடப் பொறுப்பு கொண்டவக தான். சில இடங்கள்லெ, கதைசொல்லி மேடைக்கு நடுவிலும் கூட வந்து போவார். இந்தக் கதைசொல்லியைச் சூத்ர தாரின்னு வடமொழிப் பெயர் கொண்டு அழைப்பாங்க. சூதர்>சூத்ரர் என்பவரைப் பாணர் = பாட்டுப் பாடுபவர்கள் என்று தமிழில் சொல்லுவாக. இவக, பொதுவாக, அரசன் / தலைவன் ஆகியோரின் புகழ் பாடுறவுக.

இங்கே தொல்காப்பியக் கூத்தில், ஓரத்தில் நின்னுக்கிட்டு, கதை சொல்லியாவும், விளக்கம் கொடுப்பவராவும், இருக்காரு இளம்பூரணர். குறிப்பா, முதல் நூற்பாவிற்கு அதிக விளக்கம் தர்றார். மூணாவது நூற்பாவுக்குப் போறதுக்கு முன்னாலெ, அந்த விளக்கத்தைத் தந்துடுறேன். ஏன்னா, குறியேற்றம் செய்ய முனையுறவுகளுக்கு அதுவும் ஒரு தேவையான விளக்கம்.

பொதுவா, எந்த நூற்பாவையும் தொகுத்துக் கூர்றது தொகை. அதை வகுத்துப் பிரிச்சுக் கூர்றது வகை. அதை இன்னும் பெருக, விரிச்சுக் கூர்றது விரி. தொகை / தொகுத்தல்ங்குறது கலனக் கணக்கில் (calculus) integration, summary ன்னு சொல்லப்படும். வகை / வகைத்தல்ங்குறது differentiation / differencing ன்னு புரிஞ்சு கொள்ளப்படும்; விரித்தல்ங்குறது expansion.

இன்னும் ஆழம் போய்,

தொகைக்குள் தொகையும், தொகைக்குள் வகையும், தொகைக்குள் விரியும்,
வகைக்குள் தொகையும், வகைக்குள் வகையும், வகைக்குள் விரியும்,
விரிக்குள் தொகையும், விரிக்குள் வகையும், விரிக்குள் விரியும்

என ஒம்போது முறையாலும் பார்க்குறது உண்டு.

தொகைக்குள் தொகைங்குறது சுருக்கத்திலும் சுருக்கம். வரலாற்றில் முகன்மையான செய்தியெல்லாம் ஒர் பாரசீக அரசன் தொகுக்கச் சொன்ன கதை பற்றி முன்னாடிச் சொல்லியிருந்தேனே, ஞாவகம் இருக்கோ? அதிலெ, "மாந்த வரலாற்றில் முகன்மையிலும் முகன்மையான செய்தி என்ன?" ங்குறதுக்கு, அந்த நாட்டுச் சான்றோர்கள், "அவர்கள் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், இறந்தார்கள்" ங்குற வாசகத்தை ஒரு மரப்பட்டையிலெ எழுதி, மணிப்பேழைக்குள்ளே வச்சு அரசனிடம் கொடுத்திருப்பாங்க. நடந்த நிகழ்ச்சிகள்லெ அழிஞ்சு மண்ணோடு மண்ணாகிப் போகாம, மீந்து கிடக்கும் மாந்தரின் வாழ்வுத் தொடர்ச்சியே, மாந்த வரலாற்றில் தொகையிலும் தொகையாய் அமைஞ்சுதாம்.

அது மாதிரி, எழுத்துங்குற ஒண்ணு இருக்குறதைத் தான், மொழி பற்றிய தொகைக்குள்ளும் தொகையா இளம்பூரணர் சொல்லுவார். எழுத்துக்கள் இல்லாத மொழிகள் அழிஞ்சு போயிருமில்லே? இனித் தொகைக்குள் வகையாக 30 எழுத்துக்களையும், தொகைக்குள் விரியாக 33 -யையும் (30 முதல் எழுத்துக்கள் + 3 சார்பெழுத்துக்கள்) சொல்லுவார். மேலும் தொடர்ச்சியாய்,

வகைக்குள் தொகை =30; வகையுள் வகை = 33; வகையுள் விரி = 33+ 7 அளபெடை ன்னு காட்டுவார். (அளபெடைகள் அமையுறது நெடில் எழுத்துக்களுக்கு மட்டுமே; அவை தனிச்ச ஒலிங்க. அவையும் மொழியின் கூறுகளே. அளபெடைகளை ஒரு கீற்றத்தாலெ சுட்டிக் காட்ட முடியாது. அவற்றை இரு கீற்றங்களாலெ நாம சுட்டிக் காட்டுறோம்.) ஆக வகைக்குள் விரி 40 ஆகும்.

இனி, விரியுள் தொகை = 33; விரியுள் வகை = 40; விரியுள் விரி = 12+18+12*18 + 3 சார்பெழுத்துக்கள் + 7 அளபெடைகள் = 256 எழுத்துக்கள் ன்னு ஆகும். நாமெல்லாம் ரொம்பக் காலத்துக்கு, தமிழ் நெடுங்கணக்கு 247 எழுத்துக்கள்ன்னே சொல்லிப் பழகி வந்திருக்கோம். அதை மறுத்து, ஒலியியலின் படி, தமிழ் எழுத்தில் விரியுள் விரி, அதாவது நெடுங்கணக்கு, 256 ன்னே இளம்பூரணர் சொல்றார். நச்சினார்க்கினியரும் 256 -யைத்தான் விரியுள் விரியாகச் சொல்றார். பின்னே எப்படி நமக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்குற போது, மாறிச் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு எனக்கு விளங்கலை. உங்களுக்குத் தெரியுதா?

குறியேற்றக்காரங்களே! கொஞ்சம் கவனிச்சீங்களா? தமிழின் மொத்த எழுத்துக்கள் 2^8 = 256. அதிலெ முதல் எழுத்துக்கள் 30, சார்பெழுத்துக்கள் 3, அளபெடைகள் 7, உயிர்மெய் எழுத்துக்கள் 216. அய்யா சாமிகளா, இனிமேலும் characterங்குற சொல்லை முதல் எழுத்துக்களுக்கு மட்டும் புழங்காதீங்கய்யா! மொழிங்குறது ஒலி சார்ந்ததுன்னா, 256 ம் character தான். எதுவும் குறைச்சதில்லெ.

[உண்மையிலேயே மெய்யெழுத்துக்கள் தான்யா, நம்மாலெ தனியே பலுக்க முடியாதவை; அவை ஒருவிதக் ஒலிக் கட்டுமானங்கள் (sound constructs). அவற்றை உணர்றது சரவலான வேலை. மாந்தனால் இக் என்று மூடிய அசை(closed syllable)யொலியாகவோ, கி என்ற திறந்த அசை (open syllable) யொலியாகவோ தான் ஒலிக்க முடியுமே ஒழிய, க் ன்னு தனிச்சு ஒலிக்க முடியாது. கருவிகளின் துணை கொண்டு, அந்த இக், அல்லது கி ஒலியலைப் படங்களை முன்னாலோ, பின்னோலோ கொஞ்சம் கொஞ்சமாய்க் கத்தரிச்சுக் கத்தரிச்சுத் தான், க் ங்குற ஒலிப் படத்தைப் பெறணும். அப்படிச் செய்யும் போது அந்த ஒலிப்படம் உயிரில்லாத அலை - உருவத்தையே (lifeless wave form) காட்டும். எனவே அதை உயிரில்லா மெய்யுன்னு சொல்றாக. மெய்யைக் காட்டிலும் உயிர்மெய் ஒலிகள் நமக்கு நெருங்கியவைங்க. "உயிர்மெய்யை ஒதுக்குவோம்; மெய்யைத் தாங்குவோம்" னு சொல்றது வேடிக்கையான பேச்சு. உயிர்மெய் இல்லாமெ மெய்யை எப்படி இவங்க உணர்ந்தாங்க, திடீர்னு வானத்திலேர்ந்து மெய்கள் குதிச்சுதா? மெய்யெழுத்துக்கள்ங்குறவை, மாந்தனாலெ நெருங்க முடியாத (inaccessible), ஆனால் உள்ளமை (reality) உடையவைன்னு தான் பெரியவுக சொல்றாக.]

இனி மூன்றாவது நூற்பாவில் இருந்து 6 ம் நூற்பா வரை ஒரே வீச்சிலெ பார்ப்பமா?

3. அவற்றுள்
அ இ உ
எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப

4. ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

5. மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே

6. நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்

இந்த நூற்பாக்கள்லெ, ஓரளபு உள்ள அஞ்சு குற்றெழுத்துக்களையும், ஈரளபு உள்ள ஏழு நெட்டெழுத்துக்களையும் குவிவிளக்குப் போட்டு அறிமுகம் செய்யுறாரு தொல்காப்பியரு. கூடவே ஒரெழுத்துக்கு மூவளபு ஒலித்தல் (இசைத்தல்) கிடையாதுங்குறதையும் வரையறை செய்றாரு. ஆனா, மூவளபு ஒலிக்கின்ற மொழித் தேவைகள் உண்டு சாமி. அந்த நேரத்திலெ, ஒவ்வொரு ஈரளபு நெட்டெழுத்துக்கும் பக்கத்தாலெ, அதன் இணையான ஓரளபு குற்றெழுத்தை அருகெ போட்டு, பிளவுபடாமல், கூட்டி எழுதலாம்னு புலவர்கள் சொல்றாங்களாம்.

இந்த அளபெடைகள்ங்குறவை ஒருவிதமான கூட்டெழுத்துக்கள். உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிரும் மெய்யும் சேர்ந்தவைன்னா, அளபெடைகள் நெட்டெழுத்தும் குற்றெழுத்துமாய்ச் சேர்ந்த கூட்டு உயிரெழுத்துக்கள். உயிர்மெய் எழுத்துக்களுக்கு எவ்வளவு உள்ளமை (reality) உண்டோ , அவ்வளவு உள்ளமை இந்த அளபெடைகளுக்கும் உண்டு.

இந்தப் "பிளவுபடாமல்" ங்குற கட்டியத்தை (condition) மறந்து, இந்தக் காலத்தில் பிளவு பட்டாப் பொலெ நெடிலையும், குறிலையும் அருகருகெ போட்டு, ஏதோ நாமெல்லாம் பேர் பண்ணிக்கிட்டிருக்கோம். கூடிய மட்டும் அளபெடை இல்லாமலே பேசுறது தான் இந்தக் காலத் தமிழ் முறையாவும் இருக்கு. இல்லைன்னா, எழூஉதல் என்றதை எழுதுதல்னே ஏன் சொல்றாங்க? ஆக அளபெடைங்குறது பேச்சுலெ பெரும்பாலும் தவுக்கப்படுது. அளபெடை பழகுறவுங்க தமிழ்ப் பண்டிதர்னே சொல்லி ஒதுக்கப் படுறாங்க.

அடுத்தது, இந்த அளபுங்குற மாத்திரைக்கான இலக்கணம். அளத்தல்னா measurement. மாத்தல்னாலும் அளத்தல் தான். மாத்தலில் விளைஞ்ச சொற்கள் தமிழ்லெ ரொம்பவெ இருக்கு. மாதம் (month), மதி (=நிலா), மட்டம் (=அளவு) மானம் (அடிமானம், குறிமானம், தீர்மானம்; எல்லாமே measured or determined entities), மானி = அளவிடும் கருவி. கணக்கில்லாச் சொற்களை இங்கே கூற முடியும். மாத்திரைங்குற சொல்லும் மாத்தல்ங்குற வினையிலெ எழுந்தது தான். அளவிடற அலகுக்கு மாத்திரைன்னு பேரு. அந்த மாத்திரை நுணுகி உணரோணுமாம். எளிதில் உணரமுடியாதாம்.

மாத்திரையை விளக்க வந்த இடத்துலெ, ஏழு வகை அளத்தல் முறையை இளம்பூரணர் கூறுறார். நிறுத்தளத்தல், பெய்தளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகத்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் - அப்படி ஏழு வகை. இவை பத்தி முன்னாடி ஒரு முறை, ஏப்ரல் 2006 ல் ஒரு கட்டுரையை என் வலைப் பதிவிலெ எழுதினேன். (அதுக்கு முன்னாடி மடற்குழுக்களிலும் எழுதுனேன்.) முன்னாடி எழுதுனதுலெ இருந்த இருந்த கருத்துப் பிழைகளை எல்லாம் இப்பச் சரி செய்ஞ்சு, இங்கு தொடர்பான குறிப்புக்களைச் சேர்த்துக் கீழே கொடுத்திருக்கேன்.

ஏழாவது நூற்பா இது தான்:

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

இதற்கு உரை சொல்ற உரையாசிரியர் இளம்பூரணர், மேலே சொன்ன ஏழு முறைகளையும் கூறி, அதற்கும் மேலாக, மாத்திரை அளந்தது சார்த்தியளத்தல் முறைன்னு சொல்றார். இந்த அளவைகள் எல்லாம் எதைக் குறிக்குதுன்னு பார்த்தால், சிலது புரியுது; சிலது புரியலை.

1. நிறுத்தல்ங்குறது எடையை அளப்பதைக் குறிப்பிடுது.

2. பெய்து அளத்தல்ங்குறது நீர்மத்தின் வெள்ள அளவைக் குறிப்பிடுது. [வெள்ளத்தை (volume) இந்தக் காலத்தில் இருபதாம் நூற்றாண்டுச் சொல்லான "கன அளவு"ங்குறதைக் கொண்டு தவறான முறையிலெ குறிச்சிக்கிட்டு வர்றோம். கனம்ங்குறதும் ஒரு வகையில் எடையைக் குறிக்கிறது தானே? நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எந்தெந்த அளவு விரிஞ்சு பெருகி, வெளியை (space) அடைச்சிருக்கோ, அந்தப் பெருக்கைத் துல்லியம் கருதி, வெள்ளம்னே குறிப்பிடலாமே? ஏன், இப்படிப் பழஞ் சொல்லைத் தவிர்க்கிறோம்னு புரியலை. வெள்ளம்குற சொல்லு பெருக்கைத் தானே குறிக்குது? சட்டுன்னு அது நம்ம மனத்தில் வெளியையும் குறிக்குமே?]

3. நீட்டி அளத்தல்ங்குறது நீளத்தை அளப்பது. சரி, பரப்பை அளக்குறது என்னவாச்சு? அது ஏன் இந்த வரிசையிலெ இல்லை? நீளம், வெள்ளம் எல்லாம் வர்றபோது, பரப்புங்குறது ஏன் வரலெ? இல்லை, எதையாவது நாம தவறாப் புரிஞ்சிக்கிட்டோ மா? தெரியலை. [பொதுவா, அகலமாக அகண்டு கிடக்குறது அகரம் (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் acre, area). பரந்து கிடப்பது பரப்பு, பரட்டு, பரத்து போன்றவை (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் broad, breadth)].

4. அடுத்தது தெறித்து அளத்தல்; தமிழ் அகரமுதலியிலெ இந்த முறைக்கு இசைக்கருவியின் நரம்பைத் தெறிச்சு (=சுண்டி) செவியின் அருகே வைத்து அளப்பதுன்னு போட்டிருக்கு. இந்த முறையிலெ, செவியின் அருகே ஒரு அதிர்வை ஏற்படுத்தி அதன் அதிர்வு எண்ணை அளக்குறாங்களா? அல்லது அதிர்வின் நேர அளவைக் கண்டுபிடிக்கிறாங்களா? என்ன செய்யுறாங்க? விவரம் அறிய முடியலை.

5. முகந்தளத்தல்ங்குறதின் மூலம், இந்தக் காலத்திலெ திண்மப் பொடிகளை (solid powders) அளக்கவும், நீர்ம(liquid)த்தை அளக்கவும் உள்ள அளவையைச் சொல்லுகிறோம். அப்படியானா, ஏன் பெய்தல் அளவைன்னு தனியா ஒண்ணு இருந்துது? முகந்தளத்தலுக்கும், பெய்தளத்தலுக்கும் இடையே என்ன வேறுபாடு? அல்லது, ஒருவேளை முகத்தல் அளவைங்குற முறை, திண்மப் பொடிக்கு மட்டுமே இருந்துச்சா? நமக்குத் தெளிவு ஏற்படமாட்டேங்குது. ஒண்ணு மட்டும் விளங்குது. நீர்மங்கள்ங்குறவை அமுக்க முடியாதவை (incompressible). ஆனால் திண்மப் பொடிகள், அவற்றுடைய துகள் அளவைப் (particle size) பொறுத்து, புரைமை (porosity) மாறக் கூடியவை. காட்டா அரிசியை எடுத்துக்குவோமே? அரிசியின் சன்னத்தைப் (thickness) பொறுத்து, முகந்தளக்குற போது கூடவோ, குறையவோ, கொள்ளளவு காட்டும் இல்லையா? ஒரே எடை காட்டுற பொன்னி அரிசியும், ஐஆர் இருபதும் ஒரே அளவு வெள்ளம் காட்டுமா? எனவே முகந்தளத்தல்ங்குறது பெய்தளத்தல்லேர்ந்து வேறு படலாம் இல்லியா?

6. அடுத்தது, தேங்க முகந்தளத்தல். தேங்க ங்குற முன்னொட்டு எதைக் குறிக்குது? தேங்கி இயல்பாகக் கிடந்ததையா? இல்லெ, வேறையா? முன்னே சொன்னப் பொலெ, அறிவியலின் படி, திண்மப் பொடிகளின் வெள்ளம், அவற்றின் புரைமை(porosity)க்கும், துகள்களின் சன்னத்துக்கும் தக்க மாறுபடும் இல்லையா? இந்தத் திண்மப் பொடிகளைத் தட்டித் தட்டி, அமுக்கி அமுக்கி, வெள்ளத்தை ஓரளவு நெருக்க/நெறிக்க முடியுமே? அதாவது ஓரளவு குறைக்க முடியும். அப்படி நெறிச்சுத் தேக்கி அளந்தது தான் மேல் கூறிய தேங்க முகந்தளத்தலோன்னு எண்ண வேண்டியிருக்கு. வெறுமனே, முகந்தளத்தலில், திண்மப் பொடியை முகந்து, நெறிக்காம அளந்தா, அதன் இயல்பான புரைமையோடு (natural porosity) உள்ள வெள்ளத்தை அளக்க முடியும். மாறாத் தேங்க முகந்தளத்தலில், நுணுகிய புரைமை (minimum porosity) யோடு கூடிய வெள்ளத்தை அளக்க முடியும்.

7. சார்த்தியளத்தல்ங்குறது ஒண்ணை இன்னொண்ணோடு சார்த்தி ஒப்பிட்டு அளக்குறது. கண்ணிமைக்கிற நேரம், விரல் நொடிக்கிற நேரமுன்னு சொல்றோமே, அவையெல்லாம் ஒப்பீட்டு அளவுகள் தான். இந்தக் காலத்தில் வெம்மையை (temperature) அளவிட, இதள்த் தெறுவமானியை (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்)ப் பயன்படுத்துற போது, வெம்மை கூடக் கூட, இதள்த் தண்டின் நீட்டம் கூடி வருதுல்லெ? அங்கே இதளின் நீட்டத்தை வெம்மையிலெ சார்த்தி, அளவெடுக்கிறோம்.

8. எண்ணி அளத்தல்ங்குறதும், நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துறது போலத் தான்.

என்னவொரு நிலை பார்த்தீங்களா? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவா" இன்னும் எத்தனை கிடக்கும், இந்தத் தமிழ்லெ?

அன்புடன்,
இராம.கி.

16 comments:

Anonymous said...

ஐய்யா நீங்கள் வட்டாரவழக்கில் எழுதுவதால் வாசிக்க மிகவும் கடினமாகவுள்ளது. வட்டாரவழக்கில் எழுதுவதால் அந்த வட்டாரவழக்கு தெரிந்தவர்கள் மட்டுமே இதை விளங்கி கொள்ளலாம். பொது நடையில் எழுதுவதால் அனைவரும் மிக இலகுவாக இதை புரிந்து கொள்ள முடியும்.


மீதமாகவுள்ளதையேனும் பொது நடையில் எழுத முயலுங்கள்.

இரும்பொறை said...

####என்னவொரு நிலை பார்த்தீங்களா? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவா" இன்னும் எத்தனை கிடக்கும், இந்தத் தமிழ்லெ?#####

என்ன செய்ய இராமகி, தமிழிலுள்ள அரியவற்றை அறிந்துகொள்ள நம்ம தமிழர் முயல்வதில்லை.

எல்லாம் படிக்க ஆவல், ஆனா என்ன இந்த மரமண்டைக்கு ஒன்னும் ஒழுங்கா ஏறுதில்லை. தொல்காப்பியத்தைப் படிக்க யாருடைய தொல்காப்பிய உரை சிறந்ததது?

சொற்பிறப்பியல் மற்றும் தமிழ்ச் சொற்களின் தோற்றத்தை ஆய நூல் சில பரிந்துரையும் நண்பரே. :)

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

இந்த வட்டார நடை, பொதுநடைக் குழப்பம் பலநாட்களாக இருக்கிறது. பொதுநடையில் எழுதக் கூடாது என்றில்லை.

நீங்கள் ஈழத்தாராக இருக்கலாம். அடிப்படையில் என் நடை தமிழ்நாட்டுத் தென்பாண்டி நடை. என்னை அறியாமல் வந்து சேரும். கூடவே சென்னை நடையையும், விளையாட்டிற்காக, மலையாளப் பேச்சையும் உள் நுழைத்திருந்தேன். நீங்கள் கொஞ்சம் தடுமாறி விட்டீர்கள்.

நீங்கள் சொன்னதிற்கு அப்புறம், என் நடை பற்றி யோசிக்கிறேன். இன்னும் சிலர் இதுபற்றிக் கரூத்துத் தெரிவித்தால், மாற்றிக் கொள்ள வேண்டுமா என்று பார்க்கிறேன்.

அன்பிற்குரிய இரும்பொறை,

தொல்காப்பியம் பற்றி ஒவ்வொரு அதிகாரத்திற்கும் உறையாசிரியர்களின் விளக்கங்களோடு இலக்கணச்செம்மல் இரா.இளங்குமரனாரின் விளக்கத்தையும் சேர்த்து, ஒரு தொகுதியாக தமிழ்மண் பதிப்பகத்தார் (2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17, தொலைபேசி: 24339030) வெளியிட்டிருக்கிறார்கள். வாங்கிப் பாருங்கள்.

சொற்பிறப்பியலுக்கும், தமிழ்ச்சொற்கள் தோற்றத்திற்கும் பாவாணர் நூல்களையும், அருளியின் நூல்களையும், கு.அரசேந்திரன் நூல்களையும் வாங்குங்கள். இன்னும் தனித்தனியாக ஒரு சிலர் இருக்கிறார்கள். கூடவே என்னுடைய பதிவுகளையும் படித்து வாருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

G.Ragavan said...

ஐயா, இந்தக் கட்டுரையின் பெரும்பகுதி எனக்குப் புதிது. ஆகையால் கருத்து சொல்ல தகுதியில்லை.

ஒன்று சொல்லலாம். எழுத்துகளுக்கு உயிர் மெய் என்று பெயரிட்டமை. உயிர் தனியே இயங்குகிறது. உயிர்மெய் இயங்குகிறது. மெய் இயங்க முடியவில்லையே. vowels and consonants என்று பொதுமையாகப் பிரிப்பதை விட இப்படி அறிவோடு பிரித்திருப்பது எத்தனை கூரியது. இதையறியாமல் பழையதெல்லாம் நைந்தது என்போரை என் சொல!

Yazhini said...

வணக்கம். உங்கள் கருத்துக்கள அடிக்கடி படிப்பதுண்டு. பயனுள்ளவை.

வெற்றி said...

இராம.கி ஐயா,
இப் பின்னூட்டம் தங்களின் இப் பதிவிற்கல்ல. மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களின் profile ல் உங்கள் மின்னஞ்சல் கிடைக்கவில்லை. ஒரு [ஈழத்து]தமிழ்ச் சொல் பற்றிச் உங்களிடம் சில ஐயங்களைக் கேட்க விரும்புகிறேன். இங்கே கேட்டு உங்களின் பதிவின் நோக்கத்தைத் திசை திருப்ப விரும்பவில்லை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின் இங்கே கேட்கிறேன். அல்லது உங்களை எப்படித் தொடர்பு கொள்ளலாம் என தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்த முடியுமா?

எனது மின்னஞ்சல் முகவரி:
vettri_kandaswamy@yahoo.com

நெடுஞ்சேரல் said...

மாதிரி எனும் சொல்லைத் தாங்கள் கையாள்கிறீர் நண்பர் இராமகி. மாதிரி தமிழா இல்லை ஆங்கில 'மாடல்' என்ற சொல்லின் தமிழ்த் திரிபா?

மாதிரி என்பது 'போல்' என்பதற்கு ஒத்த கருத்துடைய சொல்தானே. இது தமிழ்ச்சொல்லா இல்லையா?

நன்றி

கூத்தன் கோமா said...

நிமித்தகம், சோதிடம், ஆரூடம் இவை மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமை என்ன நண்பர் இராமகி?

space and time என்பதைத் தமிழில் எவ்வாறு கூறலாம்?

மந்திக்கும் மங்கிக்கும்(monkey) உள்ள தொடர்பை யாராவது ஆய்ந்துள்ளார்களா?

தொல்காப்பியத்தில் விளக்கப்படும் இந்த அளபு முறைகளை எவ்வாறு தமிழர் கண்டுபிடித்தனர்? இவ்வளவு நுண்ணியமாக வேறு எந்த மொழிகளிலும் அளபு முறைகள் இருந்துள்ளனவா?

இந்த அளபுமுறைகளைத் தொல்காப்பியத்துக் காலத்தில் தமிழர் அறிந்திருந்தார்கள் எனின், தமிழரிடம் பல நுட்பங்கள் பரவி இருந்திருக்குமே?

இதள்த் தெறுவமானி போன்றவை தமிழரிடம் முன்னர் இருந்ததா? இல்லை அடிப்படை அளபு முறையுடன் தமிழர் நுட்பம் வளர்வின்றி இருந்ததா?

நீங்கள் மேற்கூறிய அளபுமுறைகள் மற்றும் மாத்திரை மற்றும் பிற கருத்துகளைக்கொண்டு எதிர்காலத்தில் தமிழ்க் கணி எவ்வாறு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் நண்பரே?

Yazhini said...

அன்பார்ந்த அய்யா,
அளபெடை, இசையோடு தொடர்பு உடையதா? தற்போது அளபெடைகள் வழக்கில் இல்லாவிட்டாலும், கருநாடக இசையில் 'கமக' மாக மாறியுள்ளதோ?

பி.கு: சமையலில் வாசனை மிகுந்தால் 'கமகம' என்றும் சொல்வதற்கும் , இசையில் 'கமக' அமைப்பிற்கும் ஏதேனும் தொடர்புண்டா? தீபாவளி திருநாள் இன்று. படையல்கள் கமகம என்று வாசனை மூக்கை துளைக்கின்றது.

வணக்கம்.

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

Yazhini said...

அளபெடை, இன்று வழக்கில் இல்லாவிட்டாலும், கருநாடக இசையில் 'கமக' மாக மாறியுள்ளதோ?

பி.கு: சமையல் வாசனை 'கமகம' என்பதற்கும் 'கமக' இசைக்கும் தொடர்புண்டா? தீபாவளி படையல் வீட்டில் கமகம என்று அழைக்கிறது.

அன்புடன்,
கரு.மலர்ச் செல்வன்

CAPitalZ said...

முதல் அனானி சொன்னது போல், வட்டார வழக்கில் எழுதாமல் பொது நடையில் எழுதுங்கள். எனக்குப் புரிவது மிகக் கடினமாக இருக்கிறது.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

இராம.கி said...

அன்பிற்குரிய இராகவன்,

உயிர்மெய்யின் சரியான பயன்பாட்டை விளங்கிக் கொள்ளாமல், தப்பும் தவறுமாய், கால், கொக்கி, கொம்பு போன்றவற்றை dependant vowel என்று குறித்து, அவற்றிற்குத் தனி ஆளுமையை உருவாக்கி, கந்தர கோளமாய் புதுத் தமிழ் இலக்கணம் ஒன்றை உருவாக்க அடிப்படை ஏற்படுத்திக் கொடுத்து, ஒருங்குறிக் குறியேற்றம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் எல்லோரும் கணித்திரையில் நமக்கென்று எழுத்துக்கள் வருவதே பெரிது என்று எடுத்துக் கொண்டு, ஆனந்தக் களிப்பு எய்தி, அடுத்த நிலைத் தமிழ்க் கணிமைக்குப் (Tamil computing) போவதில் பெருந்தடை ஏற்பட்டிருப்பதைப் புரியாமலே இருக்கிறோம்.

குறியேற்றங்களின் குழப்பங்கள் பற்றி ஆன மட்டும் சொல்லியாயிற்று. புரிந்தவர் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். நானோ, "கடைவிரித்தேன்; கொள்வார் இல்லை" என்ற நிலைக்கு வெகு அருகில் வந்து கொண்டிருக்கிறேன்.

அன்பிற்குரிய யாழினி,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய நெடுஞ்சேரல்,

மாதிரி பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். முன்னால், நண்பர் நாக. இளங்கோவன் இதுபற்றித் தமிழ் உலகம் மடற் குழுவில் கேட்டிருந்தார். அவருக்குக் கூறிய மறுமொழியை ஒரு சில மாற்றங்களுடன், இங்கு மீள்தருகிறேன்.
----------------------
அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, என்ற, வியப்ப, எள்ள, விழைய, இறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய

என முப்பத்தாறு உவம உருபுகளைத் தொல்காப்பியம் உவமயியல் நூற்பா 1232 -ல் காட்டும். model என்பதற்கான இணைச் சொல்லை இதற்குள் காண வேண்டும்.

படிமம் என்பது படி என்பதின் பெரியது. படி என்பது copy. copy-யும் model-உம் ஒன்றாகாது. copy என்பது அப்படியே அச்செடுத்தாற் போல் உள்ளது. அதனுடைய பொதுமை அலகு மாறலாம். அதாவது அரைமடங்கு, 12% copy ஆக இருக்கலாம். ஆனால் ஒரு உறுப்புக்கும் இன்னொரு உறுப்புக்கும் இருக்கும் உள்ளக அளவீடுகள் (internal measurements) மாறக் கூடாது. ஒரு படிமத்தில், நெஞ்சிற்கும் தொப்பூழுக்கும் உள்ள அளவீடு, தேர்ந்தெடுக்கப் பட்ட ""சாமுத்ரிகா" இலக்கணத்தில் இருந்து மாறக் கூடாது.

ஆனால் model என்பது (அது பூதப் பொருளாய் இருந்தாலும் சரி, மெய்ப்பொருளாய் இருந்தாலும் சரி, கருத்துப் பொருளாய் இருந்தாலும் சரி) அங்கே சில பண்புகளை முன்னிறுத்தி, மற்றவற்றை ஒதுக்கிச் செய்கிறோம்.

காட்டாக unidimentional object என்ற ஒரு பரிமானப் பொருளைப் பற்றிப் பார்ப்போம். இயற்கையில் நாம் பார்க்கும் ஒரு பொருள் கூட, ஒரு பரிமானப் பொருள் கிடையாது. இருந்தாலும் ஒற்றைப் பரிமானப் பொருள் என்ற model நமக்கு அறிவியலில் தேவைப் படுகிறது.

அதே போன்று ideal gas என்பதும் ஒரு model தான். இருப்பதிலே பலக்கைத் (எல்லாம் ஒன்று கூடிய பலவிதமாய் - complex) தோற்றம் காட்டாத ஓர் எளிய கருத்தியல் வளி (ideal gas).

model பற்றி முன்பு எப்பவோ எழுதிய நினைவு. சட்டென்று அந்தக் கட்டுரை நினைவுக்கு வரவில்லை.

மாத்தல் என்பது அளவுதலே., மாத்தல், மாதித்தல், மானித்தல் எல்லாமே அளவுதலே. எவ்வளவு என்பதை வட ஆர்க்காட்டு மாவட்டத்தார் எம் மாத்தம் (மாத்திரம்) என்று கேட்பார்கள்.

மாத்தி என்பதும் அளவிடப் பட்டதே. வடமொழிப் பலுக்கால் மாத்தி மாத்ரி>மாதிரி என்று ஆயிற்று. இங்கே வடமொழிப் பலுக்கைத் தவிர்க்கலாம் என்றாலும் மாதித்தல் என்ற வினையை ஒட்டிய மாதம் (month) என்னும் சொல் கருதி இந்தத் திரியை அப்படியே (தெரிந்த வண்ணமே) ஏற்றுக் கொள்ளலாம்.

Model - மாதிரி, modelling - மாதிரித்தல்

பாவாணர் model என்பதற்குப் போல்மம் என்றும் சொன்னார். அது போல்மை>பொம்மை போன்றது. 65-70 களில் போல்மத்தைப் பெரிதும் பயன்படுத்திப் பொறியியற் கட்டுரைகளைக் கோவை நுட்பியற் கல்லூரியில் நாங்கள் எழுதினோம். இப்பொழுது அதைப் பரிந்துரைப்பதைக் காட்டிலும், மாதிரியையே பொருத்தமாகப் பயன்படுத்தலாம் என்று தென்படுகிறது.
--------------------------

அன்புடன்,
இராம.கி.

கணிப்புலி said...

[நானோ, "கடைவிரித்தேன்; கொள்வார் இல்லை" என்ற நிலைக்கு வெகு அருகில் வந்து கொண்டிருக்கிறேன்.]கவலை வேண்டாம் நண்பரே. எதிர்காலத்தில் தமிழ்க் கணியை வளர்க்க இன்னும் பலர் காத்துள்ளோம்.

உங்கள் கடையில் உள்ள பொருட்களை இங்கு காட்சியாக வைத்துவிடுங்கள். எப்படியாவது அவற்றைப் பயன்படுத்தி தமிழ்க் கணியை நம்மில் பலர் வளர்த்தெடுப்போம். இது உறுதி.

நெடுஞ்சேரல் said...

மாதிரிக்குத் தந்த விளக்கம் அருமையானது. நன்றி நண்ப இராமகி.

மாதித்தல் வடமொழிப்(எந்த வடமொழி?) பலுக்கால் மாத்ரி என்று உருமாறி மாதிரி என்றாகியது என்றீர் நண்பரே. அவ்வாறெனின், விமானம் என்ற சொல்லில் வி என்ற அடி மட்டும் சமற்கிருதம் 'மானம்' என்ற விகுதி தமிழ்தானே. ஆகவே விமானத்தையும் நாம் தமிழ் என்று கருதலாமோ?

பணிவு

இராம.கி said...

அன்பிற்குரிய கணிப்புலி,

ஆர்வமாய் இருக்கும் உங்களைப் போன்றோர் தமிழ்க் கணிமையை வளர்த்தால், என்னைப் போன்றோர் மிக மகிழ்வு கொள்ளுவோம்.

அன்பிற்குரிய நெடுஞ்சேரல்,

வடமொழி என்றால் சங்கதம் என்றே பெரும்பாலும் பொருள்கொள்ளுகிறோம். ஆனாலும் அது சில இடங்களில் பொதுமைப் பொருள் கொண்டு பாகதம் போன்ற வடபுலத்து மற்ற மொழிகளையும் குறிக்கும்.

விமானம் என்பது சங்கதச் சொல்லே. அதில் வரும் மானம் தமிழில் வரும் மானத்திற்கு ஈடான பொரூள் கொண்டதல்ல. வி-மான் என்பதில் வரும் மான் விண்ணில் போகும் தேர் என்றே சங்கதத்தில் பொருள் கொள்ளும். தமிழில் மானம் என்பதற்கு அந்தப் பொருள் அமையாது.

பணிவு என்றெல்லாம் எழுதி என்னைக் கூச்சப்பட வைக்காதீர்கள். எனக்குத் தெரியாததை உங்களிடம் கேட்பேன்; நீங்கள் இப்பொழுது கேட்கிறீர்கள், அவ்வளவுதான்.

நட்பே தொடரட்டும்.

அன்புடன்,
இராம.கி.

ரவிசங்கர் said...

தயவு செய்து கடைவிரித்தேன் கொள்வார் இல்லை என்ற நிலைக்கு வர வேண்டாம். சொல்லவும் வேண்டாம். உங்களைப் போன்றோர் இல்லாவிட்டால் மாற்றுச் சிந்தனைகளை அறிந்து கொள்ள முடியாது. இன்றில்லாவிட்டாலும் நாளை உங்கள் சொற்களில் உள்ள உண்மை அறிந்து கொள்ளப்படலாம். எனவே தொடர்ந்து எழுதி உங்கள் சிந்தனைகளை ஆவணப்படுத்துங்கள்.