இப்பொழுதெல்லாம் நுட்பக் கட்டுரை எழுதுவதென்றால்
100க்கு 90/95 தமிழர்கள் ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்கள். (இந்தப் பழக்கம்
மடற்குழுக்களிலும் கூடி வருகிறது.) தமிழில்
எழுதுவது கொஞ்சங் கொஞ்சமாய்க் குறைந்து வருகிறது. தமிழ்க் கணிமை, இணையம்
என்று பாடுபடும் உத்தமத்தின் மாநாட்டுக்
கட்டுரைகளையே எடுத்துக் கொள்ளுங்கள். சென்ற ஆண்டு 10/15 விழுக்காடு தமிழ்க்
கட்டுரைகள் என்றால் இந்த ஆண்டு 1/2 % ஆகவாவது மேலும் இருக்க வேண்டாமா? அப்படி ஆவதாய்த் தெரியவில்லையே? அண்மையில்
2013 மாநாட்டுக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்தேன். நொந்து போனேன். அவற்றிலும் அதே கதைதான். (ஆங்கிலம் புறநடையாய் இருக்கவேண்டிய
மாநாட்டில் தமிழ் புறநடையாய் இருக்கிறது.)
தமிழிற் கலைச்சொற்கள் இல்லை என்பதெல்லாம் ஆறிய
பழங்கஞ்சி. தேடினாற் கிடைக்காதது ஒன்றுமில்லை. (தேவைப்படும் இடங்களில் ஆங்கிலத்தைப்
பிறைக்குறிக்குள் போட்டுக் கொள்ளுங்கள்; எந்தக்
குறையுமில்லை.) தமிழை ஏன் புழங்கமாட்டேம் என்கிறோம்? அந்தத் தொகுப்பிற்
கலைச்சொற்கள் அவ்வளவு தேவைப்படாக் கட்டுரைகளும்
கூட ஆங்கிலத்திற்றான் இருக்கின்றன. தமிழகம் என்றில்லை; ஈழம், மலேசியா, சிங்கப்பூர்
என்று வெவ்வேறு நாட்டுப் பேராளர்களும்
ஆங்கிலத்தில் எழுதவே விரும்புவது போற் தெரிகிறது. அகவை முற்றிய காலத்தில் ”இந்தத்
தமிழைத் தொலைத்து முழுகினால், என்ன?” என்று
எனக்குத் தோன்றுகிறது.
”எமக்கு ஆங்கிலந் தெரியும், இந்த நுட்பங்கள் கரதலையாய்த் தெரியும், இவற்றை ஆங்கிலத்திற் சொல்லவுந் தெரியும்” என்று கேட்போருக்கு/பார்ப்போருக்கு ஆடம்பரத் தோற்றங் காட்டுவது தான் நம் குறிக்கோளா? இக்கட்டுரைகளைப் படிப்பது தமிழரும், தமிழ் தெரிந்த பிறமொழியாளரும் தானே? அப்புறமென்ன? தமிழிற் கட்டுரையிருந்தால் குறைந்து போகுமா? அல்லது தமிழிற் சொல்ல நமக்கு வெட்கமா? ”படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்றால் அப்புறம் எதற்கு விழுந்து விழுந்து தமிழுக்குப் பணிசெய்து கொண்டிருக்கிறோம்? அன்றாட வாழ்க்கையிற் தமிழுக்குத் தேவையில்லாத போது, அலுவல் வேலைகளை ஆங்கிலத்தில் வைத்துத் தமிங்கிலர் ஆகும் போது, 10/15 ஆண்டுகளாய்த் தமிழிற் சந்தை ஏற்படுத்தாத போது, அதற்கு அரசிடம் நாம் வேண்டுகோள் வைக்காத போது, மொத்தத்திற் தமிழையே நம் வாழ்க்கையிற் பயன்படுத்தாத போது, தமிழுக்குச் சொவ்வறை படைப்பதும், நுட்பியல்களைக் கொண்டு வருவதும் எதற்கு?
இதில் தமிழ் மக்களும் சும்மா இருக்கிறார்கள், தமிழக அரசும் அப்படித்தான் இருக்கிறது, தமிழ்/கணி அறிஞர்களும் அப்படியே இருக்கிறார்கள். ”பாப்பாத்தியம்மா, மாடு வந்தது; தொழுவத்திற் கட்டினாற் கட்டிக்க. கட்டிக்காட்டிப் போ” என்ற போக்கு யாருக்கு வேண்டும்? உப்பிற்குச் சப்பாணியாய் நாம் ஏன் இருக்கிறோம்? தமிழக அரசின் எந்தத் தளமாவது தமிழிற் கையாளும் வகையில் இருக்கிறதா? தமிழக அரசின் நடவடிக்கைகளை விளக்குவதற்கு வந்த மாநாட்டுக் கட்டுரைகளும் ஆங்கிலத்திற்றான் இருக்கின்றனவே? அரசின் ஆதரவில் பணம் செலவழிக்கும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர், ஆய்வாளர்கள் தமிழில் ஏன் எழுத மாட்டேம் என்கிறார்? தனியார் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் ஆர்வத்திற்றானே தமிழ்க் கணிமையில் வேலை செய்கிறார்? அப்புறம் தமிழிற் கட்டுரை படைத்தால் நிர்வாகம் இவர்களை மதிக்காதா?
தமிழுக்குத் தடை வேறு யாருமில்லை, தமிழராகிய நாம் தானே? ”அவன் கெடுத்தான், இவன் கெடுத்தான்” என்று ஏன் இன்னொருவரை அடையாளங் காட்டிக் கொண்டிருக்கிறோம்? நாம் எழுதும் கட்டுரையைத் தமிழில் எழுத நாம் அணியமாயில்லை, அப்புறம் ”தமிழுக்கு அதைச் செய்துவிடுவோம், இதைச் செய்துவிடுவோம்” என்று பதாகை தூக்கி முழக்குவதிற் பொருளென்ன?
சரி, எந்தப் பென்னம் பெரிய, வெளிநாட்டு, உள்நாட்டுச் சொவ்வறை நிறுவனமாவது தமிழிற் சொவ்வறை படைக்கிறதா? நாம் தானே அது இது என்று தனித்துக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறோம்? தமிழிற் சந்தை இருந்திருந்தால் இந்த நிறுவனங்கள் எல்லாம் ஓடிவந்திருக்குமே? இந்த நிறுவனங்களிடமிருந்து ஒரு கட்டுரையாவது மாநாட்டிற் படைக்கப் பட்டதா? இந்த மாநாடு நடந்ததாவது அவர்களுக்குத் தெரியுமா? அதைப் பொருட்டாக அவர்கள் மதித்திருப்பார்களா? சரி, சில ஆர்வலர்களாற் தூண்டப்பெற்று தமிழிற் தனியே சொவ்வறை படைத்து எதுவாவது பாராட்டிச் சொல்லும் வகையில் விற்றிருக்கிறதா? இந்தச் சொவ்வறைகளை வாங்கும் தேவையோ, எண்ணமோ, ஆதரவு மனப்பான்மையோ, நமக்கு ஏற்பட்டிருக்குமா? தமிழிற் சொவ்வறைச் சந்தை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறோமா? அதற்கு வேலை செய்யாது வெறுமே மாநாடு நடத்தி என்ன பயன்?
நுட்பியல் தெரிந்த நாமே தமிழில் எழுதத் தயங்கினால் அப்புறம் தமிழ் எப்படி நுட்ப மொழியாகும்? வீட்டுக்குள் அரைகுறைத் தமிழ், வீட்டை விட்டு வெளியே வந்தால் தமிங்கிலம் இணைப்பு மொழி, ஆங்கிலம் அலுவலக மொழி, அவ்வப்போது மற்ற தேவைகளுக்குப் பிறமொழிகள் என்றால் அப்புறம் என்னத்துக்கு கணித்தமிழை மெனக்கிட்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்? எல்லாம் நேரத்தைப் போக்கவா? தமிழ்நாட்டிற் தமிழெங்கே பயன்படுகிறதென்று யாராவது சொல்லுங்களேன்?
நம் புலம் எது? நாம் நிலைக்க வேண்டிய காரணம் என்ன?
அன்புடன்,
இராம.கி
பி.கு. இப்படித் திறந்து எழுதிய இராம.கி.யைச் சினந்து கொள்வதாற் பயனில்லை. ஒரு செயற்திட்டம் உருவானாற் பலனுண்டு..
4 comments:
நீங்கள் சொல்வது மெத்தவும் சரி. தமிழக அரசு தமிழை இணையத்தில் பாவிக்க அரசில் செல்வாக்கு உள்ளவர்கள் முயல வேண்டும். அரபு நாடுகளில், அரசு தொடர்பான ஆவணங்கள் அரபு மொழியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அதனால் அங்கு அரபு மொழிப்பெயர்ப்பாளர்களுக்கு வேலை அதிகம். அதேபோல தமிழக அரசும் தமிழில் ஆவணங்களை கட்டாயம் ஆக்க வேண்டும். அதனால் தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
நீங்கள் பகர்வது ஒப்புடையதே.
இராம.கி அவர்களே,
உங்களுடன் மின் மடலாடி, எனக்குள்ள தமிழ் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள முடியுமா?
அய்யா,
மொழியின் வளர்ச்சியில் அரசின் பங்கு தான் அதிகம் பேசக்கூடியது. ஆனால் இங்கு (தமிழ்நாட்டில்) நிலைமை வேறு. பச்சையாக சொன்னால் தமிழை அழித்துகொண்டிருப்பது அரசும் அதை சார்ந்த மக்களும் தான்.
மக்களின் பக்கம் ஒரு நியாயமான கேள்வி உண்டு.ஒன்றும் உதவாத தமிழில் நான் படிக்க விரும்பவில்லை என்பது தான். ஆம் தமிழில் படித்தவனுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் மரியாதையை தாங்கள் நான்கு அறிவீர். தமிழில் அறிவியல்/நுட்பியல் தொடர்பான தகவல்கள் கிடைகிறதா, தமிழில் பேசமுடிகிறதா, என இவர்கள் சொல்லும் காரணங்களுக்கு தனிமனிதன் ஒருவனால் எதுவும் செய்ய முடியுமா என்பது சந்தேகம்.அதனால் தான் இன்று தங்கள் பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வி கூடங்களில் சேர்த்துவிட்டு அழகு பார்கின்றனர் இந்த கால பெற்றோர்கள்.
தமிழில் படித்தல் அரசு வேலையில் முன்னுரிமை என்று சொல்லுமா இந்த அரசுகள். ஒன்று முதல் ஐந்து வரை கட்டாயம் தமிழில் தான் படிக்க வேண்டும் என்று சொல்லுமா இந்த அரசுகள். நான் எல்லா அரசையும் தான் குற்றம் சொல்கிறேன். இதில் எந்த அரசும் யோக்கியர்கள் இல்லை.
தமிழ் படித்தல் இது நமக்கு நன்மை என்று மக்கள் சிந்திக்கும் அளவிற்கு அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். மற்ற தேவைகளான சொல் பற்றாக்குறைக்கு உங்களை போன்ற பெருமக்களை தட்டி கொடுத்தாலே போதும் ஆங்கிலத்துக்கு சவால் விடும் அளவிற்கு சொற்களை உருவாக்கி கொடுக்கும் திறன் பலருக்கும் உண்டு.
எல்லாம் முடியும் நம்மால்.ஆனால் தலை சரியில்லை என்றால் தனி ஒருவரால் சாதிப்பது கடினம் தானே.
தமிழ்வழி கல்வியின் அவசியம் சற்று வித்தியாசமான முறையில் என வலைத்தளத்தில் பதிந்துள்ளேன்
http://puthutamilan.blogspot.in/2013/08/blog-post_17.html
சொல்லாக்கம் தொடர்பான சிறு பகிர்வு
http://puthutamilan.blogspot.in/2013/08/1_29.html
http://puthutamilan.blogspot.in/2013/09/2.html
தங்களின் பார்வையை கான விரும்புகிறேன்.
Post a Comment