ஓம் என்ற சொல்லிற்குக் ”காப்பாற்று” என்று பொருள் சொன்னவுடன், சங்கதத்தில் பொருள் சொல்ல முடியாத நண்பர் ஒருவர் திருமூலரின் ஒன்பதாம் தந்திரத்தில், பிரணவ சமாதி என்கிற பகுதியில் இருக்கும் 2639 ஆம் பாட்டை எடுத்துச் சொன்னார்.
ஓமெனும் ஓங்காரத் துள்ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரத்து ஒள்முத்தி சித்தியே
என்பது அந்தப் பாட்டு. அதைப் படித்தவுடன் சிரித்துக் கொண்டேன். இதற்குப் பொருள் சொல்லும் போது பல்வேறு உரையாசிரியர் தமக்கு வேண்டியதை எல்லாம் சேர்த்துச் சொல்வர். என் போக்கு அதுவல்ல, நான் கட்டாயம் உரைகளை படிப்பேன். அதே பொழுது சற்று கிடுக்கத்தோடு (criticism) படிப்பேன். பாட்டிலில்லாத சொற்களை தேவையின்றி ஊடுசேர்ப்பது என் வழக்கமில்லை. (மந்திரம், தந்திரம் என்ற சொற்களுக்குக் கூடத் தமிழில் தான் சரியான பொருளுண்டு. சங்கதத்தில் வழிப்பொருள், பயன்பாட்டுப் பொருள் மட்டுமே உண்டு. அதுவுங்கூட அவர் கடன் வாங்கியது தான். எந்த இந்தை யிரொப்பியனிலும் அப்படிச் சொற்கள் கிடையா. சங்கதத்தில் ”அது இருக்கிறது, இது இருக்கிறது” என்று கால காலமாய்ச் சொல்லி தமிழைத் தாழ்த்தியது அதிகம். இனிமேலும் அப்படி எத்தனை நாட்களுக்கு நாம் இருப்பது? )
மொழி என்பதற்குச் சொல், பொருள் என்றே அகர முதலிகள் அருத்தம் கூறுகின்றன. அகரம், ஆகாரம் போல் இது ஓங்காரம். ஓம் எனும் ஒலி. நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே பொருள் சொல்லுகிறேன்.
ஓம் எனும் ஓங்காரத்துள் சொல்/பொருள் இருக்கிறது.
ஓம் எனும் ஓங்காரத்துள் உருவும், அருவும் இருக்கின்றன.
ஓம் எனும் ஓங்காரத்துள் பல்வேறு பேதங்கள் இருக்கின்றன.
ஓம் எனும் ஓங்காரத்தில் ஒளிரும் வீடுபேறும் அதனறிவும் இருக்கின்றன.
இதற்குமேல் பொருள் சொல்லவேண்டுமானால், உரு, அரு பற்றியும், பல்வேறு பேதங்கள் பற்றியும் நீட்டி முழக்கவேண்டும். அதேபோல வீடுபேற்றையும் அதனறிவு பற்றியும் விளக்கவேண்டும். வேறொரு முறை பார்ப்போம். இங்கு எனக்கு முகன்மையானது ”ஓம் எனும் ஒலிக்குத் தமிழ்ச் சொல்லும், பொருளும் உண்டு” என்பது தான். I stand vindicated, Your honor! நான் திருமூலருக்கு முரணாய் ஏதுஞ் சொல்லிவிட வில்லை. சங்கதப் பொருள் ஏதேனும் இருந்தால் அறிந்தவர் சொல்லட்டும்.
2 comments:
அருமை ஐயா
நன்று
Post a Comment