Friday, August 11, 2006

தில்லை - 5

"தென்னாடுடைய சிவனே, போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!!" என்ற வாசகத்தை தானுமைத் தனமாக (auomatic) பல தடவை சொல்லிய  நம்மில் பலர், தென்னாட்டிற்கு மறுதலையாக வரும் "எந் நாடு" எதைக் குறிக்கிறதென ஓர்ந்து பார்த்திருப்போமா என்பது ஐயப்பாடே. தென்னாடு என்பது முன் நான்சொன்ன தக்கணத்தைக் குறிக்கிறது; தென்னாடுடைய சிவன பெயரும் தக்கண மூத்தோனையே குறிக்கிறது. தக்கண மூத்தோன் பற்றிய விவரிப்புகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சங்க இலக்கியத்தில் காட்சியளிக்கின்றன. தென்னாட்டுச் சிவநெறி கொஞ்சம் கொஞ்சமாய் வடபுல நாடுகளில் பரவிய போது, முதலில் இலிங்க வழிபாடு என்ற கருத்தீடு அங்கு ஏற்கப்படவில்லை; சில வேத வாக்கியங்களில் அக்கருத்தீட்டைச் "சிசுனதேவ வழிபாடு" என்று கேலி செய்து முற்றிலும் இழிவு படுத்தியதுமுண்டு. பின் தக்கண மூத்தோன் என்ற மாந்த வகைப் படிமம்/குறியீடு அறிமுகமான போதே, சிவ நெறியைக் கவனிக்கத் தலைப் பட்டார். இன்றும் வடபுலத்தில் அதுபோலும் படிமங்களே பரவியுள்ளன, வடபுலத்தாரைத் தம்வயப்படுத்தும் போக்கிலேயே "எந்நாட்டவர்க்கும்" என்ற சொல்லாட்சி எழுந்திருக்க முடியும்.

[திராவிடம்/தமிழம் என்றாலே முறைப்பும், மனம்நிறை வெறுப்பும், இன்று  சிலருக்கு வருகிறதே, அவர் சிவன்கோயில்களில் எழும் "தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா, போற்றி" என்ற பதாகை முழக்கத்திற்கு (அது ஏறத்தாழ tribal முழக்கமே; "வெற்றிவேல், வீரவேல்" என்பதும், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்பதும் இக்காலத்திலும் தமிழர், இனக்குடியாரென உணர்வதை நிறுவிக்கொண்டு இருக்கின்றன.), பெருமானக் குருக்கள், ஓதுவார், பத்தரென எல்லோருமாய் எழுப்பும் நிறை முழக்கத்திற்கு, எதிர்ப்புத் தெரிவிப்பாரா, என்ன? திராவிடத்தை ஒழிக்க வேண்டுமெனில், சிவன் கோயிலை அல்லவா இவர் ஒழிக்க வேண்டும்? தக்கண மூத்தோனென்ற கருத்தீட்டை அல்லவா நிறுத்தவேண்டும்? தென்னாடு, தக்கணம், திராவிடம் என்பவையெலாம் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒன்றிற்கொன்று தொடர்பு உடையவையே. தென்னாடென்பது தமிழ்ச் சொல்; தக்கணம் இருபிறப்பி; திராவிடம் என்பது தமிழத்தின் பாகதத் திரிவோடு, பின்தொடர்ந்த சங்கதத் திரிவால், ஏற்பட்ட சொல்.]

சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் உருவகித்தவர் தென்னாட்டாரே! வேதங்களிலும், அவற்றின் விளக்க நூல்களிலும், சிவன், விண்ணவன், கொற்றவை (கொற்றவையைத் துர்க்கை என்பார்; கொற்றை = கோட்டை = துருக்கம்; துருக்கம் , துர்க்கை என்ற இருபிறப்பிச் சொல்லை உருவாக்கும்.) எல்லாம் விளிம்புநிலையில் அன்றி முதற் தெய்வங்களாய்ச் சொல்லப் பட்டதேயில்லை. தென்னாட்டின் ஐந்திணைத் தெய்வங்கள் ஆன சேயோன், மாயோன், வேந்தன், வாரணன், கொற்றவைக்கு இணையாகப் பின்னாளில், உருத்திரன்/சுப்ரமண்யன், விண்ணு/விஷ்ணு, வேந்தன்/இந்திரன், வாரணன்/வருணன், போன்ற வடபால் தொன்மங்களோடு பொருத்தினாலும், அவையெல்லாம் விளிம்புநிலைப் பொருத்துகளாகவே இருந்தன. (சுப்ரமண்யன் என்பது கண்டு நாம் மருளவேண்டாம்; சிவ பெருமான் என்ற தமிழ்க் கூட்டுச்சொல்லே வடவர்பலுக்கில் "ஷிவ் ப்ரம்மண்"  ஆகும்; அப்பனுக்கும் மகனுக்குமாய் இக்கருத்தீடு பிரியும்; முடிவில் "சிவ்" என்னும் முன்னொட்டுச் சொல் சு எனும் ஓரெழுத்து ஒரு மொழியாய்ச் சுருங்கும். ப்ரம்மண் நீண்டு ப்ரம்மண்யன் ஆகும். முடிவில் நம் சொல்லையே அடையாளம் காணமுடியாது நாம் தவிப்போம். சு எனத் தொடங்கும் இரு பிறப்பிச் சொற்கள் எல்லாமே சிவ - red- எனும் முன்னொட்டில் கிளைத்தவை. மஞ்சள்/குங்குமம் அணிந்த சிவ மங்கலி பேச்சுவழக்கில் சு மங்கலி ஆவாள். தாலிக்கு மாறாய் மஞ்சளணிவது தென்னாட்டுப் பழக்கமே. அவ்வளவு ஏன்? தாலியணிவதும் தென்னாட்டுப் பழக்கமே.)

வடபுலக் கங்கைக்கரையில் வேள்விநெறி பரவியபோது, அரசருக்கும், பெரு நிலக் கிழாருக்கும், செல்வந்தருக்கும் நன்மை கொடுப்பதாய்ச் சொல்லி அவரை அண்டியே வேதியர் வேள்விகளைச் செய்து இருக்க முடிந்தது; அதே பொழுது, பொதுமக்களோ, வேதநெறியில் ஈடுபடாமல், தத்தம் ஆளுமைக்குத் தக்க, சிவனையும், விண்ணவனையும், கொற்றவையையும் வணங்கினார். இச் சிவ, விண்ணவ, கொற்றவைப் பரவல் தென்புலத்திலும் நடந்தது.  மேல் தட்டிற்கொன்று, கீழ்த்தட்டிற்கு ஒன்றெனச் சமய இடைவெளி வேதியருக்கு இடைஞ்சலாய் அமைந்தது. பொதுமக்கள் சற்றுதள்ளியே அவரை வைத்தார்.

கி.மு. 600 களுக்குச் சற்றுமுன் (எத்தனை நூற்றாண்டுகள், ஒன்றா, இரண்டா என்பது தெரியாது), மெய்யியல் (philosophy) வரிதியான கேள்விகளுக்கு வேத நெறி உள்ளாக்கப் பட்டது. பொதுமக்களிடையே அற்றுவிகம் (ஆசீவகம்), செயினம், புத்தம் எழுப்பிய தாக்கத்தை அறிந்த அரசரும், மற்றோரும் வேறு வழியின்றி நெறிமாறத் தொடங்கினார். அதுவரை தியை (ஒளியுள்ள வானம்- dyas), புடவி (ப்ருத்வி), அதிதி, மாரி (வாரணன்> வருணன்), மித்திரன், அழனி (அக்னி), இந்திரன், உழை (உஷஸ்) எனச் சிறு தெய்வங்களையே பரவிய வேதநெறியார், ஆகமநெறியைப் (ஆகிவந்த நெறி ஆகம நெறி. இதுவும் மரபு நெறி தான். ஆனால் தென்புலம், பொதுவான வடபுலம் ஆகியவற்றின் நெறி) பார்க்கத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாய்க் கலவைநெறி எழத் தொடங்கிச் சிவநெறி (அதேபோல விண்ணெறி) என்பதாய்ப் பெருந்தெய்வ வணக்கமாய் மாறியது. கலவைநெறி உருவான பின்னரே, குருக்கள்மார் மக்களிடை ஏற்கப்படும் நிலைக்கு வந்தார். [எப்போதுமே வெளியிலிருந்து திணிக்கப் பட்டு மக்களுடன் ஒன்றா மதம் மக்களிடையே நிலைக்காது. உள்ளூர்ப் பழக்கங்களை அணைத்து ஒன்றுபடும் மதமே மக்களை ஈர்க்கும்.] வேதாகமக் கலவைநெறி எழுந்த கதை இது தான்.

வேளும்சடங்கு செய்வது வேள்வி. வேள்வி செய்தவர் வேள்தர் (>வேதர்); வேளும் போது (= வேண்டும் போது) கூறிய பரவு (pray) வாசகங்கள் வேள்தம் (>வேதம்., வித் எனும் கருத்துமுதல் வேரில் ”வேதம்” பிறந்ததாகக் கருத்து முதல் உரையாளர் சொல்லப் புகுவார்; அது பொருந்தப் புகல்வதென நான் சொல்வேன். வேள்தல் (= வேண்டல்) - ஐயே நான் அடிப்படையாகக்குவேன். ஏனெனில், இன்றும் கடவுளை, தெய்வங்களை, வேண்டத்தான் செய்கிறோம். வேண்டல் வேதநெறியா, சிவநெறியா, விண்ணெறியா எனப்பாராத பொதுச் சொல். வேள்விகளுக்குச் சற்றும் தொடர்பிலா வகையில், இறைவனுக்கு இடையாளனாய் சங்க இலக்கியங்களில் கூறப்படும் வெறியாட்டு வேலனும் (நாட்டுப் புறங்களில் சாமியாடி என்பார்), இன்று வரை வேளன்>வேளான் எனப்படுகிறான். காட்டாக, சிவகங்கை மாவட்டத்தில் அய்யனார் கோயில் பூசாரியார், வேளார்>வேளகாரர் என்றழைக்கப் படுவார். அதுபோலச் சங்க இலக்கியத்தில் வேள்வி செய்யாது வேறுதொழிலில் ஆட்படும் பார்ப்பாரை வேளாப் பார்ப்பாரென்பார். இச்செய்திகளை ஒருங்கே எண்ணின், வேளுதல்  வினையின் ஆழம் புரியும்.] "வேள்வியின் மூலம் வேளுதல்" என்பது ஒருவகை நெறி. வேள்வி அல்லாது இறைவனை வேண்ட முடிவது இன்னொரு வகை நெறி. முன்னால் சொன்னபடி, மேல்தட்டு வருக்கத்திற்கு மட்டுமே வேள்வி பயன்பட்டது. வேள்வியில் "எஜமானன் - யாகம் ஏற்படுத்துபவன்" என்ற ஒன்று எப்பொழுதுமுண்டு. பொதுமக்கள் பரவுவதாய்ச் சொல்லி யாகத்தைச் செய்ய முடியாது. {yaagam is a structured way of praying; it has series of rites.]

கலவைநெறியை உருவாகிய பின்தான், வேதியர் அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகியவற்றை எதிர்த்துப் பொதுமக்களைத் தம்பக்கம் திருப்ப முடிந்தது. கி.மு.600 களுக்கு அண்மையில் வட புலத்தில் வேதப் பழக்கம் குறையத் தொடங்கியது. புது விளக்கங்கள் வேத நடைமுறைக்குக் கற்பிக்கப் பட்டன. கீழ்நிற்றங்கள் (உபநிடதங்கள்) எழுதி, மெய்யியற் பொருட்பாடுகள் கூறப்பட்டன. வேதியர் கொஞ்சம் கொஞ்சமாய் தெற்கே வரத்தொடங்கினார். சங்க காலத்திலேயே பார்ப்பனர் தாக்கம் தமிழகத்தில் இருந்ததே என்று சிலர் கேட்பார்; இதில் பெருமைப்படவும், வெட்கப்படவும் ஒன்றுமில்லை. வேதியர் பெயர்ச்சி தென்னாட்டில் ஏற்பட்டது ஒரு பட்டகை (fact). அவ்வளவுதான்.

வேத நெறி பின்பற்றும் மரபாளர் தெற்கே கோதாவரிக்கு வந்த பின்னால், அவரின் விதியாளரால் தாலி கட்டிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார். (ஓரளவு பார்ப்பனரல்லாத தென்னாட்டுப் பெண்களையும் மணஞ்செய்திருக்க வேண்டும் என்றே ஆய்வாளர் எண்ணுகிறார். குறிப்பாக மராட்டியப் புடவைக் கட்டுமுறை ஓர்ந்துபார்க்க வைக்கிறது.) முறைப்பெண்ணைத் திருமணம் செய்யும் தென்னாட்டுப் பழக்கம் ஏற்கப்பட்டது. பெண்களோடும், வேதம் அறியாதாரோடும் (பெருமானரல்லாதாரோடும்) உடனிருந்து விருந்துண்ண அனுமதிக்கப் பட்டார். பழையது சாப்பிட ஒப்புதல் கிடைத்தது. பெருமானர் விலங்குகள் சாப்பிடுவதில் புதிய பட்டியல் கூட ஏற்பட்டது. இவற்றை ஆபஸ்தம்ப சாற்றமும், பௌதாயண சாற்றமும் (சாற்றம் = சாத்திரம்) விளக்கமாய்க் கூறுகின்றன. இப்படி விளங்கங்களை நான் எழுதும் காரணம், வேதியரில் சிலர் ”வேதம் ஏதோ தான்தோன்றி- சுயம்பு ” என்பதுபோல் பல மூதிகங்களைக் கிளப்புவதை மறுக்கவே. பொறுமையாக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு முன் நடந்தவைகளைப் பார்ப்பது, அதிலும் வேதம் போன்றவற்றைப் பார்ப்பது, இன்று மிகவும் அரிதாகிவிட்டது. கொடிமரபை (பரம்பரையை) மறுதலிப்பதே இன்று பலருக்கும் வழக்கமானது.

நாவலந்தீவின் பல பண்பாட்டு வழக்கங்களும் இதுபோலத் தென்னாட்டு. வட நாட்டுக் கலவை வழக்கங்களே. இன்றைக்குத் தம் தென்னாட்டு (=திராவிட) ஊற்றுகைக்கு வெட்கப்படும் சில மெத்தப் படித்த மேதாவிகள், வேதத் தன்மையை மட்டுமே நம்முன் வலியுறுத்திப் போகலாம்; ஆனால் உண்மை என்றாவது ஒருநாள் வெளிவந்தே தீரும். (மேனிலைப் பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியுள் நுழையும் போது, தம் நாட்டுப்புறத் தகப்பனையோ, அல்லது தாயையோ, உடன் படிக்கும் மாணிவரிடை அறிமுகம் செய்து வைக்க வெட்கப்பட்டுத் தன் கொடிவழி பற்றிப் பொய்சொல்லித் திரியும் சில முட்டாள்களையும், தம் தாய்வழிக் கொடி பாண்டித் தமிழர்களிடம் இருந்தே பிறந்ததென்று "மகாவம்சம்" சொல்வதை வாய்ப்பாக மறந்து, தம் தந்தை வழிக் கொடியான ஆரியத் தோற்றத்தை மட்டுமே விண்ணாரம் பேசி, அதேநேரம் தாய்வழி உறவான தமிழரை ஈழததீவிலிருந்தே விரட்ட முற்படும், சிங்கள முட்டாள்களையும் இங்கே எண்ணாதிருக்க முடியவில்லை.)

இதுபோன்ற பெருமானரின் பரவலை 3 அலைகளாய்ப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் கூறுவார். (The Brahmin in the Tamil Country - Prof. N.Subrahmanian, Retd. Prof.of History, Madurai Kamaraj University, ENNES publications, Madurai, year 1989) கி.மு. 1000-800, கி.மு.500-200, கி.பி 300-500 என்று அவர் பகுப்பார். இந்த அலைகள் இரண்டா, மூன்றா என்பதில் ஆய்வாளரிடையே வேறுபாடுண்டு. ஆனால், குத்தர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் சாரிசாரியாய் பெருமானர் தெற்கே பரவியது கி.பி. 500க்குப் பிறகே. அதற்கு முன் எழுந்த அலையை புத்தர், மாவீரர் காலத்திற்கு சற்று பின்னாலென நான் கருதுகிறேன். இந்த அலையின் உயர்ச்சியாய், அதனூடே செயினரும் [குறிப்பாக பத்ரபாகு (இற்றைக் கர்நாடகச் சமண வெள்ளைக்குளத்து -ஸ்ரவண பெள குளா - கோமடேசுரர் சிலையை நினைவுக்குக் கொணர்க), உடன் அரசு துறந்துவந்த சந்திரகுத்த மோரியன், அவன் மகன் பிந்துசாரன் நம் தகடூர் வரை எடுத்து வந்த மோரியர் படையெடுப்பு], புத்தரும் (பிந்துசாரனின் மகன் அசோகன் புத்த மதத் துறவிகளைத் தெற்கிற்கும் ஈழத்திற்குமாய் அனுப்பியது - அதில் அவன் மகனொருவன் கூட இருந்திருக்கலாம்), அதையொட்டி முன்னும் பின்னும் வந்த பெருமானர் எனப் படித்தானத்தில் இருந்து தகடூரும், காஞ்சியும் இன்னும் மற்ற ஊர்களுக்கும் வந்து சேர்ந்த பயணங்கள் மிகப் பல.

வந்தாரில் பலரும் தமிழ்க்குமுகத்தில் ஏற்கப் பட்டார்; பெருமானருக்குத் தலைநகர்களில் சேரிகளும், மற்ற இடங்களில் ஊர்களும் (பெரும தாயங்கள்; தந்தது தாயம்; பெருமருக்குத் தந்தது பெரும தாயம். பெரும தாயம் பின் ப்ரம்ம தேயம் என்று திரிவு கொள்ளும்) தரப்பட்டன. அவ்வூர்களின் பெயரே பிரிவுக்குப் பெயராயின. காட்டாக இற்றை மரபுப் பெருமானரில் (smartha brahmins) பெருகணப் (ப்ருகச்சணம்) பிரிவினர் கண்டரமாணிக்கம், மலை நாடு, நிலகனூர், மாங்குடி, பலமன் நேரி, மூச நாடு, குளத்தூர், மருதஞ்சேரி, சத்தியமங்கலம், பூரூர் என்ற ஊர்களில் குடியேறினார்; எண்ணாயிரவர் (அஷ்டசஹஷ்ரம்) அத்தியூர், அறிவர்பாடி, நந்திவாடி, அறுகுளம் - shatkulam என்றவற்றில் குடியேறினார். (இன்னும் முகன்மையான வடமர் பெருமளவில் வந்தது குத்தர், பல்லவர் காலத்தில். அவரைப் பின்னால் பார்ப்போம்.)

இதேபோல நம்பூதிகள் கோகர்ணம் (இன்றைய கோவா) வழியாக துளு நாட்டில் நுழைந்து 32 ஊர்களிலும், சேரலத்தில் 32 ஊர்களிலும் குடியேறினார். இவருள் ஏற்பட்ட பிரிவுகளை ஆடு, ஏடு, பிக்சை, பிச்சை, ஓது, சாந்தி, அடுக் களை, அரங்கு, பந்தி, கடவு என்று பத்தாகச் சொல்வார். நம்பூதிகளைப் போலவே பழக்கம் கொண்ட தீக்சிதர் தில்லையிலும், சோழியர் திருக் கடையூர், மடலூர், விசலூர், புதலூர், செங்கணூர், திருமறைக்காடு, ஆவுடையார் கோயில் என்ற ஊர்களிலும் குடியேறினார்.

இன்னும் பல தமிழ்ப் பெருமானப் பிரிவினர் (பொன்முடியார் - hiranya kesis, முக்காணி, கணியாளர், சங்கேதி, குருக்கள், வாத்திமார் எனப் பலர்) உண்டு. இவரெலாம் எப்போது வந்தார், எப்படி உருவானார் என்ற மாந்தவியல் விவரங்களை யாரும் சேர்த்து ஆய்ந்து வைக்கக் காணோம். மொத்தத்தில் நல்ல வரலாற்றுச் செய்திகள் தொகுக்கப் படாமல், அவரவரிடமுள்ள மூதிகப் பழக்கங்களால், தொலைந்து போய்க் கொண்டுள்ளன. (எப்படி மாலத்தீவில் ஊர் மக்களின் தமிழ்த் தோற்றத்தையும், மற்ற செய்திகளையும் சேகரித்து வைக்காமல், தொல்லியல் கண்டுபிடிப்புக்களைத் தொலைக்க வைத்து, அரபு நுழைவுக்கு முன் தமக்கு வரலாறே இல்லாததுபோல் ஆக்குகிறாரோ, அதே போல் சொல்லலாம். மலேசியாவிலும் கடாரம், ஜோகூர் மாநிலங்களில் உள்ள கி.பி. 800 முந்திய சின்னங்களை, மலாக்கா சுல்தான் பர மேசுரவர்வன் இசுலாத்திற்கு மாறியதன் முன் இருந்தால் அவற்றைக் கட்டக முறையில் (sytematic) ஒழித்துக் கட்ட முயல்கிறாரோ அதுபோல் இதைச் சொல்லலாம். பெருமானரே கூட "அல்லிருமை - அத்வைதம்” மெய்யியலைப் பெரிதாகக் கருத,, வரலாற்றுத் தொலைப்பைக்  கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆதிசங்கரர் பற்றியும், அவருக்கு முந்தைய வேதம், அரணகம் - ஆரண்யகம், பெருமானம் - ப்ராமண்யம், கீழ்நிற்றம் - உபநிடதம் என்ற கருத்துமுதல் வாதத்தைப் பெருமிதமாகப் பேசுவதே போதுமென இவருக்கு ஆனது. மாந்தவியல், குமுகவியல், வரலாறு இன்னபிற பெரும்பாலோருக்குத் பொருட்டாவதில்லை. தம் திராவிடப் பின்புலம் பேச அவர் நாணுகிறார்.)

நம்பூதிகள் மட்டும் விதிவிலக்கு. அவர் வரலாற்றை மாந்தவியல் முறையில் தேடித்தேடி, கூடிய மட்டும் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்திப் பதிவு செய்துள்ளார். வடமொழிப் பாதிப்பை உயர்த்தினாலும், தமிழ் வடமொழிக் கலப்பைச் சொல்லிக்கொள்ள அவர் வெட்கப்படுவதில்லை. சங்க இலக்கியத்திலே அவர் சேரலத்தில் தங்கிய முதலூர் (செல்லூர்) சிறப்பாகப் பதியப் பட்டுள்ளது (அகநானூறு 216). (நம்பூதிகள் அதர்வ வேதம் பின்பற்றார். அதன் காரணத்தாலேயே தக்கணபதத்திற்கு வெகுகாலம் முன்பே, கி.மு. 500க்கு முன்பே, வந்திருக்கலாமென்று ஆய்வாளர் எண்ணுவார்.) இவர் போலவே உள்ள தீக்சிதர், சோழியர் பற்றி அடுத்த பதிவில் காணலாம்.

அன்புடன்,
இராம.கி.

3 comments:

unarvukal said...

அன்புக்கும் மதிப்புக்குமுரிய திரு. இராம.கி அவர்களுக்கு

ஒரு சில நாட்களிலேயே உங்களுடைய வலைப்பூவினதும், உங்களது தமிழறிவினதும், தமிழ்ப்பற்றினதும் பெரிய ரசிகர்களில் ஒருவனாகி விட்டேன். நன்றி.
உங்களுடைய வலைப்பதிவுகளில் சிலவற்றை, உணர்வுகள் இணையக்களத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன், அல்லது நீங்கள் அங்கேயே உங்களின் பதிவுகளைச் செய்ய முடியுமா? நீங்கள் சம்மதித்தால் தமிழ்ப்பற்றும், தமிழுணர்வுமுள்ள www.unarvukal.com உங்களுக்காகத் தனிப்பிரிவு அமைத்துத் தரக்கூடத் தயங்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

அன்புடன்
ஆரூரன்

www.unarvukal.com

Anonymous said...

வாரணன் என்பது யானையையும் குறிக்குமோ

Anonymous said...

நாட்டுப்புற குலதெய்வங்களைப் பார்த்தாலே திராவிடர்களின் வழிபாட்டு முறைமைகளைப் புரிந்து கொள்ளலாம். இன்று 'இந்து' மதம் என்ற சொல் கூட அன்று இல்லை. பல வேறுபட்ட சமய மரபுகளைத் தழுவி வந்த போதிலும் இன்று சொல்லப்படும் 'இந்து' மதம் தன் பன்முகத்தன்மையைக் கூட மறுக்கின்றது; மறைக்கவும் செய்கின்றது.

நாட்டார்கள் படித்துவிட்டு வெளியே நகர்ப்புறங்கள் வந்துவிட்டால் தங்கள் வாழையடி வாழையாய் வந்த தமிழ்ப் பெயர்களைக் கூட தள்ளிவிட்டு, வட இந்திய அல்லது வடமொழிப் பெயர்களையே குழந்தைகளுக்குச் சூட்டுகின்றனர். இப்படி தங்கள் மரபை மறுதலிக்கும் கூட்டத்தோடு ஒன்றாகிவிடுகின்றனர்.