Wednesday, June 30, 2021

முதல்வராய் நானிருந்தால் - 1

சந்தவசந்தத்தின் 14 ஆவது கவியரங்கில் செபுதம்பர் 2004 இல் இக்கவிதையை அரங்கேற்றினேன். ”முதல்வராய் நானிருந்தால்” என்ற தலைப்பில், “இய்யதாகு முதலமைச்சன்” என்பதாய் என் கவிதையைப் படித்தேன். இணையத்தை இன்று துழாவிய போது மறந்துபோன கவிதை எனக்குக் கிடைத்தது. என் வலைத்தளத்தில் சேமிப்பதற்காக இங்கு பதிகிறேன். 

---------------------------    

அன்பிற்குரிய சந்தவசந்தத்தாருக்கும், தலைவருக்கும், என் வணக்கம். வழக்கமான முறையில் நான் இங்கு வரவில்லை. பொறுத்துக் கொள்ளுங்கள்.

............................................................................................

"ஆயா, வீதியெல்லாம் ஒரே கூட்டமாப் போகுது; கையிலே கொஞ்சப்பேரு வேறே தலகாணி, பாயெல்லாம் சுருட்டி வச்சுக்கிட்டுப் போறாக! எங்கே போறாக, ஆயா?"

"அட மக்குப்பயலே, இது தெரியலியா உனக்கு? மகார்நோன்புப் பொட்டல்லே கண்ணகி - கோவலன் கூத்து இன்னைக்கித் தொடங்கப் போகுதுடோய்" நீட்டி முழக்கிப் பழக்கப் பட்டவள் என் ஆத்தாளுக்கு ஆத்தாள்.

"சோழராசாவோட பெரிய ஊரு காவிரிப் பூம்பட்டினம். அங்கே நாடுவிட்டு நாடுபோய் கொண்டுவிக்கிறவகள்லே. சாத்தப்பன்கிறவர் ரொம்பப் பெரிய ஆளு. அவரோட பையன் கோவாலனுக்கு, இதே மாதிரிப் பெரிய வளவு மாணிக்கம் பொண்ணு கண்ணாத்தாவைக் கல்யாணம் பண்ணி வச்சாக! வாக்கப் பட்ட பொம்பிளையை மாமனாரும், மாமியாரும் வேறெ வச்சாக; அதென்னவோ கொஞ்ச நாளைக்கப்புறம் கண்ணாத்தா சொகமே காணலை! அவளுக்கு வாய்ச்ச ஆம்படையான் கல்யாணம் பண்ண கொஞ்ச நாள்லெ கூத்தியாள் வீடே கதின்னு கிடந்தான்; மாணிக்கம் பொண்ணுக்கு ஒரு பொட்டு, புழுப் புறக்கலே; சீரு செனத்தி போட்டுக்கலே; நாளெல்லாம் புருசங்காரன் திரும்பி வந்துருவான்னு காத்துக் கிடந்தது தான் மிச்சம்; மாமனார், மாமியாருக்கும் என்ன சொல்றதுன்னே தெரியலை; சொத்து, பத்தெல்லாம் தாசிமடிலே கொட்டிக் கரைஞ்சு சீரழிஞ்சுது குடும்பம். பின்னாடி புத்தி வந்து புருசங்காரன் கண்ணாத்தா வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

இனிப் பட்டினத்துலே இருக்கவேணாம், பங்காளிகளும், தாயபுள்ளைகளும், பக்கத்து வீட்டுக்காரவுகளும் பலவிதமாப் பேசுவாக, அதனாலே மருதைக்குப் போயிருவோம், பொண்டாட்டி கொலுசை வித்துப் பொழச்சிக்கலாம்னு இளசுகள் ரெண்டும் புறப்பட்டாக; ஆனா, மருதையிலே விதி விளையாடிருச்சு; அங்கே தங்க ஆசாரி பண்ணின சூழ்ச்சிலே கோவலனைச் சிக்க வச்சி அவன் உசிரைக் காலன் கொண்டுக்கிணு போனான்.

கட்டளை போட்ட பாண்டியராசா தப்புச் செய்ஞ்சாருன்னு சொல்லி, அவருக்கு முன்னாடிக் கொலுசை உடைச்சா கண்ணாத்தா; எல்லாரும் உக்கார்ந்து இருக்கிற சவையிலே முத்துத் தெறிக்கிறதுக்கு மாறா மாணிக்கப் பரல் தெறிச்சுது; தப்பைப் புரிஞ்சுக்கின இராசாவும் இராணியும் அங்கேயே உசுரை விட்டாக! அதுக்கப்புறமும் கண்ணாத்தாவுக்கு கோவம் அடங்கலே! ஆம்படையானைப் பறிகொடுத்ததாலே மருதை ஊரையே எரிச்சு மானத்துக்குப் போய்ச் சேர்ந்தா! அவளுக்கு வந்த ரோதனை யாருக்குமே வரப்படாதப்பா!

அப்பறம் இதைக் கேட்ட சேர மகாராசா திகைச்சுப் போனாரு! பத்தினிக்கிக் கோவம் வந்தா, பாராளும் அரசு கூடப் பத்தி எரிஞ்சிரும்னு அவருக்கு புரிஞ்சுது. எப்பேர்க்கொத்த பத்தினிப் பொண்ணு எங்க நாட்டுலே வந்து சேர்ந்தான்னு சொல்லி அவளுக்குப் பொங்கலிட்டுப் படையல் வச்சு, வடக்கே இமயமலைலேர்ந்து கல்லெடுத்துக் கொண்ணாந்து, மஞ்சணமிட்டு, முழுக்காட்டிக் கோயில் கட்டிக் கொண்டாடினாரு.

நாட்டரசங்கோட்டை கண்ணாத்தா கோயில் கூட அந்த நினைப்புலே தாண்டா கட்டிருக்கு. இந்தக் கதை தான் பத்துநாளைக்கி இராத்திரி முழுக்க விடிய விடியக் கூத்தா நடக்கும். பார்க்கணும்னா சினேகிதக் காரங்களோட நீயும் போய்ப் பாரேன்." என்றாள் என் ஆயாள். முதன்முதல் சிறிய அகவையில் இதைக் கேட்ட எனக்கு, எங்கள் ஆயாளின் மூக்கோசைப் பேச்சில், கதை சற்றும் விளங்கவில்லை தான். இருந்தாலும் நண்பர்களோடு போனேன். அரசியற் கூத்தின் ஆரம்பக் காட்சி, திமிகிட.....திமிகிட என்ற சத்தத்தோடு, இறைப்பாட்டு முழங்க, சந்திர சூரியர்களையும், மழையையும் வணங்கித் தொடங்கியது.

புகார்நகர வீதியில் இந்திர விழாவுக்கு முன்னால், மன்னன் கிள்ளிவளவன் இரவு நேரத்தில் நகரச் சோதனை செய்கிறான். கூடவே அவனுடைய அமைச்சன் அருகில் போகிறான். 

"மந்திரி! நாடெல்லாம் எப்படி இருக்கு? மாதம் மும்மாரி மழை பொழியுதா?"

"சோழ மகராசா ஆட்சியிலே மழைக்கு என்ன குறை ராசா, மழை நல்லாவே பொழியுது?"

"காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம், தென்பெண்ணை, பாலாறு, கால்வாய்கள் எல்லாத்திலும் தண்ணீர் ஓடுதா?"

"மகாராசா, உங்க ஆட்சிலே கட்டிவச்ச குளம், ஏரி, கால்வாய், இதுக்கெல்லாம் குறையேது, மகராசா? தண்ணி நல்லாவே ஓடுது இன்னம் பத்து வருசத்துக்கு பஞ்சம்கிறதே  நம்ம நாட்டுலே இருக்காது"

"சாலைகள்லே வழிப்போக்கர்கள் பயமில்லாமப் போக முடியுதா?"

"ராசா, உங்கள் படைதான் ஊரெங்கும் காவல் காக்குதே, பின்னெ மக்கள் பயப்படத் தேவையில்லீங்களே? சாவடிகள் எல்லாத்துலேயும் அன்னதானம் ஒழுங்கா நடக்குது. வணிகச் சாத்துகள் ஒழுங்காப் போய் வந்துக்கிட்டு இருக்கு."

"ஊரில் பிள்ளைகுட்டிகள் படிக்கிறதுக்கு கல்விச்சாலைகள், மருத்துவத்துக்கு ஆதூல சாலைகள் எல்லாம் ஒழுங்கா நடக்குதா, இல்லை பணமில்லாமல் சிரமப் படுதா?"

"இல்லை, மகராசா, ஒரு குறையும் இல்லை, நல்ல காரியம் செய்யுறதுக்கு எவ்வளவோ செல்வந்தர்கள் முன்வர்றாங்க. உங்களோட ஒரு ஆணை போதுமே, இதெல்லாம் செய்யுறதுக்கு."

"அப்ப, இந்திர விழா எப்போ ஆரம்பிக்குது?"

நாடகத் தனமான இந்தத் தொடக்கக் காட்சிக்கு அப்புறம் கூத்துப் போய்க்கொண்டே இருந்தது. இந்தக் காட்சி எந்தக் கூத்தானாலும் முதலில் இருந்திருக்கும் தான்; என்ன, அரசனின் பேர் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கும். 

(இதுவரை நான் பார்த்திருக்கும் நாலைந்து கூத்துக்களில் கோவலன் - கண்ணகி கூத்தை முதலில் பார்த்ததால், எனக்கு இப்படி ஓர் நினைவு ஆழப் பதிந்திருக்கிறது. அவ்வளவுதான்.) 

அரசு - நாடு - ஆட்சி என்று எண்ணும் போது, கூத்தில் வந்த அந்த முதல்காட்சி இன்றைக்கும் முகமையாக எனக்குத் தோற்றம் அளிக்கிறது. நாட்டை ஆளுதல் என்பதை இப்படித்தான் எளிய முறையில் அன்றும் பார்த்தார்கள்; இன்றும் பார்க்கிறோம். ஆனால் என்ன, உள்ளே இருக்கும் சூக்குமம் புரியாமல் பார்க்கிறோம் 

.........

அன்றைய அரசனுக்கு மாறாய் இன்றைய முதலைமைச்சு என்று எண்ணிக் கொண்டு இனிப் படியுங்கள். இங்கே கண்ணகி கூத்தைப் பேசவில்லை. இது அது ஆகுற்ற கனவு இங்கே வெண்கலிப்பாவில் விரிந்து வருகிறது. (இய்> இய்து> இது) (இய்யதாகுற்ற >இய்யதாகுத்த>யதார்த்த; இய்யதாகல் = இயல்வாகல் = யதார்த்தமாதல்)

..................................................................................................

அன்புடன்,

இராம.கி.


No comments: