Monday, October 01, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4

"அரக்கனும் தமிழும்" என்ற முன்பாதித் தலைப்பைப் பற்றி இதுகாறும் பேசிய நாம், "தமிழும், இராமர் சேதுவும்" என்ற பின்பாதித் தலைப்பிற்குள் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் முன்பாதித் தலைப்பிற்குப் போகலாம். (வான்மீகியையோ, அல்லது கம்பனையோ, ஒழுங்காகப் படித்தாலே, சேது பற்றி விளங்கிப் போகும் என்றாலும் திருகு வாதங்களையும், சூழ்ச்சிகளையும் சேர்த்து வைத்து, ஓர் இயற்கை மண்திட்டை இராமர் சேது என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இருப்பவர்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நொதுமலாய் இருக்கும் பொதுவானவர்களுக்கு நிலையை ஓரளவாவது புரிய வைக்க வேண்டும் என்றே இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடங்கினேன்.)

"இராவணன் எங்கே சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்?" என்று தேட முற்பட்ட வானரர்களை நான்கு திசைகளுக்கும் பிரித்து அனுப்பும் சுக்ரீவன், தென்திசைக்கு அனுமனையும், அங்கதனையும், சாம்பவனையும் இன்னும் சிலரையும் அனுப்புவான். அவர்களுக்கு, எங்கு தேடவேண்டும் என்றும், எப்படி போக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கும் சுக்ரீவன் தென்கடல் வரைக்கும் அவர்களைப் போகச் சொல்லியிருப்பான். இங்கு வான்மீகியை எடுத்துரைக்காமல், அவரைப் பெரும்பாலும் ஒட்டிச் சென்ற, நமக்கு நன்கு தெரிந்த கம்பனில் இருந்தே, குறிப்புத் தருகிறேன். கிட்கிந்தா படலம் நாடவிட்ட படலத்தில்

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்
சேர்கிற் பீரேல்
என்றுமவன் உறைவிடமாம் ஆதலினால் அம்மலையை
இறைஞ்சி ஏகி
பொன்திணிந்த புனல்பெருகும் பொருநையெனும் திருநதிபின்
பொழிய நாகக்
கன்றுவளர் தடஞ்சாரல் மயேந்திரமா நெடுவரையும்
கடலும் காண்டிர்

என்ற பாடல் வரும். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி "பொதிகை மலையைத் தாண்டி, பொருநையையும் (தாம்பர பெருநையும்) தாண்டிச் சென்றால், மகேந்திர மலையடுக்கையும், அதன் அருகில் கடலையும், காண்பீர்கள்" என்று சுக்கிரீவன் கூற்று மட்டுமே. இதே கூற்றின் படி அனுமனும் மற்றவரும் மகேந்திர மலை போய்ச் சேர்ந்ததை, ஆறுசெல் படலத்தின் கடைசிப் பாடலில் கம்பன் சொல்லுவான்.

வன்திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென்திசைக் கடற்சீகர மாருதம்
நின்றிசைக்கும் நெடுநெறி நீங்கினார்

தென்திசைக் கடலில் இருந்து வரும் ஈரக்காற்று, நின்று ஒலிக்கும் வழிகளைக் கடந்து, தென் திசையைத் தாங்கும் யானை போன்ற மகேந்திர மலையை அடைந்த அனுமனும் மற்றவர்களும், அடுத்து சம்பாதியோடு உரையாடி இலங்கை பற்றி அறிகின்றனர். அதற்குப் போகுமுன் தென் கடல் பற்றிய செய்தியைப் புரிந்து கொள்ளுவோம்.

ஒரு 300/400 ஆண்டுகளாய், வங்காள விரிகுடா என்று சொல்லப்படும் கடல், தமிழ் இலக்கியம் நெடுகிலும் குணகடல் அல்லது கிழக்குக் கடல் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதை ஒருநாளும் தென் கடல் என்று யாரும் அழைத்ததில்லை. அப்படி அழைத்ததற்கு தமிழில் ஆவணப் பதிவும் கிடையாது. அதே போல அரபிக்கடல் என்று வாஸ்கோட காமா காலத்தில் இருந்து சொல்லப்படும் கடல், குட கடல் அல்லது மேற்குக் கடல் என்றே தமிழ் இலக்கியம் நெடுகிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

தென் கடல் என்பது இன்றைக்கு இந்துமாக் கடல் என்று சொல்லப் படுகிறது. வேத காலத்துச் சில வடபால் நூல்களிலும், பிராமணங்கள், ஆரண்யங்கள் போன்றவற்றில், தென்கடல் என்ற கருத்து அரபிக் கடலைக் குறிப்பதாகவும் சில வடமொழி அறிஞர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள். (ஏனென்றால் சப்த சிந்துவுக்கு அது தென்பகுதி.) அந்த ஆதாரங்கள் வடமொழி இலக்கியங்களைத் தேடினால் கிடைக்கும். வடமொழி இலக்கியத்தில் கிழக்குக் கடல் என்பது "சகரனின் மைந்தர்கள் தோண்டிய செயற்கைக் கடல்" என்றும், அதனால் சாகரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ஒரு தொன்மக் கதை உண்டு. (பின்னால் சாகரம் என்ற சொல் பொதுமைப் பெயராகி மற்ற கடல்களுக்கும் பயன்பட்டது.) ஆனால் வடமொழி இலக்கியங்களிலும் கூடக் கிழக்குக் கடல் ஒரு காலத்தும் தென் கடல் என்று சொல்லப் பட்டது இல்லை.

அடுத்து மகேந்திர மலை என்பது இன்றைக்குக் குமரி மாவட்டத்தில் மகேந்திர கிரி என்ற சொல்லப்படும் இடத்திற்கு (Liquid propulsion centre இருக்கும் இடத்திற்கு) அருகில் உள்ள மலையடுக்கு என்று சொல்லுவார்கள். பின்னால் இந்த மகேந்திர மலையில் இருந்து தான் அனுமன் இலங்கைக்குத் தாவிப் போனதாக இராம காதை சொல்லும். (நெடுங்காலம் கழித்து வந்த மாணிக்க வாசகரும் கூட மகேந்திர மலையை சிவனின் இருப்பிடமாகக் கீர்த்தித் திரு அகவலில் "மன்னும் மாமலை மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்று குறிப்பிட்டுச் சொல்லுவார். ஏதோ ஒருவகையில் மகேந்திரம் என்பது தமிழருக்குச் சிறப்பானதாக இருந்ததோ, என்னவோ? மகேந்திர மலை பற்றிய இலக்கியச் செய்திகளும், மற்ற தரவுகளும் ஆய்வு செய்யப் படவேண்டியவை.)

அடுத்து நெடுங்காலத்திற்கு முன்னால் அழிந்த குமரி நிலம் பற்றிப் பேசவேண்டும். தெற்கே கடற்கோளால் நிலம் அழிந்தது உண்மை. "அது கண்டமா? குறுநிலமா?" என்பதில் தமிழ் அறிஞர்களிடையே பெருத்த வேறுபாடுகள் உண்டு. அந்தக் கருத்தாடலுக்குள் நான் இப்பொழுது போகாமல் அதைத் திரு. சு.கி.ஜெயகரன் (குமரிநில நீட்சி, காலச்சுவடு பதிப்பகம், திசம்பர் 2002. இந்தப் பொத்தகத்தோடு நான் வேறுபட்டாலும், அதே பொழுது, படிக்கவேண்டிய பொத்தகம் என்று சொல்லுவேன்.) சொல்வது போலக் குறுநிலம் என்றே இப்போதைக்கு எடுத்துக் கொண்டு பார்த்தால், இன்றுள்ள குமரிமுனைக்கும் தெற்கே கிட்டத் தட்ட 80 கி.மீ அளவுக்கு கணிசமான நிலம் (குமரிக் கண்டம் என்ற கருத்தைக் காட்டிலும் குமரிநிலம் என்ற சொல்லைப் பயனாக்குவது நல்லது.) அழிந்து போயிருக்கலாம் என்று கொள்ளலாம். (இந்த நீளத்தை சட்டென்று நான் ஒப்ப முடியவில்லை. இன்னும் நீண்டு இருக்கக் கூடும் என்றே எண்ணுகிறேன். அது பற்றிய கடல் ஆய்வு தொடர வேண்டும்.) ஜெயகரன் சொல்லும் இன்னொரு கருத்து (இதில் பெரும்பாலும் யாருமே வேறுபட மாட்டார்கள்.) தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலுமான நிலப்பரப்பும் கூட கடல்மட்ட உயர்ச்சியால் அழிந்து போனது. இதைப் பற்றி விரிவாகக் கீழே பார்ப்போம். இந்த இரு அழிவுகளும் கடல் மட்டம் உயர்ந்ததனால் நடந்திருக்கின்றன.

இற்றைக்குப் 15000 - 12000 ஆண்டுகளூக்கு முன்னால் இருந்த பனியுகத்தில் (ice age) கடலின் மட்டம் இன்று இருப்பதைக் காட்டிலும் 80-100 மீ. குறைந்து இருந்தது. அதனால் நீரின் அடியில் இன்று இருக்கும் பல நிலங்கள் (பெரும்பாலும் பெருநிலக் கடற்கரை, தீவுகள் ஆகியவற்றை ஒட்டியவை) அன்று வெளிப்பட்டு நிலமாகவே இருந்தன. இத்தகைய நிலை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது. அப்படிக் கடற்கரை பெரியதாக இருந்த போது, M130 ஆட்களும் (நாகர், இயக்கர் போன்ற பல்வேறு கருப்பு இனத்தவரும்), பொதுவாக இந்தியர் என்று சொல்லப்பெறும் (என்னைப் போன்ற ஒரு சிலர் திராவிடர் என்றே சொல்ல விழையும்) M20 ஆட்களும் (The Journey of Man - A Genetic Odyssey by Spencer Wells, Penguin Books. M20 ஆட்கள் உலகில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தான் மிகுந்து இருக்கிறார்கள் என்றும், இவர்களில் 50% தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.), இவர்களுக்கு இடையே கலந்து உருவான ஆட்களும், ஆகப் பெரும் கூட்டமே இந்த அழிந்து போன கடற்பரப்பு நிலங்களில் வாழ்ந்து இருப்பார்கள். (இந்த ஆட்களின் வாழ்க்கை எச்சங்கள் தான் சென்னையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அச்சரப் பாக்கத்தில் கிடைக்கின்றன.)

பின்னால் வெவ்வேறு காரணங்களில் தூண்டப்பட்டு பனியுகம் முடிந்து, பனிப் பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி இருக்கிறது. பொதுவாகக் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் உயரும் போது அது அங்கு வாழும் மாந்தரின் மரபில் கதைகளை உண்டு பண்ணாது. மாறாகச் சில இலக்குச் சார்ந்த புவியியல் அமைப்புகளால் (localized geographical formations) திடீரென்று நீர் பிளந்து கொண்டு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்துக் கொட்டும் போது, அது மாந்தர்களின் குமிந்த மரபில் (common traditions) அழிக்கமுடியாத தொன்மத்தை உருவாக்கும். அப்படி ஒரு காலம் கி.மு. 5600 ஆகும்.

இந்தப் பொழுது திடீரென்று துருக்கிக்கு அருகில் உள்ள பாஸ்பரஸ் நீரிணை பிளந்து, மத்திய தரைக் கடலின் நீர், வெள்ளமாய், ஒரு பெரும் அருவி போல, கருங்கடலுக்குள் கொட்டி கருங்கடலின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம் என்று பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் William Ryan என்பவரும், Waltar Pitman என்பவரும் சேர்ந்து ஒரு தேற்றை (theory) 1998 அளவில் வெளியிட்டார்கள். (அவர்களுடைய பொத்தகம் Noah's Flood, Simon& Schister, Rockefeller Centre, 1230 Avenue of the Americas, New York NY 10020 - கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.) மற்ற ஆய்வாளர்கள் இந்தத் தேற்றின் ஒரு சில விவரங்களையும் முடிவுகளையும் மறுத்தாலும், முற்றிலும் ஒதுக்கி விடவில்லை. இவர்களின் முன்னீடு, ஆய்வாளர்கள் மனத்தில் ஒரு புதிய பார்வையைக் கொண்டு வந்திருக்கிறது.

இது போன்ற ஒரு நில அழிப்பு தமிழகக் கடற்கரையிலும், குறிப்பாக இன்றையக் குமரிமனைக்குத் தெற்கிலும் நடந்திருக்கலாம். இந்த நிலங்கள் அழிந்ததை ஒரு இயக்கப் படமாக வலையில் போட்டிருந்தார்கள். அதன் சுட்டி கீழே.

http://www.grahamhancock.com/underworld/AshCF1.php?p=1

(மேலே உள்ள தளத்தில் அடுத்தடுத்து 5 பக்கங்கள் இருக்கும். வலைத்தளத்தில் சொல்லுவதை நான் ஏற்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்கள். நான் சுட்டி கொடுத்தது அதில் வரும் இயக்கப் படத்திற்காகவே.)

அந்தப் படத்தில் பார்க்கும் போது குமரிமனைக்குக் கீழே தீவு ஒன்றும் தெரியும். அது தான் இராமாயணத்தில் சொல்லப் படும் இலங்கையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கம்பனில் சொல்லப்படும் அடையாளங்கள் குமரி முனைக்கும் தெற்கேதான் கொண்டு போகின்றன. தவிர "குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை" என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையிலும் கூறியிருக்கிறார்.

இனி மீண்டும் கம்பனுக்கே வருவோம். மகேந்திர மலைக்கு வந்து சேரும் அனுமனும் மற்றவர்களும் சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தங்கள் இயலாமையைப் பேசிக் கொண்டிருப்பதைச் சம்பாதிக் கழுகு கேட்கிறது. அப்பொழுது தன் உடன்பிறந்தான் சடாயு இறந்ததை அறிந்து மிகுந்த வருத்தம் உறுகிறது. பின்னால் இராவணன் சீதையை இலங்கைத் தீவுக்குக் கொண்டு போன செய்தியை வாணரருக்குச் சம்பாதிக் கழுகு சொல்லுகிறது. இலங்கையின் இருப்பிடத்தையும் அதன் தொலைவையும், இராவணனின் நகர் பற்றியும் கூடச் சொல்லுகிறது. இதைத் தொடர்ந்து, கிட்கிந்தா காண்டம், சம்பாதிப் படலத்தில் "ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை" என்ற வாசகமும், கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில் "ஓசனை ஒன்று நூறும்" என்ற குறிப்பும் கம்பனால் சொல்லப் பெறும்.
ஆக மகேந்திரமலையில் இருந்து இலங்கைநகரம் 100 யோசனைத் தொலைவு இருந்தது. இந்தத் தொலைவை அனுமன் தாவிக் கடந்ததாக இராம காதை கூறும். சரி, யோசனை என்ற தொலைவு இன்றையக் கணக்கில் எவ்வளவு ஆகும்?

பொறிஞர் கொடுமுடி சண்முகம் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற ஆய்வுப் பொத்தகத்தில் (படிக்க வேண்டிய இரு பொத்தகங்கள்; மீனா கோபால் பதிப்பகம், மனை எண் 9, புதிய கதவு எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை -88, தொலை பேசி: 22533667)

1 விரல் = =1 3/8 inch = 3.5 cm (3.48958 cm)
6 விரல் = 1 சாண் =8 1/4 inch = 21 cm
2 சாண் = 1 முழம் =16 1/2 inch = 42 cm
2 முழம் = 1 கோல் =33 inch = 84 cm
4 கோல் = 1 தண்டம் =11 ft = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1 mile 220 ft = 1.675 Km
4 கூப்பீடு = 1 காதம் = 4 mile 1 furlong 220 ft = 6.7 Km
4 காதம் = 1 யோசனை =16 mile 5 furlong 220 ft = 26.82 Km

இந்த அளவீடுகள் கிட்டத்தட்ட சிற்சில மாற்றங்களுடன் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து நாவலந்தீவு எங்கணும் (தமிழகமும் சேர்த்து) இருந்ததாகத்தான் பல ஆவணங்களும் (கௌடில்யரின் அர்த்த சாத்திரம் கூட) சொல்லுகின்றன.

100 யோசனை என்பது 2682 கி.மீ. ஆகும். அதாவது மகேந்திர மலையில் இருந்து இலங்கை நகரம் 2682 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும். சரி கம்பன் காதத்திற்கு மாறாக யோசனை என்று தவறாகச் சொல்லிவிட்டான் என்றால் 670 கி.மீ. தொலைவில் இலங்கை இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகக் கம்பனின் அறிவைக் குறைசொல்லி நாம் குறைத்துக் கணக்கிட்டுக் கொண்டே போகலாம்.

எப்படி முட்டிப் பார்த்தாலும், இன்றைய இலங்கை பற்றிய கணக்கே ஒட்டிவராது. வால்மீகியோ, கம்பரோ தாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாதவர்களா?

அடுத்த செய்திகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.

7 comments:

Anonymous said...

ராமாயணம் பற்றிய பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. ராமாணத்தில் செய்யப்பட்டுள்ள இடைச் செருகல்களையும் மோசடிகளைகயும் எனக்குத் தெரிந்த வரையில் ராமாயண பண்டிதரான திண்டுக்கல் அமிர்தலிங்கய்யர் போன்று வேறு யாரும் செய்ததில்லை. 1969ல் வெளிவந்த இவருடைய புத்தகமான ‘ராமாயண விமர்சா‘ வை தமிழில் மொழிபெயர்க்க முனைந்துள்ளேன். இவருடைய முடிவு இதுதான்.

1. ராமாயணம் ஒரு கலைப்படைப்புதான். காளிதாசரின் காவியங்களைப் போன்று இதுவும் ஒன்று
2. இதில் ராமன் ஒன்றும் கடவுள் அவதாரம் இல்லை. வெறும் மனிதனே
3. ராமன் 11000 ஆண்டுகள் ஆளவும் இல்லை வாழவும் இல்லை
4. தசரதனும் 60000 ஆண்டுகள் வாழவில்லை. ஆளவில்லை
5. ராமனுடைய கோசல ராஜ்யம் என்பது பிரிக்கபடாத தஞ்சை மாவட்டத்தைவிட சிறியது. எனவே தசரதன் ஒரு சக்ரவர்த்தியல்ல
6. ராம ராவண யுத்தம் என்பது விந்தியமலையில் வடசரிவில் உள்ள லங்கா என்ற இடத்தில் நடந்திருக்கிறது. லங்காவைச் சுற்றி ஒரு ஓடை (ஆறு) ஓடுகிறது.
7. வால்மிகியின் ராமாயணம் சமஸகிருத மொழியின் அனுஷ்தூப் அலகு உடையது. சிலரின் நன்மைக்காக மட்டுமே உள்நோக்கத்துடன் இதில் சொருகப்பட்ட திரிஷ்தூப் மற்றும் இதர அலகு சமஸகிருத செய்யுள்களை நீக்கினால் கிடைப்பது 24000 செய்யுள்கள் அல்ல வெறும் 10000 செய்யுள்களே!
8. ராம-ராவணயுத்தத்துடனும் ராமன் பட்டாபிஷேகத்துடனும் ராமாயணம் முடிந்து விட்டது. கடைசி பகுதியான உத்தரகாண்டம் (ராமராஜ்யம் சம்பந்தமானது)முழுக்க முழுக்க 10ம் நூற்றாண்டுக்குமேல் சொருகப்பட்டவையே
தீவிர ராம பக்தராக இருந்த அமிர்தலிங்கய்யரை இத்தகைய முடிவுகள் எடுக்க தூண்டியது (கிட்டத் தட்ட 1955ம் ஆண்டில்) அவருடைய அண்ணன் பரமசிவய்யரின் ஆய்வும் 1940ல் வெளிவந்த அவருடைய புத்தகமான ‘ராமாயணமும் லங்காவும்‘. லங்கா எங்குள்ளது என்பதை பரமசிவய்யர் தேடும் முயற்சிதான் இந்த புத்தகம். ராமன் அயோத்தியை விட்டு வெறியேறிய நாளிலிருந்து அவன் கானகம் (சித்திரக் கூடம்)சென்று அயோத்தியா திரும்பும்வரை அவனுடைய நடையின் வேகத்தை சராசரி மனிதனின் வேத்தை வைத்து கணக்கிட்டு வால்மிகி வருணிக்கும் பூகோள வரையரைகளையும் சேர்த்து லங்கா என்பது விந்திய மலையின் வட சரிவில் உள்ளது என்று முடிவுக்கு வருகிறார். அத்துடன் ராமாயண வரைபடத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

இத்தகைய புத்தகங்கள் ஆங்கிலத்திலும் இதர இந்திய மொழிகளிலும் வெளிவர யாரேனும் உதவினால், இனிமேலும் ராமனை வைத்து பிழைப்பு நடத்துவது மட்டுபடாவிட்டாலும் ராமனை வைத்து திட்டமிடும் மதமோதல்களையாவது முறியடிக்கலாம். இத்தகைய நோக்கத்துடன் ஆசிரியரின் கட்டுரை வெளியானால் நல்லது.

அருண்மொழி said...

விஜயராகவன்,

நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் எந்த மொழியில் எழுதப்பட்டது? எங்கே கிடைக்கும்?

VS Narla என்பவர் கிட்டத்தட்ட இதே கருத்தை வைத்து ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். சில வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டில் படித்தேன். அந்த புத்தகம் கிடைத்தால் வலைபதிவில் அதை பதிய முயற்சி செய்கின்றேன்.

Anonymous said...

திண்டுக்கல் அமிர்தலிங்கத்தின் ‘ராமாயண விமர்சா‘ என்ற புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. என்னிடம் ஒரு பிரதி உள்ளது. மறுபதிப்பிற்காக முயற்சி எடுத்து வருகிறேன். புத்தகம் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. புத்தகத்தை மென்வடிவத்திற்கு மாற்றிவிட்டேன். மின்எழுத்து வடிவத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்களில் முடித்து விடுவேன். பிறகு அச்சுக்கு தயாராகிவிடும். நண்பர் ஒருவருக்கு ஒரு ஒளிப்பிரதியை கொடுத்து ஒருபகுதியை மொழிமாற்றம் செய்யச் சொல்லியிருக்கிறேன். பரமசிவய்யரின் புத்தகம் பற்றி அமிர்தலிங்கத்தின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவே பரமசிவய்யரின் புத்தகத்தை தேடி வருகிறேன். விரைவில் கண்டுபிடித்துவிடுவேன். அச்சடிக்க முடியவில்லை என்றால், மின்அஞ்சல் மூலமாக கேட்பவர்களுக்கு அதன் மென்வடிவத்தை வெளியிட தயாராக இருக்கிறேன்.

Anonymous said...

Thiru. Vijayaragavan,

Please post the electronic copy on the net and post the link here. I am very interested in reading this book.

Thank you in advance,
Easan

Anonymous said...

dears
itu ponta aaraychi kadduraikal, tamil, tamilan ivarkaludaiya panpaadu, kalacharam, god nampikkai ellaam viddu western culture kku maatti vida kkoodiya nilamai varum,

1, pazhamn tamilan kalacharam, panpaadu illathavana,
2, tamilanukku god kidaiyatha

itu thidda middu anniya(christain people) sakthi kalaal punayappadum kaddurai kal

hindu tamilar kal dady, mummy enpatu illai,

ungalaal bapile mattum kurain i reserch seya mudiuma

kalaikumar said...

can you send one copy of "ramayana vimarsa" book

skalaikumar@gmail.com

Anonymous said...

Hi Iam Prabhu from chennai,joined today in this forum... :)