Sunday, August 31, 2003

காலங்கள் - 1

முதற் காரியமாக காலங்கள் என்ற தொடரை இங்கு குடியேற்றுகிறேன். இந்தத் தொடர் நண்பர் ஆல்பர்ட்டின் தூண்டுதலில் 4 அதிகாரங்கள் மட்டும் சிங்கை இணையத்தில் எழுதியது. நேரம் பற்றாமல் போனதாலும், இந்தத் தொடருக்கு அதிக உழைப்புத் தேவைப் படுவதாலும் தொடர்ச்சி தவறிப் போயிற்று. பின் அண்மையில் தமிழ் உலகத்தில் 5 ம் அதிகாரத்தை எழுதினேன். இராசிகளின் உருவகப் பெயர்களை விளக்கும் 6-அதிகாரம் இன்னும் பாதி முடிந்த நிலையில் இருக்கிறது. இது எப்பொழுது முடியும் என்பது தெரியவில்லை. இனிக் காலங்கள் தொடர்.

1.இன்று புதிதாய்ப் பிறந்தோம்

மேலே உள்ள சொலவடையை எழுத்தாளர் நா.பா தன் புதினம் ஒன்றில் (அது குறிஞ்சி மலரா, பொன்விலங்கா என இப்போது நினைவுக்கு வரவில்லை) எழுதுவார். இப்படிப் புதிதாய்ப் பிறக்கும் உணர்வு, பழையதை  அழித்துக் கழித்த பின் ஆர்வத்தோடு புதியதை எதிர்கொள்ளும் பாங்கு, நமக்கெலாம் மிகத் தேவையான பழக்கம். இவ்வாழ்வின் ஓட்டத்தில், விழுந்து எழுந்து, முக்கி முனகி, போராடித் தள்ளாடி, முன்வந்து நிற்கும் வேளையில் சோர்வு நம்மை அடைந்தாலும், மறுநாளைச் சந்திக்க வேண்டுமே எனும் பொழுது, புத்துணர்வு நமக்கு மிகத் தேவையாகிறது.

சில குறிப்பிட்ட நாட்கள் - பொழுதுகள் - காலங்களில் புத்துணர்வைத் தூண்டும் நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு நிகழ்வே ஆண்டுப் பிறப்பு. ஒரு பாவலன் சொன்னதுபோல், ”ஆண்டொன்று போனால் அகவை ஒன்று அல்லவா போகிறது?” வாழ்வில் எத்தனை கனவுகளை நம்முள் தேக்கி நனவு ஆக்கத் துடிக்கிறோம்? வருமாண்டில் ”அது செய்வோம், இது செய்வோம்” என உறுதி கொள்கிறோம் அல்லவா? அவ்வுறுதி இல்லெனில் வாழ்வு ஏது?

உலகின் வெவ்வேறு பகுதிகளில் ஆண்டுப் பிறப்பு ஒரே காலத்தில் வருவது அல்ல. இடத்திற்கிடம் மாறலாம்; ஏன் ஒரே நாட்டுவரலாற்றில் காலத்துக்குக் காலங்கூட மாறலாம். ஆயினும் ஆண்டுப்பிறப்பு, அனைவரும் எதிர்நோக்கும் நிகழ்வாகும். பண்பாட்டுக் குழப்பத்தால் தமிழர் இக்காலத்தில் ஆங்கில ஆண்டுப் பிறப்பை மட்டுமே கொண்டாடுவது அதிகரித்தாலும், தமிழாண்டுப் பிறப்பை விழிவைத்து எதிர்கொள்வோர் இன்னும் இருக்கிறார்.

என்ன? ”திருப்பதியிலும், பழனியிலும், இன்னும் ஓராயிரம் கோயில்களிலும், இதுபோலக் கிறித்துவ தேவாலயங்களிலும், சனவரி முதல்நாளுக்குக் கூடும் கூட்டம், சித்திரை முதல் நாளுக்குக் கூடுமா?” என்பது ஐயமே. எச்சமய நெறியாயின் என்ன, தமிழனுக்குரிய சித்திரைநாளைக் கொண்டாட நம்மில் பலர், குறிப்பாக தமிங்கிலராகிப் போனவர், ஏன் தயங்குகிறார், வெட்கப் படுகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை, தனிப்பட்டுப் போனதாய் உணர்கிறாரோ? "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” என்பதன் பொருள் நம் தனித் தன்மையை இழப்பதோ?" என்று ஒரோர் சமயம் உள்ளத்தை உறுத்துகிறது.

இருந்தாலும், விட்டகுறை தொட்ட குறை மறக்காத சில தமிழர் சித்திரைத் திங்கள் பிறக்கும்நாளை ஆண்டுப்பிறப்பென இன்னும் கொண்டாடித் தான் இருக்கிறோம். அன்றைக்குக் கோயிலுக்கும், தேவாலயத்திற்கும், இன்னும் பள்ளி வாசலுக்கும் போய், "இறைவா, இவ்வாண்டில் இன்னும் நல்லவற்றைச் செய்ய உறுதி கொடும் ஐயா" என வேண்டுகிறோம். உறவினரையும், நண்பரையும் அன்று கூப்பிட்டு முகமன் கூறுகிறோம். வீட்டுவாசலில் கோலம் போடுகிறோம். மாத்தோரணம் கட்டுகிறோம். ஆண்டின் பெயரைக் கோலத்திற்கு அருகிலெழுதி வரவேற்கிறோம். வீட்டை முடிந்த வரை அழகு படுத்துகிறோம். (இந்நாளில் தொலைக்காட்சிக்கு முன் உட்கார்ந்து யாரோ ஒரு திரைப்படக் கலைஞனின் விடலைத்தனத்தை விழிநீர் தேங்க, வாய்நீர் வடியப் பார்த்து நேரங்கழிப்பது விழா சேர்ந்ததல்ல; அது இன்னொரு வகை)

பனைவெல்லம் சேர்த்து, வேப்பம்பூப் பச்சடி வைக்கிறோம். ஓர் இனிப்பாவது அற்றைச் சமையலில் சேர்கிறது. மறவாமல் பாயசம் வைக்கிறோம். முடிந்தால் ஒரு உளுந்து வடை. இன்னும் சிலர், குறிப்பாக ஒருசில தென் மாவட்டத்தினர் காலையில் எழுந்தவுடன் பூசை அறைக்குப் போய் கண்ணாடி பார்க்கிறோம். பூசைவேளையில் புத்தாண்டிற்கான அஞ்சாங்கம் படிக்கிறோம். அந்த ஆண்டுப்பலன் என்று சொல்லப்பட்டதை அறிய முற்படுகிறோம். புத்தாடை, பூ, பழம் எனப் புதுக்கிட்டுப் பெரியவரிடம் வாழ்த்துப் பெறுகிறோம். ஊரெலாம் வலம்வந்து யாரைக் காணினும் வழுத்திக் கொள்கிறோம். இப்படியெலாம் செய்து "செல்வம் நம் வாழ்வில் பொங்கி வழியட்டும்" என்று இறையை வேண்டிக் கொள்கிறோம்..

மேற்சொன்னதை ஒருசில மாற்றங்களோடு இசுலாமியர், கிறித்தவர், சிவநெறியர், விண்ணெறியர், சமணர், புத்தர் என எல்லாச் சமயத்தாரும் செய்ய முடியும். ஏனென்றால், ஆண்டுப் பிறப்பு என்பது குமுகாயப் பழக்கம், பண்பாட்டுப் பழக்கம். அதைச் சமயம் தடுக்க இயலாது. ஓணம் வந்தால் சேரலர் அனைவரும் கொண்டாடவில்லையா, என்ன? இதிற் சமயம் குறுக்கே வருகிறதோ? இல்லையே! விவரங்கெட்ட ஆங்கில அடிமைத்தனம் ஊடுவந்து கேரளரைத் தடுக்கிறதா? இல்லையே! அப்படியெனில், தமிழர்மட்டும் ஏன் சமயநெறியை ஊடே கொணர்ந்து தமிழாண்டுப் பிறப்பைத் தவிர்க்கிறோம்? தமிழர் எல்லோருக்கும் உரியது தமிழாண்டுப் பிறப்பு அல்லவா?

இந்நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ளும் நிலையில் நம் சிறார்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் விடைகூறக் கடமைப் பட்டுள்ளோம்.

தமிழ் ஆண்டுக் கணக்கு எப்படி வந்தது?

அச்சிறாரை எண்ணி, அவருக்கு விடைசொல்லும் வகையால், கொஞ்சம் ஆழ்ந்து பார்ப்போமா? காலங்கள் என்ற இத்தொடரின் முதல் விளக்கம் இது.

நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கும் இப்பேரண்டத்தில் எங்கோ ஒரு மூலையில், ஒரு பால்வழி மண்டலத்தில் நம் சூரியக் குடும்பம் உள்ளது. இச் சூரியக் குடும்பத்தின் முதற்கோளாக அறிவனும் (புதனும்), 2 - ஆவதாய் வெள்ளியும், 3 ஆவதாய் நாம்வாழும் புவியும், 4-ஆவதாய்ச் செவ்வாயும், 5-ஆவதாய் வியாழனும், 6- ஆவதாய்க் காரி (சனி)யும் வலம்வருகின்றன. 3 ஆம் கோளான புவி தன்னைத்தானே உருட்டியும், அதேபொழுது, சூரியனை வலமாகவும் வருகிறது. புவி தன்னை உருட்டிக் கொள்ளூம் நேரம் ஒரு நாள் என்றும், சூரியனை வலம்வரும் காலம் ஓராண்டு என்றும் கொள்ளப் பட்டு மற்றக் காலங்கள் இப் பின்னணியிலேயே கணக்கிடப் படுகின்றன.

இந்த உருட்டுதலும், வலைத்தலும் ஆகிய 2 அடிப்படைகளுக்கும் இடையே ஓர் ஒருப்பாடு (togetherness) இருப்பதை நாமெலாம் அறிவோம். அதாவது சூரியனை வலக்கும் ஒராண்டு வலயத்துள், ஏறத்தாழ 365 1/4 தன்னுருட்டுகளை புவி செய்து விடுகிறது. ஒவ்வொரு தன்னுருட்டும் ஒரு நாளாகிறது.

இந்தத் தன்னுருட்டை முற்கால மாந்தர்கள் எப்படி அறிந்திருக்க முடியும்?

கீழது மேலாய், மேலது கீழாய் இருளும் ஒளியும் மாறிமாறி வருகின்றன. பகல் வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது. எவ்வளவு முயன்றாலும், கண நேரத்திற்கு மேல் நம்மாற் சூரியனைப் பார்க்க முடிவதில்லை. மாறாக, இருளில் வானம் கண் சிமிட்டுகிறது. குளிர்ந்த நிலா வானத்தில் எழுந்து, குறிப்பிட்ட நேரம் பயணம் செய்து, பின் மறைவதைப் பார்க்க முடிகிறது. அப்போது மங்கிய ஒளிகலந்த இருள், மாந்தனின் அறிவார்வத்தைத் தூண்டுகிறது. பகல் பசிக்கு ஆனவுடன், இருள் ஓய்வுக்கும் ஆய்வுக்கும் ஆகிவிடுகிறது.

நாள் முதலில் இருளையே குறித்தது. இருளில் தொடங்கிப் பின் ஒளிவந்து, மறுபடியும் இருள் வரும்வரை, ஆகும் பொழுதை ஒரு நாளெனப் பழந்தமிழர் அழைத்திருக்கிறார். ஒவ்வொரு இருட்பொழுதிலும் நிலவைப் பார்க்கும் போது அதன் பின்புலம் மாறுவதை தமிழ்மாந்தன் பார்த்திருக்கிறான். நிலவுக்குப் பின் இருக்கிற, கண்சிமிட்டி மின்னிடுகிற, ஒளிக்கூட்டத்தில் தனக்குத் தெரிந்த உருவகங்களை இவன் பார்க்கிறான்.

மின்னுவதை மீன் என்றே பழந்தமிழன் குறிப்பிட்டான். ஒரு மீன் வளைந்த முடப்பனையாகத் தெரிந்தது; இன்னொன்று எரியும் தழலாய்த் தெரிந்தது; இன்னும் ஒன்று நீர்நிறைந்த குளமாகத் தெரிந்தது. இப்படியே 28  பின் புலங்களை (மீன்களை) அவனால் அடையாளம் காட்ட முடிந்தது. மீள மீள இப் பின்புலங்கள் புவியைச் சுற்றுவதாகக் காட்சியளித்தன. எப்படி ஒடும் ஆற்றில் படகு போகையில் 2 கரையிலும் இருக்கும் காட்சிகள் மறைந்து கொண்டேவந்து படகு நிலையாய் இருப்பதுபோல் தோற்றம் அளித்தாலும், "கரைகள் நிலையானவை; படகே  நகர்கிறது" என்று பட்டறிந்து உணர முடிந்ததோ (கணியர் ஆரிய பட்டா தன் வானியல் நூலில் இவ்வுவமையைக் கூறுவார்), அதுபோல "புவி தன்னை உருட்டிக் கொள்கிறது; பின் புலங்கள் நிலையாக உள்ளன" என்று பழந்தமிழ் மாந்தன் புரிந்துணர்ந்தான்.

உண்மையில் இப் பின்புலங்கள் அவனுக்கு நாள்காட்டும் அடையாளங்களாக நாள்காட்டுகளாக, நாள்மீன்களாகத் தெரிந்தன. (இந் நாள்காட்டு வடவர் பலுக்குமுறையால் நாள்காட்டு> நாட்காட்டு> நாட்காத்து> நாட்காத்தம்> நாக்கத்தம்> நாக்ஷத்தம்> நாக்ஷத்ரம்> நக்ஷத்ரம் எனச் சங்கதத்திற் திரியும். நாம் மீண்டும் தமிழொலிப் படுத்தி நட்சத்ரம் என்போம். இதற்குப் பேசாமல், நாள்காட்டையே வைத்துக்கொள்ளலாம்.) அக்காலக் கல்வெட்டுக்களில் நாள்காட்டு அடையாளமே குறிக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கு இருப்பது போல திகதிகளைக் குறிக்கும் வழக்கம் கிடையாது.

இந்த 28 நாட்களில் நிலவொளி மிகுந்து நிறைவடைந்து பூரித்தும் (பூரணித்தல்> பூரணம்> பௌரணம்> பௌர்ணமை full moon இப்படித் தமிழிலிருந்து வடமொழி போகும்.), பின் ஒளி குறைந்து, கருத்தும், அமைந்தும் (அமைவாதல்> அமைவாதை> அமவாதை> அமவாசை> அமாவாசை, new moon மறுபடியும் வடமொழி மாற்றம்) நிலவு போகும் போக்கை தமிழ்மாந்தன் பார்த்தான். சொக்கிச் சொலித்து ஒளி கொடுக்கும் பக்கம் (சொக்கொளிப் பக்கம்>சொக்கிள பக்கம்>சொக்கில பக்கம்>சுக்ல பக்கம்> சுக்ல பக்ஷம் bright fortnight) 14 நாளும், கருத்த பக்கம் (கருவின பக்கம்>கருயின பக்கம்>கருஷ்ண பக்கம்>க்ருஷ்ண பக்ஷம் dark fortnight) 14 நாளும் ஆக, இரண்டு பக்கம் சேர்ந்தது ஒரு மாதம் என்றும் கொள்ள நேர்ந்தது. (இதை இரு பதினைந்து நாட்கள் எனக் கொண்டது இன்னும் பலகாலம் சென்று ஏற்பட்ட பழக்கம்.) மதி எனும் நிலவே காலத்தை மதிக்கச் செய்தது. மாதம் என்றசொல் பிறந்தது. மதித்தல் = அளவு கொள்ளல். அதே போல மானித்தலும் அளவிடுவதலே. இந்தையிரோப்பிய மொழிகளில் மானித்தல்>month, monAt என்றாகும்.

நாளாவட்டத்தில் 28 நாள்காட்டுகளில் ஒரு நாள்காட்டை முற்றிலும் தெளிவாக அடையாளம் காணமுடியா நிலையில் 27 நாள்காட்டுகள் மிஞ்சின. (இவற்றின் தமிழ்ப் பெயர்களை இங்குநான் விவரிக்கவில்லை.) ஒவ்வொரு நாள் காட்டிலும் பல விண்மீன் கூட்டங்கள் அடையாளம் காணப் பட்டன. இரவு எலாம் வான வேடிக்கை தானே? பின் கூர்த்த மதியால் அடையாளம் காண்பது சரவலா என்ன? ஒரு வியப்பைப் பார்த்தீர்களா? பார்ப்பது மதியை (நிலவை); அதை மதிப்பது (அளவிடுவது) மதியால் (அறிவு, மூளை). இயல் மொழியான தமிழில் இப்படித் தான் சொற்கள் ஏற்படுகின்றன.

இந்த விண்மீன் கூட்டங்களை வெறொரு வகையில் உருவகப் படுத்தித் தொகுதிகளாக்கிய போது அவை 12 தொகுதிகளாகத் தெரிந்தன. அவை இரைந்து கிடந்த பக்குவம் இரைதி = தொகுதி> இராதி> இராசி ஆனது. ஒவ்வொரு இராசியையும் வீடு என்றே பழம்மாந்தன் சொல்ல முற்பட்டான். பகலெல்லாம் பசிக்கு அலைந்து இரவில் இல்தேடி, தான் வருவது போல், இவ் விண்மீன் கூட்டங்களும் இரவில் வீடுதேடி வந்ததாக உருவகித்து அவை இருக்கும் அண்டவெளியை வீடென்றே உரைத்தான். 12 தொகுதிகளும் 12 வீடுகளாகக் கொள்ளப் பெற்றன. ஒரு வீடு ஆடாக (மேழம்) த் தெரிந்தது; இன்னொன்று மாடாக (விடை)த் தெரிந்தது; மேலும் ஒன்று நண்டாகத் தெரிந்தது; இன்னும் மற்றொன்று சுறாமீனாகத் தெரிந்தது. இப்படி மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் எனப் 12 இராசிகளுக்குப் பெயரிட்டான். இவ் விளக்கங்களைப் பின்னர் ஒரு முறை பார்ப்போம்.

மேற்சொன்ன 27 நாள்காட்டுக்களை இன்னும் பகுத்து 108 பாதங்கள் (பகுத்தது பாதம்) எனக்கொண்ட தமிழன், 12 வீடுகளையும் 108 பாதங்களோடு ஒப்பிட்டு ஒரு வீட்டில் 9 பாதம் என ஈவு வகுத்தான். இவ்வீடுகளும் நாள்காட்டுகளும், பாதங்களும் நம் புவியிலிருந்து பார்க்கும் விண்வெளியைப் புலம் பிரிக்கும் அடையாளங்கள். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று புவியில் திசை காண்கிறோம் இல்லையா? அதுபோல் விண்வெளியில் திசை காட்டும் அடையாளங்களே இந் நாள்காட்டுகளும், இராசிகளும், பாதங்களும் என உணர வேண்டும். சூரியன் சித்திரையில் உதித்தது என்றால், சித்திரை நாண்மீன் இருக்கும் திசையில் காட்சியளித்தது என்று பொருள்.

இனி அடுத்துக் கோள்மீன்களுக்கு வருவோம். விண்மீன்களைப் போலவே ஒளிகொண்டு ஆனால் பெரிதாக ஊடகம் இன்றி வெறும் கண்ணுக்கே கோளமாகக் காட்சியளித்தவை கோள்மீன்களாகும். அவையே அறிவன், வெள்ளி, செவ்வாய், வியாழன், காரி என்று அழைக்கப் பட்டன. அறிவன் கோள் பச்சைக கூறு கலந்து தெரிந்தது. வெள்ளி வெள்ளையாகக் காட்சி யளித்தது. செவ்வாய் செம்மை நிறத்தோடும், வியன்று அகலமான வியாழன் பொன் நிறத்தோடும், காரி கருநிறத்தோடும் காட்சியளித்தன. இவற்றோடு கண்ணைக் கூசும் அளவு ஒளிறுகிற ஞாயிறும் (யா = இருள்; யா+இறு > ஞா+யிறு = இருளை இறுக்கும் கோள்; சுள் என்று எரிக்கும் கோள் சூரியன்) ஒரு கோளாகக் கொள்ளப் பெற்றது.

உண்மையில் புவியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றினாலும், புவியை, ஞாயிறும் மற்ற கோள்களும் சுற்றுவதாகவே நமக்குத் தோற்றம் அளிக்கும். புவியில் இருந்து ஞாயிறு தவறிய மற்ற கோள்களைப் பார்த்தால் அவை யெலாம் ஏறத்தாழ ஒரே தளத்தில் புவியைச் சுற்றுவதாகவே நமக்குத் தோற்றம் அளிக்கின்றன. இச் சுற்றுத்தளமும் (plane of revolution) புவியின் நடுக் கோட்டுத் தளமும் (equatorial plane) ஒன்றாகவே நம் கண்ணுக்குத் தென்படும்.

இதுதவிர புவியைச் சுற்றுவதாகத் தோற்றமளிக்கும் ஞாயிற்றின் சுற்றுத் தளம் புவி நடுக்கோட்டுத் தளத்தை 23.5 பாகையில் விழுந்து வெட்டுவது போலக் காட்சியளிக்கும். இந்த 2 தளங்களின் வெட்டு விழுப்பை "விழு" (point of intersection) என்றே தமிழில் சொல்ல முற்பட்டனர். ஒரு வட்டத்தளம் இன்னொரு வட்டத்தளத்தை 2 இடங்களில் அல்லவா வெட்ட வேண்டும்? அதை யொட்டி 2 விழுக்கள் நமக்குப் புரிபடுகின்றன. ஒன்று மேழ விழு மற்றொன்று துலை விழு. அதாவது ஒரு விழு மேழ இராசி இருக்கும் திசையிலும், மற்றொன்று துலை இராசி இருக்கும் திசையிலும் காட்சியளித்தன.

புவி சூரியனைச் சுற்றுவதே உண்மைநிலை என்றாலும் சூரியன் புவியைச் சுற்றுவது போலத் தோற்றமளிக்கிறது என்றோமல்லவா? அந்தப் புவியின் வலயமும் (revolution) நேர் வட்ட வலயம் அல்ல. அது நீள் வட்ட வலயம். இந் நீள்வட்ட வலயத்தில் தான் புவி 365 1/4 நாளில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதன் வலயத்தில் ஓவ்வொரு சிறுபகுதியும் ஒரு நாளைக் குறிக்கும். ஒவ்வொரு நாள்பகுதிக்கும், புவி வருகையில், சூரியனுக்கும் இடையுள்ள தொலைவைப் பொறுத்தே நாம் வெப்பத்தைப் பெறுகிறோம். அந்த நீள் வட்டத்தில் சூரியனுக்கு மிக அருகில் வரும்நாள் வேனில் முடங்கல் (summer solstice) என்றும் சூரியனுக்கு மிகத் தொலைவில் இருக்கும் நாள் பனி முடங்கல் (winter solstice) என்றும் சொல்லப் பெறும்.

2 விழுக்களும், 2 முடங்கலும் ஒன்றிற்கொன்று தொடர்புள்ளவை. இப் புவி சுற்றும் வலயத்தில் மேழ விழுவும், துலை விழுவும் ஆன 2 புள்ளிகள் ஒன்றிற்கு ஒன்று எதிரும் புதிருமானவை. அதேபோல் வேனில் முடங்கலும், பனி முடங்கலும் எதிரும் புதிருமானவை. அதேபொழுது, முடங்கலும் விழுவும் 90 பாகைப் பிரிவைக் கொண்டவை. பனி முடங்கலில் இருந்து பார்த்தால், மேழ விழு 90 பாகை தள்ளியிருக்கும். அதனின்றும் 90 பாகையில் வேனில்  முடங்கல் இருக்கும். அதனின்றும் 90 பாகையில் துலைவிழு இருக்கும். முடிவில் 360 பாகை கடந்த பின் மீண்டும் பனி முடங்கல் வந்து சேரும்.

இப் புவிவலயத்திற்கு தொடக்கமென ஏதேனும் இருக்க முடியாதல்லவா? ஆனாலும், தொடக்கம் வேண்டுமென மாந்த மனம் கேட்கிறதே? இங்கு தான் பண்பாடு, பழக்கம் என்று வருகிறது. பனிமுடங்கலில் தொடங்குவது மேல் நாட்டு முறை, பழக்கம். பனி முடங்கல் சனவரிக்கு அருகில் ஏற்படுகிறது.

மேழ விழுவில் தொடங்குவது தமிழரின் ஒருவகைப் பழக்கம். (இந்தியாவின் பல மாநிலங்களின் முறையும் கூட இது தான்). மேலையரைப் போலப் பனி முடங்கலிலும் தமிழர் தொடங்கியுள்ளார். இது இன்னொரு வகைப் பழக்கம். மூன்றாம் வகையிற் துலை விழுவில் தொடங்கும் முறை சேரலத்தின் ஒரு பகுதியில் இருந்தது. அதை வேறொரு இடத்திற் சொல்வோம்.

மேழம் (=மேடம்>மேஷம்) என்பது ஆடு என்றும் கூறப்படும். ஆட்டின் பருவம்  ஆட்டை. நாம் பார்க்கும்முறையில் வலயத்தொடக்கம் ஆட்டை என்பதால் வலயமே ஆட்டையாயிற்று. மூக்கொலி நுழைந்து ஆண்டும் ஆயிற்று. மேஷாதி என்று சங்கதத்தில் ஒலி பெயர்ப்பர்.

இன்றைக்குச் சோதிடம் எனப்படும் சோதியம்(>சோதிஷம்>சோதிடம் = சோதி தரும் ஒளி மீன்களை வைத்து எதிர்காலம் கணிக்கும் இயல் = அதாவது கணியம்) வானவியல், கணிப்பியல் என்று இரண்டாகப் பிரிந்தது. நாம் கணிப்பியலுக்குள் செல்லவில்லை. அக்கால வானவியல் அறிய வேண்டும் எனில், தமிழ்க் கணியத்தை நாம் அறியத்தான் வேண்டும்.

சரி! தமிழ் ஆண்டுப்பிறப்பு மேழவிழுவை ஒட்டி எனில் அது மார்ச்சு 21ம் நாளை ஒட்டியல்லவா வரவேண்டும்? பின் ஏன் ஏப்ரல் 14-ல் சொல்லி வைத்தாற் போல் ஒரே நாளாய் வருகிறது? அடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

இவ்விளக்கத்தை முடிக்குமுன் பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் ஒரு பாடல். இது எல்லா விழாக்களுக்கும் பொருந்தும்.
----------------------------------------------------
நகையாகின்றே!
இது கொல் விழவே; நகையா கின்றே!
புதுமடிக் கலிங்கங் கதுமத் தாங்கி
உழுந்தின் கொழுமாப் புழுவை முக்கிப்
பயறு தலைப்பெய்த பாஅல் மிதவை
வயிறு முகந் தெரிய மாந்தி உயிர்ப்பறும்
அரம்ப மாக்கள் ஆடும்
உரந்தவிர் நாளின் ஒழுகிலா நிகழ்வே!

- நூறாசிரியம் - 20

பொழிப்பு:

இதுவோ விழா எனப் பெறுவது; நகை விளைகின்றது. புதிய மடியுடைய மெல்லுடையைப் பெருமையுடன் உடுத்து, உழுந்தினது கொழுவிய மாவினால் செய்த புழையுடைய பண்ணியத்தை முச்சு முட்ட உண்டு, பயறு பெரும்பான்மையுங் கலந்த பால் சேர்ந்த கும்மாயத்தை, வயிற்றின் முக முழுதும் எழுந்து தோன்றும் படி ஆர வுண்டு, செயலற்றுத் திரிதரும் விலங்கு போல்வார் ஆடிக் களிக்கும், அறிவு விலக்கப் பெற்ற முறையிலாத செயலே!

விரிப்பு:

இப்பாடல் புறம்.

புதிய உடையைப் பெருமையுடன் உடுப்பதுவும், பல பண்ணியங்களை வயிறு நிறையும் படி மாந்திச் செயலிலாது விலங்கு போல ஆரவாரத்தோடு ஆடிக் களிப்பதுவும் ஆகிய அறிவு தவிர்க்கப் பெற்ற முறையிலாதா இச் செயல் நகைப்பிற்குரியது ஆகும் அன்றி விழா எனப்படுவது ஆகாது என வலியுறுத்திப் பேசுவதாகும் இப்பாட்டு.

விழா என்று பொதுவிற் குறித்தமையான் குல சமய விலக்கின்றி நடைபெறும் எல்லா விழாக்களுக்கும் பொருந்துவதாகும் இக்கருத்து.

விழா உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் மக்களிடத்துப் பரவ வேண்டி அமையப் பெறுவதாகும். அவையன்றி உடுப்பதும் உண்பதும் ஆரவாரித்தலும் செயலற்றுத் திரிதலும் ஆகிய தாழ்வும், தந்நலமும் மிக்க நோக்கம் கொண்டு விளங்கும் விழாக்கள், முறையில்லாத விலங்குச் செயல்களேயாம் என்று தெருட்டிக் கூறுவதாகும் இப்பாட்டு.

இது புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாகும்.

-----------------------------------------------------

என்ன பார்க்கிறீர்கள்?

ஆரவாரம் தகாது என்று பாவலர் ஏறு சொல்லவில்லை. உயர்ந்த நோக்கமும் பொதுமைப் பண்பும் கூடவே இருக்க வேண்டும் என்று தான் சொல்லுகிறார். ஆண்டுப் பிறப்பு என்பது அப்படி உள்ள ஒரு விழா தான்.

பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டில் எல்லா நலன்களும் பெற்றுச் சிறக்க என் வாழ்த்துக்கள். அடுத்த சந்திப்பில், காலங்கள் பற்றித் தொடர்வோம்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உங்கள் முதற்பதிவு தொடங்கி எல்லா பதிவையும் வரிசையாகப் படிக்க வேண்டும் என்று வந்தேன். வந்து பார்த்தால் தமிழ் ஆண்டுப்பிறப்பு நேரத்துக்கு ஏற்றதாக இவ்விடுகை அமைந்துள்ளது.

சிற்றூர்களில் தமிழ்ப் புத்தாண்டையே கொண்டாடுகிறார்கள். ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவது இல்லை. எங்கள் ஊரில் (புதுக்கோட்டை) கோயிலுக்கு சென்று பொங்கல் வைப்பது, வீடு துப்புரவாக்குவது வழக்கம். ஆங்கிலப் புத்தாண்டுக்கு இதைச் செய்வது இல்லை. ஆனால், இப்பொழுது உள்ள சிறுவர்கள் ஆர்வக் கோளாறில் happy new year என்ற ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோலம் போடும் வழக்கமும் பெருகி வருகிறது

Unknown said...

நல்Nal->Nasi நசி¹-தல் nasi, 4 v. intr. 1. To be destroyed; அழிதல். 2. To be crushed, bruised, mashed, crumpled; நசுங்குதல். 3. To be frayed, as a worn cloth; திரைதல். நசிந்த புடைவை. (W.) 4. To be palliated, extenuated; குறைவு காணுதல். (W.) 5. To be kept back, spoken indistinctly or with hesitation; அடக்கிப் பேசப்படுதல். (W.) 6. To be reduced in circumstances; நிலைமை சுருங்குதல்.

துலtula- (to shine)-துர->தாரம்² tāram Star; நட்சத்திரம். (யாழ். அக.)

தாரம் tāram ->तारम् . A star or planet
தாரம்->தாரகம், தாரகை
தாரகம், தாரகை->तारका tārakā 1. A star; यर्ह्येवाजनजन्मर्क्षं शान्तर्क्षग्रहतारकम् Bhāg. 1.3.1. -2 A meteor, falling star

நசி+தாரம்=( நசிதாரம்)-> (நச்சிதாரம்)->நட்சத்திரம்->नक्षत्रम्

Cf:ஒற்கு-தல் oṟku- , 5 v. intr. < id. 1. To be deficient; to be wanting; குறைதல். ஒற்காமரபிற் பொதியிலன்றியும் (சிலப். 25, 117). 2. To fall short, droop; தளர்தல். ஒற்காவுள்ளத் தொழியா னாதலின் (மணி. 15, 18).

ஒற்கு-தல்->உற்கு-தல் uṟku- , To shoot through the sky, as a meteor; விண்ணினின் றும் எரிகொள்ளி விழுதல். திசையிரு நான்கு முற்க முற்கவும் (புறநா. 41, 4).

உற்கு->உற்கை uṟkai - 1. Fire-brand; கடைக்கொள்ளி. உற்கையென்றெறியும் (நைடத. நகர. 2). 2. Meteor; வீண்வீழ்கொள்ளி. இழிந்தவா னுற் கையென்ன (பாரத. இரண்டா. 9). 3. Star; விண்மீன். (சூடா.)

உற்கு->உற்கம் uṟkam, n. 1. Fire-brand; கடைக்கொள்ளி. 2. A body of fire, flame; அனற்றிரள். (திவா.) 3. Meteor, shooting star; வீண்வீழ்கொள்ளி. வான்பூத்த வுற்கம்

உற்கம் uṟkam->उल्का ulkā [Uṇ.3.42] 1 A fiery phenomenon in the sky, a meteor; विरराज काचन समं महोल्कया Śi.15.92; Ms.1.38,4.13; Y.1.145.-2 A fire-brand, torch; न हि तापयितुं शक्यं
விழுமீன்¹ viḻumīṉ , n. < விழு¹- + மீன்¹. Meteor. வீழ்மீன், vīḻ-mīṉ : , n. < வீழ். + மீன்¹. Meteor; விண்வீழ்கொள்ளி. (தொல். பொ. 91, உரை.). mīṉ means Star.

பதந்தவறு-தல் patan-tavaṟu- , v. intr. < பதம்² +. 1. To fall as a meteor by night; இரவில் நட்சத்திரம் விழுதல். (W.) 2. To slip down, as from one's position; நிலையினின்று நழுவு தல். Loc.

But later , the words நட்சத்திரம் and नक्षत्रम् mean only Star and not falling star. In Sanskrit it was extended to sun, or any heavenly body. In the Vedas the Nakshatras are considered as abodes of the gods or of pious persons after death and later as wives of the moon and daughters of Daksha and according to Jainas, the sun, moon, Grahas, Nakshatras and Tārās form the Jyotishkas.

However the words நட்சத்திரம் and नक्षत्रम् could be further explained again shining star by tamil etymology.

நகு-தல் naku- , v. To shine, glitter; பிரகாசித் தல். பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1).

நகு+தாரம் Naku Taram (shining Star)->நக்க தாரம் Nakka Taram ->(நச்சதாரம்)->நட்சத்திரம்,

நக்க தாரம் (Nakka Taram)-> नक्षत्रम्