”பொருட்டு, ஆக, for the sake of, on account of” என்ற பொருள்களில் வினையெச்சமாய் (Adv) "ஓசரம்" சென்னைப் பகுதிகளில் பயிலும். எ. கா. "உனக்கோசரம் பார்க்குறேன். ” "எனக்கோசரம் சொல்னு போனாரு." தெலுங்கில் இச்சொல் “kōsaramu, kōsamu" என்றும், கன்னடத்தில் “ஓசகரா” என்றும் பயில்கிறதாம். இச்சொல்லின் தமிழ் இணைச்சொல் பற்றிப் பலருக்கும் ஐயமுள்ளது. இவ்விழையில் என் மாற்றுக் கருத்தைச் சொல்ல விழைகிறேன். ஓசரத்தின் தமிழ் இயலுமையைப் பார்ப்போம்.
உல்>ஒல் எனும் வேரில் பிறந்த வினைச்சொல் ஒன்று-தல். ஒல்+ந்+து = ஒன்று என்பது இதன் பெயர்ச்சொல் வடிவம். ஒல்>ஒலு>ஒரு என்பது ஒன்று-தல் வினையால் பிறந்த பெயரெச்சம். இது மேலுந் திரிந்து ஓர் என்பதையும் உருவாக்கும். உயிர்மெய்யில் தொடங்கும் பெயர்களுக்கு முன், ”ஒரு”வையும். உயிரில் தொடங்கும் பெயர்களுக்கு முன், ”ஓர்” ஐயும் நாம் புழங்குகிறோம். ஒருவின் நீட்சியாய், ஒருக்கு என்பது, ”ஒரு முறை, ஒரு தடவை” என்பவற்றைக் குறிக்கும். “ஒருக்காச் செய்து காட்டு, அதைப் பார்த்து, நான் செய்கிறேன்”.
இனி, ஒருக்கு + உள்ளித்தல் = ஒருக்குளித்தல் = ஒருக்களித்தல்> ஒருக்கடித்தல்> ஒருக்கணித்தல் = ஒரு பக்கமாய்ச் சாய்தல் என்ற சொற்கள் உருவாகும். உள்ளித்தல் = இருத்தல், சிவகங்கை வட்டாரத்தில் ”ஒருக்களித்துப் படுத்தான்” எனில், ”மல்லாக்கப் படுக்காமலும், குப்புறப் படுக்காமலும், கொஞ்சம் மட்டும் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal- சாய்ந்தாற் போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது” என்ற பொருள் கொள்வர்).
இதன் வேறு தொடர்ச்சியில் ஒருக்குத்து என்பது ஒருபக்கத் தலைவலியைக் குறிக்கும். இனி, ஒருச்சரிதல்> ஒருச்சரித்தல் என்பதுவும் ”ஒருபக்கமாய்ச் சாய்தல், to shut partially on one side, to set slantingly” என்பதைக் குறிக்கும். ஒருச் சாய்தல் = ஒருபக்கம் சாய்தல்; ஒருசார் = ஒருசார்பு = ஒரு பக்கம் “ஒருசார் அருவியார்ப்ப “என்பது புற. 115.1 வரும் சொல்லாட்சி. மேலும், ஒருசாரார் = ஒரு பக்கத்தார்; ஒருசாரம் = ஒரு பக்கம் சாய்ந்த நிலை. ஒருத்தலை = ஒரு பக்கம். ஒருதலை = ஒரு சார்பு; ஒரு திறன் = ஒரு பக்கம்
சார்தல் போலவே சருவுதல் என்பதும் ஒருபக்கம் சரிதலையும், சாய்தலையும் குறிக்கும். சுல்>(சுரு)> சரு > சருவு-தல் = சாய்-தல், சரிதல். சரு>சருகு-தல் = சாய்-தல், சரி-தல். சரகம் = எல்லை, நாட்டின் பகுதி. ஒருசருவம் என்பது பேச்சு வழக்கில், ஓ(ர்)சருவம் = ஓசரம் என்றாக முடியும். இன்னொரு வகையில் ஒசிதல் என்பதும் சாய்தல் பொருள் காட்டும், ”வாயருகு வந்து ஒசிந்து மறிய” என்பது சீவக 595 யில் வரும் சொல்லாட்சி. ஒருஞ்சரித்தல் என்ற சொல்லின் இடைக் குறையாய், ஒ(ர்)ஞ்சரித்தல்> ஒஞ்சரித்தல் என்றும் திரியும். இதன் பொருளும் ஒரு பக்கமாய்ச் சாய்தல் தான். ஓஞ்சரி தீர்ப்பு = ஒரு சார்பான தீர்ப்பு; ஒஞ்சரி வழக்கு = ஒரு சார்பான வாக்கு. ஒஞ்சரமும். ஓசரமும் தமிழ்வட்டாரச் சொல் ஆகலாம்.
முடிவாக, உனக்கோசரம் பார்க்குறேன். = உன் பக்கச் சாய்வில் பார்க்கிறேன்.
எனக்கோசரம் சொல்லு = என் பக்கச் சாய்வில் சொல்லு.
1 comment:
உங்கள் ஆய்வு மிகச் சரி என்றே கருதுகிறேன்.
Post a Comment