நண்பர் ஒருவர் கோள்களுக்கான தமிழ்ப்பெயர்கள் கேட்டிருந்தார். இது எல்லோருக்கும் பயன்படக்கூடியது என்பதால் இங்கு இடுகிறேன்.
கதிரவனைச் சூரியன் என்று சொல்வதில் தவறில்லை. சூரியன் தமிழே. சுள்>சுர்>சூர்>சூரியன்.
புதன் (இதை அறிவன் என்றுஞ் சொல்வர். என்னைக்கேட்டால் புதன் தமிழே. புத்தியின் வேர்ச்சொல் புல். பொழுது புலர்ந்தது என்கிறோமே? இருளகன்று வெளிச்சம்/தெளிவு வருகிறது என்றுதானே பொருள்? புலவன்= அறிவில் தெளிந்தவன். புலமை= அறிவுத்தெளிவு. புலத்தன், புலத்தி, என்ற சொற்களின் ஊடேயுள்ள லகரத்தில் வரும் உயிர்மெய் இழிந்து புத்தன், புத்தி ஆகும். புத்தி பெண்பாலுக்கும், தெளிந்த அறிவிற்குமான சொல்லாகும். ஒரு செயலில், செய்தியில் நல்லது கெட்டது எனத் தெளிவுகாணும் அறிவு புத்தி எனப்படும். காரண, காரியம் தெரிந்தவன் புத்திசாலி எனப்படுவான். அறிவிற்கு அடுத்த நிலை புத்தி. Being familar is knowledge(அறிவு). Discerning the right from wrong is புத்தி..புத்தன்>புதன் என்று இச்சொல் மேலும் வளர்ச்சி காணும்).
புதனுக்கு அடுத்த கோள்கள் வெள்ளி, புடவி எனும் புவி (இது சங்கதத்தில் ப்ருத்வி ஆகும். பும்மி/பொம்மி நிற்பது பூமி. இதுவும் தமிழ் தான்.), செவ்வாய், வியாழன். இவையெல்லாம் முற்றிலும் தமிழ்ச்சொற்களே. வியாழனுக்கு அடுத்தது சனி (இதைக் காரி என்றும் நிறங்கருதிச் சொல்வர். சனி என்பது தமிழ்மூலங் கொண்ட வடசொல். சுள்>சுண்>சுணங்குதல் = வினையில் சோர்தல், காலந் தாழ்த்தல். சுணை-தல்>சுனை-தல்= குழைதல், தாழ்-தல். சூரியனைச் சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இக்கோள் மெதுவாய்ச் சுணங்கிச் சுற்றும். சுணைக்கும் கோள் சுணை>சுனை>சனி என்று வடக்கே சொல்லப்பெறும். நாம் சுணை என்றே தமிழ்வடிவில் சொல்லிக் கொள்ளலாம்).
அடுத்துள்ள 3 கோள்களும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை. அவற்றை வானவம் (யுரேனசு = sky), வாரணம் (நெப்டியூன் = god of sea), வளவம் (புளுட்டோ. = god of wealth) என்று அஃறிணையாக்கிச் சொல்லலாம்.
No comments:
Post a Comment