Tuesday, April 21, 2009

பாரதிதாசன் நினைவு வாரத்தில் இரு நிலத் தமிழரும் சிந்திக்க வேண்டியது.

இது பாரதிதாசன் நினைவு வாரம். நண்பர் இளங்கோ விடாது நினைவுறுத்துவார். ஒருசிலர் தொடர்ந்து அதற்கு ஆதரவளித்து வருகிறோம். புரட்சிக் கவிஞரை இன்றையத் தமிழர் கொஞ்சங் கொஞ்சமாய் மறந்து வருகிறார்கள். அப்படி ஆகக் கூடாது. அவர் நினைவு போற்றப்பட வேண்டிய ஒன்று. கொண்டாட்டம் தேவையில்லை. நினைவு கூர்ந்தாலே போதும்.

இலங்கைத் 'தினகரன்' சிறப்பு மலரில் 11/7/1959 இல் வெளிவந்த ஈழம் பற்றிய பாரதிதாசனின் பாடலை என் வலைப்பதிவில் சென்ற ஆண்டு இட்டிருந்தேன். இந்தப் பாடல் பாரதி தாசன் குயிற் சுவடி 10ல், (அக்டோ பர் 1964) பக்கம் 10 இல் தொகுக்கப் பட்டிருக்கிறது. [இதே பாடல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையம் வெளியிட்ட "பாவேந்தர் பாரதிதாசனின் பழம் புதுப்பாடல்கள்" என்ற தொகுப்பில் (முனைவர் இரா. இளவரசு 2005 ஆம் ஆண்டுப் பதிப்பு) இருக்கிறது.

--------------------------------------

வெல்க தமிழ், வெல்க தமிழர்!

இலங்கைத் தமிழர் துலங்க எண்ணினால்
அவர்கள் ஒற்றுமை அடைய வேண்டும்;
வேற்றுமை விளைக்கும் ஆற்றல் எவற்றையும்
கான்றே உமிழ்தல் வேண்டும்; கழிவடைச்
சாதி சமயம் என்னும் எவற்றையும்
மதித்தல் கூடாது, மறப்பது நன்று;
தமிழர் நலத்தைத் தாக்கும் கட்சிகள்
எவற்றினும் எவரும் சேர்தல் சரியன்று;
தமிழர் அனைவரும் கூடித் தக்கதோர்
கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும்;
தாய்மொழி யான தமிழ்மொழி வாழ்ந்தால்
தமிழர் வாழ்வர்; தமிழ்மொழி வீழ்ந்தால்
தமிழர் வீழ்வர்; தமிழ்தமி ழர்க்குயிர்;
தமிழன் னைக்கொரு தாழ்வு நேர
விடுதலின் உயிரை விடுதல் தக்கது;
சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை
செந்தமி ழர்க்கும் உண்டு! திருமிகு
சட்ட மன்றிலும் பைந்தமி ழர்க்கு
நூற்றுக் கைம்பது விழுக்காடு நோக்கிப்
படிமை ஒதுக்கப் படுதல் வேண்டும்!
செந்தமிழ் மக்கள் சிறுபான்மை யோரெனச்
சிங்களர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலைக விழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்;
மானங் காப்பதில் தமிழ மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது;
இவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!

-------------------------------

இன்றைக்கு பாரதிதாசன் உயிரோடு இருந்தால், உறுதியாக ஈழத்தின் அவல நிலை கண்டு மனங் குமுறியிருப்பார். கொதித்துப் போயிருப்பார். ஈழத் தமிழரின் விடுதலைப் போராட்டம் கூர்மையடையும் வகையில் ஏராளமாய் எழுச்சிப் பாடல்களைப் பாடியிருப்பார். ”தமிழீழம் ஒன்றே தமிழரின் முன்னுள்ள தீர்வு” என்பதை மனமாற ஒப்புவார். இத்தனை உயிரிழப்பைக் கண்டு வாளாயிருக்கமாட்டார்.

ஆனால், நாளும் 200, 300 என ஈழத்தமிழர் செத்துக் கொண்டிருக்க (நேற்று மட்டும் 1500 பேர், காணொளிகளைக் காணக் காண மனம் பதறுகிறது), முட்டாள்த் தனமான “பயங்கரவாத” வரையறையிற் சிக்குண்டு, நிலை என்னவென்று கூடப் புரியாது உலக நாடுகள் பாராமுகமாய் இருக்க. எல்லாந் தெரிந்த தமிழ்நாட்டுத் தலைவர்களோ, இந்திய ஆளும் வர்க்கம் செய்யும் ”இறையாண்மை” மிரட்டலிற் சிக்கித் தடுமாறி, “இது இனவொழிப்புப் போர், பயங்கரவாதத்திற்கு எதிரான போரல்ல” என்று சொல்லவும் வக்கற்று, வெறும் வாக்குப் பொறுக்கிகளாய் ஆகிப் போயிருக்கிறார்கள். [இல்லையென்றால், ஊழல், பணக் குவிப்பு போன்ற சட்டத்திற்குப் புறம்பாகத் தாங்கள் செய்த செயல்களின் ஊற்றுகை வெளி வந்து விடுமோ என்று ஆப்பசைத்த குரங்குகளாய் மாட்டிக் கிடக்கிறார்கள்.]

தமிழ்நாட்டுச் சாத்தர்களில் (common people) ஒருசிலரே ஈழ நிலையைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களின் பேரணிகளும், இருப்பு - நடைப் போராட்டங்களும், உண்ணா நோன்புகளும், தீயாடல்களும் தமிழ்நாட்டிற்குள் ஒரு நாள் அல்லது இருநாள் கவனத்தைக் கொண்டு வருகின்றனவேயொழிய அதற்கு மேல் மற்ற மாநிலங்களிலோ, நடுவண் அரசிடமோ, மற்ற உலகநாடுகளிலோ எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் அவற்றின் செறிவு போதாது. எல்லாம் பிசிறு பிசிறாய், துண்டு துண்டாய், ஓர் ஒருங்கமைப்பு இல்லாது, ஒத்திசைவு இல்லாது இருக்கின்றன. அதோடு, தமிழீழத்திற்கு ஆதரவாய், ஆழமான குரல் எழுப்புவது,, இந்திய நடுவண் அரசிற்கு எதிராகக் குரல் எழுப்புவதாகவே இன்று புனையப் பட்டிருக்கிறது. சட்டத்தில் எழுதப்படாத ஒரு முற்றாளுமை (dictatorship), தமிழக, இந்திய அரசுகளின் நடவடிக்கைகளில் இருக்கிறது. [அந்த அளவிற்குப் பேராயக் கட்சி தமிழரின் குரல்வளையைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. அதற்குக் கழகமும் துணைபோகிறது. இல்லையென்றால் சீமான், கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத்தின் கைதுகள் நடந்திருக்கா. இந்திய நயதி மன்றங்கள் அந்தப் பேச்சுக்களை அரசமைப்புச் சட்டங்களுக்கு எதிர் என்று சொல்லவில்லை; காவற்துறையும், தமிழக அரசும், கழகமும், பேராயமும் சொல்லுகின்றன.]

தமிழ்நாட்டுச் சாத்தர்களிற் பெரும்பாலரோ, இந்திய ஆளும் வர்க்கம் கண்கட்டிப் போட்டிருக்கிற மிடைய (media) வலையிற் சிக்கித் ”தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது?” என்று கூடத் தெரியாமல், மயக்க நிலையில், “மானாட. மயிலாட” பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லது வாக்கு விற்கும் நடவடிக்கையில், பேரம் பேசிச் சிதறப்படும் பணத்தாள்களைப் பொறுக்குவதிற் குறியாக இருக்கிறார்கள்..

ஓரினம் சீரழிவது ஒரு நாளில் நடப்பதல்ல. இது சிறுகச் சிறுகச் சீரழிவதாகும்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒருபக்கம் சீரழிந்தால், ஈழத் தமிழர்களும், போராளிகளும் இன்னொரு வகையில் ஏமாந்திருக்கிறார்கள். முட்டாள் தனமாக உலகத்தின் சிலநாடுகளும், இந்திய நடுவண் அரசும் சேர்ந்து போட்ட பேச்சு வலைக்குள் சிக்கி ”அமைதிப் பேச்சு, அது இது” என்று 3, 4 ஆண்டுகள் கவனத்தைச் சிதறடித்துக் கொண்டு, தமிழீழப் புலம் 19000 சதுரக் கிலோ மீட்டர்கள் இருந்தபோது, கவனமாய்ச் செய்ய வேண்டிய வேலைகளைக் கோட்டை விட்டு விட்டார்கள். சுற்றுப் புலத்தைச் சற்றும் அவதானிக்கவில்லை. [குறிப்பாக 30, 40 நாடுகளில் போராளிகளுக்கும், இயக்க நடவடிக்கைகளுக்கும் ஏற்பட்ட தடை, இயக்கத்தை ரணில் விக்கிரமசிங்கே பிளந்து இரண்டாக்கியது, கருணா உருவாகியது, தமிழீழத்தின் கிழக்கையும் வடக்கையும் பிரிய விட்டது - இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த 4, 5 ஆண்டுகளாகவே போராளிகள் போன போக்கு மிகவும் மெத்தனமாய் இருந்தது.]

இரண்டு நிலத் தமிழரும் இந்த நேரத்தில் ”தெரிந்து செயல்வகை” அதிகாரத்தைத் திரும்பப் படிக்கவேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

- தெரிந்து செயல்வகை, குறள் 466

எதிர்காலத்தில் இன்னும் பெரிய இழப்புக்கள் ஏற்படலாம். மனவுறுதியும், சரியான அரசியலும், செயலாக்கமும் இருந்தால் தான் அவற்றில் இருந்து மீண்டு வரமுடியும்.

தமிழகத் தமிழர்கள் தமிழக அரசியலை உலுக்கி, அன்றாட வாழ்வை அசைய வொட்டாமற் செய்தாற் தான் நடுவண் அரசு தன் நிலையை இனி மாற்றிக் கொள்ளும். அதற்கு முதற் படி, பேராயக் கட்சி இந்தத் தேர்தலில் பூண்டோடு ஒழியவேண்டும். கூடவே கிழவர் ஒரு பெருஞ் சறுக்கலை இந்தமுறை அடைய வேண்டும். அப்பொழுது தான் புத்தி வரும். நடுநடுங்கிப் போய், கழகம் தன் செயற்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.

இராம.கி.

2 comments:

பதி said...

நல்ல கட்டுரை ஐயா..

//இன்றைக்கு பாரதிதாசன் உயிரோடு இருந்தால், உறுதியாக ஈழத்தின் அவல நிலை கண்டு மனங் குமுறியிருப்பார். கொதித்துப் போயிருப்பார்.//

செய்திருப்பார் தான்.. ஆனால், தமிழினால் பிழைத்த ஈனத் தலைமையால் மற்றவர்களைப் போல சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அவ்வளவே..

//எல்லாம் பிசிறு பிசிறாய், துண்டு துண்டாய், ஓர் ஒருங்கமைப்பு இல்லாது, ஒத்திசைவு இல்லாது இருக்கின்றன. அதோடு, தமிழீழத்திற்கு ஆதரவாய், ஆழமான குரல் எழுப்புவது,, இந்திய நடுவண் அரசிற்கு எதிராகக் குரல் எழுப்புவதாகவே இன்று புனையப் பட்டிருக்கிறது.//

இதற்கு முழுமுதற் காரணமும் தமிழர்களிடயே இல்லாத ஒற்றுமையே..

//ஈழத் தமிழர்களும், போராளிகளும் இன்னொரு வகையில் ஏமாந்திருக்கிறார்கள்.//

இதில் இரு வேறு கருத்துக்கள் யாருக்கும் இருக்க முடியாது... இல்லையெனில், 2002ல் சம பலத்துடன் இருந்த இராணுவ பலம் இன்று இந்த நிலைக்கு வந்திருக்காது. தமிழர்கள் இரணுவ வெற்றி பெரும் பொழுதெல்லாம் ஓடோடி வந்த அரசபயங்கரவாத ஆதரவு (இவைகளை நடு நிலமை நாடுகள் எனவும் கொள்ளலாம்) நாடுகள் இன்று வாய்மூடி நிற்கின்றன...

//எதிர்காலத்தில் இன்னும் பெரிய இழப்புக்கள் ஏற்படலாம். மனவுறுதியும், சரியான அரசியலும், செயலாக்கமும் இருந்தால் தான் அவற்றில் இருந்து மீண்டு வரமுடியும்.//

இல்லையெனில் அரசியல் அடிமைகள் நிலை தொடர்வதை யாரும் மாற்ற இயலாது... அதை மறைக்க குடிகாரர்களைப் போல பழங்கதைகளை/புராணங்களை பேசி ஆறுதல் கொள்ள வேண்டியது தான்...

//அதற்கு முதற் படி, பேராயக் கட்சி இந்தத் தேர்தலில் பூண்டோடு ஒழியவேண்டும்.//

அது நடக்கும் என்று தான் தோன்றுகின்றது.

//கிழவர் ஒரு பெருஞ் சறுக்கலை இந்தமுறை அடைய வேண்டும்.//

இணைய கழக கண்மணிகள் இதை மட்டும் ஒத்துக் கொள்ளவே மாட்டர்கள் பாருங்கள்....

Anonymous said...

kazhagaththil kaNmaNikaL kizavanin perungkudumbam thaan. kiavanin koLLup pErunum muthalvanaakalaam. maRRavanukku picchaip pathavi kidaiththaal vaalaaddum naayakavE irukka vaippaan kizavan.