Tamil Script - A living legacy என்ற என் முந்தைய இடுகையில் வந்த பின்னூட்டில் திரு. வசந்தன் பாவித்தல் என்ற சொல் பற்றிக் கேட்டிருந்தார். அண்மையில் இந்தச் சொல் பற்றி சந்தவசந்தம் குழுவிலும் ஒரு வினா எழுந்தது. பின்னால் எழுதிக் கொள்ளலாம் என்று அங்கு படித்ததோடு அமைந்துவிட்டேன். ஒரு சில நண்பர்கள் அது வடமொழி மூலம் தான் என்று அங்கு சொல்லியிருந்தார்கள். ஆனால் கற்பிதம் என்ற பொருளை அதற்கு அடிநாதமாய்க் காட்டி "பாவம், பாவனை" என்பதைப் போன்று தான் "பாவ்" என்னும் வடமொழி வேரின் அடியில் இது பிறந்தது என்று சொல்லியிருந்தார்கள். வடமொழி வேராகக் கீழ்க்கண்டவை தென்படும். தெரியாதோருக்குச் சொல்லுகிறேன். u_ என்று கீழே இருப்பது போல் வந்தால் அது நெடில் ஊ என்று பொருள்.
bhu_ to be; deri. bhu_ta, bha_vya, bhavya
bhu_ to obtain, to attend; bha_vayate_
புவனம், பவனம், பவன் (சரவண பவன்), பவம் (சம்பவம்), பாவம் (முக பாவம்) என்ற சொற்களை சந்த வசந்தத்தில் எடுத்துக் காட்டாகக் காட்டியிருந்தார்கள். "பாவயாமி ரகு ராமம் = ரகுராமனை பாவிக்கிறேன் = நெஞ்சில் இருத்துகிறேன்; யத் பாவயஸி தத் பவஸி - எதை பாவிக்கிறாயோ அது ஆகிறாய்" என்ற சொற்றொடர்களையும் சொல்லியிருந்தார்கள்.
பாவித்தல் என்ற சொல்லுக்கு எண்ணுதல், தானித்தல் (தியானித்தல்), பாவனை செய்தல், பொய்யாக நடித்தல், நுகர்தல் என்ற பொருள்களை அகர முதலிகள் தரும். ஈழத்தார் ஒன்றைப் பாவித்தல் என்று சொல்லும் போது கற்பிதம் செய்வதில்லை. மேலே சொல்லுவது போல கற்பித்துக் கொண்டேன் என்ற பொருளில் பாவித்தேன் என்று சொல்லுவது தமிழ்நாட்டுப் பேச்சில் வேண்டுமானால் ஒருவேளை அமையக் கூடும். ஈழத்தார் பேச்சில் பாவித்தல் என்பது ஐம்புலன்களால் உணரக் கூடிய ஒரு இயல்பொருளை தனக்குப் பயன்படும் வகையில் ஆளுவதையே குறிக்கும். அங்கே கற்பிதம் என்ற imagination கிடையாது. நுகருதல் என்ற பொருளே இருக்கிறது.
அப்படியானால் பாவித்தலின் மூலம் என்ன? அதை அறிய முதலில் பயன் என்ற சொல்லைப் புரிந்து கொள்ள வேண்டும். பயன் = use என்பது முதல் நிலைப் பொருளா? அல்லது வழிநிலைப் பொருளா? இற்றைத் தமிழில் பயன் என்ற சொல் வெறும் பெயராக மட்டுமே இருக்கிறது. அதன் வினைச் சொல்லைப் புழங்காது ஒழித்த காரணத்தால் பயன்படுத்துகிறேன் என்று துணை வினை போட்டுச் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். உண்மை என்ன?
ஒரு மரம் இருக்கிறது; அது உரிய காலத்தில் பூக்கிறது; காய்க்கிறது; பின் பழுக்கிறது. பல நேரங்களில் இயற்கை தரும் பொருள்களை பயக்கிறது என்று சொல்லுகிறோம். பயக்கிறது என்ற சொல்லுக்கு "விளைகிறது, உண்டாகிறது, பலிக்கிறது, கிடைக்கிறது, படைக்கிறது, பெறுகிறது, கொடுக்கிறது, பூக்கிறது, இயற்றுகிறது, நிறம் வேறுபடுகிறது, அச்சமுறுகிறது" என்றே பொருட்பாடுகள் சொல்லப் படும். இங்கே "விளைப்பு, கிடைப்பு, உண்டானது, பெறுதி, கொடுப்பு, பூப்பு" போன்ற பொருள்களையே ஆழ்ந்து பார்க்க வேண்டும். பயந்தது பயன். அந்தப் பயனை நாம் பெறுகிறோம். அந்த நிலையில் பயன்படுகிறது. பொருளைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை தருவது பயன். நாம் அந்தப் பயனை நுகர்கிறோம்; அப்பொழுது நமக்கு நல்லது தருவதாக உணருகிறோம்; இதைத் தான் பயன் படுவதாகச் செயப்பாட்டு வினையில் சொல்லுகிறோம். பயன் என்ற சொல் தான் மருவிப் பலன் என்றும் சொல்லப் படுகிறது. இயற்கையின் மூலம், அல்லது மற்றோர் மூலம், நாம் அடையும் நல்லதைப் பலன் என்று சொல்லுகிறோம். சரி, பயத்தல் என்ற வினையின் வேர்ச்சொல் என்ன? அந்தக் கேள்விக்கு விடை காணு முன்னர் பூ என்னும் ஓரெழுத்து ஒருமொழி பற்றிப் பார்ப்போம்.
என்னுடைய பூதியல் என்ற பதிவில் இந்த ஓரெழுத்து ஒருமொழி பற்றிப் பேசியிருக்கிறேன். அதில் இருந்து தேவையானவற்றை வெட்டி இங்கே ஓட்டுகிறேன்.
----------------------------------------------
"பே" என்னுஞ் சொல் போலவே, "பூ" என்ற ஓரெழுத்து ஒருமொழியும் அச்சப் பொருளில் வரும். இந்தப் பூ என்னும் ஒரொழுத்து ஒருமொழி, தனித்து ஏற்பட்ட ஓரெழுத்து ஒருமொழியா, இல்லை பே - யில் இருந்து கிளைத்து வந்ததா என்று தீர்மானமாகக் கூற இயலாது. ஆதிமனிதனுக்கு அச்சம் என்பது அடிப்படை உணர்வு. இன்றுங் கூடச் சிறுவர்கள் ஒளிந்து விளையாடும் ஆட்டத்தில் திடீரென்று "பூ" என்றோ" பே" என்றோ ஒலியெழுப்பி மற்றொருவனை பயமுறுத்துவதைப் பார்க்கலாம். இந்த அச்ச உணர்வு, நம்மைக் காட்டிலும் பெரிய அல்லது பருத்த உருவத்தை அல்லது தோற்றத்தைப் பார்த்தால் இயற்கையாக எழுகிறது. பல இடங்களில் அச்சமும் பருமனும் பிரிக்கவொண்ணாத வகையில் கலந்தே இருக்கின்றன. கோழி முன்னதா, முட்டை முன்னதா என்பது போல எந்தப் பொருள் முந்தியது என்று உறுதியாகக் கூற இயலாது. "தே" என்ற மொழி கூட அச்சப் பொருளில் தான் முதலில் வந்தது. பின் தெய்வம் என்ற கருத்துக்கும், தீ என்ற கருத்துக்கும் பின்புலனாக அமைந்தது. தீயே முதலில் தெய்வமாக வணங்கப் பட்டது. அச்சமே தெய்வத்தின் தொடக்கம். நாளடைவில் அச்சப் பொருளை மீறி அன்பு, பரிவு, அருள் என உயர்கிறோம். அணங்கு என்ற சொல் முதலில் அச்சம் தரும் தெய்வத்தையே குறித்தது. பின் நாளடைவில் இரக்கம் உள்ள, அருள் உள்ள, அழகு உள்ள தேவதை என்ற பொருள் பிறக்கிறது. காதலியைக் கூட "அணங்கு கொல், ஆய்மயில் கொல், கணங்குழை மாதர்கொல், மாலும் என் நெஞ்சு" என்று சொல்லத் தோன்றுகிறது. இன்றைக்கு வைரமுத்துக் கூட "அழகான ராட்சசியே" எனத் திரைப்பாடல் எழுதுகிறார். எப்படிக் கருத்து முரண் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, பாருங்கள்.
பூ>பூது = பெரியது. [இரும்பூது> இறும்பூது = மிகப்பெரியது; எனவே, வியப்பானது]
பூது>பூதம் = பெரியது, பெரும் பேய்
பூதாண்டி>பூச்சாண்டி = குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவம்
பூதல்>பூசல் = இன்னொருவரைத் திகைக்க வைக்கும் பேரொலி - ஆரவாரம், பலரறிகை, கூப்பீடு, போர்
பூசல்>பூசலிடுதல் = முறையிடுதல், பேரொலிபடக் கதறுதல்
பூது>பூச்சு>பூச்சி= சிற்றுயிர், குடற்புழு, குழந்தைகளை அச்சுறுத்தற்கேனும், சிரிப்பதற்கேனும் சொல்லும் சொல். (பூச்சியைக் கண்டுப் பயப்படுவது அடிப்படை அச்ச உணர்வைக் குறிக்கிறது. சில இடங்களில் தேள், பூரான், பாம்பு போன்றவற்றைப் பூச்சி என்று சிறுபிள்ளைகளிடத்தில் மறைக்குமாப் போலப் பாட்டிமார் சொல்லுவதை எண்ணிப் பாருங்கள்.)
பூதம்>பூதக் கண்ணாடி = சிறியதைப் பெரியதாகக் காட்டும் கண்ணாடி வகை
பூதம்>பூத கணம் = பூதங்களின் கூட்டம். (சுடலையை இருப்பிடமாகக் கொண்ட சிவனின் கணங்கள் என்று தொன்மங்களில் கூறப்படுவது)
பூதம்>பூதவுடல் = உயிரற்றுக் கிடக்கும் உடல் (அதே நேரத்தில் தொட்டு உணரக் கூடிய பருவுடல்; ஆன்மீக வாதம் பூத உடலை ஆன்மாவில் இருந்து பிரித்துப் பார்க்கும். அதன் விளைவாக பூதம் என்பதை உயிர் என்றும் மாற்றிப் பொருள் கொள்ளும்; [காட்டு: பூதத் தயவு (இது இரு பிறப்பிச் சொல்) = உயிர்களிடம் காட்டும் அன்பு]
பூதம்>பூத நாடி = பேய் பிடித்தவர்களிடம் காணப்படும் நாடித் துடிப்பு வகை
பூதம்>பூத நாதன் = பூதங்களுக்குத் தலைவனான சிவன்
பூதம்>பூத சதுக்கம் = காவிரிப் பூம்பட்டினத்தில் பூதம் நின்று காவல் காத்த நாற் சந்தி.
[வரலாற்று ஆசிரியர் நா.சுப்பிரமணியன், இந்தச் சதுக்க பூதம் பற்றி ஓர் அருமையான ஊகத்தைக் கூறுவார். See his Sangam Polity, Ennes Publications, Udmalpet 642128, Third ed 1996. It is true that 'Ganesa' is not particularly mentioned either by that name or any of its modern equivalents in the Sangam Literature; but it seems quite proper to trace him back to Perum Chadukka bhUtham which punished all offenders and had a pAsam or rope in its hand; it gave 'Vigna' to those who offended and protected from ' Vigna' those who behaved; so it had 'pAsahasta' and 'Vignaraja'; it was the demon on the cross-road distinguished from the gods who were housed in temples. Vignesvara, too, punished the offenders and protected the good; he has a pAsam in His hands and He is generally on the cross-road. The Demon on the cross-road was ;'BhUta nAtan', a literal equivalent of 'Bhuta' or 'GaNa' nAtan or 'Ganapati'. The elephant face in fact indicates a South Indian origin, and the pot-belly suggests an ancestry traceable back to Demons. இந்தச் சுவையான வாதத்தைப் பற்றித் தனித்தே எழுதலாம். இப்பொழுது அதைத் தவிர்க்கிறேன்.]
பூது>பூதர் = பதினெண் கணத்துள் ஒருவரான மாந்தர்
பூது>பூதரம் = மலை; இமயம், மேரு
பூது>பூதரன் = அரசன், திருமால்
பூதரம்>பூதலம் = பூமி (இங்குதான் நான் அடிப்படையாகச் சொல்ல வரும் கருத்து இருக்கிறது. குறிஞ்சி நிலத்து மனிதனுக்கு, மலையும் மேடும், பள்ளமும், வட்டமுமாகத் தான் தன்னைச் சுற்றி உள்ள பூமி தெரியும். பருத்து உயர்ந்து உள்ள மலை பூதரம். அதுவே அவன் வாழும் இடம். அதாவது பூமி. ரகரம் லகரமாக மாறுவது பல சொற்களில் உண்டு.)
பூது>பூதவம் = ஆலமரம், மருதமரம். (இந்த மரங்களின் அகண்ட தன்மை இப்படி ஒரு சொல்லை உருவாக்கியிருக்கிறது. அதே ஆலத்தில் இருந்து ஞாலம் என்ற சொல் உருவாகியதை முன்னே சொல்லியிருக்கிறேன்.)
பூதம்>பூத வாதம் = பூதங்களின் சேர்க்கையால் ஆன்மா உண்டானதென்று கூறும் வாதம். இதுதான் உலகாய்தம் அல்லது பூதவியல் எனப் படும்.
பூதம்>பூத வீடு = ஐவகைப் பூதங்களால் ஆகிய உடம்பு.
பூதம்>பூத வேள்வி = பூதம் (=உடல்) பலியிடப் படும் வேள்வி (அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் என்ற குறளை நினைவு கூருங்கள்.)
பூதம்>பூதன் = ஆன்மா (உலகாய்தத்தின் தாக்கத்தால் ஆன்மீக வாதம் தன்வயப்படுத்திக் கொண்ட மாற்றுக் கருத்து. இப்படி மாற்றுக் கருத்துக்குச் செல்லுவது இயற்கை. விலங்குகளை வேள்வியில் பலியிட்ட வேதியம், பின்னால் புத்தமும், சமணமும் எழுந்தபின், தன்னை மாற்றிக் கொண்டது. கிறித்துவம் கொண்டாடப் படுவதற்கு முன் மத்தியக் கிழக்கு, மற்றும் எகிப்தில் சூரியனுக்குப் பிறந்த நாள் கொண்டாடும் நேரத்திலேயே கிறித்து பிறந்த நாளைக் கொண்டு வந்து காட்டி, முன் உள்ள இறையுணர்வை கிறித்தவம் தன் வயப்படுத்திக் கொண்டது தெரிந்தது தானே!. நாம் கூட பொங்கல் கொண்டாடுவது இந்தக் காலம் ஒட்டியே; ஆனால் கொஞ்சம் பஞ்சாங்கம் மாறிக் கொண்டாடுகிறோம். அவ்வளவு தான். அதை அலச இன்னொரு கட்டுரை வேண்டும். விடுக்கிறேன்.)
பூதம்>பூதன் = பூதத்து ஆழ்வார், கடுக்காய், தூயன்
பூதம்>பூதாகாரம் = மிகப் பருத்தது
பூதம்>பூத அண்டம் = பெருத்த அண்டம்
பூது>பூதாரம் = பூமியைப் பிளப்பதாகிய பன்றி; வராக அவதாரம்
பூது>பூதி = திரு நீறு, சாம்பல், செல்வம், பொன், புழுதி, சேறு, பூமி, ஊண், உடம்பு இன்னும் பல. பூதி என்ற சொல்லின் பிறப்பைப் புழுதி>பூழ்தி>பூதி என்றும் சொல்லுவது உண்டு. பூழுதல் = நொறுக்குதல்; பொடி செய்தல்
பூதி>பூதி கந்தம் = தீ நாற்றம். இங்கு பூதி என்பதே தீ என்னும் இன்னொரு பூதத்திற்குப் பயன்படுவதைக் காணுங்கள்.
பூதி>பூதிகம் = பூமி, உடம்பு (இந்த இரண்டு பொருளும் அருகருகில் பயன்படுவது ஒன்றே பூதம் என்ற சொல்லின் சொற் பிறப்பைக் காட்டிக் கொடுக்கும்.
பூதிகம்>பூதியம் = உடல், பூமி, ஐம்பூதம். (முக்கியமான மூன்று பொருளும் இங்கு வருகின்றன.)
பூ>பூமி = நிலம், இடம், நாடு இன்னும் பல. (இங்கே தோன்றுவது, உருவாவது என்ற பொருளில் வடமொழியைப் போலச் சட்டென்று கொள்ள முடியாது. ஏனெனில், பூமி என்பது மாந்தனுக்கு முற்பட்டது. பூமி என்ற ஒரு பொருள், மாந்தனுக்கு அதன் ஒரு கூறாலே தான் தோற்றமளிக்க முடியும். அவன் அதன் முழுமையை அறிந்து பெயரிடுவதில்லை. அவனுக்கு முன்னே இயற்கையின் காட்சி தோன்றும்; கண்ணுக்குப் புலப்படும் பொருள் தோன்றும்; அப்படிப் பார்த்தால் மலை தோன்றும், மடு தோன்றும், ஆறு தோன்றும், மனிதர்கள், விலங்குகள் என்போர் தோன்றுவார்கள்; மொத்தத்தில் ஒரு விதுமை தோன்றும்; பொதுமை தோன்றாது. விதப்பான பெயரே பூமிக்குப் பெயராக இடப்படும். ஆழ்ந்து யோசியுங்கள். பூ என்ற ஓரெழுத்து ஒருமொழி எப்படி வந்திருக்க முடியும்? பூத்தது என்ற கருத்துக்கும் முன் வேரொன்று இருக்க வேண்டும் அல்லவா? இங்கே மலையைக் குறித்த சொற்களே தொடக்கமாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
புடைத்து நிற்பது புடவி = நிலம், மலை; குவித்து உயர்ந்து நிற்பது குவடு = மலை. அது போல புவித்து (= புடைத்து வெளிப்பட்டு, குவிந்து) நிற்பதும் மலை, இடம், பூமி. ஒரு மரத்தில் புடைத்து மொட்டாகி, முகிழ்த்து, பின் மலர்ந்து, வெளிவந்தது தான் பூ. இப்படி வெளிவருவதைத் தான் புவ்வுதல் என்று சொல்லுகிறோம். புவ்வுதல் என்ற வினைச்சொல்லில் இருந்த வந்த பெயர்தான் பூ = மலர்; [காட்டு: புவ்வத் தாமரை = திருமாலின் கொப்பூழில் இருந்து எழுந்த தாமரை. தமிழ் அகர முதலியைப் பாருங்கள்.] (பொதுவாக, நாட்டுப்புறத்தார் பூ என்று சொல்லி நிறுத்த மாட்டார்கள்; அவர்கள் பூவு என்றே சொல்லுவது கூட நமக்கு ஒரு குறிப்பைத் தருகிறது.)
புவு>பூ. இந்த மாற்றம் தமிழில் இயற்கையான மாற்றம். இந்தப் புடைப்பில் இருந்து தான் தோன்றுதல், உருவாதல் என்ற பொருள்கள் வரமுடியும். பருத்துப் புடைத்து, பின் வெளிவருவது இயற்கையில் நடக்கும் ஒரு செயல். அதைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு பூ என்பது உருவாவது (becoming) போலத் தான் தோற்றமளிக்கும்.
இதே போல புவ்வித் (புடைத்துத்) தோற்றமளிக்கும் இடம் புவி. இன்னொரு ஈற்றில் அது புவனம் என்றும், புவனி என்றும் ஆகும்.
புவு>புவி; புவு>புவனம் = பூமி, உலகம், இடம், மாந்த இனம், நீர் (இங்கு இன்னொரு பூதம்); புவு>புவனி = பூமி; மீண்டும் நீண்டு புவம் = வானம் என்னும் இன்னொரு பூதத்தைக் குறிக்கும்.
---------------------------------------
புவ்வி (புடைத்து, பெருத்து, விளைந்து) வந்த பொருள் புவ்வம்>புவம்>பவம். மேலே பயனுக்குச் சொல்லப்பட்ட எல்லாப் பொருள்களும் (விளைப்பு, கிடைப்பு, உண்டானது, பெறுதி, கொடுப்பு, பூப்பு) இங்கே பவத்திற்கும் அமையும். பயன் என்பது யகரம் உள்நுழைந்த சொல்லாக்கம்; பவம் என்பது வகரம் உள்நுழைந்த சொல்லாக்கம். வேறெந்த மாறுபாடும் கிடையாது. பயன், பலன், பவம் எல்லாமே ஒரே பொருள் தான்.
தற்பவம் என்னும் போது அது தற்பெருக்கம், தன்விளைப்பு, தன்பூப்பு என்றே பொருள்கொள்ளும். தமிழியை மட்டும் வைத்துப் பிறமொழிச் சொற்களைத் தன்வயப்படுத்தி எழுதுவது தற்பவம்.
ஆக, விளைக்க வைப்பது, கிடைக்க வைப்பது, பூக்க வைப்பது, உண்டாக்க வைப்பது என்பதைக் கொண்டு வரவேண்டுமானால், செயப்பாட்டு வினையில் சொல்ல வேண்டும். பயத்தலை பயவித்தல் என்று ஆக்குவது எளிது. ஆனால், பவ என்பதை முதலில் நெடிலாக்கிப் பாவுதல் என்ற தன்வினையாக்கிப் பின்னால் பாவித்தல் என்ற செயப்பாட்டு வினை ஆக்க வேண்டும். இன்னொரு காட்டைச் சொன்னால் நான் சொல்லுவது புரியும். கண்ணுதல் என்பது செய்வினை. அதைச் செயப்பாட்டு வினையாக்கும் போது முதலில் காணுதல் என்ற இடைப்பட்ட தன்வினையை உருவாக்கிப் பின்னால் காணுவித்தல் / காண்பித்தல் என்ற செயப்பாட்டு வினையை உருவாக்குகிறோம் அல்லவா? அதைப் போலத் தான் இந்தப் பாவித்தலையும் உணரவேண்டும். இதனால் தான் "பவத்தல் என்ற சொல்லில் இருந்து கிளைத்த பாவித்தல் என்ற ஈழத்தார் சொல்லை அறிக" என்ற தொடரை அந்தப் பதிவில் எழுதினேன்.
பயவித்தலும், பாவித்தலும் நுகர்ச்சிப் பொருளைக் காட்டியது; "விளைப்பு, கிடைப்பு, உண்டானது, பெறுதி, கொடுப்பு, பூப்பு" என எல்லாமே மாந்தருக்கு என்று எழுந்த கருத்து.
அன்புடன்,
இராம.கி.
3 comments:
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
பதிவுக்கு மிக்க நன்றி.
இனித் தயக்கிமின்றிப் பாவிப்பேன்:-)
இன்னொன்று.
'பாவனை' என்ற சொல்லும் 'பயன்பாடு' என்ற அர்த்தத்திற் பாவிக்கப்படுகிறது.
காட்டாக, 'பயன்பாட்டிலுள்ளது' என்பது 'பாவனையிலுள்ளது' என்று எழுதப்படுகிறது, சொல்லப்படுகிறது.
'பயன்பாட்டுக்காலம்' - 'பாவனைக்காலம்'
இப்படி நிறைய இருக்கிறதே.
Post a Comment