தமிழில் கோ என்பது இறைவனை (அன்றேல்) இனக்குழுத் தலைவனைக் (இவன் கோனா, மன்னனா, அரசனா, வேந்தனா என்பது வேறு வரையறுப்பு) குறிக்கும். இனி, இல் என்பது வீடு. கோ+ இல் = கோயில்/ கோவில் ஆகித் தலை/ இறை வீடு என்று பொருள் கொள்ளும். அடுத்துக் கோயில், கோவில் ஆகிய இரு சொற்களில் ”எதை, எங்கு பயில வேண்டும்?” என்பதில் பலருக்கும் குழப்பம் வரும்.
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்
எனும் நன்னூல் உயிரீற்றுப் புணரியல் 162 ஆம் நூற்பா தரும் இலக்கண விதிப்படி, இங்கு கோவில் என்பதே சரி. ஆயினும் ”கோயில்” எனும் வழக்காறு சங்க காலத்திலிருந்தே தமிழில் விடாது பயிலப்படுகிறது.அப்படியெனில் இரண்டுமே சரியா? - என்று கேட்டால், அதற்கு விடை தருமுன் “இறைவீடு எனும் கருத்து எப்படி எழுந்தது?” என்ற கேள்விக்கு விடை தெரியவேண்டும்.
20000 ஆண்டுகளுக்கு முன் முந்தைத் தமிழனுக்கு ”இறைக்கருத்து” தோன்றியிருக்குமா? விளங்கியிருக்குமா? - என்பதில் பெருத்த ஐயமுண்டு. அதே பொழுது பழங்குடி மாந்தனுக்கு அவனுடைய 3,4 தலைமுறைக்கு முந்தையப் பாட்டன், பூட்டன் பற்றிக் கட்டாயம் தெரிந்திருக்கும். அம் முன்னோர் படு சூடிகையாய்ச் செயற்பட்டுத் தம் குழுவை நடத்தி வந்ததும் தெரியும். முன்னோனை அடக்கம் செய்த கற்றிட்டை அல்லது கற்பதுக்கை எங்குள்ளது என்றும் தெரியும்.(நிலம் தோண்டி அமைவது கற்பதுக்கை. நிலத்தின்மேல் அமைவது கற்றிட்டை). கற்றிட்டைகள் என்பன இக்காலக் கோயிற் கருவறைகள் போல அமைக்கப்படும்.
கிழமை, வாரம், திங்கள், ஆண்டு எனும் வெவ்வேறு பருவ காலங்களில், முன்னோன் நினைவால் வழிபடுவதும், அதனூடே உற்றார்சூழப் பள்ளிப் படையல்கள் செய்வதும் அவருக்குத் தெரியும். முன்னோன் பெரிதும் விரும்பிய உணவுகளைச் செய்தும், முன்னோன் பெருமைக்குத் தக்க ஆடைகளை உருவாக்கியும், அவற்றை முன்னோன் பதுக்கை/திட்டைக்கு முன்னால் வைத்து வழிபட்டும் படையலிடுவார்,
பதுக்கைகள் என்பன பூமியில் தோண்டப்பட்ட குழிகளாகலாம், அல்லது குயவினால் செய்யப்பட்ட தாழிகள் ஆகலாம், பூமியின் மேல் அமையும் திட்டைகள் இயற்கைக் குழிகள்> குழைகள்> குகைகள் என்றும் ஆகலாம். குகையைப் போன்றதொரு செயற்கைக் கட்டுமானங்களும் இயற்கையை மாதிரிச் செய்யப்படலாம்.
குகை+ இல்கள் = குகையில்கள் என்பன அவரவர் குலத்திற்கு முதன்மையாயின. குகையில்களில் கல் குகைகள், மண் குகைகள், மரக் குகைகள் எனப் பல்வேறு வகைகள் உண்டு. குகைகளை அறைகள் (= அறுத்தவை அறைகள் ஆகும்), பள்ளிகள் (பள்ளப் பட்டவை பள்ளிகள் ஆகும்) என்றும் சொல்வார்.
இந்தப் பள்ளிகள் பள்ளிப்படைகளாகி, பள்ளிப்படைக் கோயில்களாகிப் பின் கோயில்கள் ஆகும். (சென்னைக்கு அருகிலுள்ள மாங்காடும் திருவேற்காடும் பள்ளிப்படைக் கோயில்கள் தாம். தொடக்க காலத்தில் வெவ்வேறு குடும்பக்குழு மாந்தரின் முன்னோரே அவரவர் குலங்கள் போற்றும் குலதெய்வங்கள் ஆயின. ஆண்டுகள் கூடக்கூடக் குலங்கள் பெருகின. குலங்கள் சேர்ந்ந குடிகள் ஆயின, பின் குடிகள் சேர்ந்த இனங்களாயின. கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கோயில்களும், இனக்கோயில்களும் பெரிதாயின. ஆயினும் கோயில்களின் நடுவில் குகைபோன்ற குறுவறைக கருவறைகள் ஆயின.
குகையில் என்பது பேச்சுவழக்கில் குகயில்> கொகயில்> கோயில் என்றாவது தமிழர் பலுக்கில் எளிதே. கோய் என்ற சொல்வழிக் குகையைக் குறிப்பதை இன்றும் அகராதிகளில் காணலாம். ஆக, தலைவன் வீட்டைக் கோவில் என்றும், இறைவன் வீட்டைக் கோயில் என்றும் முதலில் குறிப்பிட்டுப் பின் இரண்டையும் குழப்பிப் பயின்றதும் உண்டு.