அணங்கிய என்பதற்கு “மேலேறிய" என்று பொருள்கூறி,
எதன்மேல் எது ஏறியதென்று கேட்டோம். இதற்கு விடைசொல்ல மெய்யியற் புரிதல்கள்
சிலவற்றைப் பார்க்கவேண்டும்.
இந்திய மெய்யியற் சிந்தனைகளில் உலகாய்தம் தவிர்த்து
வேதமறுப்புச் சாங்கியம், ஆசீவிகம் (இதை ஆசீவகம் என்றும் திரித்து எழுதுவர். நானும்
எழுதியிருக்கிறேன். ஆசீவிகமென்பது ’அற்றுவிக’
மூலத்திற்கு அருகிருக்கும் சொல்லாகும். அற்றுவிகம் பற்றி ஆசீவிகத் தொடரிற்
கூறுவேன்.), செயினம், விதப்பியம் (விஷேஷிசம்;
விதத்தல்>விதேதித்தல்>விஷேஷித்தலாய்ச் சங்கதத்திற் திரியும். விதமென்ற பெயர்ச்சொல் இன்னும் தமிழ் வழக்கில்
இருப்பதை நினைவுகொள்ளுங்கள்.) ஆகியவையும், வேதநெறியும் ’உயிர், மெய்யைத்’
தனித்தனியாகவே பார்க்கும். (புத்தநெறி தனி உயிரை
ஒருபக்கம் ஏற்று, இன்னொருபக்கம் ஏற்காது அரையுலகாய்தம் பேசும்.) இப்படித் தனித்தனி
பார்க்காது, இரண்டையும் பிணைத்து ”உயிர் தனித்தில்லை; மெய்யின் இயக்கமே உயிர்” என்பது உலகாய்த அடிப்படையாகும். ”மெய் அசையாது
அடங்கியொடுங்கும் போது, வாழ்க்கை முடிந்தது. எனவே, இக்கணந்தான் நிலையானது. மக்களே!
இன்புறுவீர்” என்பது உலகாய்தரின் முகனைச்
செய்தியாகும். [உலகாய்தத்தை வலியுறுத்தும் சங்கப்பாடல்களும் இருக்கின்றன. அவற்றை
வேறோரிடத்திற் பார்ப்போம். சமயஞ்சாரா வகையில் (secular) சங்கத் தொகையில் எல்லாச் சிந்தனைகளும் விரவியுள்ளன. ”அது வேதமே, அன்றி
வேத மறுப்பே, பேசுகிறது” என்பதெல்லாம் ஒருபக்கமாய்க் கோடியமையும் பார்வைகளாகும்.]
உயிரையும் மெய்யையும் தனியே பார்த்து, ”நிலையான
உயிர் ஒருபிறவியில் நில்லாது. பலபிறவிகளெடுத்து உலகிலுழன்று பின் வீடுபேறடையும்”
என்பது மெய்யியலின் அடுத்த புரிதலாகும். இந்தியாவின் பல்வேறு மெய்யியல்களும் விடாதுபேசும் வீடுபேற்றை ”இனிமேற்
பிறவாத நிலை, பிறவிவிடுத்த பேறெ”ன்றே பொருள்கொள்வர். வீடுபேறடைவதிலும் இரு
நோக்குகளுண்டு. ”இப்பிறவியிற் செய்கருமம்
மறுபிறவியிற் பாதிக்காது, இத்தோடு இறுமெ”ன்பது ஒருவிதம். இதை வினைமறுப்புக்
கொள்கையென்பர். இதன் குறிப்பிடத்தக்க பேராளி ஆசீவிகமாகும். ”இப்பிறவியிற் செய்த (நல்வினை, தீவினை எனும்) கருமம் மறுபிறவியிற்
பாதிக்கும். நல்வினை செய்தால் மறுபிறவி சிறக்கும். தீவினை செய்தால் மறுபிறவி மேலுங்
கடினமாகும்; வினையானது பிறவிகள்தோறும் கணக்கிற்
கூடிக்குறைந்து விளவிக் (flow) கொள்ளும் இருப்பாகும். வீடுபேற்றின்போது,
வினையிருப்பு முற்றிலும் ’பாழ்’ஆகிப் போக வேண்டும்” என்பது இன்னொருவிதம்.
(பாழைச் சுழி-zero-என்று பொருள்கொள்வர்.) இதை
வினைவிளைப்புக் கொள்கையென்பர் வினைவிளைப்புக் கொள்கையை வேதநெறியும், செயினமும்
ஏற்கும்.
புத்தநெறி முன்னாற் சொன்னதுபோல் வினைக்கொள்கையை
ஏற்றும், ஏற்காதும் நடுநிலைபேசும். சாங்கியமும், விதப்பியமும் இக்கேள்வி பற்றிப்
பேசாதிருக்கும். இந்தியத் துணைக்கண்டத்திற் சாங்கியம் ஆகப் பழமையான கொள்கையாகும். அதன் தாக்கம் தெற்கிலும் கூட
இருந்திருக்கலாம். சாங்கியம், விதப்பியம் தழுவிய பாடல்கள் சங்க இலக்கியத்தில்
உள்ளனவா என்றாய வேண்டும். சாங்கியத்திலும்
இறையொப்பு (சேச்சுவர சாங்கியம்), இறைமறுப்பு (நீரீச்சுவர சாங்கியம்) என்று இருவேறு
கொள்கைகள் உருவாகின. அவைபற்றிய தெளிவில்லாததால், இன்னும் ஆழங்காற்பட்ட முகன ஆய்வுகள் நடைபெறாதுள்ளன.
வினைவிளைப்பு, வினைமறுப்புக் கொள்கையில் இருப்புக் கொள்ளும் இந்திய நெறிகளெல்லாமே உயிரென்பதை ஆதனென்றும் (ஆன்மா = athma), ஆன்மா தனித்தியங்கக் கூடுமென்றும் நம்பின. இந்நெறிகளில் உயிர்த்தலானது மெய்யினுள் உயிரியங்கும் செய்கையைக் குறிக்கும். ஆவித்தல் என்பது உயிர்த்தலுக்கு நிகரானதும், ஆவி உயிருக்கு நிகரானதும் ஆகும். ”ஓர் உடம்பிற்குள் பொதுவாக ஓருயிர் தான் இயங்கும்; சிலபோது ஈருயிர்கள் உட்புகுந்து ஒன்று இன்னொன்றை ஆட்டுவித்து (ஆட்டுவித்து>ஆட்குவித்து>ஆட்குமித்து>ஆக்குமித்து என்றாகி ’ஆக்ரமித்து’ என்று சங்கதத்துள் திரியும்.) ”ஒன்றின்மேல் இன்னொன்றேறி” ஆண்டான் - அடிமையாய் ஆட்சிப் படுத்தலாம்” என்பது இன்றும் இந்தியாவில் நிலவும் பழந்தொன்மமாகும்.
வினைவிளைப்பு, வினைமறுப்புக் கொள்கையில் இருப்புக் கொள்ளும் இந்திய நெறிகளெல்லாமே உயிரென்பதை ஆதனென்றும் (ஆன்மா = athma), ஆன்மா தனித்தியங்கக் கூடுமென்றும் நம்பின. இந்நெறிகளில் உயிர்த்தலானது மெய்யினுள் உயிரியங்கும் செய்கையைக் குறிக்கும். ஆவித்தல் என்பது உயிர்த்தலுக்கு நிகரானதும், ஆவி உயிருக்கு நிகரானதும் ஆகும். ”ஓர் உடம்பிற்குள் பொதுவாக ஓருயிர் தான் இயங்கும்; சிலபோது ஈருயிர்கள் உட்புகுந்து ஒன்று இன்னொன்றை ஆட்டுவித்து (ஆட்டுவித்து>ஆட்குவித்து>ஆட்குமித்து>ஆக்குமித்து என்றாகி ’ஆக்ரமித்து’ என்று சங்கதத்துள் திரியும்.) ”ஒன்றின்மேல் இன்னொன்றேறி” ஆண்டான் - அடிமையாய் ஆட்சிப் படுத்தலாம்” என்பது இன்றும் இந்தியாவில் நிலவும் பழந்தொன்மமாகும்.
ஓர் ஆதன் இன்னோர் ஆதன் மேலேறியாளும் நிலையைத்தான்
வினையாகுபெயராய் அணங்கெனும் பழஞ்சொல்லுணர்த்துகிறது. உலகாய்தம் தவிர மற்ற
தெரியனங்களில் (தெரிசனங்களில்) இப்புரிதல்
இயல்பாகவுண்டு. (எங்கள் பக்கம் அணங்கிற்கு மாறாய்ச் ”சாமி” எனுஞ் சொல்லே ’ஒன்றின்
மேலேறும் ஆவிக்கு’ உரியதாய்ச் சொல்லப்படும். எல்லாம் வல்ல தெய்வத்திற்கும்,
மேலேறும் ஆவிக்கும் ஒரே சொல்லாவெனில், அது
வேண்டுமெனப் பேச்சுவழக்கிற் செய்த குழப்பமோவென ஐயுறவைக்கும். இந்தக் காலத்தில்
உணர்வு பூருவமாயன்றித் தெய்வத்தைப் பூதிகமாய்க்
(physical) கண்டார் யார், சொல்லுங்கள்? பழங்குடிமக்களின் இனக்குழு வாழ்க்கையில்
மேலேறிய ஆவி (=ஆதன்=ஆன்மா), போன்ற கருத்தீடுகள் இயல்பாக நம்பப்படுகின்றன.
சங்கப்பாடல்களும் அதற்கு விதிவிலக்கல்ல. சங்க
இலக்கியத்தின் பெரும்பாலான இடங்களில் அணங்கென வருவது இப்பொருளிலேயே அமைகிறது.
அணங்கென்பது உயிரிலாப் பொதிகளின் (bodies) மேலும்,
மரங்களிலும், விலங்குகளிலும், ஆணோ, பெண்ணோ இன்னொரு மாந்தரின் முழு உடம்பிலும்,
மாந்தவுடம்பின் சினைகளிலும் எனப் பல்வேறு பூதிக
இடங்களில் (physical place) உறைவதாகச் சங்க இலக்கியஞ்சொல்லும். மொத்தத்தில்
எங்கெல்லாம் தனியுயிர் மேலேற முடியுமோ, அங்கெல்லாம் அணங்குள்ளதாய்ச் சங்க காலப் பாணரும், புலவரும் உருவகஞ் செய்கிறார். முருகன் ஆதி
மூதாதையின் மறுபளிப்பெனில் முருகன் கோட்டத்துள் அணங்காடலும், அணங்காடியும்
(சாமியாடியும்) இருப்பதில் என்ன வியப்பு?
(சாமியாடியை அருளாடி என்றுஞ் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.) ’அணங்குடை முருகன்
கோட்டத்து’ என்பது சங்ககாலத்தின் சரியான புரிதற் தான். இன்றும் ஊர்த்
தேர்த்திருவிழாவின் போது (பெரும்பாலும் அது
செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், எங்களூர்ப் பக்கம் தேர்த்திருவிழாவை ஊர்ச்செவ்வாய்
என்பர்.) குறிப்பிட்ட தெய்வப் புறப்பாட்டின் போது, தேரோடும் வீதியில் மக்கள் முன்னிலையிற் சாமியாடிகள் வரிசைகட்டித்
திருநிலைகொண்டு (சந்நதங்கொண்டு) காட்சியளிப்பார். அது மக்களுக்கு அணங்கை உணர்த்துங்
காட்சியல்லாது வேறென்ன? சாமியாடி என்பவரே
அணங்கின் முகவர் தான்.
ஒருகையில் தண்டம், மறுகையில் சூலம், வேல், அரிவாளென
ஏதோவொன்றை வைத்து, முகத்தில் அரிவாள் மீசையோடு உடலெங்கும் பல்வேறு மணிமாலைகளைச்
சூடி, தலைப்பாகையும், தோள், கைகளிற் கடகங்களும்,
கால்களிற் தண்டைகளும், இடுப்பில் தார்ப்பாய்ச்சுமாய்க் காட்சியளிக்கும் சாமியாடிகள்
ஓரிரு போதுகளிற் அணங்குவந்து சாமியாடுவதுண்டு. அந்நேரத்திற் சாமியாடியை ஆடியடங்கப் பண்ணும் பூசாரி பல்வேறு கேள்விகள் (தனிப்பட்ட
கேள்விகளும் ஊர்ப்பொதுக் கேள்விகளும்) கேட்டுக் குறிசொல்லும் பழக்கமும்
நாட்டுப்புறங்களிலுண்டு; சாமியாடி கொடுக்கும்
திருநீற்றைத் நெற்றியிற் பூசி அடியார் வாழ்த்துப் பெறுவதுமுண்டு. ‘சாமியாடல்’
நின்றடங்கிப் போவதை மலையேறலென்பர். (குன்றுதோறும் குடியிருப்பவன் குமரன்
அல்லவா? அவன் மலையேறாது என்னசெய்வான்?) அணங்காடி
முடிந்தபின் சில போதுகளிற் குறிப்பிட்ட சாமியாடி சோர்ந்து மயங்கி விழுந்து
விடுவார். ’வருத்தமுறல்’ என்னும் அணங்கற் குறிப்பு இப்படிச் சோர்ந்து நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மயங்கி
விழுதலையே குறிக்கிறது.
[அவதாரம் என்ற இருபிறப்பிச் சொல் ”தெய்வம்/மாயோன்
கீழிறங்கிப் பூவுலகிற் செயற்பட்ட” கதையைக் காட்டும். சேயோனோ (சிவனோ, முருகனோ)
‘அவதாரஞ்’ செய்யார். மாந்தர் மேலேறுந்
திருவிளையாடலே செய்வார்.]
மேலே ஆண்சாமியாடியை வண்ணித்ததால், ஆண்கள்மேல்
மட்டும் அணங்கெழுவதாகாது. பெண்கள்மேலும் எழலாம், (பெண்ணணங்கு ஆண்களின் மேல்
வருவதையும் பார்த்துள்ளேன். ஆனால் ஆணணங்கு பெண்
சாமியாடிகள் மேல் வந்து நான் பார்த்ததில்லை.) அப்பொழுது [சினைமுட்டைச் சுழற்சி
அடங்கிய பருவங் கடந்த (menopause)] பெண்பூசாரி அருகிலிருப்பார். ஆண்சாமியாடிக்கு நடப்பது பெண்சாமியாடிக்கும் நடக்கலாம்.
விழாவிற்கு வந்த ஆண்களும் பெண்களும் சாமியாடியின் கீழ்விழுந்து கும்பிட்டு
ஆசிபெறுவதுண்டு.அணங்காடல்/சாமியாடல் என்பதை
நாட்டுப்புறங்களில் யாரும் அருவருப்போடு பார்த்ததில்லை; ஆனால் அச்சத்தோடும்,
அளவுமீறி வியந்தும் பார்த்திருக்கிறார். அணங்கிடம் ஆசி வாங்கவும்
பார்த்திருக்கிறார். ஓர் அகராதியில் அணங்கிற்குக்
கொடுக்கும் ’வருத்தம், அச்சம், நோய், தெய்வம், தெய்வமகள், தெய்வத்தன்மை, அழகு,
அழகியபெண், வடிவு, மையல்நோய், ஆசை, வெறியாட்டு, சிவ ஆற்றல், பேய், பேய்மகள், சண்டாளன், ஆளியின் குட்டி’ என்ற அத்தனை
பொருள்களும் போதிற்குத் தக்க, மக்களால் உணரப்படும்.
[இன்னுமோர் இடைவிலகல் சொல்லவேண்டும். மகளிரென்ற
சொல் (பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவையென்னும்) பருவமடைந்த பெண்களை
மட்டுந்தான் குறிப்பிடுகிறதோ என்ற ஐயம்
எனக்குண்டு. பருவத்திற்கு வாராச் சிறுமிகளையும் (பேதைகளையும்), பருவங்கடந்த
பேரிளம்பெண்களையும் மகளிரென்று ஊர்வழக்கிற் சொல்லக்கேட்டதில்லை. அதேபொழுது,
வடக்கே “மகிளா” என்ற சொல் பொதுப்படவே
ஆளப்படுகிறது. கலந்தொடா மகளிரென்பது பருவமடைந்த பெண்களை மட்டுமே குறிப்பிடுமெனில்
பாடலுக்கு விதப்பான பொருட்பாடு கிடைக்கிறது. சங்க
இலக்கியத்தின் மற்ற இடங்களில் மகளிர் என்ற சொல்லிற்கு விதப்பான பொருளுள்ளதா
என்றாய்ந்து பார்க்கவேண்டும்.]
அணங்கிருக்கும் இடங்களெனக் கருதுவனவற்றில்
நாட்டுப்புறத்தார் விதப்பான பழக்கங்களையே பின்பற்றுகிறார். “ஊரெல்லையில்
சுடுகாட்டிற்கருகிற் புளியமரத்தில் பேயிருக்கும், மாலை 6 மணிக்குத் தனியே போகாதே! சிறுவராயிருந்தாற் பயந்துவிடுவார். உடலுறுதி
படைத்த, பயமில்லாத யாரையாவது உடன்கூட்டிப்போ, தேவைப்படின் சாமியாடியைக்
கூடவழைத்துப்போ” என்பது மூடநம்பிக்கையாய்த்
தெரியலாம். ஆனால் அப்படித்தான் குமுகப் புரிதலிருக்கிறது. நாட்டுப்புறங்களில்
”அதிற் பேயிருக்கும், இதிற் பேயிருக்கும்” என்று விதவிதமாய் நம்புவர். பகுத்தறிவாளர் அதைச்சாடி அந்நம்பிக்கை தவிர்த்தெறியச்
சொல்லுவர். இதை உளவியலார் “இருவேறுபட்டு உடைந்த ஆளுமைநிலை” என்று
தருக்கப்படுத்துவர். இங்கே தொன்மத்தை ஏற்பதா,
பகுத்தறிவை ஏற்பதா என்ற கேள்விக்குள் போகாது, தொன்ம நடைமுறைகள் பற்றி மட்டுமே எழுத
முயல்கிறேன்.
தென்பாண்டிநாட்டில் முன்னோரை வழிபடும் வகையிற்
’படைப்பெ’ன்று வீட்டு விழாக்களின்முன் செய்வரென்று முன்னாற் சொன்னேன். இத்தகைப்
படைப்புக்கள் ஆண்டுக்கொரு முறையோ, வீட்டிற்
கல்யாணம், காட்சியென்று நல்ல விழாக்கள் நடப்பதற்கு முந்தியோ முன்னோரைத் தொழுது,
ஆசிகளைப் பெற நினைப்பார்கள். சிலபோதுகளில் யாரோவொரு உறவினர் திடீரென்று
வேண்டிக் கேட்டுக்கொண்டதன் பெயரிற் கல்யாணம்,
காட்சி அண்மிக்காத போதுங்கூட இப்படைப்புக்களைச் செய்வதுண்டு. இது போன்றதொரு நிகழ்வு
பல்வேறு குமுகத்தார் இடையிலும் நடப்பதைப்
பார்த்தோ, கேள்வியோ பட்டிருக்கிறேன். (குறிப்பாக நகரத்தார், கள்ளர் ஆகிய
குமுகங்களில் இது நடப்பதுண்டு.)
அடுத்த பகுதியில், சிவகங்கைப் பக்கம் நடக்கும்
முன்னோர் படைப்புமுறை, அதில் ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொறுப்புகள், படைப்பு
ஆடைகள், படைப்பில் வழிபடுங் கலங்கள், ஆடை-கலங்களைப் புனிதப்படுத்தும் பாங்கு, அணங்காடலென்று அதன் கூறுகளை
விவரிக்க முயல்வேன். முருகன் விழாக்களின் முன்நடக்கும் தன்வருத்தச் செயற்பாடுகள்,
விழாவின் போது கொண்டு செல்லும் காவடி, பாற்குடம்,
செடிலாட்டு போன்ற முருகன் கோட்டத்துக் கலங்கள், பூக்குழி போன்ற பழக்கங்கள், முருகன்
கோட்டத்துட் கலங்களைச் ’செலுத்தலின்’ மூலம் சடங்கு முடிப்பு எனப் பலவற்றைப் பற்றியுஞ் சொல்ல முயல்வேன்.
இவ்விவரிப்பில், ”அணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரின் இகழ்ந்து
நின்றவ்வே” என்ற அடிகளுள் அடங்கிய இனக்குழுப்
புரிசைகள் விளங்கிப் போகும்.
அன்புடன்,
இராம.கி
அன்புடன்,
இராம.கி
அடுத்துவரும் பகுதியை எழுதி முடிப்பதற்குப் பொழுது
கூடத் தேவைப்படுகிறது. எனவே நாளைக்கே வெளிவராது. என் சுணக்கத்திற்கு மன்னியுங்கள்.
- இராம.கி.
1 comment:
வணக்கம் முனைவர் இராம.கி ஐயா அவர்களே..
தங்கள் கட்டுரை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பல்வேறு புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. தொடருங்கள்.
மிகச் சமீபத்தில் செயமோகனின் இந்தக் கட்டுரையைப் படித்துச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். (http://www.jeyamohan.in/?p=42557) அதற்குத் தகுந்த விளக்கமாக தங்களது “அணங்கு” பற்றிய கட்டுரை அமைகிறது. மிக்க நன்றி.
“அணங்கு” பற்றி எனக்கு மேலும் ஒரு சந்தேகம். இது வழிபாட்டில் மூத்தாளைக் (ஜேஷ்டை) குறிக்கும் வாய்ப்பு உள்ளதா? ஆமென்றால் இவ்வணங்கும், முருகனும் கூடிய ஓர் வழிபாடு நிகழ்ந்ததற்கு அது மேலும் ஒரு சான்றாகும். தங்கள் விளக்கத்தை எதிர் நோக்குகிறேன்.
நன்றி
Post a Comment