Friday, July 09, 2010

தமிழெழுத்துப் பரம்பல் - 2

முதற்பகுதியிற் சொன்ன எழுத்துப் பரம்பல் இற்றைத் தமிழில் மட்டுமல்லாது. பழந்தமிழிலும் இருந்திருக்கிறது. ஓர் எடுத்துக்காட்டிற்காகச் சங்க இலக்கியத்தில் இருந்து ஒரு பாடலைப் (புறம் 194 - பக்குடுக்கை நன்கணியார் எழுதியது) பார்ப்போம். [ஒவ்வொரு வரியின் முடியிலும் அந்த அடியில் வரும் எழுத்துக்களை எண்ணிப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன்.]

ஓரி னெய்தல் கறங்க வோரி 12
லீர்ந்தண் முழவின் பாணி ததும்பப் 16
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் 18
பைத லுண்கண் பணிவார் புறைப்பப் 15
படைத்தோன் மன்றவப் பண்பி லாள 15
னின்னா தம்மவிவ் வுலக 11
மினிய காண்கித னியல்புணர் ந் தோரே 16

மொத்தம் 103

இந்த 103 எழுத்துக்களை வகை வகையாகப் (உயிர், மெய், பல்வேறு உயிர்மெய்கள்) பிரித்துப் பார்த்தால், கீழ்க்கண்டது போல் அமையும்.


இனிப் புள்ளியியல் முறையில் கணக்குப் போட்டால்,

என்றமையும். இதன்படி, வேறுபாட்டுக் கெழு = (0.138639435)^0.5 = 0.372343168
(Coeff. of variation) என்பது கிடைக்கும்,

பக்குடுக்கை நன்கணியார் பாடல் ஆசீவகப் பாடல். அண்மைக்கால ஆய்வின் படி இப்பாடலின் காலம் கிட்டத்தட்ட கி.மு.600 ஐச் சேர்ந்தது. இதற்குப்பின் திருக்குறளின் முதலாம் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் எழுத்துப் பரம்பலைப் பார்ப்போம். [ஒவ்வோர் குறளிலும் இருக்கும் எழுத்துக்களை குறள் முடிவில் கொடுத்துள்ளேன். முதல் அதிகாரத்தின் மொத்த எழுத்துக்கள் 292.

அகர முதல வெழு த்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு 25
கற்றதனா லாயபய னென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅ ரெனின் 28
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் 27
வேண்டுத ல் வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்கி
யாண்டு மிடும்பை யில 29
இருள்சே ரிருவினையுஞ் சேரா யிறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு 32
பொறிவா யி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் 30
தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது 35
அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்த லரிது 31
கோளிற் பொறியிற் குணமிலவே யெண்குணத்தா ன்
தாளை வணங்காத் தலை 28
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தா
ரிறைவ னடிசேரா தார் 27

மொத்தம் 292

இந்த 292 எழுத்துக்களை வகை வகையாகப் பிரித்துப் பார்த்தால், கீழ்க்கண்டது போல் அமையும்.

இதிலும் வேறுபாட்டுக் கெழுவைப் பார்க்கமுடியும்.


வேறுபாட்டுக் கெழு = (0.1135597)^0.5 = 0.336986201 (Coeff. of variation)

மேலே நாம் பார்த்த வேறுபாட்டுக் கெழுக்களை எழுத்துப் பரம்பல் கைச்சாத்து (Signature of letter distribution) என்று கூறமுடியும். இது போன்ற கைச்சாத்துக்களை அசை, சீர், தளை, அடி என்ற வகையிற் காணமுடியும். இற்றை உரைநடைத் தமிழுக்கும் காணமுடியும்

ஆக ஒவ்வொரு ஆக்கத்திற்கும் ஒரு எழுத்துக் கைச்சாத்து இருக்கிறது (மற்ற கைச்சாத்துக்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேசவில்லை.) இந்தக் கைச்சாத்து பாட்டின் பாடுபொருள், புலவரின் கற்பனை, யாப்பு, சொல்லவந்த கருத்து, புலவரின் எழுத்துநடை போன்று பலவற்றால் மாறும். எழுத்துக் கைச்சாத்தின் வேறன்மை (variability) சிறு காட்டாக இருக்கும் போது அதிகப்பட்டும், பெரும் காட்டாக அமையும் போது குறைந்துங் காணப்படும். பொதுவாகப் புள்ளியல் வழி கணிக்கப் படும் செய்திகளில், ஏற்றுக் கொள்ளப்படும் தரவுகள் கூடக்கூடத் தான் நம்பகமான கணிப்புக்கள் அமையும். அதாவது வெறுமே ஒரு புறப்பாட்டை வைத்துக் கணக்குப் போட்டால் வரும் புள்ளி விவரத்தைக் காட்டிலும், புறம் நானூறையும் கணிக்கும் புள்ளியியல் முடிவுகளின் நம்பகம் கூடியதாக இருக்கும். எட்டுத்தொகை எல்லாவற்றையும் சேர்த்துக் கணித்தது இன்னும் நம்பக் கூடியதாக அமையும். இன்னும் மேலே போய், சங்க இலக்கியம் முற்றிலுமாய்க் கணித்தது மேலும் நம்பக் கூடியதாய் அமையும். அப்படிக் கணிப்பதன் மூலமாய், ”தமிழ் நடை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ள? அல்லது மாறவில்லையா? எவையெவை இடைச்செருகல்கள்? எந்தெந்தப் பாடல்கள் ஒரேவிதமான தோற்றங் காட்டுகின்றன? அறிவியற் பூருவமாய் சங்கப் பாக்களை காலவரிசைப் படுத்தமுடியுமா? - என்றுபல கேள்விகளுக்கு விடைதரும் முகமாய்ப் பல்வேறு கோணங்களில் ஆய்வைச் செலுத்த முடியும். நண்பர்களே! முன்வாருங்கள். தமிழும் கணிமையும் ஒன்று சேரட்டும்.

இந்த எழுத்துப் பரம்பல் பற்றிய குறிப்பை அண்மையில் செம்மொழி மாநாடு/ இணைய மாநாட்டிற்கு வந்தபோது நண்பர்கள் நாக. இளங்கோவன், முத்து. நெடுமாறன், மணிவண்ணன், தெய்வசுந்தரம், பாலசுந்தரராமன்/ஈசுவர் சிரீதரன் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டேன். எல்லோருமே ”இக்கருத்தை மேலெடுத்துச் செல்லவேண்டும். தமிழிலக்கியவுலகில் புதுப்பார்வையை இக் கைச்சாத்துக் கணிப்புகள் கொண்டு தரலாம்” என்றே என்னிடம் உரைத்தார். தமிழ்க்கணிமையின் பயன்பாடு புதுப் பார்வைகளைக் கொண்டு தரட்டும்.

இங்கு எழுதியது மற்றோருக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காக.

அன்புடன்,
இராம.கி.

5 comments:

அரிசிற்கிழார் said...

உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்றிருக்கல்லவா? எமக்குக் கிடைத்த ஓலைச்சுவடிகள் பெரும்பாலும் உலகவழக்கில் எழுதப்பட்டவையல்லோ? இவ்விருவகையிலும் எழுத்துப்பரவல் வேறுபட வாய்ப்புள்ளதே? மேலும், புணர்ச்சியில் மெய் தவிர்த்து எழுதும் வழக்கு எல்லாரிடமும் உள்ளதாக தெரியவில்லை.

தமிழ் எழுத்துக்களை சீர்குலைக்கவேண்டிய அவசியமில்லை. அவ்வாறு ஒன்று நடைபெற இருப்பின் அது தமிழை அழிக்கும் நோக்குடன் தமிழ் எதிரிகளால் நடாத்தப்படும் செய்கையாகும்.


நிற்க, தமிழ் கிரந்த எழுத்துக்களின் சாயல் தமிழ் எண்கள், தமிழ்க் கால அளவுக் குறியீடுகள்போல் உள்ளதன் காரணம் என்ன?

அரிசிற்கிழார் said...

தொடர்ந்து...

சொற்களின் நீட்சிக்கு ஏற்ப எழுத்துப் பரவல் வேறுபட வாய்ப்புள்ளது. ஓரெழுத்து சொற்களிலிருந்து ஐந்தெழுத்துக்கு மேற்பட்ட சொற்கள்வரை எழுத்துப் பரவல் ஒன்றுக்குமேற்பட்ட தடவையும் வரும், ஒருதடவைகூட வராமலும் போகமுடியும்.

சரியான முறையில் கணிக்கப்படின், இந்த எழுத்துப்பரவல் பயன்பாடு கணிக் குயவுப்பலகை(keyboard) வடிவமைப்பில் பேருதவியாக அமையும்.

அரிசிற்கிழார் said...

இறுதியாக,

தமிழ் எழுத்துக்களை சீரமைப்பதாகக்கூறி சீர்குலைக்கும் கும்பல், தமிழ் எண்களை காப்பாற்றலாமே? வழக்கொழிந்த நிலையில் உள்ள தமிழ் எண்களின் மேலைநாட்டுச் 'சீரமைப்பு' வடிவங்களான 'இந்தோ-அரேபிய' எண்களை தமிழ் இனம் ஆமோதிக்கின்றதா? ஏற்றுக்கொள்கிறதா?

தமிழ் எண்கள் வழக்கொழிந்ததால் நாம் பல கணக்கு நூல்களை இழந்துவிட்டோமே! தமிழ் எண்கள் இல்லாமல் தமிழ் கணிமை எங்கனம் வளரப்போகின்றது?

அரிசிற்கிழார் said...

நண்பரே, கயல்மீன் என்பது யாது? இதன் ஆங்கிலப் பெயர் அறிவீரோ? இது நன்னீர் மீனா? கடல்மீனா? நன்றி.

கா. said...

நிரம்பல் என்ற சொல் நிரம்பி உள்ளதை குறிக்கும், நிரம்பலாக என்றெல்லாம் கேட்டுள்ளேன். பரம்பல் என்ற சொல் புதிதா?