தமிழில் எண்ணுப் பெயர்கள் பற்றி புதிய நோக்கில் கண்டறிந்த சில விளக்கங்களை எழுத வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் இன்னும் எனக்கே அந்த விளக்கங்கள் முற்றிலும் நிறைவு கொள்ளாத காரணத்தால் அப்படி எழுதவொட்டாமல் தள்ளிக் கொண்டே போனது. ஆனால் அலை எங்கே ஓய்வது? கடலுக்குள் எப்போது போவது?
முன்பு ஒருமுறை மடற்குழுவில் நண்பர் சடையன் சாபு இலக்கமும் கோடியும் பற்றி எழுதக் கேட்டபோது, இனியும் தள்ளிக் கொண்டே போவது சரியல்ல என்று உணர்ந்தேன். ஆனாலும் எழுத இயலாமல் தள்ளிக் கொண்டே போனது. பின்னால் அந்தக் கட்டுரை பாதியில் நின்று போனது. இப்பொழுது அலெக்ஸ் பாண்டியன் ஒன்னு அல்லது ஒண்ணு என்பதில் எது சரி என்று கேட்டிருந்தார். பாதி நின்று போன என் கட்டுரையில் இருந்து "ஒன்று" பற்றிய பத்திகளைத் தனியே எடுத்து இங்கு ஒரு பதிவாகத் தருகிறேன். திரு. அலெக்ஸ் பாண்டியனுக்கு நேரடியாக மறுமொழி சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவு இந்தப் பதிவில் சொல்லியிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.
தமிழ் எண்களைக் குறிக்கும் சொற்கள் எழுந்த விதம் பற்றி இக்கட்டுரையில் சொல்ல முற்படுகிறேன். இதைப் பற்றிச் சிலகாலம் ஓர்ந்து பார்த்த பொழுது, தமிழிய மொழிகள், மேலை மொழிகள், வட இந்திய மொழிகள் என எல்லாவற்றிலும், எண்கள் பற்றிய சொற்களில் ஓர் அடிப்படை ஓரிமை இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
முதலில் ஒன்று என்ற சொல்லை பார்ப்போம். இதைத் தமிழகப் பேச்சு வழக்கிலும், மலையாளத்திலும் ஒண்ணு என்றும் ஈழத்துப் பேச்சு வழக்கில் ஒண்டு என்றும், கன்னடத்தில் ஒந்து என்றும் சொல்லப் படுகிறது. தமிழில் றகரமும், னகரமும் முந்து ஒலிகள் அல்ல. எழுத்து வரிசை ஏற்பட்டு வெகுநாட்கள் கழித்தே எழுத்து வரிசையின் இறுதியில் றகர, னகரங்கள் சேர்க்கப் பட்டன. விலங்காண்டி காலத்தில் தோன்றிய இயல் மொழி தமிழ் என்றால், றகரமும், னகரமும் சேர்ந்து வரும் அடிப்படைச்சொற்கள் முதலில் வேறு இணை எழுத்துக்களைப் பெற்றிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எழுத்துத் தமிழில் ன்று என்று முடியும் ஈறு பெரும்பாலும், பேச்சுத் தமிழின் மீ திருத்தமாகவே காட்சியளிக்கிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால், ஒன்று என்ற சொல்லின் முந்து வடிவம் ஒண்டு/ஒந்து என்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஒண்ணு என்பதும் ஒண்டு என்பதின் மெல்லினத் திரிபே. தமிழில் இருக்கும் வலிவுச் சொற்கள், மலையாளத்தில் திரிந்து மெலிவுச் சொற்களாக மாறுவது போன்றே இதைக் கொள்ள வேண்டும். (வந்து>வந்நு).
ஒண்டு என்பது ஒந்து என்று ஆனதும் இயற்கையே. டகர ஒலிகள் வடக்கே போகப் போக தகர ஒலிகளாய் மாறும். ஒண்டு என்ற தமிழ்ச் சொல் தெலுங்கில் ஒகட்டி, கன்னடத்தில் ஒந்து, மலையாளத்தில் ஒண்ணு எனத் தமிழிய மொழிகளில் திரிந்து வரும்.
இனி ஒண்டின் முந்தைய வடிவம் பார்ப்போம். உகரம் ஒகரமாகத் திரிவது பேச்சுத் தமிழில் மிக இயற்கை; பல சொற்களை இதற்குக் காட்டாகச் சொல்லலாம். (உன் ஊர்>ஒன் ஊர்; உடன் வருவது>ஒடன் வருவது) அந்த முறையிலேயே உண்டு>ஒண்டு>ஒன்று என்று இந்தச் சொல் திரிந்தாகக் கருதத் தோன்றுகிறது. இனி உண்டு என்பதின் பொருளை இனங் காண முயலுவோம்.
ஆ என்ற வாயொலி அங்காத்தலையும், அவ்>அவ்வு எனும் ஓசையின் திரிவான ஊ என்னும் வாயொலி அங்காத்த வாய் மூடுவதையும் குறிக்கின்றன. இந்த வாயொலியின் வளர்ச்சியாய் வாயின் உள்ளே உணவு போகும் வினையைக் குறிக்க ஊ>*ஊள்>உள் என்ற ஓரசைச் சொல் எழுந்தது. இந்தச் சொல் இன்னும் வளர்ந்து *ஊள்>ஊண் என்பது வாயின் உள்ளே போகும் உணவைக் குறிக்கிறது. இந்தச் சொல்லே இன்னும் வளர்ச்சி பெற்று ஊண்>உண்>உணவு என்றும் திரியும். உண்ணுவது என்ற வினைச்சொல் உண்டுவது என்றும் ஆகும். (நான் உண்டேன்.) உண்டு என்ற சொல் சற்றே திரிந்து உண்டி என்ற பெயர்ச் சொல்லையும் கிளைவிக்கும். இந்த உண்டு என்ற சொல் முதலில் விலங்குகளின் வழி கிடைக்கும் ஊனையே குறித்திருக்க வேண்டும். விலங்காண்டி காலத்து மாந்த உணவெல்லாம் பெரும்பாலும் ஊனே ஒழிய மரக்கறி அல்லவே? நெடுநாட்கள் கழித்து, "இதை விலக்கு, அதை விலக்கு" என்று ஊனைத் தவிர்க்கும் மனத் தடைகளுக்குப் பிறகே, மாந்தன் ஊனைக் குறைத்து மரக்கறியைச் சாப்பிடத் தொடங்கினான். வெவ்வேறு கால மாந்தர்களின் கவாலக் (கபாலம்) கொண்மையை அளந்து, அதன் வளர்ச்சியையும் உன்னித்துப் பார்த்த மாந்தவியல் அறிஞர்கள் ஊனைச் சாப்பிட்டதாலேயே மாந்தனின் மூளை அளவு பெருகியது என்று கூறுகிறார்கள்.
ஆக ஒண்ணு/ஒண்டு என்பதின் உட்பொருள் உணவு/ஊன் என்றே பொதுவாகவும், விலங்கு இறைச்சி என்பதை விதப்பாகவும் குறித்திருக்க வேண்டும். ஊனின் திரிபாக ஒன்/ஓன் என்ற சொல் இலத்தீன் வழி மொழிகளில் புழங்குகிறது.
இனி, *ஊள்+து>ஊட்டு என்று ஆகும்; ஊணை உள்ளே தள்ளுவதை, இன்னொருவருக்கு உட்செலுத்துவதை ஊட்டுவது என்று நாம் சொல்லுகிறோம். ஊட்டு என்ற சொல் பெயராகவும் வினையாகவும் இருக்கிறது. அதே போல உண்டு என்பதையும் பெயராகக் கொள்ள முடியும். ஏனெனில் உண்டு+இ>உண்டி என்ற சொல்லாட்சி ஏற்பட்டிருக்கிறது. இது போல ஊட்டு+இ>ஊட்டி என்பதும் உண்ணப் படுகிற உணவையே குறிக்கும். ஊட்டி>உகட்டி என்று திரிந்து, பின் ஒகட்டியாகி தெலுங்கில் ஒன்றைக் குறிக்கும். மெய்யும் நெடில் உயிரும் சேர்ந்த ஒரு நேரசை (CV) அதே மெய்யோடு குறில் உயிர் சேர்ந்த அருகே ஒரு ககரமும் சேர்ந்து (Cvக) ஆகத் திரிவது தமிழில் மிகமிக இயற்கை. இந்த முறையில் திரிந்து வந்த ஒகட்டி மேலும் திரிந்து ஒகத்தியாகி பின் எகத்தி>ஏக்தி என்று பாகதத்தில் பிறழ்ந்து ஏக் என்று அவப் பிரம்சம்களில் சிதையும். வட இந்திய மொழிகளில் ஏக் என்று பிறழ்ந்த விதம் இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா? சங்கதத்தில் ஏக் என்பது ஏகம் என்று நீளும். சங்கதம் என்பது வட இந்திய வட்டார வடமொழிகளின் கலவையில் இருந்தி திருத்திப் புலவோரால் ஒழுங்கு செய்யப் பட்ட மொழி. இந்திய மொழியில் இதைத் தலை கீழாகப் புரிந்து சங்கதத்தில் இருந்து அவப் பிரம்சங்கள் பிறந்தன என்று சொல்லுவது போகாத ஊருக்கு வழி தேடும் கதை. வட்டார வழக்குகளில் இருந்து செந்தமிழ் பிறந்தது என்று கொள்ளாமல் செந்தமிழில் இருந்து வட்டார மொழிகள் பிறந்தன என்று சொல்லுவது எத்துணை தவறோ அத்துணை தவறு இப்படித் தலை கீழாகப் புரிந்து கொள்ளுவது ஆகும். இதைச் சொன்னால் பலருக்கும் கோவம் வருகிறது. அதற்கு என்ன பண்ண முடியும்?
ஊனில்லாமல், உள்ளிடாமல், ஒன்று இல்லை என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
ஒண்ணு சரியா, ஒன்னு சரியா என்றால் ஒண்ணு என்பது முதலில் வந்திருக்க வேண்டும். ஒன்னு என்பது பின்னால் வந்திருக்க வேண்டும். இந்த இரண்டு விதமான பலுக்கல்களும் இனியும் தொடரும் என்றே எண்ணுகிறேன். ஒருவேளை ஒண்ணு என்பதற்கு அழுத்தம் கொடுக்கலாமோ என்று தோன்றுகிறது. அதே பொழுது தமிழில் எது நிலைக்கும் என்பது 7 கோடிப் பேரின் மொத்தப் புழக்கத்தில் அல்லவா இருக்கிறது?
அன்புடன்,
இராம.கி.
12 comments:
யாழ்ப்பாண பேச்சு வழக்கில் ஒண்டு எண்டு (பார்த்தீர்களா.. என்று என்பதையும் எண்டு என்று தான் சொல்லுவம்._ சொல்லவம்.
உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி திரு. இராம.கி. ஒண்ணு சரியா, ஒன்னு சரியா என்ற கேள்வியை திரு. அலெக்ஸ் பாண்டியனின் வலைப்பதிவைப் படித்தப்பின் கேட்டிருந்தேன். அதற்கு பதில் இங்கு கண்டுகொண்டேன். மிக்க நன்றி.
நல்ல ஆய்வுக் கட்டுரை அலெக்ஸ்.
ஆனால் ஒன்று என்று இன்று நாம் எழுதிப் பழகிய பிறகு மீண்டும் ஒண்ணுக்குப் போவது எளிதாக இராது என்றே நினைக்கிறேன். ஆகையால் ஒன்னே இருக்கட்டும் என்று நான் கருதுகிறேன். அதுதான் நடக்கும் என்றும் தோன்றுகிறது.
விளக்கத்துக்கு நன்றி இராம.கி.
ஈழத்தில் '_ன்று' என்று வரும் சொற்களெல்லாம் பேச்சு வழக்கில் '_ண்டு' என்றுதான் வழங்குகிறது. (சயந்தன் சொன்னதைப்போல)
என்று - எண்டு
ஒன்று - ஒண்டு
கன்று - கண்டு
தின்று - திண்டு
கொன்று - கொண்டு
வென்று - வெண்டு
இப்படியே பெரும்பாலான சொற்கள் பேச்சு வழக்கில் திரிகின்றன.
--------------------------------
எனக்கு என்ன தோன்றுகின்றதென்றால்
நாம் 'ஒன்று' என்று எழுதினாலும் அதை உச்சரிக்கும்போது 'ன்' இன் உச்சரிப்பைத் தூய்மையாக உச்சரிப்பதில்லை.
மாறாக 'ண்' இன் உச்சரிப்புக்குக் கிட்டவாகவே உச்சரிக்கிறோம்.
அதாவது 'நன்னிலம்' என்பதைச் சொல்லும்போது 'ன்' இன் உச்சரிப்பும் ஒன்று என்பதை உச்சரிக்கும்போது 'ன்' இன் இச்சரிப்பும் வித்தியாசப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. 'ஒன்று' என்பதில் 'ன்' க்காக நாம் நாவை வைக்குமிடம் 'ண்' போலவே இருக்கும்.
அருகில் வரும் 'ற' கரத்தைச் சொல்வதற்காக முதலெழுத்திலும் மாற்றம் வருகிறது போல.
இந்த மாற்றமே பேச்சுவழக்கில் 'ண்' ஆக வருகிறதோ தெரியவில்லை.
//ஒண்ணுக்குப் போவது எளிதாக இராது என்றே நினைக்கிறேன். //
ஏன் அதற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்..
ஆங்கிலத்தில் ONE என்பதை தமிழகத்தில் "ஒன்" அல்லது "ஆன்" என்று கூறுகிறார்கள். ஈழத்தில் "வன்" என்கிறார்கள். ஆக இந்த "One" என்னும் சொல் தமிழிலிருந்து வந்திருக்குமோ? அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு?
மிக்க நன்றி - இராம.கி அவர்களே.
- அலெக்ஸ்
//தமிழில் எது நிலைக்கும் என்பது 7 கோடிப் பேரின் மொத்தப் புழக்கத்தில் அல்லவா இருக்கிறது? //
இது தான் அனைத்திற்குமான விடை. மொழிக்கு மட்டுமன்று.
பயன்பாட்டில் தான் இருக்கிறது நிலைக்கும் தன்மை.
தனித் தமிழும் திணிப்பாக அல்லாமல் இயல்பாக வழங்கப்பட்டால் தான் வளரும்.
நன்றி ஐயா!
சுட்டு விரல்
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
ஒண்ணா! ஒன்னா1 எனது கருத்து.
1. பெரும்பாலோனோர் பலுக்குகையில் ஒன்னு என்றும் எழுதுகையில் ஒண்ணு என்றும் எழுதுகிறார்கள். பவதாரினியின் பாட்டை கேட்டுபாருங்கள்.
2. மலையாளிகள் உறுதியாக ஒன்னு என்றே சொல்லுகிறார்கள். ஒன்னு என்றே எழுதுகிறார்கள்.
3. தமிழின் "ற" என்ற ஒலி "த" என்றும் 'ட" என்றும் "ன" என்றும் சிதையும். எடுத்து காட்டு: சுற்றி வந்தேன் சுத்தி வந்தேன், வெற்று வெளி= வெட்ட வெளி. கன்று = கன்னு, இன்றைக்கு= இன்னைக்கு, நன்றி=நன்னி.
எனவே ஒன்று எனப்து ஒன் னு எனவும் ஒன் து எனவும் ஒன் டு எனவும் மருவலாம்.
ஒன் து = ஒந்து என்று கன்னடத்திலும், ஒன் டு = ஒன்டி =ஒகட்டி என்று மருவுகிறது. ஒன்டி தமிழின் ஒண்டிகுடித்தனம் என்ற பதங்களில் வரும் ஒண்டி என்ற பொருள் பெறும். ஒன்டி =ஒகட்டி ஆனது.
அதே மரபில் ஒன் னு = ஒன்னு என்று தமிழில் சிதையும்.
4. ஒன்று என்ற சொல் ஒண்ணு எனற சொல்லிருந்து பிறந்தது என்பதனினும் ஒரு என்ற சொல்லில் இருந்தே தோன்றியிருக்கும். கன்னடமும் தெலுகும் தமிழின் திரிபுகள் என்று கொண்டால் ஒந்து, ஒகட்டி என்னும் சொற்கள் ஒன்று என்ற சொல்லில் இருந்துதான்
பிறந்திருக்கவேண்டுமேயன்றி ஒண்ணு என்ற சொல்லில் இருந்து பிறந்திருக்க இயலாது. மேலும் ஒருவன், ஒருத்தி, ஒருத்தல் என்ற சொற்கள், ஒரு என்ற வேரிலிருந்து வந்தன. ஒண்ணு என்ற வேரிலிருந்து வந்த சொற்கள் எதுவும் இல்லை.
5. அன்று என்பது "அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்" அற்றை என்பது போல ஒற்றைபடை என்று இணையான மருவு கொள்கிறது.
றகரமும் நகரமும் வாயில் ஓரிடத்தில் பிறக்கும் ஒலிகள். எனவே ஒன்று என்ற சொல்லினின்று தோன்றிய மற்ற சொற்களின் பிறப்பைகொண்டு அதன் முதலான் ஒன்று என்பதே சரியான் சொல் என்பதால் ஒன்னு என்பதே சரியான கொச்சை.
6. ஈழ நாட்டில் றகரம் தெலுகு நாட்டைப்போல டகரமாக மருவுவதால் ஒன் + டு = ஒண்டு என்கிறார்கள். ஏனென்றால் டகரமும் ணகரமும் ஓரிடத்தில் பிறக்கும் ஒலிகள். அது தமிழ் மரபு.
7. ஒன்று என்ற சொல்லுக்கு இணையான மற்றொரு எண் மூன்று. அதுவும் மூனு என்றே மருவ வேண்டும். தெலுகில் மூடு என்றும், கன்னடத்தில் மூறு என்றும மரபுபடி சிதைகிறது.
ஒண்ணு, மூணு, தோணுது எல்லாம் தவறான் கொச்சைகள். ஒன்னு, மூனு, தோனுது என்பன இயல்பான கொச்சைகள்.
பேச்சு தமிழை கற்று கொடுக்க முனைந்தால் தலைவலிதான்.
வேந்தன் அரசு.
தமிழில் அணைத்து பெயர்களும் காரணப்பெயர்கள் ...
அனால் தமிழுக்கு தமிழ் என்று பெயர்வரக்காரணம் என்ன ? ...
http://iamparisivan.blogspot.com/
இன்று உங்களின் இந்த பதிவு சகோதரி நுண்மதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... லிங்க் : http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_1841.html !
வலைச்சரம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
இனி தொடர்வேன். நன்றி !
ஒண்ணுமே பண்ண முடியாதா?
Post a Comment