Sunday, August 17, 2003

வாங்கய்யா வாங்க

வாங்கய்யா வாங்க! வளவுக்குள் கூடுங்க!
தேங்காய் உடைச்சு, திருவிளக்கை ஏத்திவச்சு,
வாசல் மெழுகிவச்சு, வண்ணவரிக் கோலமிட்டு,
தேசமெலாம் கேக்க, திருச்சங்கை நின்றூதி,
காவணத்துக் காலுநட்டு, கம்பெல்லாம் மஞ்சள் நத்தி,
வாவரசி நாலாளு வண்ணச்செந் தூரமிட,
தெங்கோலை ஈர்மடிச்சு, தேர்ந்தபடி தோரணிச்சு,
மங்கலத்தை நேர்ந்து, மனமெல்லாம் ஓரணிச்சு,
ஓங்கி உலகளந்த உத்தமனின் பேருசொல்லி,
நாங்களெலாம் கும்பிட்டு, நல்ல படையலிட,
பந்தி நிறையப் பலகாரம் தாட்டிலையில்,
சொந்தம், பழக்கம், சுற்றத்தார், சான்றோர்கள்,
எல்லோரும் வந்திருந்தும், என்றன் வளவுக்குள்,
நல்ல மனைபுகவிந் நாள்!

தென்பாண்டி நாட்டில் வளவு என்பது ஒரு குடிவழி கூடிவாழும் இடத்தைக் குறிக்கும் சொல்.

இந்த வளவிற்குள் தான் வாழ்க்கையும், வாழ்க்கையின் சுவடுகளும் பதிந்திருக்கின்றன;
இங்கே வாழ்க்கைப் பார்வைகள் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன;
வளவு ஒரு தொகுதியும் ஆகிறது;
எண்ணவோட்டங்கள் நிறைந்தது இந்த வளவு.
வெறும் சுதையும் செங்கலுமாய் இருக்கும் வளவு மெய்நிகர் உலகில் புது வடிவம் பெற்றுப் புதுப் பொருளும் பெறட்டுமே?
web log என்பதற்கு வலை உலக்கு என்று வரலாறு கருதி முன்னே நான் பரிந்துரைத்த சொல்லைக் காட்டிலும்,
வளவு என்ற சொல் பண்பாட்டுப் பின்னணியில் சரியாய் இருக்குமோ?
புழங்கப் புழங்க ஏற்றுக் கொள்ளப் படுமோ, தெரியாது.

என்னுடைய பல்வேறு இடுகைகளும் தமிழ் இணையத்திலும், தமிழ் உலகிலும், அகத்தியரிலும், சந்த வசந்தத்திலும் இருந்து வருகின்றன. இனி அவற்றை ஓரிடத்தில் ஒருங்கே சேர்க்க இந்த வளவைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறேன். அவ்வப் பொழுது தோன்றும் புது இடுகைகளும் இங்கே இனிக் குடியேறும். இடுகைகள் முதலில் விட்டு விட்டு வந்தாலும், நாளடைவில் இடைவெளி குறைந்து சீராக வரும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்.
இராம.கி

No comments: