Wednesday, January 01, 2014

அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிர் - 2

 சரி, அணங்கென்றாலென்ன? முருகன் கோட்டத்து அணங்கெங்கு வந்தது? - இது அடுத்த கேள்வி. இதற்குமுன் சிவன், பெருமாள் கோயில்களில் நிலவும் இனக்குழுப் புரிசைகள் பற்றிச் சொல்லவேண்டும். (என் தொடரைப் படிப்போருக்கு, இந்தப் பகுதி சற்று இடைவிலகல் போலத் தெரியலாம். ஆனாலும் சற்று பொறுமையோடு படியுங்கள். இந்தப் புரிசைகள் பற்றிய சிந்தனையில்லாது அணங்கைத் தெளிவது கடினம்.) சில மாந்தவியலார் கூற்றின்படி “இனக்குழுக் கோயில்கள் சிறுதெய்வக் கோயில்களாம். சிவன், பெருமாள் கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களாம். இரண்டிற்குமிடை புரிசைகளிற் தொடர்பே இல்லையாம்”. இதுகேட்டுப் பென்னம்பெரும் வியப்பாகிறது. (வடநாட்டிலல்லாது) தெற்கே பெரிதாய்க் கொண்டாடும் சிவ, விண்ணவ நெறிகள் தமிழரிடை நிலவும் இனக்குழுப் பழக்கங்களிற் தொடங்கியிருக்கலாம் என்பதை ஏற்கப் பலரும் தயங்குகிறார். நாமும் நம்மைப் பறிகொடுத்துச் சுரணையற்றுத் தமிழ்த்தோற்றம் மறந்து கிடக்கிறோம். சைவம், வைணவம் என்று சங்கதமாய்ச் சொன்னாற்றான் இக்காலத்திற் புரிகிறது. தேவார காலத்து இறைவன், இறைவி தமிழ்ப்பெயர்கள் கூடச் சங்கதமாக மாறித்தான் இன்று மக்களால் அறியப்படுகின்றன. நம் கோயில்களிற் தமிழ் அவ்வளவு விலகி நிற்கிறது. 

அதேபோல, முருகனெனுங் தமிழ்க்கடவுள், ”சுப் பிரமண்யனாகவே” இன்று புரிந்துகொள்ளப் படுகிறான். (முருகனின் கருவறைத் திருநிலைகளில் முருகனென்றொ, கந்தனென்றோ பெயர் எழுதுவது பெரிதுமரிது.) இக்கோயில்கள் பார்ப்பனமயமான பிறகு, அங்கு அணங்காடல் என்றெதுவுங் கிடையாது. (இத்தனைக்கும் இக்காலத் தென்பாண்டி நாட்டுச் சாமியாடலும் அக்கால அணங்காடல், வேலனாடலும் அடிப்படையிலொன்றே.) ஊருலாவும் (உற்சவமும்), எழுந்தருளப் பண்ணலும் தேரிழுப்பும், தெப்பமும் மட்டுமே மிஞ்சியுள்ளன. ஊருலாத் திருமேனி புறப்பாடு ஆகுமுன், சூலம்/வேல்/அரிவாளைக் கையிலேந்தி சாமி ”திருநிலை” (சந்நதம்) கொள்ளுஞ் சாமியாடிகள் கோயில்முற்றத்தில் ஆடியருள்வதில்லை. (வேலேந்தியவன் வேலன்.) காளி, ஐயன், கருப்பன், மாடன் போன்ற இனக்குழுக் கோயில் விழாக்களில் சாமியாடுதல் இன்றும் இயல்வழக்கமாய் தொடருகிறது. 

காளி, ஐயன், கருப்பன் போலச் சேயோனும் தொடக்கத்தில் ஊர்காக்குந் தெய்வந்தான். அரன், அரத்தன், சிவன், முருகன் (முள்முருக்கஞ் செம்பூவால் முன்னெழுந்த பெயர் முருகனாகும்; அழகனென்பது பின்வந்த பொருட்பாடு.) என்றடையாளம் காட்டுஞ் சேயோனைத் தந்தை, மகனெனக் குணநலன் பிரித்து முத்தலைச் சூலத்தைத் தந்தைக்கும், ஒருதலை வேலை மகனுக்கும் கொடுத்து அச்சமூட்டிய இனக்குழுக் கருத்தீடுகள் “அன்பே சிவமாய்” இன்றாகிவிட்டன. ”தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!” என்ற போற்றியகவலும் ”வெற்றிவேல் வீரவேல்”, ”அரோகரா” (= சிவசிவ) எனும் போர்முழக்கமும் இனக்குழுக்களின் வழியெழுந்த ஆகப் பழமையான நேரடிப் பரசல்தான்.

வரலாற்றுத் தொடக்கம் ஏதென்றுணராது, இன்று அன்புவழி, பதி-பசு-பாசம், தானம்(=த்யானம்), ஓகம்(யோகம்), தவம், சித்தாந்தமெனச் சிவநெறியினர் மெய்யியல் பேசுலாம். அடிப்படையிற் சிவநெறிக் கொள்கை நாட்கழித்துப் பிறந்ததாகும். மாணிக்கவாசகர் கி.பி.3ஆம் நூற்றாண்டினரென்று நம்புபவன் நான். அதற்கப்புறந்தான் சிவநெறி மெய்யியல் கிளர்ந்திருக்கவேண்டும். 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமூலர் திருமந்திரந்தான் சிவநெறி மெய்யியலின் விவரமான விளக்கமாகும். அதேநேரத்தில் தமிழரின் சிவ வழிபாடு வரலாற்றிற்கும் வெகுகாலம் முன்பே. இனக்குழு நிலையிலேயே உருவானது. கருத்த மாயோன் பற்றியும் இனக்குழுச் செய்திகள் ஏராளமுண்டு. (அவற்றையும் ஒதுக்குகிறோம்.) (சிகப்பு-கருப்பு பற்றி பண்பாட்டுத் தொடர்பு, முப்பட்டைச் சாம்பற்பூச்சு போன்றவை நம்மிடம் மட்டுமில்லை; நம் ஆதிகாலப் பங்காளிகளான ஆத்திரேலியப் பழங்குடிகளிடமுமிருக்கின்றன.)

இடுகாட்டிற் பேய்களோடு தந்தை ஏழுவிதமாய்த் தாண்டவமாட, அழகுமகனோ இன்னோர் இனக்குழுத் தலைவன் சூரனைச் சங்காரம் பண்ணிய தெய்வமாகி நம்மை இன்றும் ஈர்க்கிறான். தந்தைக்கு இலிங்கமென நடுகல்லையும், மகனுக்குக் கந்தெனக் கற்றூணையும் அடையாளங் காட்டுகிறோம். (நம் இனக்குழுத் தோற்றத்தை உணர்த்த, .இலிங்கம் ஒன்றுபோதும்,  இதைச் சிசுன தேவன் என்று வேத நெறியார் நக்கலித்துக் கேலிசெய்ததே ”தோற்றம் வடக்கில்லையென” உணர்த்தும்.) காலத்தொலைவால் சேயோன் ஓர் இனக்குழு மூதாதை. [மேலையரின் ஆதன் (Adam) எனும் ஆதிநாதனும் அவன் உருவகமே.] மூதாதைக்கு அடையாளமாய் ஒவ்வொரு கோயிலிலும் ஒரு காவல் மரத்தைக் கோயில் மரமாக்குகிறோம். அம்மரத்தில் நம் விழைவை ஓலையிலோ, வேறொன்றின் மூலமோ எழுதிக் கட்டி இறைவனிடம் தெரியப்படுத்தி இடையீட்டை எதிர்பார்க்கிறோம். வடக்கே இப்பழக்கம் அரிதாகவேயிருக்கிறது.

பல சிவன் கோயில்களும், அம்மன் கோயில்களும் இன்று பள்ளிப்படைக் கோயில்களாய் இருக்கின்றன. [ஓரிடத்தைப் பள்ளிப் (தோண்டிப்) படுக்கவைத்தது பள்ளிப்படை.] யாரோவொரு ஆண்பெரியார் கல்லறைமேல் இலிங்கம் பதிப்பதையும், ஒரு பெண்பெரியார் கல்லறைமேல் அம்மனின் முழுமூலத்/அரைமூலத் திருமேனி இருப்பதையும் பல கோயில்களிற் பார்க்கலாம். நடுகல்லைக் காவல் காக்க கோரமுக நுழைக்காவலர் (த்வாரபாலகர்) நிற்பதும் இனக்குழு அடையாளங் காட்டுகிறது. (நடுத்தரைக் கடலையொட்டிய மேற்கு நாகரிகங்களின் எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, அக்கேடிய, அசீரியக் கல்லறைக் கோயில்களுக்கும், நம் கோயில்களுக்கும் இடையே கூர்ந்து பார்த்தால் வியத்தகும் ஒப்பீடுகளுண்டு.)

அதுமட்டுமல்ல; நடுகல் முன் படைப்பது போலவே, கோயிற் கொடிமரத்திற்கருகில் அன்றாடப் பூசையில் பலிபீடத்திற் சோற்றுருண்டை படைக்கிறார். பல்வேறு திருமேனிகளுக்கு சோற்றுக் கட்டிகளை நிவத்திக் (= உயர்த்திக்) காட்டுகிறார். (நிவத்தம் நிவேத்யமாகி சங்கதம் தோற்றும்.) ஆனாற் அரத்தமும், நிணமும் விரவிய, ஏற்கனவே பொல்லிய விலங்கை (பொல்லுதல்>  பொள்ளுதல் = குத்துதல்; பொலி>பலி) பலிபீடத்திற் படைத்தகாலம் ஒன்றிருந்திருக்கும். (பின்னாற் காட்டு விலங்காண்டி மரபுகளை வெட்கி மறைக்குமாப் போல அருகதப் பழக்கம் நம்முள் நுழைந்தது போலும். பெரும்பாலான இனக்குழுக் கோயில்களில் இன்றும் கிடாவோ, கோழியோ, பன்றியோ என ஒரு விலங்கே வெட்டிப் பலியிடப்படுகிறது.)

ஒரு மூதாதைக்குச் செய்வது போலவே மாந்தப் பழக்க வழக்கங்கள் சிவன், பெருமாள் கோயில்களிற் செய்யப்படுகின்றன. (கோஇல் என்பது மூதாதை இறைவீட்டை உணர்த்துகிறது.) தென் பாண்டிநாட்டில் முன்னோரை வழிபடும் வகையிற் ’படைப்பெ’ன்று வீட்டு விழாக்களின்முன் செய்வர். இந்தத் தொடரில் முன்னோருக்கான படைப்பு எப்படிச் செய்யப்படும்? ஆண்களுக்கும் - பெண்களுக்கும் அதிலுள்ள பங்களிப்பு என்ன? எதை எவர் செய்யலாம்? எவர் செய்யக் கூடாது? - என்பதையெல்லாம் முழுக்க விவரிப்பதாக இருக்கிறேன். அதிற் கூடியாக்கி உண்ணும் சடங்குகள் இனக்குழுக் கோயிலிற் பழகுவது போலவே இருக்கும். சங்க இலக்கியத்திற் பெருஞ்சோறென்று வருவதும் இதுபோன்றதொரு பழக்கமே. பெருஞ்சோற்றைச் சங்கதமாக்கிப் பெருஞ்சாதம்> பெருசாதம்> ப்ரசாதம் என்று சொல்வர். நாமும் அதன் உள்ளார்ந்த தமிழ்மை புரியாது என்னமோ, ஏதோ சங்கதச் சொல்லென்று வியந்து கொள்வோம்.
  
இன்றைக்கும் முருகன் விழாவையொட்டி (பாண்டியர்) சாம்பலையும், (சோழியர்) குங்குமத்தையும், (சேரர்) சாரலையும் (சந்தனம்) உடலெங்கும் தனித்தோ, சேர்த்தோ பூசி, கார்த்திகை, பூசம்,
உத்திரம், விசாகம் எனப் பல்வேறு நாட்காட்டுகளில் அறுபடை வீடுகளுக்குக் கால்கடுக்க நடந்துசென்று, கோயிலிற் பழகும் காவடிகள், பாற்குடங்கள், வெறியாட்டு, தேரிழுப்பு, செடிலாட்டு [நோற்போர் தோலிற் கொக்கிகளைச் செருகியிழுக்கும் வதம். ரகரம் இடைநுழைக்கும் வடமொழி யுத்தியில் வதம் வ்ரதமென்றாகும்], பூக்குழி (நெருப்பின்மேல் நடத்தல்) என்ற தன்வருத்துப் பழக்கங்கள் பழந்தமிழர் இனக்குழு வாழ்வின் மிச்ச சொச்சங்களாய் இருக்கின்றன. இத்தனையாயிரம் ஆண்டுகள் கழித்தும் இனக்குழு மரபுகளும் தொடர்ச்சிகளும் தமிழர், மலையாளி வாழ்விற் திரண்டு செழித்து விளங்குகின்றன.

{ஓர் இடைவிலகல். பாண்டியர், சோழர், சேரர் என்பவை இனக்குழுப் பெயர்களே என்று ஏற்கனவே என் “சிலம்பின் காலம்” நூலிற் சொல்லியிருக்கிறேன். பாண்டு = சாம்பல் > பாண்டியர் (சாம்பல் பூசியவர். நெற்றியில் இடும் திருநீறு இச்சாம்பல் தான்), கோழியர்>சோழியர்>சோழர் = மஞ்சள்/குங்குமம் பூசியவர். [மஞ்சட்தூள் காடிச்செறிவிற் (acidic pH) பொன்னிறங் காட்டி, சுண்ணநீர் மீச்சிறிது கலந்த களரிச்செறிவில் (alkaline pH) குங்குமநிறங் காட்டும்], சாரல் = சந்தனம்; சாரலர்>சேரலர்>சேரர் (சந்தனம் பூசியவர்). தாங்கள் பூசிய அடையாளங்களாலே தான் இந்த 3 இனக்குழுக்களும் அறியப்பட்டனர். இற்றைத் தமிழரும், மலையாளிகளும் மூன்றையும் தனியாக அணியாது கலந்தே பூசுகிறார். அதாவது, இனக்குழு அடையாளங்கள் இவரிடை முற்றிலும் விரவிப் போயின. இவ்வடையாளங்களுக்கும் சநாதன மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. (ஆனாற் பலரும் இருப்பதாயெண்ணுகிறார்.) இவற்றை வடநாட்டில் யாரும் தனிவாழ்வில் விரும்பி அணிவதில்லை. (துறவியர் மட்டும் அங்கு விதிவிலக்காகிறார்.) பொதுமக்களிற் சிலர் அப்படி அணிந்தாலும் அது தென்னாட்டின் தாக்கமாகவேயுள்ளது. சரியாகச் சொன்னால் தமிழர் இனக்குழுப் பழக்கங்கள் இந்தியப் பழஞ்சமயங்களுள் ஊடுறுவிக் கிடக்கின்றன என்பதே உண்மை.}

மதுரைத் திருமலை நாயக்கருடைய அமைச்சர் இராமப்ப ஐயரின் அரசாணையின் பின், பழனிக் கோயிலிற் பண்டாரப்பூசை நின்றே போயிற்று. (போகர் படிமம் மட்டும் இருக்கிறது. காஞ்சிச் சங்கராச்சாரியர் செயேந்திரர் அதனுட்புகுந்து உலோகத்திருமேனி உருவாக்கச் சொல்லி அதற்கே பூசைகளைச் செய்யப்பணித்து, விரும்பாவிளைகள் ஏற்பட, ‘நவபாஷாணத்’ திருமேனிக்கே அடியார் மீளப் போய்விட்டார்.) மற்ற 5 படைவீடுகளிலும் பழனிக்கு முன்பே பண்டாரப் பூசை நின்று, பார்ப்பனப் பூசையே தொடர்கிறது. பல அம்மன் கோயில்களிலும் பார்ப்பனரல்லாக் குருக்கள் மாறிப் பார்ப்பனக் குருக்கள் நடைமுறைக்கு வந்து விட்டார். (சென்னைக்கருகில் பள்ளிப்படையான பெரிய பாளையம் பவானியம்மன் கோயிலில் 25 ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனப் பூசை கிடையாது. இப்பொழுதோ நடைபெறுகிறது. எல்லாங் காலத்தின் கோலம்.)

அறிவர், குயவர், வள்ளுவர், பண்டாரமெனப் பல்வேறு வகையார் பார்ப்பனமயமாகாக் கோயில்களின் வழிவழிச் சமயக்குருக்களாவர். எங்கள்பக்கத்தில் வாழ்வின் பெரும்பாலான நல்லவை, கெட்டவைகளுக்கு இக்குருக்களையே நாடுவர். பார்ப்பன வழிப் புரிசைகளுக்கு மட்டுமே பார்ப்பனக் குருக்களை அழைப்பர். சிவகங்கைப் பக்கம் பார்ப்பனரல்லாக் குருக்களை வேளகாரர் என்பர். வேள்வைக் -வேட்பைக்- இடைநின்று கடவுளுக்குச் சொல்வார் வேளகாரராவர். வேள்வென்பது தமிழ்ப்பழக்கம். நீரையும், பூவையும் அட்டுவதும், பாக்கள்பாடுவதும் இதில் முகனை. வேள்வி வடக்கிருந்து வந்த பழக்கம். அழனியில் ஆகுதியிடுவதும், சங்கதத்தில் மந்திரம் ஓதுவதும் இதில் முகனை. சிவன் கோயிலில் வேளகாரர் பூசைசெய்தது பல்லவர் காலத்தின் முன் நின்று போனது போலும். வரலாற்றில் எப்பொழுது இது நடந்தது, பார்ப்பனக் குருக்கள் சேயோன், மாயோன் கோயிலுள் எப்போது நுழைந்தாரென அலசவேண்டும்.

[வேளகாரருக்கு இணையாகவே ’வேளும்பார்ப்பார்’ எழுந்தார். வேளாப் பார்ப்பார் இவருக்கு மறுதலை. இன்றும் ஈசன் கோயிலுள்ளும், அம்மன் கோயிலுள்ளும் மூலமேனியைத் தொடும் குருக்களுக்கும், வெளியே சங்கத மந்திரஞ் சொல்லும் குருக்களுக்கும் இடையே பார்ப்பனர் நடைமுறைகளிற் குமுக வேறுபாடு காட்டுவர். முன்னவர் சிவாச்சாரியர் என்றும் பின்னவர் வாத்தியார் என்றும் அழைக்கப்படுவர். சங்கத மந்திரஞ் சொல்லத் தெரியாத சிவாச்சாரியார் அவர்களுள் சற்று குறைவாகவே எண்ணப்படுவார். பார்ப்பனக் குமுகத்தின் உள்ளே நிலவும் கூட்டங்கள் (கோத்திரங்கள்) பற்றிய குமுகவியல் அலசல் இன்னும் நடைபெறவில்லை.]

கூடவே தமிழக, ஈழ நாட்டுப்புறங்களில் இன்றிருக்கும் மரபு மிச்சங்களைச் சங்க நூல் நடைமுறைகளோடு பொருத்திப் பார்க்காது, கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் பின் தமிழ்க் குமுகாயத்தில் வலுவுற்ற வேதநெறி பிணைந்த சிவ, விண்ணெறித் தாக்கங்களோடு மட்டுமே பொருத்தி விளக்கஞ் சொல்வதால் வரலாற்றுக் கட்டுமானப் பிறழ்ச்சியும் ஏற்படுகிறது. பல்லவர் காலத்துப் பற்றி (பக்தி) இயக்கத்திற்கு முன்னும் தமிழர்க்கு வரலாறும், மரபும், வாழ்க்கை முறைகளுமுண்டு. அவற்றின் மிச்ச சொச்சங்கள் இன்றுந் தொடர்கின்றன. இதைமறுத்து, கி.பி.5ஆம் நூற்றாண்டிற்கு அப்புறம் சிலப்பதிகாரம் போன்ற தமிழிலக்கியங்களைப் பொருத்தும் பிழைப்போக்கு உருப்படியான ஆய்விற்குக் கொண்டு செல்லாது. பல மேனாட்டாய்வாளரும், அவருக்குப் பின்புலமான ’துபாஷி’ இடைப்பரட்டுத் தமிழறிஞரும் (துபாஷிகளும் மேனாட்டாய்வாளரும் நாணயத்தின் இருபக்கங்கள் போல அமைகிறார்.) இப்படியோர் கட்டுமானச் சிக்கலிலிருந்து என்றைக்கு வெளிவருவாரோ, தெரியவில்லை. தமிழாய்வும் இந்திய ஆய்வும் இதனாற் பெரிதும் தடுமாறுகின்றன.

இதுதான் சேயோன் கோயிலின் தொடக்கமென ஒன்றைக் காண்பது பெருஞ்சரவலே. இன்னொருமுறை பரவலாக சேயோன், மாயோன் செய்திகளைப் பார்ப்போம். அணங்கை விளக்குவதே இங்கு முகனையாகும். முருகன்கோயில் அணங்கு பற்றிப் புறம் 299 பேசுவதால், மேலே பார்ப்பனரல்லா நடைமுறைகள் பார்ப்பனமயமான சேயோன் கோயில்களில் ஊடுறுவி நிற்பதைப் பேசும் தேவையெழுந்தது. அணங்குபற்றிய தவறான புரிதல் பல மேனாட்டாய்வாளருக்கிருக்கிறது. தமிழரிற் சிலரும் நம் மரபுகளைக் கணக்கிற்கொள்ளாது மேலையர் ’கண்டுபிடிப்புக்களைச்’  சிக்கெனப் பிடித்து ’எங்கெழுந்து அருளுவதினியே’ என்று தொங்குகிறார். அணங்கோடு முருகனைச் சேர்த்துப் பொருள்காண வேண்டுமெனில் ”சேயோன், மாயோன் கோயில்கள் தெற்கில் இனக்குழுக் கோயில்களாகத் தோற்றங் கொண்டன, அதன் மிச்ச சொச்சங்கள் இன்னுமிருக்கின்றன” என்பதையும். வடக்கிலும் தெற்கிலும் உள்ள சமய வேறுபாடுகளை வரலாற்று நெறிப் படியும் உணரவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Adv.Balaji said...

புரிசைகள் என்றால் என்ன

இராம.கி said...

புரிசைகள் = practices