Saturday, February 15, 2014

பிலிறுந்தம்

நான் மதிக்கும் தமிழ்த்தேசியர் ஒருவர் 10 நாட்கள் முன்பு நகரிப்பேசியில் (mobile), குமரி மாவட்டம் போனவிடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன Liquid propulsion பொறிஞர் சிலர் propulsion - க்கு இணையாக நுட்பச்சொல் கேட்டதாய்ச் சொன்னார். ”சில நாட்களில் ஓர்ந்து சொல்கிறேன்” என்றேன். கருத்துத் தெளிந்த நிலையில் இப்பொழுது எழுதுகிறேன்.
 
இச்சொல்லின் அடிப்படை வினைச்சொல் propel ஆகும். (தொழிற்பெயர்களை மொழியாக்கும் போது அடிப்படை வினைச்சொல்லைப் பார்க்கவேண்டும். Direct என்ற வினைச்சொல்லைப் பார்க்கின் நெறிப்படுத்தல் புரிந்திருக்கும்; Director-க்கு இணையாய் ’இயக்குநர்’ என்ற பிழைச்சொல் எழுந்திருக்காது.) இதோடு dispel, expel, impel, repel எனும் வினைகளையும் impeller, propeller, propulsion என்ற பெயர்களையும் சேர்த்து இணைதேடவேண்டும். (பலநேரம் நாம் தொடர்புச் சொற்களை ஒருங்கே காணாது பாத்தி பாத்தியான அணுகுமுறையிற் சொல்லாக்கி விடுகிறோம். இதுவும் தவறான நடைமுறையே.) முன்னொட்டு/பின்னொட்டுப் பிணைக்கும் சொல்லமைப்பில் தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்குமுள்ள வேறுபாடு உணர வேண்டும். முன்னொட்டு, பின்னொட்டுப் புரிந்து சொற்படைப்பதில் இற்றைத் தமிழ் நடைமுறையில் பலருக்கும் பெருத்த குழப்பம் இருக்கிறது. 
 
இந்தையிரோப்பிய மொழிகளைப் போல முன்னொட்டை வைத்துப் பலரும் தமிழில் பின்நவீனம் (Post-modernism), அவைதீகம் (Non-Vedic), அபுனைவு (Non-fiction) என்று விந்தையாகச் சொற்கள் படைக்கிறார்கள். இடதுசாரி அறிவுய்திகளும் அலங்காரமாய் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்.
 
மொழிக் குடும்பங்களின் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடிருக்கிறது. post-ற்குப் ’பின்’ என்பது சரியான மொழியாக்கமா? பின்னெனில் முதுகுப்புறமெனும் பொருளுண்டே? இங்கு
முன்னொட்டுப் பயிலவா? பின்னொட்டுப் பயிலவா? அதென்ன பின்நவீனத்வம்? முன் நவீனத்வம் என்று வேறுள்ளதா? எங்கோ நெருடுகிறது. இன்னொரு பக்கம் modern என்பதற்கு நவீனம் எனச் சங்கதச் சொல் பழகத் தேவையில்லை. (ஏனோ அறிவுய்தியர் பழக்கத் தோய்வால் சட்டென்று சங்கதம் தாவுகிறார்.) முன்வந்து நிற்பதால், நல்ல தமிழில் முகனம் என்றே சொல்லலாம். (சிவகங்கை வட்டாரத்தில் ஒரு பெரியவீட்டு முன்பிரிவை முகப்பென்பர்.) நவீனமென்பது முகந்து நிற்பதன்றி வேறென்ன? முகனக் காலம் modern time ஆகும்.
 
முகனியம் (நவீனத்துவம்) என்பது 1950 களின் பின், ஐரோப்பிய ஓவியம், சிற்பம், கலை, மெய்யியற் துறைகளில் எழுந்ததொரு அழகியற் கோட்பாடாகும். அதுவரை இருந்த மறுமலர்ச்சிக் கோட்பாட்டிற்கு (renaisance concept) மாறாக ஒரு முகனியப் பட்டவம் (fashion) நுகர்வோரிடம் புதிதாய் எழுந்தது. இது மேலும் வளர்ந்து முகனியத்திற்கு அடுத்த நிலை பற்றிய பேச்சு வந்த போது ’முகனியத்திற்கு அப்பால்’ என்ற வளர்நிலை புரிந்துகொள்ளப்பட்டு ’முகன அப்பாலியம்’ (post-modernism) ஆனது. (முகனத்திற்கு அப்புறமானது முகன அப்பாலியம். பால் = புறம்.) இங்கே post ற்கு இணையான சொல்லைத் தமிழிற் பின்னொட்டாகச் சேர்ப்பதே சரியான பொருளைத்தரும்.
 
அ-புனைவு, அ-வைதீகம் என்பவற்றிலும் தடுமாற்றம் இருக்கிறது. அல் என்ற தமிழ் முன்னொட்டைப் போன்றது அ எனும் வடமொழி முன்னொட்டாகும். கனியிருப்ப காய்கவர்தல் ஏன்? தாயின் பாலிருக்கப் புட்டிப்பால் ஏன்? அல்லின் ’ல்’ இல்லாமற் சொல் படைப்பது தமிழிற் புரிதற் குழப்பத்தையே வரவழைக்கும். அல் முன்னொட்டாய்ப் பயனுறவா, பின்னொட்டாய்ப் பயனுறவா? - என்ற கேள்வியைக் கவனிக்கவேண்டும். அல்பொருள், அல்வழக்கு, அல்வழி போன்றவை அரிதானவை. அல்லை வைத்து எல்லாவிடத்தும் முன்னொட்டுப் பழகமுடியாது. (அல்லிருமை என்ற சொல்லை அத்வைதத்திற்கு இணையாக நானும் பரிந்துரைத்திருக்கிறேன். அதுவும் அரிதானதே.)
 
பொதுவாகத் தமிழில் முன்னொட்டை விட பின்னொட்டே பெரிதும் பயன்படுகிறது. (இருபத்து ஒன்று என்பது தமிழ்முறை. Ein und Zwanzig என்பது இந்தையிரோப்பிய முறை. இந்தியிலும் பந்த்ரா(க்) என்று பதினைந்தைச் சொல்வர். பத்தாந் தானம் சொல்லி ஒன்றாந் தானம் சொல்வதே நம்மூர் வழக்கம். முன்னொட்டா, பின்னொட்டா என்பதில் மரபே முடிவு செய்கிறது. புனைவல்லாதவற்றை, வேதமல்லாதவற்றை அப்படியே சொல்லிப் போகலாமே? அபுனைவு, அவைதீகம் என்று ஏன் சொல்லவேண்டும்? அல்வேதம் என்று கூடச் சொல்லாது அவைதீகம் என்று வடமொழி இலக்கணம் பயில வேண்டுமா, என்ன?  (சிவம் என்பதைச் சைவம் என்றும், விண்ணவம் என்பதை வைணவம் என்றும் எழுதுவதும் தவறுதான். சங்கத இலக்கணம் நமக்கெதற்கு?)
 
இந்தையிரோப்பியக் குடும்பில் முன்னொட்டு பெரிதும் இயற்கையானது. பல்வேறு முன்னொட்டுக்களை விதம் விதமாய் ஒட்டிப் பொருள் வேறுபாட்டை எளிதிற் கொணர்ந்து விடுவர். dispel, expel, impel, propel, repel என்பவை அப்படி உருவானவை தான். இவற்றிற்கு அடிப்படை pellere எனும் இலத்தீன் வினையாகும். ஒரு குழாய் வாயில் வெளியாகும் நீர்மத் தாரையைப் ”பீச்சியடிக்கிறது” என்று சொல்கிறோமே? நினைவிற்கு வருகிறதா? இற்றைப் பேச்சுவழக்கிற் பீச்சலென்று திரித்தாலும், சங்க காலத்தில் பிலிற்றல் என்றே இது பலுக்கப்பட்டது
 
பதவுமேய் அருந்து மதவுநடை நல்ஆன்
வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்ற
 
       அகநானூறு 14, 9-10
 
”முல்லை நிலத்தில் அறுகம் புல்லை வயிறு நிரம்ப உண்ட வலியநடையுள்ள பசுக்கள் தம் மடியிலிருந்து இனிய பால்மிகுதியால் பீச்சியடிக்க” என்பது இதன் பொருளாகும்.
 
*புல்>பில்>பிள்>பிளத்தல்
*புல்>பில்>பிள்>விள்>விள்ளல்
*புல்>பில்>பிள்>பிள்ளை = தாயிலிருந்து பிரிந்து வந்த குழந்தை
*புல்>பில்>பிள்>பிரி>பிரிதல்
*புல்>பில்>பிலி>பிளி>பிளிரல் = கிளைக்கை
*புல்>பில்>பிலி>பிளி>பிளிர்த்தல் = கொப்புளித்தல்
*புல்>பில்>பிலி>பிலிர்>பிலிற்று>பிலிற்றல்
*புல்>பில்>பிலி>பிலிர்>பிலிற்று>பிளிற்று>பிளிற்றல் =
*புல்>பில்>(வில்)>விலகு>விலகல்
*புல்>பில்>பிய்>பிய்>பிய்தல்
*புல்>பில்>பிய்>பிய்>பிய்தல்>பிய்த்தல்>புய்த்தல்
*புல்>பில்>பிய்>(பெய்)>பெயர்>பெயர்தல் = பிரிதல்
*புல்>பில்>பிள்>பிள்+து>பிட்டு>பிட்டல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதுக்கு>பிதுக்கல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதிர்தல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிது>பிதுக்கல்
*புல்>பில்>பிள்>பிட்டு>பிடு>பிடுங்கு>பிடுங்கல்
 
என்று பிரிதற் பொருளில் *புல்>பில் வேரில் பிளத்தலும், விள்ளலும், பிள்ளையும், பிரிதலும், பிளிரலும், பிலிர்த்தலும், பிலிற்றலும், பிளிற்றலும், விலகலும், பிய்தலும், புய்த்தலும், பெயர்தலும், பிட்டலும், பிதுக்கலும், பிதிர்தலும், பிதுக்கலும், பிடுங்கலும் எனச் சற்றே வேறுபட்டுப் பற்பல வினைச்சொற்களெழும்.
 
கொள்கலத்தில் நீர்மம் பிரிந்து தாரையாயோ, துளிகளாய்ச் சிதறியோ, வெளிவது பிலிற்றலாகும். பிலிற்றலுக்கு விசையாகத் தொடர்ந்து நீர்ம அழுத்தம் (liquid pressure) இருக்க வேண்டும். அது உயரத் தொட்டியாகவோ, அழுத்தங்கூடிய நீர்மக்கலனாகவோ இருக்கலாம். (அகம் 14 இல் நீர்மக்கலன் என்பது ஆவின் மடியாகும்.) நீர்மத்தை மட்டுமே பிலிற்றுகிறோமென்றில்லை. நீர்மம் (liquid), வளிமம் (gas) எனும் எந்த விளவத்திலும் (fulid) நடக்கலாம். அன்றாடம் பற்பசைத் தூம்பை (tube) அமுக்கிப் பாகுப் (vicous) பசையைப் பிலிற்றுகிறோமே? இன்னொரு பக்கம், கன்னெய்த் தாங்கலில் (petrol bunk), வண்டியுருளித் (car tyre) தூம்பின் காற்றழுத்தங் கூட்ட, அதியழுத்தக் காற்றுக் கலனின் (high pressure air vessel) குழாய்வழி பீச்சிக் காற்றடைக்கிறோமே? கவனித்திருக்கிறீர்களா?
 
பின்னாளில் பிலிற்றல் திரிந்து பிலிற்றல்>பியிற்றல்>பீற்றல்>பீச்சல் என்றாகிப் போனது. பலன்>பயன், வாழப்பழம்>வாயப்பயம், கழுதை>கயுதை என்றாவதுபோல லகர/ழகர/ளகர இடையுயிர்ச் சொற்கள், பேச்சு வழக்கில் யகர ஒலிப்புறுவது தமிழர் பலுக்கலில் இயற்கையே. பீற்று, பீச்சாவதும் புதிதல்ல. கீற்று கீச்சாகியிருக்கிறதே? விசையோடு வெளிவரும் தாரையைப் பிலிற்று என்றும் பெயர்ச்சொல்லாக்கிச் சொல்வதுமுண்டு. 21 ஆம் நூற்றாண்டில் ’பிலிற்று’ போய், பீச்சே நம் வழக்கிலுள்ளது. இந்தக் காலத்திற் பிலிற்றை மீட்டுவது சொல்லாக்கத்திற் பயன்படும்.
 
பிலிற்றின் (பீச்சின்) மூலம் கொள்கல உள்ளடக்கத்தை வெளிப்படுத்துவதைத் தான் expel என்ற ஆங்கிலச் சொல் காட்டுகிறது. இதை வெளித்தள்ளு, வெளிப்பீச்சு என்று சொல்கிறோம் ஆனாலும் பிலிறித் தள்ளல்/பீச்சித் தள்ளல் என்பது சிறப்பாக இருக்கும்.
 
பிலிற்றின் மூலம் கொள்கல உள்ளடக்கத்தைப் புறந்தள்ளுவதை dispel என்ற சொல் காட்டுகிறது. இதைப் புறந்தள்ளு, ஒதுக்கித் தள்ளு என்று சொல்லுகிறோம். இடம், பொருள், ஏவல் புரிந்த இடத்தில் வெறுமே தள்ளு என்று கூடச் சொல்லுகிறோம். பிலிறியொதுக்கு என்பது சிறப்பாக இருக்கும்.
 
விளவக் கண்டங்களை (fluid quanta) விளவத்தின் உள்ளேயே வீசியெறிந்து அலசுவதை impel என்ற சொல் காட்டுகிறது. இதை அலசு என்றே இப்பொழுது சொல்கிறோம். இங்கும் நுட்பியல் ஒழுங்கு கருதி உட்குதல் = உள்ளே வைத்தல் என்ற பொருளால் பிலிறுட்கல் என்று சொல்லலாம். இதன் வழி impeller என்பது பிலிறுட்கி என்றாகும். பல்வேறு விதமான பிலிறுட்கிகளும், சுழலிகளும் (turbines) வேதியற் செயற் தொழிலகங்களிலும் (chemical process industries), நீரியற் கட்டகங்களிலும் (hydraulic systems), வானியற் கட்டமைப்புக்களிலும் (aeronautic constructions) பயன்படுகின்றன.
 
விளவக் கண்டங்களைத் தாரையாக்கி விளவக் கலனிலிருந்து பிலிற்றி, அதன்மூலம் விளவக் கலனையே எதிர்த் திசையில் உந்த வைப்பதை propel என்ற சொல் காட்டுகிறது. ஏவுகணைகள் இந்தச் செயற்பாட்டாற்றான் வேலை செய்கின்றன. பிலிறுந்தம் என்பது propulsion என்பதற்குச் சரியாக இருக்கும்..(ப.அருளியார் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்கலைச்சொல் அகரமுதலியில் உந்தெறிவு என்று சொல்லுவார். நான் பாத்தி பாத்தியான சொல்லாக்கத்திற்கு உடன்பட்டவனல்லன். இந்தக் கட்டுரையிற் சொல்லப்படும் பல்வேறு pellere சொற்களுக்கும் ஓர் ஒத்திசைவு இருக்கவேண்டும் என்று எண்ணுவேன். அப்பொழுதுதான் அறிவியற் சிந்தனை வளரும். புதிதான pellere பயன்பாடுகளைக் கண்டுபிடித்துத் தமிழிற் பெயர்வைக்கமுடியும்.) solid propulsion என்பது திண்மப் பிலிறுந்தம் என்றாகும். liquid propulsion = நீர்மப் பிலிறுந்தம்; liquid propulsion rocket = நீர்மப் பிலிறுந்த ஏவுகணை.
 
பிலிறுந்தி என்பது propeller என்பதற்குச் சரியாக இருக்கும். தாரைவகைப் பறனைகள் (jet planes) ஒருவகையென்றால், பிலிறுந்தி வகைப் பறனைகள் (propeller fan type planes) இன்னொருவகையாக ஒருகாலத்தில் இருந்தன. இப்பொழுது நீண்ட பயணத்திற்கு முதல் வகையும், குறைந்த தொலைவிற்கு இரண்டாம் வகையும் நேர்த்தித் திறனோடு பயனுறுத்துகிறார்.
 
விளவப் பிலிற்றலால் ஒருபக்கம் தள்ளுஞ் செய்கையைத் தடுத்து எதிர்ப்பதை repel என்ற சொல் காட்டுகிறது. இதை எதிர்த்தள்ளு என்றே சொல்கிறோம். (வெறூமே எதிர் என்றுஞ் சொல்வதுண்டு.) இங்கும் ஒழுங்கு கருதி பிலிற்றெதிர்/பீச்செதிர் என்று சொல்லலாம்.
 
பொதுவாக அருங்கலைச் சொற்கள் / நுட்பச் சொற்கள் என்பவற்றில் முன்னொட்டு/பின்னொட்டு போன்றவற்றைத் தவிர்க்காதிருப்பது நல்லது. புரிந்த இடத்தில் இந்த ஒட்டுக்கள் இல்லாது பயில்வதிற் தவறில்லை.
 
நம்முன்னே ஒரு விசிறியிருக்கிறது என்று வையுங்கள். அது பிலிறுந்தி விசிறியா (propeller fan), பிலிறுட்கி விசிறியா (impeller fan) என்பது நுட்பியலாளருக்குத் தேவையான, வேண்டக் கூடிய புரிதலாகும். ஆனால் நம் போன்ற பொதுப் பயனாளருக்கோ வெறும் விசிறி என்பதே போதும். சிக்கல் என்னவென்றால் பொதுப்பயனாளரும் சொல்லாக்கச் செயற்பாடுகளுக்குள் உட்புகுந்து ”அது சரியில்லை, இதுசரியில்லை. விசிறியே போதாதா? ஆங்கிலத்தையே வைத்துக் கொள்ளலாமே? வடமொழியிற் சொல்லக் கூடாதா?” என்று கருத்துச் சொல்லத் தொடங்கி விடுகிறார். இதுபோன்ற கிடுக்கங்களை (criticisms) ஒருபக்கம் வரவேற்கும் போது இன்னொரு பக்கம் எழுதருகையோடு (எச்சரிக்கையோடு) சிந்திக்க வேண்டியிருக்கிறது.
 

அன்புடன்,
இராம.கி.

8 comments:

முத்துநாடான் said...

அருமையான பதிவு. நீங்கள் எழுதும் அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிடுகிறீர்களா?

ஒரு சிறந்த ஆங்கில அகரமுதலியின் சொற்களை, உங்களுக்கே உரித்தான முறையில், தமிழுக்குப் பெயர்த்து ஒரு ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

////அல் முன்னொட்டாய்ப் பயனுறவா, பின்னொட்டாய்ப் பயனுறவா? - என்ற கேள்வியைக் கவனிக்கவேண்டும். அல்பொருள், அல்வழக்கு, அல்வழி போன்றவை அரிதானவை. அல்லை வைத்து எல்லாவிடத்தும் முன்னொட்டுப் பழகமுடியாது. ////

பூலியன் அளவை (Boolean logic) யின் வழி வரும் கருத்துக்களுக்கு, முன்னொட்டாக பயன்படுத்த்லாம். உயர்திணை என்னும் பிரிவினுள் அடங்காத, ஒழிந்த பிரிவைக் குறிக்க உயர் அல் திணை என்பது அல் தினை=அஃறினை என்றாவதில் முன்னொட்டு வாகாகப் பயன்படுகிறது. (தமிழ் பேசாத நிலங்களை தமிழ்ஒழி நிலம் என்று வழங்கும் வழக்கம் நன்னூலில் உள்ளது. இங்கு, ஒழி என்பது அல் போன்று கையாளப்படுகிறது.)

///(அல்லிருமை என்ற சொல்லை அத்வைதத்திற்கு இணையாக நானும் பரிந்துரைத்திருக்கிறேன். அதுவும் அரிதானதே.) ///

நீங்கள் கூறியபடியே, எதிர்மறைக்கு முன்னொட்டை விட, பின்னொட்டுதான் பொருத்தமானது. அல்லிருமை என்பதைவிட, இரு-அல்-மை=இருவன்மை என்பது பொருத்தமாக இருக்கும்.

இன்னல் என்னும் சொல்லும் கவனிக்கத்தக்கது. இன் என்பது இனிமை, இன்பத்தைக் குறிக்கிறது. அது அல்லாத துன்பத்தைக் குறிக்க இன்+அல்.

இன்பம்=இன்+பு+அம் என்பதற்கு ஒழிபுசொல்லாக இன்+அல்+பம் என்பதை நாட்டிவிட்டால் தமிழுக்கு ஒரு தற்செய் இலக்கணம் அமைந்துவிடும்.

//// இற்றைப் பேச்சுவழக்கிற் பீச்சலென்று திரித்தாலும், சங்க காலத்தில் பிலிற்றல் என்றே இது பலுக்கப்பட்டது ////

பீச்சுதலுக்கும் பிலிற்றலுக்கும் இடையே பீர், பீரிடு போன்ற அக்கால இலக்கிய சொற்களும் உண்டு.

பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான் தனக்கு
தாரடைந்த மாலைசூட்டி தலைமை வகுத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞ்ஞலூர் மேயவனே

என்பது தேவாரம் (முதல் திருமுறை, திருச்சேய்ஞ்ஞலூர் பதிகம்)

பீர்ச்சு என்பதில் இருந்து பீச்சு வருகிறது. பீர் என்பது பில் என்பதில் இருந்து வருகிறது. (லகர ரகர திரிபுகள் வேறு சொற்களிலும் உண்டு)

இந்த பீரிடு என்பதில் இருந்து வீரிடு என்பதும் கூட உருவாகிறது. (குழந்தை வீரிட்டு அழுகிறது). ஒலியைப் பீர்ச்சியடிப்பது வீரிடுதல். அதேபோல், ஒலியைப் பிலிறுதல், பிளிறுதல் ஆகிறது (யானை பிளிறுதல்)

அறிவியல் தமிழ் said...

solid propulsion = திண்மப் பிலிறுந்தம்
liquid propulsion = நீர்மப் பிலிறுந்தம்
liquid propulsion rocket = நீர்மப் பிலிறுந்த ஏவுகணை
பிலிறுந்தி = propeller

அருமையான சொல்லாக்க விளக்கம் ஐயா....

பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்,இதை நாம் பாராட்டுவதுடன் நின்று விடாமல், வழக்கத்திற்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாக இச்சொற்களைக் கட்டுரைகள் பயன்படுத்தினால் நல்லது. ஒரு சொல்லை மக்கள் கண்ணில் ஒரு 20 அல்லது 30 முறை படும்படி வைத்தாலே அச்சொல் எளிதில் படிப்பவர் மனத்தில் ஓட்டிக்கொள்ளும். இதுபோன்றதொரு ஒத்துழைப்பே தமிழைக் காப்பாற்றும் முயற்சியின் முதல் பணியாகும்.

அறிவியல் தமிழ் said...

//ஒரு சிறந்த ஆங்கில அகரமுதலியின் சொற்களை, உங்களுக்கே உரித்தான முறையில், தமிழுக்குப் பெயர்த்து ஒரு ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியை வெளியிட்டால் நன்றாக இருக்கும்.//

நண்பர் பால. முத்துக்குமாரின் எண்ணம் போல் தான் என் எண்ணமும். ஆனால் இந்தப் பணி அவ்வளவு எளிதானதல்ல, பலருடைய பங்களிப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

அறிவியல் தமிழ் said...

//கடாவு = Emitting, throwing out;

கடாவு-தல் - to propel //


தேர்கடாவி (தேவா. 839, 3)


ஐயா,

இந்தச் சொல்லும் propel என்ற சொல்லுக்கு இணையாக வருமா?

(ஒரே பொருள் கொண்ட பல சொற்கள் போல்)

அதியன் said...

ஐயா Creativity - படைப்பாற்றல் என்ற சொல்லைவிட வேறு ஏதாவது சொற்கள் உள்ளனவா? Innovation க்கு இணையான தமிழ்ச் சொல் உள்ளதா?

இராம.கி said...

creativity என்பதற்கு படைப்பாற்றல் என்றே பலரும் எழுதிவருகிறார்கள்.

ஆற்றும் திறமை என்பதை ஆற்றல் (இதுவொரு செலுத்தம் = process. என்று சொல்லுதற்கு மாறாக (ஆற்றும் capability என்னும் பொருளில்) ஆற்றுதி என்றுஞ் சொல்லலாம்.

படைப்பாற்றுதி என்பதற்கு மாறாய் கருவாற்றுதி என்றுஞ் சொல்லலாம். படைப்பு, கரு என்ற இரண்டில் எதைச் சொல்வது என்பது உங்கள் உகப்பே. இயற்கையில் எழுவதைக் கருத்தல் என்று சொல்லுவோம். செயற்கையில் விளைவதைப் படைத்தல் என்போம்.

innovation என்பதற்குப் புத்தாக்கம் என்றே சொல்லிவந்திருக்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.

அதியன் said...

நன்றி ஐயா!

Unknown said...

அருமையான விளக்கம் ஐயா