Wednesday, January 01, 2025

காவல்

Police - காவலர், Security - பாது காவலர், Watchman - காவலாளி, Bodyguard - மெய்காவலர், Bouncer  - விடுதி காவலர் என்ற சொற்கள் பற்றி யாரோ ஒருவர் ஒருமுறை முகநூலில் கேட்டிருந்தார். காவலை வைத்தே எல்லாவற்றையும் நான் சொல்வது எவ்வளவு நாள் சரி என்று தெரியவில்லை. பயனாளர் பார்வையிற் சொற்கள் வேண்டுமென்றும் அவர் சொல்லியிருந்தார்.   

நகரம், ஊரோடு police ஐ இணைத்துச் சொல்வது பொருத்தமாகும் தான். poly என்பது நகரத்தைக் குறிக்கும். நகரத்தைப் பள்ளி, பாழி என ஒரு காலத்திற் குறித்தோம். (பட்டி = சிறு ஊர்.) பாழிகர்/பாழியர் என்பார் நகரக் காவலர். இன்று இச்சொல்லைச் சொல்ல முடியாது. (பாழி/ பள்ளி என்ற சொற்கள் வேறு பொருளைக் கொள்கின்றன. இத்தனைக்கும் திருச்சிராப்பள்ளி இன்றும் புழக்கத்தில் உள்ளது தான்.) வேறு ஒரு சொல் வேண்டும். முயல்வோம். 

இப்போதெல்லாம் பல ஊர்கள் புரமெனப் படுகின்றன. எனவே புரவகர் என்று police ஐச் சொல்லலாம். புரத்தல்/ புரவுதல் = காத்தல். புரவர் என்பது நகரக் காவலருக்கும் பெருமிதத்தைத் தரும். 

Security என்பது உயிர்களின் சொத்துக்களின் சேமத்தை உறுதிசெய்வது. எனவே சேமுறுதி என்பது Securityக்குச் சரி வரும். சேமுறுதியார் Security ஆட்களுக்குச் சரி வரும்.

Watch = கண்ணுறல். Watchman = கண்ணுறுவார்

Bodyguard  = மெய்க்காவலர்

Bouncer = வேண்டப் படாதவரை இழுத்துப் பிடித்துக் கட்டுபவர். புணைத்தல், பூணுதல் என்பன சேர்த்துக் கட்டுவதைக் குறிக்கும். புணையார் என்பது Bouncer க்குச் சரி வரும்.


எண்ணிப் பாருங்கள்.

Police = புரவர் 

Security = சேமுறுதி 

Watchman = கண்ணுறவார்

Bodyguard = மெய்க்காவலர் 

Bouncer = புணையார் 

காவல் என்பதை gaurd இற்கு மட்டும் பயன்படுத்தலாம். 

அன்புடன்,

இராம.கி. 

No comments: