Sunday, November 21, 2021

பீலி

எழுத்தாளர் சோ. தர்மன் எழுப்பியதாய், நண்பர் ஒருவர் தனிமடலில் "பீலி” பற்றிக் கேட்டார். அக் கேள்விக்கான விடை பலருக்கும் பயன்படும் என்பதால், பொதுவெளியில் இடுகிறேன். 

-------

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் 

சால மிகுத்துப் பெயின்.                       

என்ற குறளுக்கு (475) உரை எழுதிய உரையாசிரியர் எல்லோரும் ”மயில் தோகையாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பாரத்தை ஏற்றிவிட்டால் வண்டியின் அச்சு முறிந்துவிடும்"  என ஒரே மாதிரி எழுதியுள்ளார்.  இதில் புலமை மிக்க இரு சான்றோர் (நான் பெரிதும் மதிக்கும் தமிழ்ப் புலமையர்) உரைகளைக் கவனிக்க வேண்டும். முதலாமவர் பரிமேலழகர். இரண்டாமவர் மணக்குடவர். இருவரும் அவரவர் உரைகளில் எவ்விடத்திலும் "மயிலிறகு" என்னாது ”பீலி” என்றே எழுதுவார். மற்றவர்கள் மயிலிறகு என்கையில்,  இவ்விருவர் மட்டும் ”பீலி” என்ற மூல வார்த்தையைப் பயன்படுத்தியது ஏன்?  ஒருவேளை, பீலியின் சரி அர்த்தம் புரிவதில் இருவருக்கும் ஐயமோ? ஏனெனில் ”மயிலிறகை வண்டியில் ஏற்றுவது” என்பது பொருந்தா உவமை. நடக்கவே நடக்காது. யாரும் அப்படிப்  பார்த்திருக்கவோ நினைத்திருக்கவோ முடியாது, [பாவாணர் ”வைக்கோலை விட மெல்லிய மயிலிறகு” என்று குழம்புவார். பீலிக்கு “எடை குறைந்த” என விளக்கம் சேர்ப்பார் அருளி.]  வள்ளுவன் கூறும் "பீலி" என்பது என்ன? அதற்கு விதப்பான பொருளுண்டா? ஆம், இருக்கிறது. அறிஞருக்கு தெரியாது. சாதாரண சம்சாரிகளுக்கு தெரியும். நண்பர்களே! விவாதிக்கலாம். அனைவரும் சேர்ந்து கண்டுபிடிப்போம்.

-----

என்பார் சோ.தர்மன்.   ”இக்குறளுக்கு நீங்கள் விளக்கம் அளிக்க இயலுமா?” என மேலே குறிப்பிட்ட நண்பர் என்னைக் கேட்டார். 

முதலில் பீலி என்ற சொல்லைப் பார்ப்போம். இலவம் பஞ்சு, பருத்திப் பஞ்சு, இளம் தளிர், வைக்கோல், பூந்தாது, பொடி, திவலை, துண்டம், பொறி போல் பீலியும் எடை பெரிதுங் குறைந்த பொருளாகும். பீலி என்பது மயிலோடு மட்டும் சேர்ந்ததல்ல, பல்வேறு பறவைகளுக்கும் உண்டு. கீழே ஒரு படம் காட்டி யுள்ளேன். பறவைகளின் இரு பக்கங்களிலும் (sides)இருக்கின்ற, பறக்க உதவும், உறுப்பை இறைக்கை/ சிறைக்கை என்பார், இறைக்கையின் தோலை மூடினாற் போல், மெல்லிய (light), சொவ்வையான (soft) இறகுகள்/சிறகுகள் தோலிலிருந்து வெளிப்படும். வெவ்வேறு காரணங்களுக்காய் சிறகுகள் உதிர்ந்து விழுவதும், உதிர்ந்தவற்றிற்கு மாறாய் சிறகுகள் புதிதாய் உருவாவதும் உண்டு.  உதிரும் சிறகுகளை தூவி, பீலி என்று அழைப்பார். நானிங்கு பீலி பற்றிப் பேசுகிறேன்.

பிரிதற் பொருளில் *புல்>பில் வேரில் இருந்து பிளத்தல், விள்ளல், பிள்ளை, பிரிதல், பிளிரல், பிலிர்த்தல், பிலிற்றல், பிளிற்றல், விலகல், பிய்தல், புய்த்தல், பெயர்தல், பிட்டல், பிதுக்கல், பிதிர்தல், பிதுக்கல், பிடுங்கல் என வேறுபட்டுப் பற்பல சொற்களெழும். https://valavu.blogspot.com/2014/02/blog-post.html என்ற இடுகையில் இது பற்றிப் பேசினேன். 

*புல்>பில்>பிள்>பிளத்தல்

*புல்>பில்>பிள்>விள்>விள்ளல்

*புல்>பில்>பிள்>பிள்ளை = தாயிலிருந்து பிரிந்து வந்த குழந்தை

*புல்>பில்>பிள்>பிரி>பிரிதல்

*புல்>பில்>பிலி>பிளி>பிளிரல் = கிளைக்கை

*புல்>பில்>பிலி>பிளி>பிளிர்த்தல் = கொப்புளித்தல்

*புல்>பில்>பிலி>பிலிர்>பிலிற்று>பிலிற்றல்

*புல்>பில்>பிலி>பிலிர்>பிலிற்று>பிளிற்று>பிளிற்றல் =

*புல்>பில்>(வில்)>விலகு>விலகல்

*புல்>பில்>பிய்>பிய்>பிய்தல்

*புல்>பில்>பிய்>பிய்>பிய்தல்>பிய்த்தல்>புய்த்தல்

*புல்>பில்>பிய்>(பெய்)>பெயர்>பெயர்தல் = பிரிதல்

*புல்>பில்>பிள்>பிள்+து>பிட்டு>பிட்டல்

*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதுக்கு>பிதுக்கல்

*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதிர்தல்

*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதுக்கல்

*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிடுங்கு>பிடுங்கல்

பிலிர்ந்து, பிதிர்ந்து விழுந்த இறகு/சிறகு ”பீலி” எனும் தனிப்பெயரைப் பெற்றது. இச்சொல் எல்லாப் பறவை இறகுகளுக்கும் பொதுவானது.  பீலி என்ற சொல்லை விதப்பாய் மயிலிறகுக்குப் பயன்படுத்துவது உண்டென்றாலும். மணக்குடவரும், பரிமேலழகரும்  பொதுவாகவே இச்சொல்லைப் பயன்படுத்தினார். 




பிலிற்றலும், பிதிர்த்தலும் நீர்மத்திற்கு மட்டுமல்ல, திண்மப் பொருளுக்கும், விளிமப் பொருளுக்கும் சேர்த்துப் பயன்படும். குறளில் சொல்லப்படும் பொருளைப் பெரிய பெரிய வைக்கோல் வண்டிகளில் (குறிப்பாகச் சரக்குந்துகளில்) பார்க்கலாம். இந்த உவமம் இன்றுவரை புரிதலில் உள்ளதுதான். இறகுகளை நாம் மயிலோடு மட்டும் பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை. தவிர,  இல்லாப் பொருளையும் உவமையில் கொள்ளலாம். அணுக்களை நம் புறக்கண்ணால் கண்டதில்லை என்பினும் அணுக்களாலான மாழைகளை அளவிற்கு மீறி வண்டிகளில் ஏற்றின், அச்சாணி முறியாதோ?  (இப்போது யாரும் பீலியை வண்டியில் நகர்த்திக் கொண்டு போவதில்லை தான்.)

இன்னொரு காட்சியும் என் முன் எழுகிறது. பழனிக்குச் செல்லும் காவடிகளின் இருபக்கத்திலும் மயிலிறகுத் தோகையைப் பொருத்துவதில்லையோ? அற்றுவிகர் (ஆசீவிகர்), செயினர் புத்தர் ஆகியோர் அந்தக் காலத்தில் விளக்குமாறு போல் பீலித் தோகையைத் தொகுத்துக் கட்டி வைத்து, தம்முன் இருக்கும் பாதையில் உயிரிகளை தாம் மிதிக்காதவாறு, நகற்றிப் போவார் என்று கேள்விப் பட்டதில்லையா? பீலிகள் என்ற சொல் பொதுவாக இன்னெறி பின்பற்றும் துறவிகளுக்கு உடனே நினைவிற்கு வரக்கூடிய சொல் தான்.

அன்புடன்,

இராம.கி.    

 


No comments: