Wednesday, August 02, 2006

தில்லை - 3

தில்லை - 1 எனும் பகுதியில், என் நினைவில் இருந்தபடி 4 புலியூர்களைச் சுட்டி, அவற்றில் 2 பெயர்களை மட்டுமே சொல்லியிருந்தேன். இப்போது, வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்ட, பு.மா. ஜெய செந்தில்நாதன் தொகுத்த, "திருமுறைத் தலங்கள்" என்ற பொத்தகத்தைப் பார்த்து, விட்டுப்போன புலியூர் பெயர்களையும், நான் செய்த தவறொன்றையும், கண்டுபிடித்தேன். அடுத்த செய்திகளுக்குப் போகுமுன் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.

முதலில் நான் செய்த தவறு. இற்றை மாவட்டத் தலைநகரான பெரம்பலூர் என்பது முன்னாளில் பெரும்புலியூர் எனினும், சிவநெறி குறித்தது இன்னொரு பெரும்புலியூராம். இப் பெரும்புலியூரானது, திருவையாறு - கல்லணை, திருக் காட்டுப் பள்ளி செல்லும் சாலையில் தில்லைத்தானத்தின் வலப்புறம் பிரியும் கிளைச்சாலையில் 4 கி.மீ சென்றால் உள்ள ஊரெனக் குறிப்பிட்டுகிறார். {பெரும்புலியூர்க் குழப்பத்தை மேலும் ஆய்ந்து, தெளிவுபெற வேண்டும்.]

பெரும்பற்றப் புலியூரோடும், பெரும் புலியூரோடும் சேர்த்து காவிரியின் வடகரைப் பகுதியிலுள்ள இன்னொரு புலியூர் ஓமாம்புலியூர். (அது என்னமோ தெரியவில்லை எல்லாப் புலியூர்களும் காவிரிக்கு வடபாலே உள்ளன. வலைப் பதிவுப் பின்னூட்டில் திரு. பா. முரளிதரன் சொன்னது சரி. கொள்ளிடக் கரையில் ஓமாம்புலியூர் உள்ளது.] காட்டுமன்னார் குடியில் இருந்து ஓமாம் புலியூருக்குப் பேருந்துச்சாலை உண்டு. தக்கணமூத்தியாய் உமாதேவிக்கு ஓங்காரப் பொருளை இறைவன் உரைத்ததாய் இங்கொரு தொன்மம் உண்டு. ஓமம் என்பது வேள்வியே; ஓமம் நடக்கின்ற, ஓமம் ஆகின்ற புலியூர் = ஓமம் ஆம் புலியூர்>ஒமமாம் புலியூர், ஓமாம் புலியூரெனத்  திரிந்தது.

இனி நடுநாட்டுப் புலியூர்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று கடலூர்ப் பகுதியாய் இன்றிருக்கும் திருப்பாதிரிப் புலியூர். [வலைப்பதிவுப் பின்னூட்டில் திரு. குழலி சட்டென்று சொன்னார். முற்றிலும் சரி. கடலூரின் பெயர்க்காரணமும் ஒரு மரத்தை ஒட்டியதே. கடையாழல் ஊர்>கடாலூர்>கடலூர்; கடையாழல் >  கடைஞாழல்; ஞாழல் மரம் = புலி நகக் கொன்றை மரம். சிவனுக்கு வேண்டிய மரம். கடை, கொல்லையைக் குறிக்கும்; புழைக்கடை என்கிறோம் அல்லவா?] "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்" என்ற அப்பர் பாடல் இங்கு எழுந்தது. அப்பருக்குச் சிறப்பான தலம். செயினம் பெரிதும் ஓங்கியிருந்து பின் அழிந்த தலமும் இதுவே.

நடுநாட்டில் இன்னொரு புலியூர், எருக்கத்தம் புலியூர்; இன்றைய மக்கள் வழக்கில் இராசேந்திரப் பட்டணம் எனப்படுகிறது. விருத்தாசலம் - செயங் கொண்டம் பேருந்துச் சாலையிலுள்ள தலம். சென்னை - தஞ்சை நெடுஞ் சாலையில் சேத்தியாத் தோப்பை அடுத்து திரு முகிழ்நம் (ஸ்ரீ முஷ்ணம்) - விருத்தாசலம் பாதையில் ஸ்ரீ முஷ்ணத்தை அடுத்துள்ளது. வெள்ளெருக்கம் தலமரம். "வெள்ளெருக்கந் தலைமுடியான் வெப்பெடுத்த திருமேனி" பாடல் நினைவு கொள்ளுங்கள்.

இந்த 5 புலியூர்களையும் இணைப்பது இறைவனின் தக்கண மூத்தித் தோற்றம். நரைத்த சடை (தில்லைப் பூந்தளிர், பாதிரிப் பூ, வெள்ளெருக்கம் பூ என எல்லாமே இதைக் குறிப்பதாம்.) 5 புலியூர்களிலும் வேள்வி பெரிதாகப் பேசப்படும். இவைபோகத் தொண்டை நாட்டிலுள்ள சென்னைக் கோடம் பாக்கம் நண்பர்கள் கமலும், KVR-உம் தில்லை - 1 வலைப்பதிவுக்கு வந்த பின்னூட்டில் சொல்லியிருந்தார். அது தொண்டைநாடு என்பதாலும், பாடல்பெற்ற சிறப்பான சிவன் கோயில் அங்கில்லாததாலும், கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாதென எண்ணுகிறேன்.

இந்த அளவில் சென்ற பகுதியில் எழுப்பிய "இறைவனுக்கு ஏன் வெவ்வேறு தோற்றங்கள்?" என்ற கேள்விக்குப் போவோம்.

இறைவன் ஒருவனே. ஆனாலும் பலவாறாக உருவகஞ்செய்து அழகுபார்ப்பது நாவலந்தீவில் பலருக்குமுள்ள பழக்கம். சேயோனும், மாயோனும் இன்னபிற உருவகங்களும் ஒன்றே என எல்லோர்க்கும் தெரியும். இருந்தும் சேயோனை நுணுகிப்பார்த்து ஒருகாலத்தில் அப்பன், மகன் என இருவராய் உருவகஞ் செய்வர்; பின் அவர் தோற்றங்கள் பலவகை வடிவங்களைக் காட்டும்; கூடவே ஆனைமுகன் வந்து சேர்வான். கொற்றவை தாயாவாள்; மாயோனும் பல தோற்றரவுகள் (அவதாரங்கள்) கொள்வான்;  எல்லாமே நமை ஈர்க்கும் பல் வேறு கருத்தீடுகள்; ஒன்றை, ஈராக, நாலாகப் பலவாக விதப்பிப் பரவுவது (பரவுதல் = to pray) தமிழரில் பலரும் செய்யும் ஒன்று. அவ்வகையில் நடவரசன் கருத்தீடு, தென்னாடுடைய சிவன் கருத்தீட்டிலிருந்து, களப்பிரர் காலத்திற்கு அப்புறம் உருவாக்கப்பட்டதென ஆய்வாளர் சொல்கிறார். எதிலிருந்து குறிப்பாக எழுந்தது எனும் போதே தில்லை வனமும், இற்றைக் கோயிலின் உள்ளிருக்கும் மூலத்தானமும் [நடவரசனின் பொன்னம்பலத்திற்கு வெளியே வடக்கில் (ஆனால் கிழக்குப் பார்த்தாற் போல் திருமுகம்) உள்ளது] நம் சிந்தனைக்கு வருகின்றன.

இறைபற்றிய சிந்தனைகள், சமயக் கொள்கைகள் என்பவை பொதுவாக சமய நெறிகளில் நெடுநாள் கழித்து ஏற்பட்டவை. முதலில் இருந்தவை வெறுமே வழிபாடுகளும், தொன்மக் கதைகள் மட்டுமே. சிவச்சிந்தனை முடிபுகள் (சைவ சித்தாந்தம் : பதி - பசு - பாசம்), சரணாகுதி மெய்யியல் (விண்ணெறிச் சிந்தனை), அல்லிருமை [அத்வைதம் - குறிப்பாக மரபாளர் (ஸ்மார்த்தர்) பின்பற்றுவது], இருமை (துவைதம் - மாத்வர் பின்பற்றுவது), விதப்பு அல்லிருமை (விசிஷ்ட அத்வைதம் - பெரும்பாலான விண்ணவர் பின்பற்றுவது) போன்ற புரிந்துணர்வுகள் எல்லாம் நெடுங்காலம் தமிழர் எண்ணிப் பார்க்காதவையே.

அந்நாளில், சமயக் கேள்விகளைக் கொள்கைவழி கேட்கத்தொடங்கியவர் உலகாய்தரே (உலகை ஆய்பவர் உலகாய்தர் = materialists, rationalists. பலரும் தவறாக லோகயுதர் என்பார். ஆயுதமும் ஆய்தலும் வெவ்வேறானவை. ஆய்தல் = தேடல்) பின்னால் உலகாய்தச் சிந்தனை எழுச்சியில் கேள்வி கேட்கத் தொடங்கியவர் சாங்கியரும், விதப்பியரும் (விஷேசிஷம்), அற்றுவிகரும் (ஆசீவகரும்), செயினரும், புத்தருமே. இம்மாற்றுச் சிந்தனை நெறியாரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லும்படி வடபுலத்தில் உபநிடதங்களும், மீமாஞ்சையும் (பூருவ மீமாஞ்சை, உத்தர மீமாஞ்சை) எழுந்தன. நம்மூரில் ஆகம வழி சாற்றங்கள் (சாற்றம்> சாத்தம்>சாத்ரம்) எழுந்தன (குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு திருமூலரின் திருமந்திரம்; இக்கருத்துகள் முளைவடிவில் திருவாசகத்திலும் உள்ளன.).

பொதுவாக நம்பா மதங்களின் எதிர்வினைகள் கி.மு.6ம் நூ.வில் மிகுத்தது மகதப்பேரரசில் தான். தமிழகம் சிலகாலம் மெய்யியல் உரையாடலில் உள்நுழையாது தொய்வில் இருந்தது உண்மையே. இக்கேள்விகள் கேட்கு முன், வட புலத்தில் வேதநெறிப் பழக்கங்கள் இருந்தன; சடங்குகள் இருந்தன; கூட்டம் கூட்டமாக விலங்குகள் வேள்விகளுக்கு ஆகுதிகள் ஆக்கப் பட்டன. ஆனால் மெய்யியல் அப்போது ஏற்படவில்லை. என்னதான் இன்றைய வேத நெறிக்காரர் காலத்தைக் குழப்பி உபநிடதங்களை முன்கொண்டு போக முயன்றாலும், அவை பெரிதும் ஏற்பட்டது நம்பா மதங்களின் எதிர்வினைக்கு மறுமொழியாகவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்பும் மதங்களை, நம்பா மதங்களும், மரபு எதிர்ப்பு மதங்களும் கேள்வி கேட்பதோடு மட்டுமன்றி, அரசனையும் பொதுமக்களையும் தம்பக்கம் பேரளவில் அணிதிரட்டத் தொடங்கினார். பேரரசுகளும், குடியரசுகளும் வேதநெறியிலிருந்து மாறத்தொடங்கின. இதனால், அதுவரை வடபுலத்தில் அரசச் சார்போடிருந்த வேதநெறி பெரிதும் ஆடிப்போயிற்று. சாரி, சாரியாக வேதநெறியர் புரவலர்தேடி இடம்பெயரத் தொடங்கினார். இனி வேதநெறியர் தெற்கே வந்த வழியைப் பார்ப்போம்.

கி.மு.600ல் இருந்து கி.பி.300 வரை இந்திய அரசுகள், இற்றை ஆந்திரம், ஒரிசா, சத்திசுகார், சார்க்கண்ட், பீகார், வங்காளம் போன்ற இடங்களை முழுதும் ஆட்கொள்ளவில்லை. அம்மாநிலங்கள் பெருங்காடுகளாய் அன்றிருந்தன. காடுகள் குறைந்த உத்திரப் பிரதேசம், ஓரளவு மத்தியப் பிரதேசம், குசராத், மாராட்டியம் போன்றவை வழியாகவே மக்களின் நகர்ச்சியும், வணிகமும் நடந்தன. முகன்மையாக 2 பாதைகளை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

முதல் இந்தியப் பேரரசான மகத்தின் தலைநகரான இராசகிருகத்தில் (Rajgir) இருந்து பாடலி, வேசாலி, குசிநாரா, கபிலவத்து, சாவத்தி, அத்தினாபுரம், தக்கீலம் (= தக்கசீலம் = பெஷாவர்) வரை போகும் பாதைக்கு உத்தர பாதை என்று பெயர். இதேபோல் ஏறத்தாழ நேபாள எல்லையிலுள்ள சாவத்தியில் (saavatthi) இருந்து அயோத்தி, கோசம் (kosam), பில்சா (Bhilsa), விஞ்சை (Ujjain - உச்சயினி), எல்லோரா (இப்பாதையிலிருந்து அசந்தா வெகு தொலைவு இல்லை.) வழி,கங்கை, தொழுனை (=யமுனை), நருமதை, தபதி  ஆறுகளைக் கடந்து, கோதாவரி வடகரையிலுள்ள படித் தானம் (prathisthana>paithan) வரை வந்துசேர்வது தக்கணப் பாதை. (இந்தி, மராத்தியில் படித்தானம், பைத்தான் எனப் பெறும்; வடமொழியில் பிரதித்தானம். இக்கால அவுரங்காபாதிற்கு அருகில், ஏறத்தாழ 50 கி.மீ.யில் கோதாவரிஆற்றின் கரையிலுள்ள ஊர் படித் தானம். சிலம்பில் வரும் நூற்றுவர் கன்னர் - சதகர்ணி - களின் தலை நகர் இது. இன்றைக்கும் சுற்றுலா முறையில் அவுரங்க பாத், தவளகிரி, பைத்தான், எல்லோரா, அசந்தா போன்றவற்றை பார்ப்பது நன்றாக இருக்கும்.)

இது தவிர கங்கைக்கரை ஒட்டி மேற்கே செலின் பாடலியிலிருந்து வாரணசி வழி கோசத்தை அடையமுடியும். இதேபோல் இன்னொரு நீட்சி, தெற்கே படித் தானத்திற்கு நேர்மேற்கே துறைமுகமான சோபாரா. [இற்றை மும்பைக்கு நெருக்கமாய்ச் சற்று வடக்கே வந்துசேரும். சோபாரா தான் யூத அரசன் சாலமன் கதையில்வரும் Ophir ஆகலாம் என்பர். அப்படியெனில் சோபராவின் இருப்பு 3000 ஆண்டுகளுக்கு மேலுமிருக்கும். சோபாராவுக்குச் சற்றுமுன்னே வட மும்பையில் இருப்பது கன்னேரிக் குகைகள்.] மகதத் துறைமுகங்களில் சோபாராவும், நருமதையின் புகர்முகத்து பாருகச்சையும் (Bhaarukaccha> Broach) முகன்மை யானவை. நாவலந்தீவின் வடபுல அரசியல், வணிக, பண்பாடு, கலை, மொழி மற்றும் மெய்யியல் போக்குகளைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், மேற்சொன்ன 2 பெரிய பாதைகளையும், பாடலியிலிருந்து வாரணசி போகும் தொலைவையும், படித்தானத்திலிருந்து கடல்நோக்கி சோபாரா / பாருகச்சை செல்லும் வழியையும் அறிந்துகொள்ள வேண்டும். படித்தான முகன்மை நமக்கும் பெரிதே. சிலம்பில் நூற்றுவர் கன்னரைப் பார்த்து, உதவிபெற்றுச் சேரன் செங்குட்டுவன் வடபுலம் சென்றதும் முடிவில் கங்கையின் தென்கரையை முட்டியதும் தக்கணப் பாதை வழிதான்.

மகதமும், அதைச் சுற்றியுள்ளவரும் கொஞ்சம் கொஞ்சமாய் வேத நெறியில் இருந்து மற்ற நெறிகளுக்கு மாறியதால், வேதநெறியர் பலரும் தக்கணப்பதம் (தெற்குப் பாதை) வழி வரத்தொடங்கினார். தென்னகத்தினுள் வேதநெறியர் படித்தானம் வழியாக நுழைந்தார். (படித்தானத்திற்கு அருகில் சிலகாலம் தங்கி வாழ்ந்ததால் தான், கங்கைக்கடுத்து கோதாவரி நம்மூர்ப் பெருமானர் பரவலில் நிறைந்திருக்கும். கோதாவரியும் அவரால் புனிதமான ஆறாகக் கொள்ளப் படும். இன்றைக்கும் வேதநெறிப் பெண்களின் புடவைக்கட்டு, மாராட்டியக் கட்டிற்கு ஒப்பாகும். படித்தானமருகில் ஓரிரு நூற்றாண்டுகள் ஆவது அவர் தங்கியிருந்திருக்க வேண்டும். விசுவாமித்திரர், பரசுராமர், சுக்கிராச்சாரியர்  கதைகள், அகத்தியர் தெற்கே மக்களைக் கூட்டிவந்த கதை போன்றவை, வேதநெறியாளர் தக்கணம் சேர்ந்து தென் குமுகாயத்தில் ஒன்றுகலந்த செய்திகளைத் தொன்மவழி உறுதிசெய்கின்றன.)

படித்தானத்திலிருந்து கருநாடக மாநிலம் (கடம்பரின் அரசு - முதல் அரசன் மயூர சன்மன்; இவனே நம்பூதிகளைத் தெற்கே கொண்டுவர உறுதுணையாக இருந்தவன்.) வழியாகத் தகடூர் வந்துசேரும் பாதையையும், தகடூரில் இருந்து காஞ்சிவரும் பாதையையும், அதேபோலத் தகடூரிலிருந்து கரூர் வரும் பாதைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இக்கட்டுரை தொடங்கும்போது தயங்கித்தயங்கியே எழுதத் தொடங்கினேன். படிப்பவர் தயவுசெய்து சொல்லும் பொருளைத் தவறாகப் புரிந்து திசை திருப்பாமல், பொதுநலம் நோக்கிப் படிக்குமாறு வேண்டுகிறேன். வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் சொன்னது போல பெருமானர் 3 பெரும் அலையாய் தக்கணம் வந்துசேர்ந்தார். அவரின் உட்பிரிவுகளும் தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ளத் தேவையானவையே. பெருமானரின் 3 அலைகளைப் பற்றியும், தக்கணமூத்தி எனும் கருத்தீடு, ஆடலரசனாய் மாறியிருக்கக் கூடிய வாய்ப்பையும் அடுத்துப் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

4 comments:

நா. கணேசன் said...

>>கடலூரின் பெயர்க்காரணமும் ஒரு மரத்தை ஒட்டியது தான். கடையாழல்
>>ஊர்>கடாலூர்>கடலூர்; கடையாழல் > கடைஞாழல்; ஞாழல் மரம் = புலி நகக் கொன்றை மரம்.

கடலூர் என்னும் நகர்ப்பெயர் கூடலூர் என்னும் மூலத்தின் திரிபு ஆகும். தென்பெண்ணை, கெடிலம், ...
போன்ற ஆறுகள் கடலுடன் கலக்கும் இடம் 'கூடலூர்'. இதனை ஆங்கிலத்தில் Cudaalore என்று எழுதி, தமிழில் கடலூர் என்னும் வழக்கு தற்போதானது.

புதுச்சேரி பிரெஞ்சு எழுத்தில் Pouducheri என்றெழுதியதால், முதல் u திரும்பி n ஆகி, Pondicheri (பாண்டிச்சேரி) என்றானது போல.

அன்புடன், நா. கணேசன்

rnatesan said...

தகவலுக்கு நன்றி திரு ராம்கி!!
நடேஷன்,திருப்பாபுலியூர்.

Machi said...

ஐயா,

/காட்டுமன்னார் குடியில் இருந்து ஓமாம் புலியூருக்குப் பேருந்துச் சாலை உள்ளது/

காட்டுமன்னார் குடியா காட்டுமன்னார் கோயிலா?

'நம்பா மதங்கள்' என்பது சமணமும் பௌத்தமும் தானே?

Anonymous said...

Dear Annae,
You haver referred to a book by Na. Subramanian in Thillai-1. What is the title of that book?
Thillai-3 is interesting. Looking forward to your next posting.
Love,
Arumugatamilan.