Tuesday, January 14, 2014

தமிழ்க் கணிமைச் சந்தை

தமிழகத்திற் பொத்தகச் சந்தை விரிவடைந்து வருகிறது என்ற நான் சொன்னதைப் பார்த்து நண்பர் நாக.இளங்கோவன், “கடந்த 10-15 ஆண்டுகளில்
தமிழ்க் கணிமைச் சந்தையில் வளர்ச்சி இருப்பதாகக் கருத முடியவில்லை” என்று கூறி, “தமிழ்க் கணிமைத் துறையில் அறிவாளிகள் இல்லையா? மதிக்கூர்மை இல்லையா? சந்தையைப் பற்றிய சிந்தனை இல்லாத ஒரு துறை வளர்கிறது என்று சொன்னால் எங்கேயோ பிழை இருக்கிறது
என்றே பொருள்” என்றுஞ் சொன்னார். ”பொத்தகச் சந்தையின் வளர்ச்சியைப் பார்த்து தமிழ்க் கணிமைத் துறை பாடம் பெற நிறையவே இருக்கிறது” என்று தன் முன்னிகையில் (comment) முடித்திருந்தார்.

என்னுடைய பின்னூட்டைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
......................................................

தமிழ்க் கணிமைச் சந்தை வளர்கிறது என்பதெல்லாம் நானறிந்தவரை வெறுங் கற்பனையே. எவ்வளவு விற்றிருக்கிறது என்று சொல்லுவதற்குக் கூட ஒரு புள்ளிவிவரங் கிடையாது. ”இந்தப் பூனை வெளியே வந்துவிடுமோ?” என்று ஒவ்வொருவரும் குச்சுக்குள் வைத்துக்கொண்டிருக்கிறார்.

இது பற்றியெல்லாந் தமிழ் மக்களுக்குங் கவலையிருப்பதாய் நான் நினைக்கவில்லை.. இதற்கான அக்கறை படித்தவருக்குங் கிடையாது. படிக்காதவருக்குங் கிடையாது. தமிழ்நாட்டரசிற்குங் கிடையாது. (சொவ்வறை உருவாக்கியவர் எல்லாம் “வாங்குக” என்று கூவித்தான் அழைக்கிறார். ஆனால் வாங்குவதற்கு ஒரு தேவை (demand) இருக்கவேண்டுமே? யாருக்காவது தமிழில் ஒரு விண்ணப்பம், ஆவணம், பட்டியல் உருவாக்கவேண்டுமென்ற கட்டாயம் இந்த நாட்டில் இருக்கிறதா? அதுதான் எல்லாவற்றையும் “இங்கிலிபீசில்” இருக்கும்படி இன்றியமையாத கட்டாயம் இங்கு உருவாக்கப் பட்டுவிட்டதே? இதைப் பற்றியெல்லாம் பேசினால் “நாம் அரசியல் பேசுகிறோமாம்”. எனவே கண்ணியம் மிகுந்த நுட்பியலாளர்கள் அமைதி காப்பார்கள்.

தேவை பற்றிப் பேசாது, அளிப்பு (supply) பற்றி மட்டுமே இத்தனை காலம் பேசிக்கொண்டிருந்தால் எப்படி கணிமைச்சந்தையைக் கூட்டும் முயற்சி முன் நகரும்? தேவையைக் கூட்டுவது பற்றி தமிழ்க் கணிமை வல்லுநர் என்ன பேசியிருக்கிறார், சொல்லுங்கள்? (ஏதோ, கணிமையின் மேற் கரிசனங் கொண்டிருக்கும் பொதுவான நாலுபேர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்  அவ்வளவு தான்.)

இந்த நாட்டிற் தான் தமிழ் மொழி ஆட்சி மொழியாக, நய மன்ற மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாகப் புழங்கவில்லையே? எல்லோரையும் (இந்த எல்லோர் என்பது தமிழக அளவில் 7.5 ~ 8 கோடி மக்கள், உலக அளவில் இன்னும் 1.5 ~2 கோடி மக்கள்)  விழுந்தடித்து ஆங்கிலப் புழக்கத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்றும்,  ஆங்கிலந்  தெரிந்தோர் ஒரு சாதியென்றும், ஆங்கிலந்  தெரியாதோர் ஒரு சாதியென்றும் ஆக்கி ஒரு கொடூரமான சாதியாட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறாரே? இதைப்பற்றி எந்த அரசியல்வாதி பேசுகிறார்? இன்னின்ன மாற்றங்கள் செய்தால் தமிழ்ப்புழக்கங் கூடும் என்று இணையத்தில் எந்தவொரு மடற்குழுவாவது பேசியிருக்கிறதா? வலைப்பதிவு, முகநூலிற் பேசியிருக்கிறாரா? கல்லூரி மாணவர், ஆசிரியர்? தாளிகைகள், நாளிதழ்கள்? குமுக முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்?  தமிழக அறிவுய்திகள் (intelligentia)? ‘தமில் வால்க’ என்று கூப்பாடு போடுவதற்கு மட்டுமே ஆள், படை சேருகிறது.

ஆனாலும் தும்பைவிட்டு வாலைப் பிடிப்பதாய் ஏதேதோ திட்டம் போடுகிறோம். கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்படுகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

அறிவியல் தமிழ் said...

ஐயா அரசு சரியா இருந்தால் எல்லாம் சரியா இருக்கும்.அரசன் ஆட்சி எப்படியோ அப்படி தான் மக்களும். நான் சொல்லுவது பக்கசார்பற்ற கருத்து தான். அரசு அலுவலங்களிலேயே தமிழின் பயன்பாடு அருகி போய்விட்டது. அரசு கல்வி சாலைகளில் ஆங்கிலத்தில் தான் அனைத்து தரவுகளும் பரிமாறிகொள்ளப்படுகின்றன. தமிழ் என்பது அரசுக்கே வேண்டா சாதியாக ஆகிவிட்ட போது மக்களை குறை சொல்லி வாய் தான் நோகுகிறது.

நடிகர்கள், நடிகைகளின் அழகு என்ற ஒன்றை மட்டும் வைத்து அவர்கள் பின்னால் நாய் போல் அலையும் தரங்கெட்ட நிலையில் தமிழன் இருக்கிறான். தமிழுக்காக எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி செயலாற்றும் அறிஞர்கள் இருந்தாலும் அவர்களை எதோ எதிரிகள் போல தான் தமிழன் பார்க்கிறான். அரசியல் கட்சியில் எவரேனும் நாலு வரியில் கவிதை எழுதிவிட்டால் கவிஞர் என்ற பட்டமும் பதக்கமும் கொடுத்து பாராட்டுகின்றனர். என்ன தான் தமிழ் தமிழ் என அரசியல்வாதிகள் வாய்கிழிய பேசினாலும் அவர்களின் குறிக்கோள் வாக்கு வாங்கி தமிழருக்கு வாக்கரிசி போடுவது ஒன்று தான். தமிழுக்கு என பணியாற்றிய அரசியல் தலைவர்கள் காலம் அண்ணாவின் காலத்துடன் மறைந்துவிட்டது.

பாதி தமிழன் தண்ணீரிலும் மீதி தமிழின் செந்நீரிலும் கிடக்கும் இனமாக நம் இனம் உள்ளது.

nayanan said...

Raju Saravanan said...

//தமிழுக்காக எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி செயலாற்றும் அறிஞர்கள் இருந்தாலும் அவர்களை எதோ எதிரிகள் போல தான் தமிழன் பார்க்கிறான். //

அப்பட்டமான உண்மை. தமிழ் மொழியைப் போற்றிப் பாராட்டுபவர்கள், பேச்சோடு தமிழை வைத்துக் கொள்ளவே நினைக்கிறார்கள். அதற்கு மேல் பேசுகிறவர்களை தமிழ் எதிரிகளாகவே பார்க்கின்றனர். இல்லாவிட்டால் "உணர்வாளன்" என்று பெயரிட்டு இகழ்கிறார்கள்.

இராம.கி. said...

அன்பிற்குரிய சரவணன்,

அரசை மட்டுங் குறைகூறிப் பயனில்லை. மக்களாகிய நாமும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். எந்தப் பொதுஇடத்திலாவது பேசியிருக்கிறோமா? ஒத்த கருத்துக் கொண்டவர்கள் திரண்டிருக்கிறோமா? எல்லோருஞ் சேர்ந்துதான் அரசிற்கு உணர்த்தவேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய நயனன்,

நீங்கள் சொல்லுவது உண்மைதான். தமிழ் என்று பேசி விட்டாலே ’உணர்வாளன்’ என்று முத்திரை குத்தி ஓரத்தில் வைக்கிறார்கள். முத்திரை குத்துபவர்களின் ‘தற்பேணும் தன்மை’ இன்னும் மக்களாற் புரிந்து கொள்ளப்படாதிருக்கிறது. ‘தமில் வால்க’ என்று கூப்பாடு போடுகிறவர்களே இப்படி முத்திரை குத்துகிறார்கள்.

நான் அப்பட்டமான தமிழ் உணர்வாளன் தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அன்புடன்,
இராம.கி.

இராம.கி said...

அன்பிற்குரிய நயனன்,

நீங்கள் சொல்லுவது உண்மைதான். தமிழ் என்று பேசி விட்டாலே ’உணர்வாளன்’ என்று முத்திரை குத்தி ஓரத்தில் வைக்கிறார்கள். முத்திரை குத்துபவர்களின் ‘தற்பேணும் தன்மை’ இன்னும் மக்களாற் புரிந்து கொள்ளப்படாதிருக்கிறது. ‘தமில் வால்க’ என்று கூப்பாடு போடுகிறவர்களே இப்படி முத்திரை குத்துகிறார்கள்.

நான் அப்பட்டமான தமிழ் உணர்வாளன் தான். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அன்புடன்,
இராம.கி.

அறிவியல் தமிழ் said...

வணக்கம்

ஐயா தங்கள் கருத்தில் எனக்கு எந்த ஒரு மாற்று கருத்து இல்லை.

அரசு நினைத்தால் எந்த ஒரு மொழியையும் வளரவைக்கலாம், அழிக்கவும் செய்யலாம் என்பதற்கு ஹிந்தி மொழியே சாட்சி. ஒரு முறைக்கு பத்து முறை ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடுகிற காலம் இது. இதே கோட்பாடு தான் ஹிந்தி மொழி பரப்புதலிலும் கடைபிடிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் ஹிந்தி என்றால் பொங்கி எழுந்த தமிழகம் இன்று ஹிந்தி படிக்கவில்லை என்றால் இந்தியாவில் இருக்கமுடியாது என்ற மன மாயை அடைவதற்கு காரணம் மைய அரசின் தொடர்ச்சியான முயற்சியும், அறிவுறுத்தலும், விளம்பரங்களும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற சலுகைகளும் தான் மக்களை மாற்றி விட்டது. இதுபோன்ற ஒரு நிலைபாட்டை இங்குள்ள அரசுகள் எடுக்கவில்லையே என்பது தான் என் ஆதங்கம்.

மக்களுக்கு மொழியின், இனத்தின் மீது பற்று வேண்டும். தமிழ் தமிழர் நலனில் அக்கறை கொண்ட அரசு வேண்டும். இவை இரண்டும் எப்போது நடக்கும் என்றால் நாம் எப்போது மாணவர்களுக்கு கல்வியுடன் தமிழ் உணர்வையும் விதைக்கிறோமோ அப்போது தான்.