Thursday, October 12, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 4

மீண்டும் குவி விளக்குக்கு வேலை வந்திருக்கு; ஏன்னா, மேற்கொண்டு சில அடையாளங்களையும் காட்டோணும். இந்தத் தொல்காப்பியரை ஒரு தேர்ந்த நாடகக் காரர்னு முன்னாடிச் சொன்னேன். தேர்ந்த நாடகக் காரர் ஆடுநர்களையும் ஆட்டத்திகளையும் சரியான நேரத்திலே நாடகத்துக்குள்ளே கொண்டாருவார்; அவர்களுடைய குணநலன்களைக் கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுத்துவார்.

அந்த வகையிலெ, தொல்காப்பியர் முதல்லே 30 பேரைச் சிறப்பான எழுத்துக்களாச் சொன்னார்; அப்புறம் அலங்கடையா, இன்னும் மூணுபேரைக் காட்டினார்; மேலே, கொஞ்சம் போய் 30 பேருலெ அஞ்சு பேரைக் காட்டி இவங்கள்லாம் குற்றெழுத்துக்காரர்ன்னு சொன்னார்; அப்புறம் இன்னும் ஏழு பேரைக் காட்டி இவங்கள்லாம் நெட்டெழுத்துக்காரர்ன்னு சொன்னார்; அவற்றுக்கு அளபும் சொன்னார்; மூவளபு வேணும்னா, ஒரு நெட்டெழுத்து, ஒரு குற்றெழுத்துன்னு பக்கத்திலெ பக்கத்திலெ வச்சு சரி பண்ணிக்கிங்கோன்னு வழிமுறை சொன்னார். கடைசியா, அளபு அல்லது மாத்திரைங்குறதுக்கு ஒரு வரையறையும் சொன்னார்.

ஆனா, குற்றெழுத்து, நெட்டெழுத்துன்னு சொல்ற இந்த பன்னிரண்டு பேரும் யாரு, ஒரே மாதிரி ஆட்களான்னு சொல்லலை. அதாவது உயிரெழுத்துன்னு எதையும் இதுவரை நேரடியாச் சொல்லலை; அதே போல மெய்யெழுத்து எதுன்னும் நேரடியாச் சொல்லலை. அப்புறம், மெய்யும் உயிரும் கலந்தா, உயிருக்கு என்ன ஆகும்? ஞாயமான கேள்வி. இதுக்கெல்லாம் மறுமொழி சொல்றாப் பொலெ, அடுத்து 8ம் நூற்பாவில் இருந்து 13 வரை ஒரு தொகுதியாகப் பார்ப்போமா?

8. ஔகார இறுவாய்ப்
பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப

9. னகர இறுவாய்ப்
பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப

10. மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா

11. மெய்யின் அளபே அரை என மொழிப.

12. அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.

13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையுடன் அருகும்;

தொல்காப்பியம் எழுந்த காலத்திலே, மெய்யியல் (philosophy) கொஞ்சம் கொஞ்சமாத் தென்னகத்துலே பரவியிருக்கோணும். உடல்(body)ங்குறது வேறே; அதுலே இருக்குற இயக்கம் (movement) வேறேங்குற புரிதல் எப்படியோ தமிழ் மாந்தனுக்கு ஏற்பட்டிருக்கு. பொதுவா, தொல்காப்பியத்துக்குள்ளே வெவ்வேறு நெறிகளை (சமணம், சிவநெறி, வேத நெறி, உலகாய்தம் எனப் பலவற்றைத் துழாவித்) தேடி இனங் காட்டுறதுலே சிலபேருக்கு ரொம்பவுமே ஆசை. அந்த வேலைக்கு நான் இங்கே போகலை. ஆனா, ஒன்றைச் சொல்லாமப் போகக் கூடாது.

உடல், உயிர்னு தொல்காப்பியத்துலே பிரிச்சார் பாருங்க, அது மெய்யியல் சார்ந்த கருத்துன்னு ஆணித்தரமாச் சொல்லலாம். ஒரு மொழி இலக்கணத்துக்கு மெய்யியல் வழி ஒரு போல்மம் (model) உருவாக்குறது என்பது தேவையா? ஆனா, அப்படி ஒரு போல்மத்துலே தான் தமிழ்மொழி இலக்கணம் உருவாகி நிக்குது. இந்தப் போல்மத்திற்கு இயற்கையிலே பெற்ற பட்டறிவும் (experience) காரணமாய் இருக்கலாம்.

பொதுவா, இறப்புங்குற ஒரு நிகழ்ச்சி, மாந்தனைப் பெரிதும் யோசிக்க வைக்குது. அதுவரை இயங்கிக்கிட்டிருந்த உடல் இறப்புக்கு அப்புறம் இயங்காமப் போகுது. அதுவரைக்கும் உசு, உசுன்னு மூச்சு விட்டுக் கொண்டிருந்த உடல் அப்பாலெ, மூச்சு விடமாட்டேங்குது. உசிர்>உயிர் நின்னு போச்சுங்குறோம். உய்த்துக் கொண்டு இருத்தலை உயிர் உள்ள நிலையாகக் கொள்ளுவது, நம்பா மதமான (religion which does not believe in existence of God) உலகாய்தத்துக்கும் (Lokaytham), நம்பும் மதமான (religion which believes in the existence of God) மற்ற நெறிகளுக்கும், எதிரான நிலையில்லை. ஆனா, உயிர் தனித்து இயங்குமா என்பதில் நம்பா மதமான உலகாய்தம் மாறுபடும். உயிர் தனித்து இயங்கும் என்ற மெய்யியல் உலகாய்தத்திற்குப் புறம்பாகி, நம்பும் மதங்களின் மெய்யியலுக்குள் தான் அமைகிறது.

எனவே நூற்பா 8ன் வழியாகத் "தான் ஒரு நம்பும் மதத்தானே (believer)" என்று தெளிவாகத் தொல்காப்பியர் சொல்லுகிறார் என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.

ஆகப் பன்னிரு எழுத்தும் உயிர் என்று சொல்வார். மொழிதல் என்பதும் சொல்லுதல் என்பதும் ஒரே பொருள் உள்ள சொற்கள் தான். இதே போல னகரம் முடிய மீந்து இருக்கும் பதினெட்டும் மெய்யெனச் சொல்லுவார்கள் - இது ஒன்பதாம் நூற்பாவின் கருத்து.

இந்த 8, 9ம் நூற்பாக்கள் வெறுமே அடையாளமும் பேரும் சொல்ற நூற்பாக்கள். ஆனாப் பத்தாவது நூற்பா, கொஞ்சம் ஆழமானது.

"மெய்யோடு சேர்ந்தாலும் உயிர் தன்னோட இயல்பில் திரியாது"

இயைதல்ங்குற சொல்லுக்குப் பொருந்துதல், புணருதல், கலத்தல்னு பொருள் உண்டு. [ஒரு காலத்துலே கோவை நுட்பியல் கல்லூரி "தொழில்நுட்பம்" மலர்க்குழுவிலெ இருந்த நாங்க, இயல்பியல்னு பூதியலுக்கு (physics) பெயர் கொடுத்த அதே நேரத்துலெ, வேதியியலுக்கு இயைபியல்னு பேர் கொடுத்தோம். இந்த இயல்பியல்ங்குற சொல் நிலைச்சுப் போச்சு (முட்டாத் தனமா, இயற்பியல்னு பலுக்கல் மாறியது ஒரு சோகம். இனியாவது பிழை தெரிஞ்சுதுன்னா, சரியான சொல்லை உருவாக்குன நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்.) ஆனா, இயைபியல்ங்குற சொல் நிலைக்காமலே போச்சு. எந்தச் சொல் நிலைக்கும் எது நிலைக்காதுன்னு சோதியமா (=ஆருடம்) கூறமுடியும்? ஒரு மொழியிலெ, சொற்களைப் பரிந்துரைக்கத் தான் முடியும்; மிச்சதெல்லாம் மக்கள் கையிலெ.]

உடலோட உயிர் பொருந்தோணும், புணரோணும், கலக்கோணும். அப்படிப் பொருந்தினா, உயிர் தன் இயல்பை விட்டுருமா? விடாதுன்னு சொல்றார் தொல்காப்பியர். இதுவரை உயிர் எழுத்துக்கு என்ன இயல்பு சொன்னார்? "சிலது குறுகி ஒலிக்கும்; சிலது நெடிது ஒலிக்கும். குறுகி ஒலிக்குற போது ஓரளபு, நெடுகி ஒலிக்குற போது ஈரளபு. அளபுக்கு வரையறை நமக்குத் தெரியும்". இதுதான் அவர் சொன்னதின் உள்ளடக்கம்.

உயிர் தன் இயல்பு திரியாது - அப்படின்னா என்ன? மெய்யோடு சேர்ந்தாலும், உயிர் எப்படி ஒலிக்கணுமோ, அப்படித்தான் ஒலிக்கணும் அவ்வளவு தான்.

முன்னாலெ சொன்னாப்பொலெ, மூடிய அசையா இருக்கலாம், அல்லது திறந்த அசையா இருக்கலாம். சில மொழிகள் இரண்டையுமே வச்சுக்கும். (காட்டு: ஆங்கிலம், bii - திறந்த அசையொலி, ef - மூடிய அசையொலி). தொல்காப்பியர் திறந்த அசையை மட்டுமே வச்சிக்கிட்டு தமிழ் இலக்கணம் சொல்லுறார். ஆனா, திண்ணைப் பள்ளிக்கூடத்துலெ நாங்க படிக்குற காலத்திலே, 1950 கள்லெ, மூடிய அசையை வச்சு மெய்யைச் சொல்ற பழக்கமும் உண்டு. இக், இங், இச், இஞ், இப்படி அந்த வரிசை போகும். இந்த அசை மாற்றம் எப்ப வந்ததுன்னு எனக்குத் தெரியலை.

இயல்பு திரியாதுங்குறது மாத்திரையைப் பற்றியது. க் ங்குற மெய்யும் ஓ ங்குற உயிரும் சேர்ந்தா, கோ ங்குற உயிர்மெய்க்கு 2 1/2 மாத்திரை வரணும் இல்லையா, ஆனா, அந்த அரை மாத்திரை காணாமப் போயி, உயிருக்கு எவ்வளவு மாத்திரை இருந்துதோ, அதே மாத்திரை அளவுதான் உயிர்மெய்யான கோ - வை ஒலிக்குறதுக்கு எடுத்துக்கிறோம். இதையும் கவனத்துலெ கொள்றது நல்லது.

பல குறியேற்றக்காரர்கள், மெய்யும் உயிரும் பொருந்துறது, இயைகிறது ஏதோ ஓர் இழுனிய செயலாக்கம் (linear process)னு நெனைச்சுக்கிறாங்க. தங்களுடைய பேச்சுக்கள்லெ சொல்லவும் செய்கிறாங்க. அப்படி இல்லைங்க. அது பிழை. மாத்திரை குறைஞ்சுது பாருங்க, அப்பவே அது இழுனிய செயலாக்கம் இல்லை; இழுனாச் செயலாக்கம் (non-linear process) னு புரிஞ்சிக்கோணும். கிட்டத் தட்ட ஒரு வேதிச் செயல் போலவே உயிரும், மெய்யும் இங்கு பொருந்துகின்றன; இயைகின்றன. 

இழுனிய செயலாக்கம்னா, இப்படிப் பொருந்தியிருக்காது. ஒரு சின்னத் தட்டு தட்டுனா, உயிர் ஓடியே போயிடும். [இழுனிய செயலாக்கம் = linear process; இழுனை = line; இதைக் கோடு என்று சொல்லிப் போனால் அது, பல முன்னொட்டுப் பயன்களைத் தருவதில்லை. அதே போல, நேர் என்பதும் direct என்ற பொருள் தருகிறதே ஒழிய, line என்ற பொருள் தருவதில்லை. நேர்கோடு என்பது நீர்வீழ்ச்சி மாதிரியான பயன்பாடு; என்னைப் பொறுத்தவரை அது சொல்விளக்கத்திற்குப் பயன்படுமே ஒழிய, கலைச்சொல்லாகப் பயன்படாது. மிகுந்த யோசனைக்கு அப்புறம் தான், இப்பொழுது இரண்டு மூன்று ஆண்டுகளாக, இழுனை என்ற சொல்லை ஆண்டு வருகிறேன். என்னுடைய கசகு - chaos - பற்றிய பாடலில் பயன்படுத்தியிருந்தேன்.]

அடுத்து, 11, 12 ஆம் நூற்பாக்களில் மெய்க்கும், சார்பெழுத்துக்களும் ஒலிக்கும் அளபு அரை மாத்திரை என்று சொல்கிறார்.

இனிப் பதிமூன்றாம் நூற்பாவிற்குப் போவோம். இதுலே இளம்பூரணர்லேர்ந்து நான் சிறிது மாறுபடுறேன். என்னோட புரிதலின் படி, மேலே எழுதியிருக்குற நூற்பாவின் இரண்டாவது வரி அரையடி தான். மிச்ச அரையடியை 14ம் நூற்பாவோட சேர்க்கணும். அப்பத்தான் 14ம் நூற்பா விளங்கும். அந்த நூற்பா மகரத்தின் வடிவைப் பற்றிச் சொல்லுகிறது. மேலே சொன்ன அரையடி 14ம் நூற்பாவோடு சேரலைன்னா, திடீர்னு இருந்தாப் பொலெ, ஏன் வடிவு பத்திச் சொல்றார்னு கேள்வி எழும். ஒரு கணுத்தம் (continuity) இல்லாம இருக்கும். (ஆனா, இளம்பூரணர் மிச்ச அரையடியையும் 13ம் நூற்பாவோட சேர்ப்பார்.) இப்போதைக்கு, நான் எழுதுன படியே பொருள் சொல்றேன்.

இந்த மகரம் இருக்கும் பாருங்க, அது வாய் தொறக்காம முணகுற ஒலி. இந்த ஒலியை மற்ற மெல்லினங்களுக்கு அப்புறம் கூடச் சேர்த்து முணகலாம். காட்டா, "கொண்ம்" - கொண்டுவா. "போன்ம்" - போலும். இப்படி முணகுறாப் பொல வர்ற இடத்துலே அரை மாத்திரை கூட இல்லாம கால்மாத்திரை அளவுதான் ஒலிக்குறோம். இந்தக் காலத்தில் அன்றாடப் பேச்சில் கூட, "ம், இப்பத்தான் வந்தீங்களோ" என்று சொல்கிறோம். ம் கொட்டுகிறோம். பொதுவா, இந்த இம்மை கால் மாத்திரையாப் பலுக்கலாம், அரை மாத்திரையாப் பலுக்கலாம், ஏன், இன்னும் நீட்டிக் கொண்டு வேணும்னாலும் செய்யலாம். இந்த முணகுற ஒலி கொஞ்சம் நுணுகிய ஒலி. கவனம் வேணும்.

அடுத்து, 14ல் ருந்து 17 வரையான நூற்பாவைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் கால எழுத்துமுறைகளை கல்வெட்டு ஆசிரியர்களை வைத்துக் கொண்டு முழுக்கப் புரிந்து கொள்வது நல்லது. அதை அடுத்த பகுதியிலெ பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

Anonymous said...

//இழுனிய செயலாக்கம் (linear process)
இழுனாச் செயலாக்கம் (non-linear process) //

அருமையான சொல்லாக்கம் :)

இராம.கி said...

அன்பிற்குரிய செம்பியன்பற்று,

தங்களின் ஊக்கத்திற்கு நன்றி. நேரிய செயலாக்கம், நேரிலாச் செயலாக்கம் என்ற சொற்கள் direct process, indirect process என்பவற்றிற்குச் சமமாய் இருக்கும். இந்த மாறுபாட்டை தமிழில் அறிவியற் கட்டுரை எழுதுபவர்கள் உணர்ந்து கொண்டு பழகினால் நன்றாக இருக்கும்.

அன்புடன்,
இராம.கி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்தத் தொடரின் நாலு பாகத்தையும் இன்னிக்கு தா

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இந்தத் தொடரின் நாலு பாகத்தையும் இன்னிக்குத் தான் படிச்சேன். அடுத்த பாகத்தை விரைந்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

இராம.கி said...

அடுத்த பாகம் கொஞ்சம் நாளாகும், நண்பரே!

அன்புடன்,
இராம.கி.