Monday, June 22, 2009

பழந்தமிழர் நீட்டளவை - 2,

பழந்தமிழர் நீட்டளவையில் முதலில் வருவது விரல்.

விரிக்கும் செய்கையிற் பிறந்த சொல் விரல். கையில் மடங்கிக் கூடுவதும், பின் எதிரிடையாய் விரிந்து அகல்வதும், விரல்கள் தானே? விரல்கள் இன்றேல், பொருள்களைப் பற்றுவது ஏது? பிடிப்பது ஏது? கவ்வுவது ஏது? கவவுவது ஏது? கவர்வது ஏது? கவிப்பது ஏது? கட்டுவது ஏது?

கள் என்னும் வேருக்குக் கூடுதல், கட்டுதல், பற்றுதல், பிடித்தல் எனப் பல பொருள்கள் உண்டு. கள்ளுதல் வினையிற் பிறந்தது கை என்பார்கள். ளகர-யகரத் திரிவில், கள்>கய்>கெய்>கை என்பது பிறக்கும். [கள்>கய்>கயில்>கயிர்>கயிறு என்பதும் கட்டுதற் பொருளிற் பிறந்தது தான்.] இன்னொரு விதமாய்ப் பார்த்தால் கள்>கள்வு>கள்வுதல்>கவ்வுதல் என்ற திரிவில் பற்றுதற் பொருள் பெறப்படும். வகர, யகர உடம்படு மெய்கள் மாறியும், ஒரே பொருள் காட்டும் சொற்கள் தமிழிற் பல. ”அவ்வை/அய்யை, கோவில்/கோயில், செய்/செவ் ஆகியவை வகர-யகரப் போலியிலும் ஒரே பொருள் காட்டுவது போல், கவ்வும் கய்>கையும் கூட ஒன்றே போற் பிறந்தவையோ என்ற ஓர்மை எழும். . .

கவ்வுதலில் இருந்து பிறந்த கவை என்ற சொல்லும் கூட fork என்னும் பொருளை அழுத்தமாய் உணர்த்தும். நான்கு விரல்கள், ஒரு பெருவிரல், ஓர் உள்ளங்கை சேர்ந்தது தானே கை எனும் உறுப்பு? ஒரு மரத்தில் கிளைகளும், அவை கணுக்கிய (connected) இடத்தின் அடிக்கொம்புமாய்ச் சேர்ந்து fork - யை உணர்த்துவது போன்றே, உள்ளங்கையின் தொடர்ச்சியாய் கணுக்கையும், பின் முழங்கையும் சேர்ந்து விரல்களோடு fork - யை உணர்த்தும் அல்லவா? கவ்வில் பிறந்த சொற்கள் மிகப்பல. அவற்றைச் சாணின் சொற்பிறப்பைப் பார்க்கும் போது பேசலாம். இப்பொழுது விரலை ஆழ்ந்து பார்ப்போம்.

1 விரற்கிடை = 11/16 அங்குலம்
2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்
6 பெருவிரல் = 1 சாண் = 8 1/4 அங்குலம்
2 சாண் = 1 முழம் = 16 1/2 அங்குலம்
2 முழம் = 1 சிறு கோல் = 33 அங்குலம்
2 சிறுகோல் = 1 கோல் = 5.5 அடி.
4 சிறு கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி
8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு = 88 அடி
500 தண்டம் = 1 கூப்பிடு தூரம் = 1 மைல் 220 அடி = 1.675 கி.மீ
4 கூப்பிடு தூரம் = 1 காதம் = 4 மைல் 1 பர்லாங் 220 அடி = 6.7 கி.மீ
4 காதம் = 1 யோசனை = 16 மைல் 5 பர்லாங் 220 அtடி = 26.82 கி.மீ

மேலுள்ள அளவுகளில், பெருவிரல் என்பது பெருவிரல் நுனியில் இருந்து அதன் முதல் மடிப்பு வரையுள்ள கணு நீளத்தைக் குறிக்கும். [இருபது பேருக்குமேல் பெருவிரல் முதற்கணுவை அளந்து அதன் நிரவலைக் (average) கணக்கிட்டால், கிட்டத்தட்ட 1 3/8 அங்குலம் இருப்பதாகக் கொடுமுடியார் தன் நூலில் பதிவு செய்வார்.] பெருவிரல் தவிர்த்துக் கையின் மற்ற நான்கு விரல்களைச் சேர்த்த அகலத்தில் நாலில் ஒரு பங்கு விரற்கிடை எனப்படும். (பேச்சுவழக்கில் இது விரற்கடையாகும்.) இதை அங்குலி என்று வடமொழியிற் குறிப்பார்கள். அங்குலம் என்றும் குறித்திருக்கிறார்கள். காட்டு: குடிலரின் அர்த்த சாற்றம். இன்றைக்கு, அங்குலம் என்ற சொல்லிற்கு ஆங்கிலத் தாக்கத்தால் அளவு மாறிப் போன கரணியத்தால், பழைய வடசொல்லை அங்குலி என்றும், inch-ஐ அங்குலம் என்றும் இந்தக் கட்டுரையிற் பயில்கிறேன்.

இன்றைய அளவு முறையில் 1 விரற்கிடை என்பது 11/16 அங்குலம் ஆகும். இதை வடநாட்டிற் பலரும் 12/16 = 3/4 அங்குலம் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அந்தப் புரிதல் தவறானது. இந்தப் புரிதற் பிழை எப்பொழுது எழுந்தது என்று தெரியவில்லை. பல்வேறு நடைமுறைகளின் படி, 2 விரற்கிடை = 1 பெருவிரல் = 1 3/8 அங்குலம் என்பதே சரியாய்ப் பொருந்துகிறது. விரற்கிடை என்ற அளவீட்டைக் கொண்டு சாத்தார மாந்த உடம்பின் அளவையும் பழங்காலத்திற் குறித்துக் காட்டியிருக்கிறார்கள். காட்டாக, இசைக்குப் பிறப்பிடங் கூறும் பஞ்சமரபு 42 ஆம் பாவில்

துய்ய உடம்பளவு தொண்ணூற்றா(று) அங்குலியாய்
மெய்யெழுத்து நின்றியங்கு மெல்லத்தான் - வையத்து
இருபாலும் நாற்பதோ(டு) ஏழ்பாதி நீக்கிக்
கருவாகும் ஆதாரங் காண்

என்று வரும். அதாவது ஒரு சாத்தார மாந்தனின் உயரம் = 96 அங்குலி = 96 விரற்கிடை = 96*11/16 = 66” = 5 1/2 அடி. உடம்பில் மேலும், கீழுமாய் 47.5 விரற்கிடை விட்டு, நடுவில் இருக்கும் ஒரு விரற்கிடையில் மாந்த ஒலியாதாரம் கருக்கொண்டிருப்பதாய் தமிழர் எண்ணியிருக்கிறார்கள். இந்திய மாந்தனின் சாத்தார உயரம் கடந்த 2500 ஆண்டுகளில் 5 1/2 அடியாக இருந்திருக்கவே வாய்ப்புண்டு. [2007 இல், 20 அகவை கொண்ட, நாட்டுப்புறத்தில் உள்ள, சாத்தார இந்திய ஆணின் உயரம் 161.2 cm (5' 3.5") என்றும், சாத்தார இந்தியப் பெண்ணின் உயரம் 152.1 cm (4' 11.9") என்றே அளவிடப் பட்டிருக்கிறது. Venkaiah K, Damayanti K, Nayak MU, Vijayaraghavan K (November 2002). "Diet and nutritional status of rural adolescents in India". Eur J Clin Nutr 56 (11): 1119-25.] அதோடு, இந்தியத் தொன்மங்கள் ஆறடி மாந்தனை ஒரு பெரும் மாந்தனாகவே, குறிப்பிடுகின்றன. இந்த அடிப்படையாலேயே 1 விரற்கிடை என்பது 11/16 அங்குலம் என்றும், 3/4 அங்குலம் அல்ல என்றும் புரிந்து கொள்ளுகிறோம்.

[கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும், பல்வேறு பழைய ஆவணங்களிலும், விரற்கிடை, பெருவிரல் என்ற இரண்டையுமே சுருக்கமாய் விரல் என்று குறித்திருப்பதால், நமக்குப் புரிதற் குழப்பம் பல இடத்தும் ஏற்படலாம். எனவே இடம், பொருள், ஏவல் பார்த்து விரலை நாம் அடையாளங் கண்டு கொள்ளுவது நல்லது. இது போன்ற பொதுமைச் சொல்லாட்சிகள், அந்தக் கால ஆவணங்கள் எழுந்த இடங்களிலும், காலங்களிலும் இருந்தோருக்கு ”பெருவிரலா, விரற்கிடையா” என்று சரியான அடையாளத்தைப் புரிய வைத்திருக்கலாம் என்றாலும், இன்று படிக்கும் போது, வேறுபாடுகளைக் கவனமாய்ப் பார்க்க வேண்டும். அறிவியலில் துல்லியமான கலைச்சொற்களை நாடும் இந்தக் கால அழுத்தம் அந்தக் காலத்தில் இருந்ததில்லை. எல்லாச் சொல்லாட்சிகளும் இடம், பொருள், ஏவல் கருதியே எழுந்திருக்கின்றன. தவிர, அந்தக் காலத்தில் அறிவு/கலை என்பது எல்லோருக்கும் பொது என்றாகாமல், ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டுமே மறைத்து வைக்கப் பட்டது. இந்தக் கரவு நடைமுறையால், (secret practice) அளவீடுகளில் இருந்த வரையறைக் குழப்பங்கள் பல நூற்றாண்டுகள் தீராமலே இருந்தன.]

பல்வேறு ஆற்று நாகரிகங்களின் முகன்மைக்கூறுகளில் ஒன்று, அங்கு இருந்த கட்டுமானம் ஆகும். கட்டிடங்களுக்கான கட்டுபொருள்கள், இந்த நாகரிகங்களில், ஓரளவு கல்லாலும், பெருமளவு களிமண்ணைப் பிசைந்து அச்சில் வார்த்துச் சுட்டும், சுடாமலும் செய்த செங்கற்களாலுமே எழுப்பப் பட்டிருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகச் செங்கற்களின் அளவுகளும், விரல் என்னும் அளவீட்டை ஒட்டியே எழுந்திருக்கின்றன. காட்டாகச் செந்தரச் செங்கற்கள் 1:2:4 என்ற மேனியில் கிட்டத்தட்ட 2 பெருவிரல் உயரம், 4 பெருவிரல் அகலம், 8 பெருவிரல் ( = 1 சாண்) நீளத்தில் இருந்திருக்கின்றன. [standard brick 28cm X 14cm X 7cm The Indus Civlization - G.L.Possehl] ஆகப் பெருஞ் செங்கல் (largest brick) 50.75cm X 26.25cm X 8.75cm அதாவது 14.5 விரல் : 7.5 விரல் : 2.5 விரல் ஆகவும், ஆகச் சிறுஞ் செங்கல் (smallest brick) 23.75cm X 10.875cm X 5.00cm அதாவது கிட்டத் தட்ட 6.75 பெருவிரல் : 3 பெருவிரல் : 1.5 பெருவிரல் ஆகவும் இருந்திருக்கின்றன. இதே போலச் சிந்து சமவெளி தொடக்க காலச் செங்கற்கள் (early harappan bricks) 21cmX14cmX7cm (6 பெருவிரல் : 4 பெருவிரல் : 2 பெருவிரல்) ஆக இருந்திருக்கின்றன. [இன்றைக்கும், இந்தியச் செந்தரச் செங்கலின் பெயரிட்ட (nominal size) அளவு 2 2/3” x 4” x 8” ஆக, 1:2:4 என்ற மேனியில், கிட்டத்தட்டப் பேணப்படுவது ஒரு வியப்புத்தான்.]

இதேபோலப் பெரும்பாலான சிந்து வெளி முத்திரைகள் பெருவிரல் அளவீடுகளைப் பேணியிருப்பதை, ஆழ்ந்து நோக்கிற் காணமுடிகிறது. இந்த முத்திரைகள் கிட்டத்தட்ட 2 பெருவிரற் சதுரமாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றன. [6.85 cm X 6.85 cm (2 பெருவிரல் = 2.75 inch = 6.985 cms)] இன்னுஞ் சிறிய முத்திரைகள் 1.25 cm X 1.25 cm சதுரமாயும் உள்ளன. மாக்கல்லினால் (steatite) ஆன இந்த முத்திரைகள் முதலில் உருவாகும் போது, மிகவும் சொவ்வையாக (soft), கரடில்லாமல் (not hard) இருந்ததால், அவற்றில் அடையாளங்களைக் கீறி விளிம்புகளைத் தேய்த்து உருவாக்க முடிந்திருக்கிறது. வேண்டும் அளவிற்கு முத்திரைகளைத் தேய்த்தோ, கீறியோ, கரண்டியோ, நீள, அகலங்களையும், திண்ணத்தையும் (thickness) கொண்டு வந்திருக்கிறார்கள். பின் இந்த முத்திரைகளை நீண்டு புழங்கும் வகையில் செங்கற்சூளைகளில் போட்டுச் சூடேற்றியிருக்கிறார்கள். சூளையில் போடுமுன், இருந்த மாக்கல்லின் கரட்டுமை (hardness) மோ அலகில் (Moh's scale) 1 என்றால், சூளையிற் போட்டபின் அதன் கரட்டுமை 4 அலகிற்கு உயர்ந்திருக்கிறது. அப்படிக் கரட்டுமை உயர்ந்தபின், முத்திரைகளின் நீள, அகல, திண்ணங்கள் மாறுவதில்லை. முத்திரைகளை உருவாக்கும் பொழுது, மாக்கல் விளிம்புகள் சற்று தேய்பட்டுப் போயிருந்தாலும், அல்லது மாக்கற் துகளைத் தண்ணீரோடு சேர்த்துக் குழைத்து முத்திரைகளின் விளிம்புகளில் தடவிச் சரி பண்ணுவதால், மாக்கல் விளிம்பளவுகள் கூடியிருந்தாலும், இந்தக் கூடுதல்/குறைச்சல்கள் சூடாக்கியபின், அப்படியே நிலைத்துப் போகின்றன. எனவே முத்திரைகளின் அளவுகள் விரல் மடங்குகளைக் (multiples) காட்டிலும் சற்றுக் கூடவோ, குறையவோ ஆவதில் வியப்பு ஒன்றுமில்லை.

தொல்லியல் ஆய்வுகளின் மூலம், சிந்து சமவெளியின் நீட்டளவையும், பிற்கால இந்தியா (தமிழகத்தின்) நீட்டளவையும் பெரும்பாலும் ஒத்திருக்கிறது என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. இதே அளவைகள் பின்னால் தில்முன் (இன்றைய பகாரின்), மக்கான் (இன்றைய ஓமன்) ஆகிய பகுதிகளில் பரவியிருந்ததையும் தொல்லியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

இதே நீட்டளவுகள் வேத காலத்திலும் கூட இந்தியத் துணைக்கண்டத்தில் பயன்பட்டிருப்பதை ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் கி.மு.5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்வ சூத்திரங்கள் [சுல்>சுற்று>சுற்றம் என்ற தமிழ் வளர்ச்சியைப் போன்று, சுல்>சுல்வம் என்பது வடபுலச் சொல்வளர்ச்சி. சுல்வம் என்பது சுற்றியளக்கும் பட்டை = tape to measure perimeter என்ற பொருள் கொள்ளும்.] வேள்விக் குண்டம் அமைக்கும் முறைகளைச் சொல்லும் போது செங்கல்களை ”இட்டிகைகள்” என்ற சொல்லால் அழைக்கின்றன. இந்தச் சொல் திராவிடச் சொல்லெனவே பலரும் ஐயப் படுகிறார்கள். [The word for brick in vedic literature is ”istaka”. Though the controversy over the exact origin of the word is still going on, it may be rash for us to ignore outright the view of Przylusky and others who strongly argue that it is Dravidian in origin, though eventually borrowed by the vedic peoples' - Chattopadhyaya, Deviprasad, 1986, History of science and technology in Ancient India: The beginnings, Frima KLM pvt Ltd, Calcutta See also http://www.moderntamilworld.com/science/science_tamil.asp]

”இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென - அகம் 167: 13,
நாட்பலி மறந்த நரைக்கண் இட்டிகைப் புரிசை மூழ்கிய பொரியரை ஆலத்து - அகம் 287: 6-7

என்ற சான்றுகள் ”இட்டிகை”யைத் தமிழ்ச்சொல் என்று நிருவிக்கும். [இடுதல் = வார்த்தல். இட்டியது இட்டிகை. களிமண்ணை அச்சில் இட்டுப் பெறும் கற்கள்] தவிர வேள்விக் குண்டச் செந்தரச் செங்கற்களின் அளவீடுகள் அப்படியே தமிழ் அளவீடான பெருவிரல் மடக்கில் அமைவதும் நம்மை ஓர்ந்து பார்க்க வைக்கிறது. இட்டிகை என்ற சொல்லை வேதமொழி கடன் பெற்றிருப்பதால், இட்டிகை செய்யும் தொழிலும், அளவீடுகளும் முன்னிருந்தோரிடம் இருந்தே முல்லை நாகரிக வேதக்காரர் பெற்றிருக்க வாய்ப்புக்கள் அதிகம்.

விரற்கிடை ( = 11/16 அங்குலம்) என்னும் அளவு தமிழ் இசைக் கருவிகளிலும் பயின்றிருக்கிறது. காட்டாகத் தமிழிசையில், குழலில் இருந்தே சுர அளவு பெறப்படுவதாகச் சொல்லப் பெறுகிறது. பஞ்சமரபு - வாச்சிய மரபு - பிண்டவியலில் 27 ஆம் பாவில் குழலின் நீளம், சுற்றளவு ஆகியவை விரற்கிடை வாயிலாகவே சொல்லப் பெறுகின்றன.

சொல்லும் இதற்களவு நாலைந்தாம்; சுற்றளவு
நல்விரல்கள் நாலரையாம் நன்னுதலாய் - மெல்லத்
துளையளவு நெல்லரிசி தூம்பிடமாம் நல்ல
வளைவல வேவங்கி யம்

புல்லாங்குழல் என்பது பொதுவாய் மூங்கிலிற் செய்யப்படுவது. இங்கே விரல் என்பது நாம் மேலே சொன்ன பெருவிரல் நீளத்தைக் குறிக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தால், குழலின் விட்டம் மிகப் பெரிதாய் இருக்கும். அப்படி ஒரு குழலை நிலத்திருந்து தூக்கி வாய்வைத்து ஊதுவது நடைமுறையிற் சரவலாய் இருந்திருக்கும். இங்கே விரல் என்னும் சொல்லிற்கு விரற்கடை (=11/16 அங்குலம்) என்று பொருள் கொள்ளுவதே சரியாய் இருக்கும் போல் தெரிகிறது. அதன் படி,

புல்லாங்குழலின் நீளம் = நாலைந்து விரல் = 20 விரல் = 20*11/16 = 13.75 அங்குலம்
புல்லாங்குழலின் சுற்றளவு = நாலரை விரல் = 4.5*11/16 = 3.09375 அங்குலம்
எனவே புல்லாங்குழலின் விட்டம் = 4.5*11/16 * (7/22) = (4.5*7)/32 = 0.984375 அங்குலம் ஆகும்
நிலைப்பு அலைநீளம் (standing wavelength) = 2* குழலின் நீளம் = 2*13.75” = 27.5" = 55/24 ft.
காற்றில் ஒலியின் வேகம் = 1100 அடி/நொடி
அடிப்படைப் பருவெண் (Fundamental frequency) = (காற்றொலி வேகம்)/ (நிலைப்பு அலை நீளம்) = 1100*24/55 = 480 Hz

மேலே அடிப்படைப் பருவெண்ணைக் கண்டுபிடிப்பதில் இன்னும் சில நுண்ணிய விவரங்களைக் (குறிப்பாக edge correction - விளிம்புத் திருத்தங்கள் போன்றவற்றைக்) கணக்கில் எடுத்துக் கொண்டால், அடிப்படைப் பருவெண் 440 Hz என்றாகும். நடுத்தாயியில் [middle octave] குரலின் (சட்ஜம்) அதிர்வு 220 Hz, தாரத்தாயியில் [higher octave] குரலின் அதிர்வு 440 Hz என்றும் 20 ஆம் நூற்றாண்டில் ஒரு செந்தரத்தை உலகின் இசையாளர் ஒப்புக் கொண்டார்கள். நம் புல்லாங்குழல் அளவுகள் இந்தச் செந்தரத்தை உணர்த்துவது வியப்பை அளிக்கிறது.

அடுத்து, குழலின் துளைகள் அளவு ”நெல்லரிசி” என்று மேலேயுள்ள பாவில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. 8 நெல்லரிசியை குறுக்குவாட்டில் (crosswise) அடுத்தடுத்துச் சேர்த்தால் ஒரு விரற்கிடை அமையும். மாறாக நெல்லரிசியை நெடுக்குவாட்டில் (lengthwise) அடுத்தடுத்துச் சேர்த்தால், 8 நெல்லரிசி = 1 பெருவிரல் = 2 விரற்கிடை என்று ஆகும். இன்னொரு வகையிற் சொன்னால் 4 நெடுக்குவாட்டு நெல்லரிசி = 1 விரற்கிடை என்று ஆகும்.. எனவே இங்கே துளையளவு நெல்லரிசி என்பதை 11/16/4 = 11/64 = 0.171875 அங்குலம் என்றே கொள்ள முடியும் [இங்கே தூம்பு என்பது துளையைக் குறிக்கிறது. தமிழ்நாட்டில் பல வட்டாரத்தார்க்கும், ஈழத்தாருக்கும் கூடத் தூம்பு என்ற சொல் பழக்கத்தில் இல்லாததாய்த் தெரியலாம். அவர்கள், தும்பிக்கை (= உள் துளையுள்ள கை), தும்பி (= தேனுறுஞ்சிக் குடிப்பதற்கு ஏற்ற உள் துளையை உடைய கையை உடையது), தும்பி (= வண்டு), தூம்பாக்குழி [சிவகங்கை வழக்கு (= உள் துளையுள்ள சலதாரைக் குழி. drainage pipe) ஆகிய சொற்களை எண்ணிப் பார்க்கலாம். pipe என்பதற்குப் புழம்பு இணையானது போல் tube என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தூம்பு என்பதேயாகும். பலரும் சட்டென்று நினைவு கொள்ளும் குழல் என்ற சொல் வட்டக் குறுவெட்டுக் (circular cross section) கொண்ட ஒரு தூம்பாகும். குழல் = வட்டத் தூம்பு. It is a specific kind (circular cross section) of a generic category called தூம்பு.

பொதுவாய்ப் புல்லாங்குழலின் இடப்பக்கம் மூடப்பட்டு இருக்கும். இடப்பக்க மூடியை அணைசு என்றும் சொல்லுவார்கள். குழலில் காற்று ஊதும் வாய்த்துளை, மூடிய இடப்பக்கம் இருந்து சற்று தள்ளி இருக்கும். குழலின் வலப்பக்கம் திறந்த வாயின் மேல் (குழல் கீறிவிடாமல் இருக்க) ஒரு வளையம் இடப்படுவதால் அது வளைவாய் என்றும், சுரங்களுக்கான துளைகள் இருக்கும் பாகம், தூம்புப் பாகம் என்றும் சொல்லப்படும். இனி பஞ்சமரபு - வாச்சிய மரபு - பிண்டவியலில் 28 ஆம் பா சொல்லும் குழல் துளை அளவீடுகள் பற்றிப் பார்ப்போம்.
,
இருவிரல்கள் நீக்கி முதல்வாயேழ் நீக்கி
மருவுதுளை எட்டின் மன்னும் - பெருவிரல்கள்
நாலைந்து கொள்ளப் பரப்பென்ன நன்னுதலாய்
கோலஞ்செய் வங்கியத்தின் கூறு.

என்று சொல்லுவதால், மூடிய இடப்பக்கத் துளையில் இருந்து ஊதுதுளை = 2*11/16 = 1.375 அங்குலம் இருக்கிறதாம். ஊது துளையில் இருந்து சுரத்திற்கான முதற்துளை = 7*11/16 = 4.8125 அங்குலமும், முதற்துளையில் இருந்து எட்டாம் துளை(=முத்திரைத் துளை) = 9*11/16 = 6.1875 அங்குலமும் இருக்கும். எட்டாம் துளைக்கு அப்புறம், திறந்த வலப்பக்க வளைவாய் வரை உள்ள தொலைவு 2*11/16 = 1.375 அங்குலம் இருக்கும். இந்தத் துளைகளில் சிலவற்றை அடைத்து, சிலவற்றைத் திறந்து குரல், துத்தம், இளி, கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் சுரங்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன. [இந்தக் காலக் குழலின் துளைகள் இது போன்ற ஒழுங்கில்லாமல் சற்று மாறி இருக்கின்றன. அவை பற்றிப் பேசினால் செய்திகள் நீளும்.]

புல்லாங்குழல் போலவே பல்வேறு யாழ், வீணை போன்றவையும் அந்தக் காலத்தில் விரல்கள் அளவிலேயே சொல்லப்பட்டிருக்கின்றன.

அன்புடன்,
இராம.கி.

6 comments:

Anonymous said...

கன்னடத்திலும் 'இட்டிகெ' என சொல்லப்படுகிறது. 'செங்கல் சூளை'கள் அதிகமாக இருந்தமையால், மைசூர் நகரில் 'இட்டிகெ கூடு' என்கிற ஒரு இடம் உள்ளது.

இரவிச்சந்திரன், பெங்களூர்

nayanan said...

ஐயா, பல சொற்களோடு இக்கட்டுரையில் மிகவும் கவர்ந்த அருமையான சொல் தூம்பு. நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Vijayakumar Subburaj said...

> தூம்பு

எங்கள் ஊரில் தூ(வ்)வு (தெலுங்கு) இன்னும் வழக்குச் சொல். ஆனால், இது முகத்தலளவை. 4 - 5 படி (5 - 6 கிலோ) இருக்கும்.

இராம.கி said...

அன்பிற்குரிய இரவிச்ச்சந்திரன்,

கன்னடச் செய்தி எனக்குப் புதியது. நன்றி.

அன்பிற்குரிய நயனன்,

தூம்பு உங்களைக் கவர்ந்ததற்கு மிக்க நன்றி. வேதிப் பொறியியலில் shell and tube heat exchanger என்ற வெப்ப மாற்றி உண்டு. அதைக் கலத் தூம்பு வெப்ப மாற்றி என்று எழுதிய போது நானும் மிக்க நிறைவடைந்தேன். தமிழில் கலைச்சொற்கள் ஏற்பட நம் வட்டாரங்களைத் துழாவினாலே பலவும் கிடைக்கும் என்பதைப் புரிந்தேன். நமக்கு மனம் மட்டுமே வேண்டும். தமிழ் நெகிழ்ந்து கொடுத்துப் புத்தறிவியலைச் சொல்லிக் கொடுக்கும். இது உண்மை.

தமிழர் தாழ்வு மனப்பான்மையில் தக்கிக் கிடப்பதாலேயே அறிவியலையும் நுட்பியலையும் தமிழிற் சொல்லமுடியாது என்று எண்ணுகிறார்கள்.

அன்பு சுப்பராஜ்,

தூம்பு தூவு என்று தெலுங்கிற் சொல்லப் படுவது துளைப் பொருளில் தான். உங்கள் செய்திக்கு நன்றி.

அன்புடன்,
இராம.கி.

குமரன் (Kumaran) said...

அங்குலம்/அங்குலிக்கும் விரலுக்கும் இருக்கும் தொடர்பு அறிய மகிழ்வாக இருக்கிறது ஐயா. சௌராஷ்ட்ரத்தில் விரலை 'அங்கிலி' என்போம். சொற்தொடர்பு இப்போது புரிகிறது.

செங்கல்லின் 1:2:4 அளவைக்கு கட்டுமானயியலில் ஏதேனும் கரணியம் இருக்குமோ? அதனால் தான் அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை தொடர்ந்து பேணப்பட்டு வருகிறதோ?

தூம்பாக்குழி - சௌராஷ்ட்ரத்தில் சலதாரைக்குழியை தூம்பா என்று சொல்கிறோம். இந்தச் சொல் தமிழில் இருந்து வந்திருக்கும் போலிருக்கிறதே. வேறு ஏதேனும் தமிழிய மொழியிலோ பாகத மொழியிலோ இந்தச் சொல் இந்தப் பொருளில் வழங்குகிறதா ஐயா?

Sundar said...

ஐயா,

எங்க ஊர் சோழவந்தான் அருகிலுள்ள மேலக்காலில் இருந்து மதுரை நகருக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, என் பள்ளியில் பலர் வெகு இயல்பாக, அக்குழாய்களைத் தூம்பு என்று அழைத்தது நினைவுக்கு வருகிறது.

சுந்தர்