Monday, January 03, 2022

சமுகத் தளங்களில் கலைச்சொல்லாக்கம்

 அகராதியியல் நாளைக் கொண்டாடும்  செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தார், சொற்குவைப் பன்னாட்டுக் கருத்தரங்கைக் கூட்டி, “சமூகத் தளங்களில் கலைச் சொல்லாக்கம்” என்ற தலைப்பில் எனை உரையாற்ற அழைத்தமைக்கு முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றி. கலைச்சொல்லாக்கம் தொடர்பாய் சில கவன ஈர்ப்புகளை இங்கு சொல்ல விழைகிறேன். 

தமிழில் சமுகத்தைக் குமுகமென்பார். பலர்பால், பலவின்பால் சொற்கள் குமுகத்தைக் குறிக்கும். கும்மல், கும்பல், குமியல், குமுதல், குமித்தல், குமுக்கு  என்ற சொற்கள் கூடல், திரளல். பெருகல், பரவல் கருத்துகளைக் குறிக்கும். குலம், குழு, குழும்பு,  குடும்பு, குடும்பம், குடி, குமுகம், குமுகாயம், கணம்  என்பனவும் வெவ்வேறு கட்டமைப்புள்ள மாந்தர் கூட்டத்தைக் குறிக்கும். மகரப் போலி வகரமாகி, குவியல், குவிதலும் அதே பொருளில் வரும், இனம், புலம், தளம் என்பனவும் கூட்ட வெளிப்பாடுகளே. 

உல்/உள் என்பது உன்/உண் எனத் திரிந்து, ஒன்றல் கருத்தையும், தனிமைக் கருத்தையும், ஒன்றெனும் எண்ணுக் கருத்தையும் சுட்டும். உல்> ஊல்> ஊன் என்பது ”பற்றியது” எனப் பொருள்படும். (எலும்பைப் பற்றியது ஊன்).  ஊண் என்பது உள்ளுதலைக் குறிக்கும். ”ஒன்றிற்கு” மாற்றுச் சொல்லும் தமிழிலுண்டு. இயைதல்/ இயைபு = பொருந்தல். ஒன்றாதல். இயைதலின் நீட்சி, இயைகுதல், இய(ல்)குதல், இச்சொல் மேலும் திரிந்து ஏகுதலாகும். ஏகுதல், ஏகமெனும் பெயர்ச்சொல்லை உருவாக்கும்.  ஏகத்தைப் பலரும் வடசொல் என்பார். வடதமிழ் என நான் சொல்வேன்.

தமிழொடு வேதமொழி கலந்தே வடபால் மொழிகள் உருவாகின. ஒரு காலத்தில், வட்டாரப் பாகதங்களின் கலவைப் பேச்சே வடமேற்கு வட்டாரத்தை அடிப்படையாக்கி சம் + கதம் = சங்கதம் என்ற மொழி உருவானது. ஆழ்ந்து ஆய்ந்தால், வடபுல மொழிகளின் அடிப்படை தமிழே. இந்தையிரோப்பிய மொழிகள் பலவும் SVO ஆகக் காட்சியளிக்க, வடபால் மொழிகள்  SOV ஆவது கூட, அவற்றின் மூலம் தமிழ் என்பதை உணர்த்தும். ஏகு> ஏகம்> ஏக் என்பதே வடபுல மொழிகளில்  நிலைத்தது. ஒன்று,  தென்புலச் சொல்லெனில், ஏகம், வடபுலச் சொல்லாகும்.

ஒன்றை ஈர்ந்து, இரள்ந்து பெற்றது இரண்டு எனும் அடுத்த பெயர். இருமைப் பால் சங்கதத்தில் மட்டுமேயுண்டு. இரண்டை அடுத்தது  மூன்று. இதன் சொற்பிறப்பு எளிது.  முன்வந்தது முகம். முகத்தில் முன்வந்தது மூக்கு. ”3 தோல், 2 துளை” என்ற வடிவில் அமைந்தது மூக்கு. முக்கும் வாயும் சேர்ந்தது மூஞ்சி. மூக்கின் மாற்றுச் சொற்களான நாசி, துதி என்பனவும் தமிழ்வழிப் பிறந்தவையே. துதி என்பது வேறு திரிவில் துள்> துய்> துயி> த்ருயி> த்ரி ஆகி இந்தையிரோப்பிய மொழிகளில் நிலைக்கும். மூக்கின் வழி பழந்தமிழர் 3 எனும் எண்ணை உணர்த்தினார். 1 முதல் 3 வரை எண்ணிக் காட்டும்  பல்வேறு பழங்குடியார் அதற்கு அப்புறம் பல்லைக் காட்டிப் பல (many)” எனும் கருத்தைச் சுட்டினார்.

பல், பல எனும் பன்மைக் கருத்து, ஆழ்ந்த சிந்தனைக்கு அப்புறமே, கை, நலிகை, என உயரெண்கள் விரிந்தன. எண்கள் பற்றிய சுவையாரச் சொற்பிறப்பினுள் இப்போது போகவேண்டாம். பல என்பதைக் குறிக்க மேலும் 2 சொற்கள் தமிழிலுண்டு. இன்னொரு மாந்தனை, அல்லது பல மாந்தரை, எல், எலா, எலே என்பது தென்பாண்டி அழைப்பு. இவ் ஒலிக்குறிப்புச் சொல்லின் வழி எல்லார், எல்லாம் (all) என்பவை எழுந்தன. அடுத்து, அன்+ஏகம் = அனேகம் = ஏகமிலாதது, எனவே பல என்று பலவின் பாலையும். அனேகர்> அனைவர் என்று பலர் பாலையும் குறித்தது. ,அனேகத்தோடு அத்துச் சாரியை இணைத்து அனைத்தெனும் ஒன்றிலாப் பன்மை எழுந்தது.   

குழு, குழும்பு,  குடும்பம், குடி, குலம், குமுகம், குமுகாயம், கணம், இனம்  எனும் குமுகத் தளங்களுக்குப் பூதிகத் தோற்றம் (physical appearance) உண்டு. அவை பற்றி இவ் உரையில் நான் பேச முற்படவில்லை. மாறாக, நுட்ப வளர்ச்சியில் எழுந்த, மெய்நிகர் (virtual) தோற்றங் காட்டும் குமுகத் தளங்களைப் பற்றிப் பேசுகிறேன். e-mail lists/ மடற்குழு, blogs/வலைப்பதிவுகள்,  Facebook/முகநூல், Twitter/கீச்சு, Orkud, linked-in, Google plus, WhatsApp, YouTube, Instagram, WeChat, Snapchat, Messenger, Skype, Zoom, Microsoft Meeting, Google class room என்ற பொய் முகங்களும், பொம்மை முகங்களும் உண்மை முகங்களுக்கு நடுவே ஆட்டம் காட்டும். 

இக் குமுகத் தளங்களின் அடிப்படையாய்,  தமிழ் எழுத்துகளைக் காட்டும் குறியேற்ற (encoding) வளர்ச்சி ஒரு பெருஞ்சோகத்தில் எழுந்தது. ஈழத்தில் நடந்த 1983 கலவரத்திற்கு அப்புறம் ஈழத்தமிழர் அவர் நாடு விட்டு விலகி, வெவ்வேறு நாடுகளில் குடி புகுந்தார். இதனால் குடும்பங்கள் சிதறின. பெற்றோர் ஓரிடம், பிள்ளைகள் வேறிடம், அண்ணன்-தங்கைகள் இன்னோரிடம் என்றானது. இவ் வெளியேற்றத்தின் ஊடே, உறவினர் இருப்பு தெரியவேண்டி, மடல் தொடர்புத் தேவையும் தமிழருள் எழுந்தது. There was a bent-up demand in the Tamil Community to get in touch with relatives. இதற்கான நுட்பியல் தீர்வு, தமிழ்நாட்டார். மலேசிய, சிங்கப்பூர் நாட்டார் ஆகியோரின்  பங்களிப்பால், மின்னஞ்சல் வழி கிடைத்தது.

தமிழருக்கென முதலில் எழுந்த மடற்குழு. “தமிழ் இணையம்” என்று பெயர் கொண்டது. Tamil.net ங்கிலத்தில் அழைப்பார்.  ”இணையம்” என்ற சொல் மலேசியாவில் எழுந்தது. ISCII குறியேற்றம் 1985 க்கு அருகில் எழுந்துவிட்டாலும், அது பெரும்பாலும் பயனின்றி, நுட்பியல் பரணிலேயே கிடந்தது. 1997 இலிருந்து TSCII குறியேற்றத்தில்  Tamil.net இயங்கியது.  தமிழிணைய முன்னோடிகள் எல்லோரும் இக்குழுவில் தான் இயங்கினர். 1999 இல் சிங்கப்பூரில் முதல் இணைய மாநாடு நடந்தது. 2000 த்தில் சென்னையில் அடுத்த மாநாடு நடந்தது.

அப்போதே 8 மடைக் குறியேற்றம் விட்டு 16 மடைக் குறியேற்றம் போயிருக்கலாம். TACE எனும் 16 மடைக் குறியேற்றத்தில் 300 க்கும் மேல் குறிப்புள்ளிகள் பெற்று முன்னேறி இருக்கலாம். அதை விடுத்து நம் உள்முரண்களால், ஆழ்ந்த ஒற்றுமைக் குறைவால், TAB/ TAM என முடங்கிப் போனோம். இன்னும் சொன்னால் தூங்கிப் போனோம். 1980 களில் இந்திய ஒன்றிய அரசு  ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் ISCII யைத் தூக்கிக் கொடுத்து. ஒருங்குறிச் சேர்த்தியம் 128 குறிப்புள்ளிகளைக் கொடுத்து, தமிழைக் குடியேற்றியது. ஒருங்குறியாருடன் 2000 த்திலே  பேசியிருந்தால் தமிழ் பெரும் உயரத்தில் நின்றிருக்கும். முன் நடந்தவற்றை இப்போது பேசிப் பலனில்லை. எப்படியோ, எல்லோரும் ஒருங்குறிக்கு வந்தோம். ஆயினும் 8 மடைக் குறியேற்றத்தில் இன்றும் உழல்வோர் கணிசமாய் உள்ளார். வானவில், பாமினிப் பயன்பாட்டிலிருந்து இன்னும்  பலர் வெளிவரவில்லை. 

மடற்குழுக்களும், வலைப்பதிவுகளும் TSCII இலிருந்து சிச்சிறிதாய் ஒருங்குறிக்கு மாறினார். ஒத்த கருத்தாரின் குமுகத்தை வளர்க்கவும், செய்தி/கருத்து பரிமாற்றத்திற்கும், குமுகப் பிணைப்புகளை வெளிப்படுத்தவும் 20/25 ஆண்டுகளுக்கு முன், குமுக வலைத்தளங்கள்  (Social Networking Sites) எழுந்தன.  இணையச் சேவைகள்/  தளங்கள்/  வலைத் தளங்கள் என இவற்றைச் சொல்வார். Social media- குமுக மிடையம்  என்ற சொல்லும்  உண்டு. (ஊடகம் எ நான் ஆள்வதில்லை)  புது நுட்பியல் புதுக் கலைச்சொற்களை முன் கொணர்ந்தது. குமுகத் தளங்களில் மெய்நிகர்  முகங்களிடையே பரிமாறும் உள்ளீடு பொதுவாகலாம்.  எனினும் அடிப்படைக் கலைச்சொற்கள் தேவைப்பட்டன.  moderation = மட்டுறுத்தல், Post = இடுகை, comment = முன்னிகை, feedback = பின்னூட்டம், system = கட்டகம், Domain = கொற்றம் இப்படிப் பல சொற்கள் தேவைக்கேற்ப உருவாகின. என் வலைப்பதிவில் இன்னும் பல சொற்கள் உள்ளன. வேண்டுவோர் அங்கு தேடுங்கள். இனி நடப்பிற்கு வருவோம்.

இற்றைக் காலத்தில் தமிழில் உள்ள மடற்குழுக்கள்/ e-mail lists, வலைப்பதிவுகள்/ blogs போன்றவை தம் வீரியத்தை இழந்து போயின. ஏனென்று தெரியவில்லை. அதேபோது இவை இல்லாமலும் இல்லை. முகநூலும் (Facebook), கீச்சியும் (Twitter) இன்று பெரு நிறுவனங்கள். கணக்கற்றோர் இவற்றில் இழைகிறார். ஆர்குட், கூகுள் plus போன்றவை அவ்வளவு தழைக்கவில்லை. Linked-in ஓரளவு தழைத்தது.   WhatsApp, YouTube, Instagram, Snapchat, Messenger என்பவை செழித்து வளர்ந்தன. சூடிகை  பேசிப் (smart phones) பரவலால், இந்தியாவில்  WhatsApp கண்ணாப் பின்னா என வளர்கிறது. SnapChat, Skype, Zoom, Microsoft Meeting, Google Class Room போன்றவை விதப்பான பயன்பாட்டிற்கு இதமாய் உள்ளன.

இனி முகநூலுக்கு வருவோம். இது 2004 இல் எழுந்த இணையவழிக் குமுக வலையமைப்பு. ஆர்வர்டில் படித்துக் கொண்டிருந்த (மார்க் சக்கர்பர்கு எனும்) மாணவரால், ஆர்வர்டு மாணவர்க்கு எனத்  தொடங்கப் பட்டு, பின் வேறு ”ஐவி லீகு” மாணவரையும் சேர்த்து  விரிந்து பரவியது. இற்றை முகநூலில் 13 வயதான உலக மாந்தர் யாரும் சேரலாம். அலெக்சா மதிப்பீட்டின் படி, முகநூலே இன்று 2 ஆம் பெருவலமான இணையத் தளம். WeChat எனும் சீன வலைத்தளம். முகநூலுக்குப் போட்டியாய் இயங்குகிறது. 

அடுத்தது துவிட்டர் (Twitter) சேவை. தமிழில் கீச்சி என்பார். 140 கீற்றுகளாலான குறுஞ்செய்திகளை (துவீட்டு - கீச்சு) அனுப்பவும், வாசிக்கவும் வாய்ப்புகளை இதில் வழங்குகிறார். படங்களைப் பரிமாற்றும் Instagram உம் ஓரளவு துடித்து எழுகிறது. முகநூலுக்கு மாற்றாய் Snapchat விளங்குகிறது. இன்னொரு பக்கம் YouTube ஆல் பலரும் ஈர்க்கப்படுகிறார்.  அடுகு (audio) நூல்களைப் போல் யூடியுப், இன்னொரு தொடர்புக் கருவி. Speech to text, Text to speech என்ற நுட்பியல்கள் வளர்ந்த பின், அச்சு நூல்கள் குறைந்து மின்நூல்கள் எழுகின்றன. ”எதிர்காலம் எது நிலைக்கும்? எது மறையும்?” என்று சொல்வது கடினம், பொதுவாய், எழுத்து குறைந்து, பேச்சும் காட்சியும் குமுக வலைத்தளங்களில் கூடுகின்றன.

இக் குமுக வலைத்தளங்களில் தேவைப் படுவதும், இருப்பதுமான கலைச்சொல்லாக்கம் பற்றிப் பேசுமுன், இத்தளங்களில் கணிசமான உறுப்பினர் தமிழில் உரையாட வேண்டியது முகன்மை என்று நாம் உணரவேண்டும். தமிழில் நாம் உரையாடா விட்டால், இத்தளங்கள் தமிழ் உகப்பை ஏன் வைத்திருக்க வேண்டும்? (இதே கதை நம்மூர் வங்கிகளின் ATM இலும் உண்டு. அங்கு  தமிழுக்கான உகப்பைக் கொடுத்திருப்பர். ஆனால், நம்மில் பலரும் தமிழை அதில் புழங்குவதில்லை. இப்படி இருந்தால், தமிழை அவர் ஏன் அங்கு வைக்க வேண்டும்? எண்ணிப் பாருங்கள்.) வலைத்தளங்களிலும், தமிழ்ச் சேவையை நாம் பயனாக்காது விட்டால், கலைச்சொல்லாக்கம் என்பது ஏன் எழ வேண்டும்?.

இதுபோன்ற ”தேவையை (demand)” நாமேன் கண்டுகொள்வதில்லை? தமிழர் மட்டுமின்றி, தமிழ் அரசினரும் இச்சிக்கலை உணர வேண்டும். தமிழர் குமுகத்தில் தமிழுக்குத் தேவை இல்லெனில், தமிழ்ச் சொற்களின் அளிப்பைக் (supply) கூட்டுவதில் எந்தப் பயனும் இல்லை. குமுக வலைத்தளங்கள் எல்லாம் தமிழ்மேல் கொண்ட காதலால், தமிழ்ச் சேவை தருவதில்லை. தமக்கு வருமானம் கிட்டுமென எண்ணியே தமிழை அங்கு வைத்துள்ளார். தமிழ் உகப்பை நாம் பயனுறுத்தா விடின், தமிழ்ச்சேவையை அவர் நிறுத்தி, எம்மொழியில் வருமானம் வருமோ அதற்குப் போய்விடுவார். அப்புறம்  10 கோடித் தமிழர் எவ்வளவு குய்யோ முறையோ என்று கத்தியும் பயனில்லை. எண்ணிக்கையில் நம்மைவிடக் குறைந்தோர் எல்லாம் வலைத்தளச் சேவை தொடர்ந்து பெறுகிறார். வளம் அடைகிறார்.  தமிழில் மட்டும் சேவை குறைகிறது.

இன்னொரு காட்டும் சொல்கிறேன். வங்கிகள், புது வைப்பு (deposits) தொடங்குவதற்கோ, கடன் அட்டைகள் தருவதற்கோ, உங்களைத் தொடர்புகொண்டு இந்தியிலோ, ஆங்கிலத்திலோ பேசினால், ஏன் ஆங்கிலத்தில் மறுமொழி?  தமிழில் பேசினால் என்ன? அப்படிப்  பேசினால், கொஞ்ச நாட்களில் அவரும் தமிழ்பேச முன்வருவார். 4 தமிழருக்கு வேலைகிட்டும். இதே நிலைதான்  பங்குத் தரகர் அழைப்புகளிலும் நடக்கிறது. தமிழ்பேசும் தேவையை உணர்கிறீர்களா?   தேவைக் கருத்தைப் 20, 25 ஆண்டுகளாய்ச் சொல்கிறேன். பலருக்கும் புரிந்து போல் தெரியவில்லை. நம் அரசும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை. 

நண்பர்களே! எங்கெலாம் முடியுமோ, அங்கெலாம் தமிழ்த் தேவை கூட்டுங்கள். தமிழ் வளரும். தமிழ்க் கலைச்சொல்லாக்கம் தானே எழும். தமிழ்த்தேவை கூட்டாது, ஏராள வல்லுநரை வைத்துச் சொல்லாக்கி வரிசை வரிசையாய் எத்தனை நூல்கள் வெளியிட்டாலும் அவை நடைமுறைக்கு வாரா. இற்றைத் தமிழ்க்குமுகப் போக்கு விந்தையாகவும் கவலை தருவதாகவும் உள்ளது. ”ஆங்கிலமே நமக்குச் சோறு போடும். தமிழ் சோறு போடாது” எனும் கருத்து நம் மக்களிடம் ஆழ உறைந்து கிடக்கிறது. தங்க ஊசியை இருளில் தொலைத்து, வெளிச்சமுள்ள இடத்தில் தேடுகிறோம். எண்ணிப் பாருங்கள் இது சரியா?

தங்கிலீசு என்பது தமிழ்ச்சொல்லை ஊடுவைத்து உரோமன் எழுத்தில் வலம்வரும் ஏந்து. தமிங்கிலம் என்பது ஆங்கிலச் சொல் கலந்து தமிழெழுத்தில் வலம்வரும் ஏந்து. பொதுவிடங்களில் தங்கிலீசும், தமிங்கிலமுமே தமிழர் பழகினால், தமிழில் கலைச்சொல்லாக்கம் தேவையில்லை என்றாகாதா?. தமிழ் வணிகமொழி ஆகாது, வேலைமொழி ஆகாது, பத்திமொழி ஆகாது, ஆட்சி மொழி ஆகாது, கல்விமொழி ஆகாது, வழக்காடுமொழி ஆகாது இருந்தால், கலைச்சொல்லாக்கம் எதற்கு? இலக்கியம் எதற்கு? ஆவணங்கள் எதற்கு? தமிழ்நாட்டில் விற்கும் சூடிகைக் கருவிகள் (Smart tools) தமிழ்வசதி பெறாவிட்டால், தமிழ்க் கலைச்சொல்லாக்கம் எதற்கு? (இப்போக்கை நடுக்கிழக்கு நாடுகளில் காண முடியாது. அரபியில் வசதி இல்லெனில், வெவ்வேறு கருவிகளை ரபு நாடுகளில் விற்க விட மாட்டார்.)  

இங்கு IT படித்தவர் யாருக்கோ, எந்நாட்டில் இருப்பவருக்கோ  எழுத்தர் (clerk) சேவை செய்து கொண்டிருந்தால் பணம் சம்பாரிக்கலாம். ஆனால் தமிழ் நிலைக்குமா? தமிழ்க்கலைச்சொல் ஏன் உருவாக வேண்டும்? ங்கு அறிவியலாய்வும், நுட்பியல் (technology) ஆய்வும் நடக்கப் போவதில்லை எனில், அடவு (design) செய்யப் போவதில்லை எனில், சூடிகைக் கருவிகள் பயன்படப் போவதில்லை எனில், தமிழ்க் கலைச்சொல் ஏன் உருவாக வேண்டும்? நாம் வெறுமையில் வேலை செய்வதாய் உங்களுக்குத் தோன்றவில்லையா?  தமிழில் ஆக்க பூருவமான வேலை செய்யவில்லை எனில் இம்மொழி நிற்குமா?

இன்னொன்றும் சொல்லவேண்டும். உங்களுக்குக் கசக்கலாம். என்னை மன்னியுங்கள். நாம் தமிழரா? தமிங்கிலரா? அல்லது தங்கிலீசரா? தமிழ்க் குமுகத்தைக் கூர்ந்து அவதானித்தால் 50/60/70 அகவையர் தமிழராகவும், 30/40/50 அகவையர் தமிங்கிலராகவும் 10/20/.30 அகவையர் தங்கிலீசராகவும் இன்று காட்சியளிக்கிறார். நான் விளையாட்டாய்ச் சொல்லவில்லை. ஒருமுறை சென்னை மாநிலக் கல்லூரியின் மேனாள் ஆங்கிலப் பேராசிரியர் சந்திரபோசு தமிழுலக மடற்குழுவிற்கு ஒரு செய்தி தெரிவித்தார். அதை அப்படியே வெட்டி இங்கு சொல்கிறேன்.

-------------------------

பொங்கலன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் எப்.எம். வானொலியிலிருந்து நேயர்களை தொலைபேசியில் அழைத்து கடி சிரிப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஒரு சுவராஸ்யமான உரையாடலைக் கேட்டேன்.

" நீங்க என்ன படிக்கிறீங்க விக்னேஷ்"

" நான் பிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன்"

" என்ன கடிஜோக் சொல்லப் போறீங்க"

" உயிரில்லாமல் ஆகாயத்தில் பறக்கும் பறவை எது?"

" ம் ம் ம் ஆகாய விமானம்"

" இல்லை. தப்பு "

" தெரியலையே. நீங்களே சொல்லுங்க"

" இது தெரியாதா? ஏரோப்ளேன் "

" அதானே நானும் சொன்னேன் "

" பொய் சொல்லாதீங்க. ஆகாய ன்னு என்னமோ சொன்னீங்களே"

" அது தான் ஆகாய விமானம் "

" அது தப்பு தான. ஏரோப்ளேன் தான் கரெக்ட் "

இப்போது சொல்லுங்கள். 5 ஆம் வகுப்பு மாணவனுக்கு ”ஆகாய விமானம்” தெரியவில்லை. aeroplane தான் தெரிகிறது. நாமோ வானூர்தி, வான்பறனை என்று கலைச்சொல் படைக்க முயல்கிறோம். இது விழலுக்கு இறைத்த நீரா? எப்படிச் சீரழிகிறோம், பார்த்தீர்களா?

-------------------------------------------------------------------------------

இற்றைக் காலத்தில் அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பெருத்த இடைவெளி. தாத்தாக்களை விட்டுச் சிறார் எங்கோ சென்றுவிட்டார். இதே நிலை அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கும்.  ஆங்கிலவழிப் பாடம் விதவிதமாய் இங்கு பெருகுகிறது. நம் மக்களும் அதை விரும்புகிறார். முடிவில் தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத, தமிழ் இளைஞர் கூட்டத்தையே நாம் வளர்க்கிறோம்.

உங்களுக்குத் தெரியுமா? பரதநாட்டியம் பயிலும் மாணவியர் உரோமன் எழுத்தில் தமிழ்ப் பாட்டெழுதிப் படிக்கிறார். நாட்டியம் கற்றுக் கொள்கிறார். நம்மூர்ப் பிள்ளைகளுக்குத் நம்மூர்க் காய்கறிகளின் பெயர், மரங்களின் பெயர், விலங்குகள், பறவைகளின் பெயர் தெரியவில்லை. நம்மூர்ப் பூகோளம்,, வரலாறு, பண்பாடு, எதுவும் விளங்கவில்லை. திரைப்படம் மட்டுமே தெரிந்து வைத்துள்ளார். தலைவர் படம் வந்துவிட்டது என்று மச்சான்களைக் கூட்டிக்கொண்டு, பென்னம் பெரிய cut-out களுக்குப் பாலூற்றப் போகிறார். 100 கோடியில் தமிழ்த்தாய்க்குச் சிலை வைக்க விரும்பும் நாம், கண்ணெதிரே தமிழ்ப் புழக்கம் குறைவதை உணராது உள்ளோம். கண்மூடி, “தமில் வால்க” என முழங்குவதோடு  நின்று விடுகிறோம்.   

தேவையால் உந்தப்பட்டு குமுக வலைத்தளங்களில் தமிழ்ச் சேவை விரிந்தால் தான், இவற்றில் பங்கெடுக்க, மக்குக் கலைச்சொற்கள் வேண்டும்.  தள நிர்வாகம், பேணலுக்கு ஆங்கிலம் போதும் தான். ஆனால் உள்ளீடு தமிழில் இருப்பது முகன்மை. தேவை என ஒன்றிருந்தால், கலைச்சொல்லாக்கம் செய்வது அப்படி ஒன்றும் கம்ப சூத்திரமில்லை. ஒருசில அடிப்படை விதிகளைக் கொண்டு சொல்லாக்கம் செய்துவிடலாம். அந்த அடிப்படைகளில் சிலவற்றை இனிப் பார்ப்போம். 

எந்த மொழியிலும் வினைச்சொற்கள் 10-15% இருந்தால் பெயர்ச்சொற்கள் 85-90% இருக்கும். ஒவ்வொரு பெயர்ச் சொல்லையும் ஆக்குமுன், அதனுள் உறைந்துள்ள வினைச்சொல் ஏதென்று பாருங்கள். ஒற்றை ஆங்கிலச் சொல்லை வைத்து, அதற்குத் தமிழ்ச்சொல் தேடாதீர்கள். உறவுள்ள 7, 8 சொற்களை ஒரு தொகுதியாக்கி உள்ளிருக்கும் ஒழுங்கைக் கவனியுங்கள். துல்லியத்தை விட்டுவிடாதீர். ஒப்புக்குச் சப்பாணி வேலை வேண்டாம். பாமரருக்கு ஒரு சொல். படித்தவருக்கு இன்னொன்று எனச் சிலர் குழப்புவது கண்டு தடுமாறாதீர். பாமரன் கற்றுக் கொள்வான். படித்தவன் தான் சிக்கல் கொண்டு வருவான். பாமரன், படித்தவன் எ ஏற்ற இறக்கம் பாராதீர். குறிப்பிட்ட சொல்லின் வேரைத் தேடுங்கள். “எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப்பியம். ஒவ்வொரு சொல்லும் ஓர் பொருள் குறித்தே உருவாகிறது. ஐம்புலன் சொற்களில் (பருப்புலச் சொற்கள்) இருந்தே அறுபுலன் சொற்கள் (கருத்தியல் சொற்கள்) எழுகின்றன. (நல்ல, பழைய ஆகிய சொற்களின் விளக்கம்.)

ஒவ்வொரு புலனத்திற்கும் தனித்தனியே சொற்கள் படைக்க முயலாதீர். நுட்பச் சொற்களில் 10-க்கு 9 சொற்கள் பொதுச் சொற்களே. ஒரு புலத்தில் (discipline) இருப்பது இன்னொரு புலத்திலும் பயன்டும். புலனங்களுக்கென விதப்புச் சொற்கள் குறைவு. ஒரு மேலைச்சொல்லுக்கு இணையாய்த் தமிழில் சொற்றொடர் ஆக்காதீர். ஆங்கிலச் சொல் மட்டும் பாராதீர். ஓரவஞ்சனை இன்றி, மற்ற இந்தை யிரோப்பிய மொழிகளையும் பாருங்கள். தமிழிய மொழிகளையும் பாருங்கள். சங்கதம், பாகதம் பற்றிய மொழியறிவும் உங்களுக்குக் கைகொடுக்கும். இன்னதென்று தேடாமலே குறிப்பிட்ட சொல் சங்கதம் எ முத்திரை குத்தாதீர். வெறும் கேள்வி ஞானம் இதில் பற்றாது. மோனியர் வில்லியம்சு அகரமுதலி பாருங்கள். Etymonline.com என்ற ஆங்கில வலைத்தளம் பாருங்கள். அவக்கரம் கொள்ளாதீர்.

சொற்சுருக்கம் முகன்மையானது.  ஒரு காட்டு சொல்கிறேன். கவனியுங்கள். அலுவல் = office work. அது நடக்கும் இடத்தை அலுவலகம் என ஏன் நீட்டவேண்டும்? அதில் சொற்சுருக்கம் உண்டா? அலுவம் போதுமே? ”ஜோன்சு சொல்லிவிட்டார். கால்டுவெல் சொல்லிவிட்டார், வையாபுரியார் சொல்லி விட்டார்” என்ற குருபத்தியில் தமிழ்ச்சொற்களை மற்ற மொழிகளுக்குத் தானம் கொடுக்காதீர். 19, 20 நூற்றாண்டுக் கூற்றுகளை வைத்து, நம்மிடம் உள்ளதை வடசொல் என்று சொல்லி, புதுச்சொல் படைக்க முயலாதீர். Nostratic studies என்பது தமிழியக் குடும்பத்தையும், இந்தோயிரோப்பியனையும், இன்னும் சில குடும்பங்களையும் இணைக்கிறது. எனவே சற்று ஆழமாகவே போங்கள்.

குமுக வலைத்தளங்களில் இருப்பனவற்றைத் தேடித்தேடி,  நல்ல கலைச்சொல்லாக்கங்கள் செய்யமுடியும். ஒரு காட்டிற்காக,  கீழே 10 முகன்மைச் சொற்களை இங்கு கொடுத்துள்ளேன்.

1. Engagement = பற்றுகை (விழைவுகள்/Likes, மறுவினைகள்/Reactions, பகிர்வுகள்/Shares or முன்னிகைகள்/Comments என்பதன் பொதுச்சொல்).

‘Engagement’ refers to any action taken by a social media user on your page. This can be in the form of ‘Likes’, ‘Reactions’, ‘Shares’ or ‘Comments’. For example, if a user on your Facebook page has ‘reacted’ to your post by choosing to ‘Like’ it, they have engaged with that particular post. And those engagements can add up very quickly.

2. Ephemeral content = நிலையா உள்ளீடு (சில காலம் இருந்து பின் இல்லாது போவது)

'Ephemeral' refers to content on social media platforms that disappear after a set period of time. This type of content is seen most frequently on Facebook, Instagram and Snapchat.For example, Instagram Stories (and Facebook Stories) are limited to a lifespan of 24 hours. On Snapchat, messages to friends disappear as soon as the user has left the app — after having opened the message.

3. Filter = வடிகட்டி

'Filters' are used on certain social media platforms as a way for users to edit their photos. Each filter offers an overlayed effect that can be placed onto images. This feature is most popularly used on Instagram (#NoFilter — not).

4. Handle = கைப்பிடி

A ‘handle’ refers to a user’s account name on Twitter, but it can be in reference to other social platforms, too. Each ‘handle’ is unique and can be used to find or mention other users on the platform. A user’s handle is the ‘@’ symbol, followed by their account name.

5. Hashtag = கட்டாந்தோகை (பார்க்க:  https://valavu.blogspot.com/2018/09/hashtag.html)

A 'hashtag' on social media refers to any word or phrase that is following the ‘#’, or hashtag, symbol. Hashtags are used on social media as a way to find content about a specific topic, or as a way to make a user’s content more discoverable to other users. For example, if a user posted on social media using ‘#mediaupdate’, they could find other users’ content about that topic by clicking on the hashtag. On Twitter, popular topics, or hashtags, can be found in the ‘Trending topics’ section of the page.

6. Lens = வில்லை.

Not to be confused with a ‘Filter’, a 'Lens' is an animated overlay effect that is used while users are taking a photo of themselves, also known as a ‘selfie’. The lens can animate the user’s image while in camera mode to appear as anything — from a dog sticking its tongue out to a cat with glasses.

7. Impression = படிவு

‘Impressions’ are the number of times your posts have been seen by users on social media. For example, if five people have seen your post on Facebook, that means you have five impressions for that post. The maximum number of ‘impressions’ your post can have is the number of people you are connected to on Facebook — but remember, if someone else shares your post, you can gain impressions from all of their Facebook friends too.

8. Share = பகிர்வு

‘Shares’ refer to the number of times any user’s piece of content has been re-posted on social media. The ‘Share’ feature on social media is a clickable button that allows you to repost other users’ content to your own timeline (that’s your own personal newsfeed). For example, if a user clicks on the ‘Share’ button on Facebook, they’ll have the option of sharing that post either with another friend, on their News Feed or via Facebook Messenger.

9. Story = படக்கதை

A 'Story' — either on Instagram or on Facebook — is a collection of photos or videos compiled into one album that can be shared with other users on the platform. These Stories are only visible for 24 hours, making them ephemeral.

10. Twitterati = கீச்சுப் பெரியவர்.

The ‘Twitterati’ are users on Twitter who have an incredibly large number of followers and who post regularly. Think celebrities, social influencers, etc. If the Twitterati are posting about a particular topic or sharing a certain hashtag, you can expect it to start trending among other Twitter users.

குமுக வலைத் தளங்களுக்காக,  இன்னும் பன்மடங்கு கலைச்சொற்கள் கொண்ட நெடும் பட்டியலை https://www.ncra.org/docs/default-source/uploadedfiles/resources/glossary-of-common-social-media-terms.pdf?sfvrsn=3c763bd4_2 எனும் வலைத்தளத்தில் கண்டேன், தமிழில் இவற்றை எப்படிச் சொல்லலாம் எ என் வலைப்பதிவில் இன்னும் சில நாட்களில் சொல்வேன். நன்றி.

No comments: