Monday, December 13, 2010

பொக்கணி = புஷ்கரணி

www.tamilnet.com என்ற தமிழீழ வலைத்தளத்தில் Know the Etymology என்ற தொடர் வந்து கொண்டிருக்கிறது. அந்தத் தொடரில் இதுவரை 174 இடங்களின் சொற்பிறப்பு இனங்காட்டப் பெற்றிருக்கிறது. ஒரு முறையும் தவறவிடாது இத் தொடரை நான் படிப்பது வழக்கம். இதை யார் எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெரிதும் பாராட்ட வேண்டிய பணி அதுவாகும். ஈழம், இலங்கை ஆகியவற்றின் பல்வேறு இடப்பெயர்களை (சிலபோது மாலத்தீவுப் பெயர்களையும் கூட) ஆழமாக ஆய்வு செய்து சொற்பிறப்புக் காட்டும் இந்தப் பணி எண்ணியெண்ணி வியக்க வேண்டியவொன்றாகும். தமிழீழமும், அது இருக்கும் தீவும் எந்த அளவிற்குத் தமிழரோடு தொடர்புற்றது என்று நிறுவுவதற்கு இதுபோன்ற ஆய்வுகள் பயன்படுகின்றன. ”தமிழருக்கு அத்தீவில் இடமில்லை” என்று சிங்களவன் அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் தொல்லியலோடு சொற்பிறப்பியல் ஆய்வும் சேர்ந்து வரலாற்றை நிறுவும் வேலையைச் செய்யவேண்டியிருக்கிறது. [இடைச்சங்க, முதற்சங்க காலப் பழந்தமிழகத்தில் இலங்கைத்தீவு (அன்று அது தீவல்ல, நாக நாடு என்று பெயர்பெற்ற தீவக்குறை.) நம்மோடு தொடர்புற்றே இருந்திருக்கும் என்ற என் கருதுகோள் மேலும் மேலும் உறுதிப் படுகிறது.]

[இப்படி ஒரு தொடரை இற்றை இந்திய ஊர்ப்பெயர்களுக்கு யாரும் செய்து நான் பார்த்ததில்லை. பாவாணருக்கும், இளங்குமரனாருக்கும், இரா.மதிவாணருக்கும், ப.அருளியாருக்கும் பின்னால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் (குறிப்பாக பேரா. கு,அரசேந்திரன்) ஒருசிலர் மட்டுமே தமிழ்நாட்டில் உருப்படியான சொற்பிறப்பு ஆய்வு செய்கிறார்கள். சொன்னால் பலருக்கும் சினம் ஏற்படுகிறது. தமிழை வைத்து மேடையிலும், அரசியலிலும் பிழைப்போர் தொகை இன்று கூடிப்போய், தமிழுக்குப் பணி செய்வோர் தொகை குறைந்தே வருகிறது. நாட்பட நிலைத்து நிற்கும் அளவில், தமிழுக்கு பணி செய்வோர் தொகை அருகிப் போய், ஆ, ஊ என்று அலைபாயும் கூட்டம் மிகுத்து வருகிறது. (தமிழ் செம்மொழியாகிவிட்டது என்று கூத்தாடுவதே பெருமையாகி அதன் தொடர்ச்சியையும், எதிர்கால நிலைப்பையும் பற்றி நம்மில் யார் கவலைப்படுகிறோம், சொல்லுங்கள்?) ஏதொன்றையும் ஆழ்ந்து படிப்பதும், அறிவியல் வரிதியாய் ஆய்வு செய்வதும், எல்லை மொழிகளை அறிந்து, அவற்றைத் தமிழோடு பிணைத்து புதுப் பரிமானங்களைத் தமிழுக்குக் கொணர்வதும், தமிழியலோடு இன்னொரு நுட்பியலைப் பிணைத்து புதுப் பார்வை காட்டுவதும், ஆங்காங்கே முடிவு தெரியாத தமிழ்வரலாற்றுக் கேள்விகளுக்குத் தீர்வு சொல்வதும், அரிதாய் இருக்கிறது.]

அண்மையில் ”கூட்டம் பொக்குண, கற்பொக்குணை” என்ற பெயர்களின் சொற்பிறப்பை http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33209 என்ற 174 ஆம் பதிவில் ஆய்வு செய்திருந்தார்கள். அந்த வலைத்தளம் போய் பழைய பதிவுகளையும் படித்துப் பார்த்தால், நான் சொல்லுவதன் அருமை புரியும்.

இனிப் பொக்கணிக்கு வருகிறேன்.

புல்>புள்>பொள் என்ற வேர் தமிழில் துளைப்பொருளைக் குறிக்கும். பொக்கம், பொக்கணம், பொக்கல், பொக்கு, பொக்குள், பொக்குளம், பொக்கை, பொகுட்டு, பொங்கல், பொச்சம், பொச்சு, பொச்சை, பொட்டல், பொட்டி, பொட்டு, பொட்டை, பொத்தல், பொதும்பு, பொந்தர், பொந்து, பொய், பொய்கை, பொல்/பொல்லு, பொலுகு, பொழி, பொள்ளல், பொள்ளை, பொளிதல், பொற்றுதல், பொன்றுதல் என்று பல்வேறு சொற்களை இந்த வேர் உருவாக்கும். கூட்டுச் சொற்களையும், இரண்டாம் நிலைச் சொற்களையும், அவற்றின் கூட்டுக்களையும் சேர்த்தால் குறைந்தது 1000 சொற்களாவது தேறும். இப்படி எழும் எல்லாச் சொற்களின் உள்ளே துளைப்பொருள் அடியில் நின்று மற்ற வழிப்பொருள்களைக் குறிக்கும். [நான் ஒவ்வொரு சொல்லின் பொருளையும் கூறி விளக்கிக் கொண்டிருந்தால் கட்டுரை நீளும் என்று தவிர்க்கிறேன்.]

இவற்றில் ஒன்றுதான் பொக்கணி என்ற சொல்லாகும். அது நிலக்குழிவில் நிறைந்திருக்கும் நீர்நிலையைக் குறிக்கும். இதன் இன்னொரு திரிவாய் சிவகங்கை மாவட்டத்தில் இன்றும் புழங்கும் போகணி என்ற சொல் நீரை மொள்ளும் குவளையைக் குறிக்கும். (போகணி என்பது தமிழக அகரமுதலிகளுள் பதிவு செய்யப்படாத ஒரு சொல். பதிவு செய்யப்படாத வட்டாரச் சொற்கள் ஓரிலக்கமாவது தமிழிற் தேறும். அவற்றையெல்லாம் பதிவு செய்ய யார் முன்வருகிறார்கள், சொல்லுங்கள்? வேரிற் பழுத்த பலாவாய் இவையெல்லாம் பறிப்பாரற்றுத் தொங்குகின்றன.)

பொத்தகம்> புத்தகம்> புஸ்தகம் என்ற சொல், மீத்திருத்தம் பெற்று சங்கதத்துள் புகுந்து மீண்டும் தமிழுக்குத் திரிவாய் நுழைந்து பொத்தகம் என்ற தமிழ்ச்சொல்லையே போக்கடித்தது போல, பொக்கணி என்ற சொல் பொக்கணி> புக்கணி> புஷ்கணி> புஷ்க்ரணி என்றாகும். நாம் மீண்டும் அதைத் தமிழ்முறையிற் பலுக்கிக் கொண்டு புட்கரணி என்று சொல்லுவோம். பெருமாள் கோவில் திருக்குளங்கள் இன்று புஷ்கரணி என்றே அழைக்கப் படுகின்றன. அதன்வழி பொக்குணி என்ற தமிழ்ச்சொல் போயே போயிற்று. புஷ்கரணி என்று சொன்னாற்றான் பெருமாள் அருள் கிடைக்கும் என்று கூட மூடநம்பிக்கை எழுந்து விட்டது. [அதோடு மட்டுமல்லாது தாமரைக் குளம் என்று புதுப்பொருள் சொல்லி பூஷ் கரணி என்றெல்லாம் பொருந்தப் புகல்வார் இன்னொரு பக்கம் நம்மை ஏமாற்றவுஞ் செய்கிறார்கள். இது சங்கதச் சொற்பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சிலும் தவறாகப் பதிவு பெற்றிருக்கிறது.]

பொக்கணி, பொக்குணை போன்ற தமிழ்ச்சொற்களுக்குச் சிங்கள இணை காட்டி Know the Etymology ஆசிரியர் தன் கட்டுரையில் இச்சொற்களின் தமிழ்மையை நிறுவுவார். சிங்களத்துள் பல பாலி மொழிச் சொற்கள் புதைந்துள்ளன. பாலி என்பது பாகதத்தின் இன்னொரு வார்ப்பு. பாகதம் சங்கதத்திற்கு முன்னது; வேத மொழிக்குப் பின்னது. பல சங்கதச் சொற்களுக்கு தமிழிணை காண வேண்டுமானால் பாகதம், பாலி அறிவது பயன்தரும். ஒருவகையில் பார்த்தால், தமிழிற் சொல்லாய்வு செய்யும் போது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் அறிவது எவ்வளவு துணை செய்யுமோ, அதே போலச் சிங்களம் அறிவதும் நமக்குப் பயன்தரும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, December 03, 2010

தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் - 3

"தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும்" என்ற என் இருபகுதிக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டில் மலேசியக் கணிஞர் நண்பர் முத்து நெடுமாறன்,

: "Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities. Period." என்று கூறி இருக்கிறீர்கள். இதை விளக்கும் ஆவணங்கள் (sample documents) ஏதாவது கிடைக்குமா? JPGஇல் இருந்தாலும் தாழ்வில்லை

என்று கேட்டிருந்தார். அவருக்கு விடை சொல்லும் முகமாக 3 ஆவணப்படங்களைக் கண்ணி(to scan)யெடுத்து கீழே இந்த இடுகையிற் போட்டிருக்கிறேன். இவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பல்லவர் செப்பேடுகள் முப்பது” என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தக் காலப் புரிதலுக்காகச் செப்பேட்டின் மசிப்படியைப் (estampage) படமாக்காது அச்சுப்படியைப் (print copy) படமாக்கியிருக்கிறேன். மசிப்படியைப் பார்த்தாலும் அது அச்சுப்படி போலவே இருப்பதை நுண்ணித்துப் பார்ப்போர் உணரமுடியும்.

முதலாவது கண்ணை (scan - noun), என் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஏற்கனவே சொல்லப்பட்ட முதலாம் பரமேச்வர வர்மனின் கூரம் செப்பேடாகும். [முதலாம் பரமேச்வர வர்மன் இரண்டாம் மகேந்திர வர்மனின் மகன். முதலாம் நரசிம்ம வர்மனின் பேரன். இவன் ஆட்சிக்கு வந்த காலம் கி.பி.668-669.]



கூரம் செப்பேடு ஐந்தாம் ஏட்டின் முன்புறத்தில் கிரந்தவொழுங்கோடு (grantha orthography) எழுதப்பட்ட வடமொழிப் பகுதியின் 49 ஆம் வரியில் வடமொழிச் சொற்களுக்கு நடுவில் ”ஊற்றுக் காட்டுக் கொட்ட” என்றும் ”நீர்வெளூர்” என்ற தமிழ்ச் சொற்கள் தமிழ் எழுத்தொழுங்கோடு (Tamil orthography) எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். [படத்தை ஊன்றிக் கவனியுங்கள்.] அதாவது இது கலப்பு மொழி. ஆனால் கிரந்தவெழுத்து கிரந்த அடுக்குமுறையிலும், தமிழ் தமிழெழுத்திற்கான நீரொழுக்கு முறையிலும் எழுதப்படுகின்றன. [திரு. நா. கணேசன் சொல்வது போல் 7 தமிழ்க் குறியீடுகளை கிரந்த முன்மொழிவிற்குள் சேர்த்தால் இந்த மொழியொழுங்குகள் அப்படியே குதறிக் குலைந்து போகும். ]

இதைத்தான் நான் “:Even though they have mixed the scripts, they have kept the individual scripts' distinct orthographic identities” என்று சொல்லியிருக்கிறேன். (வீரமாமுனிவருக்கும் மிக முற்பட்ட) அந்தக் காலத்தியத் தமிழெழுத்தில், ஒற்றைக் கொம்பு நெடிலைக் குறித்தது என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொண்டால் சொல்லப்படும் கோட்டம்/ஊர்கள் “ஊற்றுக்காட்டுக் கோட்டம்”, “நீர்வேளூர்” ஆகியன என்பது புரிபடும்.

இனிக் கிட்டத்தட்ட இருநூற்றி இருபது ஆண்டுகள் தள்ளிக் கடைசியில் வரும் பல்லவத் தனித்த அரசனான அபராஜிதன் காலத்திற்கு (கி.பி.885-903) வருவோம். இது தொடர்பாக இரண்டாம் கண்ணைப் படத்தைக் காண வேண்டுகிறேன்.



இது தமிழெழுத்து விரவிவந்த வடமொழிப் பகுதியாகும். தமிழகத் தொல்லியற் துறை திருத்தணிகைக்கு அடுத்துள்ள வேளஞ்சேரி என்னுமிடத்தில் 1979 இல் கண்ட பல்லவர் செப்பேட்டில் வடமொழிப் பகுதியின் இரண்டாம் ஏட்டில் இரண்டாம் பக்கத்தில் முதல் வரியில் ”சிற்றாற்றூர” என்ற ஊர்ப்பெயர் சகரம் கிரந்தமாகவும், ரகரம் கிரந்தமாகும் “ற்றாற்றூ” என்ற றகரம் விரவிவரும் சொற்பகுதி தமிழ் எழுத்தொழுங்கிலும் வருவதைக் காணலாம். இங்கும் ஒரே சொல்லில் கிரந்தம் கிரந்தவொழுங்கிலும், தமிழ் தமிழெழுத்து முறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழின் சிறப்பு றகரம் தமிழ்முறையிலேயே எழுதப்பட்டிருப்பதே முற்காலத் தமிழர் தமிழெழுத்து முறையைச் சரியாகக் காத்தார்கள் என்பதற்குக் காட்டாகும்.

இதே போல அதே செப்பேட்டின் மூன்றாம் ஏட்டில் 1, 2 ஆம் வரிகளில் “குன்றவத்தன கோட்டம் தணியல் நாடு என்ற சொற்கள் சுற்றிலும் கிரந்தவெழுத்துக்களுக்கு நடுவில் தமிழெழுத்திலும், 8 ஆம் வரியில் மேலிருஞ்செறு என்று ஊர்ப்பெயர் “மேலிரி” என்ற பகுதி கிரந்தத்திலும் ”ஞ்செறு” என்ற பகுதி தமிழெழுத்திலும் கிரந்தச்செப்பேட்டுப் பகுதியில் வந்திருக்கும். மறுபடியும் கலவை எழுத்துநடை. இதனாலேயே 7 தமிழ்க்குறியீடுகளைக் கிரந்தத்திற் சேர்க்கக் கூடாது என்று கூறுகிறோம்.

மூன்றாவது கண்ணைப் படமாக அதே செப்பேட்டின் நாலாம் ஏடு முதற் பக்கத்துக்கு வருவோம். இது செப்பேட்டின் தமிழ்ப் பகுதியைக் குறிக்கிறது.



இதில் 4 ஆம் வரியில் “நின்றருளின ‘ஸுப்ரஹ்மண்ய’ர்க்கு என்ற சொல்லில் ’ஸுப்ரஹ்மண்ய” என்ற பகுதி கிரந்த முறையிலும், ‘ர்க்கு” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால், [சந்த்ராத்தித்தர் என்ற சொல்லில் “சந்திராதித்த” என்பது கிரந்த முறையிலும், “ர்” என்பது தமிழ் முறையிலும் வருவதைக் கண்டால்,] ”தமிழ் தமிழாக இருந்தது. கிரந்தம் கிரந்தமாய் இருந்தது” என்பது புரியும். திரு. நா. கணேசன் சொல்வது போல் இரண்டையும் முட்டாள் தனமாய்க் கலந்து யாரும் “எழுத்துக் கந்தரகோளம்” பண்ணவில்லை.

நான் எடுத்துக் காட்டிய மூன்று கல்வெட்டுப் படங்கள் சொல்ல வந்த கருத்திற்குத் துணையாகப் போதும் என்று எண்ணுகிறேன். இக் கல்வெட்டுக்களை எல்லாம் ஒழுங்காகக் குறியேற்றம் செய்யவேண்டுமானால்

”தமிழ்-கிரந்தம் என்ற பெருங்கொத்துக் குறியேற்றம் வரவே கூடாது. அதே பொழுது 7 தமிழ்க் குறியீடுகள் சேர்க்காத கிரந்த வட்டம் மட்டும் தனியே SMP இல் குறியேற்றம் பெறுவதிற் தவறில்லை”

என்றே நான் எண்ணுகிறேன்.

மீண்டும் சொல்கிறேன்:

ஆயிரக் கணக்கான தமிழகக் கல்வெட்டுக்கள் இருமொழிக் கல்வெட்டுக்களாகும். அவை ஒழுங்காகக் கணிக்குள் ஏற்றப்பட வேண்டுமானால்

”கிரந்தத்தைத் தனியே வை; தமிழைத் தனியே வை. இரண்டையும் குறியேற்றத்துள் ஒன்றாக்கி உருப்படாமற் செய்யாதே”

என்று தான் அழுத்தமாகக் கூறவேண்டியிருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.