Friday, January 31, 2014

Locker = வைப்புழி

அண்மையில் தினமணியின் சிறுவர் மணி படித்துக்கொண்டிருந்தேன். (25/1/2014 வெளிவந்தது. பக்கம் 29) அதில் ஒரு துணுக்குச் செய்தி படித்தேன்.
 
------------------------------------
வங்கிகளில் உள்ள ‘லாக்கர்’களை ‘பெட்டகம்’ என்று சொல்லுகிறோம் இப்பொழுது.
 
ஆனால், சங்க காலத்திலேயே அதற்கு ஒரு நல்ல சொல் வழங்கியிருக்கிறது. அது..... வைப்புழி.
 
வைப்புழி என்றால் பொருள் வைக்கும் இடம் என்று பொருள்.
 
திருக்குறள், நாலடியார் ஆகிய நூல்களில் ‘வைப்புழி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
 
- முக்கிமலை நஞ்சன், எடக்காடு.
 
-------------------------------------
 
இந்த நண்பர் எழுதியதைப் படித்து வியந்தேன்.(நம்மில் எத்தனை பேருக்கு இது தெரியும்? உழி என்றால் இடம்.  வைக்கும் உழி வைப்புழி. (வைப்புப் பணம் = deposit என்று தமிழ்நாட்டிற் சொல்கிறோமே? வைப்பகம் என்றே தமிழீழத்தில் வங்கிகளைச் சொல்வார்கள்.)
 
வைப்புழி என்பது கருத்தாழம் பொருந்திய கூட்டுச்சொல்.  இந்தக் காலத்தில் இதை விடுத்துப் பெட்டகம், சேமப் பெட்டகம் என்று நீட்டி முழக்கிச் சொல்லுகிறோம். வைப்புழியிருக்கச்  சேமப் பெட்டகம் என்பது அருவியிருக்க  நீர்வீழ்ச்சி என்றழைப்பது போற் சுற்றிவளைத்து அமைந்த சொல்லாகும். 
 
 தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்ட மு.சண்முகம் பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலியைப் பார்த்தேன். வைப்புழி என்ற சொல் இந்தப் பொருளில் இருக்கிறது. இன்று எந்த வங்கியாவது பயன்படுத்துகிறதோ? பழஞ் சொற்களைப் புதுக்காமல், இன்னும் புதுப் புதுச்சொற்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் எப்படி? அந்தக் குறளையும், நாலடியாரையும் யாராவது தேடியெடுத்துப் போடலாமே? கூடவே இந்தச் சொல்லை மற்ற மடற்குழுக்கள், வலைப்பதிவுகள், முக நூல், கீச்சு எனப் பரப்பலாமே?
 
என்னதொரு சோகம் பாருங்கள்? லாக்கர் என்றே வங்கி செல்லும் பொதுமக்கள் எங்கும் ஆங்கிலத்திற் சொல்கின்றனர். இப்படிச் சொல்வதால் தமிழை விட்டு வெகு தொலைவு விலகி நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.  தமிங்கிலம் வளர்க்கத் தலைப்படுகிறோம். கையிற் செல்வத்தை வைத்து வேறெங்கோ அலைகிறோம்.  நம் வயிரங்களைக் கூழாங்கற்களாய்த் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். 
 
கண்ணிருந்தும் குருடராய் நாட்கழித்தால் எப்படி?
 
அன்புடன்,

இராம.கி.

7 comments:

அறிவியல் தமிழ் said...

Locker - வைப்புழி தெரிந்துக்கொண்டேன்.

பழஞ் சொற்களைப் புதுக்காமல், இன்னும் புதுப் புதுச்சொற்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் எப்படி?

இதுபோன்ற சொற்களை தாளிகைகள் செய்திகளில் பயன்படுத்தினால் மக்கள் இலகுவாக தெரிந்துகொள்வார்கள். நடைமுறைக்கு நிச்சயம் வரும்.

நன்றி ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் ஆதங்கம் புரிகிறது... முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும்... மாற வேண்டும்...

Anonymous said...

பொது மக்கள் என்பது ஆட்டு மந்தை போன்றது.அதை குறை சொல்லி பயன் ஏதும் இல்லை. அவர்களை வழி நடத்த நல் பெரு மக்கள் தேவை. இராம் கி போன்றோரின் எழுத்துக்கள் நம்மை வழி நடத்தும். சொற்களை வைப்புழியில் வைத்துவிடாமல் இயன்ற வரை அதை நாம் பயன் படுத்தினால் நிச்சயம் அது பரந்து விரியும்.
வாழ்க வளமுடன்.

அறிவியல் தமிழ் said...

தங்கள் கருத்தை வழிமொழிகிறேன் aruniyan .

ஐயாவின் சொல்லாக்கங்களை நாம் பின்பற்றினால் தமிழ் நிச்சயம் தழைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு. மக்களின் தேவைகள் அவர்கள் மொழியில் கிடைத்தால் தமிழும் வளரும் தமிழரும் வளர்வர்.

முத்துநாடான் said...

வைப்புழிக் கோட்படா; வாய்த்தீயின் கேடில்லை;
மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;
எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன
விச்சை, மற்றல்ல பிற.

என்பது அந்த நாலடியார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

என்பது குறள்.

Unknown said...

பெருந்தகை இராம கி ஐயா அவர்களே உங்களின் கருதுகோள் தனை ஏற்ற காரணத்தால் அதன் வழி தங்களுக்கும் அனைவருக்கும் 'இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்' தனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். - நன்றி

Unknown said...

பெருந்தகை இராம கி ஐயா அவர்களே உங்களின் கருதுகோள் தனை ஏற்ற காரணத்தால் அதன் வழி தங்களுக்கும் அனைவருக்கும் 'இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்' தனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். - நன்றி