ஒருமுறை நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் ”நாரணன்” என்ற சொல்லின் சொற்பிறப்பு பற்றிக் கேட்டிருந்தார். உடனடியாக அவருக்கு மறுமொழிக்க இயலாது போனது. வேறொரு நண்பர் கேட்டுக் கொண்ட வேலையில் சில நாட்கள் ஆழ்ந்து போனதாலும், என் “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை முடிக்கும் முயற்சிகளில் இருந்ததாலும், 108 திருப்பதிகளைக் காணும் விழைவின் பகுதியாய் மலைநாட்டு 13 பதிகளைக் காண ஒருவாரம் சேரலம் சென்றதிலும் காலம் கழிந்து போயிற்று. பின்னால் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.
---------------------------
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரணப் பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.
என்ற நாச்சியார் திருமொழி. 6.1 ஆம் பாடலைக் கண்டு மயங்காதார் மிகக் குறைவு. அதே பொழுது, ”வாரணம்” என்ற சொல்லை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டவரும் மிகக் குறைவு. ”யானை, பன்றி, தடை, மறைப்பு, கவசம், சட்டை, காப்பு, கேடகம், நீங்குகை, உன்மத்தம், கோழி, உறையூர்” போன்று அகராதியிற் சொல்லியிருக்கும் எந்தப் பொருளும் இங்கு சரிவராது. ”வரி வரியாய்க் கிளர்ந்தெழும் வரிச்சங்கை இங்கு முன்னே கொண்டுவந்து பொருள் சொன்னால் தான் சரிவரும். நம் அகரமுதலிகள் ”சங்கத்தையும்” வாரணத்திற்குப் பொருளாய்ச் சொல்லுகின்றன. ஆனாலும் தென்பாண்டித் தமிழ்மரபு, பழக்கவழக்கம் தெரியாதோர், சங்கென்ற பொருளுக்குச் சட்டென வரவும் மாட்டார்.
பாட்டு, மாப்பிள்ளை அழைப்பு பற்றிச் சொல்கிறது. நாரண நம்பி மெதுவாய் அசைந்து மணமண்டபம் நோக்கி நடந்து வருகிறான். தென்பாண்டி நாட்டில், இந்த அழைப்பில் சங்கு முழங்கி ஊரைக் கூட்டி, சுற்றம் சூழ, எல்லோரும் போய், மாப்பிள்ளையை அம்பலத்தில் இருந்து மண்டபத்திற்கு அழைத்து வருவார். இன்றுங்கூடச் சங்கொலியில்லாமல் எங்களூர்ப் பக்கம் மாப்பிள்ளை அழைக்கும் மரபில்லை. மாப்பிள்ளை மணமண்டபத்திற்கு வரும்போது, ஆங்காங்கு சங்கொலி கேட்கவேண்டும். அதைக்கேட்டு, அவர் வரும் பாதையின் முக்கு, முனங்குகளில் ஊர்மக்கள், குறிப்பாகப் பெண் மக்கள், திரண்டுவந்து மாப்பிள்ளை பார்க்கக் கூடுவர். அந்த இடங்களில் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். பெண்மக்கள் பூரண கும்ப ”மரியாதை” [கும்பம் + தேங்காய், பனம்பாளை அல்லது தென்னம் பாளை] செய்வதும், ஆலத்தி எடுப்பதும் [குங்கும நிறத்தில் ஆலத்தி கரைத்து வைத்திருப்பதும் ஒரு கலை.] ஆங்காங்கு இருக்கும் முறை. [இன்றைக்குத் தென்பாண்டியில் தேர்தலுக்கு வரும் தலைவருக்கெல்லாம் பூரண கும்பமும், ஆலத்தியும் சங்கொலியோடு சக்கை போடுகிறது.]
”நம்மூர்ப் பெண்ணுக்கு இவன் ஏற்றவனா?” என்று தெரிய வேண்டாமா? பெண்வீட்டுக்காரரும் ஊராரிடம், “பார்த்துக்குங்கப்பா, எங்க வீட்டு மாப்பிள்ளை இவர்தான், எங்கபெண்ணு நல்ல இடத்துலே தான் வாக்கப் படுறா!” என்று சொல்லாமற் சொல்ல வேண்டாமா? அதற்கு ஒரேவழி இந்தச் சங்கொலி தான். நாகசுரம், மேளம் - அது இதெல்லாம் அப்புறம் வந்தது. முதலில் அறதப் பழங்காலத்திற் சங்கே பயன்பட்டது. [இக்காலத்தில் band - உம், வேட்டும் கூடச் சில இடங்களிற் சேர்ந்து கொள்கிறது.] சங்கொலி மங்கலமானது என்ற நம்பிக்கை தென்பாண்டி நாட்டில் மிகுதியாய் உண்டு. சங்கும் முத்தும் குளித்தெடுத்தவர் சங்கொலியைப் பெரிதாய்க் கருதத் தானே செய்வார்? எத்தனை முறை வெண்சங்கம் நாலாயிரப் பனுவலில் பேசப்படுகிறது? இங்கே ஆயிரம் சங்கொலி சூழ, மாப்பிள்ளை எழில்நடை போட்டு நடந்து வருகிறாராம்.(”நம்ம பொண்ணுக்கு இருக்குற ஆசையைப் பார்த்தீங்களா? ஒரு சங்கொலி இவளுக்குப் பத்தாதாம், ஆயிரஞ் சங்கு சுற்றி வந்தாப்புலெ ஒலிக்க, இவ ஆளு ”ராசா” கணக்கா நடந்து வரோணுமாம்.”) அப்படி வருபவரை வீதி நெடுகிலும் தோரணங் கட்டி, பூரணப் பொற்குடம் வைத்து பெண்மக்கள் எதிர்கொள்வதாய்க் கனாக் காண்கிறாளாம். ஆகத் தென்பாண்டிப் பெண் அவளுக்குத் தெரிந்தமாதிரிக் கனவு காண்கிறாள். வட்டாரப் பண்பாடு இப்பாட்டில் தூக்கிநிற்கிறது. இதை உணராமல், வெறும் எந்திரத்தனமாக, பல உரைகளில் ”ஆயிரம் யானைகள் சூழவந்தன” என்று சொன்னதையே கூறிக்கொண்டு இருக்கிறார். ”மாப்பிள்ளை அழைப்பின் போது எந்த ஊரில், யானையைக் கொண்டு வருகிறார்?” என்று நானும் ஓர்ந்து பார்க்கிறேன். கொஞ்சமும் தெரியவில்லை. அப்புறம் என்ன முறையிலாக் கற்பனை? அதே பொழுது, சங்கொலி இல்லாமல் மாப்பிள்ளை அழைப்பு இன்றும் தென்பாண்டிநாட்டில் இல்லை.
”வாரணம்” என்ற ஒரு சொல்லுக்கே இப்படிப் பல உரைகாரர் தடுமாறும் வேளையில், ”நாரண நம்பி” என்ற கூட்டுச்சொல்லுக்கு என்செய்வது? நாரணன் என்றசொல்லை 3 வகையில் அலசலாம். இதில் எது சரியென்று சொல்ல இதுவரை கிடைத்த தரவுகள் குறைவு தான். [நான் ஆன்மீகத் தரவுகளைச் சொல்லவில்லை. ஆன்மீக விளக்கங்கள் கால காலத்திற்கும் வந்து கொண்டே இருக்கும். அவை நம்பிக்கையின் பால் வருபவை.] இற்றை நிலையில் “இதுவே சொற்பிறப்பு வழி” என்று அழுத்தந் திருத்தமாய்ச் சொல்ல முடியவில்லை. ஆய்வுகள் தொடரவேண்டும். மேற்சொன்ன 3 வகைகளைக் கீழே கொடுத்துள்ளேன்.
1. நரனானவன் நாரணன். ஒலியெழுப்பைக் குறிக்கும் நரலெனும் வினை, தமிழ்ச்சொல்லே. நாரயணனெனும் வடசொல் இதில் பிறந்திருக்கலாம். ஆகுதல்/ஆயுதல் வழி ஆயுதல்> ஆயன் என்ற பெயர்ச்சொல் பிறக்கும். இனி, நார ஆயன் = நாராயன்>நாராயண் என்று ஆகும். வடமொழிக்குப் போன சொற்களை மீண்டும் தமிழ் திருப்பி வாங்கும் போது இன்னொரு விகுதி சேர்ப்பது நடந்துள்ளது. பெருமான்>பெருமன்>ப்ரம்மன்>ப்ராம்மன்> ப்ராம்மண்>ப்ராம்மணன் என்பது போல், நாராயன்> நாராயண்> நாராயணன் ஆகும். இதுபற்றி 9 ஆண்டுகளுக்கு முன் 2000 ஆண்டில் ஆகத்து மாதம் 24 ஆம் தேதி, அகத்தியர் குழுமத்தில் “நாரி” என்ற சொல்லைப் பற்றிக் கீழுள்ளது போல் எழுதினேன்.
----------------------------
From poo@... Thu Aug 24 06:36:13 2000
To: agathiyar@egroups.com
Subject: Re: [agathiyar] Re: was (family portal need your help) Naari
At 04:52 AM 8/24/00 +0000, you wrote:
>வாசன்,
>
>நாரி என்பது இந்திய மொழியைச் சேர்ந்ததுதான் (அது என்ன "இந்திய மொழி" என்று என்னிடம் கேட்காதீர்கள்)
வேர் மட்டும் தமிழ்; விளைவு பாகத மொழிகள் எல்லாவற்றிலுமே இருக்கிறது.
நரலுதல் - ஒலி எழுப்புதல்
நரல்வது - ஒலியெழுப்புவது. (நர நர எனப் பல்லைக் கடித்தான்)
நரலை - ஒலி; ஒலி எழுப்பும் கடல்
நரற்றுதல் - ஒலி எழுப்புதல்
நருமுதல் - பல்லால் கடித்தல்
நாராசம் - கேட்க முடியாத கொடுமையான ஒலி
நரி - ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு
நரலும் குரங்கு அதாவது 'நரன்' - மனிதன்
நரசிங்கன் - மனிதனும் சிங்கமும் சேர்ந்த தோற்றம் உள்ளவன்
நாரணன் - மனிதனாய் தோற்றரவு (அவதாரம்) எடுத்த திருமால் (நரன் ஆனவன் நாரணன்); இதை வடமொழியில் நீட்டி நாராயணன் என்றும் சொல்லுவதுண்டு.
நாரணி - நாரணனின் தங்கை
நாரி/நாரிகை - மனிதனின் பெண்பால் (சொல் அமைப்பு பாகத மொழிகளின் அமைப்பின் படி இருக்கிறது) இப்படிப் பட்ட சொற்கள் எல்லாம் அடிப்படையில் தமிழாய் இருந்து வடமொழிப் படி வழக்கிற்கு வந்தவை.
நாரதன் - இசை எழுப்புவன் (தொன்மங்களில் வரும் நாரதர் மட்டுமல்ல; சங்க இலக்கியங்களில் இசைக்கருவிகளோடு வரும் பாணர்களுக்கான வடமொழிப் பதமும் கூட)
நரம்பு - வில்லில் கட்டிய, ஓசை எழுப்பும், நாண்
நார் - ஒலி எழுப்பும் நாண்; (இதிலிருந்து எல்லாவித இயற்கை, செயற்கையான கயிற்றிழைகளுக்கு எல்லாம் பயன்படத் தொடங்கியது)
நருமதை - ஓவென்று பேரிரைச்சல் போட்டுக் கொண்டு வேகமாக ஓடும் ஆறு. இதை மட்டுமே பண்டைக் காலத்தில் ஆண்யாறு என்று சொல்வதுண்டு. இதன் வேகமும், நீரின் அளவும் அவ்வளவு பெரியதாம்.
இப்படி 'நர' என்னும் அடியை ஒட்டிய பல சொற்கள் தமிழில் இருக்கின்றன.
எல்லாவற்றையும் வட மொழிக்கண் கொண்டே பார்த்தால் எப்படி?
அன்புடன்,
இராம.கி.
----------------------
மேலே சொன்னது போல், எல்லா இடத்தும் நாரணனை ”நரன் ஆனவன்” என்று சொல்லமுடியாது. ஏனெனில் ஆண்டாளே தன் நாச்சியார் திருமொழி 2.1 இல், “நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா நரனே” என்றுசொல்லி நாராயணன், நரன் என்ற பெயர்களை அடுத்தடுத்து இட்டு நாராயணனுக்கு இன்னொரு பொருள் தேடுவதை உணர்த்தியிருப்பாள். ஆனாலும் சிலர் ”நரன் ஆனவன் நாரணன்” என்பதை வலிந்து ஏற்படுத்திக் கொண்டு,
“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும் பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடு உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்
என்ற பெரிய திருமொழியில் நாராயண மந்திரத்திற்கு, “நாரங்களுக்கு அயனமாய் இருப்பவன், நாரங்களை தனக்கு இருப்பிடமாய்க் கொண்டவன். நாரம் = ஜீவான்மாவின் கூட்டம்” என்று ஆன்மீக விளக்கஞ் சொல்வார். [நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் விளக்கவுரையும் மூன்றாம் தொகுதி 948 ஆம் பாட்டு, பக் 1304. டாக்டர் இரா.வ. கமலக் கண்ணன், வர்த்தமானன் பதிப்பகம். பல்வேறு உரைகாரரும் இதுபோலச் சொல்லி யிருக்கிறார்.] ஜீவான்மா என்ற பொருள்நீட்சி எப்படி ஏற்பட்டது? - என்று நமக்கு விளங்க வில்லை. தமிழ், சங்கதம் இரண்டிலும் நரன் என்பது மாந்தனைக் குறிக்கிறதே அன்றி, உய்வு (=ஜீவ) ஆன்மாவைக் குறிப்பதாய் எந்த அகரமுதலியிலும் கண்டதில்லை. குட்டிக்கரணம் போட்டாலும், பொருளைச் சவ்வாய் இழுத்தாலும், நாரம் என்பது உய்வான்மாவைக் குறிக்குமோ? அறியேன். [நரன் ஆன்மா உய்வான்மாவாய் இருக்கலாம். ஆனால் எல்லா உய்வான்மாவும் நரன் ஆன்மாவோ? அன்றி, நரன் தவிர்த்த பிற பிறப்புக்களுக்கு உய்வான்மாவே கிடையாதா? இது ஏரணப்பிழை அல்லவா? விண்ணவப் புரிதலின்படியும் இது தவறல்லவா? இப்படிச் சில ஆன்மீக விளக்கங்கள் நாம் எண்ணுவதையும் மீறும்போது, கைவிரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.]
2. இரண்டாம் முறையில் நாளன்>நாரன்>நாரனன்>நாரணன் என்று கருமையைக் கரணியம் காட்டிப் பொருள் சொல்வர். நண்பர் நாக.கணேசன் பல இடங்களிலும் இதுபோல் சொல்லியுள்ளார். [அவர் பெயரையும் நாள் நாரணன் என்பதையும் சேர்த்துக் கூகுளில் இழுத்துப் பார்த்தால், அவர் கூறியது கிட்டும். நல்>நள்>நாள் = இரவு, கருமை என்ற பொருள்களுண்டு. திருமாலின் பல பெயர்கள் கருமைநிறங் குறித்துவருவதால் இதையும் அப்படியே சொல்வார்.]
3. இந்த விளக்கம் நீரை அடிப்படையாக்கிச் சொல்லுவது. இவ்விளக்கமும் கருமைக் கருத்தில் உருவானதே. நீர் பற்றிய பல தமிழ்ச்சொற்களும் கருமையில் எழுந்தவை. யா எனும் கருமைக் கருத்து வேர்பற்றி சொல்லாய்வு அறிஞர் ப. அருளி ஒரு பொத்தகமே போட்டுள்ளார். [யா - விற்குப் பொருந்தற் கருத்தும், வினவற் கருத்தும் உண்டு. அந்த கருத்தெழுச்சிகளை நாம் இங்கு பார்க்காது, கருமைக் கருத்தை மட்டுமே பார்க்கிறோம்.]
அருளியாரின் ஆய்வு பலரும் படிக்கவேண்டியது. யா>ஞா>நா என்ற திரிவைப் பற்றியும் அதிற் பேசியிருப்பார். ”யா”வை நம்மில் சிலர் மூக்கொலி சேர்த்து ஞாகாரம், நாகாரமாய்ப் பலுக்குவர். [அத்திரிவை மொழியியல் அறிஞரின் கவனத்திற்கு முதலிற் கொண்டு வந்ததும் திரு.ப. அருளி தான்.] ஒரே சொற்பொருளில் யா, ஞா, நா என மூவரிசைச் சொற்களும், சிலவற்றில் இரு வரிசைகளும், சிலவற்றில் ஒருவரிசை மட்டும் பொதுவாய்ப் புழக்கத்தில் உள்ள இற்றைத் தமிழோடும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய தமிழிய மொழிகளையும், தமிழ்வட்டார வழக்குகளையும் பார்ப்பது நுணுகிய சொல்லுறவுகளைக் காட்டும். [காட்டு: நல் எனும் சொல்லடி இன்றும் தெலுங்கில் கருமையை உணர்த்தும். எரியும் விளக்கை ”நல்லா வை” என்று சிவகங்கைப் பக்கம் சொன்னால், ”விளக்கை அணை” என்று மங்கலமாய்ச் சொல்வதாகும். அதாவது “விளக்கைக் கருப்பாக்கு” என்று பொருள்.]
யா (=ஆச்சா மரம்), சாலம் (=யா), யானை, யாடு, யானம்>ஏனம், ஏனல், யாமம், நாள், நாம், யாந்தை>ஆந்தை, நாகம், நாவல், யாம்பு>ஆம்பி, யாம் = நீர், நீர், யாலம்>ஆலம் = நீர், யாம்>ஆம் = நீர், யாறு, நானம், யாமன்.யமன், யாயம்>ஆயம் = முகில், மறைவு, கமுக்கம், யாணம்> சாணம் ..... இப்படிப் பல சொற்களை அருளி அப்பொத்தகத்தில் காட்டுவார். அவர் பொத்தகத்தில் இருந்து இதற்கு முன்னும் பல செய்திகளை நான் என் முந்தையக் கட்டுரைகளில் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.]
ஆழநீர் கருப்பாய்த் தோற்றமளிக்கும். கடலில் 4,5 மீட்டர்கள் கீழே போனால், கதிரவன் ஒளிபுகாது இருள் சூழும். ஆழம்கூடிய பேராறு கருமைப் பொருளால் கங்கை யென்றாகும். [கல்ங்கை>கங்கை. இந்திய ஆற்றுப் பெயர் பலவும் தமிழ் மூலம் காட்டும். இதைச் சொன்னால் “ஓ, தமிழ்வெறியன்” என்று பலர் உரைக்கக் கூடும் :-). காலம் கெட்டுக்கிடக்கிறது. தமிழ் எழுந்துவிடக் கூடாது என்பதில் பலரும் கவனமாய் உள்ளார். தமிழர் தாம் விழிக்காது சோம்பல் உற்று உள்ளார். ] மெதுவாய்ப் போகும் ஆற்றில் பாசி, காளான், புதர் ஆகியவை ஆற்றுப்படுகையில் மண்டுவதால், இந்த ஆறு கருந்தோற்றம் காட்டிப் பெயர் கொள்ளும். கருநபெருநை> கண்ணபெருநை> க்ருஷ்ண பெண்ணை> க்ருஷ்ணா என்ற பெயர் இப்படி எழுந்ததே. [எல்லா ஆற்றுப் பெயரும் கருமை அடித்தளம் கொண்டவையல்ல. கருமைக்கு மேலாக வேறு நிறங்களில் விளைந்தவை வெள்ளாறு - வெள்குவதி - வேகவதி> வேகை> வைகை, (இன்னும் 2 வெள்ளாறுகளும், காஞ்சிக்கு அருகில் இன்னொரு வெள்கவதி> வேகவதியும் உண்டு.), சுள்ளியம் பேராறு - silver river - பெரியாறு, செம்பாறு - copper river - தாம்ப பெருநை, பொன்னாறு - gold river - பொன்னி ஆகியவை யாகும். பல்வண்ண ஆற்றுப்பெயர்கள் தெற்கே மட்டுமின்றி வடக்கிலும் உண்டு. அவற்றை அலசினால் தமிழின வரலாற்று மூலம் கிட்டும்.]
அதேபொழுது, யா>யார்>யாரு>யாறு>ஆறு எனும் பொதுச்சொல் கருமையில் எழுந்ததே. ஒரே தடத்தில் போவதால் தடம், வழி, நெறி என்ற வழிநிலைப் பொருள்கள் யாறு என்ற சொல்லுக்குப் பின்னால் எழுந்தன. ஆனாலும் முதல்நிலைப் பொருள் கருமையே. பின் எப்படி வெள்ளாறு போன்ற வண்ண ஆற்றுப் பெயர்கள் எழுந்தன என்று கேட்டால், கடலை எண்ணெய் போலத்தான் சொல்ல வேண்டியுள்ளது. எப்படி எள்ளில் இருந்து எள்நெய் தோன்றி அதன் விதப்புப் பொருள் மறைந்து எண்ணெய் எனும் பொதுமை ஏற்பட்டதோ, அதேபோல யாற்றின் விதப்பான கருமை அழிந்து ”நீரோட்டம்” எனும் பொதுமை மிஞ்சியது. பின்னால் வெள்ளை, வெள்ளி, செம்பு, பொன் எனும் நிறங்கள் ஆறுகளுக்குப் பெயரடைகளாய் மாறின. ஆனாலும் யார்>ஆர்>ஆறு என்பது நீர்ப்பொதுமையே குறித்தது. இது யார்>ஆர்>ஆல் என மேலும் திரிந்து நீரைக் குறிக்கும். யா>யால்> யாலம்>ஆலம் என்ற வளர்ச்சியும் பெறும்.
வெப்பநாடான நம்மூரில் காலங்கெட்டு திடீரென்று, வானத்தின் தலைகீழ் மாற்றத்தால் ஆலங்கட்டி மழை பொழிவதைப் பார்த்திருக்கிறீரா? அது என்ன ஆலங்கட்டி? வேறு ஒன்றுமில்லை நீர்க்கட்டி/பனிக்கட்டி இதை hailstone என்று ஆங்கிலத்திற் சொல்வார். [க.து. ஆலிகல், ம. ஆலிப்பழம், குட.ஆலிகய், பட ஆனிகல்லு. க. ஆலி, ஆணி, ஆரி, பட. ஆனிகல்லு; கோத. அரகசு; தெ.குரு. மால், குட ஆலி; து ஆலிகல்லு, குவி, ஆஜி, பர் ஏதிர், ஏயிர் - ஆகத் தமிழிய மொழிகளில் எல்லாம் பரவலாய் உள்ள சொல்.] சிறு சிறு கற்களைப்போல வானத்தில் இருந்து நீர்க்கட்டி மழை கொட்டுகிறது. விழுந்த வேகத்தில் தரைச் சூட்டில் ஆல் [ஆலம், ஆலங்கட்டி, ஆலி] உருகிக் கரைந்து போகிறது. [ஆலித் தண் மழை - ஐங்குறுநூறு 437; ஆலஞ்சேர் கழனி தேவா.2.81.7 என்ற காட்டுக்களை இங்கு ஓர்ந்து பாருங்கள்.] ஆகப் ice/பனிக்கட்டியைத் தெரியக் குளிர்நாட்டில் வாழத் தேவையில்லை. வெப்ப நாடாயினும் தெரிந்து வைத்து, இலக்கியத்தில் நாம் பதிந்திருக்கிறோம். ஆல், ஆலம், ஆலி என்ற சொற்கள் குளிர்நீரையும், பனிக்கட்டியையும் குறித்தவையே. ஆலம் பால் என்ற சொல்லும் ஆலங்கட்டி நீரைக் குறிக்கும். ஆலு என்ற சொல் நீர்க்குடத்தைக் குறிக்கும். ஆலிஞ்சரம் என்பது நீர்ச்சாடியைக் குறிக்கும்.
ஆலம் என்பதன் திரிவாய் ஆயம்/அயம் என்பதும் தமிழில் நீரைக் குறிக்கும். [அயம் திகழ் சிலம்பு - ஐங்குறுநூறு 264.2] O.E. is "ice," from P.Gmc. *isa- (cf. O.N. iss, O.Fris. is, Du. ijs, Ger. Eis), with no certain cognates beyond Gmc. ஆலி என்பது ice-யைக் குறிக்கச் சங்க நூலில் பயன்பட்ட சொல். இன்றோ எல்லாவற்றிற்கும் பனி என்பதையே வைத்து dew, ice இவற்றிற்கு வேறுபாடு காட்டத் தெரியாமற் சுற்றிவந்து இந்த்க் காலம் கிளித்தட்டு ஆடிக் கொண்டிருக்கிறோம். ஆலிக் குழைவு = ice cream. என்று நாம் சொல்லக் கூடாதா? பனிக் காற்றும் ஆலி மழையும் வெவ்வேறு ஆனவை. ஆலி எனும் சொல் இக்கால அறிவியற் சிந்தனையைத் தமிழில் துல்லியமாய் விளக்கப் பயன்படும் சொல். ஆலி என்ற சொல் மீண்டும் புழக்கத்திற்கு வந்தால் நல்லது. (இது ஏதோ இராம.கி. படைத்ததல்ல. அப்படி எண்ணாதீர்கள்.)
”ஆலம்” என்பதற்கு கடல் பொருளுண்டு. (ம.ஆலம்) மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஆலமென்பார். ஆல் ஆற்றுதல்> ஆலாற்றுதல்> ஆலாத்துதல் = மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரை ஒரு தலைவரின் முன்வைத்து மேலும் கீழுமாய்ச் சுற்றும் தென்பாண்டி வழக்கம் சோழநாட்டிலும் இருந்தது. ஆலிப் பொருள் நீண்டு கள்ளையும் குறிக்கும். ”தேனும் ஆலியும் தீமிசைச் சிந்தியே” என்ற தொடர்- கந்தபு. அசுரயாக. 71 - இல் வரும். புறம் 298 இன் ஆசிரியர் பெயரை ஆவியாரென ஒரு பாடமும், ஆலியாரென இன்னொரு பாடமும் உள்ளதாய் ஔவை சு. துரைசாமியார் சொல்வார்.
எமக்கே கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணும் மன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் எயில் முற்றி
வாய்மடித்து உரறி நீ முந்தென் னானே!
எனும் கரந்தைப்பாட்டு அது. கள்பற்றிப் பேசி அரசனுக்கும் போர்வீரனுக்கும் இடையே இருக்கும் அக்கறையைப் புலவர் இங்கு பேசுவார். ஒருவேளை ஆலியார் என்ற பாடம் கள்ளை வைத்துப் பாடியதால் எழுந்ததோ, என்னவோ?
யாலி>யாளி>ஞாளி>நாளி என்ற வளர்ச்சியிலும் கள் என்ற பொருள் யாழ் அகராதியில் சொல்லப்பெறும். கள் எனும் பொருளில் ”ஞாளி” எனும் சொல்லை பிங்கல நிகண்டு பதிவுசெய்யும். திசைகள் எனும் என் கட்டுரைத் தொடரின் 4 ஆம் பகுதியில் தென்னை பற்றிச் சொல்லியிருப்பேன். பனை நம்மூர் மரம். தென்னை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இறக்குமதியான மரம். பனையில் பனங்கள் போலவே, தென்னையிலும் கள்ளிறக்க முடியும். பனங்கள் சற்று கடுக்கும்; தென்னங்கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெலாம் வெறியக் காடி - acetic acid பண்ணும் வேலை. தெல் = கள் என்பதால், தெல்ங்கு மரம் தெங்கு மரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. ”கள்மரம் எனும் குறிப்பே, தென்னை நம்மிடம் இயல்பாய் எழுந்ததல்ல; இறக்குமதியான மரம்” என்று உணர்த்திவிடும். தெல்லிற்கு மாற்றாய் நாளியைப் பயன்படுத்தி நாளிகேரம் என்ற சொல்லை மலையாளத்தில் பயிலும். கள்ளேறும் மரம் நாளிகேறம்>நாளிகேரம். இது நம் தேவாரத்திலும் பயின்றிருக்கிறது. “வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளை” தேவா. 106.5. நாளிகேளம், நாரிகேளம் என்றெல்லாம் விதம் விதமாய் இச்சொல் பலுக்கப் படும். ஆலியெனுஞ் சொல் எப்படியெல்லாம் திரிந்திருக்கிறது என்று பாருங்கள்.
நாலாயிரப் பனுவலில் ஆலிலை, ஆல், ஆலி என்பதை ”ஏழுலகமும் தன்னுள் அடக்கி ஆலிலைமேற் படுத்த கதையாய்” உரைகாரர் சொல்வார். [ஆலிலைக் கதைபற்றிய காட்டுக்கள் நாலாயிரப்பனுவலில் பரந்தன. அவை சொல்லி மாளாது.] அப்படிக் கருப்புவெளுப்பாய்ப் பலவிடத்தும் சொல்லலாமெனினும் எல்லாவிடத்தும் முடியாதென்பது என் துணிபு. அதோடு ஆலிலையே நீர்ப் பரப்பைக் குறிக்கும் உருவகமென்ற ஓர்மையும் உண்டு. ஏனெனில் உலகம் அழிந்த பின் ஆல இலை ஏது? அதோடு, பாற்கடல், பால்வழி மண்டலத்தைக் (milky way) குறிக்கும் குறியீடு எனில், ஆலி அப் பால்வழியைக் குறிக்காதோ? ஆகாச கங்கை கூட பால்வழியையே குறிப்பிடுகிறது என்பார். பாற்கடலை ஆலி என்பதும், பாற்கடலில் இறைவன் பள்ளிகொண்ட இடம் ஆலிநகர் என்பதும் இன்னொரு வகை உருவகமாகும்.
அடுத்து, திருமங்கையாழ்வார் பிறந்த ஊர் பழஞ்சோழநாட்டின் சிறுபிரிவான ஆலிநாட்டைச் சேர்ந்தது. அது என்ன ஆலி நாடு? வேறொன்றும் இல்லை தண் நீர் சூழ்ந்த புனல் நாடு. காவிரி கடலைச் சேர்வதற்கு 50, 60 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) முன்னே அதில் கிளையாறுகள் தோன்றிவிடும். ”காவிரிச் சமவெளி” என்கிறாரே, அப்புலம் இக்கிளையாறுகளால் தோன்றியது. கிளை யாறுகளில் இருந்து கால்வாய் வெட்டி வயலுக்கு நீர் கொண்டு போயிருப்பார். சில இடங்களில் குளங்கள், ஏரிகள், புழைகள் இப்படிப் பல நீர்நிலைகள் மாந்த முயற்சியில் கூடிக்கிடக்கும் என்பதால் நீர்நாடாயிற்று. நீர்நாடு = ஆலிநாடு.
ஆலிக்கு கலப்பைப் பொருளுமுண்டு. அதைக் குறிக்கும் பெயர் திருநாங்கூர். (நாங்கின் இன்னொரு திரிவு நாஞ்சு>நாஞ்சில். குமரி மாவட்டத்திலுள்ள பெயர்.) திருமங்கையாரின் சொந்த ஊருக்கருகில் திருநாங்கூர் இருந்ததால், அதைச்சுற்றி அவர் பெரிதும் பாடியுள்ளார். திருவாலி/திருநகரியில் அருள் பாலிப்பவன் திருவாலியம்மான். அங்கவன் கோலம் வீற்றது திருக்கோலம். திருநகரி, திருமங்கையார் பிறந்தவூர். (நாங்கூருக்கருகில் திருவெள்ளக்குளம் திருமங்கையாரின் மனைவி குமுதவல்லி தோன்றிய ஊர்.) திருவாலிநாடர் என்றபெயரும் திருமங்கையார்க்குண்டு. ”அணியாலி, திருவாலி, தென்னாலி, வயலாலி, புனலாலி, எழிலாலி” என்றெலாம் விதம் விதமாய் வண்ணிப்பார். முன்சொன்ன பாற்கடலின் ஆலிநகரும், ஆலிநாட்டு ஆலிநகரும் பிணைந்து கிடக்கும் பாசுரங்கள் பலவுண்டு. காட்டாக ஒன்றைக் கீழே கொடுக்கிறேன்.
நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததது போல்
வேலைத் தலைக்கிடந்தாய் அடியேன் மனத்திருந்தாய்
சோலைத் தலைக்கண மாமயில் நடமாட மழைமுகில் போன்றெழுந்து எங்கும்
ஆலைப்புகை கமழும் அணியாலியம்மானே! பெரிய திருமொழி 3.5.2
இங்கே முதலிரண்டு வரிகளில் பாற்கடலும், பின்னிரு வரிகளில் திருவாலியும் பேசப்பெறும். “ஆலின் மேலால் அமர்ந்தான்” என்ற தொடருக்குப் பொருளாய், திவ். திருவாய். 9.10.1 க்கான ஆல் = நீர் என்ற பொருளை ஈடு உரை சொல்லும். இன்னும் 2 பாட்டுக்கள் பெருமாள் திருமொழியில் வரும்.
“ஆலியா அழையா அரங்கா என்று
மாலெழுந்தொழிந்தேன் என்றன் மாலுக்கே - பெருமாள் திருமொழி..3.2
அது என்ன ஆலியா? ஆலியன் = கூத்தாடி என உரைகாரர் சொல்வார். ஆனால் எந்த அகரமுதலியிலும் அப் பொருளை நான் காணவில்லை. ஆனால் ஆலி = கடல் உண்டு. இது பாற்கடலோனைக் குறிக்கலாம். திருவாலியம்மானையும் குறிக்கலாம். இன்னொரு பெருமாள் திருமொழியில் ஆலிலையும் பேசப்பெற்று, ஆலிநகர்க்கு அதிபதியே எனப் பிரித்தும் பேசப் பெறும்.
ஆலினிலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியைக் கொன்று அரசு இளைய வாணத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கு அதிபதியே! அயோத்திமனே! தாலேலோ - பெரு.8.7.
மேலே இவ்வளவு ஆழமாய் ஆலி, ஆலத்தைப் பார்த்ததற்குக் கரணியம் உண்டு. ஏனெனில் ரகர/லகரப் போலியில் ஆலம் ஆரத்தையும் குறிக்கும். இனி யாரம்>ஞாரம்>நாரம் எனும் திரிவைப் பார்ப்போம்.
யார்>யாரு>யாறு>ஆறு, யார்>ஆர்>ஆரு>ஆறு என்ற விளக்கத்தில் நீரோட்டம் பற்றி முன்னே பார்த்தோம். யார்>யாரம் என்பது கூட இன்னொரு இயலுமை தான். யாரத்தின் யகரம் நீத்த ஒலிப்பு ஆரம் ஆகும். ஆரம் என்பது கண்ணிலிருந்து வீழும் நீர்த்துளி என்ற பொருள் அகர முதலிகளில் உண்டு. அடுத்து சிப்பிகளின் நீர்த்துளியாய்த் தொடங்கிச் சுண்ணாம்பு சேரச் சேர உருவாகும் முத்து, ஆரம் எனப்பெறும். ஆரம் எனும் முத்திற்கு நீர்த்துளித் தொடர்பு இருப்பதாகவே சொற்பிறப்பு அகரமுதலி சொல்லுகிறது. ஆனால் ஞாரத்தை அகரமுதலிகளில் நான் காணவில்லை. நீர்ப்பொருளில் நாரம் உண்டு. “நார நின்றன போல் தோன்றி” என்ற கம்பரா. நட்பு .31 மேற்கோளும் உண்டு. நாரத்தை உள்ளிருத்திக் கொண்டது மேகம். அது நாரதம் எனும் இருபிறப்பிச் சொல்லால் சுட்டப்படுகிறது. (நாரதன் என்கிற பெயரும் இதன் தொடர்பே.) நாரநிதி என்ற சொல் நீர்மலையாகிய கடல் என்ற பொருளை உணர்த்தும். நாரன் = நீரைச் சேர்ந்தவன். நாரணன் = நீரோடு சேர்ந்தவன். நாராயணன் = நீரை இடமாகக் கொண்ட திருமால்.
அடுத்து ஒரு குழூஉக் குறிச்சொல்லாகத் தண்ணீர் விட்டான் கிழங்கிற்கு நாராயணி என்ற பெயர் உண்டு. இதைச் சதாமூலிக் கிழங்கு என்றும் சொல்வார் [Asparagus racemosus என்பது புதலியற் பெயர்.] இது தாறுமாறாகக் கொடிவிட்டுப் படரும் பூண்டுவகையைச் சேர்ந்தது. பித்தநோயைத் தீர்ப்பதற்குத் தண்ணீர் விட்டான் கிழங்கு கைகண்ட மருந்தாகும். இக்கிழங்கு நீளமாகவும் வெண்ணிறமாகவும், சதைப்பற்று மிக்கதாயும் இருக்கும். அம்மைநோய் அகல, இக்கிழங்கினைத் தண்ணீரில் ஊறவைத்துத் துகள் ஆக்கிப் பாலிற்கலந்து பருகுவர். நீரிழிவு, எலும்புருக்கி, கவட்டைச் சூடு, மிகுசளி முதலான அனைத்து நோய்களையும் போக்கி இக்கிழங்கு ஆண்மை பெருக்கும் என்று சாம்பசிவ மருத்துவ அகரமுதலி கூறும் - செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி நான்காம் மடலம் முதற் பாகம்] நீர்க்கிழங்கு நாராயணியானது ஒரு முகன்மைக்குறிப்புத் தானே?
சிவனும் மாலும் ஒருவருக்கொருவர் எதிர்மறை என்று எண்ணிப் பார்த்தால் ஒருவர் நெருப்பு, இன்னொருவர் நீர் என்பதும், ஒருவர் சிவப்பு, இன்னொருவர் கருப்பு என்பதும், இது போன்ற பல்வேறு உருவகங்களும் நாரம் = நீர் என்ற பொருளை நாம் ஏற்க வைக்கின்றன. இப்போதைக்குக் கிடைத்திருக்கும் தரவுகளின் பேரில் நாரன்>நாரணன் (= நீரில் உறைபவன்)தமிழ்ச்சொல் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் முற்றிலும் முடிவு செய்யும் சான்றுக்கு (clinching evidence) நான் காத்திருப்பேன்.