மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா ! வாய்திறவாய் ;
மைத்தடங் கண்ணினாய் ! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண் ;
எத்தனை ஏலும் பிரிவாற்ற இல்லாயேல்
தத்துவ மன்று தகவேல் ஓர் எம்பாவாய்
என்ற ”திருப்பாவை 19 ஆம் பாட்டின் பொருள் புரிகிறதா? பெண் பக்தியாளரும், புலவருமான "ஆண்டாள் " பாடியது. எவ்வளவு SEXY யாக உள்ளது !!! மார்கழியில் இப் பாடலையே கடவுளுக்காகப் பாடுகிறார் !!!!!” என்று ஒரு முகநூல் இடுகையில் பகுத்தறிவுத் திராவிடர் ஒருவர் கேலி பேசினார். அதிர்ந்து போனேன். ஒருவேளை இவர், ”கவிதைக்கு வீசை என்ன விலை?” கேட்பவரோ? - என்று கூடத் தோன்றியது.
காலமெலாம் அகம், புறம் பேசிய தமிழரிடை, இன்னுஞ் சொன்னால் தமக்கும் இறைவனுக்கும் நடுவே நாயக, நாயகி பாவத்தைப் பொருத்திப் பற்றியியக்கம் வளர்த்த தமிழரிடை, ”உடல் வருணணையே செய்யக் கூடாது, வெறுமே கட்டுப் பெட்டியாய்த் தோத்திரம் மட்டுமே பாடு” என்கிறாரா? - என்றும் தோன்றியது. வேறொரு நண்பர் கேட்டதால், முலைத்தொடர் ஒன்றை இங்கு எழுத முற்படும் நானும் இவருக்குச் “செகையாளாய்த் (sexist)" தெரிவேனோ? என்னவோ?
ஆண்டாளே ஆபாசமெனில், (ஆப+ஆச= ஆபாச= முறையற்றது. சங்கதத்தில், “ஆப்”= அற்று. ஆச= ஆனது= முறை.) நாமெங்கு போகிறோம்? ”எது காதல்? எது காமம்? எது முறையற்றது?” என இவர்க்குச் சிறிதேனும் விளங்கியிருக்குமா? தெரியவில்லை. (எல்லா முறையற்ற செயல்களுக்கும் ”உரிமம் (licence)"வேண்டி நான் முழங்கவில்லை.) வாழ்வு முழுக்க வறட்டுப் பகுத்தறிவு பேசி இலக்கியம் மறந்தாருக்கு என்ன தான் சொல்வது? வெறுமே நகர வேண்டியது தான்,
ஆணடாளைப் பார்ப்பனரென வையக் ”கொங்கைமேல் வைத்துக் கிடந்தது” இவருக்குச் சாக்காய் அமைந்ததுபோலும், ”கொங்கைமேல் கிடந்தது எதுவென ஓர்ந்து பார்த்தாரோ? பஞ்ச சயனமென்றது தவறா? நப்பின்னை யாரென இவர் அறிமோ? இயல்பு வாழ்க்கையைப் பேசும் இப்பாட்டைச் ”சிறுபிள்ளைகளுக்குச் சொன்னதெனத் தவறாய் எண்ணிக் கொண்டாரோ?” புரியவில்லை.
இப்போதெல்லாம் ”விக்டோரியத் தூயவியம்” என்பது இங்கே வலிந்து பரப்பப் படுகிறதோ?- என்ற ஐயமும் என்னுள் எழுந்தது.
”குலப்பெருமைக் (honor) கொலைகள், வெவ்வேறு சாதியார் மோதல், சாமியார் பின்னோடல்” எனக் குமுகாயம் சீரழிவதைக் காணுகையில், தமிழ்க் குமுகத்தில் அடித்தானவியம் ( fundamentalism) என்பது விரவி வருவதும் புலப்பட்டது. (வரலாற்றைப் பார்க்கின் 300, 400 ஆண்டுகள் இதில் ஆழ்ந்து தோய்ந்து தமிழ்க் குமுகம் சீரழிந்தது புலப்படும்.)
இதே போக்கு எதிர்காலத்தில் நீடிக்குமெனில், சங்க இலக்கியத்தையே தூக்கி நாம் கடாச வேண்டுமோ என்று கூடத் தோன்றும். இந்நிலையைத் தூண்டுவதில் தூயவிய இந்துத்துவரும், பகுத்தறிவுத் திராவிடரும் ஒன்றாய் இயங்குகிறார். இந்துத்துவர் கவிஞர் வைரமுத்தைச் சாடியதற்கும், பகுத்தறிவர் ஆண்டாளைச் சாடுவதற்கும் என்ன வேறுபாடு?
”முலை”ப் புரிதலென்பது இன்று நேற்று எழுந்ததல்ல. ஆகப் பழஞ்சொல். பெண்ணோடு ஆணுக்கும் முலையிருப்பினும் (பருத்தது breast), இரு பாலருக்கும் பல்வகை உடற்கூற்று வேறுபாடுகளுண்டு,
பெண்முலை சற்று விதப்பானது. ”கண்ணும் தோளும் முலையும் பிறவும்”- தொல்காப்பியம் சொல். கிளவி: 62/1; ”முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன்” என்பது அதே நூலில்- பொருள். புறத்: 24/16 என்ற இடத்தில் வரும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டிலும் 189 இடங்களில் ”முலை”என்ற சொல் பேசப்படும். முலை பற்றிப் பேசியவரெலாம் வெறிபிடித்த செகையாளரா?
காப்பியங்கள், தேவாரம், நாலாயிரப் பனுவல், இராம காதை, இற்றைக் கவிஞர், எழுத்தாளர் வரை நம்மூரில் முலை தொடர்ந்து பேசப்பட்டது. யாருக்கும் அது வெட்கமாய்த் தெரியவில்லை.
கீழே தரப்படும் சொல்விளக்கத்தைப் பார்த்தால் நான் சொல்வது புரியும். ஆயினும் ”ஆண்டாள் சொல் SEXY” என்று பகுத்தறிவர் சொல்ல முற்படுவது விந்தைக் குற்றச்சாட்டு, இரோப்பா போய்வந்தபின் பெரியார் வெளியிட்ட திருமணக் கருத்துகளை எல்லாம் திராவிட நண்பர் இப்போது மறந்தார் போலும். சரி, முலையின் சொற்பிறப்பிற்கு வருவோம்.
முல்லி, முன்வந்தது முலை.
நகிலமும் நுல்> நுகு> நுகில்> நகிலம்= முன்வந்தது என்றாகும்.
குல்> குள்> கொள்> கொண்+கை= கொங்கை, இது மேட்டைக் குறிக்கும்.
குல்> குள்> கொள்> கொண் +மை= கொண்மை> கொம்மை. இதுவும் மேட்டுப் பொருளில் எழுந்ததே. பறம்பு= மலை போன்றது.
ஆண்முலைக்கு இல்லாத பெண்முலையின் விதப்பான துளையை ஒட்டிச் சொற்கள் அடுத்து எழும்பும்.
குள்> குய்> குயம்= துளையுள்ளது, முலைத்துளை வழியே குழவிக்குத் தாய் பால் கொடுக்கிறாள்
குல்> குரு> குருக்கண் என்பதும் ”துளையுள்ளதே”.
சுல்> சொல்> சொள்> சொட்கு> சொக்கு> சொக்கம்> சொர்க்கம் = பால் சொட்டும் துளை.
துல்> துன்> துனம்> தனம் = துளையுள்ளது,
இன்னொரு வழியில் குல்> குள்> கொள்> கொண்> கொண்+கை = கொங்கை, = பால் கொண்டது என்றும் பொருளுண்டு. அதேபோல் கொம்மையும் ”பால் கொண்டதே”. நகிலமும் “பால் கொண்டதெனும்” பொருள் காட்டும்.
இன்னொரு கூட்டுச்சொல்லும் உண்டு. பயத்தல் = தருதல். பயம் = முலை வழி தரும் பால். உதரம்= உதிக்குமிடம், வயிறு போன்றது. பயம்+உதரம் = பயோதரம் = பாலுதிக்கும் இடம். (பால்) தரும் மாடு = (பால்) பய(க்கும்) மாடு.
பாலைத் தொக்கி, வெறுமே ஒரு பாலூட்டி விலங்கு பயப்பதை மட்டும் உணர்த்துவது பயு>பசு என்ற சொல்லாகும். இதுவும் தமிழே. அறியாதோர் இதைச் சங்கதம் என்பார். பயசெனினும் பாலே.
முலைக்கோள்= முலையைக் கொள்ளல்= பால் குடித்தல்; முலைக்கொள் = பால்குடி. நம்முடைய ”முலைக்கொள்” என்ற இந்தச் சொல் பெயராகவும் இயங்கும். முலைக்கொள்ளும் இந்தையிரோப்பிய ”milk” என்பதும் தொடர்பு காட்டுகின்றன. மேலையர் milk இன் சொற்பிறப்பைச் சரியாக விளக்கார்,
முலை என்பது sexy உறுப்பா? தாயை உணர்த்தும் சினையுறுப்பா? இரண்டும் தான். பாலுட்டிகளான மாந்தரின் பிறப்பையும், உடலமைப்பையும் நாமே நமக்குள் கேலிசெய்ய முடியுமா?
Why do we feel ashamed about breast? கொஞ்சம் உரியல் (real) நிலையை உணர்வோமே? முலையால் நாம் ஏராளமான சொற்களைப் பெற்றுள்ளோம்.
அன்புடன்,
இராம.கி.
No comments:
Post a Comment