இச்சொல்லின் முதற் பயன்பாடு என்பது சங்கத அகரமுதலியில் வால்மீகி இராமாயணத்தில் தான் காட்டப் படுகிறது. அதே பொழுது, வேறு எந்த இந்தையிரோப்பிய மொழியிலும் இச்சொல்லிற்கு இணையாய் இன்னொரு சொல் காட்டப்படவில்லை. ஆய்ந்து பார்த்தால், சங்கதத்திற்கே கூட இது கடனாய் வந்தது போல் தெரிகிறது. மற்ற வட இந்திய மொழிகளிலும் கூட இச்சொல் பயனாகிறது. பொதுவான தமிழ் அகரமுதலிகளிலும் இச்சொல் உண்டு. (ஆனால் செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலியில் இது ஏனோ இல்லை.)
ஆய்ந்து பார்த்தால், முரமுரப்பான அடித்தண்டு கொண்ட தாவரத்தை எப்படி முரம்> மரம் என்று நாம் சொற்பிறப்பு காட்ட முடியுமோ, அது போல் வலிய மரங்கள் கொண்ட காட்டை வல்>வன்>வனம் என்று சொல்லலாம் தான். ஓர்ந்து பார்த்தால் தமிழ்வழிச் சொற்பிறப்பு இதற்குச் சரியாய்ப் பொருந்துகிறது. ஆனாலும் பலர் ஐயங் கொள்கிறார். ஏன் என்று தெரியவில்லை.