Tuesday, February 15, 2022

ஆதாரமில்லாது எதையும் மொழியாய்வில் கூறாதீர்.

 நண்பர் இங்கர்சால் நார்வே தன்னுடைய Feb 13 முகநூல் பக்க இடுகையில் 100 FACTS OF TAMIL என்ற தொகுப்பை நாடி, ”தமிழ் மொழி இனம் நாடு ஆகியவை பற்றிய தகவல்  துணுக்குகளைப் பட்டியலிடுங்கள்” என்று வேண்டிவருகிறார். அது நல்ல வேண்டுகோள். தன் பங்கிற்குத் தமிழிணையத்தில் உலவுவற்றைத் தொகுத்து, 22 கருத்துகளைக் கொடுத்திருந்தார். அது ஓர் சேகரிப்பு. அவர் சொந்தக் கருத்து அல்ல. இதில் 19 ஆம் கருத்து கீழ்வருவது போல் போகும்.

"According to Walter William Skeat (21 November 1835 – 6 October 1912, a pre-eminent English philologist of his time, and instrumental in developing English as a higher education subject in the United Kingdom), out of 14286 words in The Etymological dictionary of the English language, 12960 (90%) words have its roots in Tamil". 

இதைப்படித்த நான், இதற்கு ஆதாரமெது? திரு Skeat எங்கு எந்தப் பொத்தகத்தில், கட்டுரையில், ஆவணத்தில், நாளிதழில் கூறியுள்ளார்?” என்று கேட்டேன். இதற்கு விடைசொன்ன நண்பர், “இக்கூற்று பல இடத்தில் இருக்கின்றது ஆனால் அதற்கான சான்று எங்கும் கிடைக்கவில்லை அந்த புத்தகத்தில் 23 முறை தான் தமிழ் என்ற சொல் வருகிறது. மற்றவை ஆரிய சொல் சமஸ்கிருத சொல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது கண்டிப்பாக இது உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன்” என்று சொன்னார். 

இதற்கு மறுமொழியாய், :நான் இப்பொத்தகத்தை pdf வழி இறக்கியுள்ளேன். சில சொற்களுக்குப் படித்தும் இருக்கிறேன். பெரிய பொத்தகம். மிகுந்த நாள் பிடிக்கும். அவர் முன்னுரையை இன்னும் படிக்க வில்லை. 90% என்பது போன்ற வீச்சுக் கூற்றுகளுக்குச் சான்றிருப்பது போல் தெரியவில்லை. ஆதாரமின்றிப் பேசுவதால். தமிழின்பெயர் இணையத்தில் வேற்று மொழியியலாளரிடம் கீழே கிடக்கிறது. ஆய்வில்லாத வெற்று உணர்ச்சியாளர் தம் கூற்றுகளால் தமிழைக் கீழே தள்ளுகிறார். தமிழரிடம் ஆய்வு கூடவேண்டும். கொஞ்சம் அடக்கமும், துலை மனப்பான்மையும் நமக்கு வேண்டும்.” என்று சொன்னேன்.

தமிழில் பெருமிதம் வேண்டும். ஆனால் ஆதாரமில்லாத பெருமிதம் மிகவும் பாதகத்தை விளைவிக்கும்.  இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்று கட்டுரைகளில் பல இடத்தும் சொல்லும் நான் தான் இங்கே ”துலை மனப்பான்மை வேண்டும்” என்கிறேன்..


No comments: