Wednesday, November 17, 2021

துரோகம், விரோதம்

”துரோகம், விரோதம் ஆகிய இரண்டிற்கும் மூலம் தமிழா?” என்ற கேள்வி தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் எழுந்தது. பயன்பாட்டின் வழி பார்த்தால், ”துரோகம்” சங்கதச் சொல்லே (Droha द्रोह). மோனியர் வில்லியம்சு அகரமுதலி  இச்சொல்லின் தாதுவை நமக்குக்  காட்டாது. druh என்பதைத் தொடக்கமாக்கும். கூடவே injury, mischief, harm, perfidy, treachery, wrong, offence ஆகிய பொருள்களையும் காட்டும். இவற்றை ஆய்ந்தால், (துரோகத்தோடு ஒலிப்பில் இணையும்) treachery யே சரியான பொருளாய்ப் பொருந்தும்.  Manusmṛti (கி.பி.200), Mahābhārata, Rāmāyaṇa (இவை இறுதி வடிவம் பெற்றது குப்தர் காலம்.) ஆகிய நூல்களில் ”துரோகம்” பயின்றுள்ளது. பாகதத்தில் இச்சொல்,  தோகமாகும்.. 

தோகத்தின் தொடக்கம் ”இரண்டு” எனும் கருத்தில் உள்ளது. துமி-த்தல் = ஒன்றை இரண்டாக்குவது, (”கொடுங்கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய”, பெரும்பாண் 266). மகர, வகரப் போலியால், துமி-த்தல் துவி-த்தலுமாகும். வட பால் மொழிகளில் இது  ”தோ”. மேலை மொழிகளில் ”two-வின் திரிவு”. துவகம்> தோகம் = ஒன்றை வெளிப்படுத்தி இன்னொன்றைக் கரப்பது.  துமி/துவி என்ற வினையடி தமிழாயிருந்தும், அதன் வழிவந்த ”தோகப்” பயன்பாடு வடநாட்டு மொழிகளில் மிகுதி.  தனித்தமிழன்பர் துரோகத்தின் இணையாய் ”இரண்டகம்” என்று உரைப்பார். ”உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்பது வள்ளலார் வாக்கு.  

விரோதமும் சங்கதச் சொல்லே. ஆய்ந்தால் இதிலும் தமிழ் வேர்களுண்டு.  உரு-த்தல் = பெருஞ்சினம் கொள்ளல் “ஒருபகல் எல்லாம் உருத்தெழுந்து” என்பது கலி 39,23. உரு-த்தல்= அழலல் “ஆகம் உருப்ப நூறி” என்பது புற. 25.10. ”உரு”வில் இருந்து, (திண்மம் நீர்மமாய்) உருகல், (திண்மத்தை நீர்மமாய்) உருக்கல் என்ற தொழிற்பெயர்களும் உருக்கு (எஃகு, வெள்ளி) என்ற மாழைப் பெயரும், உருத்திரம் = பெருஞ்சினம், உருப்பம் = வெப்பம்,  உரும் = சினம், உருமம் = வெப்பம், வெப்ப நேரம், உருநம்> உண்ணம்> உஷ்ணம் போன்ற பெயர்ச் சொற்களும் எழும். 

உருத்தன் = பெருஞ்சினம் கொண்டவன். உருத்தனை விதப்பாய்த் திருத்தி உருத்திரனாக்கி, இதில் வரும் உகரத்தை ஒறுத்து, ருத்ர என்றாக்கி, அன்பே வடிவான நம் சிவனின் மேல்  சினத்தைப் பொருத்தி வடக்கே ஒரு தொன்மம் சொல்வார்.  (தக்கன்>தெக்கன் யாகம் என்ற தொன்மம் பலருக்கும் தெரிந்தது.) ருத்ரத் தொன்மம்  எழுந்தது ஒருபக்கம் எனில், வி எனும் விதப்பு முன்னொட்டோடு ருத்தம் சேர்த்து. (வி+ ருத்தம்)> (வி+ரோதம்) = விரோதம் என்ற சங்கதச் சொல் எழுந்தது இன்னொரு பக்கம். விரோதம் கொண்டவன் விரோதி.  நம்மேல் பெருஞ்சினம் கொண்டவன் நம் விரோதி ஆவான். தமிழில் உருத்தனே  போதும்.


No comments: