Saturday, October 21, 2006

தீபாவளி வாழ்த்துக்கள்

கீழே வருவது மூன்றாண்டுகளுக்கு முன் தமிழ் உலகம் மடற்குழுவில் எழுதியது. இங்கு இப்பொழுது அதை மீளும் பதிகிறேன்.
-----------------------------------------

திடீரென்று அலுவ வேலையாற் பணிக்கப் பெற்று, மறுபடி சென்னை. இன்று காலை வந்தேன். நாலே நாட்களில் சவுதி செல்ல வேண்டும்.

வான்பறனை கீழிறங்கும் போது, அதன் செலுத்தியார் சென்னை அருகாமை வந்தவுடன் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, இருக்கைகளை நேராக்கிக் கொள்ள நம்மைப் பணிக்கிறார். பறனை கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. கண்ணாடிச் சாளரத்திற்கு வெளியே பனி கலந்த மேக மூட்டம். எத்தனை பேர் இதற்குப் பொறுப்பு? நகரம் எங்கிலும்? வழமையான சென்னை. அதன் வேடிக்கைக் கூத்துகள்.

அருகே இருந்த பிரஞ்சுப் பெண்மணி, இந்த மேக மூட்டத்திற்குக் காரணம் கேட்கிறார். நான் "நாலைந்து நாட்களாக நல்ல மழை; சில இடங்களில் நகரத்துள் வெள்ளம்; வடியச் சில நாட்கள் ஆகலாம்; தவிரத் தீபாவளிநாள்; முன்னாளின் இரவிலும், இன்று அதிகாலையிலும் வெடிகள், மத்தாப்புக்கள் என்று பலதும் கொளுத்தப் பட்டிருக்கும்; அதனால் எழுகிற புகை இந்தப் பனியோடு கலந்து கலையாத மேக மூட்டத்தைக் கிளப்பிவிட்டிருக்கும்", என்று விளக்கம் சொன்னேன்.

"என்னது வெடியா? நேற்று வந்திருக்கலாமே? வாண வேடிக்கை அழகைப் பார்த்திருக்கலாமே?" என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு தன் தோழியரோடு பிரஞ்சில் அதை ஆர்வத்தோடு சொல்கிறார்.

"தீபாவளி எதற்குக் கொண்டாடுகிறார்கள்?" என்ற அவரது கேள்விக்கு, ஓரளவு சுருக்கமாக கூடவே விரைவாக மறுமொழி சொல்லி முடிக்கிறேன்.

பறனை ஓடுகளத்தைத் தொட்டுவிட்டது. உள்ளே ஈரப்பதம் மாறிக் கொண்டிருப்பதை உணருகிறேன்.

வான்பாலத்தை அணைந்தாயிற்று.

நான், வான்பறனைப் பணிப்பெண்ணுக்கு முகமன் சொல்லி தீபாவளி வாழ்த்தும் சொல்லி வெளியேறுகிறேன். அந்த பகுரைனி அரபுப் பணிப்பெண் வியந்து கொள்ளுகிறாள். முகம் நிறையப் புன்சிரிப்பு.

வெளியே வந்து வண்டியில் ஏறி வீட்டிற்குப் புறப்படும் போதும் மேக மூட்டம் கலையவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதே மேகமூட்டம் தான். மழை இருந்தாலும், இல்லாவிட்டாலும். நகரத்தில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையெங்கும் ஈரம்; அதன் மணம்; மணத்துள் ஒரு பாந்தமான உணர்வு. இதுதான் சென்னை. உள்ளிழுத்துக் கொள்ளுகிறேன். நெஞ்சுகள் நிறையட்டும்.

இந்த மண் தாகத்தால் ஏங்கியதே? தாகம் அடங்கியதோ? வழி நெடுகிலும் அஞ்சடிகளில் நாலைந்து நாட்களில் முளைத்த புல்வெளிப் பச்சை. ஆங்காங்கே சாலைகளில் ஈயென்று வாய் பிளந்த பள்ளங்கள்; மதகு இல்லாச் சிறு சிறு நீநீர்த்தேக்கங்கள். எங்கள் நகரம் மாறவே மாறாதோ?

நான் வாழும் பகுதிக்கு அண்மையில் வந்தாயிற்று. "நிறுத்துக்கள். அங்கு ஏதோ ஒரு சிறுவன் வெடி வைக்கிறான்" என்று உந்து ஓட்டுநருக்குச் சொல்லுகிறேன். ஆயிரம் இழைச் சீனச் சரவெடி (இப்பொழுதெல்லாம் சீனவெடி என்ற சொல்லே இளையருக்குத் தெரிவதில்லை. எல்லாம் தௌசண்ட் வாலா தான். எங்கோ மரபுத் தொடர்புகள் அறுந்து கொண்டு இருக்கின்றன. வணிக வேகம் சிந்தனையை மறைக்கிறது.) வெடி காதை அடைக்கிறது. புகை கண்ணை மறைக்கிறது.

நின்று காத்து வண்டி தொடருகிறது.

வீட்டுக்கு வந்தாயிற்று; எண்ணெய்க் குளியல் செய்தே ஆகவேண்டும் என்று துணையாள் அடம் பிடிக்கிறாள். அவள் பேச்சுக்கு மறுபேச்சு உண்டோ? குளியல் ஆயிற்று. புத்தாடைகள் வீட்டில் குத்து விளக்கிற்கு எதிரே. இதையெல்லாம் சொல்லவேண்டுமோ? மஞ்சள் தடவி, பக்கத்தில் மாதிரிக்குக் கற்கண்டு வடையை ஏனம் நிறைய வைத்துப் படைத்து, பல்லாண்டு சொல்லித் தண்டனிட்டு, வணங்கி, புத்தாடைகளை எடுத்துக் கொள்ளுகிறோம்.

கற்கண்டு வடையை எத்தனை நாளுக்கு அப்புறம் பார்க்கிறேன்? நாக்கில் நீர் ஊறுகிறது. "அதெல்லாம் முடியாது கோயிலுக்குப் போய்வந்த பிறகுதான்" என்கிறாள் மனைவி. அவளை ஆற்றுப் படுத்தி என் வழிக்கு மாற்றுகிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்ச்சிகள் நேரிலும், தொலைக் காட்சியிலும் நடைபெறுகின்றன.

ஆயிற்று; கோயிலுக்குப் போக வேண்டியதுதான். எங்கள் வீட்டின் முன்னும் ஒரு சீனச் சர வெடி (போன ஆண்டு ஆயிரங் கண்ணிச் சர வெடி வாங்கிய என் மனையாள் இந்த ஆண்டு நூறு கண்ணிச் சரவெடி தான் வாங்கியிருக்கிறாள்.)

இதோ, கோயிலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியே உறவினர், நண்பர்கள் பார்த்துத் திரும்பவேண்டும்.

எப்படியோ எதிர்பாராமல் சென்னைக்கு வந்தாயிற்று. இன்னும் ஒரு தீபாவளி. எப்பொழுதும் உள்ள சடங்கு அதே கதியில் தொடர்கிறது. நரகாசுரன் எதற்காகத் தீபாவளியைக் கொண்டாடச் சொன்னான்? புரியவில்லை.

"அடச்சே! எதற்காக என்று தெரிந்து என்னாகப் போகிறது? :-) எல்லாமே ஒரு பூடகமான நம்பிக்கை தானே? கலகலப்பு இருந்தால் தானே வாழ்க்கை?" நான் என்னையே ஆற்றுப் படுத்திக் கொள்ளுகிறேன்.

"இந்தா, வந்துட்டேன். தீப்பெட்டியைக் கொண்டு வரேன்" என்கிறாள் என் மனைவி.

உடைந்த செங்கற் சில்லின் மேல் சீனச் சரவெடி...........

மறுபடியும் சத்தம்...... மறுபடியும் புகை..... மேக மூட்டம் விளைவிப்பதில் எங்களின் பங்கு.

தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, October 12, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 4

மீண்டும் குவி விளக்குக்கு வேலை வந்திருக்கு; ஏன்னா, மேற்கொண்டு சில அடையாளங்களையும் காட்டோணும். இந்தத் தொல்காப்பியரை ஒரு தேர்ந்த நாடகக் காரர்னு முன்னாடிச் சொன்னேன். தேர்ந்த நாடகக் காரர் ஆடுநர்களையும் ஆட்டத்திகளையும் சரியான நேரத்திலே நாடகத்துக்குள்ளே கொண்டாருவார்; அவர்களுடைய குணநலன்களைக் கொஞ்சம் கொஞ்சமா வெளிப்படுத்துவார்.

அந்த வகையிலெ, தொல்காப்பியர் முதல்லே 30 பேரைச் சிறப்பான எழுத்துக்களாச் சொன்னார்; அப்புறம் அலங்கடையா, இன்னும் மூணுபேரைக் காட்டினார்; மேலே, கொஞ்சம் போய் 30 பேருலெ அஞ்சு பேரைக் காட்டி இவங்கள்லாம் குற்றெழுத்துக்காரர்ன்னு சொன்னார்; அப்புறம் இன்னும் ஏழு பேரைக் காட்டி இவங்கள்லாம் நெட்டெழுத்துக்காரர்ன்னு சொன்னார்; அவற்றுக்கு அளபும் சொன்னார்; மூவளபு வேணும்னா, ஒரு நெட்டெழுத்து, ஒரு குற்றெழுத்துன்னு பக்கத்திலெ பக்கத்திலெ வச்சு சரி பண்ணிக்கிங்கோன்னு வழிமுறை சொன்னார். கடைசியா, அளபு அல்லது மாத்திரைங்குறதுக்கு ஒரு வரையறையும் சொன்னார்.

ஆனா, குற்றெழுத்து, நெட்டெழுத்துன்னு சொல்ற இந்த பன்னிரண்டு பேரும் யாரு, ஒரே மாதிரி ஆட்களான்னு சொல்லலை. அதாவது உயிரெழுத்துன்னு எதையும் இதுவரை நேரடியாச் சொல்லலை; அதே போல மெய்யெழுத்து எதுன்னும் நேரடியாச் சொல்லலை. அப்புறம், மெய்யும் உயிரும் கலந்தா, உயிருக்கு என்ன ஆகும்? ஞாயமான கேள்வி. இதுக்கெல்லாம் மறுமொழி சொல்றாப் பொலெ, அடுத்து 8ம் நூற்பாவில் இருந்து 13 வரை ஒரு தொகுதியாகப் பார்ப்போமா?

8. ஔகார இறுவாய்ப்
பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப

9. னகர இறுவாய்ப்
பதின் எண் எழுத்தும் மெய் என மொழிப

10. மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா

11. மெய்யின் அளபே அரை என மொழிப.

12. அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.

13. அரையளபு குறுகல் மகரம் உடைத்தே
இசையுடன் அருகும்;

தொல்காப்பியம் எழுந்த காலத்திலே, மெய்யியல் (philosophy) கொஞ்சம் கொஞ்சமாத் தென்னகத்துலே பரவியிருக்கோணும். உடல்(body)ங்குறது வேறே; அதுலே இருக்குற இயக்கம் (movement) வேறேங்குற புரிதல் எப்படியோ தமிழ் மாந்தனுக்கு ஏற்பட்டிருக்கு. பொதுவா, தொல்காப்பியத்துக்குள்ளே வெவ்வேறு நெறிகளை (சமணம், சிவநெறி, வேத நெறி, உலகாய்தம் எனப் பலவற்றைத் துழாவித்) தேடி இனங் காட்டுறதுலே சிலபேருக்கு ரொம்பவுமே ஆசை. அந்த வேலைக்கு நான் இங்கே போகலை. ஆனா, ஒன்றைச் சொல்லாமப் போகக் கூடாது.

உடல், உயிர்னு தொல்காப்பியத்துலே பிரிச்சார் பாருங்க, அது மெய்யியல் சார்ந்த கருத்துன்னு ஆணித்தரமாச் சொல்லலாம். ஒரு மொழி இலக்கணத்துக்கு மெய்யியல் வழி ஒரு போல்மம் (model) உருவாக்குறது என்பது தேவையா? ஆனா, அப்படி ஒரு போல்மத்துலே தான் தமிழ்மொழி இலக்கணம் உருவாகி நிக்குது. இந்தப் போல்மத்திற்கு இயற்கையிலே பெற்ற பட்டறிவும் (experience) காரணமாய் இருக்கலாம்.

பொதுவா, இறப்புங்குற ஒரு நிகழ்ச்சி, மாந்தனைப் பெரிதும் யோசிக்க வைக்குது. அதுவரை இயங்கிக்கிட்டிருந்த உடல் இறப்புக்கு அப்புறம் இயங்காமப் போகுது. அதுவரைக்கும் உசு, உசுன்னு மூச்சு விட்டுக் கொண்டிருந்த உடல் அப்பாலெ, மூச்சு விடமாட்டேங்குது. உசிர்>உயிர் நின்னு போச்சுங்குறோம். உய்த்துக் கொண்டு இருத்தலை உயிர் உள்ள நிலையாகக் கொள்ளுவது, நம்பா மதமான (religion which does not believe in existence of God) உலகாய்தத்துக்கும் (Lokaytham), நம்பும் மதமான (religion which believes in the existence of God) மற்ற நெறிகளுக்கும், எதிரான நிலையில்லை. ஆனா, உயிர் தனித்து இயங்குமா என்பதில் நம்பா மதமான உலகாய்தம் மாறுபடும். உயிர் தனித்து இயங்கும் என்ற மெய்யியல் உலகாய்தத்திற்குப் புறம்பாகி, நம்பும் மதங்களின் மெய்யியலுக்குள் தான் அமைகிறது.

எனவே நூற்பா 8ன் வழியாகத் "தான் ஒரு நம்பும் மதத்தானே (believer)" என்று தெளிவாகத் தொல்காப்பியர் சொல்லுகிறார் என்றுதான் நான் புரிந்து கொள்கிறேன்.

ஆகப் பன்னிரு எழுத்தும் உயிர் என்று சொல்வார். மொழிதல் என்பதும் சொல்லுதல் என்பதும் ஒரே பொருள் உள்ள சொற்கள் தான். இதே போல னகரம் முடிய மீந்து இருக்கும் பதினெட்டும் மெய்யெனச் சொல்லுவார்கள் - இது ஒன்பதாம் நூற்பாவின் கருத்து.

இந்த 8, 9ம் நூற்பாக்கள் வெறுமே அடையாளமும் பேரும் சொல்ற நூற்பாக்கள். ஆனாப் பத்தாவது நூற்பா, கொஞ்சம் ஆழமானது.

"மெய்யோடு சேர்ந்தாலும் உயிர் தன்னோட இயல்பில் திரியாது"

இயைதல்ங்குற சொல்லுக்குப் பொருந்துதல், புணருதல், கலத்தல்னு பொருள் உண்டு. [ஒரு காலத்துலே கோவை நுட்பியல் கல்லூரி "தொழில்நுட்பம்" மலர்க்குழுவிலெ இருந்த நாங்க, இயல்பியல்னு பூதியலுக்கு (physics) பெயர் கொடுத்த அதே நேரத்துலெ, வேதியியலுக்கு இயைபியல்னு பேர் கொடுத்தோம். இந்த இயல்பியல்ங்குற சொல் நிலைச்சுப் போச்சு (முட்டாத் தனமா, இயற்பியல்னு பலுக்கல் மாறியது ஒரு சோகம். இனியாவது பிழை தெரிஞ்சுதுன்னா, சரியான சொல்லை உருவாக்குன நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்.) ஆனா, இயைபியல்ங்குற சொல் நிலைக்காமலே போச்சு. எந்தச் சொல் நிலைக்கும் எது நிலைக்காதுன்னு சோதியமா (=ஆருடம்) கூறமுடியும்? ஒரு மொழியிலெ, சொற்களைப் பரிந்துரைக்கத் தான் முடியும்; மிச்சதெல்லாம் மக்கள் கையிலெ.]

உடலோட உயிர் பொருந்தோணும், புணரோணும், கலக்கோணும். அப்படிப் பொருந்தினா, உயிர் தன் இயல்பை விட்டுருமா? விடாதுன்னு சொல்றார் தொல்காப்பியர். இதுவரை உயிர் எழுத்துக்கு என்ன இயல்பு சொன்னார்? "சிலது குறுகி ஒலிக்கும்; சிலது நெடிது ஒலிக்கும். குறுகி ஒலிக்குற போது ஓரளபு, நெடுகி ஒலிக்குற போது ஈரளபு. அளபுக்கு வரையறை நமக்குத் தெரியும்". இதுதான் அவர் சொன்னதின் உள்ளடக்கம்.

உயிர் தன் இயல்பு திரியாது - அப்படின்னா என்ன? மெய்யோடு சேர்ந்தாலும், உயிர் எப்படி ஒலிக்கணுமோ, அப்படித்தான் ஒலிக்கணும் அவ்வளவு தான்.

முன்னாலெ சொன்னாப்பொலெ, மூடிய அசையா இருக்கலாம், அல்லது திறந்த அசையா இருக்கலாம். சில மொழிகள் இரண்டையுமே வச்சுக்கும். (காட்டு: ஆங்கிலம், bii - திறந்த அசையொலி, ef - மூடிய அசையொலி). தொல்காப்பியர் திறந்த அசையை மட்டுமே வச்சிக்கிட்டு தமிழ் இலக்கணம் சொல்லுறார். ஆனா, திண்ணைப் பள்ளிக்கூடத்துலெ நாங்க படிக்குற காலத்திலே, 1950 கள்லெ, மூடிய அசையை வச்சு மெய்யைச் சொல்ற பழக்கமும் உண்டு. இக், இங், இச், இஞ், இப்படி அந்த வரிசை போகும். இந்த அசை மாற்றம் எப்ப வந்ததுன்னு எனக்குத் தெரியலை.

இயல்பு திரியாதுங்குறது மாத்திரையைப் பற்றியது. க் ங்குற மெய்யும் ஓ ங்குற உயிரும் சேர்ந்தா, கோ ங்குற உயிர்மெய்க்கு 2 1/2 மாத்திரை வரணும் இல்லையா, ஆனா, அந்த அரை மாத்திரை காணாமப் போயி, உயிருக்கு எவ்வளவு மாத்திரை இருந்துதோ, அதே மாத்திரை அளவுதான் உயிர்மெய்யான கோ - வை ஒலிக்குறதுக்கு எடுத்துக்கிறோம். இதையும் கவனத்துலெ கொள்றது நல்லது.

பல குறியேற்றக்காரர்கள், மெய்யும் உயிரும் பொருந்துறது, இயைகிறது ஏதோ ஓர் இழுனிய செயலாக்கம் (linear process)னு நெனைச்சுக்கிறாங்க. தங்களுடைய பேச்சுக்கள்லெ சொல்லவும் செய்கிறாங்க. அப்படி இல்லைங்க. அது பிழை. மாத்திரை குறைஞ்சுது பாருங்க, அப்பவே அது இழுனிய செயலாக்கம் இல்லை; இழுனாச் செயலாக்கம் (non-linear process) னு புரிஞ்சிக்கோணும். கிட்டத் தட்ட ஒரு வேதிச் செயல் போலவே உயிரும், மெய்யும் இங்கு பொருந்துகின்றன; இயைகின்றன. 

இழுனிய செயலாக்கம்னா, இப்படிப் பொருந்தியிருக்காது. ஒரு சின்னத் தட்டு தட்டுனா, உயிர் ஓடியே போயிடும். [இழுனிய செயலாக்கம் = linear process; இழுனை = line; இதைக் கோடு என்று சொல்லிப் போனால் அது, பல முன்னொட்டுப் பயன்களைத் தருவதில்லை. அதே போல, நேர் என்பதும் direct என்ற பொருள் தருகிறதே ஒழிய, line என்ற பொருள் தருவதில்லை. நேர்கோடு என்பது நீர்வீழ்ச்சி மாதிரியான பயன்பாடு; என்னைப் பொறுத்தவரை அது சொல்விளக்கத்திற்குப் பயன்படுமே ஒழிய, கலைச்சொல்லாகப் பயன்படாது. மிகுந்த யோசனைக்கு அப்புறம் தான், இப்பொழுது இரண்டு மூன்று ஆண்டுகளாக, இழுனை என்ற சொல்லை ஆண்டு வருகிறேன். என்னுடைய கசகு - chaos - பற்றிய பாடலில் பயன்படுத்தியிருந்தேன்.]

அடுத்து, 11, 12 ஆம் நூற்பாக்களில் மெய்க்கும், சார்பெழுத்துக்களும் ஒலிக்கும் அளபு அரை மாத்திரை என்று சொல்கிறார்.

இனிப் பதிமூன்றாம் நூற்பாவிற்குப் போவோம். இதுலே இளம்பூரணர்லேர்ந்து நான் சிறிது மாறுபடுறேன். என்னோட புரிதலின் படி, மேலே எழுதியிருக்குற நூற்பாவின் இரண்டாவது வரி அரையடி தான். மிச்ச அரையடியை 14ம் நூற்பாவோட சேர்க்கணும். அப்பத்தான் 14ம் நூற்பா விளங்கும். அந்த நூற்பா மகரத்தின் வடிவைப் பற்றிச் சொல்லுகிறது. மேலே சொன்ன அரையடி 14ம் நூற்பாவோடு சேரலைன்னா, திடீர்னு இருந்தாப் பொலெ, ஏன் வடிவு பத்திச் சொல்றார்னு கேள்வி எழும். ஒரு கணுத்தம் (continuity) இல்லாம இருக்கும். (ஆனா, இளம்பூரணர் மிச்ச அரையடியையும் 13ம் நூற்பாவோட சேர்ப்பார்.) இப்போதைக்கு, நான் எழுதுன படியே பொருள் சொல்றேன்.

இந்த மகரம் இருக்கும் பாருங்க, அது வாய் தொறக்காம முணகுற ஒலி. இந்த ஒலியை மற்ற மெல்லினங்களுக்கு அப்புறம் கூடச் சேர்த்து முணகலாம். காட்டா, "கொண்ம்" - கொண்டுவா. "போன்ம்" - போலும். இப்படி முணகுறாப் பொல வர்ற இடத்துலே அரை மாத்திரை கூட இல்லாம கால்மாத்திரை அளவுதான் ஒலிக்குறோம். இந்தக் காலத்தில் அன்றாடப் பேச்சில் கூட, "ம், இப்பத்தான் வந்தீங்களோ" என்று சொல்கிறோம். ம் கொட்டுகிறோம். பொதுவா, இந்த இம்மை கால் மாத்திரையாப் பலுக்கலாம், அரை மாத்திரையாப் பலுக்கலாம், ஏன், இன்னும் நீட்டிக் கொண்டு வேணும்னாலும் செய்யலாம். இந்த முணகுற ஒலி கொஞ்சம் நுணுகிய ஒலி. கவனம் வேணும்.

அடுத்து, 14ல் ருந்து 17 வரையான நூற்பாவைப் பார்ப்பதற்கு முன்னால், அந்தக் கால எழுத்துமுறைகளை கல்வெட்டு ஆசிரியர்களை வைத்துக் கொண்டு முழுக்கப் புரிந்து கொள்வது நல்லது. அதை அடுத்த பகுதியிலெ பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, October 10, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 3

கூத்து மேடைங்கள்லெ கூத்தை முன்கொண்டு செல்றது அதில் நடிக்குற ஆடுநர், ஆட்டத்தி மட்டுமில்ல. மேடையின் ஓரத்தில் இருக்குற இசை வல்லுநரும், கதைசொல்லியும் கூடப் பொறுப்பு கொண்டவக தான். சில இடங்கள்லெ, கதைசொல்லி மேடைக்கு நடுவிலும் கூட வந்துபோவார். இந்தக் கதைசொல்லியைச் சூத்ரதாரின்னு வடமொழிலெ அழைப்பாங்க. சூதர்>சூத்ரர் என்பவரைப் பாணர் = பாட்டுப் பாடுபவர் என்று தமிழில் சொல்லுவாக. இவக, பொதுவாக, அரசன் / தலைவன் ஆகியோரின் புகழ் பாடுறவுக.

இங்கே தொல்காப்பியக் கூத்தில், ஓரத்தில் நின்னுக்கிட்டு, கதை சொல்லியாவும், விளக்கம் கொடுப்பவராவும், இருக்காரு இளம்பூரணர். குறிப்பா, முதல் நூற்பாவிற்கு அதிக விளக்கம் தர்றார். மூணாவது நூற்பாவுக்குப் போறதுக்கு முன்னாலெ, அந்த விளக்கத்தைத் தந்துடுறேன். ஏன்னா, குறியேற்றம் செய்ய முனையுறவுகளுக்கு அதுவும் ஒரு தேவையான விளக்கம்.

பொதுவா, எந்த நூற்பாவையும் தொகுத்துக் கூர்றது தொகை. அதை வகுத்துப் பிரிச்சுக் கூர்றது வகை. அதை இன்னும் பெருக, விரிச்சுக் கூர்றது விரி. தொகை / தொகுத்தல்ங்குறது கலனக் கணக்கில் (calculus) integration, summary ன்னு சொல்லப்படும். வகை / வகைத்தல்ங்குறது differentiation / differencing ன்னு புரிஞ்சு கொள்ளப்படும்; விரித்தல்ங்குறது expansion.

இன்னும் ஆழம் போய்,

தொகைக்குள் தொகையும், தொகைக்குள் வகையும், தொகைக்குள் விரியும்,
வகைக்குள் தொகையும், வகைக்குள் வகையும், வகைக்குள் விரியும்,
விரிக்குள் தொகையும், விரிக்குள் வகையும், விரிக்குள் விரியும்

என ஒம்போது முறையாலும் பார்க்குறது உண்டு.

தொகைக்குள் தொகைங்குறது சுருக்கத்திலும் சுருக்கம். வரலாற்றில் முகன்மையான செய்திகளெ எல்லாம் ஒர் பாரசீக அரசன் தொகுக்கச் சொன்ன கதை பற்றி முன்னாடிச் சொல்லியிருந்தேனே, ஞாவகம் இருக்கோ? அதிலெ, "மாந்த வரலாற்றில் முகன்மையிலும் முகன்மையான செய்தி என்ன?" ங்குறதுக்கு, அந்த நாட்டுச் சான்றோர், "அவர் பிறந்தார், வாழ்ந்தார், இறந்தார்" ங்குற வாசகத்தை ஒரு மரப்பட்டையிலெ எழுதி, மணிப்பேழைக்குள்ளே வச்சு அரசனிடம் கொடுத்தாங்களாம். நடந்த நிகழ்ச்சிகள்லெ அழிஞ்சு மண்ணோடு மண்ணாகிப் போகாம, மீந்து கிடக்கும் மாந்தரின் வாழ்வுத் தொடர்ச்சியே, மாந்த வரலாற்றில் தொகையிலும் தொகையாய் அமைஞ்சுதாம்.

அது மாதிரி, எழுத்துங்குற ஒண்ணு இருக்குறதைத் தான், மொழி பற்றிய தொகைக்குள்ளும் தொகையா இளம்பூரணர் சொல்வார். எழுத்துகள் இல்லாத மொழிகள் அழிஞ்சு போயிருமில்லே? இனித் தொகைக்குள் வகையாக 30 எழுத்துக்களையும், தொகைக்குள் விரியாக 33 -யையும் (30 முதல் எழுத்துக்கள் + 3 சார்பெழுத்துக்கள்) சொல்வார். மேலும் தொடர்ச்சியாய்,

வகைக்குள் தொகை =30; வகையுள் வகை = 33; வகையுள் விரி = 33+ 7 அளபெடை ன்னு காட்டுவார். (அளபெடைகள் அமையுறது நெடில் எழுத்துக்களுக்கு மட்டுமே; அவை தனிச்ச ஒலிங்க. அவையும் மொழியின் கூறுகளே. அளபெடைகளை ஒரு கீற்றத்தாலெ சுட்டிக்காட்ட முடியாது. அவற்றை இரு கீற்றங்களாலெ நாம சுட்டிக் காட்டுறோம்.) ஆக வகைக்குள் விரி 40 ஆகும்.

இனி, விரியுள் தொகை = 33; விரியுள் வகை = 40; விரியுள் விரி = 12+18+12*18 + 3 சார்பெழுத்துக்கள் + 7 அளபெடைகள் = 256 எழுத்துக்கள் ன்னு ஆகும். நாம எல்லாம் ரொம்பக் காலத்துக்கு, தமிழ் நெடுங்கணக்கு 247 எழுத்துக்கள்ன்னே சொல்லிப் பழகி வந்திருக்கோம். அதை மறுத்து, ஒலியியலின் படி, தமிழ் எழுத்தில் விரியுள் விரி, அதாவது நெடுங்கணக்கு என்பது, 256 ன்னே இளம்பூரணர் சொல்றார். நச்சினார்க்கினியரும் 256 -யைத்தான் விரியுள் விரியாகச் சொல்றார். பின்னே எப்படி நமக்குத் தமிழ்ப்பாடம் சொல்லிக் கொடுக்குற போது, மாறிச் சொல்லிக் கொடுக்கிறாங்கன்னு எனக்கு விளங்கலை. உங்களுக்குத் தெரியுதா?

குறியேற்றக்காரங்களே! கொஞ்சம் கவனிச்சீங்களா? தமிழின் மொத்த எழுத்துக்கள் 2^8 = 256. அதிலெ முதல் எழுத்துக்கள் 30, சார்பெழுத்துக்கள் 3, அளபெடைகள் 7, உயிர்மெய் எழுத்துக்கள் 216. அய்யா சாமிகளா, இனிமேலும் character-ங்குற சொல்லை முதல் எழுத்துக்களுக்கு மட்டும் புழங்காதீங்கய்யா! மொழிங்குறது ஒலி சார்ந்ததுன்னா, 256 ம் character தான். எதுவும் குறைச்சதில்லெ.

[உண்மையிலேயே மெய்யெழுத்துக்கள் தான்யா, நம்மாலெ தனியே பலுக்க முடியாதவை; அவை ஒருவிதக் ஒலிக் கட்டுமானங்கள் (sound constructs). அவற்றை உணர்றது சரவலான வேலை. 

மாந்தனால் இக் என்று மூடிய அசை(closed syllable)யொலியாகவோ, கி என்ற திறந்த அசை (open syllable) யொலியாகவோ தான் ஒலிக்க முடியுமே ஒழிய, க் ன்னு தனிச்சு ஒலிக்க முடியாது. கருவிகளின் துணை கொண்டு, அந்த இக், அல்லது கி ஒலியலைப் படங்களை முன்னாலோ, பின்னோலோ கொஞ்சம் கொஞ்சமாய்க் கத்தரிச்சுக் கத்தரிச்சுத் தான், க் ங்குற ஒலிப் படத்தைப் பெறணும். 

அப்படிச் செய்யும் போது அந்த ஒலிப்படம் உயிரில்லாத அலை - உருவத்தையே (lifeless wave form) காட்டும். எனவே அதை உயிரில்லா மெய்யுன்னு சொல்றாக. மெய்யைக் காட்டிலும் உயிர்மெய் ஒலிகள் நமக்கு நெருங்கியவை. "உயிர்மெய்யை ஒதுக்குவோம்; மெய்யைத் தாங்குவோம்" னு சொல்றது வேடிக்கையான பேச்சு. உயிர்மெய் இல்லாமெ மெய்யை எப்படி இவங்க உணர்ந்தாங்க, திடீர்னு வானத்திலேர்ந்து மெய்கள் குதிச்சுதா? மெய்யெழுத்துகள்னு சொல்றவை, மாந்தனாலெ நெருங்க முடியாத (inaccessible), ஆனால் உள்ளமை (reality) உடையவைன்னு தான் பெரியவுக சொல்றாக.]

இனி மூன்றாவது நூற்பாவில் இருந்து 6 ம் நூற்பா வரை ஒரே வீச்சிலெ பார்ப்பமா?

3. அவற்றுள்
அ இ உ
எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓரளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப

4. ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.

5. மூவளபு இசைத்தல் ஓரெழுத்து இன்றே

6. நீட்டம் வேண்டின் அவ்வளபு உடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்

இந்த நூற்பாக்கள்லெ, ஓரளபு உள்ள அஞ்சு குற்றெழுத்துக்களையும், ஈரளபு உள்ள ஏழு நெட்டெழுத்துக்களையும் குவிவிளக்குப் போட்டு அறிமுகம் செய்யுறாரு தொல்காப்பியரு. கூடவே ஒரெழுத்துக்கு மூவளபு ஒலித்தல் (இசைத்தல்) கிடையாதுங்குறதையும் வரையறை செய்றாரு. ஆனா, மூவளபு ஒலிக்கின்ற மொழித் தேவைகள் உண்டு சாமி. அந்த நேரத்திலெ, ஒவ்வொரு ஈரளபு நெட்டெழுத்துக்கும் பக்கத்தாலெ, அதன் இணையான ஓரளபு குற்றெழுத்தை அருகெ போட்டு, பிளவுபடாமல், கூட்டி எழுதலாம்னு புலவர்கள் சொல்றாங்களாம்.

இந்த அளபெடைகள்ங்குறவை ஒருவிதமான கூட்டெழுத்துக்கள். உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் உயிரும் மெய்யும் சேர்ந்தவைன்னா, அளபெடைகள் நெட்டெழுத்தும் குற்றெழுத்துமாய்ச் சேர்ந்த கூட்டு உயிரெழுத்துக்கள். உயிர்மெய் எழுத்துக்களுக்கு எவ்வளவு உள்ளமை (reality) உண்டோ , அவ்வளவு உள்ளமை இந்த அளபெடைகளுக்கும் உண்டு.

இந்தப் "பிளவுபடாமல்" ங்குற கட்டியத்தை (condition) மறந்து, இந்தக் காலத்தில் பிளவுபட்டாப் போலெ நெடிலையும், குறிலையும் அருகருகெ போட்டு, ஏதோ நாமெல்லாம் பேர் பண்ணிக்கிட்டிருக்கோம். கூடிய மட்டும் அளபெடை இல்லாமலே பேசுதே இக்காலத் தமிழ்முறையாவும் இருக்கு. இல்லைன்னா, எழூஉதல் என்றதை எழுதுதல்னே ஏன் சொல்றாங்க? ஆக அளபெடைங்குறது பேச்சுலெ பெரும்பாலும் இப்போ தவுக்கப்படுது. அளபெடை பழகுறவுங்க தமிழ்ப் பண்டிதர்னே சொல்லி ஒதுக்கப் படுறாங்க.

அடுத்தது, இந்த அளபுங்குற மாத்திரைக்கான இலக்கணம். அளத்தல்னா measurement. மாத்தல்னாலும் அளத்தல் தான். மாத்தலில் விளைஞ்ச சொற்கள் தமிழ்லெ ரொம்பவெ இருக்கு. மாதம் (month), மதி (=நிலா), மட்டம் (=அளவு) மானம் (அடிமானம், குறிமானம், தீர்மானம்; எல்லாமே measured or determined entities), மானி = அளவிடும் கருவி. கணக்கில்லாச் சொற்களை இங்கே கூற முடியும். மாத்திரைங்குற சொல்லும் மாத்தல்ங்குற வினையிலெ எழுந்தது தான். அளவிடற அலகுக்கு மாத்திரைன்னு பேரு. அந்த மாத்திரை நுணுகி உணரோணுமாம். எளிதில் உணரமுடியாதாம்.

மாத்திரையை விளக்க வந்த இடத்துலெ, ஏழு வகை அளத்தல் முறையை இளம்பூரணர் கூறுறார். நிறுத்தளத்தல், பெய்தளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகத்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் - அப்படி ஏழு வகை. இவை பத்தி முன்னாடி ஒரு முறை, ஏப்ரல் 2006 ல் ஒரு கட்டுரையை என் வலைப் பதிவிலெ எழுதினேன். (அதுக்கு முன்னாடி மடற்குழுக்களிலும் எழுதுனேன்.) முன்னாடி எழுதுனதுலெ இருந்த கருத்துப் பிழைகளை எல்லாம் இப்பச் சரி செய்ஞ்சு, இங்கு தொடர்பான குறிப்புக்களைச் சேர்த்துக் கொடுத்திருக்கேன்.

ஏழாவது நூற்பா இது தான்:

"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"

இதற்கு உரை சொல்ற உரையாசிரியர் இளம்பூரணர், மேலே சொன்ன ஏழு முறைகளையும் கூறி, அதற்கும் மேலாக, மாத்திரை அளந்தது சார்த்தியளத்தல் முறைன்னு சொல்றார். இந்த அளவைகள் எல்லாம் எதைக் குறிக்குதுன்னு பார்த்தால், சிலது புரியுது; சிலது புரியலை.

1. நிறுத்தல்ங்குறது எடை அளப்பதைக் குறிப்பிடுது.

2. பெய்து அளத்தல்ங்குறது நீர்மத்தின் வெள்ள அளவைக் குறிப்பிடுது. [வெள்ளத்தை (volume) இக்காலத்தில் இருபதாம் நூற்றாண்டுச் சொல்லான "கன அளவு"ங்குறதைக் கொண்டு தவறான முறையிலெ குறிச்சிக்கிட்டு வர்றோம். கனம்ங்குறதும் ஒரு வகையில் எடையைக் குறிக்கிறது தானே? நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எந்தெந்த அளவு விரிஞ்சு பெருகி, வெளியை (space) அடைச்சிருக்கோ, அந்தப் பெருக்கைத் துல்லியம் கருதி, வெள்ளம்னே குறிப்பிடலாமே? ஏன், இப்படிப் பழஞ்சொல்லைத் தவிர்க்கிறோம்னு புரியலை. வெள்ளம்குற சொல்லு பெருக்கைத் தானே குறிக்குது? சட்டுன்னு அது நம்ம மனத்தில் வெளியையும் குறிக்குமே?]

3. நீட்டி அளத்தல்ங்குறது நீளத்தை அளப்பது. சரி, பரப்பை அளக்குறது என்னவாச்சு? அது ஏன் இந்த வரிசையிலெ இல்லை? நீளம், வெள்ளம் எல்லாம் வர்ற போது, பரப்புங்குறது ஏன் வரலெ? இல்லை, எதையாவது நாம தவறாப் புரிஞ்சிக்கிட்டோ மா? தெரியலை. [பொதுவா, அகலமாக அகண்டு கிடக்குறது அகரம் (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் acre, area). பரந்து கிடப்பது பரப்பு, பரட்டு, பரத்து போன்றவை (இணையான இந்தையிரோப்பியச் சொற்கள் broad, breadth)].

4. அடுத்தது தெறித்து அளத்தல்; தமிழ் அகரமுதலியிலெ இந்த முறைக்கு இசைக்கருவியின் நரம்பைத் தெறிச்சு (=சுண்டி) செவியின் அருகே வைத்து அளப்பதுன்னு போட்டிருக்கு. இந்த முறையிலெ, செவியின் அருகே ஒரு அதிர்வை ஏற்படுத்தி அதன் அதிர்வு எண்ணை அளக்குறாங்களா? அல்லது அதிர்வின் நேர அளவைக் கண்டுபிடிக்கிறாங்களா? என்ன செய்யுறாங்க? விவரம் அறிய முடியலை.

5. முகந்தளத்தல்ங்குறதின் மூலம், இந்தக் காலத்திலெ திண்மப் பொடிகளை (solid powders) அளக்கவும், நீர்ம(liquid)த்தை அளக்கவும் உள்ள அளவையைச் சொல்லுகிறோம். அப்படியானா, ஏன் பெய்தல் அளவைன்னு தனியா ஒண்ணு இருந்துது? முகந்தளத்தலுக்கும், பெய்தளத்தலுக்கும் இடையே என்ன வேறுபாடு? அல்லது, ஒருவேளை முகத்தல் அளவைங்குற முறை, திண்மப் பொடிக்கு மட்டுமே இருந்துச்சா? நமக்குத் தெளிவு ஏற்படமாட்டேங்குது.

ஒண்ணு மட்டும் விளங்குது. நீர்மங்கள்ங்குறவை அமுக்க முடியாதவை (incompressible). ஆனால் திண்மப் பொடிகள், அவற்றுடைய துகள் அளவைப் (particle size) பொறுத்து, புரைமை (porosity) மாறக் கூடியவை. எடுத்துக் காட்டா நாம அரிசியை எடுத்துக்குவோமே? அரிசியின் சன்னத்தைப் (thickness) பொறுத்து, முகந்தளக்குற போது கூடவோ, குறையவோ, கொள்ளளவு காட்டும் இல்லையா? ஒரே எடை காட்டுற பொன்னி அரிசியும், ஐஆர் இருபதும் ஒரே அளவு வெள்ளம் காட்டுமா? எனவே முகந்தளத்தல்ங்குறது பெய்தளத்தல் என்பதிலேர்ந்து வேறுபடலாம் இல்லியா?

6. அடுத்தது, தேங்க முகந்தளத்தல். தேங்க ங்குற முன்னொட்டு எதைக் குறிக்குது? தேங்கி இயல்பாகக் கிடந்ததையா? இல்லெ, வேறையா? முன்னே சொன்னப் பொலெ, அறிவியலின் படி, திண்மப் பொடிகளின் வெள்ளம், அவற்றின் புரைமை(porosity)க்கும், துகள்களின் சன்னத்துக்கும் தக்க மாறுபடும் இல்லையா? இந்தத் திண்மப் பொடிகளைத் தட்டித் தட்டி, அமுக்கி அமுக்கி, வெள்ளத்தை ஓரளவு நெருக்க/நெறிக்க முடியுமே? அதாவது ஓரளவு குறைக்க முடியும். அப்படி நெறிச்சுத் தேக்கி அளந்தது தான் மேல் கூறிய தேங்க முகந்தளத்தலோன்னு எண்ண வேண்டியிருக்கு. வெறுமனே, முகந்தளத்தலில், திண்மப் பொடியை முகந்து, நெறிக்காம அளந்தா, அதன் இயல்பான புரைமையோடு (natural porosity) உள்ள வெள்ளத்தை அளக்க முடியும். மாறாத் தேங்க முகந்தளத்தலில், நுணுகிய புரைமை (minimum porosity) யோடு கூடிய வெள்ளத்தை அளக்க முடியும்.

7. சார்த்தியளத்தல்ங்குறது ஒண்ணை இன்னொண்ணோடு சார்த்தி ஒப்பிட்டு அளக்குறது. கண்ணிமைக்கிற நேரம், விரல் நொடிக்கிற நேரமுன்னு சொல்றோமே, அவையெல்லாம் ஒப்பீட்டு அளவுகள் தான். இந்தக் காலத்தில் வெம்மையை (temperature) அளவிட, இதள்த் தெறுவமானியை (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்)ப் பயன்படுத்துற போது, வெம்மை கூடக் கூட, இதள்த் தண்டின் நீட்டம் கூடி வருதுல்லெ? அங்கே இதளின் நீட்டத்தை வெம்மையிலெ சார்த்தி, அளவெடுக்கிறோம்.

8. எண்ணி அளத்தல்ங்குறதும், நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துறது போலத் தான்.

என்னவொரு நிலை பார்த்தீங்களா? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவா" இன்னும் எத்தனை கிடக்கும், இந்தத் தமிழ்லெ?

அன்புடன்,
இராம.கி.

Saturday, October 07, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 2

கூத்துன்னு சொன்னவுடனே ஒண்ணு எனக்கு ஞாவகத்துக்கு வருது.

பொதுவா, கூத்துப் பாக்குறவுக்களுக்கு, கூத்தோட கதையெல்லாம் நல்லாவே தெரியும்; இன்னுஞ் சொல்லணும்னா, அதுலே வர்ற உரையாடல், பாட்டு எல்லாமே கூட அவுகளுக்குத் தெரிஞ்சிருக்கும். பின்ன எதுக்கு வருசா வருசம் திருவிழாவுலே கூத்துப் பாக்குறாங்கன்னு நமக்கு ஒரு கேள்வி வரும். வேறெ ஒண்ணுமில்லைங்க, வாத்தியார் படத்தை எதுக்குத் திரும்பத் திரும்பப் பார்க்குறமோ, அதே மனப்பான்மை தான்; கொஞ்சம் கூடச் சலிக்கிறது, இல்லைங்களே?

கூத்துலே ஓவ்வொரு காட்சியையும் திரும்பத் திரும்பச் சுவைக்கிறதுலெ ஏதோ ஒரு மகிழ்ச்சிங்க. அதுமாதிரி இந்த எழுத்து, மொழி எல்லாம் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது தான்; இருந்தாலும், இதெ நுணுக்கமாப் பார்த்து, "என்ன சொல்றாங்க; இந்தத் தடவையிலே புதுசா ஏதாவது விளக்கம் வருமா? போனவாட்டி சொன்னதையே இந்த வருசம் சொல்லுவாங்களா?" அப்படின்னு ஓர் எதிர்பார்ப்பு ["காயாத கானகத்தே" யிலே புதுசா ஏதாட்டும் பிருகா வருமாங்குற பேராசை.]

இளம்பூரணரும், அவருக்குப் பின்னால் வரும் நச்சினார்க்கினியரும், பொதுவா, எழுத்துங்குறதை எட்டு வகையாலே உணர்த்தோணும்னு சொல்லுவாங்க! முடிஞ்சா, எட்டுக்கு மேல் வகையாலும் உணர்த்தலாமாம்! நாம, எட்டோ ட நிறுத்திக்குவோம். வாத்தியாருக்கு மிஞ்சிய மாணவனா, நாம் ஆயிறப் படாது, இல்லியா?

முதல் வகை என்ன? - இது இதெல்லாம் எழுத்துன்னு சொல்லணுமாம். (வேறே ஒண்ணும் இல்லை, எழுத்தை ஒலிச்சுக் காட்டணும்; எழுத்துங்குறது ஒலிக்குப் பகரி-substitute தானே? அது ஒலியைக் குறிக்கலேன்னா, அப்புறம் என்ன எழுத்து? வெறும் பப்படம் ஆயிரும்.)

இரண்டாவது - இது இதுக்கு இன்ன பெயர். முதல் நூற்பாவுலே அழகாச் சொல்றார் பாருங்க, தொல்காப்பியர். அகரத்துலே தொடங்கி னகரம் வரைன்னு பெயரைச் சொல்றார். இதாங்க அந்த எழுத்துக்களுக்குப் பெயரு. TSCII மடற்குழுவுலே TSCII எழுத்துக்களே ஆணையர்கள்ட்டே பதிவு செய்யுறதைப் பத்தி இப்பப் பேசிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பேச்சுலே, இந்த எழுத்துக்களுக்கு என்ன பேரு கொடுக்கிறதுங்குறதுலே ஒரே சண்டை. Printed salvation இருக்கா? பேர்சொல்லி யாரானும் பொத்தகம் போட்டிருக்கானுவளா? வேறே எங்கேய்யா போகணும், தொல்காப்பியரும், இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் பத்தாதா? அவுகளுக்கு மேலே யாரு ஆணத்தி? (ஆணத்தி -ங்குறது சோழர் கல்வெட்டுக்கள்லே authority ங்குறதுக்கான சொல்; ஆணை இடக் கூடியவன் ஆணத்தி; நாம என்னடான்னா, அதைத் தொலைச்சிட்டு அதிகாரி, அத்தாரிட்டின்னு தடுமாறிக்கிட்டு இருக்கோம்.)

தொல்காப்பியர் சொன்னபடி பார்த்தா, நம்மோட எழுத்துக்கள் ஒண்ணுக்கும் ஓவ்வோர் பேர் இருக்கு; அகரம், ஆகாரம், இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐகாரம், ஒகரம், ஓகாரம், ஔகாரம், அஃகேனம், ககரம், (இதன் விரியை உயிரெழுத்து வரிசையை மேலே சொன்னது போல் எழுத முடியும்; ககர அகரம், ககர ஆகாரம்...... இப்படிப் போகும்.), ஙகரம், சகரம், ஞகரம், டகரம், ணகரம், தகரம், நகரம், பகரம், மகரம், யகரம், ரகரம், லகரம், வகரம், ழகரம், ளகரம், றகரம், னகரம் என்று எழுத வேண்டும். இந்தக் காலத்துலே இந்தப் பேருகள்லாம் மறைஞ்சு, ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா ..... ன்னு புதுப்பெயரைச் சொல்லிக்கிட்டு இருக்கோம். 

எங்களுக்கெல்லாம் 1950 கள்லே, திண்ணைப் பள்ளிக்கூடத்துலே இதே மாதிரி "ன்னா" போட்டுத்தான், சொல்லிக் கொடுத்தாங்க. இப்போதைய சிங்கள மொழிப் பேர்களும் கூட இதே மாதிரித் தான் இருக்கு. (அந்த முட்டாப் பயல்களும் தமிழோட, தமிழனோட, தங்களுக்கு என்ன உறவுமுறைன்னு விளங்கிக்கிடவும் இல்லே. மாமன் முறை, மச்சான் முறைங்க. வரலாற்றின் படி, விசயனும், விசயனோட தோழர்களும் கட்டிக்கிட்டது தென்பாண்டித் தமிழச்சிகள் தான். அவங்க மொழிலே தமிழ் ஊடுறுவாமலா இருக்கும்? பாகதத்துக்கும், தமிழுக்குமாப் பொறந்தது தான் சிங்களம்.) இந்தப் புதுப்பெயர் வரிசை எப்ப வந்ததுன்னு தெரியலே! ஏன் வந்ததுன்னும் தெரியலை.

மூணாவது இன்ன முறைமை (முறைமைன்னா வரிசை. என்ன வரிசைலே எழுத்து இருக்கு? தொல்காப்பியர் சொல்றார்: அ-வுலே ஆரம்பிச்சு ன-வுலே முடி. இதெ விட்டுப் போட்டு, வேறே மாதிரி எழுத்து வரிசை எழுதாதேன்னு சொல்றாரு. ஆனா, இப்ப இருக்குற குறியேற்றக்காரங்கள்லாம் இதையெல்லாம் எங்கே படிக்குறாங்க? கன்னாப் பின்னான்னு ஏதோ ஒரு குறியேற்றத்தைச் செய்ஞ்சு போடவேண்டியது; அப்புறமா, "குறியேற்ற வரிசைங்குறது ஒண்ணு, அணிமுறை (collation) ங்குறது இன்னொண்ணு"ன்னு ஒரு சப்பைக்கட்டு கட்டி, ஒவ்வொரு மொழிக்கும் அணிமுறை ஒழுங்கைக் கொண்டார்றதுக்கு, ஒரு நிரலி எழுதி, சரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஏன்னா, நாமல்லாம் மர மண்டைங்க, பாருங்க.)

நாலாவது இன்ன அளபின (அளபு ன்னா அலகு - ஒரு unit. அகரமா, அதுக்கு ஓரளபு; ஆகாரமா, அதுக்கு ஈரளபு. க் ங்குற மெய்யா, அது அரையளபு, மகரம் சில இடத்துலெ, கால் அளபுன்னு விவரிச்சுக்கிட்டே போவாரு இந்தத் தொல்காப்பியர். அந்த ஒரு unit ங்குறது எவ்வளவு நேரம் ஒலிக்கணுங்குறதை இன்னோர் எடத்துலே வரையறை செய்வார்.)

ஐந்தாவது இன்ன பிறப்பின (இந்த எழுத்துக்கு ஒலி எங்கே பிறக்கோணும்? வாய்க்குள்ளே இருக்குற மேல் அண்ணத்தை எப்படித் தொடணும்? எங்கே தொடணும்? நாக்கு எங்கே? பல்லு எங்கே? எப்படி ஒலியை விடோணும்? எல்லாத்துக்கும் சின்னச் சின்னமா, ஒரு விளக்கம் கொடுப்பார்.)

ஆறாவது இன்ன புணர்ச்சிய (இந்த எழுத்துக்குப் பக்கத்தாலே, இன்னொரு எழுத்து வந்தா, முதல் ஒலி எப்படி மாறும்? இரண்டாவது ஒலி எப்படி மாறும்? கணக்கில்லாத காட்டுக்கள் இருக்கு. எல்லாத்துக்கும் விளக்கம் எழுத்ததிகாரம் தருது. இந்த எழுத்ததிகாரம் மட்டும் இல்லைன்னு வச்சுக்குங்க, கணியிலே பேச்சுத் தெரிப்பு - speech recognition செய்யுறது ரொம்பச் சரவலாய்ப் போயிரும். இன்னார் பேசுறார், என்ன பேசுறார் னு எப்படிங்க பொருள் விளங்கிக்குறது? கேக்குறதெல்லாம் நமக்குப் புரிஞ்சு போகுதுங்களா?)

ஏழாவது இன்ன வடிவின (இந்த எழுத்து என்ன வடிவிலே இருக்குன்னு சொல்றது. இங்கே தாங்க ஒரு டொக்கு. தொல்காப்பியர் காலத்துலே இரண்டு விதமான தமிழி எழுத்து இருந்திருக்கு. இரண்டிலேயும் கொஞ்சம் கொஞ்சம் சிக்கல் இருந்திருக்கு. ஒரே எழுத்து, இரண்டு வேறே ஒலிகளுக்கு வடிவமா இருந்திருக்கு. (ஒரு தமிழி முறையிலெ, ககர அகரமும், ககர ஆகாரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்; இன்னொரு தமிழி முறையிலே, ககரமும், ககர அகரமும் ஒரே மாதிரி கண்ணுக்குத் தெரியும்.) இது போக விந்தியத்துக்குத் தெக்கே கிட்டத் தட்ட ஒரே நேரத்துலே இரண்டு எழுத்து முறை (தமிழி I, தமிழி II) இருந்தா அது குழப்பம் தானே?

இது கல் - ஆ, கால் - ஆ, அப்படின்னு தெரியாம, குழம்பிப் போனா?

சாத்தங்குற இடத்துலே ”த்த” ங்குறதுக்கு புள்ளியில்லாமெ இரண்டும் ஒரே எழுத்தா இருந்தா? தடுமாற மாட்டோம்? "இல்லையில்லை, தமிழ்லெ தத ன்னு வராது; அது த்த என்றுதான் இருக்க முடியும்"னு கொஞ்சம் யோசிச்சிட்டுல்லே சொல்ல வேண்டியிருக்கு. இருந்தாலும் குழப்பம், குழப்பம் தான்.

இப்படி ஒரு குழப்பம் ஊரெங்கும் இருந்தது தொல்காப்பியர் போல படிச்சவங்களுக்கு ஏற்கனவே இருந்த தமிழி I, தமிழி II எனும் எழுத்து முறைகள்லெ ஒருப்பாடு இல்லைங்க. ககரம், ககர அகரம், ககர ஆகாரம் ஆகிய மூன்றிற்கும் வடிவுலே வேறுபாடு காட்டோணும்னு சொல்லி அவுங்க தான் (படித்தவக தான்) புள்ளிங்குற ஒண்ணைப் பரிந்துரைச்சிருக்கோணும்னு இன்னைக்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அதனாலே, இப்படித் தாங்களே சில திருத்தம் சொன்னதாலே, இது தான் வடிவம்னு அழுத்தம் திருத்தமாச் சொல்லாமே, அவரோட ஆட்கள் பரிந்துரைச்ச திருத்தங்களை மட்டுமே தொல்காப்பியத்துலெ எடுத்துச் சொல்லிட்டு, தொல்காப்பியர் கொஞ்சமா வழுவிக்கிறாரு. இந்த ஆளு பெரும் எமகாதனுங்க!

எட்டாவது இன்னின்ன தன்மைய (இந்த எழுத்துக்களுக்கு இன்னின்ன property இருக்குன்னு சொல்றது இந்த எட்டாவது வகை. இதிலும் தொல்காப்பியர் அமைதி காக்குறார்னுட்டு இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் சொல்றாங்க.)

ஆகக் கடைசி ரெண்டு வகையிலே "கம்முன்னு கிட"க்கிறார் தொல்காப்பியர். எழுதுற போது அவருக்கென்ன சிக்கலோ? யாரு அவர் கூற்றுகளை எதுத்தாங்களோ, நமக்குத் தெரியலை.

இனி இரண்டாவது நூற்பாவுக்கு வருவோமா?

முன்னாடிச் சொன்ன மூணு அலங்கடை (=exception) ஆட்களைப் பத்திய நூற்பா இது.

2. அவைதாம்
குற்றியல் இகரம் குற்றியல் உகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்து ஓர் அன்ன.

குற்றியல்னா குறுகி ஒலித்தல்னு பொருள். வேறே ஒண்ணுமில்லை, கூழைக் கத்திரிக்காய் மாதிரி ஒலியிலே சிறுத்தது; ஆனாலும், கடுகு சிறுத்துக் காரம் போகுமா?

குற்றியல் இகரம், குற்றியல் உகரம் எல்லாம் இப்பப் பேச்சுலே இருக்கான்னு கேட்டா, நிரம்பவே இருக்குன்னு தான் சொல்லணும். குறிப்பா, தரும மிகு சென்னையிலும், வட ஆர்க்காட்டுப் பேச்சிலும் நிறையவே இருக்கு; இன்னும் சொன்னாப் புது உருவம் எல்லா எடுக்குது. 

"இன்னாபா, வூட்லெ சொல்ட்டு வண்டியா!"ங்கிற போது, அந்த சொல்ட்டுலே, கடைசியா ஒரு டு வருது பாருங்கோ, அது குற்றியல் உகரம் தான். முழு உகரம் (முற்று உகரம்னு இலக்கணத்துலே சொல்லுவாங்கோ) இல்லை. 

குறைச்ச நேரமே, அரை மாத்திரை நேரமே, ஒலிப்பது சென்னைக்காரர்களுக்கு ஒரு வழக்கம். இங்கே எல்லாமே "போலாம், ரைட்" தான். இனி அப்பாலிக்கி, "வண்டியா"ங்குறதுலே, (vaNdia இல்லைங்க; சென்னைக்காரங்க மாதிரி சொல்லிப் பாருங்க) அந்த டி வருது பாருங்கோ, அது வேறெ ஒண்ணுமில்லை, குற்றியலிகரம். மெய்யாலுமே, அரை மாத்திரை தானுங்க அங்கே வருது.

இன்னும் சொல்லப் போனா, குற்றியல் எகரம் கூடப் புதுசா வந்துரும் போலேருக்கு, இவுங்க பேச்சுலெ. அந்த "வூட்லெ" ங்குறதுலே, லெ - யக்கூட முழுசா பலுக்குறதுக்குச் சோம்பற் பட்டு இவுங்க அரை மாத்திரை ஆக்கிப் புடறாங்கோ. தமிழ் புதுசு புதுசா வளருதுப்பா.

இந்தக் குற்றியல் இகரத்துக்கும், உகரத்துக்கும் இந்தக் காலத்துலே தமிழ்லெ எந்தக் குறியும் இடுறதில்லை. இடம் பார்த்துச் சிலர் புரிஞ்சிக்கிறோம், பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை. இன்னா, செய்யுறது போங்கோ? நாம மொழியெ என்னைக்குத்தான் புரிஞ்சு காப்பாத்திருக்கோம்? 

ஆனா, மலையாளத்துலே ஓலைக்கட்டுகள்லே, சந்திர பிந்துன்னு ஒண்ணு இட்டதாப் பலரும் சொல்றாங்க. அது என்ன சந்திர பிந்துன்னு முழிக்க வேண்டாம். சந்திரன்னா பிறை. நிலாவோட மூன்றாம் பிறை மாதிரி ஒரு வளை கோடு. அந்த வளை கோட்டுக்கு நடுவுலே ஒரு புள்ளி. புள்ளியைப் பிந்துன்னு வடமொழி சொல்லும். (நெத்தியிலே பொட்டு வச்சுக்கிறோம் இல்லையா? அது பிந்து) ஆங்கிலத்துலே point னு சொல்லுவோம். 

வேறே ஒண்ணுமில்லே. பொள், போழ்-னா தமிழ்லே பிளந்து தள்ளுன்னு அருத்தம். "புள்ளுவதும், பொள்ளுவதும், போழுவதும், பிளப்பதுவும்" எல்லாமே குத்துறதுலே தொடங்குறது தான். புள்ந்தது, பொள்ந்தது, போழ்ந்தது, என்ற வினை புந்து, பொந்து, போந்து, பொட்டு (point) ன்னு பெயரா மாறிப் போகும். ஆக, வேர் தமிழில் இருக்கிறது. நாம தான் கண்ணை மூடிக்கிணு பார்க்க மறுக்கிறோம்.

இப்படி, பிறைப்புள்ளி போட்டு குற்றியல் இகரத்தை (டி போட்டு, மேலே கொஞ்சம் ஒதுங்கினாற் போல், பிறைப்புள்ளி இடவேண்டும்), குற்றியல் உகரத்தைக் காட்டும் பழக்கம் மலையாளத்திலும், நாஞ்சில், குமரி நாட்டுத் தமிழ் நூல்களிலும் உண்டு என்று தான் சொல்கிறார். (எல்லா character க்கும் ஒருங்குறியிலே இடம் கொடுத்திருக்காக்கும், அது ரொம்ப principle ஆனது என்னு பரயும் கணிஞமாரே!, தமிழின் குற்றியல் இகரமும், குற்றியல் உகரமும் உங்க குறியேற்றத்தில் எவிடே போயி? சந்திர பிந்து என்ன குறி காணாது போயோ? :-))

அது செரி, அப்போழ் ஆய்தம்?

முதல்லே ஆய்தம் கிற பெயர் பற்றிச் சொல்லோணும். நூற்றுக்கு, தொண்ணுத்தெட்டு தமிழர் அதை ஆயுதம் என்றே தவறாகப் பேசுகிறார்; எழுதுகிறார். எல்லாம் வடமொழியும், நகரியும் சேர்ந்து செய்த குழப்பம். தமிழாசிரியரும் அதைச் சரி செய்ததாகத் தெரியவில்லை. அது ஆயுதமும் அல்ல, கேடயமும் அல்ல. அது ஆய்தம்; ஆய்வு என்றால் நுணுகித் தேடுவது. கீரையை ஆய்ந்து கொடு என்றால், நுணுகிப் பார்த்து இலைகளைக் களைந்து கொடு என்று பொருள். ஆய்தம் என்பது நுணுகிய ககர ஓசை. அது வடிவில் புள்ளியால் ஆனது. எனவே அது ஆய்தப் புள்ளி.

இந்தக் காலத்துலே ஒரு புதுப் பழக்கம்; நானும் ஒரு காலத்துலே இதுக்கு அடிமைப் பட்டிருக்கேன். இந்த ஆய்தப் புள்ளியை, மந்திரப் புள்ளி போல் நினைச்சு, ப வுக்கு முன்னாடி ஆய்தம் போட்டா, F ங்குற ஆங்கில ஒலி வந்துரும்னு சொல்றோம். இது கொக்கு தலையிலே பனங்காய் வைக்குற மாதிரி. இதெல்லாம் முட்டாப் பயக வேலை. 

நமக்கு F ங்குற ஒலி வேணும்னு நினைச்சா, ஒண்ணு தற்பவமா, கம்பர் பண்ணின மாதிரி பண்ணோனும்; அவரு F-யை வகரமா மாத்திருவார். செருமானிய மொழிகள் பலவற்றிலே, குறிப்பா, டச்சு, விரிசியன் போன்ற மொழிகள்லெ இந்த F-V மாற்றம் நிறையவே உண்டு. அவுங்கள்லாம் அதைத் தப்புன்னு நினைக்கலை. இருக்குறதை வச்சு, இல்லாததைக் காட்டுங்குற மனப்பான்மை; நம்ம தமிழன் மட்டும் ஒரு மாதிரி. வெள்ளைக்காரன் ஒலியை வெள்ளைக்காரனை விடச் சிறப்பா ஒலிச்சுக் காட்டுனாத் தான் அவன் நம்மளைச் சேர்த்துப்பாங்குற வெறியிலே, F ங்குற ஒலியை அப்படியே பலுக்கணும்பான். 

அதை ஒழுங்காச் செய்யணும்னா, "கனடா C.R. செல்வக்குமார் ஒரு முன்னொட்டுக் குறிமுறையை பரிந்துரைச்சார். என்னைக் கேட்டா, வெள்ளைக் காரனை மிஞ்ச நினைக்குற தமிழர் அவர் முறையைப் பின்பற்றலாம்".

எனக்கென்னவோ, கம்பரோட தற்பவ முறையே, இன்னைக்கும் பொருந்தும்னு தோணுது. நானு கொஞ்சம் கருநாடகங்க.

இந்த ஆய்தப் புள்ளிக்கு மூணு புள்ளி வைக்குற முறை இளம்பூரணர் காலத்துலே (கிட்டத்தட்ட 11ம் நூற்றாண்டு) வந்துருச்சு. ஆனா, கால வரிசையாப் பார்த்தா, முப்பாற் புள்ளிங்குறது அதுக்கு முன்னாடி இருந்ததுக்குக் கல்வெட்டுக்கள்லே சான்று கிடைக்கலைங்கண்ணா! இது தான் ரொம்ப வியப்பு. 

இன்னும் சொல்லப் போனா, ஒரு 2300, 2500 ஆண்டுகளுக்கு முன்னாடி, தமிழி எழுத்தின் ஆரம்ப கட்டத்துலேயும், குறிப்பாப் பெருமி(brahmi) எழுத்துலேயும், மூணு புள்ளியை முக்கோணமா இட்டா, அதை இ -ன்னு தான் ஒலிக்கணும். அப்ப, ஆய்தப் புள்ளி எப்படி இருந்திருக்கும்னு கேள்வி கேட்டா, எனக்கு மறுமொழி சொல்லத் தெரியலை. ஏதோ ஒருவிதப் புள்ளியா அது இருந்திருக்கோணும்னு மட்டும் சொல்லத் தெரியுது.

இவ்வளவு விவரத்தை வச்சிக்கிணு, இரண்டாம் நூற்பாவைப் பார்ப்போமா?

அதுலே முப்பாற் புள்ளின்ன உடனே, இளம்பூரணர் முதற்கொண்டு முக்கோணமாய் இருக்குற மூணு புள்ளிங்குற கருத்தையே எல்லோரும் கிளிப்பிள்ளை மாதிரிச் சொல்லுறாங்க. ஆனா, கல்வெட்டைப் பார்த்தா ஒரு சான்றையுங் காணோம். எனக்கென்னமோ, முக்கோண மூணு புள்ளிங்குறது சரின்னு படலை. ஆனா, நான் மரமண்டை, நான் சொல்ற கருத்தை யாரு கேட்பா?

முப் பால் புள்ளிங்குற கூட்டுச் சொல்லுலே, பால் என்பதற்குப் பக்கம் என்றே இவர் எல்லாம் பொருள் கொள்ளுறாக. அது ஏன் வகையாக இருக்கக் கூடாது? பால் னா வகையின்னும் பொருள் இருக்கே? ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்னு 5 வகையைச் சொல்றோமே? குற்றியல் இகரத்திற்கான பிறைப்புள்ளி ஒரு வகை; குற்றியல் உகரத்திற்கான பிறைப்புள்ளி இன்னொரு வகை; நம்மால் இப்போது இனம் காணமுடியாத, ஏதோ ஓர் உருவம் கொண்ட, ஆய்தப் புள்ளி மூன்றாம் வகை.

நூற்பாவுலே வர்ற கடைசி வரி. எழுத்து ஓர் அன்ன = எழுத்தோடு சேர்ந்தது போல. அன்ன ன்னு சொன்னாப் போலன்னு அருத்தம். அன்னளகை = analogy. அன்னளகையாய் = analogous. அன்னளகைக் கருவிகள் = analog devices.

அடுத்த நூற்பாவுக்கு போறதுக்கு முன்னாடி ஒண்ணு சொல்லோணும். முட்டாத் தனமா, ஒருங்குறிலே ஆய்தமும், நகரிலே வர்ற விசர்க்கமும் ஒண்ணுன்னு எழுதி வச்சிருக்காக. விசர்க்கம்கிறது ஓர் உயிர். அஹ் னு ஒலிக்கும். அது எல்லா மெய்யோடும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கும்.

ஃ என்பது உயிரும் இல்லை; மெய்யும் இல்லை. அது தனிக் கட்டுக்கூறு (category). அது உயிருக்கும் மெய்க்கும் நடுப்பட்டதுன்னு தான் தமிழிக் குறுங்கணக்குலெ நடுவுலே வச்சிருக்காங்க. யாப்புலெ (பாட்டுலே) மட்டும் சில இடத்துலே அது உயிர் மாதிரித் தோற்றம் காட்டும்; சில இடத்துலே மெய் மாதிரித் தோற்றம் காட்டும். கொஞ்சம் சிக்கலான ஒலி. எனக்குத் தெரிஞ்சு அந்த ஒலி, தமிழை விட்டு, டச்சுலேயும், விரிசியன்லே இருக்கு; ஆனா, அங்கே அது மெய்யெழுத்து.

நல்லாக் குழப்பி விட்டுட்டேனோ?

அஃகேனம் கொஞ்சம் கவனமாக் கையாள வேண்டியது. இந்தக் காலத் தமிழ்லே அஃகேனம் முற்றிலும் மறைஞ்சிருச்சுன்னு தான் சொல்லோணும்.

அன்புடன்,
இராம.கி.

Friday, October 06, 2006

தொல்காப்பியமும், குறியேற்றங்களும் - 1

கொஞ்ச காலமா, இந்த 16 மடைக் குறியேற்றம் பற்றி எங்கே பார்த்தாலும் பேசிக்கிட்டு வர்றேன். அது தொடர்பான உரையாடல்களிலும் பங்கெடுத்து வர்றேன்.

அந்தச் சமயங்கள்லே, ஒரு சில கணிஞரும்(computer experts), ஆர்வலரும் (enthusiasts) திடீர் திடீர்னு "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு நாலஞ்சு குழூஉக் குறி முழக்கங்களை (group jargons) எடுத்து விடுவாங்க; அப்பவெல்லாம் சட்டுன்னு நானு தடுமாறிப் போனதுண்டு. இவுங்க, சொவ்வறை நிரலி (software programme) எழுதுறதைப் பத்தியோ, அதுலே பயன்படுத்தும் நுட்பங்கள் (techniques) பத்தியோ சொன்னா, வாலைச் சுத்தி வச்சிக்கிட்டு ஒழுங்காக் கேட்டுக்கிறது தான்.

நடு நடுவே தொல்காப்பியர் பேரைச் சொல்லி, "அவரு சொல்லியிருக்கார், தமிழுக்கு 30 character தான்; ஆய்தத்தைச் சேர்த்துக்குனா 31 தான். மிச்சதெல்லாம் வெறும் letters. அவரொன்னும் உயிர்மெய் எழுத்தை எல்லாம் கண்டுக்கோணும்னு சொல்லலையாக்கும், அவரோட 17 ஆம் நூற்பாப் படிச்சிருக்கியா? அந்தா, இந்தா"ன்னுட்டு சில கேள்விக்ளை விடவும், "என்னடா இது, இவ்வளவு காலம் தொல்காப்பியத்தை விழுந்து விழுந்து படிச்சமே, ஊர்ப்பட்ட உரைகள்லாம் படிச்சமே, ஒண்ணுமே நம்ம மரமண்டைக்கு விளங்காமப் படிச்சமோ?"ன்னு ஒரு சமுசயம் (அய்யப்பாடு) வந்திட்டுதுங்க!

"சரி, மீண்டும் பர்ணிலேர்ந்து தொல்காப்பியத்தை இறக்குவோம்; கூடவே இளம்பூரணத்தையும், நச்சினார்க்கினியத்தையும் பக்கத்துலே வச்சிக்கிறுவோம். வரிக்கு வரி, திரும்பவும் படிப்போம்"னு நினைச்சேன். அந்தப் படிப்புலே எழுந்தது தான் இந்தப் பதிவு. இங்கே நூன்மரபு பற்றி மட்டுமே சொல்லிக்கிர்றேன்.

"என்னத்தை வெளங்கி, என்னத்தைச் சொல்றது?"ங்கிறவுகளுக்கும், "ஆமா, பொரிச்செடுக்கப் (bore) போறதுக்கு, இவ்வளவு சோடனையாக்கும்?" என்பவருக்கும் ஒரு கும்பிடு. உங்களுக்கு இது புடிக்கலேன்னா, அடுத்த பதிவுக்குப் போயிருங்க.

இத நான் எழுதியே தீரணும். ஏன்னா, கண்டதுக்கெல்லாம் "அவரு சொன்னார், இவரு சொன்னார்"னு பேருவிடுற பழக்கம், நம்மூர்லெ இப்ப ஒரு கெட்ட பழக்கமாவே ஆயிப் போயிருச்சுங்கண்ணா! பாவம், தொல்காப்பியரை இவங்கள்டேந்து தப்புவிச்சுக் கொண்டாரணும். அவ்வளவு தான்.

உள்ளே போகலாங்குளா!

தொல்காப்பியம் எழுத்ததிகாரம். நூன்மரபு. முதல் நூற்பா:

1. எழுத்து எனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப
சார்ந்துவரல் மரபின் மூன்று அலங்கடையே

நூற்பாவோட பொருளைப் புரிஞ்சிக்கிறது முன்னாடி "அது என்ன, எனப்படுப?" என்ற கேள்வி நமக்கு எழுகுது.

நம்ம பேச்சுலே "ஆம்புளைன்னு சொன்னா அவன்தாய்யா ஆம்புளை"ன்னு சொல்றோம் இல்லியா, என்ன பொருளிலே சொல்றோம்? அவன் ஏதோ சிறப்பான செயலைச் செய்திருக்கிறான்" என்ற பொருள் வருது இல்லையா?

"காளைன்னா இதுதான் காளை" - மஞ்சி விரட்டுலே சொல்றோமில்லெ? ஏன், யாராலும் புடிக்கமுடியாத படிக்கு அது உருண்டு திரண்டு வெளியே ஓடிப் போயிருது; ஒரு பயலாலும் அதன் கொம்பையோ, திமிலெயோ புடிக்க முடியுறதில்லை. கட்டிவச்ச பவுன் அப்படியே இருக்கு.

"ஊருன்னா இதுல்லய்யா ஊரு; மிச்சதெல்லாம் ஊத்தை"ன்னு சொல்றோம் இல்லையா? ஏன்? இந்த ஊரு சிறப்பா அமைஞ்சிருக்கு, நமக்குப் பிடிச்சுப் போச்சு; அதனாலே சொல்றோம்.

ஆனாப் பாருங்க, நம்ம பேச்சுலே சிறப்புங்குற சொல்லையே புழங்கக் காணோம். வெறுமே ஒரு பொதுமைச் சொல்லை வச்சுக்கிட்டே, சொல்ற முறையிலே (எனப் படுப) சிறப்புங்குற பொருளைங் கொண்டு வந்துர்றோம். இது தமிழ்ப் பேச்சுலே ஒரு மரபு. பொதுமையைக் (generic) கொண்டு விதப்பை (specific) உணர்த்துவது.

இதைத்தான் இளம்பூரணரும் சொல்றார். (அவர் உரை நச்சினார்க்கு இனியருக்கும் முந்தியது; உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் பல இடங்கள்லே அப்படியே இளம்பூரணரைப் பின்பற்றுவார்; சில இடங்கள்லே மட்டும் வேறுபடுவார்.)

"எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன" - இது இளம்பூரணம்.

அப்படின்னா மிச்சதெல்லாம் எழுத்தில்லையா, என்ன? அவையும் எழுத்துக்கள் தான். இன்னும் மற்ற நூற்பாக்களில் மற்றவற்றையும் எழுத்து என்று தான் தொல்காப்பியர் சொல்கிறார். அதைப் பின்னாடிப் பார்ப்போம். (இளம்பூரணரும் "எனப்படுப என்ற சிறப்பால், அளபெடையும், உயிர்மெய்யும் வரிவடிவும் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப் பட்டன" என்பார். ஆக எல்லாம் எழுத்துத் தான். ஒண்ணு சிறப்பான எழுத்து; இன்னொண்ணு சிறப்பில்லாத எழுத்து. அம்புட்டுத் தான்.)

இந்தக் காலத் தமிழ்க் கணிஞர்கள் சிலர் character னு ஒரு ஆங்கிலச் சொல்லை உள்ளே கொண்டு வந்து போட்டு, "இதெல்லாம் characters, மற்றதெல்லாம் letters" அப்படிங்கிறாங்க.

எப்படி, எப்படி?

"இது எல்லாம் தங்கம், மற்றதெல்லாம் பித்தளை".

"இது என்ன கூத்துடி அம்மா, இவுகளா எதையோ வச்சுக்கிட்டு, அதைப் போய்த் தொல்காப்பியர் வாயிலே திணிக்கிறது?"

இப்படித்தாங்க தாங்களாகவே ஒரு தேற்றைக் கொள்ளுவது, அதைக் கொண்டு போய், நமக்கு முன்னாடி இருந்தவர் மேலே திணிச்சு, அவரே சொல்லிட்டார்னு திரிச்சு விடுறது. இதுவும் பல தமிழர்களுக்கு வாடிக்கையாப் போயிருச்சு; அன்னைக்கே திருவள்ளுவர் சொல்லியிருக்கார், இளங்கோ சொல்லியிருக்கார், கம்பர் சொல்லியிருக்கார்னு ஆளாளுக்குப் பேரெ அவுத்து விடுறது. எந்தப் பய மூலத்தைப் படிக்கப் போறான், எவன் ஒப்பிட்டுப் பார்க்கப் போறாங்கிற மதப்பு. (திருவள்ளுவர் ஒரு கிறித்தவர், அவர் ஒரு இந்து - இப்படி இல்லாதது, பொல்லாததெல்லாம் சொல்றதை ஒரு சிலர் பெருமைன்னு நினைச்சிக்கிடுறாக.)

சரி. இப்ப, எழுத்துன்னா என்ன?

"இழுத்துக்கிட்டே வந்தது எழுத்து"ம்பார் பாவாணர்.

யோசிக்கிறீகளோ? இப்ப, தாழை மடல் இருக்கில்லையா? அது ஒரு காலத்துலே நம்மோட எழுது கருவி. அதுலே தூரிகை வச்சு மைக்குழம்புலே தோய்ச்சு, கோடாய் இழுத்து, இழுத்துச் சின்னச் சின்னமாப் படம் போடலாம். அந்தச் சின்னப் படங்கள்லே ஒரு சில தான் இன்னைக்கு எழுத்துக்களா மாறிருக்கு. ஆ ங்கிற மாட்டைக் கொம்போட போட்ட படம் தான் இன்னைக்கு அ, ஆ ன்னு மாறிருக்கு. எழுத்துங்குற சொல்லு தமிழ்லே கொஞ்ச காலம் ஓவியத்தையும், பலகாலம் நாம எழுதுகிற எழுத்தையும் குறிச்சிருக்கு.

எழுதும் பரப்புங்கிறது முதல்லே கல், பின்னாடி ஓடு (பானையோடாகவும் இருக்கலாம்), அப்புறம் தாழை, பின் பனை ஓலை, முடிவிலே தாளுன்னு பல விதமாய் வந்து சேர்ந்திருக்கு. இப்படி எழுதுகிற முறைகள்லாம் ஒண்ணுக்குப் பின்னாடி ஒண்ணு வந்ததுன்னு பொருளில்லை. பல காலம் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுது முறைகள் சம காலத்துலே நம்மூர்லெ இருந்திருக்கு.

கல்லுங்குற எழுதுபொருள்ளே உளி வச்சுக் கீறுனாங்க. ஓடுங்கிற எழுது பொருள்லேயும் ஆணி வச்சுக் கீறுனாங்க. இப்படிக் கீறுனது கீற்றுன்னு ஆச்சு. கீற்றுங்கிறது சிலநேரம் பகுதியா நின்னு போயிரும். கீற்றுலே முழுமையானது கீற்றம். கல்லில் கீறிய அந்தக் கீற்றமும் தாழை, ஓலையில் எழுதிய எழுத்தும் ஒண்ணுதாங்க. ஏன்னா, இரண்டும் ஆ ங்கிற ஒரே படத்தைத் தான் காட்டியது. இதே ஆ தான் A என்ற படமா, Phoenician களிடமும், அ என்னும் வடிவா நம்மிடமும் இருக்கு. இந்த எழுத்து ஒப்புமையை விவரிக்கணும்னா வேறேயொரு கட்டுரைத் தொடருக்குப் போகணும்.

மேலை நாகரிகங்களும், நடுக் கடல் நாகரிகங்களும், சீன நாகரிகங்களும் இதே மாதிரித் தான் புரிந்திருந்தன. நமக்குத் தாழை, ஓலை போல, அங்கே மரப்பட்டை, தோல், பட்டுத்துணி இப்படிப் பலவாறு இருந்தன. இவையெலாம் அழிந்து போகக் கூடிய எழுதுபொருட்கள். இன்னொருவகை, கல், களிமண் செங்கல், ஓடு இப்படி நெடுநாள் இருக்கக் கூடிய எழுதுபொருட்கள்.

முதல்லே இழுத்தது நமக்கு எழுத்தாச்சு; அவனுக்கு லிபி, (இ)லத்தர், லித்தொ, லித்தெரேச்சர் (நம்மூரு இலக்கியமும் இழுக்கியது தான்.) பொறுமையா வேர்ப்பொருள் பார்த்தா, ஊரம்புட்டுச் சொல்லு கிடைக்கும்; எல்லாம் இழுத்ததுலே வந்தது தான்.

இரண்டாவதுலே கீறுனது நமக்குக் கீற்றம் ஆச்சு, கீறலாச்சு, பொருளில்லாமப் போனா கிறுக்கிறது ஆச்சு; அவுங்களுக்கோ, script ஆவும், inscription, scribe, scripture, character, graph - இப்படி ஒரு நூறு சொல்லையாவது சொல்லலாம். எல்லாம் கல் மேலெ கீறனதை ஒட்டி வந்த சொற்கள்.

ஆகக் character ங்குறதும், letter ங்குறதும் ஒழுங்கா யோசிச்சுப் பார்த்தா ஒண்ணு தான். இரண்டும் வெவ்வேறு எழுதுமுறைகளிலே எழுந்த, அதேபொழுது ஒரே பொருளைக் குறிக்கும் சொற்கள்.

எனவே, அன்பிற்குரிய கணிஞர்களே, சும்மா உள்ளே புகுந்து இல்லாத பொருளை எல்லாம் ஊடே கொண்டாந்து புகுத்துற வேலையெலாம் வேணாம்.

நாம, இப்பத் தொல்காப்பியத்துக்குத் திரும்ப வருவோம். இந்தத் தொல்காப்பியரு ஒரு கைதேர்ந்த மேடைநாடகக் காரர். நாடக அரங்குலே குவி விளக்குகள் (focus lights) இருக்கும் பாருங்க. அதைப்போட்டு ஒரு பக்கம் வெளிச்சத்தைக் குவிச்சு, சட்டுன்னு குவி விளக்கைச் சுற்றவிட்டு இன்னொரு பக்கம் கடைசிலே கொண்டுவந்து நிப்பாட்டுவாங்க பாருங்க, அது போல,

அ - வுலே முதலாய் வச்சு, ன ங்குற கடைசி வரைக்கும் இருப்பது சிறப்பு எழுத்துக்கள்னு சொல்லி குவிவிளக்கைச் சுத்தி விடுறார். நாம வாயைப பொளக்குறோம். மொத்தம் 30 ஆட்கள்னு சொல்லுவாங்கன்னுட்டு பின்புலத்தை எடுத்து விடுறார். அப்புறம் "இன்னம் மூணு பேர் இருக்காங்க, இவுங்களைச் சார்ந்தவுங்க, ஆனா அவுங்க கொஞ்சம் அலங்கடை - exception, அப்படி"ன்னு சொல்றார்.

கூத்துப் பார்க்குற நமக்குக் குறுகுறுப்பு கூடிப் போகுது. அடுத்துப் போவோமா?

அன்புடன்,
இராம.கி.