அண்மையில் என்னுடைய வலைப்பதிவில் ஒரு நண்பர் கொடுத்த பின்னூட்டில் "micro, macro, mega போன்றவற்றை தமிழில் எப்படி விதப்பாகச் (specific) சொல்லுவது?" என்று கேட்டிருந்தார்.
----------------------------------------
அவர் கேட்டிருந்த சொற்கள் எல்லாம் அளவுக் கருத்து பற்றிய முன்னொட்டுச் சொற்கள். அளவுச் சொற்களைக் கையாளும் போது நம்முடைய பேச்சில் தகுதி (quality), எண்ணுதி (quantity) என்ற இரண்டிலுமாய்த் துல்லியம் காண வேண்டும். ஆங்கிலத்தில் அளவு பற்றிய பல்வேறு முன்னொட்டுச் சொற்களை அடுக்கி, இடத்திற்குத் தகுந்தவாறு, பயன்படுத்துவதில் கவனம் எடுத்துக் கொள்ளும் நாம், தமிழ் என்று வரும் போது மட்டும், பொதுமையான சில அளவுச் சொற்களைத் தெரிந்து கொண்டு, விதப்பானவற்றை அறிய மாட்டேம் என்கிறோம். அளவு பற்றிய எல்லாவற்றிற்கும் நமக்குத் தெரிந்த ஓரிரு சொற்களை மட்டுமே வைத்து ஏதோ ஒரு வகையில் ஒப்பேற்றி விடுகிறோம். பொதுவாக நம்முடைய மொழியைக் கையாளுவதில் நமக்கு ஓர் அலட்சியம் இருக்கிறது, நமக்குத் தெரிந்த தமிழ்ச் சொல் தொகுதியை கூட்டிக் கொள்ளாதே இருக்கிறோம் என்று நான் எண்ணுகிறேன். (இதை மிகுத்துச் சொன்னால் பலருக்கு என்மேல் கோவம் வரக்கூடும்.) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு தருகிறேன். இந்த வாரம் திண்ணை வலையிதழில் ஒரு நேர்காணல் உரையாடலில் பங்காளர் ஒருவரின் வாசகம் படித்தேன்.
"நான் என்ன நினைக்கிறேன்னா - வாட் ஈஸ் செந்தமிழ் வாட் ஈஸ் சாதாரண தமிழ்னு க்ளியரா distinguish பண்ணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் classical tamil people-னுதான் சொல்ல முடியும்."
இதைப் படித்த எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்நாளைய இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஏன் இந்த அளவு தமிங்கிலம் பயில்கிறார்கள்? இதில் என்ன தமிழில் சொல்ல முடியாத பெரிய கலைச்சொல் பொதிந்து கிடக்கிறது?
"நான் என்ன நினைக்கிறேன்னா, எது செந்தமிழ், எது சாதாரணத் தமிழ்னு தெளிவா அடையாளம் காணனும். ஹார்ட் மாதிரியானவர்கள் செந்தமிழ்க்காரர்கள்ன்னு தான் சொல்ல முடியும்"
என்று கூட ஒரு தமிழறிந்த கூட்டத்தில் சொல்ல முடியாத அளவுக்குத் தமிங்கிலம் இவர்களுக்குப் பழகிப் போகும் என்றால், அப்புறம் இன்றையத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசி இவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. பேசாமல் குமரியில் மூன்று தடவை சுற்றிவந்து இந்தத் தமிழ் என்னும் மொழியைத் தூக்கி எறிந்துவிடலாமே? அதைவிடுத்து ஏன் இப்படிச் சல்லியடித்துக் கொண்டு இருக்கிறார்கள்?
பொதுவாக இந்தப் பழக்கம் ஒரு நோய் போலவே நம்மில் மிகுதியானவரைப் பீடித்திருக்கிறது. தமிங்கிலம் பழகுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்து என்றைக்கு அதற்கு முடிவு கட்டுவோம்?
-----------------------------------------
நண்பர் கேட்ட சொற்களோடு இன்னும் சில தொடர்புள்ளவற்றைச் சேர்த்து இங்கே கொடுத்திருக்கிறேன். பதிவை இரண்டு பகுதிகளாக்கி அனுப்புகிறேன்.
அளவு என்ற பெயர்ச்சொல் அள்ளுதல் என்ற வினைச்சொல்லில் இருந்து எழுந்தது. அள்ளுதல் என்பது முதலில் நெருங்குதலைக் குறித்துப் பின் சேர்த்தல் அல்லது கூட்டுதல் என்ற பொருளைக் குறிக்கும். அள்ளுதலில் இருந்து அள்+து>அட்டு>அட்டுதலும், அட்டு>அடு>அடுதலும் பிறக்கும். அட்டுதல் என்பது சேர்த்தல் என்ற பிறவினையைக் குறிக்கும். அடுதல் என்பது சேர்தல் என்ற தன்வினையைக் குறிக்கும். அடுதல் என்ற தன்வினையில் இருந்து அடுவித்தல் என்ற இன்னொரு பிறவினை பிறக்கும். அட்டுதலும் அடுவித்தலும் ஒரே பொருள் கொண்டவை தான். கூட்டுதல், சேர்த்தல் என்றே இவை பொருள்படும். அடுவித்தல் என்ற சொல், பலுக்கச் சோம்பலில் அதுவித்தல்>அதியித்தல்>அதித்தல் என்றும் திரியும். to add = கூட்டுதல், அடுவித்தல், அதியித்தல். please add 2 and 3; 2 யையும் 3 யையும் கூட்டு. addition = கூட்டல், அடுவம், அதியம் additive = கூடுதலான, அதிவான
கூட்டுதல் என்ற பொருளில் உள்ள தொகுதியில் நான் முதலில் எடுத்துக் கொள்ளும் சொல் ample; இதற்கு இணையாய் அமலை என்று தமிழில் சொல்லலாம். "அவனும், நானும், எல்லோரும்" என்று ஓர் உம்மைச் சேர்த்துச் சொல்லுகிறோம் இல்லையா? அந்த உம் என்னும் இடைச்சொல் கூட்டப் பொருளைச் சுட்டிக் காட்டும். உம்முதல் என்பது சேருதலே. உம்முதல்>அம்முதல் என்று திரியும். அம்முதல்>அம்புதல்>அப்புதல் என்பதும் ஒன்றின் மேல் ஒன்றை சேர்த்துக் கொண்டு வருவதைக் காட்டும். அம்முதலில் இருந்து பிறந்த சொல் அமலை. செறிவுப் பொருளைக் காட்டும். இது தவிர மிகுதி என்ற பொருளையும் திவாகரம் காட்டும். மெல்லின இணை மெல்-வல் இணையாகத் திரிந்து, பிறகு வல்லின இணையாக மாறுவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம் தான். அம்மா என்று இயலொலி அம்பா என்று ஆகி பின் அதன் பொருள் நீண்டு இன்னொரு பெற்றோரைக் குறிக்கும் வகையில் அப்பா என்று திரியும். அதே போல "வந்நு" என்னும் வினைச்சொல் "வந்து" என்று திரியும். பண்ணுதல் என்னும் வினையில் இருந்து பண்டம் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இவையெல்லாம் இந்த மெல்லிணை>மெல்வல்>வல்லிணைத் திரிவுகளுக்கு எடுத்துக் காட்டுக்கள். அமலைக்கும் ample க்கும் உள்ள இணை புரிகிறதா?
அடுத்த சொல் average; இதற்கு இணையாய் நிரவை/நிரவல் என்பதைச் சொல்லலாம். ஒரு படியில் அரிசியை முகந்து அளக்கிறோம். படியின் முகவாயில் அரிசி குவியலாய்க் கிடக்கிறது. அதை கையால் சரி செய்து தட்டையாக்கிப் போடுவதை நிரவுதல் என்று சொல்லுகிறோம். கொள்கலனில் ஏற்ற இறக்கமாய் கிடக்கும் கூலப் பொருளை ஒரே மட்டமாய் ஆக்குவதும் நிரவல் தான். இதைத்தான் ஆங்கிலத்தில் average என்கிறார்கள். average = நிரவை, நிரவல்
மூன்றாவது சொல் big = பெரிய; இதற்கு விளக்கம் தேவையில்லை
நான்காவது சொல் brief; இதற்கு இணையாய்த் தமிழில் பொருவிய என்பதைச் சொல்லலாம். "சொல்லுவதைப் பொருவினாற்போல் சொல்" என்றால் "whatever you say, say it briefly" என்று பொருள். இங்கே சுருக்கம் என்றால் short or summary என்ற பொருள் கொள்ளும். வெள்ளரிக்காய் வாங்கும் போது சந்தையில் பிஞ்சாய்ப் பார்த்து வாங்கிவரச் சொல்லி வீட்டில் சொல்கிறார்கள் இல்லையா? இது போன்ற பிஞ்சுகளை பொருக்கை என்று தென்பாண்டி நாட்டில் சொல்வார்கள். பிஞ்சும் பொருக்கும் என்பது அங்கு மரபுத் தொடர். பொருவுதல் என்பது இப்படிப் பிஞ்சாய் ஆகுதல் என்று பொருள் படும். ஆங்கிலத்தில் brief என்ற சொல் இப்படிச் சின்னதைக் குறிக்க எழுந்தது. brief = பொருவிய
ஐந்தாவது சொல் broad; இதற்கு இணையாய் பரவிய, அகண்ட என்பதைச் சொல்லலாம். குறுகிய என்பதற்கு எதிரானது பரவுதல், பரத்துதல். பரந்த காவிரி, அகண்ட காவிரி என்னும் போது அதன் பரந்தமை பற்றியே சொல்லுகிறோம். அதாவது வெறும் நீளப் பரிமானத்தைக் காட்டிலும் இரண்டாவது பரிமானமான அகற்சி இங்கே பேசப்படுகிறது.
ஆறாவது சொல் bulky; இதற்கு இணையாய் பருக்கான என்பதைச் சொல்லலாம். உப்பென்று பருத்துக் கிடப்பது bulky. பருக்கிக் கிடப்பதற்கு வலிமை பெற்றது என்ற பொருளல்ல,. அண்டவெளியில் முப்பரிமானம் பரவிப் பருத்துக் கிடக்கிறது. மேலே சொன்ன பரவிய என்பதற்கும் பருக்கிய என்பதற்கும் உள்ள பரிமான வேறுபாடு நாம் ஊன்றிக் கவனித்தால் புலப்படும். பரவிய என்பது இரு பரிமானச் சொல். பருக்கிய என்பது முப் பரிமானச் சொல்.
ஏழாவது சொல் capacity; இதற்கு இணையாய் கொண்மை என்பதைச் சொல்லலாம். "இந்த ஏனம் அல்லது கலம் எவ்வளவு கொள்ளும்?" என்று கேட்கிறோம் இல்லையா? கொள்ளுமை என்பது கொண்மை என்று மெல்லின ஓசை இடைவரத் திரியும். கலத்திற்கு உள்ள இந்தத் தன்மையை இன்று எல்லாக் கட்டகத்திலும் (system) சேர்த்துச் சொல்லுகிறார்கள். ஏனத்தின் கொண்மை (capacity of a vessel), இறைப்பியின் கொண்மை (capacity of a pump), மின் நகர்த்தியின் கொண்மை (capacity of an electric motor), மாந்தனின் வலிதாங்கும் கொண்மை (a man's capacity to withstand pain) இப்படி இது விதவிதமாய் விரியும்.
எட்டாவது சொல் central; இதற்கு இணையாய் நடுவண் என்பதைச் சொல்லலாம்; பெயர்ச்சொல்லாய் வரும் போது நடுவம் என்றும் பெயரடை அல்லது முன்னொட்டாக வரும் போது, நடுவண் என்றும் வரும். central government = நடுவண் அரசு. மத்திய என்று பலரும் புழங்கும் சொல் நட்ட என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழிப் பலுக்கில் கூறும் ஒரு திரிவு தான். மூலம் தெரியாமல், பலரும் இதன் தோற்றம் பற்றித் தடுமாறுவது உண்டு. தமிழில் நகரமும் மகரமும் போலிகள்; முப்பது என்பதை நுப்பது என்றும் முடங்கும் என்பதை நுடங்கும் என்றும் பலுக்குவதை உணர்ந்தால் இது புலப்படும். அடுத்து, டகர ஒலி தகர ஒலியாகப் பலுக்கப் படுவது வடக்கே போகப் போக நடக்கும். முடிவில் சொல்லின் உள்ளே யகரம் நுழைவதும் வடமொழிக்கு உள்ள பழக்கம் தான். ஆக நட்ட>நத்த>மத்த>மத்த்ய>மத்திய என்ற வகையில் சொற்பிறப்பு அமையும். மத்திய என்பதன் மேலோட்ட வடமொழித் தோற்றத்தில் அதன் தமிழ் மூலம் உணர முடியாமல் தடுமாறுகிறோம்.
ஒன்பதாவது சொல் dimension; இதற்கு இணையாய்ப் பரிமானம் என்பதைச் சொல்லலாம்; எந்த ஒரு பொருளும், தான் இருக்கும் வெளியில் விரிந்து நிற்கிறது. விரிந்து நிற்பது வியல்ந்து நிற்பது என்றும் சொல்லப் பெறும். பரிப்பு என்பதும் வியல்ந்து நிற்பதே. பரிதல் என்பது வளைந்து நிற்பதையும் குறிக்கும். மானம் என்பது மதித்தல், அளவிடுதல் என்பதன் பெயர்ச்சொல். மா என்பது அதன் வேர்ச்சொல். மாத்தல் என்பதில் இருந்து பிறந்தது மானம். இயற்கையில் நாம் கண்ணால் காணும் வெளி பரி மானம் சேர்ந்தது. அதாவது அதைப் பரித்து (வளைத்து) அளக்கிறோம். இயற்கையில் கிடக்கும் பொருள்களை இடுவிப்பாக (idealistic) உருவகஞ் செய்து ஒன்று, இரண்டு, மூன்று என்ற பரிமானங்களாய் கணக்கில் வரும் வடிவியல் குறிக்கும். கோடு என்பது ஒற்றைப் பரிமானம்; பரப்பு என்பது இரட்டைப் பரிமானம்; நாம் காணும் முப்பரிமானப் பொருள்களைப் பற்றி நான் விவரிக்க வேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் அது தெரியும். இன்னும் கூடிய பரிமானங்களை இந்தக் கால வகைப்பு இடவியலும் (differential topology), வகைப்பு வடிவியலும் (differential geometry) கையாளுகின்றன. ஐன்சுடீனின் உறவாட்டுக் கொள்கையில் (theory of relativity) இடம், காலம் என்று இணைந்த வகையில் நாற் பரிமானம் பேசப்படும்; இன்னும் மேலே போய் பல் பரிமானப் பல்மடி (many dimensional manifold) பற்றியும்`இன்றையக் கணிதவியலில் பேசுவார்கள்.
பத்தாவது சொல் enormous; இதற்கு இணையாய் எண்ணிறந்த என்பதைச் சொல்லலாம். எண்ண முடியாத அளவுக்கு, எண்ணிச் சலித்த நிலையில் உள்ள நிலைக்கு, எண்ணிறந்த என்று சொல்லுவார்கள். அளக்கவே முடியாத நிலை infinitity. இது தமிழில் வரம்பிலி என்று சொல்லப்படும். இதை எண்ணிலி, ஈறிலி, கந்திலி என்றெல்லாம் சொல்லுவது உண்டு. கந்து என்பது பற்றுக் கோடு; அதுவும் ஓர் ஈற்றைத் தான் குறிக்கும்.
பதினோறாவது சொல் expanse; இதற்கு இணையாக விரிந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய என்பதற்கும் விரிந்த என்பதற்கும் பரிமானம் தவிர மிகுந்த வேறுபாடு கிடையாது; விரிவு என்பது எல்லாப் பரிமானங்களிலும் நடக்கக் கூடியது. ஆனால் பரவிய என்பதைப் பெரிதும் இரு பரிமானத்திற்கு மட்டுமே பயனாக்குவோம்.
பன்னிரண்டாவது சொல் extent; இதற்கு இணையாகப் பரந்த என்ற சொல்லைச் சொல்லலாம். முன்னே சொன்ன பரவிய, விரிந்த என்ற சொற்களில் இருந்து சற்றே நுணுகிய வேறுபாடு கொண்டது. பொதுவாகப் பரந்த என்ற சொல் இருபரிமானத்திற்கு இயல்பாகவும், ஓரோவழி ஒற்றைப் பரிமானத்திற்கும் சொல்லலாம். முப்பரிமானம் சார்ந்த நிகழ்வுகள், பொருள்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இதைப் பயன்படுத்தலாம். பொதுவாக இந்த பரவிய, விரிந்த, பரந்த என்ற மூன்று சொற்களும் தமிழில் ஒன்றுக்கு மாறாக இன்னொன்று என்று மயங்கியே புழங்கியிருக்கின்றன. இனி வருங்காலப் புழக்கத்தில் எப்படி மாறும் என்று தெரியவில்லை. என்னைக் கேட்டால் இதற்கு இது என்று ஒரு சமன்பாட்டைக் கொண்டுவரலாம்.
பதிமூன்றாவது சொல் flow; இதற்கு இணையாகப் பெருக்குதல், பெருவுதல் என்ற சொற்களைச் சொல்லலாம். பெருவுதல்/பெருகுதல் என்பது தன்விணை; பெருக்குதல் என்பது பிறவினை. ஆடிப் பெருக்கு என்றால் ஆடி மாதம் ஏற்படும் flow. ஆறுகளையே கூடப் பெருநை>பெருணை>பெண்ணை என்று தான் தமிழிய மொழிகள் கூறிவந்தன. வடக்கே பெருகியுது வடபெருநை>வடபெருணை>வடபெண்ணை. கருந பெருநை>கருந பெருணை>கன்ன பெண்ணை; இதை வடமொழிப் படுத்தி கிருஷ்ண பெண்ணை என்று சொல்லிப் பின் பெண்ணையைத் தவிர்த்து கிருஷ்ணா என்பார்கள். தென்பெருநை>தென்பெருணை>தென்பெண்ணை; தாம்பர பெருநை>தாமிர பெருணி>தாம்பிரவருணி; இந்திய ஆறுகளின் பெயர்கள் பலவற்றை ஆழ்ந்து பார்த்து அவற்றின் தமிழ்மூலம் அறியும் போது நமக்குப் பெரிதும் வியப்பூட்டும். அதை ஒருமுறை மடற்குழுக்களில் செய்தேன். இன்னும் ஒருமுறை வேறொரு வாய்ப்பில் அதைத் திரும்ப அலச வேண்டும். நீரோட்டம் என்பது பெருக்கைக் குறிக்கக் கொஞ்சம் சுற்றி வளைத்த சொல்.
பதிநான்காவது சொல் huge; இதற்கு இணையாக ஊகை என்பதைச் சொல்லலாம். உகர ஒலியின் நெடில், குறில் பலுக்கில் ஏகப்பட்ட உயர்ச்சிச் சொற்கள் எழுந்துள்ளன. உகரம் ஒகரமாகியும் ஓங்கி உள்ள பொருட்களை நமக்கு உணர்த்தும. ஊகி நிற்பது என்னும் போது கண்முன்னே உயர்ந்து பெருகி நிற்கும் உருவம் புலப்படும். ஊங்கு என்றால் மிகுதி என்ற பொருள் தமிழில் உண்டு; அதே போல ஓகம் என்ற சொல்லும் பெருகி நிற்பதைக் குறிக்கும்.
பதினைந்தாவது சொல் immense; இதற்கு இணையாக மொந்தை என்பதைச் சொல்லலாம். மொத்தம் என்னும் போது கூட்டப் பொருள்தானே வருகிறது. மொந்துதல் என்பது தன்வினை. மொத்துதல் என்பது பிறவினை.
பதினாறாவது சொல் large; இதற்கு இணையாய் அகலை என்பதைச் சொல்லலாம். அகலம் என்ற சொல்லில் ஈற்றை மாற்றி வருவது அகலை. அகல்ந்தது என்பது வினைச்சொல்.
பதினேழாவது little; இதற்கு இணையான சின்ன என்ற சொல்லைப் பற்றி நான் மிகுதியாகச் சொல்லவேண்டியது இல்லை.
இனி மகரத்தில் தொடங்கும் சொற்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்,
இராம.கி.
12 comments:
சொற்களுக்கு நன்றி ஐயா. இந்த சொற்கள் அனைத்தும் உங்களிடம் மட்டுமே இருக்கின்றனவா, அல்லது தேடு வசதி கொண்ட ஏதேனும் இணையதளத்தில் சேமிக்கப்பட்டுள்ளனவா?
ஹார்ட் மாதிரியானவர்கள் ?????????.
ஹார்ட்?????????????????????????????????????//.
நானும் சுராவின் மொழியைக் கண்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
இந்தச் சொற்களையும் அதன் மூலங்களையும் அறிதல் எனக்கு உவப்பான ஒன்று. ஆங்கிலச் சொற்களுக்கும் இத்தகைய விவரங்களைப் படிப்பேன். தமிழில் இப்படியான அகராதி எதுவும் இருக்கிறதா என்று அறியத்தருவீர்களா? இல்லாவிட்டால் அப்படியொன்று மிகவும் அவசியம் என்பது என் எண்ணம்.
பதிவுக்கு நன்றி!
இராம.கி அவர்களுக்கு ஒரு கேள்வி:
http://alexpandian.blogspot.com/2005/10/blog-post_31.html
எது சரி - ஒன்னுமே, ஒண்ணுமே ?
- அலெக்ஸ் பாண்டியன்
நல்ல பதிவு. தமிழ் சொற்கள், அவற்றின் தோற்றம், அவற்றின் பயன்பாடு ஆகிய தகவல்களை அறிய நிறைய ஆவல். உங்கள் பதிவுகள் எப்பொழுதும் நல்ல தகவல்களை பொதிந்து வரும். நன்றி.
அன்பிற்குரிய சுதர்சன்,
இந்தச் சொற்களில் பல வெவ்வேறு இடங்களில் இருந்தும்,
ஒரு சில என்னுடைய முயற்சியாலும் எழுந்தவை. நான் என்றுமே பாவாணருக்குக் கடன்பட்டவன். அவருக்குப் பின்னால், பாவலர் ஏறு பெருஞ்சித்தரனார், புலவர் இளங்குமரன், இரா.மதிவாணன், ப.அருளி எனப் பலரும் தொண்டாற்றியிருக்கிறார்கள். இந்தக் காலத்தில் பேரா. கு.அரசேந்திரன் சொற்பிறப்பியலில் ஈடுபட்டிருக்கிறார். என்னென்ன பொத்தகங்கள், நூல்கள் என்பதை ஒருமுறை பட்டியல் இடுகிறேன். நானறிந்து இணையதளங்களில் கிடையாது.
அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,
நீங்கள் என்ன கேள்வி கேட்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. அந்த வாசகம் திண்ணை நேர்காணல் உரையாடலில் இருந்து அப்படியே எடுக்கப் பட்டது. பேரா. ஹார்ட் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஒரு தமிழ்ப் பேராசிரியர்.
அன்பிற்குரிய தங்கமணி,
அந்த வாசகம் சுராவால் சொல்லப் பட்டதல்ல. அதைச் சொல்லியவர் தஞ்சை சுவாமிநாதன்.
நீங்கள் கேட்டிருக்கும் அகராதி, மேலே நான் கூறிய பட்டியலில் வரும். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். கூடியவிரைவில் அந்தப் பட்டியலைப் பதிவு செய்கிறேன்.
அன்பிற்குரிய அலெக்ஸ்,
நீங்கள் கேட்ட கேள்விக்கு மறுமொழியாய் தனிப்பதிவே போட்டிருக்கிறேன்.
அன்பிற்குரிய நற்கீரன்,
உங்கள் கனிவிற்கு நன்றி.
அன்புடன்,
இராம.கி.
அரிய உழைப்பு. போற்றுகிறேன். பரிமானம் என்பது வரையுருவக்கலைகளில் மட்டுமே
'dimension'-க்கு ஒப்பாகும்; பொதுவாகவும் பூதியல்/இயல்பியலிலும் உருவளவை என்பதே ஒத்துப் போகும் என என் மேனாள் மாணவர் - ஆய்வறிஞர் ப. அருளி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், அவர்தம் 'நம் செம்மொழி' நூல்வெளியீட்டு விழாவில் உரையாற்றியதுடன் இதழ்களுக்கு நூல்நிறையும் தந்துள்ளேன். என் வலைப்பதிவில் இற்றைத் தமிழர் நிலை குறித்த 1976 -ஆம் ஆண்டுப் பாவொன்றுக்குப் பின்னூட்டமிட்டிருந்தவர் தாங்கள்தாமே! பற்பல பதிவுகளைப் பார்த்துப் பசி மட்டுமே[கும்பகன்னனுக்கு விளைந்ததுபோன்று] மிகுந்துபோன என் விழிகளுக்குத் தலைவாழையிட்டு விருந்து படைத்தது தங்கள் பதிவுதான் என்பதை இறும்பூதுடன்
தெரிவித்துக்கொள்கிறேன். - பேரா.தேவமைந்தன்[அ.பசுபதி]
நன்றி! நீங்கள் சொல்வதை பார்த்தால் இவை உங்கள் பதிவில் மட்டுமே தற்போது உள்ளன. இவற்றை தேடு வசதியோடு இணையத்தில் சேமிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்.
அன்பின் இராம.கி.,
விபரமான கட்டுரைக்கு நன்றி. பல விடயங்களை விரித்துத் தந்திருக்கின்றீர்கள்.
1. micro economics, macro economics என்பனவாகச் சொல்லும்போது micro, macro இற்கு ஈடான தமிழ்ப்பதங்கள் தேவைதான். ஆனால், அகில அறிவியல் அளவீட்டு அலகுகளாகப் பயன்படுத்தும்போது, மைக்(கு)ரோ, மெகா என்பவற்றுக்கு ஈடான தமிழ்ப்பதங்களைத் தருவது பொருந்துமா?
2. dimension என்பது பரிமானமா? பரிமாணமா?
Post a Comment