Monday, October 01, 2007

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 5

இராமர் சேது என்று இன்று தவறாகச் சொல்லப்படும் மண்திட்டு ஒரு பக்கம் இராமேசுரத்தையும் (1964 புயலில் நம் கண்ணறிய அழிந்து போன பழைய தனுக்கோடி) இன்னொரு பக்கம் தலைமன்னாரையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. இதே போல இன்னொரு திட்டும் அந்தப் பக்கம் கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம், நயினார் தீவு வரை இருக்கிறது. அந்தத் திட்டும் தான் உயர்ந்து கிடக்கிறது. இந்தப் பக்கம் இராமேசுவரத்திற்கு அருகில் இருப்பதை மட்டும் இராமர் கட்டியதாகச் சொல்லும் கூட்டம், அந்தப் பக்கத்தில் கிடக்கும் இன்னொரு சேதுவை (அதை ஆதி சேது என்பார்கள்.) யார் கட்டியதாகச் சொல்லுவார்கள்? கடல்மட்டம், கடலியல் வரைவு தெரிந்தவர்கள் "இந்த இரண்டு சேதுக்களும் இரட்டையானவை" என்றே சொல்லுவார்கள். ஒன்றை மட்டும் உயர்த்தி, இன்னொன்றைக் கண்டுகொள்ளாமல் விடுவது எப்படி? அப்படி என்ன ஓரவஞ்சனை? வலது கண்ணுக்கு மையும், இடது கண்ணுக்குச் சுண்ணாம்புமா உங்கள் ஊரில் அப்புவார்கள்?

அடுத்தது அகம் 70 இல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடிய நெய்தல் திணைப் பாடலில் இராமன் திருவணைக் கரைக்கு வந்து இருந்ததாய் ஒரு செய்தியைப் பார்ப்போம். தலைவியிடன் காதல் தொடர்பாக ஊரார் பேசுவதைப் பற்றித் தலைவியிடம் சொல்லும்போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுவதாகப் புலவர் பாடுவார்:

கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்
பலரும் ஆங்(கு)அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புகுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்(கு) அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்(று)இவ் அழுங்கல் ஊரே. (அகநானூறு:70:5-17)

இந்தப் பாடலில் வரும் பரதவர் என்ற இனக் குழுவினர் தொடக்க காலத்தில் சோழநாட்டுக் கடற்கரையிலேயே இருந்தவர். (என் இடுகையின் முதற்பகுதியில் இளஞ்சேட்சென்னி பரதவரை வெற்றி கொண்ட செய்தியைக் குறிப்பிட்டு இருப்பேன்.) பாண்டிய நாட்டில் பரதவர் அவ்வளவாக விரிந்து இருந்தது இல்லை. பாக்கம் என்று முடியும் நெய்தல் ஊர்ப் பெயர் சோழநாட்டிலும், பின்னால் அதனின்றும் விலகிய தொண்டை நாட்டிலுமே உள்ள பெயராகும். பாண்டிய நாட்டில் இது போன்ற பெயர்கள் மிகவும் அரிது. ஞாழல், புன்னை ஆகிய மரங்கள் விரவிய கானலம் பெருந்துறை (காடு பின்புலமாக இருக்கும் பெருந்துறை) என்ற குறிப்பு கோடிக்கரையையே உணர்த்துகின்றது. இன்றும் இங்கு ஞாழலும், புன்னையும் நிறைந்து கிடக்கின்றன. கோடிக்கரைக் காடு என்றுதான் இந்தப் பக்கம் சொல்லுகிறார்கள். இது போன்ற விவரிப்பு இராமேசுவரத்துக்கோ, இராமநாதபுரத்துக்கோ ஒத்து வராது. அவை பாலை நிலத்தின் கூறுகள் என்பது அங்கே வசிக்கிறவர்களுக்கு நன்றாகவே தெரியும். இது போகத் தொல்முது கோடி என்பது ஆதி சேது என்ற குறிப்பையும் உணர்த்துகிறது.

அதையும் மீறி வென்வேல் கவுரியர் என்று பாண்டியரைச் சுட்டுவதால் பாண்டிநாட்டுத் தலத்தைக் குறிக்க முடியுமா என்றால் "சற்றுப் பொறுங்கள்" என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கு தொண்டி, மீமிசல் எனக் கிழக்குக் கடற்கரை ஊர்களைக் கடந்து முத்துப் பேட்டை வரை போனால் கோடிக்கரை வந்துவிடும். இந்த ஊர்களுக்கு உட்பரப்பில் இருக்கும் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ஆவுடையார் கோயில் ஆகிய ஊர்கள் எல்லாம் ஒரு காலத்தில் முத்தூர்க் கூற்றத்திற்கு அண்மையும் சேர்ந்தவையுமே. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்றைக்கும் இருக்கும் இந்தப் பகுதிகள் காலம் காலமாய் சோழருக்கும் பாண்டியருக்கும் இடையே பந்தாடப் பட்ட பகுதிகள். இம்மென்றால் சோழன் பாண்டியனிடமிருந்து இவற்றைப் பிடுங்கிக் கொள்ளுவான்; இல்லையென்றால் சோழனிடமிருந்து பாண்டியன் பிடுங்கிக் கொள்ளுவான். கடைசிக் கடற்கோளில் தன் நாடு கணிசமாகக் குறைந்ததால் சோழனிடமிருந்து முத்தூர்க் கூற்றத்தையும், சேரனிடமிருந்து குண்டூர்க் கூற்றத்தையும் பாண்டியன் பறித்துக் கொண்ட கதை கலித்தொகை 104.4 ல் கீழ்வருமாறு சொல்லப்படும்.

மலிதிரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்
மெலிவு ௾ன்றி, மேல்சென்று, மேவார் நாடு ௾டம்பட
புலியொடு வில்நீக்கி, புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

இந்த இரு கூற்றங்களின் பெயரை உரையாசிரியர் வழியாகவே நாம் அறிகிறோம். தவிர மணிவாசகர் காலத்தில் பரி வாங்கப் போகும் திருப்பெருந்துறையும் (ஆவுடையார் கோயிலும்) இந்தக் கூற்றத்தில் தான் உள்ளது. (பரிவாங்கிய போது இது பாண்டியர் கூற்றமாகவே இருந்திருக்கிறது.) இன்றும் கூட இந்தப் பகுதிகளில் சோழ, பாண்டிய நாடுகளின் இரண்டு பக்கத் தாக்கங்களின் மிச்சம் கணிசமாகவே இருக்கிறது. அதனால், கோடிக்கரை ஓரோர் சமயம் பாண்டியரின் ஆட்சிக்கு வந்ததில் வியப்பு இல்லை. (அகம் 70 ஆம் பாடல் தனுக்கோடியைக் குறிக்கிறது என்று சொல்லுவாரும் உண்டு. என்னால் மேலே சொன்ன காரணங்களுக்காக ஏற்க முடியவில்லை.)

இனி அகம் 70 ஆம் பாடலில், வரும் செய்தியைப் பார்ப்போம். தோழி சொல்லுகிறாள்: (இங்கே அட்லாண்டா பெ.சந்திரசேகரனின் சொற்களை அப்படியே பயனாக்கி "கோடிக்கரை" என்று ஊர்ப்பெயரை மட்டும் மாற்றித் தருகிறேன். அவர் தனுக்கோடி என்ற கருத்தாளர்.)

"உன்னைத் திருமணம் செய்துகொள்ளுமுன் அவருக்கும் உனக்கும் இருந்த காதலைப் பற்றி ஊர்ப் பெண்கள் ஊரார் பலரும் அறியுமாறு அலர் (கிசுகிசு!) பேசிச் செய்தியைப் பரப்பினர். ஆனால், திருமணம் ஆன பின்னரோ [நிலைமை வேறு]; வெற்றி தரும் வேல் ஏந்திய கௌரியர் குலத்துப் பாண்டியருக்குரிய மிகப் பழமையான கோடிக்கரையில் முழங்கும் பெருங் கடல் அலைவீசும் துறையில் வெற்றியன்றி வேறேதும் அறியாத இராமன் தன் இலங்கைப் படையெடுப்புப் பற்றி ஆராய்வதற்காக ஓர் ஆல மரத்தடியின் அடியில் அமர்ந்திருந்தான்; அப்போது அமைதியை வேண்டி ஆல மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை ஒலியெழுப்பாமல் இருக்கச் செய்ததுபோல், ஊர் அமைதியாகிவிட்டது!" என்றாள்.

ஆலமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளை இராமன் கையுயர்த்தி ஒலி எழுக்காமல் இருக்கச் செய்தது கம்பனில் கிடையாது; வான்மீகியிலும் கிடையாது. இப்படி ஒரு செய்தி கோடிக்கரையில் சொல்லப் படுவதில் இருந்தே, கடைச் சங்க காலத்திலேயே இன்றைய இலங்கைக்கும் இராம காதையில் சொல்லப்படும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிதல் குழப்பம் ஏற்படத் தொடங்கிவிட்டது என்று அறியலாம். ஆனாலும் ஒருசிலர் இராமர் சேது என்று தங்களுக்குத் தோன்றியபடி கற்பனை வாதம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இராவணன் ஆண்ட ௾லங்கை எது?" என்ற தலைப்பில் சைவசித்தாந்த வெளியீட்டுக் கழகத்தின் செந்தமிழ்ச் செல்வி இதழில் "சிலம்பு 23" (volume 23) ல் மயிலை. சீனி வேங்கடசாமியார் மற்ற ஆய்வாளர்களின் முடிவுகளைத் தெரிவித்திருப்பார். ஏகப்பட்ட வட இந்திய ஆய்வாளர்கள் இராவணனின் இலங்கையை இன்றைய சத்திஸ்கர், ஜார்க்கண்ட் பகுதியில் ஒரு ஏரிக்கு நடுவில் காட்டுவார்கள். தவிர இன்றைய இலங்கையின் மகாவம்சத்தில் பழஞ்செய்தியாக, தொன்மக் கதையாகக் கூட, இராவணன், இலங்கை என்னும் பெயர்கள் கூறப்படவில்லை.

இனி அடுத்து இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் நடுவே பாம்பன் வாய்க்கால் ஏற்பட்டது பற்றிப் பார்க்கலாம். இதை நான் சொல்லுவதைக் காட்டிலும், இராமநாத சுவாமி கோவில் கும்பாபிசேக மலர் 1975ல் "இராமேசுவரத் தீவு" என்னும் தலைப்பில் மயிலையார் எழுதிய ஒரு கட்டுரையை அப்படியே தட்டச்சித் தருகிறேன்.
------------------------------
இராமேசுவரம் என்னும் இச்சிறு தீவு முற்காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்த ஒரு நிலமாக இருந்து பிறகு சிறு தீவாக மாறிற்று என்னும் வரலாறு பலருக்குத் தெரியாது. இச்செய்தி பலருக்கு வியப்பாக இருக்கும். ஆனால் இராமேசுவரம் தீவும் இராமநாதபுரமும் ஒரு காலத்தில் இணைந்திருந்தன என்பது உண்மை.

தென்னிந்தியாவின் கடற்கரை ஓரங்கள் எக்காலத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. கடற்கோள்களினாலும், கடல் அரிப்பினாலும் நமது நாட்டுக் கடற்கரைப் பக்கங்களில் எத்தனையோ மாற்றங்கள் நெடுங் காலமாக நடந்துள்ளன. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது பாண்டிய நாட்டுக்கு அருகில் இருக்கிற இலங்கைத் தீவு முன்னொரு காலத்தில், பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே, தமிழகத்தோடு இணைந்து ஒரே நிலமாக இருந்தது. இந்தப் பெரிய நிலப்பரப்பு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கடற்கோளினாலும், கடல் அரிப்பினாலும் சிறிது சிறிதாகச் சிதைந்து போய்க் கடைசியில் தனித் தீவாகப் பிரிந்து போய், பிற்காலத்தில் இலங்கைத் தீவாக மாறிப் போயிற்று. நில ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் இந்த வரலாற்றுச் செய்தியைக் கூறுகிறார்கள். இலங்கை, தனித் தீவாகப் பிரிந்து போன பிறகுங் கூட, கொழும்புக்குத் தெற்கேயுள்ள கடலோரங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதி நிலங்கள் கடலில் முழுகிப் போயுள்ளன என்று மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.

கன்னியாகுமரி இப்போது தமிழகத்தின் தெற்கெல்லையாக அமைந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒரு நிலப்பரப்பு தமிழகத்தோடு இணைந்திருந்தது. அந்த நிலப்பரப்பு ஏறத்தாழ இரண்டு மாவட்டங்கள் (ஜில்லாக்கள்) அளவு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த நிலப்பரப்பு பிற்காலத்தில் கடற்பெருக்கினாலும், கடல் அரிப்பினாலும், பையப் பைய கடலில் மூழுகிப் போய்விட்டது. அந்த நிலப்பரப்பு முதல்தடவை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் ஒரு பகுதி மறைந்து போய் எஞ்சியிருந்த இன்னொரு பகுதி நிலம் மற்றுமொரு கடற்பெருக்கினால் மறைந்து போயிற்று, இந்த வரலாற்றுச் செய்தியைச் சிலப்பதிகாரமும், கலித்தொகையும் கூறுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரமும், கடற்கோளினால் முழுகிப் போன இந்த நிலங்களைக் கூறுகிறது.

திருப்பதி என்னும் திருவேங்கடமலையை எல்லோரும் அறிவார்கள். வேங்கடமலையைச் சூழ்ந்திருக்கும் நாடுகளுக்கு வேங்கடக் கோட்டம் என்பது பழைய பெயர். இந்த வேங்கடக் கோட்டத்துக்குக் கிழக்கே கடற்கரையோரமாகப் பவத்திரிக் கோட்டம் என்னும் ஒரு நிலப்பரப்பு இருந்தது. பவத்திரிக் கோட்டம் ஒரு ஜில்லா (மாவட்டம்) அளவுள்ள நிலம். இந்தப் பவத்திரி நாட்டை 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நக்கீரர் அகநானூறு 340ம் செய்யுளில் கூறுகிறார். இந்தப் பவத்திரிக் கோட்டம் கி.பி.11ம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் போயிற்று. கடலில் முழுகிப் போன பவத்திரிக் கோட்டம் இப்போது திருவேற்காடு ஏரி (பழவேற்காடு ஏரி - இராம.கி) என்று பெயர் பெற்று பெரும் நீர்ப்பரப்பாக இருக்கிறது. பவத்திரிக் கோட்டம் இருந்ததையும், அது கடலில் முழுகிப் போனதையும் பிற்காலத்துச் சோழ அரசர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பவத்திரிக் கோட்டத்தில் இருந்த ஊர்களில் ஒன்று காகந்தி என்பது. "கடல்கொண்ட காகந்தி" என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. நெடுங்காலமாகத் தொண்டைநாடின் கடற்கரையொரமாக இருந்த பவத்திரிக் கோட்டம் கடலில் முழுகிப் போய் இப்போது திருவேற்காடு ஏரியாய் மாறிப் போய்விட்டது. இந்த ஏரியின் தென்பகுதி இப்போது தமிழக அரசாட்சிக்கு உட்பட்டும், வடபகுதி ஆந்திர அரசுக்கு உட்பட்டும் இருக்கின்றன. (ஸ்ரீஹரிக் கோட்டா என்று இன்று சொல்லப்படும் விண்வெளி ஏவுகணைத் தளத்தின் பெயரில் பின்னுள்ள "கோட்டா" இந்தக் கோட்டமாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஸ்ரீஹரி என்னும் திரிவு எப்படி வந்தது, பவத்திரிக்கும் அதற்கும் உள்ள ஓசைத் தொடர்பு என்ன, என்று இன்னும் அறிந்தேன் இல்லை; தேடுகிறேன் - ௾ராம.கி)

தமிழகத்தின் தெற்கே பாண்டிநாட்டிலே கிழக்குக் கடற்கரையையடுத்து கொற்கைக்குடாக் கடல் இருந்தது. கொற்கைக் குடாக் கடல் நிலத்தில் புகுந்து உள்கடலாக அமைந்திருந்தது. கொற்கைக் குடாக் கடலின் மேற்கே கொற்கைப் பட்டினம் இருந்தது. இது துறைமுகப் பட்டினமாகவும் முத்துக் குளிக்கும் இடமாகவும் இருந்தது. கொற்கை நகரத்தைப் பற்றிச் சங்கப் பாடல்கள் சிறப்பாகக் கூறுகின்றன. தாமிரபரணி ஆறு அக்காலத்தில் கொற்கைக் குடாக் கடலில் சென்று விழுந்தது. கடற்கரையில் இருந்து ஐந்து மைல் தூரம் உள்புகுந்து உள்நாட்டுக் கடலாக இருந்த கொற்கைக் குடாக் கடல் பிற்காலத்தில் ஏறத்தாழ 10 ஆம் நூற்றாண்டில் மண்மூடி மறைந்து போய்விட்டது. கடற்கரைப் பக்கமாகக் கடல் அலைகள் மணலைக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் ஒரு புறத்தைத் தூர்த்து விட்டன. தாமிரபரணி ஆறு மணலை அடித்துக் கொண்டு வந்து கொற்கைக் குடாக் கடலின் இன்னொரு புறத்தைத் தூர்த்துவிட்டது. இவ்வாறு இருபுறமும் மணல் தூர்ந்து கொற்கைக் குடாக்கடல் அடியோடு மறைந்து போய் இப்போது அது இருந்த இடம் நிலமாக மாறிவிட்டது. தாமிரபரணி ஆறும் இடம் மாறிவிட்டது. இவ்வாறு கடற்கரையோரங்களில் கடல் அரிப்பினாலும், கடல்பெருக்கினாலும் பல இடம் கடல்மாறிப் போனதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். (மாமல்ல புரத்திற்கு அருகில் ஏற்பட்ட மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். - இராம.கி.)

இராமேசுவரம் ஒரு காலத்தில் இராமநாதபுரத்தோடு இணைந்திருந்ததென்றும், அது பிற்காலத்தில் தீவாகப் பிரிந்து தாய்நாட்டில் இருந்து பிரிந்து போய்விட்டதென்றும் கூறுகிறோம். அதனை விளக்குவோம். இராமேசுரம் இராமநாதபுரத்துடன் இணைந்திருந்த காலத்தில் இராமேசுவரக் கோயிலில் இருந்து இராமலிங்கப் பெருமானை இராமநாதபுரத்துக்கு எழுந்தருளிவித்து ஒரு வாரம் தங்கிப் பிறகு மீண்டும் இராமேசுவரத்துக்குக் கொண்டு போவது வழக்கமாய் இருந்தது. இவ்வாறு இராமேசுவரம் தீவாக மாறுவதற்கு முன்பு வரையில் இது நடந்து வந்தது. தீவாக மாறிப் போனபிறகு இராமேசுவரர் இராமநாதபுரத்துக்கு எழுந்தருளுவது நின்றுவிட்டது. ஏறத்தாழ கி.பி.12ம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட சிங்கள அரசன் தமிழ்நாட்டின் மேல் படையெடுத்துப் போர் செய்ய வந்தபோது, அவனுடைய சேனையைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டுவந்து இராமேசுவரத்தில் இறங்கிப் பிறகு அந்தச் சேனையை இராமநாதபுரத்துக்கு அழைத்து வந்தான் என்று சுல்லவம்சம் (=சூளவம்சம் - இராம.கி) என்னும் இலங்கைநூல் கூறுகிறது. இதனாலும் இராமநாதபுரமும் இராமேசுவரமும் முற்காலத்தில் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை அறிகிறோம்.

ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுர வட்டத்தில் போர்ச்சுகீசியர் வந்து கப்பல் வணிகம் செய்தார்கள். அக்காலத்தில் பெரும் புயலடித்துக் கடல் கொந்தளித்துக் கடலில் நீண்டுகிடந்த இராமேசுவரத்தைத் தீவாகப் பிரித்துவிட்டதும், கடல்நீர், சிறு கால்வாய் போலப் பாய்ந்து இராமநாதபுரத்தையும், இராமேசுவரத்தையும் பிரித்துவிட்டது. சிலகாலம் வரையில் இந்தச் சிறு கால்வாயைக் கடந்து இராமநாதபுரத்துக்குப் போக்குவரத்து இருந்தது. பிறகு இந்தக் குறுகலான கால்வாயில் கடல்நீர் புகுந்து அதை அகலமாக்கி விட்டது. அப்போது போர்த்துகீசிய வாணிகர் தங்களுடைய வணிகக் கப்பல்களின் போக்குவரத்துக்காக இந்தக் கால்வாயை ஆழமாகவும் அகலமாகவும் செய்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் ஆயிரக்கணக்கான வராகன்களைச் செலவு செய்தார்கள்.

புயல் அடித்து காற்று மழையினாலும் கடல் கொந்தளிப்பினாலும் இயற்கையாக உடைப்புண்ட இராமேசுவரம் பிறகு பையப் பைய உடைப்பு அகலமாகிக் கால்வாய் ஆகிவிட்டது. அந்தக் கால்வாயை போர்த்துகீசிய வாணிகர் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக அகலமும் ஆழமுமாகச் செய்து விட்டனர், இவ்வாறு இராமேசுவரம் தனித்தீவாகப் பிரிந்து போயிற்று. இராமநாதபுரத்துக்கும், இராமேசுவரத்துக்கும் உள்ள கால்வாய் இப்போது பாம்பன் கால்வாய் என்று பெயர் கூறப்படுகிறது. இராமேசுவரமும், இராமநாதபுரமும் முன்னொரு காலத்தில் இணைந்து ஒரே நிலமாக இருந்தது என்பதைப் பிற்காலத்தவர் மறந்து விட்டார்கள்.
----------------------------------

இராமநாதபுரத்துக்கும், இராமேசுரத்துக்கும் இடையில் பாம்பன் கால்வாயை போர்த்துகீசியர் வெட்டிய போதும், பின்னால் ஆங்கிலேயர்கள் அதை அகலப் படுத்திய போதும், இராமர் சேது என்று சொல்லி அதை நிறுத்த ஆட்கள் இல்லை. இன்றோ, சேதுக் கால்வாய் வெட்டுவதை நிறுத்துவதற்கு இராமனைக் காரணம் காட்டுகிறார்கள்.

இனி ஆதி சேதுவுக்கும், இப்பொழுது பேசப்படும் இராமர் சேதுவுக்கும் இடையிலான நிலம் கடற்கோளில் அழிந்த செய்தியை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

அரக்கனும், தமிழும், இராமர் சேதுவும் - 4

"அரக்கனும் தமிழும்" என்ற முன்பாதித் தலைப்பைப் பற்றி இதுகாறும் பேசிய நாம், "தமிழும், இராமர் சேதுவும்" என்ற பின்பாதித் தலைப்பிற்குள் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் முன்பாதித் தலைப்பிற்குப் போகலாம். (வான்மீகியையோ, அல்லது கம்பனையோ, ஒழுங்காகப் படித்தாலே, சேது பற்றி விளங்கிப் போகும் என்றாலும் திருகு வாதங்களையும், சூழ்ச்சிகளையும் சேர்த்து வைத்து, ஓர் இயற்கை மண்திட்டை இராமர் சேது என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இருப்பவர்களுக்கு நாம் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நொதுமலாய் இருக்கும் பொதுவானவர்களுக்கு நிலையை ஓரளவாவது புரிய வைக்க வேண்டும் என்றே இந்தக் கட்டுரைத் தொடரைத் தொடங்கினேன்.)

"இராவணன் எங்கே சீதையைத் தூக்கிக் கொண்டு போனான்?" என்று தேட முற்பட்ட வானரர்களை நான்கு திசைகளுக்கும் பிரித்து அனுப்பும் சுக்ரீவன், தென்திசைக்கு அனுமனையும், அங்கதனையும், சாம்பவனையும் இன்னும் சிலரையும் அனுப்புவான். அவர்களுக்கு, எங்கு தேடவேண்டும் என்றும், எப்படி போக வேண்டும் என்றும் கட்டளை பிறப்பிக்கும் சுக்ரீவன் தென்கடல் வரைக்கும் அவர்களைப் போகச் சொல்லியிருப்பான். இங்கு வான்மீகியை எடுத்துரைக்காமல், அவரைப் பெரும்பாலும் ஒட்டிச் சென்ற, நமக்கு நன்கு தெரிந்த கம்பனில் இருந்தே, குறிப்புத் தருகிறேன். கிட்கிந்தா படலம் நாடவிட்ட படலத்தில்

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் திருமுனிவன் தமிழ்ச்சங்கம்
சேர்கிற் பீரேல்
என்றுமவன் உறைவிடமாம் ஆதலினால் அம்மலையை
இறைஞ்சி ஏகி
பொன்திணிந்த புனல்பெருகும் பொருநையெனும் திருநதிபின்
பொழிய நாகக்
கன்றுவளர் தடஞ்சாரல் மயேந்திரமா நெடுவரையும்
கடலும் காண்டிர்

என்ற பாடல் வரும். இதில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி "பொதிகை மலையைத் தாண்டி, பொருநையையும் (தாம்பர பெருநையும்) தாண்டிச் சென்றால், மகேந்திர மலையடுக்கையும், அதன் அருகில் கடலையும், காண்பீர்கள்" என்று சுக்கிரீவன் கூற்று மட்டுமே. இதே கூற்றின் படி அனுமனும் மற்றவரும் மகேந்திர மலை போய்ச் சேர்ந்ததை, ஆறுசெல் படலத்தின் கடைசிப் பாடலில் கம்பன் சொல்லுவான்.

வன்திசைக் களிறு அன்ன மயேந்திரக்
குன்று இசைத்தது வல்லையில் கூடினார்
தென்திசைக் கடற்சீகர மாருதம்
நின்றிசைக்கும் நெடுநெறி நீங்கினார்

தென்திசைக் கடலில் இருந்து வரும் ஈரக்காற்று, நின்று ஒலிக்கும் வழிகளைக் கடந்து, தென் திசையைத் தாங்கும் யானை போன்ற மகேந்திர மலையை அடைந்த அனுமனும் மற்றவர்களும், அடுத்து சம்பாதியோடு உரையாடி இலங்கை பற்றி அறிகின்றனர். அதற்குப் போகுமுன் தென் கடல் பற்றிய செய்தியைப் புரிந்து கொள்ளுவோம்.

ஒரு 300/400 ஆண்டுகளாய், வங்காள விரிகுடா என்று சொல்லப்படும் கடல், தமிழ் இலக்கியம் நெடுகிலும் குணகடல் அல்லது கிழக்குக் கடல் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அதை ஒருநாளும் தென் கடல் என்று யாரும் அழைத்ததில்லை. அப்படி அழைத்ததற்கு தமிழில் ஆவணப் பதிவும் கிடையாது. அதே போல அரபிக்கடல் என்று வாஸ்கோட காமா காலத்தில் இருந்து சொல்லப்படும் கடல், குட கடல் அல்லது மேற்குக் கடல் என்றே தமிழ் இலக்கியம் நெடுகிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

தென் கடல் என்பது இன்றைக்கு இந்துமாக் கடல் என்று சொல்லப் படுகிறது. வேத காலத்துச் சில வடபால் நூல்களிலும், பிராமணங்கள், ஆரண்யங்கள் போன்றவற்றில், தென்கடல் என்ற கருத்து அரபிக் கடலைக் குறிப்பதாகவும் சில வடமொழி அறிஞர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள். (ஏனென்றால் சப்த சிந்துவுக்கு அது தென்பகுதி.) அந்த ஆதாரங்கள் வடமொழி இலக்கியங்களைத் தேடினால் கிடைக்கும். வடமொழி இலக்கியத்தில் கிழக்குக் கடல் என்பது "சகரனின் மைந்தர்கள் தோண்டிய செயற்கைக் கடல்" என்றும், அதனால் சாகரம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும், ஒரு தொன்மக் கதை உண்டு. (பின்னால் சாகரம் என்ற சொல் பொதுமைப் பெயராகி மற்ற கடல்களுக்கும் பயன்பட்டது.) ஆனால் வடமொழி இலக்கியங்களிலும் கூடக் கிழக்குக் கடல் ஒரு காலத்தும் தென் கடல் என்று சொல்லப் பட்டது இல்லை.

அடுத்து மகேந்திர மலை என்பது இன்றைக்குக் குமரி மாவட்டத்தில் மகேந்திர கிரி என்ற சொல்லப்படும் இடத்திற்கு (Liquid propulsion centre இருக்கும் இடத்திற்கு) அருகில் உள்ள மலையடுக்கு என்று சொல்லுவார்கள். பின்னால் இந்த மகேந்திர மலையில் இருந்து தான் அனுமன் இலங்கைக்குத் தாவிப் போனதாக இராம காதை சொல்லும். (நெடுங்காலம் கழித்து வந்த மாணிக்க வாசகரும் கூட மகேந்திர மலையை சிவனின் இருப்பிடமாகக் கீர்த்தித் திரு அகவலில் "மன்னும் மாமலை மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்று குறிப்பிட்டுச் சொல்லுவார். ஏதோ ஒருவகையில் மகேந்திரம் என்பது தமிழருக்குச் சிறப்பானதாக இருந்ததோ, என்னவோ? மகேந்திர மலை பற்றிய இலக்கியச் செய்திகளும், மற்ற தரவுகளும் ஆய்வு செய்யப் படவேண்டியவை.)

அடுத்து நெடுங்காலத்திற்கு முன்னால் அழிந்த குமரி நிலம் பற்றிப் பேசவேண்டும். தெற்கே கடற்கோளால் நிலம் அழிந்தது உண்மை. "அது கண்டமா? குறுநிலமா?" என்பதில் தமிழ் அறிஞர்களிடையே பெருத்த வேறுபாடுகள் உண்டு. அந்தக் கருத்தாடலுக்குள் நான் இப்பொழுது போகாமல் அதைத் திரு. சு.கி.ஜெயகரன் (குமரிநில நீட்சி, காலச்சுவடு பதிப்பகம், திசம்பர் 2002. இந்தப் பொத்தகத்தோடு நான் வேறுபட்டாலும், அதே பொழுது, படிக்கவேண்டிய பொத்தகம் என்று சொல்லுவேன்.) சொல்வது போலக் குறுநிலம் என்றே இப்போதைக்கு எடுத்துக் கொண்டு பார்த்தால், இன்றுள்ள குமரிமுனைக்கும் தெற்கே கிட்டத் தட்ட 80 கி.மீ அளவுக்கு கணிசமான நிலம் (குமரிக் கண்டம் என்ற கருத்தைக் காட்டிலும் குமரிநிலம் என்ற சொல்லைப் பயனாக்குவது நல்லது.) அழிந்து போயிருக்கலாம் என்று கொள்ளலாம். (இந்த நீளத்தை சட்டென்று நான் ஒப்ப முடியவில்லை. இன்னும் நீண்டு இருக்கக் கூடும் என்றே எண்ணுகிறேன். அது பற்றிய கடல் ஆய்வு தொடர வேண்டும்.) ஜெயகரன் சொல்லும் இன்னொரு கருத்து (இதில் பெரும்பாலும் யாருமே வேறுபட மாட்டார்கள்.) தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலுமான நிலப்பரப்பும் கூட கடல்மட்ட உயர்ச்சியால் அழிந்து போனது. இதைப் பற்றி விரிவாகக் கீழே பார்ப்போம். இந்த இரு அழிவுகளும் கடல் மட்டம் உயர்ந்ததனால் நடந்திருக்கின்றன.

இற்றைக்குப் 15000 - 12000 ஆண்டுகளூக்கு முன்னால் இருந்த பனியுகத்தில் (ice age) கடலின் மட்டம் இன்று இருப்பதைக் காட்டிலும் 80-100 மீ. குறைந்து இருந்தது. அதனால் நீரின் அடியில் இன்று இருக்கும் பல நிலங்கள் (பெரும்பாலும் பெருநிலக் கடற்கரை, தீவுகள் ஆகியவற்றை ஒட்டியவை) அன்று வெளிப்பட்டு நிலமாகவே இருந்தன. இத்தகைய நிலை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது. அப்படிக் கடற்கரை பெரியதாக இருந்த போது, M130 ஆட்களும் (நாகர், இயக்கர் போன்ற பல்வேறு கருப்பு இனத்தவரும்), பொதுவாக இந்தியர் என்று சொல்லப்பெறும் (என்னைப் போன்ற ஒரு சிலர் திராவிடர் என்றே சொல்ல விழையும்) M20 ஆட்களும் (The Journey of Man - A Genetic Odyssey by Spencer Wells, Penguin Books. M20 ஆட்கள் உலகில் இந்தியத் துணைக் கண்டத்திலேயே தான் மிகுந்து இருக்கிறார்கள் என்றும், இவர்களில் 50% தென்னிந்தியாவிலே இருக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.), இவர்களுக்கு இடையே கலந்து உருவான ஆட்களும், ஆகப் பெரும் கூட்டமே இந்த அழிந்து போன கடற்பரப்பு நிலங்களில் வாழ்ந்து இருப்பார்கள். (இந்த ஆட்களின் வாழ்க்கை எச்சங்கள் தான் சென்னையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் இருக்கும் அச்சரப் பாக்கத்தில் கிடைக்கின்றன.)

பின்னால் வெவ்வேறு காரணங்களில் தூண்டப்பட்டு பனியுகம் முடிந்து, பனிப் பாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி இருக்கிறது. பொதுவாகக் கடல் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் உயரும் போது அது அங்கு வாழும் மாந்தரின் மரபில் கதைகளை உண்டு பண்ணாது. மாறாகச் சில இலக்குச் சார்ந்த புவியியல் அமைப்புகளால் (localized geographical formations) திடீரென்று நீர் பிளந்து கொண்டு வெள்ளமாய்ப் பெருக்கெடுத்துக் கொட்டும் போது, அது மாந்தர்களின் குமிந்த மரபில் (common traditions) அழிக்கமுடியாத தொன்மத்தை உருவாக்கும். அப்படி ஒரு காலம் கி.மு. 5600 ஆகும்.

இந்தப் பொழுது திடீரென்று துருக்கிக்கு அருகில் உள்ள பாஸ்பரஸ் நீரிணை பிளந்து, மத்திய தரைக் கடலின் நீர், வெள்ளமாய், ஒரு பெரும் அருவி போல, கருங்கடலுக்குள் கொட்டி கருங்கடலின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம் என்று பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் William Ryan என்பவரும், Waltar Pitman என்பவரும் சேர்ந்து ஒரு தேற்றை (theory) 1998 அளவில் வெளியிட்டார்கள். (அவர்களுடைய பொத்தகம் Noah's Flood, Simon& Schister, Rockefeller Centre, 1230 Avenue of the Americas, New York NY 10020 - கட்டாயமாகப் படிக்க வேண்டிய ஒன்று.) மற்ற ஆய்வாளர்கள் இந்தத் தேற்றின் ஒரு சில விவரங்களையும் முடிவுகளையும் மறுத்தாலும், முற்றிலும் ஒதுக்கி விடவில்லை. இவர்களின் முன்னீடு, ஆய்வாளர்கள் மனத்தில் ஒரு புதிய பார்வையைக் கொண்டு வந்திருக்கிறது.

இது போன்ற ஒரு நில அழிப்பு தமிழகக் கடற்கரையிலும், குறிப்பாக இன்றையக் குமரிமனைக்குத் தெற்கிலும் நடந்திருக்கலாம். இந்த நிலங்கள் அழிந்ததை ஒரு இயக்கப் படமாக வலையில் போட்டிருந்தார்கள். அதன் சுட்டி கீழே.

http://www.grahamhancock.com/underworld/AshCF1.php?p=1

(மேலே உள்ள தளத்தில் அடுத்தடுத்து 5 பக்கங்கள் இருக்கும். வலைத்தளத்தில் சொல்லுவதை நான் ஏற்கிறேன் என்று பொருள் கொள்ளாதீர்கள். நான் சுட்டி கொடுத்தது அதில் வரும் இயக்கப் படத்திற்காகவே.)

அந்தப் படத்தில் பார்க்கும் போது குமரிமனைக்குக் கீழே தீவு ஒன்றும் தெரியும். அது தான் இராமாயணத்தில் சொல்லப் படும் இலங்கையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கம்பனில் சொல்லப்படும் அடையாளங்கள் குமரி முனைக்கும் தெற்கேதான் கொண்டு போகின்றன. தவிர "குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை" என்று சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையிலும் கூறியிருக்கிறார்.

இனி மீண்டும் கம்பனுக்கே வருவோம். மகேந்திர மலைக்கு வந்து சேரும் அனுமனும் மற்றவர்களும் சீதையைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் தங்கள் இயலாமையைப் பேசிக் கொண்டிருப்பதைச் சம்பாதிக் கழுகு கேட்கிறது. அப்பொழுது தன் உடன்பிறந்தான் சடாயு இறந்ததை அறிந்து மிகுந்த வருத்தம் உறுகிறது. பின்னால் இராவணன் சீதையை இலங்கைத் தீவுக்குக் கொண்டு போன செய்தியை வாணரருக்குச் சம்பாதிக் கழுகு சொல்லுகிறது. இலங்கையின் இருப்பிடத்தையும் அதன் தொலைவையும், இராவணனின் நகர் பற்றியும் கூடச் சொல்லுகிறது. இதைத் தொடர்ந்து, கிட்கிந்தா காண்டம், சம்பாதிப் படலத்தில் "ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை" என்ற வாசகமும், கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில் "ஓசனை ஒன்று நூறும்" என்ற குறிப்பும் கம்பனால் சொல்லப் பெறும்.
ஆக மகேந்திரமலையில் இருந்து இலங்கைநகரம் 100 யோசனைத் தொலைவு இருந்தது. இந்தத் தொலைவை அனுமன் தாவிக் கடந்ததாக இராம காதை கூறும். சரி, யோசனை என்ற தொலைவு இன்றையக் கணக்கில் எவ்வளவு ஆகும்?

பொறிஞர் கொடுமுடி சண்முகம் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற ஆய்வுப் பொத்தகத்தில் (படிக்க வேண்டிய இரு பொத்தகங்கள்; மீனா கோபால் பதிப்பகம், மனை எண் 9, புதிய கதவு எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை -88, தொலை பேசி: 22533667)

1 விரல் = =1 3/8 inch = 3.5 cm (3.48958 cm)
6 விரல் = 1 சாண் =8 1/4 inch = 21 cm
2 சாண் = 1 முழம் =16 1/2 inch = 42 cm
2 முழம் = 1 கோல் =33 inch = 84 cm
4 கோல் = 1 தண்டம் =11 ft = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1 mile 220 ft = 1.675 Km
4 கூப்பீடு = 1 காதம் = 4 mile 1 furlong 220 ft = 6.7 Km
4 காதம் = 1 யோசனை =16 mile 5 furlong 220 ft = 26.82 Km

இந்த அளவீடுகள் கிட்டத்தட்ட சிற்சில மாற்றங்களுடன் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்து நாவலந்தீவு எங்கணும் (தமிழகமும் சேர்த்து) இருந்ததாகத்தான் பல ஆவணங்களும் (கௌடில்யரின் அர்த்த சாத்திரம் கூட) சொல்லுகின்றன.

100 யோசனை என்பது 2682 கி.மீ. ஆகும். அதாவது மகேந்திர மலையில் இருந்து இலங்கை நகரம் 2682 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும். சரி கம்பன் காதத்திற்கு மாறாக யோசனை என்று தவறாகச் சொல்லிவிட்டான் என்றால் 670 கி.மீ. தொலைவில் இலங்கை இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாகக் கம்பனின் அறிவைக் குறைசொல்லி நாம் குறைத்துக் கணக்கிட்டுக் கொண்டே போகலாம்.

எப்படி முட்டிப் பார்த்தாலும், இன்றைய இலங்கை பற்றிய கணக்கே ஒட்டிவராது. வால்மீகியோ, கம்பரோ தாங்கள் என்ன சொல்கிறோம் என்று தெரியாதவர்களா?

அடுத்த செய்திகளுக்குப் போவோம்.

அன்புடன்,
இராம.கி.