Sunday, April 08, 2007

தெள்ளிகை - 3

உருப்படியான வேலையைச் செய்துகொண்டு இருந்த போது, இடைவிலகலாய் தனித்தமிழ் பற்றிய ஒரு தொடர் கட்டுரையையும், ஓதி (hotri) பற்றிய விளக்கத்தையும், இன்னும் சில கட்டுரைகளையும் என் வலைப்பதிவில் எழுதியதில், இந்தத் தொடர் தடையுற்றது. இப்பொழுது, மீண்டும் தொடர்கிறேன். அன்பர்கள் தொய்வைப் பொறுப்பீர்களாகுக.

அடுத்து நாம் பார்க்கும் சொற்கள் study, student ஆகியவையாகும். இவைக்கான விளக்கம் இங்கு நீண்டு போவதற்கு மன்னியுங்கள். ஆங்கிலச் சொற்பிறப்பில் study என்பதை

c.1125, from O.Fr. estudier "to study" (Fr. ளூtude), from M.L. studiare, from L. studium "study, application," originally "eagerness," from studere "to be diligent" ("to be pressing forward"), from PIE *(s)teu- "to push, stick, knock, beat" (see steep (adj.)). The noun meaning "application of the mind to the acquisition of knowledge" is recorded from c.1300. Sense of "room furnished with books" is from 1303. Study hall is attested from 1891, originally a large common room in a college. Studious is attested from c.1382.

என்று குறிப்பார்கள். இந்தக் குறிப்பில், PIE *(s)teu- "to push, stick, knock, beat" என்ற கருத்தையும், studere "to be diligent" ("to be pressing forward") என்பதையும், கவனித்துப் பார்க்க வேண்டும். "எந்தவொரு பட்டகையையும் (fact), விடாது சொல்லி, நம் நினைவகத்திற்குள் பதிய முற்படுவதைத் தான் study என்கிறோம். If we have studied something, then we should have understood the same and hence we won't forget" என்று புரிந்து கொள்ளுகிறோம் இல்லையா? study என்னும் செயலில் ஒரு மூளைத் திணிப்பு தென்படுகிறது, இல்லையா? தமிழில் நெருக்குதல், திணித்தல் என்ற கருத்துக்களைத் தேடிப் பார்த்தால், நமக்கு விளங்கிவிடும்.

அதே பொழுது, மேலே PIE - வழியாய்ப் பெறும் வேர்ச்சொற் கருத்து, திண்ணைப் பள்ளிக்கூடங்களையும் சட்டாம்பிள்ளைகளையும் கூட நம் நினைவிற்குக் கொண்டு வரும். சட்ட அம்பிகள் தான் நம்மூரில் சட்டாம்பிகள் ஆனார்கள். (அம்பி என்பது நம்பி என்ற சொல்லோடு தொடர்புற்றது) அந்தக் காலத்தில், பெரும்பான்மைக் கல்வி ஆசான்கள், பெருமானராய்த் தான் தமிழகத்தில் இருந்தார்கள். (கலை ஆசான்கள், பெரும்பாலும் பெருமானர் அல்லராய்த் தான் இருந்தனர்.) அதனால், பெருமான்களின் பதின்ம வயதுப் பெயரான அம்பி என்ற சொல் இங்கே சட்டாம்பிக்குள் உள்நின்றது. சட்டம் எனும் கோலை வைத்தே, திண்ணைப் பள்ளிகளில் ஒழுங்குமுறை உணர்த்தப் பெற்றது. ஊர்களில் பொது மரத்தடித் திண்ணைகளிலும், வீட்டுத் திண்ணைகளிலும் தான் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப் பட்டன. ஆலமரம், புளியமரம், அரசமரம் எனத் திண்ணைப் பள்ளிகளில், சட்டமும், கோலும், விளாறும் சட்டென்று ஓடி வந்துவிடுவது இயல்புதானே?

திண்ணைக் கூடங்கள், பள்ளிக் கூடங்களாய், பெரிதும் நம்மூரில் உணரப்பெற்றது ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய நெறிகள் பரவிய பின்னால் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். படிப்பு என்ற கருத்தீடு கூட இந்த மூன்று நெறிகளாலேயே நம்மூரில் ஊக்கம் பெற்றன.

(சற்று இடைவிலகலாய் இந்த மூன்று நெறிகளின் பெயர்த் தோற்றங்களைத் தமிழ் வழியே பார்ப்போம். ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய மூன்று நெறிகளையும் சமணம் என்ற பொதுச்சொல்லால் தமிழில் குறிப்பார்கள்.

"முன்பிறப்பில் செய்த கருமம் இப்பிறப்பில் ஒருவரைப் பாதிக்கும்" என்ற கருத்தை முற்றிலும் மறுக்கும் ஒரு நெறி ஆசீவகம் ஆகும். இதன் பல கருத்துக்கள் தமிழ் இலக்கியங்களில் இருந்தே பெறப்படுகின்றன. ஆசீவகப் பாடல்கள் புறநானூற்றிலேயே நாலைந்து இருக்கின்றன. இதன் தோற்றம் தென்னகம் தானோ என்ற அய்யப்பாடு கூட ஆய்வாளரிடம் உண்டு. தமிழர் வழக்கில், "செய்வினை" என்பது முன்பிறப்பில் செய்த கருமத்தைக் குறிக்கும் ஒரு சொல்; செய்வினை என்பதைச் செய்விகம் என்றும் தமிழில் குறிக்கலாம். செய்தல்>செய்வித்தல் என்று பிறவினையாய் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். செய்விகத்தின் மறுப்பு வடபுலத்தில் அல்>ஆ என்னும் முன்னொட்டுச் சேர்த்து ஆசெய்விகம் என்று ஆகும். அதாவது ஊழ்வினையை மறுத்து, ஊழை வலியுறுத்தும் நெறி ஆசெய்விகம் ஆகும். இது மேலும் திரிந்து ஆசீவிகம் (>ajivika) என்று ஆவது முற்றிலும் இயல்பான ஒன்றே.

செயினம் என்பது, வடபுலத்து நெறிதான். செயித்தல் என்ற கருத்தின் வெளிப்பாடாகச் செயினம் அமையும். செயித்தலின் அடிப்படை செகுத்தல் என்ற வினை. ("அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்று உயிர் செகுத்து உண்ணாமை நன்று" என்னும் போது உயிர் அழித்தல் என்ற கருத்து புலப்படும்.) செகுத்தல் என்பது அழித்தல்; மேலை மொழிகளிலும் to sect என்பது பிரித்தல், அழித்தல் தொழிலைக் குறிக்கும். அழித்தலின் மறுபக்கம் வெற்றிபெறுதல். செகுக்கப் பட்டவன் அழிகிறான். செகுத்தவன் வெற்றி பெறுகிறான். அடுத்தடுத்து இடைவிடாது, மீண்டும் மீண்டும் ஆன்மா பிறக்கும் தொடர்நிலையை ஒறுத்துச் செகுக்கக் கூடிய வழியைச் சொல்வது செயின நெறியாகும்; இப்படி, செகுனம்>செகினம்>செயினம் என்ற வளர்ச்சியில், வெற்றிநிலையைக் குறிக்கும் கருத்து பெறப்படும். செயித்தது என்னும் வினைச்சொல் ஜெயித்தது என்று வடபுலத்தில் பலுக்கப் படும்.

புத்தம் என்ற வடபுலத்து நெறியிலும், உள்ளார்ந்த வேர்ச்சொல் தமிழ்த் தோற்றமே காட்டுகிறது. புத்தம் என்பது ஆன்றவிந்து அடங்கிய அறிவுநிலையைக் குறிப்பிடும் சொல். புல் என்னும் வேர்ச்சொல்லில் இருந்து புலர்தல் / புலவுதல் என்று தெளிவு ஏற்படும் நிலையைச் சொல்லுகிறோம் அல்லவா? புலத்தல் என்பது அறிவுறுத்தல். புலவன் என்பவன் அறிவார்ந்தவன். பு(ல)த்தன் என்னும் சொல் பலுக்க எளிமையில் புத்தன் ஆவது இயற்கையே. புத்தன் என்னும் சொல்லையும் பலுக்கச் சுருக்கத்தில் புதன் என்று வடமொழி வழங்கும். அறிவுள்ளவன் புதன் எனப்படுகிறான். புத்த நெறி என்பதை இந்திய மெய்யியலார் நடுப்பட்ட நெறி என்று சொல்லுவார்கள். அது ஆசீவகத்திற்கும், செயினத்திற்கும் இடைப்பட்ட நெறி. அதே பொழுது, மகாயானத்திற்கு முன், வேத நெறியோடு சமதானம் கொள்ளாத நெறி. மகாயானம் ஏற்பட்ட பின்னால், வேத நெறியிடம் விட்டுக் கொடுத்து, அதன் விளைவாலேயே, நம்மூரில் நீர்த்துப் போனது.

ஆசீவகம், செயினம், புத்தம் ஆகிய மூன்று நெறிகளுக்கும் பொதுவாய், சம்மணம் கொட்டித் தவத்தில் ஆழ்ந்து உறையும் துறவு நிலை இருந்ததால், இந்த நெறிகள் பொதுப்பெயரில் சமணம் என்று அழைக்கப்படும். துறவு நிலை என்பது இந்த மூன்று நெறிகளிலும் பெரிதாய்ச் சொல்லப் படுவது. கொட்டுதல் என்ற வினை கூட்டுதல் என்ற வினையில் இருந்து திரிந்து பிறந்தது. கால்களைக் கூட்டித்தான் நாம் சம்மணம் செய்கிறோம். தவம் செய்கின்றவர்கள், பெரும்பாலும் சம்மணம் கொட்டியே, சிந்தனையில் ஆழ்ந்திருப்பார்கள். அதனால் அவர்கள் சம்மணர்>சமணர் ஆனார்கள்.)

பெருமானம் சார்ந்த வேத நெறியானது, ஓதுதல் என்பதை எல்லோருக்கும் பொதுவாய்ச் சொல்லாமல், ஒரு சில பேருக்கு மட்டுமே குமுகத்தில் பொருந்துவதாய், தனியே ஒதுக்கி வைத்தது; மற்றவர்க்கு அது என்றும் எட்டாக் கனியாகவே ஒரு காலத்தில் இருந்தது. (அந்த ஒதுக்கலில் ஓரளவு புறனடைகள் இருந்திருக்கலாம்.) அதோடு, பெருமானக் கல்வி என்பதும் கூடக் கேள்வி நிலையிலேயே, வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்தது. வேதக் கல்வி முறையில் "ஆசான் என்பவர் ஒரு மந்திரத்தை, ஒரு சொற்றம் (>சூக்தம்) அல்லது சொலவத்தை (slogan), ஒரு பாடலை, ஓதுவார்; பையன்கள் அதைக் கேட்டு, மனப்பாடம் பண்ணி அப்படியே திரும்ப ஒப்பிப்பார்கள். பின்னால் அதற்கு விளக்கம் சொல்லுவார்கள். அதனாலேயே, ஓத்து (lecture; வேதக் கல்வி), கல்வி, கேள்வி என்ற சொற்கள் முதலில் எழுந்தன. (ஓதுதல் = ஒல்லுதல், ஒலித்து உரைத்தல், கல்லுதல் = ஓசையெழுப்பிச் சொல்லுதல்; கேள்தல் = ஓசையைக் காதுவழி அறிதல்.)

வேதக் கல்வி முறையில் எழுதுதல் என்பது முகன்மையானது அல்ல; எழுதுதல் என்னும் முறை, மிகுந்த நாட்களுக்கு அப்புறமே, வேத பாடசாலைகளில் எழுந்தது. அதே பொழுது, "எழுத்து இல்லாமல் படிப்பு கிடையாது" என்ற அளவிலும், "பட்டதை வாசிப்பது படிப்பு" என்ற புரிதலிலும், படிப்பைப் பற்றிய சிந்தனை, தென்னகம் சார்ந்து எழுந்திருக்கவே பெரும்பாலும் வாய்ப்பு உண்டு. (தமிழி/பெருமி எழுத்து தென்னகத்திலே தான் முதலில் எழுந்திருக்கக் கூடும் என்று இன்றைய ஆய்வுகள் உறுதிப் படுத்துவதால், எழுத்து/படிப்பின் தொடக்கம் வடக்கே எழுந்திருக்க வாய்ப்புக்கள் குறைவு என்றே நாம் உணர்கிறோம்.)

வேத நெறியைத் தொடர்ச்சியாய்க் கேள்வி கேட்ட, மேலே கூறிய மூன்று சமண நெறிகளும், மகதத்திலும், தமிழகத்திலும் பரவியிருக்கா விட்டால், படிப்பின் தேவை குமுகாயம் எங்கும் பரவியிருக்காது என்றே சொல்லலாம். ஏதொன்றையும் கேள்வி கேட்கும் படி, மக்களை அறிவுறுத்திய பூதவியல் (materialism), சார்ங்கியம் (Saankyam), விதப்பியம் (Visheism) போன்ற பகுத்தறிவு நெறிகளும் (அதாவது, நம்பா மதங்களும்), அறியொணா நெறிகளான (agnostic religions) சமண நெறிகளும், என்றும் படிப்பிற்கு அணியமாகவே இருந்திருக்கின்றன. எழுத்து, சொல், பொருள் என்ற மூன்றையும் அவை சொல்லிக் கொடுக்கத் தயங்கவே இல்லை. பின்னால், தென்னக இனக்குழு நெறிகளான (tribal religions) சிவ நெறியும், விண்ணவ நெறியும் (இவற்றோடு ஆசீவகமும் தெற்கே முதலில் எழுந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு) கூட இந்த மூன்று சமண நெறிகளின் கூறுகளைச் சில மாற்றங்களுடன் தம்வயப்படுத்தின. எனவே அவற்றிலும் எழுத்து, படிப்பு, போன்ற சிந்தனை மரபு உண்டு.

முன்னரே சமயம் பற்றிய என் கட்டுரையில் சொல்லியவாறு, பள்ளி என்ற சொல்லை இன்றும் நாம் பயிலுவது சமண சமயங்களின் தொடர்பால் தான். திண்ணைப் பள்ளிக் கூட மரபுகள், மேலை நாடுகளிலும் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன. பெரும்பாலான மேலையர் பள்ளிச்சொற்கள் அவர்களின் திண்ணைப் பள்ளிக்கூட மரபில் இருந்து தான் கிளைத்திருக்கின்றன. காட்டாக, இரோப்பாவில் இருக்கும் gymnasium, athenium போன்ற சொற்களை இங்கு நினைவில் கொள்ளலாம். சமணப் பள்ளிக்கூடம் என்ற சொல்லைப் போலவே, குமுன+ஓதியம் = குமுனோதியம்>குமுனோசியம்>குமுனாசியம் (gymnasium) என்ற பலுக்கலில், கிரேக்க குமுகாயத்தில் பள்ளிக்கூடங்கள் அழைக்கப் பட்டதைப் பார்த்தால், மேலை நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் நெடுகவும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். (கும்முதல் = கூடுதல்; குமுனம் = கூடம்; கும்மனம்>கும்மணம்>சம்மணம் என்ற சொல் வளர்ச்சியின் உள்ளார்ந்த பொருட்பாடு இங்கு உணரப்பட வேண்டும். சமணம் என்ற நெறிக்கும் இரோப்பாவிற்கும் நாம் இங்கு முடிச்சுப் போடவில்லை. ஆன்றடங்கிய அறவோர் கூடிச் சொல்லிக் கொடுக்கும் இடம் குமுனோதியம் என்று புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.) இந்தக் காலத்தில் நம் மரபுகளை உதறி, இரோப்பியர் மரபுகளைக் கடன் வாங்கி, அல்லது சிதைந்து இப்போது நம்மிடம் இருப்பதையே வைத்து ஒப்பேற்றி, மேலைச் சொற்களையே புழங்கி மாய்வது நல்ல பழக்கம் அல்ல. நம்முடைய மரபுகளைத் தேடிப் புதுப்பிக்க வேண்டியது தேவையானது.

சரி, study என்பதை நம்மூர் மரபின் படி, எப்படிப் புரிந்து கொள்ளுவது? இதுநாள் வரை, study என்பதைப் படிப்பு என்றே தமிழில் சொல்லுகிறோம். அன்றாடப் பேச்சு வழக்கில் "அப்படிச் செய்; இப்படிச் செய்; எப்படிச் செய்வது?" என்று சொல்லுகிறோமே, அதில் வரும் படி என்ற சொல்லைப் பற்றி எப்பொழுதாவது ஆழ்ந்து ஓர்ந்து பார்த்திருக்கிறீர்களோ? படுதல் என்பது வீழ்தல். படுதல் என்ற வினைச்சொல்லை வைத்து பேச்சு நடையில் பட்டுவ வாக்குகளை (passive voice) உருவாக்கிறோம். இதைச் செயப்பாட்டு வினை என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். "பானை வனையப் பட்டது, அந்தச் செய்தி கோவமாய்ப் பேசப் பட்டது, இந்த வினை இன்ன விதமாய்ச் செய்யப் பட்டது" என்பவையெல்லாம் பட்டுவ வாக்குகள். கூடிய மட்டும், பட்டுவ வாக்கைத் தவிர்த்து, ஆற்றுவ வாக்காய்ப் (active voice; செயலை ஆற்றும் வாக்கு ஆற்றுவ வாக்கு) பேசுவதே நல்ல தமிழ்நடையாகும். ஏற்கனவே ஏற்பட்ட தடத்தில், தன்வினையாய் அமைவது படிதல்; பிறவினையாய் அமைவது பட்டித்தல் அல்லது படி(வி)த்தல் ஆகும். (பாதை, பாதம், பதிதல் போன்ற பல சொற்களை இங்கு ஆழ்ந்து நினைவு கொள்ளுங்கள்.) [முனைவர். கு. அரசேந்திரன் தன்னுடைய "தமிழறிவோம்" நூலில் (யாழினி அரசேந்திரன், 6, பெருஞ்சித்திரனார் தெரு, சிடலப்பாக்கம், சென்னை -64, தொ.பே. 2223 0882), பக்கம் 9-ல், படிப்பு என்ற சொல்லின் விளக்கத்தைத் தெளிவாக உரைப்பார்.]

முன்னே தெள்ளிகை 2-ல் சொன்ன விளம்புதற் கருத்து, இப்பொழுது வேறு உருவத்தில் படித்தல் என்ற சொல்லிற்குள் வருகிறதல்லவா? படுதல்>பட்டித்தல்>ப(ட்)டி>படி என்பது சொல் வளர்ச்சி. படிப்பு என்பது பொதுவாக இன்னொருவர் போட்ட தடத்தில் நாம் போவதையேக் குறிக்கும். பழைமை குறிக்கும் பண்டு என்ற சொல்லும் கூட, முன்னே போட்ட தடத்தைக் குறிப்பது தான். பண்டிதர் என்ற சொல்லும் கூட அவ்வழி வந்தது தான். (பண்டிதர் என்பதை வட சொல் என்று பிறழப் புரிந்து கொள்ளுகிறோம்.) பெரிதும் படித்தவர் பண்டிதர். அவருடைய படிப்பு பண்டிதம். பண்டித அறிவைக் கடன் வாங்கி பாண்டித்யம் என்று வடமொழி திரித்துக் கொள்ளும்.

ஆக, படிதல் என்பது ஒன்றின் மேல் பாவுதல், அமைதல், நிறைதல், நெருங்குதல் என்றே பொருள் கொள்ளலாம். ஆற்றில் அமையும் படித்துறையில் கூட நாம் படுகிறோம்; படித்துறை என்ற சொல் ஒரு இரட்டைக் கிளவி போலவே பொருள் கொடுக்கிறது. நாம் ஆற்றை நெருங்க, படி வழி செய்கிறது; அதே போல கரை அல்லது படியை, ஆறு நெருங்கி வருகிறது. "துற்றுதல், துருதல், துறுதல்" என வரும் வினைச்சொற்கள் எல்லாமே நெருங்குதல் என்ற பொருட்பாட்டைக் குறிக்கின்றன. ஆறு துறுந்த இடம், துறை. இன்னும் ஆழ்ந்து பார்த்தால், துறை என்பது ஆற்றை நெருங்க மட்டும் செய்யவில்லை; ஆற்றிற்குள் முன்வந்தும், நிற்கிறது. துருத்தி என்ற சொல் உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?

"அந்தப் பெண்ணைப் பார்த்தீர்களா, எவ்வளவு துறுதுறுப்பு" என்று சொல்லுகிறோம், இல்லையா? துடிப்பு, துடுக்கு, துடி, துருதுருப்பு, துறுதுறுப்பு என எல்லாமே ஒரு சுறுசுறுப்பை நமக்கு உணர்த்தும். துடிப்பான ஒரு பையன், விரைவாக, பரபரப்பாக, அறிவுக் கூர்மையோடு, ஏதொன்றையும் முன்வந்து செய்ய முற்படுவான்; அமைதியின்றி இருப்பான். "ஏன் காத்துக் கொண்டு இருக்கிறீர்கள், வாருங்கள், முன்னே நகருவோம்" என்று மற்றவரை முடுக்கிவிடும் இந்தப் பரபரப்பைத் தான், துறுதுறுப்பைத் தான், eagerness என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். studere "to be diligent" ("to be pressing forward") என்று மேலே சொன்னதை ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள்; நான் சொல்லவரும் தொடர்பு உங்களுக்குப் புலப்பட்டு விடும்.

துல் என்னும் வேரின் அடியாக துற்றல், துத்தல், துருதல், துறுதல், துருத்தல், துறுத்தல், துடித்தல் என்ற சொற்கள் பிறக்கும். எல்லாவற்றிற்குள்ளும் இந்த eagerness என்ற கருத்து நிற்கும். நெருக்கல், pressing together என்பதைத் துத்தகை என்று தமிழில் சொல்லுவார்கள். நெசவு தறியில் பாவுநூலுக்குக் (warp) குறுக்காய் ஊடுநூல் (weft) போகிறது பாருங்கள்; அந்த ஊடுநூல் அடுக்குகளை ஒன்றோடு ஒன்றாய் நெருக்குவதற்கு உதவும் கம்பை துத்துக்கோல் (rod used by weavers to press the weft compactly) என்று சொல்லுகிறார்கள். "தலையணைக்குள் பஞ்சைப் போட்டு து(று)த்தினால் தான் உள்ளே போகும்" என்று சொல்லும் போது திணித்தற் பொருள் சட்டென்று வருகிறது. துதைதல் என்ற வினைச் சொல்லுக்குச் செறிதல் (to be crowded, thick, close, intense) என்றே பொருளுண்டு. துதைத்தல் என்பது நெருக்குதல் to press together என்ற பொருள் கொள்ளும். துதை என்ற பெயர்ச்சொல்லுக்கே கூட நெருக்கம் என்ற பொருள் உண்டு.

"தோடமை முழவின் துதை குரலாக" அகநா. 82, என்ற வரியில் நெருங்கிய ஓசை என்ற பொருளில் வரும் "துதை குரல்" என்ற சொல்லாட்சியைப் பாருங்கள். கேரளத்தில், திருச்சிவபேரூர் ஆடிப்பூரத்தில் தொகுதியாக ஒலிக்கும் செண்டை மேளத்தின் துதைகுரல் கேட்டிருக்கிறீர்களா? நம்மை அப்படியே ஈர்த்துவிடும். "துப்பனே, தூயாய் தூயவெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத்து" என்று திருவாசகம் அருட்பத்து - 6 - ஆம் பாட்டிலும், "தோள்திரு முண்டம் துதைந்து இலங்க - புயமும் நெற்றியும் ஒருங்குசேர்ந்து இலங்க" என்று திருவாசகம் திருப்பொற்சுண்ணம் - 8 - ஆம் பாட்டிலும், "சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்து அருளியும்" - என்று திருவாசகம் கீர்த்தித் திரு அகவல் - 99 - ஆம் வரியிலும், துதைதல் என்பது படிதல் (to be steeped) என்ற பொருளில் ஆளப் படுவதைப் பார்த்தால் துதைதல்/படிதல், துதைத்தல்/ படிவித்தல் என்ற பொருளில் ஆளப்படுவதைச் சரியாக உணரலாம்.

துத்துதலின் வேறு திரிபான துற்றுதல் என்ற சொல்லும் கூட, நெருங்குதல், to come near, advance closely, lie close என்ற பொருளில் "மைம்மரு பூங்குழற் கற்றை துற்ற" - தேவாரம் 83.1 என்ற வரியிலும், "காளை சீறிற் துற்று இவன் உளனோ என்பார்" சீவக. 1110 வரியிலும், மேற்கொண்டு நடத்தல் undertake என்ற பொருளில் "அரிது துற்றவையாற் பெரும" அகநா. 10 போன்றவற்றிலும் ஆளப்படும். துற்றுதல் "துத்து" என்று மலையாளத்திலும், "துத்த" என்று தெலுங்கிலும் ஆளப்படும்.

துற்றுதலின் பொருள் நீட்சியாய், திணித்தல் பொருளில் (to cram as food into the mouth), துறுத்தல் என்ற சொல்லாட்சி "வாயிலே சீரைத் துறுத்து" என்று நாலாயிரப் பனுவலின் உரை நூலான ஈடு 9,9,1- ல் வந்து நிற்கும். இந்தப் பொருளில், ம. துறு, க. துறுகு, தெ. துறுகு என்ற மற்ற மொழிப் பயன்பாடுகளும் உண்டு.

தவிரத் துறு என்ற சொல்லை நெருக்கம் (thickness, closeness, crowdedness) என்ற பொருளில் திவாகரம் சுட்டும்.துறுபடை என்பது நெருங்கிய போர்ப்படை (squadron, as in close array) என்ற பொருளைக் குறிக்கும். துறுமல் / துறுவல் என்ற சொற்களுக்கு நெருக்கம், திரட்சி என்ற பொருட்பாடுகளும், துறுமுதல் என்ற வினைக்கு நெருங்குதல், திரட்டுதல் என்ற பொருட்பாடுகளும் உண்டு. துறை என்ற சொல்லிற்கு, இடம், வழி, பகுதி, கடல் துறை, கடல், ஆறு, வண்ணான் துறை, நீர்த்துறை, அவை கூடுமிடம், நூல், section, ஒழுங்கு, பாவினம், பாட்டுவகை, வரலாறு என்ற பொருட்பாடுகளும் உண்டு. இன்றைக்கும் study ஆங்கிஅச்சொல்லோடு தொடர்பு கொண்டு நாம் ஆளுகின்ற ஒரே சொல் இந்தத் துறை மட்டும் தான். துறுக்கின்ற இடம் துறை. துறுதலின் வேறாட்டமாய் (variation) தூர்தல் என்ற சொல் நெருங்குதல் to come to close quarters பொருளில் "இருவரும் ஒதுங்கியும், தூர்ந்தும் பொருதலின்" தொல். பொருள். 68, உரை, பக் 219 - இல் பயிலும்.

இறைவனுக்கு நெருங்கி வந்து அவனை நினைந்து அடுத்தடுத்து அவன் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பதைத் துதி என்பார்கள். துதி என்பது துத்துவதின் பெயர்ச்சொல். துத்தம் என்றாலும் துதி தான். துத்தம்>தோத்தம்>தோத்ரம் என்று அது வடபுலத்தில் திரியும். (தோத்ரம் ஸ்தோத்ரம் ஆகி, இன்று கிறித்தவர்களால் பெரிதும் புழங்கப் பட்டு ஸ்தோத்தரிக்கப் படுகிறது.) இதே போல ஒரு பட்டகையைத் துத்திக் கொண்டு நினைவகத்தில் அடைப்பதைத் தான் study என்கிறார்கள், இல்லையா? நம்மூரில் இந்தப் பயன்பாடு இறைப்பெயரை நினைந்து நினைந்து திரும்பச் சொல்லுவதில் மட்டுமே விதப்பாக இருக்கிறது. (அம்மையே! அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! - இப்படி நினைந்து நினைந்து துத்துகிறோம் / துதிக்கிறோம். நாம் மறப்பதே இல்லை.) மேலைநாட்டில் துத்துதல் என்ற வினை பொதுப்பட இருக்கிறது. நம்மூரில் பொதுப்படப் பயிலுவதற்குப் படித்தல் என்பதே பயன்படுகிறது.

to study = படித்தல் (விதப்பான முறையில், இறைவன் பெயரை நினைந்து நினைந்து சொல்லும் துத்துதல்)
student = படிக்கிறவன். (மாணவன் என்ற சொல் முன்னே சொன்னது போல் சின்னவன் என்ற பொருளையே தரும்.)

அன்புடன்,
இராம.கி.

No comments: