Saturday, January 11, 2014

Forum

தாளிகைச்சொற்கள் பற்றிய என் வலைப்பதிவு இடுகையின் பின்னூட்டாக இராசு சரவணன் என்ற ஒரு நண்பர் forum என்பதற்கு மன்றம் என்பதைக் காட்டிலும் வேறு சொற்களுண்டா? என்று கேட்டிருந்தார்.

(முல்>(மல்)>மன்>மன்று>மன்றம் என்று சொல்வளர்ச்சி நீண்டு அவை அல்லது தொகுதிப்பொருளைச் சுட்டும்.  தொகுதி என்பது வெளியில் இருக்கலாம், ஒரு கட்டடத்தின் உள்ளிருக்கலாம்.  பூதிகமாய் இருக்கலாம், பூதிகமல்லாது கருத்துப்புலத்தில் இருக்கலாம்; நேரடியாக இருக்கலாம், மறைமுகமாக இருக்கலாம். இப்படிப் பல்வேறாய்  விரியும். மன்று என்பது தமிழிற் பொதுமையான சொல்; விதப்பான சொல்லன்று. மன்றம் என்பது association, assembly போன்றவற்றிற்கும் வேறிடங்களிற் பயன்படுவதால் அதையே forum என்பதற்கும் பயன்படுத்துவதில் சிக்கல் எழாதா? - என்றெண்ணிச் சொற்துல்லியம் வேண்டிக் கேட்டாரோ, என்னவோ? எப்பொழுதும் சொற்துல்லியம் தேடிப் பார்க்கும் ஆளான எனக்கு, இருப்பதை அள்ளித் தெளித்து பூசி மெழுகும் வேலையில் பெரும்பாலும் இசைவு கிடையாது.)
  
நானும் forum என்பதற்கு மன்றம் என்ற சொல் பல இடங்களிற் புழங்குவதைப் பார்த்திருக்கிறேன். forum hub என்பதை மன்ற மையம் என்றும் எழுதுவார்கள். (இணையத்தில் ஒரு காலம்
பலரும் உலவிக் கொண்டிருந்த இடம் மன்ற மையம் என்பதாகும். நானும் அங்கு பெரிதாகப் பங்களித்திருக்கிறேன். இப்பொழுது வெகு அரிதாகவே அங்குபோய்ப் பார்க்கிறேன். அந்தத் தளம் என்னவாயிற்று என்று பார்க்கவேண்டும்.)
மன்றம் என்னும் பொதுமைச் சொல்லைக் காட்டிலும் விதப்பான இன்னும் மரபுசார்ந்த சொல்லைப் பரிந்துரைக்க முடியும். ஆனால் எத்தனை பேர் அதை எடுத்துக்கொள்வர் என்ற தயக்கமுண்டு.  ஏதோவொரு காரணம் பற்றி ஒரு சொல் பழக்கமாகிவிட்டால் அதைப் பின்னால் மாற்றுவது தமிழ்ச்சூழலிற் கடினமாகிவிடுகிறது. இந்தப் பேச்சு/எழுத்துப் பழக்கமே நமக்குத் தடையாகிப் போகும். [அருவியிருக்க நீர்வீழ்ச்சியை நம்மிற்பலர் இற்றைக்காலத்திற் பயன்படுத்துகிறோமே; நினைவுக்கு வருகிறதா? அருவியை அங்கெல்லாம் எழுத நம்மில் எத்தனை பேர் அணியமாகிறோம்? தமிழ்நடை சிறிது சிறிதாகக் கடினப்பட்டு வருகிறது; சுற்றி வளைத்து ஆகிறது. சங்கத் தமிழின் எளிமையை மறந்து பலக்கிய (coplex) சொற்களையும் சொற்றொடர்களையும் இப்பொழுது நாம் கையாண்டு வருகிறோம்.]
இப்படித்தான் director க்கு இணையாய் இயக்குநர் என்று அள்ளித் தெளித்த கோலமாய் 1967க்கு அப்புறம் பேராயத்தின் ஆட்சியிலிருந்து தி.மு.க. ஆட்சி வந்தபோது எல்லா இடத்திலும் தமிழ்நாட்டிற் குறித்தார்கள். அதே பொழுது operator என்பதற்கும் இயக்குபவர் என்று சொன்னார்கள். இந்த இரட்டைப் பழக்கத்தால், director க்கும் operator க்கும் இடையே புரிதற் குழப்பம் இருந்தது. எண்ணிப் பார்த்தால் இருவரும் ஒன்றா? இதற்கு மாற்றாகச் சொற்துல்லியம் வேண்டி, 1969/70 களில் கோவை நுட்பியற் கல்லூரியில் ”இயக்குநர் என்பதை operator க்கு வைத்துக் கொண்டு  director க்கு நெறியாளர் (நெறியை ஆள்பவர்) என்று சொல்லலாம்” என்று எங்களிற் பலரும் உரைத்தோம். 43 ஆண்டுகள் கழித்து உன்னித்துப் பார்த்தால், நெறியாளர் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தான் இன்னும் புழங்குகிறது. இயக்குநர் என்ற தப்பான வழக்கே director க்கு இணையாகப் பெரும்பான்மை புழங்கிக் கொண்டிருக்கிறது. என்ன சொல்வது? நம்மைச் சுற்றிலும் உள்ள மொழிப் பயன்பாடு விந்தையானது. அது உங்களைக் கேட்டுக்கொண்டோ, என்னைக் கேட்டுக்கொண்டோ நடப்பதல்ல.
[இன்னொன்றும் நினைவிற்கு வருகிறது. இயல்பியல் என்பதை physics க்கு இணையாகச் சொன்னோம். அது எங்கோ தப்பாகி இயற்பியல் என்று மாறுதலடைந்து இன்று பெருவழக்காகிப் போனது. இத்தனைக்கும் இயற்பு என்ற சொல்லே தமிழிற் கிடையாது. (இயல் எனும் பகுதியோடு பு என்ற ஈற்றையொட்டினால் இரண்டு விதச் சொற்கள் எப்படியெழும்பும்? தமிழிலக்கணம் ஒன்றைத்தானே சரியென்று சொல்லும்?) தமிழாய்ந்தோர் யாரும் இப்பயன்பாட்டில் ஏதுங் கேட்காமலிருக்கிறார். பலநேரம் எச்சொல் நிலைக்கும்? எது மறையும்? - என்றுரைக்கவே முடிய வில்லை. என்னளவில் நான் மாறிக் கொள்வதே நல்லதென்று நான் அமைகிறேன். இப்பொழுதெல்லாம் இயல்பியலைப் பயன்படுத்துவதேயில்லை. இயற்பியல் என்பது தவறென்பதால் அதையும் எழுதுவதில்லை. பூதியல் என்று புதுச்சொல் படைத்து physics க்கு இணையாக எழுதுகிறேன். இந்தச் சொல்லாவது சரியான முறையில் ஏற்கப் படுகிறதா என்று பார்ப்போம்.]    
இப்பொழுது நீங்கள் கேட்ட forum இன் சரியான பொருளுக்கு வருகிறேன். John Ayto வின் Bloomsbury Dictionary of Word origins இல்
“Originally Latin forum denoted an 'out-of-doors place' - it was related to foris 'out-of-doors, outside and to fores 'door', a distant cousin of door.It came to be used for any outdoor open space or public space, and in particular for a market place (the most famous of which was the one in Rome, where public assemblies, tribunals, etc were held). Other English words from the same source are foreign, forest, forensic 'of legal proceedings' (from Latin forensis 'of a forum as a place of public discussion')”
என்று குறித்திருப்பார்கள். நம்மூர் நாட்டுப்புற வழக்கிற் பார்த்தால் பெரிய வீடுகளின் உட்புறம் ஒரு திண்ணையும், முற்றமும், அடுப்படியும், அறைகளும், குடும்பத்தினர் வாழிடங்களும் இருக்கும். உட்புறத் திண்ணையை அடைவைத்து அழைக்காது ‘திண்ணை’ என்றுஞ் சொல்லுவர். திண்ணையை ஒட்டினாற் போல் வீட்டுக்கு வெளியே பெருநிலைக் கதவிற்கு (main door) அப்புறம் உள்ள திண்ணையை வெளித்திண்ணை என்பர். வீட்டிற்கு வரும் பொதுவான மாந்தரை வெளித்திண்ணையில் உடகாரவைத்தே பேசிக்கொண்டிருப்பர். பல நாட்டுப்புறங்களில் வெளித்திண்ணைப் பேச்சு பல்வேறு உரையாடலுக்கும் பெயர் போனது. கொஞ்சம் (உறவாலோ, பழக்கத்தாலோ) நெருங்கிய பின் தான் விருந்தாளிகளை பெருங்கதவம் தாண்டி உட்திண்ணைக்கோ, முற்றத்திற்கோ வீட்டுக்காரர் அழைப்பர்.
இந்த வெளித்திண்ணை தான் forum என்பதாகும்.. (உட்திண்ணை அகத்திண்ணையானால்) இதைப் புறத்திண்ணை என்றும் புறவெளி (outside space, hence meeting space) என்றும் சொல்வதிற் பொருளுண்டு. புறவம் என்பது இன்னுஞ் சுருக்கமாயும் பொருத்தமாயும் இருக்கிறது. நம்மூர் மரபிற்கும் அணைத்தாற்போல் அமையும்.
forum = புறவம்
forum hub = புறவத் திண்ணை
democratic forum = சனநாயகப் புறவம்
நாம் வெவ்வேறு புறவங்களிற் பங்குகொள்கிறோம் = we take part in various fora.

அன்புடன்,
இராம.கி.

13 comments:

அறிவியல் தமிழ் said...

ஐயா வணக்கம்

புறவம் என்ற சொல் forum என்ற ஆங்கில சொல்லுக்கு சரியான சொல் என்பது அதை உச்சரிக்கும் போதே விளங்குகிறது.

இது போன்ற சொற்களை தமிழர்களாகிய அனைவரும் பயன்படுத்த வேண்டிய இடங்களில் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.தமிழ் எக்காலத்திற்கும் எந்த துறைக்கும் ஏற்றது என்பதை இது போன்ற சொற்கள் அடித்து சொன்னாலும் ஏனே பலர் மனம் ஏற்காமல் அடுத்தவர் மொழியை(ஆங்கிலத்தை) நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறோம்.அடுத்தவர் பொருளை பயன்படுத்தும் போது கொஞ்சமாவது மனது குறுகுறுக்க வேண்டும்.

மன்றம் என்பது எனக்கு எதோ மன்னர் காலத்து மன்றங்களை சொல்வது போன்று தோன்றியது.அந்த பெயரை எப்படி இக்காலத்து கருத்து பரிமாற்றம் செய்யும் குழுவிற்கு பயன்படுத்துவது என்ற மன சஞ்சலத்தில் தான் ஐயா அவர்களிடம் இந்த கோரிக்கையை வைத்தேன். அவரும் அருமையான சொல்லை காட்டிவிட்டார். இனி எங்கள் தளம் இல்லை புறவம் பொழிவு பெரும்.

மிகவும் நன்றி ஐயா. மகிழ்ச்சியடைந்தேன் மடையாக....

அறிவியல் தமிழ் said...

[quote]forum hub = புறவத் திண்ணை
democratic forum = சனநாயகப் புறவம்
நாம் வெவ்வேறு புறவங்களிற் பங்குகொள்கிறோம் = we take part in various fora.[/quote]

நறுக்கு தெரித்தாற் போல் சொற்கள்... அழகு ஐயா

இ.பு.ஞானப்பிரகாசன் said...

//அடுத்தவர் பொருளை பயன்படுத்தும் போது கொஞ்சமாவது மனது குறுகுறுக்க வேண்டும்// - உண்மை! மக்கள் உணர வேண்டிய கருத்து.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

ஓர் ஐயம் ஐயா! 'சனநாயகப் புறவம்' என ஒரு சொல்லைப் பரிந்துரைத்திருக்கிறீர்களே, 'சனநாயகம்' தமிழில்லையே!

அறிவியல் தமிழ் said...

கிராமத்தில் என் சிறுவயதில் ஊரின் கோவிலை ஒட்டி ஊர் மக்கள் கூடி பேசுவதற்கு என ஒரு இடம் இருக்க பார்த்திருக்கிறேன். மாலை நேரங்களில் வேலையை முடித்து விட்டு வீடு வரும் ஆண்கள் கொஞ்சம் நேரம் அங்கு பலவற்றையும் பற்றி பேசிக்கொண்டிருப்பர்.விசாரிப்பு, விவசாயம் ,பிரச்சினைகள், புது விசயங்கள்,அரசியல் என பலவற்றையும் காரசாரமான பேசி கொண்டிருப்பார்கள்.நான் கூட பல நேரங்களில் என் பாட்டியிடம் தாத்தா எங்கே என கேட்கும் போது என் பாட்டி 'அம்பளத்தில் போய் பாரு அது அங்கு தான் கிடையா கிடக்கும்' என சொல்லுவார்.நான் இங்கு குறிப்பிடும் அம்பளம் என்ற சொல் சரியா என்று தெரியவில்லை.எதற்கு இதை கேட்கிறேன் என்றால் Forum என்பதும் கிட்டத்தட்ட அம்பளம் போன்று தான் தெரிகிறதே தெளிவு பெறவே கேட்கிறேன் ஐயா.

Anonymous said...

ஐயா,

நான் ஒரு சட்ட மாணவன், பொதுவாக நாம் jurisdiction, jurisprudence, jurist, juror, jus, justice, justify போன்ற ஒரே வகையான சொற்களுக்கும் வேறுவெராக புனையபட்ட சொற்களையே பயன்படுத்துகின்றோம், பொதுவாக juror, etc என்ற சொல்லை அப்படியே ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றோம். இவை அன்னைத்தும் ஒரெ வேர்களை கொண்டவையாதலால். நீங்கள் இவற்றுக்கு தமிழ் பதங்களி பரிந்துறைக்க முடியுமா?

நன்றி

Anonymous said...

Forum = puravam, looks ok but the meaning it gives will be Outer space, Outskirts which may not portray the meaning of "Forum".

We can also use some other word related to the root, pagu, pagir meaning share, sharing thoughts? Just my idea. But I respect Sir's thoughts and puravam sounds easy to say.

Thankyou.

இராம.கி said...

அன்பிற்குரிய சரவணன்,

உங்கள் கனிவிற்கு நன்றி.

அன்பிற்குரிய ஞானப்பிரகாசன்,

சனநாயகம் என்பது இருபிறப்பி. அதில் சன என்பது சங்கதவழிப் பிறந்தது. நாயகம் தமிழ். வழக்கில் பலர் பயன்படுத்துவதால் அதை எடுத்துக்காட்டினேன். மக்களார்சி என்பது முற்றிலும் தமிழ்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய பெயரில்லாதவருக்கு,

jurisdiction, jurisprudence, jurist, juror, jus, justice, justify என்ற வரிசையில் ஒருசில சொற்களுக்கு முன்னாற் பரிந்துரைத்திருக்கிறேன். நய மன்றம் என்ற சொல்லிவ் வரிசையில் அவை வெவ்வேறு உருவங் கொள்ளும். இவை பற்றிய விளக்கத்தை ஒரு தனிக்கட்டுரையாக அளிக்கிறேன். பொறுத்திருங்கள்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்புள்ள சரவணன்,

நீங்கள் உங்கள் ஊரில் கேட்ட சொல் ‘அம்பலம்’ என்று நினைக்கிறேன். ‘அம்பளம்’ என்று திரிந்து புரிந்திருக்கிறீர்கள்.

அம்பலம் என்பது ஊர்ப்பொதுவிற் கூடும் இடம். அப்படிக் கூடும் இடம் என்பதால் கோயிலுக்கும் அதே பெயர் உண்டு.

மணியம்பலம் (திருவாலங்காடு), பொன்னம்பலம் (சிதம்பரம்), வெள்ளியம்பலம் (மதுரை), தாமிர அம்பலம் (திருநெல்வேலி), சித்திர அம்பலம் (குற்றாலம்) என்று 5 பேர் பெற்ற சிவன் கோயில்களும் உண்டு.

[அரண்மனைக்கும் அம்பலம் என்ற பெயருண்டு. அந்தக் காலத்தில் அரண்மனையில் வேலை செய்பவர் அம்பலகாரர் எனப்படுவார். இன்று அதற்கு ஒரு சாதி அடையாளம் உண்டு.]

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

Dear Mr. Aruniyan,

Thank you very much for your suggestions. பகிர்தல் will denote sharing. We are looking for precise word equivalents and not near-word equivalents. Tamil has lot of near-word equilvalents for this concept of forum.

Thanking you once again,
iraama.ki.

இ.பு.ஞானப்பிரகாசன் said...

விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா!

அறிவியல் தமிழ் said...

வணக்கம்

புரிந்துகொண்டேன். விளக்கத்திற்கு நன்றி ஐயா