Saturday, October 07, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 2

கூத்துன்னு சொன்னவுடனே ஒண்ணு ஞாவகத்துக்கு வருது.

பொதுவா, கூத்துப் பாக்குறவுக்களுக்கு, கூத்தோட கதையெல்லாம் நல்லாவே தெரியும்; இன்னுஞ் சொல்லணும்னா, அதுலே வர்ற உரையாடல், பாட்டு எல்லாமே கூட அவுகளுக்குத் தெரிஞ்சிருக்கும். பின்ன எதுக்கு வருசா வருசம் திருவிழாவுலே கூத்துப் பாக்குறாங்கன்னு நமக்கு ஒரு கேள்வி வரும். வேறெ ஒண்ணுமில்லைங்க, வாத்தியார் படத்தை எதுக்குத் திரும்பத் திரும்பப் பார்க்குறமோ, அதே மனப்பான்மை தான்; கொஞ்சம் கூடச் சலிக்கிறது, இல்லைங்களே?

கூத்துலே ஓவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்பச் சுவைக்கிறதுலெ ஏதோ ஒரு மகிழ்ச்சிங்க. அது மாதிரி இந்த எழுத்து, மொழி எல்லாம் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான்; இருந்தாலும், இதெ நுணுக்கமாப் பார்த்து, "என்ன சொல்றாங்க; இந்தத் தடவையிலே புதுசா ஏதாவது விளக்கம் வருமா? போன வாட்டி சொன்னதையே இந்த வருசம் சொல்லுவாங்களா?" அப்படின்னு ஓர் எதிர்பார்ப்பு ["காயாத கானகத்தே" யிலே புதுசா ஏதாட்டும் பிருகா வருமாங்குற ஓர் ஆசை.]

இளம்பூரணரும், அவருக்குப் பின்னால் வரும் நச்சினார்க்கினியரும், பொதுவா, எழுத்துங்குறதை எட்டு வகையாலே உணர்த்தோணும்னு சொல்லுவாங்க! முடிஞ்சா, எட்டுக்கு மேல் வகையாலும் உணர்த்தலாமாம்! நாம, எட்டோ ட நிறுத்திக்குவோம். வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவனா, நாம் ஆயிறப் படாது, இல்லியா?

முதல் வகை என்ன? - இது இதெல்லாம் எழுத்துன்னு சொல்லணுமாம். (வேறே ஒண்ணும் இல்லை, எழுத்தை ஒலிச்சுக் காட்டணும்; எழுத்துங்குறது ஒலிக்குப் பகரி-substitute தானே? அது ஒலியைக் குறிக்கலேன்னா, அப்புறம் என்ன எழுத்து? வெறும் பப்படம்.)

இரண்டாவது - இது இதுக்கு இன்ன பெயர். முதல் நூற்பாவுலே அழகாச் சொல்றார் பாருங்க, தொல்காப்பியர். அகரத்துலே தொடங்கி னகரம் வரைன்னு பெயரைச் சொல்றார். இதாங்க அந்த எழுத்துக்களுக்குப் பெயரு. TSCII மடற்குழுவுலே TSCII எழுத்துக்களே பதிவு செய்யுறதைப் பத்தி இப்பப் பேசிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பேச்சுலே, இந்த எழுத்துக்களுக்கு என்ன பேரு கொடுக்கிறதுங்குறதுலே ஒரே சண்டை. Printed salvation இருக்கா? பேர் சொல்லி யாரானும் பொத்தகம் போட்டிருக்கானுவளா? வேறே எங்கேய்யா போகணும், தொல்காப்பியரும், இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் பத்தாதா? அவுகளுக்கு மேலே யாரு ஆணத்தி? (ஆணத்தி -ங்குறது சோழர் கல்வெட்டுக்கள்லே authority ங்குறதுக்கான சொல்; ஆணை இடக் கூடியவன் ஆணத்தி; நாம என்னடான்னா, அதைத் தொலைச்சிட்டு அதிகாரி, அத்தாரிட்டின்னு தடுமாறிக்கிட்டு இருக்கோம்.)

தொல்காப்பியர் சொன்னபடி பார்த்தா, நம்மோட எழுத்துக்கள் ஒண்ணுக்கும் ஓவ்வோர் பேர் இருக்கு; அகரம், ஆகாரம், இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐகாரம், ஒகரம், ஓகாரம், ஔகாரம், அஃகேனம், ககரம், (இதன் விரியை உயிரெழுத்து வரிசையை மேலே சொன்னது போல் எழுத முடியும்; ககர அகரம், ககர ஆகாரம்...... இப்படிப் போகும்.), ஙகரம், சகரம், ஞகரம், டகரம், ணகரம், தகரம், நகரம், பகரம், மகரம், யகரம், ரகரம், லகரம், வகரம், ழகரம், ளகரம், றகரம், னகரம் என்று எழுத வேண்டும். இந்தக் காலத்துலே இந்தப் பேருல்லாம் மறைஞ்சு, ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா ..... ன்னு புதுப்பெயரைச் சொல்லிக்கிட்டு இருக்கோம். எங்களுக்கெல்லாம் 1950 கள்லே, திண்ணைப் பள்ளிக்கூடத்துலே இதே மாதிரி "ன்னா" போட்டுத்தான், சொல்லிக் கொடுத்தாங்க. இப்போதைய சிங்கள மொழிப் பேர்களும் கூட இதே மாதிரித் தான் இருக்கு. (அந்த முட்டாப் பயல்களும் தமிழோட, தமிழனோட, தங்களுக்கு என்ன உறவுமுறைன்னு விளங்கிக்கிடவும் இல்லே. மாமன் முறை, மச்சான் முறைங்க. வரலாற்றின் படி, விசயனும், விசயனோட தோழர்களும் கட்டிக்கிட்டது தென்பாண்டித் தமிழச்சிகள் தான். அவங்க மொழிலே தமிழ் ஊடுறுவாமலா இருக்கும்? பாகதத்துக்கும், தமிழுக்குமாப் பொறந்தது தான் சிங்களம்.) இந்தப் புதுப்பெயர் வரிசை எப்ப வந்ததுன்னு தெரியலே! ஏன் வந்ததுன்னும் தெரியலை.

மூணாவது இன்ன முறைமை (முறைமைன்னா வரிசை. என்ன வரிசைலே எழுத்து இருக்கு? தொல்காப்பியர் சொல்றார்: அ-வுலே ஆரம்பிச்சு ன-வுலே முடி. இதெ விட்டுப் போட்டு, வேறே மாதிரி எழுத்து வரிசை எழுதாதேன்னு சொல்றாரு. ஆனா, இப்ப இருக்குற குறியேற்றக்காரங்கள்லாம் இதையெல்லாம் எங்கே படிக்குறாங்க? கன்னாப் பின்னான்னு ஏதோ ஒரு குறியேற்றத்தைச் செய்ஞ்சு போடவேண்டியது; அப்புறமா, "குறியேற்ற வரிசைங்குறது ஒண்ணு, அணிமுறை (collation) ங்குறது இன்னொண்ணு"ன்னு ஒரு சப்பைக்கட்டு கட்டி, ஒவ்வொரு மொழிக்கும் அணிமுறை ஒழுங்கைக் கொண்டார்றதுக்கு, ஒரு நிரலி எழுதி, சரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஏன்னா, நாமல்லாம் மர மண்டைங்க, பாருங்க.)

நாலாவது இன்ன அளபின (அளபு ன்னா அலகு - ஒரு unit. அகரமா, அதுக்கு ஓரளபு; ஆகாரமா, அதுக்கு ஈரளபு. க் ங்குற மெய்யா, அது அரையளபு, மகரம் சில இடத்துலெ, கால் அளபுன்னு விவரிச்சுக்கிட்டே போவாரு இந்தத் தொல்காப்பியர். அந்த ஒரு unit ங்குறது எவ்வளவு நேரம் ஒலிக்கணுங்குறதை இன்னோர் எடத்துலே வரையறை செய்வார்.)

ஐந்தாவது இன்ன பிறப்பின (இந்த எழுத்துக்கு ஒலி எங்கே பிறக்கோணும்? வாய்க்குள்ளே இருக்குற மேல் அண்ணத்தை எப்படித் தொடணும்? எங்கே தொடணும்? நாக்கு எங்கே? பல்லு எங்கே? எப்படி ஒலியை விடோணும்? எல்லாத்துக்கும் சின்னச் சின்னமா, ஒரு விளக்கம் கொடுப்பார்.)

ஆறாவது இன்ன புணர்ச்சிய (இந்த எழுத்துக்குப் பக்கத்தாலே, இன்னொரு எழுத்து வந்தா, முதல் ஒலி எப்படி மாறும்? இரண்டாவது ஒலி எப்படி மாறும்? கணக்கில்லாத காட்டுக்கள் இருக்கு. எல்லாத்துக்கும் விளக்கம் எழுத்ததிகாரம் தருது. இந்த எழுத்ததிகாரம் மட்டும் இல்லைன்னு வச்சுக்குங்க, கணியிலே பேச்சுத் தெரிப்பு - speech recognition செய்யுறது ரொம்பச் சரவலாய்ப் போயிருமுங்க. இன்னார் பேசுறார், என்ன பேசுறார் னு எப்படிங்க பொருள் விளங்கிக்குறது? கேக்குறதெல்லாம் நமக்குப் புரிஞ்சு போகுதுங்களா?)

ஏழாவது இன்ன வடிவின (இந்த எழுத்து என்ன வடிவிலே இருக்குன்னு சொல்றது. இங்கே தாங்க ஒரு டொக்கு. தொல்காப்பியர் காலத்துலே இரண்டு விதமான தமிழி எழுத்து இருந்திருக்கு. இரண்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் சிக்கல் இருந்திருக்கு. ஒரே எழுத்து, இரண்டு வேறே ஒலிகளுக்கு வடிவமா இருந்திருக்கு. (ஒரு தமிழி முறையிலெ, ககர அகரமும், ககர ஆகாரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்; இன்னொரு தமிழி முறையிலே, ககரமும், ககர அகரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்.) இது போக விந்தியத்துக்குத் தெக்கே கிட்டத் தட்ட ஒரே நேரத்துலே இரண்டு எழுத்து முறை (தமிழி I, தமிழி II) இருந்தா அது குழப்பம் தானே?

இது கல் - ஆ, கால் - ஆ, அப்படின்னு தெரியாம, குழம்பிப் போனா?

சாத்தன் ங்குற இடத்துலே த்த ங்குறதுக்கு புள்ளியில்லாமெ இரண்டும் ஒரே எழுத்தா இருந்தா? தடுமாற மாட்டோம்? "இல்லையில்லை, தமிழ்லெ தத ன்னு வராது; அது த்த என்றுதான் இருக்க முடியும்"னு கொஞ்சம் யோசிச்சிட்டுல்லே சொல்ல வேண்டியிருக்கு. இருந்தாலும் குழப்பம், குழப்பம் தான்.

இப்படி ஒரு குழப்பம் ஊரெங்கும் இருந்தது தொல்காப்பியர் போல படிச்சவங்களுக்கு ஒருப்பாடு இல்லைங்க. ககரம், ககர அகரம், ககர ஆகாரம் ஆகிய மூன்றிற்கும் வடிவுலே வேறுபாடு காட்டோணும்னு சொல்லி அவுங்க தான் புள்ளிங்குற ஒண்ணைப் பரிந்துரைச்சிருக்கோணும்னு இன்னைக்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அதனாலே, இப்படித் தாங்களே சில திருத்தம் சொன்னதாலே, இது தான் வடிவம்னு அழுத்தம் திருத்தமாச் சொல்லாமே, அவரோட ஆட்கள் பரிந்துரைச்ச திருத்தங்களை மட்டுமே தொல்காப்பியத்துலெ எடுத்துச் சொல்லிட்டு, தொல்காப்பியர் கொஞ்சம் வழுவிக்கிறாரு. இந்த ஆளு எமகாதனுங்க!

எட்டாவது இன்னின்ன தன்மைய (இந்த எழுத்துக்களுக்கு இன்னின்ன property இருக்குன்னு சொல்றது இந்த எட்டாவது வகை. இதிலும் தொல்காப்பியர் அமைதி காக்குறார்னுட்டு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் சொல்றாங்க.)

ஆகக் கடைசி ரெண்டு வகையிலே "கம்முன்னு கிட"க்கிறார் தொல்காப்பியர். எழுதுற போது அவருக்கென்ன சிக்கலோ? யாரு எதுத்தாங்களோ, தெரியலை.

இனி இரண்டாவது நூற்பாவுக்கு வருவோமா?

முன்னாடிச் சொன்ன மூணு அலங்கடை (=exception) ஆட்களைப் பத்திய நூற்பா இது.

2. அவைதாம்
குற்றியல் இகரம் குற்றியல் உகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன.

குற்றியல்னா குறுகி ஒலித்தல்னு பொருள். வேறே ஒண்ணுமில்லை, கூளைக் கத்திரிக்காய் மாதிரி ஒலியிலே சிறுத்தது; ஆனாலும், கடுகு சிறுத்துக் காரம் போகுமா?

குற்றியல் இகரம், குற்றியல் உகரம் எல்லாம் இப்பப் பேச்சுலே இருக்கான்னு கேட்டா, நிரம்பவே இருக்குன்னு தான் சொல்லணும். குறிப்பா, தரும மிகு சென்னையிலும், வட ஆர்க்காட்டுப் பேச்சிலும் நிறையவே இருக்கு; இன்னும் சொன்னாப் புது உருவம் எல்லா எடுக்குது. "இன்னாபா, வூட்லெ சொல்ட்டு வண்டியா!"ங்கிற போது, அந்த சொல்ட்டுலே, கடைசியா ஒரு டு வருது பாருங்கோ, அது குற்றியல் உகரம் தான். முழு உகரம் (முற்று உகரம்னு இலக்கணத்துலே சொல்லுவாங்கோ) இல்லை. குறைச்ச நேரமே, அரை மாத்திரை நேரமே, ஒலிப்பது சென்னைக்காரர்களுக்கு ஒரு வழக்கம். இங்கே எல்லாமே "போலாம், ரைட்" தான். இனி அப்பாலிக்கி, "வண்டியா"ங்குறதுலே, (vaNdia இல்லைங்க; சென்னைக்காரங்க மாதிரி சொல்லிப் பாருங்க) அந்த டி வருது பாருங்கோ, அது வேறெ ஒண்ணுமில்லை, குற்றியலிகரம். மெய்யாலுமே, அரை மாத்திரை தானுங்க அங்கே வருது. இன்னும் சொல்லப் போனா, குற்றியல் எகரம் கூடப் புதுசா வந்துரும் போலேருக்கு, இவுங்க பேச்சுலெ. அந்த "வூட்லெ" ங்குறதுலே, லெ - யக்கூட முழுசா பலுக்குறதுக்குச் சோம்பற் பட்டு இவுங்க அரை மாத்திரை ஆக்கிப் புடறாங்கோ. தமிழ் புதுசு புதுசா வளருதுப்பா.

இந்தக் குற்றியல் இகரத்துக்கும், உகரத்துக்கும் இந்தக் காலத்துலே தமிழ்லெ எந்தக் குறியும் இடுறதில்லை. இடம் பார்த்துச் சிலர் புரிஞ்சிக்கிறோம், பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை. இன்னா, செய்யுறது போங்கோ? நாம மொழியெ என்னைக்குத்தான் புரிஞ்சு காப்பாத்திருக்கோம்? ஆனா, மலையாளத்துலே ஓலைக்கட்டுகள்லே, சந்திர பிந்துன்னு ஒண்ணு இட்டதாப் பலரும் சொல்றாங்க. அது என்ன சந்திர பிந்துன்னு முழிக்க வேண்டாம். சந்திரன்னா பிறை. நிலாவோட மூன்றாம் பிறை மாதிரி ஒரு வளை கோடு. அந்த வளை கோட்டுக்கு நடுவுலே ஒரு புள்ளி. புள்ளியைப் பிந்துன்னு வடமொழி சொல்லும். (நெத்தியிலே பொட்டு வச்சுக்கிறோம் இல்லையா? அது பிந்து) ஆங்கிலத்துலே point னு சொல்லுவோம். வேறே ஒண்ணுமில்லே. பொள், போழ்-னா தமிழ்லே பிளந்து தள்ளுன்னு அருத்தம். "புள்ளுவதும், பொள்ளுவதும், போழுவதும், பிளப்பதுவும்" எல்லாமே குத்துறதுலே தொடங்குறது தான். புள்ந்தது, பொள்ந்தது, போழ்ந்தது, என்ற வினை புந்து, பொந்து, போந்து, பொட்டு (point) ன்னு பெயரா மாறிப் போகும். ஆக, வேர் தமிழில் இருக்கிறது. நாம தான் கண்ணை மூடிக்கிணு பார்க்க மறுக்கிறோம்.

இப்படி, பிறைப்புள்ளி போட்டு குற்றியல் இகரத்தை (டி போட்டு, மேலே கொஞ்சம் ஒதுங்கினாற் போல், பிறைப்புள்ளி இடவேண்டும்), குற்றியல் உகரத்தைக் காட்டும் பழக்கம் மலையாளத்திலும், நாஞ்சில், குமரி நாட்டுத் தமிழ் நூல்களிலும் உண்டு என்று தான் சொல்லுகிறார்கள். (எல்லா character க்கும் ஒருங்குறியிலே இடம் கொடுத்திருக்காக்கும், அது ரொம்ப principle ஆனது என்னு பரயும் கணிஞமாரே!, தமிழின் குற்றியல் இகரமும், குற்றியல் உகரமும் உங்க குறியேற்றத்தில் எவிடே போயி? சந்திர பிந்து என்ன குறி காணாது போயோ? :-))

அது செரி, அப்போழ் ஆய்தம்?

முதல்லே ஆய்தம் கிற பெயர் பற்றிச் சொல்லோணும். நூற்றுக்கு, தொண்ணுத்தெட்டு தமிழர்கள் அதை ஆயுதம் என்றே தவறாகப் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். எல்லாம் வடமொழியும், நகரியும் செய்த குழப்பம். தமிழாசிரியர்களும் அதைச் சரி செய்ததாகத் தெரியவில்லை. அது ஆயுதமும் அல்ல, கேடயமும் அல்ல. அது ஆய்தம்; ஆய்வு என்றால் நுணுகித் தேடுவது. கீரையை ஆய்ந்து கொடு என்றால், நுணுகிப் பார்த்து இலைகளைக் களைந்து கொடு என்று பொருள். ஆய்தம் என்பது நுணுகிய ககர ஓசை. அது வடிவில் புள்ளியால் ஆனது. எனவே அது ஆய்தப் புள்ளி.

இந்தக் காலத்துலே ஒரு புதுப் பழக்கம்; நானும் ஒரு காலத்துலே இதுக்கு அடிமைப் பட்டிருக்கேன். இந்த ஆய்தப் புள்ளியை, மந்திரப் புள்ளி போல் நினைச்சு, ப வுக்கு முன்னாடி ஆய்தம் போட்டா, F ங்குற ஆங்கில ஒலி வந்துரும்னு சொல்றோம். இது கொக்கு தலையிலே பனங்காய் வைக்குற மாதிரி. இதெல்லாம் முட்டாப் பயக வேலை. நமக்கு F ங்குற ஒலி வேணும்னு நினைச்சா, ஒண்ணு தற்பவமா, கம்பர் பண்ணின மாதிரி பண்ணோனும்; அவரு F-யை வகரமா மாத்திருவார். செருமானிய மொழிகள் பலவற்றிலே, குறிப்பா, டச்சு, விரிசியன் போன்ற மொழிகள்லெ இந்த F-V மாற்றம் நிறையவே உண்டு. அவுங்கள்லாம் அதைத் தப்புன்னு நினைக்கலை. இருக்குறதை வச்சு, இல்லாததைக் காட்டுங்குற மனப்பான்மை; நம்ம தமிழன் மட்டும் ஒரு மாதிரி. வெள்ளைக்காரன் ஒலியை வெள்ளைக்காரனை விடச் சிறப்பா ஒலிச்சுக் காட்டுனாத் தான் அவன் நம்மளைச் சேர்த்துப்பாங்குற வெறியிலே, F ங்குற ஒலியை அப்படியே பலுக்கணும்பான். அதைச் செய்யணும்னா, "கனடா C.R. செல்வக்குமார் ஒரு முன்னொட்டுக் குறிமுறையை பரிந்துரைச்சார். என்னைக் கேட்டா, வெள்ளைக்காரனை மிஞ்ச நினைக்குற தமிழர்கள் அவர் முறையைப் பின்பற்றலாம்".

எனக்கென்னவோ, கம்பரோட தற்பவ முறையே, இன்னைக்கும் பொருந்தும்னு தோணுது. நானு கொஞ்சம் கருநாடகங்க.

இந்த ஆய்தப் புள்ளிக்கு மூணு புள்ளி வைக்குற முறை இளம்பூரணர் காலத்துலே (கிட்டத்தட்ட 11ம் நூற்றாண்டு) வந்துருச்சு. ஆனா, கால வரிசையாப் பார்த்தா, முப்பாற் புள்ளிங்குறது அதுக்கு முன்னாடி இருந்ததுக்குக் கல்வெட்டுக்கள்லே சான்று கிடைக்கலைங்கண்ணா! இது தான் ரொம்ப வியப்பு. இன்னும் சொல்லப் போனா, ஒரு 2300, 2500 ஆண்டுகளுக்கு முன்னாடி, தமிழி எழுத்தின் ஆரம்ப கட்டத்துலேயும், குறிப்பாப் பெருமி(brahmi) எழுத்துலேயும், மூணு புள்ளியை முக்கோணமா இட்டா, அதை இ -ன்னு தான் ஒலிக்கணும். அப்ப, ஆய்தப் புள்ளி எப்படி இருந்திருக்கும்னு கேள்வி கேட்டா, எனக்கு மறுமொழி சொல்லத் தெரியலை. ஏதோ ஒரு விதப் புள்ளியா அது இருந்திருக்கோணும்னு மட்டும் சொல்லத் தெரியுது.

இவ்வளவு விவரத்தை வச்சிக்கிணு, இரண்டாம் நூற்பாவைப் பார்ப்போமா?

அதுலே முப்பாற் புள்ளின்ன உடனே, இளம்பூரணர் முதற்கொண்டு முக்கோணமாய் இருக்குற மூணு புள்ளிங்குற கருத்தையே எல்லோரும் கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லுறாங்க. ஆனா, கல்வெட்டைப் பார்த்தா ஒரு சான்றைக் காணோம். எனக்கென்னமோ, முக்கோண மூணு புள்ளிங்குறது சரின்னு படலை. ஆனா, நான் மரமண்டை, நான் சொல்ற கருத்தை யாரு கேட்பா?

முப் பால் புள்ளிங்குற கூட்டுச் சொல்லுலே, பால் என்பதற்குப் பக்கம் என்றே இவர்கள் எல்லாம் பொருள் கொள்ளுறாங்க. அது ஏன் வகையாக இருக்கக் கூடாது? பால் னா வகையின்னும் பொருள் இருக்கே? ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்னு 5 வகையைச் சொல்றோமே? குற்றியல் இகரத்திற்கான பிறைப்புள்ளி ஒரு வகை; குற்றியல் உகரத்திற்கான பிறைப்புள்ளி இன்னொரு வகை; நம்மால் இப்போது இனம் காணமுடியாத, ஏதோ ஓர் உருவம் கொண்ட, ஆய்தப் புள்ளி மூன்றாம் வகை.

நூற்பாவுலே வர்ற கடைசி வரி. எழுத்து ஓர் அன்ன = எழுத்தோடு சேர்ந்தது போல. அன்ன ன்னு சொன்னாப் போலன்னு அருத்தம். அன்னளகை = analogy. அன்னளகையாய் = analogous. அன்னளகைக் கருவிகள் = analog devices.

அடுத்த நூற்பாவுக்கு போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லோணும். முட்டாத் தனமா, ஒருங்குறிலே ஆய்தமும், நகரிலே வர்ற விசர்க்கமும் ஒண்ணுன்னு எழுதி வச்சிருக்காங்க. விசர்க்கம்கிறது ஓர் உயிர். அஹ் னு ஒலிக்கும். அது எல்லா மெய்யோடும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கும்.

ஃ என்பதும் உயிரும் இல்லை; மெய்யும் இல்லை. அது தனிக் கட்டுக்கூறு (category). அது உயிருக்கும் மெய்க்கும் நடுப்பட்டதுன்னு தான் தமிழிக் குறுங்கணக்குலெ நடுவுலே வச்சிருக்காங்க. யாப்புலெ (பாட்டுலே) மட்டும் சில இடத்துலே அது உயிர் மாதிரித் தோற்றம் காட்டும்; சில இடத்துலே மெய் மாதிரித் தோற்றம் காட்டும். கொஞ்சம் சிக்கலான ஒலி. எனக்குத் தெரிஞ்சு அந்த ஒலி, தமிழை விட்டு, டச்சுலேயும், விரிசியன்லேயும் இருக்கு; ஆனா, அங்கே அது மெய்யெழுத்து.

நல்லாக் குழப்பி விட்டுட்டேனோ?

அஃகேனம் கொஞ்சம் கவனமாக் கையாள வேண்டியது. இந்தக் காலத் தமிழ்லே அஃகேனம் முற்றிலும் மறைஞ்சிருச்சுன்னு தான் சொல்லோணும்.

அன்புடன்,
இராம.கி.

10 comments:

Anonymous said...

ஐய்யா, சிங்களவர் தமது மொழி எழு என்னும் மொழியில் இருந்து உருவானதாக கூறுகின்றனர். மேலும் இலங்கை தமிழரும் எழு தங்கள் பூர்வ மொழியென்றும் அது தமிழின் ஒர் திரிபென்றும் கூறுகின்றனர். இந்த எழு என்னும் மொழியை பற்றி தங்களுக்கு ஏதும் தெரியுமா?

Anonymous said...

ஐய்யா மேலும் இதையும் படித்தேன், அதாவது;

அதோட தாய் மொழிதான் ஒன்று அதாவது எழு மொழிதான் தமிழுக்கும் தெல்+எழு== தெல்லு ஆகி தெலுங்கு ஆனது என்கின்றார்களே அண்ணா?...

ஆனால் தமிழ் ஆராட்சியாளர்கள்.. தம்+எழு= தமெழு தமிழ் ஆகியதாயும். தமிழில் இன்னமும் 80% வீதமான எழு வார்த்தைகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.. ஆதிகால எழு மொழி பேசியவன் வந்தால் நாங்கள் பேசும் தமிழை அவனால் விலங்கிக் கொள்ளமுடியும் ஆனால் எழு+து== எழுது என்ற எழுத்தை அவனால் படிக்க முடியாதள்வு மாற்ரம் கண்டிருப்பதாய் சொல்கிறார்கள்...

G.Ragavan said...

அப்பாடி........எவ்வளவு தகவல்கள். இந்த ஆயுத எழுத்துப் பிழையை நானும் செஞ்சிருக்கேன். செஞ்சுக்கிட்டிருக்கேன். ஆய்த எழுத்து...புரிந்து கொண்டேன்.

இதோ pdf formatல் சேமித்து விட்டேன் இந்தப் பதிவை. :-)

குமரன் (Kumaran) said...

நிறைய தகவல்கள் ஐயா. மீண்டும் ஒரு முறை படித்து உணர்வில் ஏற்றிக் கொள்ள வேண்டும். மிக்க நன்றி.

Anonymous said...

//தமிழின் குற்றியல் இகரமும், குற்றியல் உகரமும் உங்க குறியேற்றத்தில் எவிடே போயி? சந்திர பிந்து என்ன குறி காணாது போயோ? :-)) //

அய்யய்யோ மண்டை வெடிக்குது, இது மலையாளமாங்க? :'(

//ஐய்யா, சிங்களவர் தமது மொழி எழு என்னும் மொழியில் இருந்து உருவானதாக கூறுகின்றனர். மேலும் இலங்கை தமிழரும் எழு தங்கள் பூர்வ மொழியென்றும் அது தமிழின் ஒர் திரிபென்றும் கூறுகின்றனர். இந்த எழு என்னும் மொழியை பற்றி தங்களுக்கு ஏதும் தெரியுமா?//

ஈழத்தில் தமிழ்தான் தொன்றுதொட்டு இருந்தது என்றால், அப்புறம் தமிழர்தான் தம் முன்னோர் என்பதை சிங்களவர் வாயால் ஏற்கவேண்டிய சூழல் வருமே ... அதுதான் இடைக்கிடை இப்பிடி எழு என்ற ஒன்றை இழுத்து உசுப்பி விடுறாக.

//அதோட தாய் மொழிதான் ஒன்று அதாவது எழு மொழிதான் தமிழுக்கும் தெல்+எழு== தெல்லு ஆகி தெலுங்கு ஆனது என்கின்றார்களே அண்ணா?...

ஆனால் தமிழ் ஆராட்சியாளர்கள்.. தம்+எழு= தமெழு தமிழ் ஆகியதாயும். தமிழில் இன்னமும் 80% வீதமான எழு வார்த்தைகள் இருப்பதாயும் சொல்கிறார்கள்.. ஆதிகால எழு மொழி பேசியவன் வந்தால் நாங்கள் பேசும் தமிழை அவனால் விலங்கிக் கொள்ளமுடியும் ஆனால் எழு+து== எழுது என்ற எழுத்தை அவனால் படிக்க முடியாதள்வு மாற்ரம் கண்டிருப்பதாய் சொல்கிறார்கள்...//

பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளு மலையாளம்
கண்டை நிகர் கன்னடம் எனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு.

தெலுங்கு - தெங்கு (தேன்)
கன்னடம் - கன்னல் (கரும்பு)
துளு - துளி (தேன்துளி)
தமிழ் - தமி (தன்னிகரில்லாதது), ழ் (இனிமை)
மலை - மலைத்தேன் , ஆளம் என்பது விகுதி

கன்னடம் என்பதற்கும் கருநடம் என்பதற்கும் தொடர்புகள் இருக்கலாம். இழு என்பதில் இருந்தே எழுத்து வந்தது, அதை இராமகியும் இங்கு ஒரு பதிவில் குறிப்பிட்டார்.


தமிழில் விசைப்பலகையை எவ்வாறு வடிவமைக்கலாம்? விசைப்பலகையில் உள்ளநாட்டு தமிழ் எழுத்து அனைத்தையும் போட்டுவிடுகிறார்கள். ஆனால் வெறம் 12 மெய்யும், ஆய்தமும், 18 மெய்யும் மற்றும் உயிர்மெய்க்கான குறிகளையும் இட்டு வடிவமைக்கலாம். அப்படியென்றால் , விசைப்பலகையின் மேல் பக்கத்தில் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிவடையும் வணண்சம் செய்வதா? ... விளக்குங்கள் சான்றோரே :(

Sivabalan said...

அய்யா,

பதிவுக்கு நன்றி.

கசி said...

குறியேத்துறதுன்னா என்னாங்க?

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

ஐயா என்று எழுதலாம், அல்லது அய்யா என்று எழுதலாம். இரண்டும் சரி, ஆனால் ஐய்யா என்பது பிழை. இதையெல்லாம் ஒதுக்கி எறீந்து, இராமகி என்று எழுதினாலும் எனக்கு ஏற்புடையதே.

இந்த எழு மொழி பற்றிய செய்தியைப் படித்திருக்கிறேன். சிக எழு, தம் எழு என்று இரு மொழிகளுக்கும் தொடக்கம் கூறும் செய்தி பற்றி யாரும் ஆய்வு செய்ததாகப் படிக்கவில்லை. இதை ஈழத் தமிழரோ, சிங்களக் காரரோ தான் உறுதி செய்ய வேண்டும்.

அன்பிற்குரிய இராகவன்,குமரன்,

பயனிருந்தால் மகிழ்ச்சி

அன்பிற்குரிய காக்கைபாடினி,

நான் அந்தப் பத்தியில் எழுதியது மலையாளமும் தமிழும் கலந்த நடை; திடீரென்று விளையாட்டாய் அந்த வாசகங்கள் வந்தன. மாற்றத் தோன்றவில்லை. நண்பரே, தமிழர் பலருக்கும் மலையாளம் தெரிந்து கொள்ளுவது பலன் தரும் என்றே நான் எண்ணுகிறேன். நமக்கு அருகில் வரும் தமிழிய மொழி.

எழு என்ற ஒன்று கதை என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இதைப் பற்றி ஏதேனும் ஆய்வு இருந்தால் தெரிந்தவர்கள் எழுதுங்கள்.

தமிழுக்கும் மற்ற தமிழிய மொழிகளான தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் போன்றவற்றிற்குமான உறவை வெறுமே இனிமை என்று சொல்லி விளையாட்டாய்ப் போய்விடலாம். அந்த உறவுகளை ஆய்வு பூர்வமாய் அறிவது நல்லது. பாவாணரின் திராவிட மொழிகள் என்ற பொத்தகத்தைப் படியுங்கள். இந்த மொழி உறவுகள் ஆழமானவை என்று அறியமுடியும். நமக்கு மிக நெருங்கியது மலையாளம் (அதே பொழுது மலையாளத்துக் காரர் தமிழ் படிக்கச் சரவலே கொள்ளமாட்டார்; நாம் கொஞ்சம் சரவல் படவேண்டும்.); அடுத்தது கன்னடம்; அதற்கும் அடுத்தது துளு. தெலுங்கு கொஞ்சம் தள்ளியது, குறிப்பாகத் தென்பாண்டி நாட்டாருக்கு. அதே பொழுது ஆர்க்காட்டார் தெலுங்கைக் கூடிய விரைவில் கற்றுக் கொண்டுவிடுவார்கள்.

கரு நடம் என்பதற்கும் கன்னடம் என்பதற்கும் தொடர்பு உண்டு. பொதுவாகக் குன்றுகளும் மேடுகளும் நிறைந்த பகுதி. கல் +நாடு = கன்னாடு, கன்னாடம், கருநாடம்.

ஒலியியல் விசைப் பலையில் (Tamil99) உயிரும் மெய்யும் மட்டுமே இருக்கும். உயிர் ஒருபக்கமும், மெய் இன்னொரு பக்கமுமாய், எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் தான் இருக்கிறது. ஒருமுறை பழகிப் பாருங்கள். இல்லையெனில் அஞ்சல் தட்டச்சு முறையும் (ஆங்கில எழுத்துப் பெயர்ப்பு முறை) பெரிதும் பயன்படுகிறது.

அன்பிற்குரிய சிவபாலன்,

கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய கிருஷ்ணா,

குடியேறுவது, குடியேற்றுவதுன்னா என்னாங்க?

குறியிடுவதுன்னா என்னாங்க?

வில்லேற்றுதல், அம்பேற்றுதல், அரசுகட்டில் ஏறுதல் - இதெல்லாம் என்னாங்க?

circulate, acutuate, propagate - இப்படிக் கணக்கில்லாத ஆங்கிலச் சொற்கள் ate என்றே முடிகிறதே, அந்த ate க்கு அருத்தம் என்னைக்காவது தேடியிருக்கீங்களா?

சொல்லாக்கம் என்பது தேடல். மொழிகளின் ஆழம் போய் முத்தெடுப்பது. முத்துக் குளிச்சுப் பாருங்க! அவ்வளவு எளிதான வேலையில்லை.

code, coding, codify, codificate, codification, encoding - கொஞ்சம் யோசிங்க!

அன்புடன்,
இராம.கி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பின்னூட்டத்தில் நீங்கள் தமிழ்நெட்99 விசைப்பலகை குறித்துக் குறிப்பிட்டிருந்தீர்கள் என்பதால் அது குறித்து என் கருத்து..இந்த பலகையை யார் என்ன அடிப்படையில் வடிவமைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், அருமையான பலகைங்க..தமிழ், ஆங்கிலம் இரண்டு தட்டச்சு முறைகளையும் நான் institute போய் கத்துக்கல..7 ஆண்டா ஆங்கிலப் பலகைய தட்டுத் தடுமாறி அடிச்சுப் பலகி ஒரு வேகம் வந்திருக்கு. ஆனா, தமிழ்நெட் பலகைய ஒரு ஆண்டா தான் அடிக்கிறேன். அபார வேகமா தட்டச்ச வருது..இது தமிழின் எழுத்துக்களின் ஒழுங்கில் அமைந்த விந்தையா இல்லை விசைப்பலகை வடிவமைப்பின் அருமையா தெரியவில்லை. ஏதோ உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தததால் சொல்கிறேன். பின்னூட்டத்தை பதிப்பிக்கா விட்டாலும் பரவாயில்லை :)

உங்கள் சென்னை தமிழ் நடை அம்சமா கீது பா ;)

இராம.கி said...

தமிழ்நெட் 99 குயவுப் பலகையை கிரசெண்ட் பொறியியற் கல்லூரிப் பேராசிரியர் வி.கிருஷ்ணமூர்த்தியின் அறந்தைப் பலகையில் இருந்து சற்று மாற்றி அமைத்தார்கள். அந்தப் பலையின் வடிவமைப்பு அருமையானது.

சென்னைத் தமிழ்நடை வரும் தான்; இது போல இன்னும் சிலநடைகளிலும் பழக்கம் உண்டு.

பலநேரம் வட்டார நடைகளை எழுதும் போது, அவை ஒரு சிலரைக் கவருகின்றன; ஆனால் அவை தெரியாதோர் சரவற்பட்டுப் போகிறார்கள். இந்த என் வட்டார நடையை மாற்றிப் பொதுத் தமிழ்நடையில் எழுதுமாறு ஒன்றிரண்டு பின்னூட்டுக்களும் இந்தத் தொடருக்கு வந்திருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி.