”குறியாப்பு - சரியான சொல்லா ? இதன் பொருத்தமான பொருள் யாது? “ என்று தமிழ்ச் சொல்லாய்வுக் குழுவில் கேட்கப்பட்டது. இந்தக் ”குறியாப்பு” என்பது, 2000 ஆண்டுகளுக்கு முன் ”குறியெதிர்ப்பு” என்றே சொல்லப்பட்டது. (எதிர்த்த என்பது, எயிர்த்த> எயித்த என்று பேச்சுவழக்கில் மாறும். எதிர்ப்பு> எயிர்ப்பு> எயிப்பு> யாப்பு என்பதும் பேச்சு வழக்கில் ஆவது தான்.) இத் திரிவுகள் ஏற்படும் முன் எதிர்ப்பு என்றே பழம் இலக்கியங்களில் இச்சொல் பதியப் பட்டது. காட்டாக, நற்றிணை 93/12 இல் ”உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே” என்றும், புறம் 163/4 இல் ”நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்” என்றும் குறள் 221/2 இல் ”குறியெதிர்ப்பை நீரது உடைத்து” என்றும் வரும். அதற்கு அப்புறம் கைமாறு என்றே புழங்கியுள்ளார். சரி குறியெதிர்ப்பு என்றால் என்ன பொருள்?
நம் வீட்டில் சருக்கரை தீர்ந்து போயிற்று என்று வையுங்கள்/. பங்கீட்டுக் கடையில் (Ration shop) இனி அடுத்த மாதம் தான் போடுவார். இன்னும் 10, 15 நாட்கள் கூட ஆகலாம். அந்த இடைப்பட்ட நாட்களுக்குச் சருக்கரை நமக்கு வேண்டும். எனவே பக்கத்து வீட்டில் கால் கிலோ கைமாற்றாய்ச் சருக்கரை வாங்குகிறோம். நமக்குச் சருக்கரைப் பங்கீடு வந்தவுடன் அடுத்தவீட்டாருக்கு இக் கால் கிலோ சருக்கரையைத் திருப்பிக் கொடுத்து விடுவதாய் இரு வீட்டாருக்கும் ஒரு புரிதல். கைமாற்று என்பது பணத்திலும் ஏற்படலாம், சடங்குகளிலும் நடை பெறலாம். பங்காளி வீட்டு விருந்தோம்பலில் நாம் மொய் எழுதுவதும் அதே அளவு மொய்யைப் பங்காளி நம் வீட்டு விதப்பில் எழுதுவதும் கூட குறியெதிர்ப்புத்தான். திருமணம் என்றால் மொய்ப் பொத்தகம் என்பது இந்த நடைமுறையைத் திருத்தமாய்க் காட்டும்.
குறியெதிர்ப்பின் பேச்சு வழக்குத் திரிவான ”குறியாப்பு” என்பது கொங்கு பகுதியில் மிகவுண்டு. ஒரு பொருளை வாங்கிச் சென்றால் அதே பொருளை பின்னொரு கால் திரும்பக் கொடுக்க வேண்டும். எ.கா: பால் ஒரு படி கடனாக வாங்கினால் திரும்பப் பால் ஒரு படி கொடுக்கவேண்டும். நம் கழனி உழவில் தமது எருதுகள், பாரவண்டிகள் மற்றும் மாடுகளோடு வந்து ஏர் ஓட்டவும், குப்பைகளை வயல்களிலிருந்து எடுத்துச் செல்லவும் நமது சுற்றத்தார்/ உறவினர் துணை புரிந்தால், அவர் எத்தனை நாட்கள் நமது வயலில் எத்தனை சோடிகளுடன் வேலை செய்தாரோ அதே அளவு நாட்கள் அத்தனை சோடிகளுடன் நாமும் வேலை செய்து உதவுவதும் குறியெதிர்ப்பைச் சேர்ந்தது தான்.
‘குறியெதிர்ப்பு’ என்பது ‘to give something back in the same quantity it was borrowed’ என்று பொருள்படும். நாம் வாங்கிக்கொண்ட உதவியை ஏதோவொரு இடத்தில் குறித்து வைப்போம். அது சுவரில் தீட்டும். கோட்டு அடையாளம் ஆகலாம். நம் சிந்தனையில் குறித்துக் கொண்டதாகலாம். நம் வீட்டுக் கணக்கில் குறித்ததாகலாம். ஏன், நாட்காட்டியில், நாட்குறிப்பில் குறித்ததாகலாம். இதை அவருக்குத் தேவைப்படும் போது எதிர்ப்பணி (expectation), தொண்டு, வேலை செய்து கொடுப்பது எதிர்ப்பு என்று அழைக்கப்பட்டது. இதில் நேர்மை, பரிவு ஞாயம் போன்றவை பெரிதாய்க் கருதப்படும்.
No comments:
Post a Comment