Saturday, April 21, 2007

செகை - 2

செகுத்தலின் பயன்பாடு முன்னாற் சொன்ன சொற்களோடு மட்டும் அமையவில்லை. பார்ப்பனர்கள் தங்களை அடையாளம் சொல்லிக் கொள்ளும் போது, ஒவ்வொருவரும் தாங்கள் எந்தக் கூட்டம் என்பதோடு ( கூட்டம்>கூட்ரம்>கூத்ரம்>கோத்ரம். இங்கே கோத்ரத்தை கோ - பசு என்ற விலங்கின் தொடர்பாகச் சொல்லுவது வலிந்து சொல்லும் பொருள். கோத்ரத்தைக் குறிக்கும் போது ஒரு முனிவரின் பெயர் சொல்லி அவரின் பிறங்கடை என்று சொல்லுவார்கள்), வேதத்தில் எந்தச் சாகையைக் கரதலையாகத் தாங்கள் அறிந்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அப்படி வேதப் பிரிவுகளைக் குறிக்கும் சாகை என்ற சொல்லும் கூடச் செகுத்தலில் இருந்து கிளைத்தது தான்.

செகு>சகு>சாகு>சாகை = பிரிவு

(வேதங்களின் வரையறை, பிரிவுகளில் நிலவும் பல சொற்களும் தமிழ் அடிப்படையைத் தான் காட்டுகின்றன. அவற்றை விவரித்துச் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு, பலரின் உள்ளார்ந்த நம்பிக்கை மருட்டித் தடுக்கிறது. ஆய்வு மனப்பான்மை இல்லாமல் கிளிப்பிள்ளையாய்ச் சொன்னதையே சொல்லிக் கொண்டு பலரும் இருக்கிறார்கள். :-))

செகுத்தல் என்ற வினை வேளாண்மையிலும் கூடப் பயனாகிப் பேச்சுத் தமிழில் வேறு ஒரு சொல்லைக் கொண்டு வந்து காட்டும்.

செகு>சகு>சாகு>சாகுபடி = அறுவடை.

சாகுபடியில் பயன்படும் ஆயுதம் ஆன sickle என்பதைச் செகுளை = அரிவாள் என்று சொல்லலாம்.

இன்னும் மேலே போய், ஒரு குமுகாயத்தில் பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அவற்றைப் பிறப்பு, பண்பாடு வழி வகைப் படுத்துகிறார்களே, அந்த முட்டாள் தனமும் கூடச் செகுத்தல் வினையிற் பிறந்தது தான்.

செகு>சகு>சகுதி>சாதி = குமுகாயத்தில் மாந்தப் பிரிவு.

குமுகாயத்தைச் செகுத்துப் பிரித்தவைகளே சாதியாகும். இதை ஜாதி என்று ஒரு சிலர் பலுக்குவது என்னவோ ஒரு மாயத் தோற்றத்தை நமக்குக் காட்டும். "சாதித் தோற்றம் தமிழ்க் குமுகாயத்தில் எப்படி ஏற்பட்டது?" என்று விரிவாக எழுதலாம்; ஆனால், "அமைதியாய் நாம் உரையாடுவோமா?" என்பது கேள்விக் குறியே! காலம் கூடிவரும் இன்னொரு சமயத்தில் அதைப் பார்க்கலாம்.

இப்படிப் பொருளை, வெளியைச் செகுப்பது என்று வந்த பிறகு, காலத்தையும் ஒருவர் செகுக்கலாம் தானே? புவியின் தன்னுருட்டுக் (rotation) கால அளவை ஒரு நாள் என்று கொண்டு, அதை அறவட்டாக (arbirary) 24 பகுதியாய்ப் பிரித்தது மேலையர் வழக்கம். அப்படிப் பிரித்ததை இன்று மணி என்கிறோம். (தமிழர் ஒரு நாளை 60 நாழிகையாய்ப் பிரித்தனர்). இந்த மணியை சுமேரியரின் தாக்கத்தில் மேலை நாகரிகம் இன்னும் நுணுகிப் பிரித்தது நுணுத்தம் என்று ஆயிற்று (நுணுத்து>நுநுத்து>முநுத்து>minute; தமிழில் நகரமும் மகரமும் போலியானவை; நுதல்/முதல், நுப்பது/முப்பது, நுடம்/முடம், நெற்றி/மெற்றி போன்ற சொற்களை எண்ணிப் பார்த்தால் புரியும். முநுத்து என்பது metathesis முறையில் நுமுத்து ஆகிப் பின் நுமித்து>நுமிஷ>நிமிஷ என்று வடமொழியில் திரியும். நாம் மீண்டும் கடன் வாங்கி நிமிடம் என்று சொல்லுவோம். பேசாமல் முதற்சொல்லான நுணுத்தத்தையே புழங்கலாம். பொருள் சட்டென விளங்கும். "minute" ஆன செய்திகள் என்னும் போது நுணுக்கமான செய்திகள் என்று புழங்குகிறோம் இல்லையா? அடிப்படைச் சொல் இரண்டு வகைப் பொருளையும் மேலை மொழி போலவே கொண்டுவருவதை ஓர்ந்து பாருங்கள். நம் மொழியின் சிறப்பும், ஆழ்மும் நமக்கே புரியாமல் எவ்வளவு நாள் இருப்போம்? வைரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதைக் கரியென்று சொல்லும் அறியாமை இங்கு தான் இருக்கிறது. :-)).

இந்த நுணுத்தத்தை மேலையர் minute primere என்று தான் சொன்னார்கள். அதாவது இது பெருமிய நுணுத்தம் என்னும் பெரு நுணுத்தம். ஒவ்வொரு பெருநுணுத்தத்தையும் இன்னும் 60 சிறுபங்காய்ப் பிரித்து, ஆகச் சிறுத்த இரண்டாம் நிலைப் பங்கை minute secondae என்று அவர்கள் அழைத்தார்கள். அதாவது செகுத்த நுணுத்தம். செகுத்தது செகுந்தது என்றும் ஆயிற்று. நாளாவட்டில் இரண்டாம் நிலை நுணுத்தம் என்பது உள்ளார்ந்து புரியப்பட்டு, வெறுமே செகுந்து என்பதே நுணுத்தத்தில் 60ல் ஒரு பங்கு ஆயிற்று.

second = செகுந்து
"after first," 1297, from O.Fr. second, from L. secundus "following, next in order," from root of sequi "follow" (see sequel). Replaced native other (q.v.) in this sense because of the ambiguousness of the earlier word. Second-hand is from 1474; second-rate is from 1669, originally of ships (see rate); second sight is from 1616; an etymologically perverse term, since it means in reality the sight of events before, not after, they occur. Second fiddle first attested 1809.

தமிழில் நாழிகை என்னும் காலத்தைச் சிறுபகுதிகளாய்ப் பிரித்ததை வேறொரு இடத்தில் பார்க்கலாம்.

அடுத்தது செயற்பாடுகளில் நடக்கும் பிரித்தல் பற்றிய செய்தியைப் பார்ப்போம். நம்முடைய செயற்பாடுகளில் ஒரு சிலவற்றை எல்லாரோடும் பொதுவாய்க் கலந்து செய்கிறோம்; அதே பொழுது, ஒரு சிலவற்றைப் பிரித்துத் தனியே வைத்து, எல்லோரும் அறியாத வகையால், மறைவாகச் செயலாற்றிக் கொள்ளுகிறோம். பொதுக் கருமங்கள் பொதுவை(common)யாகவும், தனியே வைப்பதைச் செகுத்து வைத்தல் என்ற பொருளில் செகுதை எனவும் சொல்லலாம். இதைத்தான் ஆங்கிலத்தில் secret என்கிறார்கள்.

secret: செகுதை, செகுத்து வைத்தல்
1378 (n.), 1399 (adj.), from L. secretus "set apart, withdrawn, hidden," originally pp. of secernere "to set apart," from se- "without, apart," prop. ஓon one's ownஔ (from PIE *sed-, from base *s(w)e-; see idiom) + cernere "separate" (see crisis). The verb meaning "to keep secret" (described in OED as "obsolete") is attested from 1595. Secretive is attested from 1853. Secret agent first recorded 1715; secret service is from 1737; secret weapon is from 1936.

secret என்பதைச் சொல்லத் தமிழில் இன்னும் மூன்று சொற்கள் இருக்கின்றன. ஒன்று கமுக்கம், மற்றொன்று கரவம், மூன்றாவது மந்தணம்.

சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தில் மனோரமா "கம்முன்னு கிட" என்று சொல்லுவார் பாருங்கள், அந்தக் கம்மென்று இருத்தல் என்பது பலர் அறியப் பேசாதிருத்தல். கமுக்கம் என்ற சொல் கம்முதலில் பிறந்த பெயர்ச்சொல்.

அடுத்த சொல்லான கரவம் என்பது மறைத்தல் பொருளில் வரும் கரத்தல் வினையில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். கரவம்>கரகம்>கரஹ்யம்>ஹரஹ்யம்>ரஹ்யம் என்று வடமொழி நோக்கித் திரியும். தமிழகத்தில் இருந்து வடக்கே போகப் போக ககரம் ஹகரமாகிப் பின் அதுவும் மறைவது பல சொற்களில் நடந்திருக்கிறது. முடிவில் ரஹ்யம் ரஹஸ்யம் ஆனது பலுக்க எளிமை கருதியே.

மூன்றாவது சொல்லான மந்தணம் என்பதும் மறைவுப் பொருள் கருதியே.

செகுதையில் இருந்து இன்னொரு சொல்லும் விரியும். நம்முடைய செயற்பாடுகளில் செகுதையானவற்றை நம்பிக்கையானவருக்கு மட்டும் சொல்லி வினையாற்றுவது உலகில் பலருக்கும் உள்ள பழக்கம். இப்படிச் செகுதைகளைக் கையாளுபவர் செகுதையர். ஆங்கிலத்தில் secretary என்று சொல்லுவார்கள். Secretary is one who keeps secrets. செகுதையைக் காப்பாற்ற வேண்டியவர் அதைப் பொதுவையாக்கி விட்டால், அப்புறம் நம் கதி அதோ கதி தான்.

ஒரு ஊரின் நிலங்களைச் செகுத்து "இன்னார் இந்தப் பக்கம் வசிக்கலாம், இதுபோன்ற செயல்களைச் செய்யலாம்" என்று அமைத்து வருவது sector என்னும் செகுத்தியாகும். (பகுத்து வந்த பாத்தியைப் போலச் செகுத்து வந்தது செகுத்தி.)

இனி, "இது இதோடு கலக்கக் கூடாது" என்று தனித்து வைக்கும் செயலை segregate: செகுத்தாக்கல் என்று சொல்லுவார்கள்.

1542, from L. segregatus, pp. of segregare "separate from the flock, isolate, divide," from *se gregare, from se "apart from" (see secret) + grege, ablative of grex "herd, flock." Originally often with ref. to the religious notion of separating the flock of the godly from sinners. Segregation (1555) is from L.L. segregatio, from L. segregatus; in the specific U.S. racial sense it is attested from 1903; segregationist is from the 1920s.

அப்படிச் செகுத்து வைக்குப் பட்ட பகுதியை segment = செகுமம் என்றும் சொல்லலாம்.

அதே போல பலவாறாய்ச் செகுப்பு ஆக்கும் வினையை separate = செகுப்பாக்கு என்று சொல்லலாம். இதன் பெயர்ச்சொல்லைச் separation = செகுப்பம் என்று சொல்லலாம்.

இவற்றின் தொடர்ச்சியாய், இனி sexy dress, sexy dance, types of sex, sex performance போன்றவற்றிற்கான தமிழ்ச் சொற்களைப் பார்க்கலாம்.

sexy dress = செகை ஆடை
sexy dance = செகை ஆட்டம்
types of sex = செகை வகைகள்
sex performance = செகை நடப்பு

அன்புடன்,
இராம.கி.

7 comments:

Anonymous said...

ஐயா, இப்படி ஆய்வு செய்து கொண்டு போனால் புழக்கத்தில் உள்ள அனைவரும் ஒரளவேனும் அறிந்த சொற்களுக்கு மாற்றுகளை கண்டுபிடிக்கலாம். ஆனால் இது தேவைதானா. ரகசியம், அறியாப்பொருள்,மறைபொருள,மறை போன்றவை பயன்பாட்டில் உள்ள போது உங்கள் வேர்ச்சொல்
ஆராய்ச்சி தரும் சொற்கள் அவற்றைவிட எந்த விதத்திலும் சிறந்தவையாக, எளிதில் புரிந்து கொண்டு, பயன்படுத்த உதவியாக இல்லை என்பது என் கருத்து. perform என்பதை நடப்பு என்று மொழிபெயர்ப்பது சரியல்ல.

இணைய தமிழ் உலகில் உங்களுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் உங்கள் பதிவுகளைப் படித்தப் பின் ஏமாற்றம் அடைந்தேன். ஏனெனில் உங்களின் மொழி அறிவு
அற்புதமாக இருக்கிறது, இருப்பினும் அது ஒன்றே போதுமா, தமிழில் புதுச் சொற்களை, கலைச்
சொற்களை உருவாக்க. நீங்கள் பயன்பாட்டில் இருக்கும் நல்ல தமிழ்ச் சொற்களுக்குக் கூட
புரியாத புதுச் சொற்களை உருவாக்குகிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் எழுதுவதைப்
படிக்க தனி அகராதி தேவையோ :).

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஒரு செகு என்னும் வேர்ச்சொல்லில் இவ்வளவு ஒளிந்திருக்கிறதா !!!

sex=பால் என்று சொன்னால் sexy dress என்பதை சொல்ல முடியாது தான். காம உணர்வைத் தூண்டும் ஆடை என்று சொல்வது சுற்றி வளைப்பதும் துல்லியம் இல்லாததும் ஆகும்.

இந்த இடுகைளயில் உங்கள் அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்புடையவை.

Anonymous said...

ஐயா உங்களை போன்றோரின் சேவையே தமிழுக்கு தேவை, நன்றி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஒவ்வொரு மொழியும் தன்னைத் தொடர்ந்து உயிர்ப்பித்துக் கொள்ளுதலும் கேள்விக்குட்படுத்துவதும் முக்கியம். அந்த வகையில் இன்று காரணம் தெரியாமல் நாம் புழங்கிக் கொண்டிருக்கும் சொற்களை கேள்விக்குட்படுத்துவதில் தவறில்லை. 50, 60 ஆண்டுகளுக்கு முன் இருப்பதை ஏன் மாற்ற வேண்டும் என்று நினைத்திருந்தால் இன்று நாமும் மணிப்பிரவாள மொழியை உறுத்தாமல் பயன்படுத்திக் கொண்டிருந்திருப்போம் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இராம. கி அவர்களின் சில பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகலாம் என்றாலும் கூட, அதற்கு அவர் தரும் விளக்கங்கள் பலரின் மொழி அறிவை, விழிப்புணர்வைத் தூண்டுவதாக அமைவதே முக்கிய வெற்றி ஆகும்.


எல்லாவற்றுக்கும் பொத்தாம பொதுவான ஒரு சொல் வைத்து ஒப்பேற்றுவதால் ஒரு துளியும் துல்லியமான அறிவியல் கருத்துக்களைத் தமிழில் சொல்ல முடியாது. இராம. கி அவர்களின் அணுகுமுறையில் சில வேளை தவறு இருக்கலாம். அதற்காக முயற்சியையும் நோக்கத்தையும் அதற்கான தேவையையும் குறை சொல்ல முடியாது. பலரும் பல கலைச்சொற்களை உருவாக்கலாம். ஆனால், மக்களுக்கு ஏற்புடைய சொற்கள் தாம் நிலைக்கும். எதையும் எவராலும் திணித்து விட முடியாது என்பதால் இது போன்ற முயற்சிகள் எப்போதும் பாராட்டுதலுக்கு உரியவையே. இராம. கி அவர்களின் பரிந்துரைகள் பயன்பாட்டுக்கு வராவிட்டால் கூட இவர் சொல்லும் வேர்ச் சொல் விளக்கங்களால் பல தெரியாத விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. வேறு பிரச்சினைகளுக்கு நல்ல விடைகளைத் தருகிறது. இந்த வலைப்பதிவின் முக்கிய வெற்றியாகும்.

Thangamani said...

ஐயா:

உங்கள் இந்த இரண்டு கட்டுரைகளும் (செகை 1, 2) பல செய்திகளைத் தந்தன. நன்றி!

Anonymous said...

[img]http://www.teara.govt.nz/NR/rdonlyres/3181A35E-C55A-4EC4-9886-5F8DF5814FEE/137189/p1135wmu.jpg[/img]

[size=18][b]The Tamil Bell[/b][/size]
Tamils have long been seafarers and traders. It is believed that they reached northern Australia by the 14th century, and there is a suggestion that they may have got as far as New Zealand. In 1836 the missionary explorer William Colenso found this bell, which had been used by Māori as a cooking vessel for generations. Inscribed on it in Tamil are the words ‘Mohoyideen Buk’s ship’s bell’. The bell is now held at the national museum, Te Papa. Theories abound, but the precise origins of the bell and how it got to New Zealand remain a mystery.

http://www.tepapa.govt.nz/TePapa/English/AboutTePapa/

http://www.nzetc.org/tm/scholarly/BesMaor-fig-BesMaor-f021.html

http://www.teara.govt.nz/NewZealanders/NewZealandPeoples/SriLankans/1/ENZ-Resources/Standard/3/en

Anonymous said...

அண்ணே, பகுத்து வந்தது பாத்தி என்று நீண்டால் செகுத்து வந்தது சேத்தி என்று நீள்வதுதானே முறை? செக்டார் என்ற சொல்லோடு ஒலியொற்றுமை வேண்டும் என்பதற்காகச் செகுத்தி என்று சொல்கிறீர்களா? அல்லது சேத்தி என்று நீட்டினால் ''இவனெல்லாம் என்னத்துல சேத்தி?'' என்று சேர்ப்புப் பொருள் தந்துவிடும் என்று தவிர்த்தீர்களா?
ஆறுமுகத்தமிழன்