குல்>குரு->கரு->கரு-த்தல் என்பது தோன்றல் கருத்து வேர். இது பின்னால் அரும்புதலையும் செய்தல் கருத்தையும் சுட்டும் வண்ணம் விரிந்தது. தமிழரின் நிறமாய் நெடுங்காலம் கருப்பையும் ஊடே சிறு வகையில் சிவப்பையும் சொல்வர். உடல் உழைப்பு கூடக்கூடக் கருத்த தோல் மேலும் கருக்கும். சிவத்த தோல் மேலும் சிவக்கும். கருமம், கருக்குதல் போன்றவை செயலைக் குறிக்க எழுந்த பெயர்ச் சொற்களாகும். செய்தற்கு உரிய ஓர் உடல் உறுப்பான கையை கரமென்றும் சொல்வோம். கரணம் என்பது செய்முறையையும், செயலையும் குறிக்கும். கரணி என்பவன் செய்பவன் ஆவான். கரதலம் = கைத்தலம்.
கரு->கார்->காரம் என்பது இன்னொரு இயல்பான வளர்ச்சி. தரு->தார்->தாரம், வரு->வார்->வாரம் என்பது போல் இதுவும் அமையும். காரம் = செயல், தொழில். காரன் = செய்பவன். தொழிலன். சங்கதத் தாக்கத்தால் காரம்>கார்யம்> காரியம் என்று வடதமிழில் (பாகதத்தில்) இது திரியலாம். இன்னும் சிலர் கார்+இயம் = காரியம் என்று இதைக்கொண்டு முற்றிலும் தமிழென்பார். காரம் என்பதன் வழி, தொழில் செய்வானைக் கார, காரு, காரி, காரின், காரிள் என்றும் பாகதத்தில் சொல்வார்.
ஒரு செயலோ, ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களோ நடந்தால் தான், இன்னொரு செயல் நடக்கும் என்று இக்கு நிளை (if condition) அமைந்தால், முதற் செயலைக் காரணம் என்றும் இரண்டால் செயலைக் காரம் அல்லது காரியம் என்றும் வட தமிழில் சொல்வார், காரணத்தைத் தமிழென்று எற்காத பாவாணர் காரணத்திற்கு இணையாய் கரணியம் என்ற புதுச்சொல்லைப் படைத்தார். இன்றோ காரம், காரன் ஆகியவற்றை ஏற்கும் பொழுது காரணத்தையும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கலாம் என எம்போன்றோர் சொல்கிறோம். அணம் என்பது நெருங்கியிருப்பதைக் குறிக்கும் சொல்லாக்க ஈறு.