Thursday, November 10, 2005

அளவுச் சொற்கள் - 2

முன்னால் இட்ட பதிவில் பதினேழு சொற்கள் வரை பார்த்திருந்தோம். இனி macro என்னும் பதினெட்டாவது சொல்லிற்குப் போவோம். இந்தச் சொல், முன்னர் பின்னூட்டின் வழியாக நண்பர் ஒருவர் கேட்ட சொல். இது பல இடங்களில் முன்னொட்டாகவும் புழங்குகிறது. macroscopic என்ற சொல்லாட்சி நினைவிற்கு வருகிறதா? macro என்பதற்கு இணையாக மாக, மாகிய ஆகியவற்றைச் சொல்லலாம். முன்னரே சொன்னது போல் மாத்தல் என்ற வினை, தமிழில் அளத்தலைக் குறிக்கும் வினைச்சொல். தவிர, மா என்ற ஓரெழுத்தொரு மொழி "பெரியது" என்ற பொருளையும் குறிக்கும். "மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்" என்ற பழைய திரைப்பாடல் வரி நினைவிற்கு வருகிறதா? அதில் வரும் மா என்ற முன்னொட்டு "பெரிய" என்ற பொருளைக் கொடுக்கிறது. அளத்தலில் இருந்து நீட்சி பெற்ற கருத்துத் தான் பெரிது படுத்தல் என்பதும்.

மதித்தல் என்ற வினைகூட இந்த மாத்தலில் இருந்து பிறந்தது தான். macro size என்பது பெரிது படுத்தப்பட்ட அளவு. மாத்தல் என்ற பிறவினைக்கு இணையான தன்வினை மாதல்; மா ஆகுதல் > *மாகுதல் > மாதல். சொல்லைப் பலுக்கும் எளிமைக்காக குகரம் நம்மிடையே இயல்பாய் உள்நுழையும். பகுதல் என்ற பிரிப்பு வினை பாதல் என்றும் பின் நெடிலாக உருமாறிப் பாகுதல் என்றும் வருவதைப் போல இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மொழி என்பது பொதுவாக நெகிழ்வானது; அது திண்ணியதாய் இருந்து விட்டால் அப்புறம் வளர்ச்சியில்லை. அங்கும் இங்குமாய் அது நீளும் போதும், திரியும் போதும் புதிய பயன்பாடுகள், புழக்கங்கள், பொருட்பாடுகள் அதற்கு வந்து சேருகின்றன. மிகுந்து ஊற்றுவதை மகுந்து ஊற்றுவதாக எங்கள் சிவகங்கை வட்டாரத்தில் சொல்லுவார்கள். மக ஈசன் மகேசன் என வடமொழிப் புணர்ச்சியில் வரும். அதைக் கொஞ்சம் நீட்டி மாகேசன் என்றும் சொல்லுவார்கள். மக்கள் என்ற சொல்லை நீட்டி மாக்கள் என்று திரித்து இன்னொரு வகையினரைக் குறிப்பார்கள். மக்களைக் காட்டிலும் மாக்கள் கொஞ்சம் உடலால் பெரியவர்கள். மா என்ற ஈறு விலங்கைக் குறிக்கும். விலங்கைப் போன்று வலிமை கூடி இருப்பவர்கள் மாக்கள்.

மாகுதல் என்ற வினை அடிப்படையில் மாதல் போன்ற பொருள் கொண்ட வினைதான். மொழி நீட்சியில் அதைப் புழங்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நான் கருதுகிறேன். மாக, மாகிய என்னும் பெயரடைகளைச் சொல்லும் போது மாகுதல் என்ற வினை வாகாய் அமையும்.

macro meter = மாக மாத்திரி அல்லது மாகிய மாத்திரி. இது "பெரிய மாத்திரி" என்ற பொருளைக் கொள்ளும். மீட்டர் என்ற மேலைச்சொல் கூட அளவுதல் வினையின் வழி செந்தர அளவுகோலான மாத்திரியைக் குறிக்கும். மாத்திரி என்ற அடிப்படைச் சொல்லோடு "மாக" என்பது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு முன்னொட்டுக்கள் சேரும். அந்த முன்னொட்டுக்களை எல்லாம் அடுத்தடுத்த சொற்களில் இந்தப் பதிவில் பார்ப்போம். மாக என்ற சொல்லிற்குள் ரகரம் உள்நுழைவது இந்தையிரோப்பியப் பழக்கம்.

இந்தையிரோப்பியம் முதலா, தமிழியம் முதலா என்ற ஆட்டத்திற்குள் நான் வர விரும்புவதில்லை. ஏனென்றால் பலரும் உணர்ச்சி வயப்பட்டு தடம் மாறிப் போகிறார்கள். ரகரம் நுழைவது, யகர, வகரங்கள் நுழைவது இன்னும் இது போன்ற சொற்திரிவு விதிகளைப் புரிந்தால் தான், இந்தையிரோப்பியம், தமிழியம் ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையே உள்ள இணைச் சொற்களை இனங் காணலாம் என்று மட்டுமே நான் சொல்லுகிறேன். எது முதல் என்ற ஆட்டத்தில் பல வடமொழியாளர்கள் போய், நம்மைக் காயடித்தது ஒரு காலம்; நாமும் அதே ஆட்டத்தில் உள் நுழைந்து, ஆற்றலை வீணாக்கி, உணர்ச்சி வயப் பட்டு, இந்த ஒப்புமைகளை மறந்து தொலைக்க வேண்டாம். இப்போதைக்கு மாக, மாகிய என்பது macro என்பதற்கு இணையான சொற்கள் என்பதோடு அமைவோம்.

பத்தொன்பதாவது, magnitude என்பது. தமிழில் எண்மானம், பிடிமானம், அவமானம், தன்மானம் எனப் பல்வேறு மானச் சொற்கள் உண்டு. அதில் வரும் மானம் எதைக் குறிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? எல்லாமே அளவு என்பதைக் குறிக்கிறது. எண்மானம் என்பது எண்ணின் அளவு. பிடிமானம் என்பது பிடிப்பின் அளவு. கொஞ்சமாவது பிடிமானம் இருக்க வேண்டும் என்று சொல்லும் போது அந்தக் கொஞ்சம் என்ற கருத்து உள்ளூற அளவுக் கருத்தை உணர்த்துகிறது இல்லையா? அவத்தின் மானம் அவமானம். அவம் என்பது கீழ் நிலைமை. "அவலா கொன்றோ, மிசையா கொன்றோ" என்ற புறநானூற்று வரியில் அவல் என்பது கீழ்நிலை இடத்தைக் குறிக்கிறது. அவலில் இருக்கும் நிலை அவம். (பல இடங்களில் லகரமும், மகரமும் தமிழில் போலி.) தன்னைப் பற்றிய அளவு தன்மானம். "தான் இப்படியானவன்; இதைத் தாங்க மாட்டாதவன்" என்னும் போதும் அளவுகோல் வந்து விடுகிறது. இங்கே சொன்ன எல்லாமே magnitude என்பவைதான். மானம் என்ற சொல் இதைத் தான் குறிக்கிறது. மா என்ற சொல்லிற்கே ஒரு வேலியில் 20ல் ஒரு பங்கு = 1/20 என்ற பொருளும் உண்டு. அளவிடுகின்ற செயலை மானித்தல் என்று தமிழில் சொல்லுவோம்.

இருபதாவது சொல் magnify என்பதாகும். இங்கே வெறும் அளவு மட்டும் இல்லாமல், பெரியாதாக்கும் பொருளும் இருக்கிறது. மானப் படுத்து என்றால் பெரியதாக்கு என்ற பொருள் சட்டென்று தோன்றாமல் போகலாம். எனவே இதைப் மாகப் படுத்து என்று சொல்லுவது இணையாய் இருக்கும்.

இருபத்தொன்றாவது சொல் major; இது பெரும்பாலும் பெயரடையாக வருகின்ற சொல். மேவுதல் என்ற வினை உயர்ந்து கிடத்தல் என்ற பொருளைக் கொடுக்கும். பெயரடையில் மேவு, மேவிய என்றும், தனிப்பெயராக வரும்போது மேவர் என்றும் சொல்லலாம். இதைப் போலியாய்த் திரித்து மேயர் என்றும் சொல்லலாம். ஆனால் அதை major என்பதின் ஆங்கிலத் திரிவான mayor என்பதற்கு வைத்துக் கொள்ளலாம். Army major யை "அரண மேவர்" என்று சொல்லலாம். அரணம் தான் வடமொழி வழக்கில் இராணுவம் என்று திரிந்திருக்கிறது. நாட்டு அரணைக் காப்பாற்றும் பெரும்படை அரணம் என்று சொல்லப்படும். அரத்தம், இரத்தம் ஆனது போல் அரங்கனை, ரெங்கனென்று சொல்லுவதைப் போல், பல ஒலிப்பு மாற்றங்களை எண்ணிப் பார்க்கலாம்.

இருபத்திரண்டாவது சொல் majority; மேவுதலில் இருந்து இதை மேவுதி என்று சொல்லலாம். மேதகை, மேன்மை என்னும் போது உயர்ச்சி என்ற பொருளே வந்து இங்கே எண்ணளவில் கூடி இருக்கும் தன்மை புலப்படாமல் போகலாம்.

இருபத்தி மூன்றாவது many; இதைப் பல என்றே வழக்குத் தமிழில் பயில்கிறோம். கூடவே நனி என்ற பழைய சொல்லைப் புழக்கத்தில் கொண்டுவந்து, சொல்லின் இணை தன்மையை ஆழ்ந்து உணரலாம். நனி என்பதைப் பயிலாமல் போனால் பின்னால் பலருக்கும் அது புரியாமல் போகலாம்.

இருபத்தி நாலாவது mass; இது மிகவும் சரவற் படுத்துகிற சொல். தமிழில் இன்னும் நிறை என்றே பலரும் சொல்லி வருகிறார்கள். நிறை என்பது நிறுத்தல் என்ற வினையில் இருந்து பெறப்பட்ட பெயர்ச் சொல்லானால் அது எடையைத்தான் குறிக்கும். (எடுத்தது எடை; நிறுத்தது நிறை. இரண்டுமே weight என்பதைக் குறிக்கும் சொற்கள்.) இன்னொரு விதத்தில் நிறைந்தது என்ற வினையில் வருகின்ற நிறை என்னும் பெயர்ச்சொல் filling என்ற பொருட்பாட்டைத் தான் குறிக்கும். இதில் பெறப்படும் கருத்து volume என்னும் முப்பரிமானம்.

volume என்பதைக் கீழே பார்ப்போம். அறிவியலில் volume என்பதற்கும், mass என்பதற்கும், weight என்பதற்கும் வேறுபாடு காட்டிய பின் தான் சிந்தனை பெரிதும் வளர்ந்தது. தமிழில் இன்னும் இதைச் சரியாக உணர்த்திக் காட்டாது இருக்கிறோம். இந்தப் பொருள் கனமாக இருந்தது என்னும் போது அது weight ஆக இருந்தது என்று பொருள். அதே பொழுது ஒரு பொருளின் கன அளவு என்றால் அதன் volume யைக் குறிப்பிடுகிறோம். இந்தக் குழப்பம் நெடுநாள் நம்மிடம் இருக்கிறது. தவிர, mass என்பதை எப்படிக் குறிப்பது என்றும் ஒரு தெளிவில்லாமல் இருக்கிறோம்.

உலகம் என்பது பொருட்களால் ஆனது; இந்தப் பொருட்கள் வெளி(space)யில் இருக்கின்றன. விரிந்து கிடக்கும் வெளியில் ஒரு பொருள் அடைந்து கிடக்கும் இடம் அதன் volume. இது கிட்டத்தட்ட ஒரு கலன் போன்றது. mass என்பது அதனுள் நிறைந்திருக்கும் பொருள். ஒரு கலனுக்குள் வெவ்வேறு பொருட்களை அடைக்கலாம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு mass யைக் காட்டலாம். mass என்பதன் தன்மையைப் (massyness) பொருண்மை என்று தமிழில் குறிப்பார்கள். பொருள் இருக்கும் தன்மை பொருண்மை. இது உண்மையில் density என்பதோடு தொடர்பு உள்ளது. ஆனால் பொருண்மையும் அடர்த்தி என்பதும் வெவ்வேறு என்றும் சிலர் தெளிவில்லாமல் சொல்லுவார்கள்.

உண்மையில் mass என்பதைக் குறிக்கத் தமிழில் தனிச்சொல் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம் என்று தான் நான் சொல்லுவேன். அடிப்படைச் சொற்களை அதன் ஆளுமை, அகலம் பார்க்காமல் மேலோட்டமாய்ப் புழங்கிக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணம் எனக்கு நெடுங்காலம் உண்டு. mass என்பதைப் பொருள் என்று சொன்னால் துல்லியம் வரவில்லை. ஏனெனில் பொருள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு இன்னும் பல பொருட்பாடுகள் உண்டு. பொருண்மை என்றால் அது density யைக் குறிக்கிறது. உண்மையில் An object has a mass வரியைத் தமிழில் எப்படிச் சொல்லுவோம்?

"அங்கே பார், மொது மொது என்று மொத்தையாய் இருக்கிறான்; அவள் மொது மொது (>மத மத) என்று வளர்ந்திருக்கிறாள்; மொதப்பான (>மதர்ப்பான) உடம்பு; " - என்ற இந்த ஆட்சிகளில் எல்லாம் mass என்ற பொருட்பாடு உள்ளே இருக்கிறது. இந்தச் சொல்லாட்சிகளுக்குத் தொடர்பாய், மொதுகை என்ற சொல்லை mass என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை. massive என்பதை மொதப்பு (>மதர்ப்பு), மொதுகையாய் என்று சொல்லலாம். density, volume போன்றவற்றைப் பின்னால் கீழே சொல்லுகிறேன்.

இருபத்தைந்தாவது சொல் maximum; மிகுந்து கிடப்பதின் நெடில்வழக்கு மீது கிடத்தல். மீ என்னும் ஓரெழுத்தொரு மொழியைப் பயன்படுத்தி மீகுமம் என்ற சொல்லைப் பயிலலாம். இதற்கு எதிரான minimum என்ற சொல்லைக் கீழே பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, November 03, 2005

ஒண்ணா, ஒன்னா?

தமிழில் எண்ணுப் பெயர்கள் பற்றி புதிய நோக்கில் கண்டறிந்த சில விளக்கங்களை எழுத வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் எனக்கே அந்த விளக்கங்கள் முற்றிலும் நிறைவு கொள்ளாத காரணத்தால் அப்படி எழுதவொட்டாமல் தள்ளிக் கொண்டே போனது. ஆனால் அலை எங்கே ஓய்வது? கடலுக்குள் எப்போது போவது?

முன்பு ஒருமுறை மடற்குழுவில் நண்பர் சடையன் சாபு இலக்கமும் கோடியும் பற்றி எழுதக் கேட்டபோது, இனியும் தள்ளிக் கொண்டே போவது சரியல்ல என்று உணர்ந்தேன். ஆனாலும் எழுத இயலாமல் தள்ளிக் கொண்டே போனது. பின்னால் அந்தக் கட்டுரை பாதியில் நின்று போனது. இப்பொழுது அலெக்ஸ் பாண்டியன் ஒன்னு அல்லது ஒண்ணு என்பதில் எது சரி என்று கேட்டிருந்தார். பாதி நின்று போன என் கட்டுரையில் இருந்து "ஒன்று" பற்றிய பத்திகளைத் தனியே எடுத்து இங்கு ஒரு பதிவாகத் தருகிறேன். திரு. அலெக்ஸ் பாண்டியனுக்கு நேரடியாக மறுமொழி சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.

தமிழ் எண்களைக் குறிக்கும் சொற்கள் எழுந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சொல்ல முற்படுகிறேன். இதைப் பற்றிச் சிலகாலம் ஓர்ந்து பார்த்த பொழுது, தமிழிய மொழிகள், மேலை மொழிகள், வட இந்திய மொழிகள் என எல்லாவற்றிலும், எண்கள் பற்றிய சொற்களில் ஓர் அடிப்படை ஓரிமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.

முதலில் ஒன்று என்ற சொல்லை பார்ப்போம். இதைத் தமிழகப் பேச்சு வழக்கிலும், மலையாளத்திலும் ஒண்ணு என்றும் ஈழத்துப் பேச்சு வழக்கில் ஒண்டு என்றும், கன்னடத்தில் ஒந்து என்றும் சொல்லப் படுகிறது. தமிழில் றகரமும், னகரமும் முந்து ஒலிகள் அல்ல. எழுத்து வரிசை ஏற்பட்டு வெகுநாட்கள் கழித்தே எழுத்து வரிசையின் இறுதியில் றகர, னகரங்கள் சேர்க்கப் பட்டன. விலங்காண்டி காலத்தில் தோன்றிய இயல் மொழி தமிழ் என்றால், றகரமும், னகரமும் சேர்ந்து வரும் அடிப்படைச்சொற்கள் முதலில் வேறு இணை எழுத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எழுத்துத் தமிழில் ன்று என்று முடியும் ஈறு பெரும்பாலும், பேச்சுத் தமிழின் மீ திருத்தமாகவே காட்சியளிக்கிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால், ஒன்று என்ற சொல்லின் முந்து வடிவம் ஒண்டு/ஒந்து என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒண்ணு என்பதும் ஒண்டு என்பதின் மெல்லினத் திரிபே. தமிழில் இருக்கும் வலிவுச் சொற்கள், மலையாளத்தில் திரிந்து மெலிவுச் சொற்களாக மாறுவது போன்றே இதைக் கொள்ள வேண்டும். (வந்து>வந்நு).

ஒண்டு என்பது ஒந்து என்று ஆனதும் இயற்கையே. டகர ஒலிகள் வடக்கே போகப் போக தகர ஒலிகளாய் மாறும். ஒண்டு என்ற தமிழ்ச் சொல் தெலுங்கில் ஒகட்டி, கன்னடத்தில் ஒந்து, மலையாளத்தில் ஒண்ணு எனத் தமிழிய மொழிகளில் திரிந்து வரும்.

இனி ஒண்டின் முந்தைய வடிவம் பார்ப்போம். உகரம் ஒகரமாகத் திரிவது பேச்சுத் தமிழில் மிக இயற்கை; பல சொற்களை இதற்குக் காட்டாகச் சொல்லலாம். (உன் ஊர்>ஒன் ஊர்; உடன் வருவது>ஒடன் வருவது) அந்த முறையிலேயே உண்டு>ஒண்டு>ஒன்று என்று இந்தச் சொல் திரிந்தாகக் கருதத் தோன்றுகிறது. இனி உண்டு என்பதின் பொருளை இனங் காண முயலுவோம்.

ஆ என்ற வாயொலி அங்காத்தலையும், அவ்>அவ்வு எனும் ஓசையின் திரிவான ஊ என்னும் வாயொலி அங்காத்த வாய் மூடுவதையும் குறிக்கின்றன. இந்த வாயொலியின் வளர்ச்சியாய் வாயின் உள்ளே உணவு போகும் வினையைக் குறிக்க ஊ>*ஊள்>உள் என்ற ஓரசைச் சொல் எழுந்தது. இந்தச் சொல் இன்னும் வளர்ந்து *ஊள்>ஊண் என்பது வாயின் உள்ளே போகும் உணவைக் குறிக்கிறது. இந்தச் சொல்லே இன்னும் வளர்ச்சி பெற்று ஊண்>உண்>உணவு என்றும் திரியும். உண்ணுவது என்ற வினைச்சொல் உண்டுவது என்றும் ஆகும். (நான் உண்டேன்.) உண்டு என்ற சொல் சற்றே திரிந்து உண்டி என்ற பெயர்ச் சொல்லையும் கிளைவிக்கும். இந்த உண்டு என்ற சொல் முதலில் விலங்குகளின் வழி கிடைக்கும் ஊனையே குறித்திருக்க வேண்டும். விலங்காண்டி காலத்து மாந்த உணவெல்லாம் பெரும்பாலும் ஊனே ஒழிய மரக்கறி அல்லவே? நெடுநாட்கள் கழித்து, "இதை விலக்கு, அதை விலக்கு" என்று ஊனைத் தவிர்க்கும் மனத் தடைகளுக்குப் பிறகே, மாந்தன் ஊனைக் குறைத்து மரக்கறியைச் சாப்பிடத் தொடங்கினான். வெவ்வேறு கால மாந்தர்களின் கவாலக் (கபாலம்) கொண்மையை அளந்து, அதன் வளர்ச்சியையும் உன்னித்துப் பார்த்த மாந்தவியல் அறிஞர்கள் ஊனைச் சாப்பிட்டதாலேயே மாந்தனின் மூளை அளவு பெருகியது என்று கூறுகிறார்கள்.

ஆக ஒண்ணு/ஒண்டு என்பதின் உட்பொருள் உணவு/ஊன் என்றே பொதுவாகவும், விலங்கு இறைச்சி என்பதை விதப்பாகவும் குறித்திருக்க வேண்டும். ஊனின் திரிபாக ஒன்/ஓன் என்ற சொல் இலத்தீன் வழி மொழிகளில் புழங்குகிறது.

இனி, *ஊள்+து>ஊட்டு என்று ஆகும்; ஊணை உள்ளே தள்ளுவதை, இன்னொருவருக்கு உட்செலுத்துவதை ஊட்டுவது என்று நாம் சொல்லுகிறோம். ஊட்டு என்ற சொல் பெயராகவும் வினையாகவும் இருக்கிறது. அதே போல உண்டு என்பதையும் பெயராகக் கொள்ள முடியும். ஏனெனில் உண்டு+இ>உண்டி என்ற சொல்லாட்சி ஏற்பட்டிருக்கிறது. இது போல ஊட்டு+இ>ஊட்டி என்பதும் உண்ணப் படுகிற உணவையே குறிக்கும். ஊட்டி>உகட்டி என்று திரிந்து, பின் ஒகட்டியாகி தெலுங்கில் ஒன்றைக் குறிக்கும். மெய்யும் நெடில் உயிரும் சேர்ந்த ஒரு நேரசை (CV) அதே மெய்யோடு குறில் உயிர் சேர்ந்த அருகே ஒரு ககரமும் சேர்ந்து (Cvக) ஆகத் திரிவது தமிழில் மிகமிக இயற்கை. இந்த முறையில் திரிந்து வந்த ஒகட்டி மேலும் திரிந்து ஒகத்தியாகி பின் எகத்தி>ஏக்தி என்று பாகதத்தில் பிறழ்ந்து ஏக் என்று அவப் பிரம்சம்களில் சிதையும். வட இந்திய மொழிகளில் ஏக் என்று பிறழ்ந்த விதம் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? சங்கதத்தில் ஏக் என்பது ஏகம் என்று நீளும். சங்கதம் என்பது வட இந்திய வட்டார வடமொழிகளின் கலவையில் இருந்தி திருத்திப் புலவோரால் ஒழுங்கு செய்யப் பட்ட மொழி. இந்திய மொழியில் இதைத் தலை கீழாகப் புரிந்து சங்கதத்தில் இருந்து அவப் பிரம்சங்கள் பிறந்தன என்று சொல்லுவது போகாத ஊருக்கு வழி தேடும் கதை. வட்டார வழக்குகளில் இருந்து செந்தமிழ் பிறந்தது என்று கொள்ளாமல் செந்தமிழில் இருந்து வட்டார மொழிகள் பிறந்தன என்று சொல்லுவது எத்துணை தவறோ அத்துணை தவறு இப்படித் தலை கீழாகப் புரிந்து கொள்ளுவது ஆகும். இதைச் சொன்னால் பலருக்கும் கோவம் வருகிறது. அதற்கு என்ன பண்ண முடியும்?

ஊனில்லாமல், உள்ளிடாமல், ஒன்று இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒண்ணு சரியா, ஒன்னு சரியா என்றால் ஒண்ணு என்பது முதலில் வந்திருக்க வேண்டும். ஒன்னு என்பது பின்னால் வந்திருக்க வேண்டும். இந்த இரண்டு விதமான பலுக்கல்களும் இனியும் தொடரும் என்றே எண்ணுகிறேன். ஒருவேளை ஒண்ணு என்பதற்கு அழுத்தம் கொடுக்கலாமோ என்று தோன்றுகிறது. அதே பொழுது தமிழில் எது நிலைக்கும் என்பது 7 கோடிப் பேரின் மொத்தப் புழக்கத்தில் அல்லவா இருக்கிறது?

அன்புடன்,
இராம.கி.

Tuesday, November 01, 2005

அளவுச் சொற்கள் - 1

அண்மையில் என்னுடைய வலைப்பதிவில் ஒரு நண்பர் கொடுத்த பின்னூட்டில் "micro, macro, mega போன்றவற்றை தமிழில் எப்படி விதப்பாகச் (specific) சொல்லுவது?" என்று கேட்டிருந்தார்.
----------------------------------------
அவர் கேட்டிருந்த சொற்கள் எல்லாம் அளவுக் கருத்து பற்றிய முன்னொட்டுச் சொற்கள். அளவுச் சொற்களைக் கையாளும் போது நம்முடைய பேச்சில் தகுதி (quality), எண்ணுதி (quantity) என்ற இரண்டிலுமாய்த் துல்லியம் காண வேண்டும். ஆங்கிலத்தில் அளவு பற்றிய பல்வேறு முன்னொட்டுச் சொற்களை அடுக்கி, இடத்திற்குத் தகுந்தவாறு, பயன்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளும் நாம், தமிழ் என்று வரும் போது மட்டும், பொதுமையான சில அளவுச் சொற்களைத் தெரிந்து கொண்டு, விதப்பானவற்றை அறிய மாட்டேம் என்கிறோம். அளவு பற்றிய எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே வைத்து ஏதோ ஒரு வகையில் ஒப்பேற்றி விடுகிறோம். பொதுவாக நம்முடைய மொழியைக் கையாளுவதில் நமக்கு ஓர் அலட்சியம் இருக்கிறது, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொல் தொகுதியை கூட்டிக் கொள்ளாதே இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். (இதை மிகுத்துச் சொன்னால் பலருக்கு என்மேல் கோவம் வரக்கூடும்.) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு தருகிறேன். இந்த வாரம் திண்ணை வலையிதழில் ஒரு நேர்காணல் உரையாடலில் பங்காளர் ஒருவரின் வாசகம் படித்தேன்.

"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."

இதைப் படித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்நாளைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஏன் இந்த அளவு தமிங்கிலம் பயில்கிறார்கள்? இதில் என்ன தமிழில் சொல்ல முடியாத பெரிய கலைச்சொல் பொதிந்து கிடக்கிறது?

"நான் என்ன நினைக்கிறேன்னா, எது செந்தமிழ், எது சாதாரணத் தமிழ்னு தெளிவா அடையாளம் காணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் செந்தமிழ்க்காரர்கள்ன்னு தான் சொல்ல முடியும்"

என்று கூட ஒரு தமிழறிந்த கூட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தமிங்கிலம் இவர்களுக்குப் பழகிப் போகும் என்றால், அப்புறம் இன்றையத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசி இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பேசாமல் குமரியில் மூன்று தடவை சுற்றிவந்து இந்தத் தமிழ் என்னும் மொழியைத் தூக்கி எறிந்துவிடலாமே? அதைவிடுத்து ஏன் இப்படிச் சல்லியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?

பொதுவாக இந்தப் பழக்கம் ஒரு நோய் போலவே நம்மில் மிகுதியானவரைப் பீடித்திருக்கிறது. தமிங்கிலம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து என்றைக்கு அதற்கு முடிவு கட்டுவோம்?
-----------------------------------------
நண்பர் கேட்ட சொற்களோடு இன்னும் சில தொடர்புள்ளவற்றைச் சேர்த்து இங்கே கொடுத்திருக்கிறேன். பதிவை இரண்டு பகுதிகளாக்கி அனுப்புகிறேன்.

அளவு என்ற பெயர்ச்சொல் அள்ளுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்தது. அள்ளுதல் என்பது முதலில் நெருங்குதலைக் குறித்துப் பின் சேர்த்தல் அல்லது கூட்டுதல் என்ற பொருளைக் குறிக்கும். அள்ளுதலில் இருந்து அள்+து>அட்டு>அட்டுதலும், அட்டு>அடு>அடுதலும் பிறக்கும். அட்டுதல் என்பது சேர்த்தல் என்ற பிறவினையைக் குறிக்கும். அடுதல் என்பது சேர்தல் என்ற தன்வினையைக் குறிக்கும். அடுதல் என்ற தன்வினையில் இருந்து அடுவித்தல் என்ற இன்னொரு பிறவினை பிறக்கும். அட்டுதலும் அடுவித்தலும் ஒரே பொருள் கொண்டவை தான். கூட்டுதல், சேர்த்தல் என்றே இவை பொருள்படும். அடுவித்தல் என்ற சொல், பலுக்கச் சோம்பலில் அதுவித்தல்>அதியித்தல்>அதித்தல் என்றும் திரியும். to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல். please add 2 and 3; 2 யையும் 3 யையும் கூட்டு. addition = கூட்டல், அடுவம், அதியம் additive = கூடுதலான, அதிவான

கூட்டுதல் என்ற பொருளில் உள்ள தொகுதியில் நான் முதலில் எடுத்துக் கொள்ளும் சொல் ample; இதற்கு இணையாய் அமலை என்று தமிழில் சொல்லலாம். "அவனும், நானும், எல்லோரும்" என்று ஓர் உம்மைச் சேர்த்துச் சொல்லுகிறோம் இல்லையா? அந்த உம் என்னும் இடைச்சொல் கூட்டப் பொருளைச் சுட்டிக் காட்டும். உம்முதல் என்பது சேருதலே. உம்முதல்>அம்முதல் என்று திரியும். அம்முதல்>அம்புதல்>அப்புதல் என்பதும் ஒன்றின் மேல் ஒன்றை சேர்த்துக் கொண்டு வருவதைக் காட்டும். அம்முதலில் இருந்து பிறந்த சொல் அமலை. செறிவுப் பொருளைக் காட்டும். இது தவிர மிகுதி என்ற பொருளையும் திவாகரம் காட்டும். மெல்லின இணை மெல்-வல் இணையாகத் திரிந்து, பிறகு வல்லின இணையாக மாறுவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம் தான். அம்மா என்று இயலொலி அம்பா என்று ஆகி பின் அதன் பொருள் நீண்டு இன்னொரு பெற்றோரைக் குறிக்கும் வகையில் அப்பா என்று திரியும். அதே போல "வந்நு" என்னும் வினைச்சொல் "வந்து" என்று திரியும். பண்ணுதல் என்னும் வினையில் இருந்து பண்டம் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இவையெல்லாம் இந்த மெல்லிணை>மெல்வல்>வல்லிணைத் திரிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். அமலைக்கும் ample க்கும் உள்ள இணை புரிகிறதா?

அடுத்த சொல் average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் என்பதைச் சொல்லலாம். ஒரு படியில் அரிசியை முகந்து அளக்கிறோம். படியின் முகவாயில் அரிசி குவியலாய்க் கிடக்கிறது. அதை கையால் சரி செய்து தட்டையாக்கிப் போடுவதை நிரவுதல் என்று சொல்லுகிறோம். கொள்கலனில் ஏற்ற இறக்கமாய் கிடக்கும் கூலப் பொருளை ஒரே மட்டமாய் ஆக்குவதும் நிரவல் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் average என்கிறார்கள். average = நிரவை, நிரவல்

மூன்றாவது சொல் big = பெரிய; இதற்கு விளக்கம் தேவையில்லை

நான்காவது சொல் brief; இதற்கு இணையாய்த் தமிழில் பொருவிய என்பதைச் சொல்லலாம். "சொல்லுவதைப் பொருவினாற்போல் சொல்" என்றால் "whatever you say, say it briefly" என்று பொருள். இங்கே சுருக்கம் என்றால் short or summary என்ற பொருள் கொள்ளும். வெள்ளரிக்காய் வாங்கும் போது சந்தையில் பிஞ்சாய்ப் பார்த்து வாங்கிவரச் சொல்லி வீட்டில் சொல்கிறார்கள் இல்லையா? இது போன்ற பிஞ்சுகளை பொருக்கை என்று தென்பாண்டி நாட்டில் சொல்வார்கள். பிஞ்சும் பொருக்கும் என்பது அங்கு மரபுத் தொடர். பொருவுதல் என்பது இப்படிப் பிஞ்சாய் ஆகுதல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் brief என்ற சொல் இப்படிச் சின்னதைக் குறிக்க எழுந்தது. brief = பொருவிய

ஐந்தாவது சொல் broad; இதற்கு இணையாய் பரவிய, அகண்ட என்பதைச் சொல்லலாம். குறுகிய என்பதற்கு எதிரானது பரவுதல், பரத்துதல். பரந்த காவிரி, அகண்ட காவிரி என்னும் போது அதன் பரந்தமை பற்றியே சொல்லுகிறோம். அதாவது வெறும் நீளப் பரிமானத்தைக் காட்டிலும் இரண்டாவது பரிமானமான அகற்சி இங்கே பேசப்படுகிறது.

ஆறாவது சொல் bulky; இதற்கு இணையாய் பருக்கான என்பதைச் சொல்லலாம். உப்பென்று பருத்துக் கிடப்பது bulky. பருக்கிக் கிடப்பதற்கு வலிமை பெற்றது என்ற பொருளல்ல,. அண்டவெளியில் முப்பரிமானம் பரவிப் பருத்துக் கிடக்கிறது. மேலே சொன்ன பரவிய என்பதற்கும் பருக்கிய என்பதற்கும் உள்ள பரிமான வேறுபாடு நாம் ஊன்றிக் கவனித்தால் புலப்படும். பரவிய என்பது இரு பரிமானச் சொல். பருக்கிய என்பது முப் பரிமானச் சொல்.

ஏழாவது சொல் capacity; இதற்கு இணையாய் கொண்மை என்பதைச் சொல்லலாம். "இந்த ஏனம் அல்லது கலம் எவ்வளவு கொள்ளும்?" என்று கேட்கிறோம் இல்லையா? கொள்ளுமை என்பது கொண்மை என்று மெல்லின ஓசை இடைவரத் திரியும். கலத்திற்கு உள்ள இந்தத் தன்மையை இன்று எல்லாக் கட்டகத்திலும் (system) சேர்த்துச் சொல்லுகிறார்கள். ஏனத்தின் கொண்மை (capacity of a vessel), இறைப்பியின் கொண்மை (capacity of a pump), மின் நகர்த்தியின் கொண்மை (capacity of an electric motor), மாந்தனின் வலிதாங்கும் கொண்மை (a man's capacity to withstand pain) இப்படி இது விதவிதமாய் விரியும்.

எட்டாவது சொல் central; இதற்கு இணையாய் நடுவண் என்பதைச் சொல்லலாம்; பெயர்ச்சொல்லாய் வரும் போது நடுவம் என்றும் பெயரடை அல்லது முன்னொட்டாக வரும் போது, நடுவண் என்றும் வரும். central government = நடுவண் அரசு. மத்திய என்று பலரும் புழங்கும் சொல் நட்ட என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழிப் பலுக்கில் கூறும் ஒரு திரிவு தான். மூலம் தெரியாமல், பலரும் இதன் தோற்றம் பற்றித் தடுமாறுவது உண்டு. தமிழில் நகரமும் மகரமும் போலிகள்; முப்பது என்பதை நுப்பது என்றும் முடங்கும் என்பதை நுடங்கும் என்றும் பலுக்குவதை உணர்ந்தால் இது புலப்படும். அடுத்து, டகர ஒலி தகர ஒலியாகப் பலுக்கப் படுவது வடக்கே போகப் போக நடக்கும். முடிவில் சொல்லின் உள்ளே யகரம் நுழைவதும் வடமொழிக்கு உள்ள பழக்கம் தான். ஆக நட்ட>நத்த>மத்த>மத்த்ய>மத்திய என்ற வகையில் சொற்பிறப்பு அமையும். மத்திய என்பதன் மேலோட்ட வடமொழித் தோற்றத்தில் அதன் தமிழ் மூலம் உணர முடியாமல் தடுமாறுகிறோம்.

ஒன்பதாவது சொல் dimension; இதற்கு இணையாய்ப் பரிமானம் என்பதைச் சொல்லலாம்; எந்த ஒரு பொருளும், தான் இருக்கும் வெளியில் விரிந்து நிற்கிறது. விரிந்து நிற்பது வியல்ந்து நிற்பது என்றும் சொல்லப் பெறும். பரிப்பு என்பதும் வியல்ந்து நிற்பதே. பரிதல் என்பது வளைந்து நிற்பதையும் குறிக்கும். மானம் என்பது மதித்தல், அளவிடுதல் என்பதன் பெயர்ச்சொல். மா என்பது அதன் வேர்ச்சொல். மாத்தல் என்பதில் இருந்து பிறந்தது மானம். இயற்கையில் நாம் கண்ணால் காணும் வெளி பரி மானம் சேர்ந்தது. அதாவது அதைப் பரித்து (வளைத்து) அளக்கிறோம். இயற்கையில் கிடக்கும் பொருள்களை இடுவிப்பாக (idealistic) உருவகஞ் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற பரிமானங்களாய் கணக்கில் வரும் வடிவியல் குறிக்கும். கோடு என்பது ஒற்றைப் பரிமானம்; பரப்பு என்பது இரட்டைப் பரிமானம்; நாம் காணும் முப்பரிமானப் பொருள்களைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் கூடிய பரிமானங்களை இந்தக் கால வகைப்பு இடவியலும் (differential topology), வகைப்பு வடிவியலும் (differential geometry) கையாளுகின்றன. ஐன்சுடீனின் உறவாட்டுக் கொள்கையில் (theory of relativity) இடம், காலம் என்று இணைந்த வகையில் நாற் பரிமானம் பேசப்படும்; இன்னும் மேலே போய் பல் பரிமானப் பல்மடி (many dimensional manifold) பற்றியும்`இன்றையக் கணிதவியலில் பேசுவார்கள்.

பத்தாவது சொல் enormous; இதற்கு இணையாய் எண்ணிறந்த என்பதைச் சொல்லலாம். எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிச் சலித்த நிலையில் உள்ள நிலைக்கு, எண்ணிறந்த என்று சொல்லுவார்கள். அளக்கவே முடியாத நிலை infinitity. இது தமிழில் வரம்பிலி என்று சொல்லப்படும். இதை எண்ணிலி, ஈறிலி, கந்திலி என்றெல்லாம் சொல்லுவது உண்டு. கந்து என்பது பற்றுக் கோடு; அதுவும் ஓர் ஈற்றைத் தான் குறிக்கும்.

பதினோறாவது சொல் expanse; இதற்கு இணையாக விரிந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய என்பதற்கும் விரிந்த என்பதற்கும் பரிமானம் தவிர மிகுந்த வேறுபாடு கிடையாது; விரிவு என்பது எல்லாப் பரிமானங்களிலும் நடக்கக் கூடியது. ஆனால் பரவிய என்பதைப் பெரிதும் இரு பரிமானத்திற்கு மட்டுமே பயனாக்குவோம்.

பன்னிரண்டாவது சொல் extent; இதற்கு இணையாகப் பரந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய, விரிந்த என்ற சொற்களில் இருந்து சற்றே நுணுகிய வேறுபாடு கொண்டது. பொதுவாகப் பரந்த என்ற சொல் இருபரிமானத்திற்கு இயல்பாகவும், ஓரோவழி ஒற்றைப் பரிமானத்திற்கும் சொல்லலாம். முப்பரிமானம் சார்ந்த நிகழ்வுகள், பொருள்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இதைப் பயன்படுத்தலாம். பொதுவாக இந்த பரவிய, விரிந்த, பரந்த என்ற மூன்று சொற்களும் தமிழில் ஒன்றுக்கு மாறாக இன்னொன்று என்று மயங்கியே புழங்கியிருக்கின்றன. இனி வருங்காலப் புழக்கத்தில் எப்படி மாறும் என்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் இதற்கு இது என்று ஒரு சமன்பாட்டைக் கொண்டுவரலாம்.

பதிமூன்றாவது சொல் flow; இதற்கு இணையாகப் பெருக்குதல், பெருவுதல் என்ற சொற்களைச் சொல்லலாம். பெருவுதல்/பெருகுதல் என்பது தன்விணை; பெருக்குதல் என்பது பிறவினை. ஆடிப் பெருக்கு என்றால் ஆடி மாதம் ஏற்படும் flow. ஆறுகளையே கூடப் பெருநை>பெருணை>பெண்ணை என்று தான் தமிழிய மொழிகள் கூறிவந்தன. வடக்கே பெருகியுது வடபெருநை>வடபெருணை>வடபெண்ணை. கருந பெருநை>கருந பெருணை>கன்ன பெண்ணை; இதை வடமொழிப் படுத்தி கிருஷ்ண பெண்ணை என்று சொல்லிப் பின் பெண்ணையைத் தவிர்த்து கிருஷ்ணா என்பார்கள். தென்பெருநை>தென்பெருணை>தென்பெண்ணை; தாம்பர பெருநை>தாமிர பெருணி>தாம்பிரவருணி; இந்திய ஆறுகளின் பெயர்கள் பலவற்றை ஆழ்ந்து பார்த்து அவற்றின் தமிழ்மூலம் அறியும் போது நமக்குப் பெரிதும் வியப்பூட்டும். அதை ஒருமுறை மடற்குழுக்களில் செய்தேன். இன்னும் ஒருமுறை வேறொரு வாய்ப்பில் அதைத் திரும்ப அலச வேண்டும். நீரோட்டம் என்பது பெருக்கைக் குறிக்கக் கொஞ்சம் சுற்றி வளைத்த சொல்.

பதிநான்காவது சொல் huge; இதற்கு இணையாக ஊகை என்பதைச் சொல்லலாம். உகர ஒலியின் நெடில், குறில் பலுக்கில் ஏகப்பட்ட உயர்ச்சிச் சொற்கள் எழுந்துள்ளன. உகரம் ஒகரமாகியும் ஓங்கி உள்ள பொருட்களை நமக்கு உணர்த்தும. ஊகி நிற்பது என்னும் போது கண்முன்னே உயர்ந்து பெருகி நிற்கும் உருவம் புலப்படும். ஊங்கு என்றால் மிகுதி என்ற பொருள் தமிழில் உண்டு; அதே போல ஓகம் என்ற சொல்லும் பெருகி நிற்பதைக் குறிக்கும்.

பதினைந்தாவது சொல் immense; இதற்கு இணையாக மொந்தை என்பதைச் சொல்லலாம். மொத்தம் என்னும் போது கூட்டப் பொருள்தானே வருகிறது. மொந்துதல் என்பது தன்வினை. மொத்துதல் என்பது பிறவினை.

பதினாறாவது சொல் large; இதற்கு இணையாய் அகலை என்பதைச் சொல்லலாம். அகலம் என்ற சொல்லில் ஈற்றை மாற்றி வருவது அகலை. அகல்ந்தது என்பது வினைச்சொல்.
பதினேழாவது little; இதற்கு இணையான சின்ன என்ற சொல்லைப் பற்றி நான் மிகுதியாகச் சொல்லவேண்டியது இல்லை.

இனி மகரத்தில் தொடங்கும் சொற்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.