Friday, October 21, 2011

மாணிக்க வாசகர் காலம் - 7

குதிரை நரியான திருவிளையாடல்:

பெருந்துறையிலிருந்து நேர்த்தியுடன் வந்த குதிரைகள் அரசனின் பந்தியிற் (லாயம் என்ற உருதுச்சொல்லை இன்று புழங்கி நம் தமிழ்ச்சொல்லை இழந்தோம்) கட்டப்பட்ட இரவிலும் அடுத்த நாளிலும் நடந்தவை குறிக்கும்  இத் திருவிளையாடல் தன்னுடைய விவரிப்பளவில் மிகவும் சிறியதாகும். மதுரை அடைந்த மாயப்புரவிகள் ஒன்றிற்கொன்று தமக்குள் முகம்பார்த்து கீழே வருவதுபோற் சொல்லிக் கொண்டனவாம்:

“நேற்றுநாம் வந்தவழியெலாம் நம்மை ஓட்டியவருக்குக் கோவம் வந்து, வரும் பாதையில் பெரிதும் அடிபட்டோம்; முடிவில் நம் கால்களைக் கயிறுகளாற் கட்டிப் பந்தியில் நிறுத்திவிட்டார். இப்படியே நின்று கொண்டிருந்தால் குருதி வெளிப்பட்டுப் புண்பட்டுப் போவோம். நமக்கு வேண்டிய நிணமும் இங்கு இல்லை. கொள்ளும் புல்லுமே இவர் நமக்குத் தருவார். போனாற் போனதென விட்டால், இவர் நம்மேல் ஏறி விரட்டவும் பார்ப்பார்; நம் உண்மையுருவை இவரிடங் காட்ட வேண்டியது தான்” என்று சொல்லிக் கொண்டனவாம்.

அதே இரவில் தம்மைக் கட்டிய கடிவாளக் கயிறுகளை பல்லால் மென்று கடித்து அறுத்து, மீண்டும் நரிகளாகி, கடைத்தெருக்கள், வாயில்கள், மடங்கள், மன்றுகள், கடிமனைகள், அங்கணங்கள் (= சாக்கடைச் சந்துகள் என்பதற்கான பழஞ் சொல். இன்றைக்கு drainages என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தக் கூடிய சொல்.) எனப் பலவிடங்களிலும் நுழைந்து ஒன்றுக்கு ஒன்று உறுமி, தமக்குள் சள்ளிட்ட பசியால் இகலித்து, ஊரிலுள்ள பழம் புரவிகள், துள்ளும் மறிக்கூட்டம், யானைக் கன்றுகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள் ஆகியன கடித்துக்குதறி, யாரேனும் நகரிலெழுந்தால் அவரைச் சுழற்றியடித்து விரட்டி, எங்கும் போகாமல் ஆக்கி, ஊளையிடத் தொடங்கின.

இதையெலாம் பார்த்துத் தவித்த குதிரைப் பந்தியாட்கள், என்ன செய்வது என்றறியாது கலங்கி, பொழுது புலருமுன்னர் அரசனிடம் வந்து,  இரவில் கொள்ளுப்பை நிறையப் புல்லும், கொள்ளும், பயறும், கடலையும், துவரையும் இட்டும், அவற்றை உண்ணாப் புதுக்குதிரைகள் என்ன மாயமோ நரிகளாய் உருமாறி கையில் அகப்படாது ஓடிப்போய் ஊளையிட்டதையும், ஊர் விலங்குகளைக் கடித்துக் குதறியதையும் கூறுகிறார்.

அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”இந்நிலை எப்படி வந்தது? யாருக்கு என்ன தீங்கு நாம் செய்தோம்?” என்று தடுமாறுகிறான். அமைச்சரைக் கூட்டி உசாவுகிறான். தன் அன்றாடச் சடங்குகளை முடித்து வந்த வாதவூரரும் உசாவலிற் கலந்து கொள்கிறார். வாதவூரரைப் பார்த்த அரசன் அவர் மேல் பழி சுமத்துகிறான். வாதவூரர் “நேற்று நீங்கள் கைக்கொள்கையில் எல்லாம் சரியாய் இருந்ததே? என மறுமொழிக்கிறார்.

“நரிகளைக் குதிரைகளாக மாற்றி மீண்டும் அவற்றை நரிகளாகச் செய்து எம்மை ஏமாற்றியது நீயே. இப்படி இந்திர ஞாலம் செய்யும் நீயோ சாதி அந்தணனாகவும் ஆகிப்போனாய். உன்னை என்ன செய்வதென்று தெரியாது நிற்கிறேன்; என் பொன்னை அழித்தார் யார்? நற்குடும்பத்தார்க்கு அஞ்சாது, கொடுமை செய்த குதிரைத் தலைவன் யார்? அவனோடு கூடவந்த சாத்துவர் (=வணிகர்) எங்கே? உன் மேனி முற்றும் வாடும்படி உன்னைத் தண்டிக்க வேண்டும் போலும்” என விதப்பாய் அலறுகிறான். ”நீர் வேதம் ஓதியது இக் காரியம் செய்யவோ? உம்மைச் சிறையில் அடைப்பதைத் தவிர வேறு வழி யில்லை” என்று புலம்பிச் சிறையில் அடைக்கிறான்.

அத்தோடு இச்சிறு திருவிளையாடல் முடிகிறது. அடுத்து மண்சுமந்த திருவிளையாடல் தொடங்குகிறது. அதற்குள் போகு முன் ஒரு கேள்வியை நாம் அலச வேண்டும். ஞானோபதேசம் செய்த திருவிளையாடலும், நரி குதிரையான திருவிளையாடலும், குதிரை நரியான திருவிளையாடலும் ஏன் நடந்தன? மணிவாசகரைப் பெருமைப் படுத்தவா? அதனூடே நரி-குதிரை மாற்றங்கள் ஏன் நடைபெற வேண்டும்? 4 ஆந் தொடரும் மண்சுமந்த திருவிளையாடலில் அரசனையும் சேர்த்து ஊரிலுள்ளோர் எல்லோர்க்கும் அடி விழுகிறது. அது நம்மை யோசிக்க வைக்கிறது. இப்படியோர் நடப்பின் மூலம் நமக்கென்ன உணர்த்தப்படுகிறது? இத் திருவிளையாடல்களுள் ஒரு பொருள் இருக்க வேண்டுமே?

இந் 4 திருவிளையாடல்களோடு தொடர்புள்ள வரகுணனுக்குச் சிவலோகம் காட்டின திருவிளையாடல், விடைக்குறி அம்பெய்த திருவிளையாடல், உலவாக்கோட்டை வைத்த திருவிளையாடல், மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் ஆகியவற்றையும் சேர்த்து ஓர்ந்துபார்த்தால், பாண்டி நாட்டின் பொருள்வள நிலைமை மிகவும் மோசமாய் இருந்திருக்ககுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அது பஞ்ச காலமோ? தவறான அழுத்தங்கள் கொடுக்கப் பட்டு, மக்கள் மேல் நடக்கும் பெருங்கேடுகளைப் போக்கி, சரவல்களைக் குறைத்து, நன்மை விளைவிக்காத அரசன், பஞ்சத்தைக் கவனிக்காத அரசன், இன்னொரு நாட்டின் மேல் படையெடுத்து அதைப் பற்றிக் கொள்வதில் கவனஞ் செலுத்தி, தன் குதிரைப் படையைக் கட்டுவதிலே பெருங்கவனமாய் இருந்துள்ளான். இப்படிப் பஞ்ச காலத்தில் படையெடுப்பை ஒதுக்கி, நாட்டுமக்கள் பசியொழிய அரசன் வழிபார்த்திருக்க வேண்டாமோ?

”நாட்டின் அவலநிலையை அரசனுக்கு உணர்த்தி தவறான போக்கிலிருந்து அவனைத் திருப்ப ஏந்தாக இத்திருவிளையாடல்கள் பயன்பட்டிருக்குமோ?” என்ற ஓர்மை நமக்கு எழுகிறது. ”இதில் மணிவாசகர் ஒரு முகனக்கருவியாய் அமைந்தாரோ?” என்றுஞ் சொல்லத் தோன்றுகிறது. இல்லாவிடில் இத் திருவிளையாடல்களுக்கு பொருளில்லாது போகிறது.

என்றைக்கு இறைவனே சுந்தர பாண்டியராய் வந்து பாண்டிய இளவரசியான அங்கயற்கண் அம்மையை மணந்து, பாண்டி நாட்டுக் கொடி வழி தொடங்கி வைத்தாரோ, அன்றிலிருந்து அரசிற்கு ஏதேனும் நடந்தால்  அவ்வப்போது அவர் இடையூறுவதாகவே திருவிளையாடற் புராணம் சொல்கிறது.

மாணிக்க வாசகரின் காலம் பாண்டிய அரசிற்கு மிகுந்த சோதனை எழுந்த காலம் போலும். அது பெரும்பாலும் பஞ்சகாலமாய் இருந்திருக்க வேண்டும். அடுத்து மண்சுமந்த திருவிளையாடலுக்குள் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 14, 2011

மாணிக்க வாசகர் காலம் - 6

நரி குதிரையான திருவிளையாடல்:

”குதிரைகள் வரப்போகின்றன. பாண்டியநாட்டிற்குப் பெருங் குதிரைப்படை உருவாகி, நாடு வலிவுறப்போகிறது” என்றெண்ணித் தானைவேல் வாகை மாறன் ஊரை அலங்கரித்ததற்கு அடுத்த நாள். “ஒரு மத்தன் (=மயக்கம் உள்ளவன்) பேச்சைக் கேட்டு, ஊரை அலங்கரித்த பித்தன் நீயொருவனே இருக்க முடியும்” என்று பேரமைச்சர் ஒருவர் மன்னனிடம் பழி பேசுகின்றார். “பெருந்துறையிலேயே எல்லாச் செல்வத்தையும் அவன் போக்கிவிட்டான், குதிரையாவது வருவதாவதாவது? அவனுக்கு இனியும் இரங்காதே! அவனை வளைத்துப் பிடித்துப் பணத்தைத் திருப்பி வாங்கு! பொன்னை இழக்காதே” என்று தூவம் போடுகிறார். பிரம்படிக்காரர் மூலம் மாணிக்க வாசகரை மன்னன் தண்டிக்கத் தொடங்குகிறான். திருவாதவூரிலேயே அவரைச் சிறையிற் தள்ளுகிறான். வாசகர் மீள அரற்றுகிறார். பெருந்துறையானை எண்ணி எண்ணிக் குழைகிறார். 14 ஆம் பத்தாய்க் குழைத்த பத்தும், பதினைந்தாம் பத்தாய் அருட்பத்தும் எழுகின்றன. இவையிரண்டுமே பெருந்துறையானை முன்னிலைப் படுத்தி வாதவூரில் எழுந்தவை.

இப் பத்துகளைக் கேட்ட பெருந்துறையான் வாளாயிருக்கவில்லை. சிவ கணங்கள் மிழலை நாட்டு நரிகளைக் குதிரையாக்கி அவற்றில் ஏறிக் கொள்கின்றன. இவற்றின் முன்னால் இறைவனும் வெள்ளைப் புரவியில் சேர்ந்து கொள்கிறான். நரிகள் ஒன்றுகூடிய இடமே நரிக்குடியென திருவால வாயுடையார் புராணம் சொல்லுகிறது. (இன்றும் தொண்டிக்கு அருகில் ஒரு நரிக்குடி இருக்கிறது. மணிவாசகரை ”வடுகப் பிள்ளை”யாக்கி கோகழியைக் கர்நாடகத்தில் தேடுவோர் இந் நரிக்குடியைக் கண்டுகொள்ளார் போலும்.) .

இறைவனோடு, சிவகணங்களும் மதுரை நோக்கிப் புறப்படுகின்றன. திருவாத வூரில் சிறைப்பட்ட வாதவூரருக்கு மதுரை நோக்கிக் குதிரைகள் வருவதை மணிச்சிலம்பு ஓசையிட்டு இறைவன் உணர்த்துகிறான். ”வாதவூரினில் வந்து இனிதருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்” என்ற திருவாசகம் கீர்த்தி அகவல் 52-53 ஆம் அடிகள் இதை உறுதி செய்கின்றன. குதிரைகள் வரும் நேரத்தை வாதவூரர் எதிர்பார்த்து நிற்கிறார். பின்னாற் குதிரைக் குளம்படி கேட்ட தூதர் வாதவூரரிடம் சொல்லி மன்னரிடம் அனுப்புகிறார். அரசனுக்கும் செய்தி போகிறது. ஆவல் மிகுதியால் அத்தாணி மண்டபத்திற்கு அரசன் வந்து சேருகிறான். அங்கு நிலவும் தந்தத் திகை (tensile stress) கூடிப் போகிறது.

இவ் எதிர்பார்ப்பிற்கு மாறாய் ஓர் உச்சச்சரிவு போற் குதிரைகள் வருவதிற் காலத் தாழ்வு ஏற்படுகிறது. பின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிறது. பிரம்படிக் காரர் கையில் வாதவூரர் ஒப்படைக்கப் படுகிறார். அவர்கள் அடிக்க ஓங்க, மீண்டும் திருவாசகங்கள் பிறக்கின்றன. 16 ஆம் பத்தாய் அடைக்கலப் பத்து பிறக்கிறது. குயிற் பத்து அடுத்து எழுந்ததாய் நம்பியார் திருவிளையாடல் சொல்கிறது. நாம் ஏற்பதற்கில்லை. ஏனெனில் பரிமீது வரும் சிவன் மதுரை சேராதிருக்கையில் அது பற்றிப் பேசும் பாட்டுக்கொண்ட குயிற்பத்து எப்படி யெழும்? ஆக நிகழ்ச்சிகள் நடந்த காலத்திற்கும், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் எழுந்த காலத்திற்கும் இடையிற் பெருத்த இடைவெளி இருந்திருக்க வேண்டும்.

அடைக்கலப் பத்தும் வேறு ஏதோவொரு பத்தும் அங்கெழுந்தன என்று நாம் கொள்ளலாம். அந்நேரத்தில் பகல் மாறி இரவானதோ என்னுமளவிற்குத் குதிரைகளின் கதிப்பில் தூசு கிளம்புகிறது. மண்டபப் போக்கு மாறுகிறது. ஓர் எதிர்பார்ப்பு எல்லோர் மனத்தும் குடிகொள்கிறது. விதவிதமான குதிரைகளைச் செலுத்தி வரும் வீரரைப் பார்க்கிறார். வியக்கிறார். குதிரைகளை, அவற்றின் கதிகளை, நடைகளை, நம்பியார் திருவிளையாடல் வியத்தாரமாய் விவரிக்கிறது.  விரிவு கண்டு நாமும் வியந்து போகிறோம். [குதிரைகள் பற்றி அறிந்தோர் விளங்கிக் கொள்ளலாம். என்னால் முடியவில்லை. எனவே தவிர்க்கிறேன்.]

அடுத்த விவரிப்பு, குதிரையோட்டி வந்த இறைவனைப் பற்றியாகும். இவ் விவரிப்பு காலக்கணிப்பு அலசலுக்கு முகனமானது. ஏனெனில், ”இறைவன் அரபு இசுலாத்துத் தோற்றம் காட்டினார், எனவே மாணிக்க வாசகர் தேவார மூவருக்குப் பிற்பட்டவர்” என்று சிலர் கதை கட்டுவர். திருவாலவாயுடையார் புராணம் நரி குதிரையான திருவிளையாடல் 34 ஆம் பாட்டைக் கூர்ந்து படித்தால் அப்படி நமக்குத் தோன்றவில்லை.

”மன்னியநித் திலமாலை நில வெறிப்ப
மாணிக்கக் குண்டலங்கள் வெயில் விரிப்பத்
துன்னுலகுக்கு ஒருகுதிரை யாளாம் சோதி
சோதிவிடு குப்பாயம் மெய்ப்பால் மின்ன,
முன்னைமறைப் பரியைநெறி ஐந்தும் ஓங்க
முடுகிவலம் இடம்பரிவத் தனம்செய் வித்து
மின்னுண்மணிப் பொலன்கலினக் குசை வலித்து
விளங்குகர வாளம் கை துளங்க வந்தான்”

பாடலைப் புரிய ஏதுவாய், இதன் பொழிப்புரையை இங்கு கொடுக்கிறேன்.

”கழுத்திற் தொங்கும் முத்துமாலை நிலத்தைக் கூசவைக்க,
மாணிக்கக் குண்டலங்கள் வெயிலில் விரிந்திருக்க,
சோதிவிடும் குப்பாயம் அவனுடலில் மின்ன,
பக்கமறைப்போடு பரியின் இரு கண்கள் இருக்க,
ஐந்து வகையான கதிகள் ஓங்கும் வண்ணம்
குதிரையை முடுக்கி வலமிடமாய்ச் சுற்றிவந்து
மின்னும் மணிகள் பொருந்திய பொற்கடிவாளத்தை வலித்து,
விளங்கும் கைக்கத்தி துளங்கிச் சொலிக்கும் வகையில்
துன்னுலகுக்கு இவனொருவனே குதிரையாள் போல வந்தான்.”

மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள். வந்த குதிரையாள் அரபுத் தோற்றங் கொண்டதாய்த் தெரிகிறானா? இசுலாத்துத் தோற்றம் இங்கு உங்களுக்குத் தெரிகிறதா?. ”இசுலாம் எழுந்ததன் பின் மாணிக்கவாசகர் கதை எழுந்தது” என்று எப்படியெல்லாம் கதை விடுகிறார்? அவரை நோக்கி இம்”மூலத்தைப் படியுங்கள்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. வெள்ளைக் கலிங்கத் (வெள்ளை மேலாடைத்) தோற்றம் காட்டிய 18 ஆம் நூற்றாண்டுப் பரஞ்சோதி முனிவரைப் பிடித்துக் கொண்டு, வலிந்து அதை அரபுத் தோற்றமாக்கினால் எப்படி? இதே வெள்ளைக் கலிங்கத் தோற்றைத் தான் அன்னைப் பத்தில் மணிவாசகரே சொல்கிறாரே? அப்புறம் என்ன?

வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

- அன்னைப் பத்து 7

இங்கே பள்ளிக் குப்பாயம் என்ற சொல்லை வைத்து ”பள்ளி என்பது சமணம், புத்தம் போன்றமைந்த இசுலாம் பள்ளி வாசலைக் குறிக்கும்” என்று விளக்கி, “இது மாற்று மத ஆட்கள் போடும் குப்பாயம்” என்று மொத்தப் பொருள் சொல்லிக் குழப்பச் சிலர் முயல்கிறார். பள்ளிக் குப்பாயம் என்பது வடக்கே இருந்தவர் போடும் நீண்ட அங்கிச் சட்டை. அது யவனர் காலத்திற்கும் முன் வடமேற்கு இந்தியாவில் (இற்றை ஈரான், ஆப்கனித்தான், பாக்கித்தான் போன்ற நாட்டு நிலப்பகுதிகளிலும் ) இருந்தது. எப்போது அங்கு தோன்றியது என்று தெரியவில்லை. தமிழருக்கு அது வடக்கிருந்து அறிமுகமானது என்று மட்டுமே நாம் சொல்ல முடியும்.

மேற்காட்டிய 12 ஆம் நூற்றாண்டுத் திருவிளையாடற் பாட்டும் ”மின்னுகின்ற குப்பாயம். முத்துமாலை, மாணிக்கக் குண்டலங்கள் அணிந்திருந்தார், குதிரையின் கண்கள் பக்கவாட்டில் மறைக்கப் பட்டிருந்தன. மணிகள் பொருந்திய பொற்கடிவாளம், கையில் கத்தி” என்று மட்டுமே சொல்கிறது. ”இது நடுக்கடல் நாடுகளின் குதிரைக்காரர் தோற்றமா?” என்றால் ”ஒரு வேளை இருக்கலாம், இல்லாதும் போகலாம்” என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது. எப்படியெலாம் மூலநூலைப் படிக்காது ஆய்வர் சிலர் அவக்கரப்படுகிறார்? படைச் சேவகர், குதிரையாட்கள் குப்பாயம் போடுவது சிலம்பிலேயே சொல்லப் பட்டுள்ளதே? சிலம்புக் குப்பாயம் பள்ளிக் குப்பாயமா? - தெரியாது.

குதிரைத் தொகுதியின் நடுவில் வரும் நாயகனைக் கண்டு ”அவன் சொக்கன் தானோ?” என்று வியக்கிறார். குதிரைகளின் நேர்த்தி கண்டு வியந்து, அரசன் ”குதிரைத் தலைவன் யார்?” என வாதவூரரிடம் கேட்கிறான். “சற்று நேரத்திற் குதிரையில் வருவார்” என்று அவர் சொல்கிறார். அடுத்து இறைவன் குதிரைத் தலைவனாய் வரும் தோற்றம் விவரிக்கப் படுகிறது. குதிரைத் தலைவனைப் பார்த்துத் தன் கரங் கூப்பப் பாண்டியன் முற்படுகிறான். பின் ”குதிரைத் தலைவனை அரசன் வணங்குவதா?” என்ற தயக்கத்தில் தன்னைத் தானே அடக்கிக் கொள்கிறான்.

”மிக்க மந்திரிகாள்! இந்த வெம்பரிச் செட்டி நந்தம்
சொக்கனே போல் எனக்குத் தோன்றிடா நின்றான்; வந்த
கொக்கினைப் பாரீர்! காலம் தாழ்த்ததாயினும் கொணர்ந்த
மிக்க மந்திரியைப் பாரீர்!!” என்று பன்முறை வியந்தான்.

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 61

இப்படியாகக் குதிரைச்செட்டியையும், மணிவாசகரையும் பற்றி மன்னன் வியக்கிறான். குதிரைத் தலைவன் தான்கொண்டுவந்த குதிரைகள் பற்றி விவரிக்கிறான். என்னென்ன குதிரைகள் நல்லன என்றும் விவரிக்கப் படுகின்றன. முடிவில் குதிரை எண்ணிக்கைகளும் விலைகளும் சொல்லப் படுகின்றன.

இப்பரிமா ஓர் இலக்கம் அவற்றினுள் இக்குழு ஓரொரு மா
முப்பஃதாயிரம் ஓர் பழுதின்றி முதற்றரம் இத்தரமும்
வைப்பதின் நூறு குறைந்தன பின்னிவை ஆயிரம் மற்றிவையும்
அப்படி பெற்ற விலைப்பொன் இலக்கம் அனைத்தும் உணர்ந்து கொளே

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 74

”இலக்கம் குதிரைகளா?” என்று நாம் வியந்து நிற்கிறோம். அவற்றுள் 30000 முதற்றரக் குதிரைகள். அடுத்ததரக் குதிரைகள் 30000 இல் நூறு குறைந்ததாம். மூன்றாம் தரத்தில் 1000 குறைந்ததாம். நாலாம் தரத்தில் 11100 என நாம் கணக்கிட்டுக் கொள்கிறோம். இக்குதிரைகளுக்குப் பெற்ற விலைப்பொன் இலக்கம். பொன் என்பது என்ன அலகெனத் திருவாலவாயுடையார் புராணம் சொல்ல வில்லை. எனவே குதிரைத் தரங்களின் விலையை நம்மாற் கணக்கிட முடியவில்லை. அடுத்துக் குதிரையின் பெருமைகள் சொல்லப் பெறுகின்றன.

விற்பனையின் கடைநிலைக்கு வருகிறார். அதன்பெயர் கயிறு மாற்றிக் கொள்ளுதல். விற்பவன் வாங்குவோனிடம் “இந்தாப்பா, கயிற்றைப் பிடித்துக் கொள், குதிரையை உன்னிடம் கொடுத்தேன். இனி நன்மை தீமை எல்லாம் உனக்கே. எனக்கு இனிப் பொறுப்பில்லை” என்று கைமாற்றிக் கொள்கிறார்.

”ஆதலால் அறிஞர் முன்னா அறவுறப் பேசிக் கொண்டு
நீதியிற் கைக்கொள் இன்று நின்னது புரவியாக
வீதியிற் கயிறு மாறி விட்டபின் நன்மை தின்மை
ஓதுவ நமது பாரம் அல்ல மேல் உன்ன” என்றான்.

அத்திறம் சொல்ல, ”நல்ல அறிவன் நீ அறைந்தது ஒக்கும்
உத்தம நன்மை தின்மை உன் கை விட்டு என் கை புக்கால்
எத்தையும் அறிதல் வேண்டா; என்னவே முற்றும்” என்னச்
சித்திர மாக்கள் தம்மைத் தென்னவன் கைக்கொடுத்தான்

திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 80-81

”இப்பேறு பட்ட குதிரைகளுக்கு நாம் கொடுத்த விலை போதா. நமக்குக் குதிரைகள் வாய்த்தன” என்றெண்ணி மன்னன் மகிழ்ந்துபோகிறான்.

அய்யமில் லாமல் முன்னின்று ஆவணி மூல நன்னாள்
துய்ய பேருலகுக் கெல்லாம் துளங்கி ராவுத்த ராயன்
மெய்யை மெய்யுடைய மெய்யன் மெய்யடியானை வேண்டிப்
பொய்யிலா மன்னன் காணப் பொய்ப் பரிமாற்றம் செய்தான்

- திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 83

இங்கே மெய்யடியான் என்பது மணிவாசகர். ”மெய்யை மெய்யுடைய மெய்யன்” என்பது இறைவனைக் குறிக்கும். ஆக ராவுத்த ராயனாய் வந்த இறைவனாகிய மெய்யன் மன்னனிடம் பொய்ப் பரிமாற்றம் செய்தான்.

அடுத்த பாடல் நாம் குறித்து வைக்க வேண்டிய பாட்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியார், திருநாவுக்கரசர் தேவாரத்தில் திருவாரூரைப் பற்றி வரும் பதிகத்தில் இருந்து சில வரிகளை எடுத்து அப்படியே தன் பாடலில் ஆள்கிறார்.

மின்னிய உலகுதன்னில் வித்தின்றி நாறு செய்வோன்
நன்னெறி யில்லாப் பொல்லா நரகரைத் தேவு செய்வோன்
மன்னிய நரிகள்தம்மை மறுகெலாம் வாவி யேறித்
தென்னன்முன் குதிரையாகச் செய்பு தோன்றாமல் விட்டான்

- திருவாலவாயுடையார் புராணம், நரி குதிரையான திருவிளையாடல் 84

இதில் வரும் வரிகள்

“நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங்கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்”

என்ற திருநாவுக்கரசர் தேவார திருவாரூர் பதிகத்தை அப்படியே தன்பாட்டில் நாலில் 3 அருளிச்செயலைக் குறிப்பனவாய் ஒத்துள்ளன. திருநாவுக்கரசர் சொல்லும் ”நரியைக் குதிரை செய்தது” என்பது திருநாவுக்கரசருக்கு முந்திய அருளிச் செயல். இந்த அருளிச் செயல் மாணிக்க வாசகருக்காக நடந்தது என்பது நம்பியார் கூற்று. அப்படியானால், ஏரணத்தின் படி, நம்பியார் காலப் புரிதல் ”மாணிக்கவாசகர் திருநாவுக்கரசருக்கு முன்பு இருந்தார்” என்பது எளிதில் பெறும் அல்லவா? நண்பரே நினைவுகொள்ளுங்கள். ஏரணத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். [C claims that foxes are turned into horses due to A. Further C quotes B to be saying the same thing (that foxes are turned into horses). The corroboration is not just for one miracle but three. B lived in 7th century. So A who is referred to here must have lived prior to B] இதைச் சொல்வது 12 ஆம் நூற்றாண்டு நம்பியார். அதாவது, 12 ஆம் நூற்றாண்டில் ஏழாம் நூற்றாண்டிற்கு முந்திய திருநாவுக்கரசருக்கு முன்பே மாணிக்க வாசகர் இருந்ததாக ஒரு புரிதல் உள்ளது.

What a beautiful evidence? I am pleasantly surprised.

இனி இத்திருவிளையாடலின் இறுதிக்கு வருவோம். பந்தியிற் குதிரைகளைக் கட்டுமாறு மன்னன் பணிக்கிறான். குதிரை கொண்டுவந்த தலைவனுக்கு ஒரு பட்டுத் துணி கொடுக்கிறான். தன்னடியாருக்காக, அதைச் செண்டிற் தொங்கும் படி இலாவகமாக வாங்கி, இறைவன் தன்முடியில் புனைந்து கொள்கிறான். அப்படிச் செண்டில் வாங்கியது தன்னை அவமதித்ததாய் அரசன் உணர்ந்து சீற, வாதவூரர் “ அது அவர் தேச வழமை” என்று சொல்லி அமைதிப் படுத்துகிறார்.

பிடித்த பத்து இப்பொழுது எழுந்ததாய் திருவாலவாயுடையார் புராணம் சொல்கிறது. அது ஏற்புடையதில்லை. பல்வேறு பொற்பட்டு வரிசைகளை வாதவூரர்க்குச் செய்து அரசன் அரண்மனை ஏகுகிறான்.நரி குதிரையான திருவிளையாடல் முடிந்தது. அடுத்த திருவிளையாடலுக்குள் போவோம்.

இனித் திருவாசகத்தில் இருந்து நரி குதிரையான திருவிளையாடல் பற்றிய அகச்சான்றுகள் வருமாறு:

குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்து அருளியும்

- கீர்த்தித் திருவகவல் 27-28

மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 33-34

அரியொடு பிரமற்கு அளவறி யொண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 35-36

ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்ப
தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்

- கீர்த்தித் திருவகவல் 37-41

மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
குதிரைச் சேவக னாகிய கொள்கையும்

- கீர்த்தித் திருவகவல் 44-45

இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி
எந்தரமும் ஆட்கொண்டு தோள்கொண்ட நீற்றனாய்
சிந்தனையை வந்துருக்கும் சீரார் பெருந்துறையான்
பந்தம் பரியப் பரிமேற்கொண் டான்தந்த
அந்தமிலா ஆனந்தம் பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 3

பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
குற்றங்கள் நீக்கிக் குணம்கொண்டு கோதாட்டி
சுற்றிய சுற்றத் தொடர்வறுப்பான் தொல்புகழே
பற்றியிப் பாசத்தைப் பற்றநாம் பற்றுவான்
பற்றியபே ரானந்தம் பாடுதும்காண் அம்மானாய்

- திருவம்மானை 20

மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலம் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவற் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ

- திருப்பூவல்லி 20

கோல வரைக்குடுமி வந்து குவலயத்து
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலம் திகழும் திருவுத்தர கோசமங்கை
மாலுக்கு அரியானை வாயார நாம்பாடி
பூலித்து அகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ

- திருப்பொன்னூசல் 8

வெள்ளைக் கலிங்கத்தர் வெந்திரு முண்டத்தர்
பள்ளிக்குப் பாயத்தர் அன்னே என்னும்
பள்ளிக்குப் பாயத்தர் பாய்பரி மேற்கொண்டென்
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும்

- அன்னைப் பத்து 7

உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன்
பொன்னை அழித்ததன் மேனிப் புகழிற் திகழும் அழகன்
மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய
தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்புயங்க கன்வரக் கூவாய்

- குயிற் பத்து 7

இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே - எப்போதும்
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
வான்புரவி யூரும் மகிழ்ந்து

- திருத்தசாங்கம் 6

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம்
ஒருவரை ஒன்று மிலாதவ ரைக்கழற் போதிரைஞ்சித்
தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை யன்றி உருவரி யாதென்தன் உள்ளமதே

- திருப்பாண்டிப் பதிகம் 1

சதுரை மறந்தறி மால்கொள்வர் சார்ந்தவர் சாற்றிச்சொன்னோம்
கதிரை மறைத்தன்ன சோதி கழுக்கடை கைப்பிடித்து
குதிரை யின்மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர்
மதுரை யர்மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே

- திருப்பாண்டிப் பதிகம் 2

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம்கொண்டீர்
பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார்
ஓரின்ப வெள்ளத் துருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார்
பேரின்ப வெள்ளத்துள் பெய்கழ லேசென்று பேணுமினே

- திருப்பாண்டிப் பதிகம் 3

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன்நன்னாட்
டிறைவன் கிளர்கின்ற காலமிக் காலமெக் காலத்துள்ளும்
அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி
எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இருநிலத்தே

- திருப்பாண்டிப் பதிகம் 4

ஈண்டிய மாயா இருகெட எப்பொரு ளும்விளங்கத்
தூண்டிய சோதியை மீனவ னும்சொல்ல வல்லனல்லன்
வேண்டிய போதே விலக்கில் ஐவாய்தல் விரும்புமின்தான்
பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே

- திருப்பாண்டிப் பதிகம் 6

மாயவ னப்பரி மேற்கொண்டு மற்றவர் கைக்கொளலும்
போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக்கு
ஆய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளேயருளும்
சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே

- திருப்பாண்டிப் பதிகம் 7

விரவிய தீவினை மேலைப் பிறப்புமுந் நீர்கடக்க
பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார்
புரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட பூங்கொடியார்
மரவியன் மேற்கொண்டு தம்மையும் தாமறி யார்மறந்தே

- திருப்பாண்டிப் பதிகம் - 9

இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி,
கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிகளெலாம்
பெருங்குதிரை ஆக்கியவா றன்றேயுன் பேரருளே

- திருவேசறவு 1

வேடுரு வாகி மாகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
தேட விருந்த சிவபெருமான் சிந்தனை செய்தடி யோங்களுய்ய
ஆடல மர்ந்த பரிமாவேறி ஐயன் பெருந்துறை ஆதியந்நாள்
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறிவார் எம்பிரா னாவாரே

- திருவார்த்தை 4

உள்ள மலமொன்றும் மாய உகுபெருந்தேன்
வெள்ளம் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு

- பண்டாய நான்மறை 2

காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டின் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளும் கெடநெஞ்சே வாழ்த்து

- பண்டாய நான்மறை 3

நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்ச தேற்றும் பெருந்துறையாய்
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வ தொன்றும் அறியேனே

- ஆனந்த மாலை 7

அன்புடன்,
இராம.கி.