Friday, February 06, 2009

மீளுகிறதா 1965? - 2

மொழித்திணிப்புக் கொள்கைக்கு எதிராக அன்றைக்கு எழுந்த தமிழ் மாணவர் போராட்டம் இப்பொழுது நினைவிற்கு வருவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். இன்றும் அதே பேராயக் கட்சி தான் (ஆனால் ஒரு கூட்டணியமைப்பில்) நடுவணரசை ஆளுகிறது. இந்த ஆட்சியின் ஊடாக இன்றைக்குச் சிங்கள அரசின் தமிழின அழிப்புப் போருக்கு முற்றிலும் ஆதரவாய், ஆள்வலுவும், ஆயுத வலுவும், அரண வலுவும் சேர்த்து அளித்துவரும் பேராயக் கட்சியரசின் கொள்கையைக் கண்டித்து இன்றையத் தமிழ் மாணவர் போராட்டம் எழுந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தின் ஓர் ஓட்டமாய் கொலவைநல்லூர் முத்துக் குமரனின் கனல்புகுதலும், பள்ளப்பட்டி இரவியின் தீக்குளிப்பும் நடந்து முடிந்திருக்கின்றன..

[அன்றும், வடவர் ஆட்சியின் இந்தித் திணிப்பைக் கடிந்து, இதைப் போல 5 பேர் எரியுண்டனர். அன்று, செஞ்சிக் கோட்டத்துத் தேவனூர் சிவலிங்கம், சென்னைக் கோடம்பாக்கத்துக் கூடல் மறுகில் (junction) கன்னெய் ஊட்டி எரிபுகுந்து துஞ்சிய செயலை

................................
ஆடுநெய் ஒழுக முச்சியின் அப்பிப்
பாடுவெள் அருவி பாய்தல் போலும்
கன்னெய் முழுகி கனல்புகுந் தாடிய
...........................

என்று நூறாசிரியம் 59 ஆம் பாடலில் பெருஞ்சித்திரனார் மருட்கையுறப் பாடியிருப்பார். (நூறாசிரியத்தில் 12 பாடல்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியே இருக்கின்றன.)]

இது போன்ற இக்கட்டான நேரங்களில், உலகமே பாராமுகமாய் இருக்கும் போது, ஒரு குறிப்பிட்ட நிகழ்வைக் கவனயீர்ப்பாக்கும் வகையில் முத்துக் குமரனைப் போன்றோர் உணர்வு மேலிட்டு, தம் உயிரையும் துச்சமாய் மதித்து, ஈகம் செய்து, நம் அகக் கண்ணைத் திறக்கிறார்கள். அவர் செய்ததைத் தனிமாந்தராய்ப் பார்த்தால் யாராலும் ஏற்க முடியாதது தான், இருந்தாலும் நம்மைச் சுற்றிலும் அரசும், மிடையமும் (media), அதிகார அறிவுய்திகளும் (ruling intelligentia) சேர்ந்து செய்திகளை மறைத்து, திரித்து, பொய்சொல்லி கண்ணைக் கட்டிப் போட்டிருக்கும் காலத்தில், மோனித்துக் கிடக்கும் நம் போன்றோரைத் தட்டி எழுப்புவது இது போன்ற இளைஞர்களுடைய செயற்பாடும் உணர்வும் தான். அதற்கு அப்புறம் இந்தப் புலனத்தில் மரத்துக் கிடந்தால் நமக்கு உய்வு என்பது என்றுமே இல்லை.

[தன்னையே எரித்துக் கொண்டு மற்றாருக்கு ஒளிதரும் இது போன்ற ஈகத்தை ஒருசிலர் கொச்சைப் படுத்தி எழுதுவதும், விதண்டா வாதமாய் ”அந்தத் தலைவனின் மகன் இறந்தானா, இந்தத் தலைவனின் உறவினன் இறந்தானா?” என்று எழுதுவதும் என்ன ஒரு பித்துக்குளித்தனம் என்று நமக்குப் புரிவதில்லை. எந்த ஒரு மகனும் தன் தந்தையிடம் வந்து “நான் தீக்குளிக்கலாமா?” என்று கேட்கவும் மாட்டான், அதே போல எந்தவொரு தந்தையும் தன் மகனைப் பார்த்து ”நீ தீக்குளி” என்று சொல்லவும் மாட்டார். இது போன்ற செயல்கள் உணர்வு மேலீட்டால் தன்மயமான புரிதலில் ஒருசிலர் செய்யும் தன்னேர்ச்சிகள் என்பதே இயல்பு. அந்தக் காலத்து வடக்கிருந்து நோன்பிருத்தல் போல, போருக்கு முன்னால் ஒரு சில மறவர்கள் செய்துகொள்ளும் நவகண்டம் போல, தீக்குளிப்பதும் நம் மரபில் பலகாலம் நடந்திருக்கிறது. [அதை இங்கு நான் எடுத்துரைப்பது சரியாக இருக்காது.] “இதைச்செய்” என்று யாருமே இவர்களுக்குச் சொல்லுவதில்லை. அவர்களாய்ச் செய்கிறார்கள்; நமக்கு ஓர் அவலத்தை உணர்த்துகிறார்கள். இந்தப் புரிதலை விடுத்து, அவரை முட்டாள் என்று சொல்லி அவர் மானத்தைக் குலைப்பது, கொஞ்சங் கூட ஈவு இரக்கம் இல்லாத கொலைக்கே சமம். குறிப்பாக தன் தீக்குளிப்பின் முன்னே முத்துக்குமரன் எழுதிக் கொடுத்திருக்கும் ஆவணம் ”அவன் அறிவாளி, ஈழ அவலத்தை உணர்த்தவே இந்தச் செயலைச் செய்திருக்கிறான், இதன் விளைவுகளை உணர்ந்தே செய்திருக்கிறான்” என்றும் தெளிவாகவே தெரிகிறது. அவன் அளித்த செய்தியை உள்ளார்ந்து கொள்ளுவதே அவனுக்கு நாம் அளிக்கும் மரியாதை.]

நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடம் ஈழத்தில் நடக்கும் அவலம் பற்றியும், அங்கே ஒரு பேரினவாதம் தலைவிரித்து ஆடி தமிழினத்தை அழித்துக் கொண்டிருப்பதைச் சொல்லியும், முத்துக்குமரனின் ஆவணத்தைப் பரப்பியும், செயலாற்ற வேண்டியதே நமக்கு ஏற்படும் முறைமை. இதில் இந்திய நடுவணரசின் ஆதரவு, (அதை யாருக்கும் தெரியாமல் மறைத்துச் செய்யும்) உள்ளடிச் செயல் போன்ற பித்தலாட்டங்களைப் பலருக்கு உணர்த்துவதும் நம் கடமை.

ஏதோ இராசீவ் காந்தி தவறிப் போனதற்கு இன்றைக்குப் பேராயக் கட்சியின் தலைவர்கள் பழிவாங்குகிறார்கள் என்பது என் புரிதல் இல்லை. தமிழீழம் ஏற்படக் கூடாது என்று எப்படியோ ஒரு தேற்றத்தில் இந்திய அரசு நினைக்கிறது. தமிழ் ஈழம் என்னும் நாடு, இந்திய அரசின் எதிர்காலத் திட்டங்களுக்குத் தடையாக இருக்கும் என்று பேராயக் கட்சி எண்ணுகிறது. அண்மையில் கோ.திருநாவுக்கரசு சுட்டிக் காட்டிய ஒரு சிங்களவரின் கட்டுரையைப் படித்தபோது [

http://links.org.au/node/885#comment-10821

], அதில் சொல்லப்படும் காரணம் எனக்கு வலிந்ததாகத் தெரிந்தது. அதில் ”திரிகோணமலைத் துறைமுகம் ஊழல் நிறைந்த, சிங்கள அரசின் கையில் இருப்பது நல்லது. புலிகளைப் போன்ற கொள்கைவாதக் குழுக்களிடம் சிக்குவது தன் எதிர்கால முனைப்புகளுக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று இந்திய அரசு எண்ணுகிறது” என்ற கருத்துச் சொல்லப் பட்டிருப்பது எனக்கு வலுவாகத் தெரிகிறது. இந்தியப் பெருங்கடலில் ஆட்சி செலுத்தத் தமிழீழம் தடையாய் இருக்கும் என்று இந்திய அரசு ஒருவேளை எண்ணுகிறது போலும். [இராசேந்திர சோழன், தன் தந்தையோடு நல்ல உறவு கொண்டிருந்த சிரீவிசய அரசனைத் தோற்கடித்து கடற்போக்குவரத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வரலாறு இங்கு என் நினைவிற்கு வருகிறது.]

இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றைக்குப் பக்தவத்சலம் இருந்தது போல், இன்றைக்குக் கலைஞர் கருணாநிதி கையாளாக இருந்து அடக்குமுறைகளை நடத்திக் கொண்டிருக்கிறார். அன்றைக்குக் கல்லூரிகளை மூடியது போல், இன்றைக்கும் கல்லூரிகளை மூட அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. இன்னும் வரும் கிழமைகளில் என்னென்ன நடக்குமோ என்று சொல்ல முடியாது. இந்தியெதிர்ப்பில் பேராயக் கட்சி நடந்து கொண்ட விதங்களை மறந்துவிடாது, இரண்டு ஆண்டுகளுக்கு நினைவு வைத்திருந்து, பேராயக் கட்சியை மாணவர் கூட்டம் வீட்டிற்கு அனுப்பி வைத்தது. இதன் விளைவால் திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தை ஆளும் வாய்ப்பைப் பெற்றது. அன்றிலிருந்து இன்றுவரை பேராயக் கட்சியினால் மாநில அரசுகட்டில் ஏறமுடியாமலே போய்விட்டது. இந்த வரலாறெல்லாம் உணர்ந்தவர் தான் திரு. கருணாநிதி. அதனால் தான் எழுச்சி கட்டுக்கு அடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது என்றவுடன், கல்லூரிகளையும் விடுதிகளையும் மூடிவிட்டார். இனி வருங்காலங்களில் எங்கெல்லாம் நீரூற்றி அணைக்க முடியுமோ, அதையும் செய்வார். “தமிழரைக் காப்பவன் நான் ஒருவன் தான்” என்று எல்லாவிதக் கூப்பாடும் குட்டிக் கரணங்களும் இருக்கும்.

அவருடைய அரசு மாநிலத்திலும், பேராயக் கட்சியின் அரசு நடுவண் மன்றத்திலும் தொங்கிக் கொண்டு இருக்கிநது. நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று நாம் கேட்கவேண்டாம். எப்படி இருந்தாலும் “உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ
கெட்டாய்” என்று இவர்கள் கொண்டையைப் பிய்த்துக் கொண்டு கிடக்கத்தான் போகிறார்கள். .

நாம் செய்ய வேண்டியது மிக எளிது, தமிழக மாணவர்களும், அவர்களுக்கு அணைவான தமிழகப் பெற்றோர்களும், இன்று நடப்பதை ஒரு நாலு மாதங்களுக்கு நினைவு வைத்திருந்தால், நடுவணரசை ஆளமுடியாமலே பேராயக் கட்சியை வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அதுவொன்றே தமிழின அழிப்பிற்கு உதவிபோனதற்குப் பேராயக் கட்சிக்குச் சரியான பாடமாய் அமையும். அதாவது, தமிழகத்தில் இருந்து பேராயக் கட்சி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடப் பெறக் கூடாது.

அதே போல, திராவிட முன்னேற்றக் கழகமும், மாநில அரசையும் இழந்து, நாடாளுமன்ற உறுப்புமையும், முற்றிலும் இழக்க வேண்டும். [தி.மு.க. இல்லையென்றால் தமிழர் எதிர்காலம் இல்லை என்ற மாயை இனிமேலும் இல்லாது தமிழரிடையே மறையவேண்டும். தி.மு.க. எழுந்ததற்கு ஆக்கவேலையை 1967ல் பார்த்த என்னைப் போன்றோர் தான் சொல்லுகிறோம். எதிர்காலம் உறுதியாக இன்னொரு தலைமையைக் கொண்டுவரும்.]

இந்த உறுதியில் இடைபுகுந்து, (ஐயா இல்லையென்றால் அம்மா என்ற வழக்கத்தில்) அ.தி.மு.க.வும் வெற்றி கொள்ளக் கூடாது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேராயம், தி.மு.க. அ.தி.மு.க என்று மூன்றுமே கருகிப் போகும் நிலை உருவாக வேண்டும் அப்படி ஆவது ஒன்றே இவர்களை உறைக்க வைக்கும். இந்த மூன்று கட்சிகள் அல்லாத யாருக்கு வேண்டுமானாலும் நம் மக்கள் வாக்கு அளிக்கலாம்.

இதை நாம் வெளிப்படையாகவே ஊரெங்கும் சொல்லிப் பரப்பலாம். அதுவொன்றே, இந்த இரண்டு அரசையும் பதற வைத்து, ஈழத்தில் போரை நிறுத்த வைக்கும். ஈழ உறவுகளுக்கு நாம் உதவ முடிந்ததாயும் அமையும். “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பது தமிழில் ஒரு சொலவடை. அரசியற் கட்சிகளுக்குத் தாங்கள் அடுத்த தேர்தலில் உறுதியாய் வெல்லமாட்டோ என்பது ஒரு மரண அடியே.

இதற்கான முன்முனைப்பும், உறுதியும், தமிழக மக்கள் கையில் தான் உள்ளது.

(இன்னும் வரும்)

அன்புடன்,
இராம.கி.

4 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

ஆதவா said...

நான் படிக்கும் உங்களின் முதல் பதிவு இது.. தமிழை எவ்வளவு லாவகமாக கையாண்டிருக்கிறீர்கள்!!!! முதலில் அதற்கு ஒரு சபாஷ்..

இந்தப் பதிவு சற்று நேரம் கழித்து வந்திருக்கிறது... வலையுலகில் ஏற்கனவே பல ஆய்வுகள், விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. முத்துக்குமார் இறந்த பின்னர், கவிதைகளும், (சில சமயம் கட்டுக்கதைகளும்) ஈழம் குறித்த விவாதங்களும், எதிர்கால சூழ்நிலைகளும் ஆங்காங்கே ஒவ்வொரு வலைப்பூக்களாலும் எழுதப்படுகின்றன...

உங்களுடைய இப்பதிவு அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது... அத்தனை நேர்த்தி...

எனக்கு இது மட்டுமே சொல்லத் தெரியும்........... ஏனெனில் விவாதம் என்பது நமக்கு ஒவ்வாதது..

அன்புடன்
ஆதவன்

ஆதவா said...

உங்களுடைய இத்தளம் எனக்கு மிகவும் பிடித்தமாகிவிட்டது...

நான் உங்களைப் பின் தொடருகிறேன்...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

>>வலிந்ததாகத் தெரிந்தது. அதில் ”திரிகோணமலைத் துறைமுகம் ஊழல் நிறைந்த, சிங்கள அரசின் கையில் இருப்பது நல்லது. புலிகளைப் போன்ற கொள்கைவாதக் குழுக்களிடம் சிக்குவது தன் எதிர்கால முனைப்புகளுக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று இந்திய அரசு எண்ணுகிறது” என்ற கருத்துச் சொல்லப் பட்டிருப்பது எனக்கு வலுவாகத் தெரிகிறது. இந்தியப் பெருங்கடலில் ஆட்சி செலுத்தத் தமிழீழம் தடையாய் இருக்கும் என்று இந்திய அரசு ஒருவேளை எண்ணுகிறது போலும். [இராசேந்திர சோழன், தன் தந்தையோடு நல்ல உறவு கொண்டிருந்த சிரீவிசய அரசனைத் தோற்கடித்து கடற்போக்குவரத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வரலாறு இங்கு என் நினைவிற்கு வருகிறது.]
>>

உங்கள் எடுத்துக்காட்டே தவறாக இருக்கிறதே.எடுத்துக்காட்டின் படி இலங்கை அரசர்களின் வசம் துறைமுகம் இருக்கக் கூடாது என்பதால் ராஜேந்திரன் போர்செய்து தன்வசம் கொண்டு வந்தான் என்பதை எந்த செயலுடன் ஒப்பிடுகிறீர்கள் ?

புலிகள் இலங்கை எவருக்கு உதவினாலும் திரிகோணமலை துறைமுகம் இந்தியா வசம் வரப் போவதில்லை;மேலும் அந்தக் காலம் போல எங்கு கப்பல் வணிகம் இன்று நடைபெறுகிறது.வானூர்தி இல்லாத அக்காலத்தில் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் இருக்கலாம்.இன்றும் அதே முக்கியத்துவம் இருக்கிறதா என்ன?
மேலும் இந்திய அரசுக்கு திரிகோணமலை என்று ஒரு துறைமுகத்தை கருதித்தான் செயல்கள் செய்ய வேண்டுமா?

சென்னை,மும்பை,கல்கத்தா எனப் பல துறைமுகங்கள் இன்று இருக்கின்றன..

இந்தய அரசு மற்றம் காங்கிரஸ் கட்சியின் எண்ணப் போக்கு நிச்சயம் இந்த நோக்கில் இருக்க வாய்ப்பில்லை.

சோனியா என்ற தனி மனிதப்பெண்ணின் விருப்பத்திற்காக இந்திய அரசு செயல்படுகிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கருணாநிதி என்றுமே ஒரு சுயநலவாதி.எனவே அவருக்கு சூழ்நிலைகள் எதிராக இருக்கின்றன என்பதெல்லாம் மாயவாதம்.

இன்றைய சூழலில் அவர் மீண்டும் ஆட்சியில் அமர என்ன தேவையோ அதை செய்து கொண்டிருக்கிறார்,அவ்வளவுதான்.இடையில் நடப்பதெல்லாம் எல்லோருக்கும் படம் காண்பிப்பதற்காக நடக்கும் செயல்கள் !

மிடையம்,பேராயம் என்றெல்லாம் வார்த்தைகளைக் கையாண்டால் தமிழ் ஆர்வத்தை விட குழப்பம் தான் மிஞ்சுகிறது என்பது என் கருத்து;தவறிருக்கலாம்,மன்னிக்கவும்.